பசுவதை கூடாது என முதலில் கூறியவர் ஆரிய பிராமணரா? பொளத்த மதத்தினரா?


முனைவர் இரா. செல்வி

ழையகால சினிமாக்களில் விவாசயத் தொழில்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் காளை மாடுகளைக் கொண்டு ஏர் உழும் காட்சிகள் வரும். காளைகளை வைத்துக் கிணற்றில் ஏற்றம் என்று சொல்லக் கூடிய நீர் இறைக்கும் காட்சி இடம் பெறும். இன்று நடை முறையில் அத்தகைய காட்சிகளைக் காண்பது அரிதாக இருக்கின்றது. காளைகளுக்குப் பதிலாக டிராக்டர்களும் பம்புச் செட்டுகளும் கொண்டுதான் விவாசாயத் தொழில்முறை மேற்கொள்ளப்படுவதைப் பார்க்கிறோம். இந்த இயந்திரங்கள் பல்கிப் பெருகிவிட்டதால் கூலி விவாசாயிகள் பலர் வேலைகள் இழந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் காளைகள் அடிமாடுகளாகின்றன. இந்த உண்மையை எண்ணிப்பார்க்காமல் 'மாட்டுவதை கூடாது' என்று ஒருபுறமும் 'மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்' என்று இன்னொருபுறமும் போராட்டங்கள் நடந்து கொண்டிருப்பது சரியா என ஆராயவேண்டியுள்ளது.

அந்நிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பெரும் மாட்டுக்கறி வியாபாரிகள் இருக்கின்றனர். மேல்நாட்டுக்கு அனுப்பும் மாட்டுக்கறி நல்ல தரமாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில் அடிமாடுகளுக்கு இழைக்கும் கொடுமையை 'அம்மாஆஅஅ என்றோர் அழைப்புக்குரல்' நூலில் அதன் ஆசிரியர் விவரித்திருக்கிறார். நீர் வற்றினால்தான் கறி ருசிக்கும் என்று அடிமாடுகளுக்கு நீர் கொடுக்காமல் தாகத்தில் தவிக்கவிடுவது, கொலைக்களத்திற்கு அழைத்துப் போய் மாடுகளின் ஆசன துவார வாயில் கொதிக்கும் நீராவி செலுத்தி வயிற்றை உப்ப வைப்பது, அதன் தோல் முழுதுமாக உரிக்கப்படும் வரை மாடுகளின் உயிர் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என நினைத்தாலே குலை நடுங்கவைக்கும் சித்திரவதைகள.; ' ஏன் எல்லாக் கொலைமுறைகளிலும் அதன் உயிர்பிரிவது கடைசியாக வைக்கப்படுகிறது என்றால் அது உயிர்பிரிந்த ஒரு சில நிமிடங்களுக்குள் குளிர் பெட்டியில் அடைத்துவிட வேண்டுமாம். அப்பொழுதான் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யமுடியுமாம். வாழ்க்கை முழுதும் பொறுமையைக் கடைப்பிடித்த அந்த குணவதியின் கழுத்து எல்லாச் சித்திரைவதைகளும் முடிந்தபின் அறுக்கப்படுகின்றது. (அம்மாஅஅஅ என்றோர் அழைக்கும் குரல் ப.
43)

இந்தச் சித்திரவதைகளைச் செய்பவர்கள் அங்கு வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகளாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வேலை கொடுத்து அடிமாடுகளைக் கொன்று அவற்றின் சதைகளை அயல்நாடுகளுக்கு அனுப்பி கோடி கோடியாய்ச் சம்பாதிப்பவர்கள் யார் என்று யோசித்துப்பார்க்கவேண்டும். இத்தகையோரை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டாம். ஆனால் அவர்களை அணுகி பசுவதையின் கொடுமைகளைப் புரிய வைக்க அரசியல் கட்சிகள் முன்வந்ததாகத் தெரியவில்லை.

வலி என்பது மூளை வழியாகத்தான் உடலுக்குப் பரவுகிறது. பலி இடும் உயிரினத்தைக் கொண்டு சென்று அவற்றைத் துடிக்க வைக்காமல் உயிர் போக்க வழி முறை இல்லையா? இருந்தால் அவற்றைப் பயன்படுத்தட்டும். இல்லையேல் கண்டு பிடிக்கட்டும். இதைக் கூற யாவருக்கும் உரிமை இருக்கிறதே. ஆனால் மாட்டுக்கறி உண்ணும் ஏழை எளிய மனிதர்களைச் சாசி, மத, இன அடிப்படையில் வைத்துப்பார்த்து ஏன் மாட்டுக்கறி உண்கின்றீர்கள் எனக் கேள்வி கேட்டால் அவர்கள் என்னபதில் சொல்வார்கள்?

