சுரைக்காய்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)

ற்றைக்கு இருநூறு  வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் சுரைக்காயைப்பற்றி  என்ன சொல்கிறது.......

 

சுரையிலை பித்தம் போக்கும் சொல்லும் தண்டிற்கு வாதம்
மருவிடா தகலும் காய்தான் வாய்வாம் கொழுந்து வாதம்
திரிபித்தம் சேட நீக்கும் திகழ்முன்னை இலையுட் காய்ச்சல்
வருபிரமேகம் பித்த மாற்றுநன் மணமுண் டாமே.


                                                                                            பதார்த்த சூடாமணி

‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது பழமொழி. மலிவான காய்கறிகளுள் ஒன்றான சுரைக்காய் நீண்ட நெடுங்காலமாகவே சமைத்து உண்ணப்பட்டுவந்துள்ளது என்பதற்கு இந்தப் பழமொழி தக்க சான்றாகும். சுரைக்காயின் இலை, தண்டு, கொழுந்து என்பன மருந்தாகவும் பயன்பட்டு வந்துள்ளன.

96% தண்ணீரும் மீதி நார்ச்சத்தும் உடைய சுரைக்காயில் 100 கிராம் சாப்பிடுவதன் மூலம் 12 கலோரி உணவுச்சத்து மாத்திரமே பெறப்படுகிறது. அதேசமயம் இதன் நார்ச்சத்து வயிற்றை நிரப்பிவிடுவதால் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்க உதவுகின்றது. உடல் பருமனைக் குறைக்க உதவும் சிறந்த ஒரு உணவாக சுரைக்காய் கருதப்படுகிறது.

மலச்சிக்கலால் அவதிப்படுவோர் அவசியம் சாப்பிடவேண்டிய காய்கறிகளுள் சுரைக்காயும் ஒன்று. பெருங்குடலில் அடைந்து கிடக்கும் கழிவை வெளியேற்ற சுரைக்காய் உதவுகின்றது.

சிறுநீர் கழியும்போது உணரப்படும் எரிவுக்கு சுரைக்காய்ச்சாறு சிறந்த மருந்தாகும். சுரைக்காய்ச்சாற்றுடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் குடிப்பது சிறுநீர்ப்பாதையில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்றுக்குச் சிறந்த மருந்தாகுமென அறியப்படுகிறது.

உடம்புச்சூட்டைக்குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியூட்டக்கூடியது சுரைக்காய். மிகுந்த வெப்பகாலத்தில் ஏற்படக்கூடிய தாகத்தைத் தீர்க்கும் சிறந்த பானமாக சுரைக்காய்ச் சாறு உள்ளது.

முன்னர் ஒருகாலத்தில் சுரைக்காய் உணவுப்பொருள்கள் சேமித்துவைக்க உதவும் பாத்திரமாகவும், கள், தேன் போன்றவற்றைச் சேர்த்துவைக்கும் குடுவையாகவும் பயன்பட்டது.
Bottle gourd என்னும் சுரைக்காயின் ஆங்கிலப்பெயர் இப்பயன்பாட்டைச் சுட்டுவதாகவே உள்ளது.

அந்தநாட்களில் சிறுவர்கள் நீச்சல் பழகும்போது ஆரம்பத்தில் ஒல்லித்தேங்காயை இடுப்பில் கட்டிக்கொண்டு நீந்த முற்படுவார்கள். இந்த ஒல்லித்தேங்காய் அவர்களை நீரில் மூழ்கவிடாது. ஒல்லிதேங்காய்க்குப்பதில் சுரைக்குடுவையை இடுப்பில் கட்டிக்கொண்டு நீந்தப்பழகுவோரும் உண்டு.

Lagenaria siceraria (MOLINA) STANDLEY என்பது இதன் தாவரவியற் பெயர்.