இந்தியாவில் கீழ்ச்சாதியினரும் இந்து அல்லாத பிறமதத்தினரும்தான் மாட்டுக்கறி உண்கின்றனர் என்ற எண்ணம் சமூகவிஞ்ஞானப்படிச் சரிதானா?; இன்று இழிவாகக் கருதப்பட்ட மாட்டுக்கறி உணவுப் பழக்கம் தொன்று தொட்டே இருந்ததா? ஆரம்ப நாட்களில் யார் யார் உண்டார்கள் என்றும் பசுவதை கூடாது என முதலில் கூறியவர்கள் ஆரிய பிராமணர் என்று கருதப்பட்ட வைதிக மதத்தினரா? பௌத்த மதத்தினரா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை நூலை இடது சாரி சிந்தனையாளர்கள் மட்டுமன்றி சமூக அக்கறை கொண்ட நடு நிலை ஆய்வாளர்கள் யாவரும் படித்தே இருப்பார்கள். இந்த நூலில் குறிப்பாக 'சுபர்ண யௌதேயன்'; என்ற தலைப்பில் கி.பி 4
20 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களைக் கூறும் கதை இடம்பெற்றுள்ளது. குப்த மன்னர்கள் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மகாகவி காளிதாசன் பற்றியும் அஜந்தாமடம் என்ற புத்தமதத்தில் இருந்த பௌத்தர்கள் குறித்த செய்திகளும் விமர்சிக்கப்பட்டுள்ளன.

அந்த நூலில் மாட்டுக்கறி உணவுப் பழக்கம் கூறப்பட்டுள்ளது. சங்கிருதி என்பவர் பிராமணர். இவர்களது புத்திரர்களில் ஒருவன் சத்திரியன் (நாடாள்பவன்). இன்னொருவன் பிராமண மகரிஷி( புரோகிதன்) சங்கிருதியின் சத்திரிய மகன் பெயர் ரந்தி தேவன். இவனது விருந்தினர் சாலை மிகவும் புகழ்ப்பெற்றது. அவனது விருந்தினர் மாளிகையில் நாள்தோறும்
2000 பசுக்கள் கொல்லப்பட்டன. அவற்றின் ஈரத்தோல்கள் சமையல் கட்டிற்குப் பக்கத்தில் குவிக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து கசியும் நீர் ஒரு நதியாகப் பெருகி ஓடிற்று. தோலிலிருந்து வெளிப்பட்டு ஓடுவதால் அதற்குச் 'சர்மண்வதி' என்று பெயர். அதாவது 'சர்ம' என்றால் தோல். 'ணவதி' என்றால் வெளிப்பட்டு ஓடுதல் என்று பொருள் தரப்பட்டுள்ளது. பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று மகாபாரதத்தில் இருப்பதாக ராகுல் சாங்கிருத்தியாயன் 'வனபர்வம'; 'சாந்தி பர்வம்' ஆகியவற்றிலிருந்து பாடல் அடிகளையும் சான்று காட்டியுள்ளார்.

மேலும் இக்கதையில் குப்தர்கள் ஆட்சியில் அஜந்தா மடம் என்னும் புத்த மடம் இருந்ததையும் அங்கு சிங்களம், ஜாவா, சுமத்ரா, சாம்பாத் தீவு, கம்போஜம் போன்ற பல நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் அந்த மடத்தில் இருந்ததையும் ராகுல்ஜி விளக்கியுள்ளார். இந்த மடத்தில் இருக்கும் ஒரு பிக்குவின் பெயர் 'திங்கநாகர்'; என்ற திராவிடர். இவர் நாஸ்திகர். இவர் வசுபந்து என்ற ஞானக்கடலின் சிசியர். இவர் கற்றுத் தேர்ந்தது இரும்பு வாள் பயிற்சியோ வில் அம்பு பயிற்சியோ அல்ல. அறிவையும் தர்க்க சாஸ்திரத்தையும் கற்றுத் தேர்ந்த பௌத்தர். இவரும் வசுபந்தும் ஏனைய பிக்குகளும் விரும்பியது மன்னர் ஆட்சியை அல்ல. ஜன ஆட்சியை. இதனால் மன்னர் ஆட்சியை விரும்பியவர்கள் பொளத்தர்களை எதிரியாகக் கருதி காழ்ப்புணர்ச்சி கொண்டனர். எல்லா நாட்டிலும் உள்ள பௌத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகின்றார்கள் என்றும் அதனால் பசு மாமிசம் தடை செய்யப்பட்டது என்றும் பசுவையும் பிராமணர்களையும் காப்பாற்றுவது தருமம் என்றும் பிராமணர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கின்றார்கள் என்பதாகச் சுபர்ண யௌதேயன் கதையில் ராகுல்ஜி குறிப்பிடுகிறார்.

இக்கருத்துக்கு முரண்பட்ட நிலையில் ஐம்பெருங் காப்பியமாக விளங்கும் மணிமேகலையில் இடம் பெறும் 'ஆபுத்திரன்' பிராமணர்கள் புரிந்த பசுவதையை எதிர்த்துக் குரல் கொடுத்த பௌத்த நெறியாளனாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். பிராமணர்கள் வேள்விக்கூடத்தில் கட்டப்பட்ட பசுவைக் காப்பாற்றுகிறான். அதனால் பிராமணர்களின் கோபத்துக்கு ஆளாகிறான். வளர்ப்புப் பெற்றோராலும் ஏனை பிராமணர்களாலும் புறக்கணிக்கப்படுகிறான். பசுவதையைப் பவுத்த மதம் கண்டித்தது என மணிமேகலை மூலம் அறியமுடிகிறது.

ஆகவே பசுவதைகூடாது என முதலில் கூறியது. வைதிக (இந்து) ஆரியர்களா? திராவிட பௌத்தர்களா? என்று ஆராய்வதில் பெருஞ்சிக்கல் இருக்கின்றது.
கால்நடை பராமறிப்புக் காலத்திலும் விவசாய காலத்திலும் இடையறாத நில ஆக்கிரமிப்புப் போர்கள் நடந்துள்ளன. தங்கள் தொழிலுக்குத் துணைநின்ற பசுக்களும் கல்வி கற்பித்த குருக்களான பிராமணர்களும் (அந்தணர்கள்) பாதுகாக்கப்படவேண்டியவர்களாக இருந்தார்கள். இது பின்னாளில் மரபாக மாற்றம் அடைந்துள்ளது.

யார் உயர்ந்தவர்கள் பிராணமர்களா? சத்ரியர்களா? என்ற போட்டியில் சத்திரியரான விசுவாமித்திரர் தானும் ரிஷியாகிக் காட்டுகிறேன் எனக் காட்டில் தவம் இருந்தார். பிரம்ம ரிஷியானார். மனிதகுல விடுதலைக்கு ஆரியர்களின் வைதிக நெறி உதவாது என்று கவுதமபுத்தர் அரசு பதவிவிட்டு வெளியேறி போதிமரத்தின் கீழ் இருந்து சிந்தித்துப் பொளத்த நெறியை உருவாக்கினார். ஆரியர் திராவிடர் காழ்ப்புணர்ச்சியில்; திராவிட பொளத்தர்கள்தாம் மாட்டுக்கறி உண்டார்கள் என்று ஆரியர்களும் ஆரிய பிராமணர்கள்தாம் பசுவதை செய்தார்கள் என்று பவுத்தர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி பிரச்சாரம் செய்த பழம் வரலாற்றை இன்று நாம் எப்படிப் பார்ப்பது?

பிராமண சத்திரியர் வர்ணத்தினருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் வைசிய சூத்திர வர்ணத்தார். 'ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோ கொடும்பாடு இல்லை என்கிறது சமணக்காப்பியமான சிலப்பதிகாரம். வைசியர்களைச் சூத்திரவர்ணத்தார் ஆவார்கள். எந்த வர்ணத்திலும் இல்லாத மக்கள்தாம் பஞ்சமர் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தினர். கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த வசதி வாய்ப்பும் இல்லை. ஆவின்பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் உண்ட மக்கள் ஒரு புறமும் பசிக் கொடுமையின் காரணமாகச் செத்த மாட்டுக்கறியை உண்டு வாழ்ந்தவர்கள் தீண்டத்தகாத மனிதர்களாகக் கருதப்பட்டு ஒடுக்கப்பட்டு இன்னொருபுறமும் பிரிந்துதான் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தனர.; தொடர்ந்தும் வாழ்கின்றனர்.

இன்று மக்களாட்சி மலர்ந்த நிலையில் நன்கு கல்வி கற்று சகல வசதிகளோடும் சுத்தம் சுகாதாரத்தோடும் ஆன்மிக நெறியோடும் வாழும் ஒரு தாழ்த்தப்பட்ட ஓர் இந்து உயர்ந்த சாதியினருக்குறிய கோயிலுக்குள் அனுமதிப்படுவதில்லை. வாடகைக்கு வீடு கேட்டால் மேல் சாதியினர் வீடுதர விரும்புவதில்லை.; வரலாறு நெடுகிலும் அவமானத்துக்கு ஆளான இந்தத் தாழ்த்தப்பட்ட இந்து மக்களில் பலர் இஸ்லாம் மதமும் கிறித்துவ மதமும் இந்தியாவிற்கு வந்த நிலையில் மதமாறியிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்கள். 'ஆட்டுக்கறிக்கு அதிக விலை. மாட்டுக்கறி மலிவான விலை. அதனால் மாட்டுக்கறி வாங்கி உண்கிறோம். கடுமையான வேலைகளில் ஈடுபடுபடும் எங்களுக்கு இந்த மாட்டுக்கறி நல்ல உடல்வலிமை தருகிறது என்கிறார்கள்';. தாங்கள் இந்துக்கள். மதமாறியவர்கள் என்று எண்ணிப்பார்த்து மாட்டுக்கறி உண்ணலாமா? வேண்டாமா? என்று இவர்கள் யோசிக்கத்தான் நேரம் ஏது? வாழ்வில் மேனிலை ஆக்கம் பெற்ற தாழ்த்தப்பட் இந்துக்களும் சில கிறித்துவ இஸ்லாம் நண்பர்களும் நாங்கள் அசைவ உணவை நிறுத்திவிட்டோம். சைவ உணவுதான் உடல்நலத்துக்குச் சிறந்த உணவு என்று பேசுவதையும் கேட்கமுடிகின்றது.

ஆனால் சைவ உணவான தானியங்களுக்கும் காய்கறிகளுக்கும் விலைவாசி கூடிவிட்டது. காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும் என மருத்துவர் கூறுகின்றனர். ஆனால் ஒரு ஏழை உழைப்பாளி கால் கிலோ அரைகிலோ காய்கறிகள் வாங்கிச் செல்ல வழியின்றி யோசிப்பதைப் பார்க்கமுடிகின்றது. இதற்கு உணவு உற்பத்தியும் இன்னொரு காரணம். விளைநிலங்கள் விற்கப்பட்டுப் பெரிய பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. தற்போது விவாயசத் தொழில் அழிந்து வருவதையோ விவசாய விளைபொருள் உற்பத்திகள் குறைவதையோ சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதையோ இவற்றால் எல்லாம் உணவுப்பற்றாக்குறையும் விலைவாசி ஏற்றுமும் ஏற்பட்டு ஏழை எளியமனிதர்கள் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்படுவதையோ யோசிக்காமல் நீ ஏன் மாட்டுக்கறி உண்கிறாய் எனக் கேள்வி எழுப்புவது எம்முறையில் தருமம்?

விவாசாய உற்பத்திதான் மனிதகுலத்தைக் காப்பாற்றும் அடிப்படைப்பொருள். மணிமேகலைக் காப்பியம் பசிபிணி குறித்துக் கூறுகையில் 'புல்லும் மரமும் கரியுமாறு எங்கும் வெப்பம் வறட்சி. உயிர்கள் பசியால் அழியுமாறு மழைவளம் குன்றியது. அரசு புரிதலினின்றும் நீங்கி விசுவாமித்திரன் பசியால் எங்கும் திரியநேர்ந்தது. கொடும் பசி போக்க எதையும் காணாது சிறிதும் பொருந்தாத நாயின் ஊனை விசுவாமித்திரனே உண்டான் என்றால் பசியின் கொடுமையை என்ன என்பது என்று கேள்வி கேட்கிறது.

தாய்மண்ணாம் இந்திய பிரஜை என்ற அடிப்படையில் அகிம்சை மனநிலையில் முதலில் மேற்கொள்ளவேண்டியது விவாசாய விளைநிலங்களைக் காக்கப் போராடுவதுதான்.

இயந்திரங்களைக் கைவிட்டு, காளைகொண்டு ஏர் பூட்டி, ஏற்றம் இறைத்து, விவசாயத் தொழிலாளிகளின் கரங்களை நம்பி, நல்ல கூலிதந்து மேற்கொள்ளப்படும் இயற்கைவேளாண்மை முழுமையாக வெற்றியுறும் நாளில் உணவு உற்பத்தி அதிகரிக்கும். விவசாய கூலிகள் வேறு வேலைக்குப் போகமாட்டார்கள். உணவுப்பற்றாக்குறை இருக்காது. விளைநிலங்கள் காக்கப்படும். விலைவாசி குறையும். உணவுப் பழக்கமும் மாறும். வயசான மாடுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற பிரச்சினையும் வாராது.

மாடுகள் தான் சாகும் வரை விவசாய மக்களுக்குத் துணைபுரியும் ஜீவன். டிராக்டர்கள் வந்த நிலையில்தான் மாடுகளும் வேலையின்றித் திண்டாடின. ஏற்றுமதி மாட்டுக்கறி வியாபாரத்தால் அடிமாடுகளாக அழைத்துச் செல்லப்பட்டுப் பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றன என்பதை நடுநிலையோடு யோசிப்போமே.

 

 

 

முனைவர் இரா.செல்வி
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பூசாகோ கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
- 641014
தமிழ்நாடு, இந்தியா

 


 


நன்றி: தி டிடெக்டிவ் ரிப்போர்ட்
(ஜனவரி 16-31-2016)