ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

கவிஞர் இரா.இரவி

‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று அடையும் முன்பாகவே மகாகவி பாரதியார் தொலைநோக்கு சிந்தனையுடன் பாடினார். மகாகவி வாக்கு பலித்தது.

இன்று நம்மில் சிலர், ஏன் விடுதலை அடைந்தோம்? வெள்ளைக்காரனே இருந்து இருக்கலாமே என்று ஆதங்கம் கொள்கின்றனர். அது தவறு. அம்மா, அப்பா இருக்கும் குழந்தைகளுக்கு அம்மா, அப்பாவின் அருமை, பெருமை தெரியாது. ஆனால் ஆதரவற்ற குழந்தைகள் அம்மா, அப்பா அருமையை நன்கு அறிந்திருக்கும். அதுபோலவே சுதந்திரமாக வாழ்வதால் சுதந்திரத்தின் அருமை, பெருமை நம்மில் பலர் இன்னும் உணரவில்லை.

மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மீன்கள் என அனைத்து உயிரின்ங்கள் விரும்புவதும் விடுதலை தான். விடுதலை என்பது மகத்தானது. பூமாலை போன்றது. அதனை குரங்கு போல பிய்த்துப் போட்டால் அது மாலையின் குற்றமன்று.

ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது, அவர் செல்லும் வழியில் அவரை மறித்து ஒருவர் கேட்டார். விடுதலை, விடுதலை என்றீர்கள், விடுதலையால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றார். அதற்கு நேரு அவர்கள் சொன்னார். செல்லும் வழியில் பிரதமரை இடைமறித்து கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு வந்ததே, விடுதலையின் பயன் தான். வெள்ளைக்காரத் துரையை இப்படி இடைமறித்து உங்களால் கேள்வி கேட்டு இருக்க முடியாது! என்றார். விடுதலையால் ஒரு பயனும் இல்லை என்று சிலர் விதண்டாவாதம் செய்து வருகின்றனர். விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என்று வாழ்க்கையை பிரித்தால், விடுதலையின் விளைவு புரியும்.

அகிம்சை வழியில் காந்தியடிகளும், ஆயுத வழியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் போராடிய பின்புதான் நமக்கு விடுதலை கிடைத்தது. தென்ஆப்பிரிக்காவில் வெள்ளையன் ஒருவன் காந்தியடிகளை மிரட்டிய போது, எங்கே சுடு பார்ப்போம்? என்று சொல்லி முன்நின்றவர் தில்லையாடி வள்ளியம்மை. கடுங்காவல் தண்டனை பெற்று நோய்வாய்ப்பட்டு அவள் இறந்த போது, காந்தியடிகள் மிகவும் வருந்தினார், கண்கலங்கினார்.

வீர வாஞ்சிநாதன், கொடி காத்த குமரன் வரலாறுகள் நமக்கு தெரியும். இப்படி எண்ணற்ற உயிர்த்தியாகம் செய்து போராடி பெற்ற விடுதலையின் அருமையை இன்றைய இளைஞர் சமுதாயம் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மறைந்த விடுதலைப் போராட்ட வீரர் மாயாண்டி பாரதி அவர்கள் சொல்வார், “ஏறினால் ரயிலு, இறங்கினால் ஜெயிலு” என்று. அந்த அளவிற்கு வாழ்க்கையை, இளமையை தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள். மதுரை, வடக்கு மாசி வீதியில் அணுகுண்டு அய்யாவு, அவரது தம்பி ஏ.வி.செல்லையா, இவர் என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா). இவர்கள் போராடிய விதத்தை என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்கள். சிறுவனாக இருந்த போது கேட்டவைகள் இன்றும் என் நினைவில் உள்ளது.

மதுரையில் வாழ்ந்து வரும் பலர் இன்னும் திருமலை மன்னர் அரண்மனை பார்த்து இருக்க மாட்டார்க்ள். ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், மீனாட்சி கோவிலுக்கு அடுத்தபடியாக பார்க்க விரும்புவது திருமலை மன்னர் அரண்மனை. அதுபோல சுதந்திரமாக வாழ்பவர்களுக்கு சுசந்திரத்தின் அருமை தெரியவில்லை. சுதந்திரமற்றவர்களுக்குத் தான் சுதந்திரத்தின் அருமை தெரியும். தடியடி, துப்பாக்கி சூடு, “‘இம் என்றால் சிறைவாசம், ஏன்?’ என்றால் வனவாசம்” என்று இருந்த காலம் உண்டு.

ஜாலியன் வாலாபாக் படுகொலை என்ற கொடூர நிகழ்வை நாம் நன்கு அறிவோம். வெள்ளையனே வெளியேறு, வெளிநாட்டுத் துணிகள் புறக்கணிப்பு இப்படி எத்தனையோ போராட்டங்கள் நடத்திய பிறகு போராடிப் பெற்ற விடுதலையை கொண்டாடி மகிழ்வோம்.

நேரு அவர்கள் விடுதலை போராட்டத்தின் போது சிறையில் இருந்தார். அப்போது உணவில் மண் சேர்ந்து இருந்தது. சிறை அதிகாரியிடம் நேரு கேட்டார், “ஏன் இப்படி உணவில் மண் கலந்து தருகிறீர்கள்?” என்று. சிறை அதிகாரி சொன்னார், “மண் விடுதலைக்காகத் தானே போராடுகிறீர்கள், உங்கள் மண்தானே, சாப்பிட்டால் என்ன? என்றார். அதற்கு நேரு சொன்னார், “எங்கள் மண் விடுதலைக்காகத் தான் போராடுகிறோம். உங்களைப் போல மண்ணை விழுங்குவதற்கு போராடவில்லை” என்று.

மாவீரர் நேதாஜி அவர்கள், இங்கிலாந்தில் பேசிக்கொண்டு இருந்த போது, ஒரு வெள்ளையர் சொன்னார், “பிரிட்டீஸ் சாம்ராஜ்ஜியத்தில் அஸ்தமனமை இல்லை” என்று. அதற்கு நேதாஜி சொன்னார், “கடவுள் கூட உங்களை இருட்டில் நம்பாமல் வெளிச்சத்தில் வைத்து இருக்கிறார்” என்றார்.

காந்தியடிகளுக்கு ஆசிரம தொண்டுக்காக வந்த
52 பவுன் தங்க நகையை கஸ்தூரிபாய் ஆசைப்பட்டு கேட்டபோது தர மறுத்தார், எடுத்து விளக்கினார். பொதுத்தொண்டுக்காக வந்ததை நாம் எடுப்பது தவறு என்றார். வேண்டும் என்றால் எடுத்துக்கொள் என்ற போது, கஸ்தூரிபாய் மனம் மாறி, மன்னித்து விடுங்கள், எனக்கு வேண்டாம், பொதுத்தொண்டுக்கே பயன்படட்டும் என்றார். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களால் கிடைத்தது நமக்கு விடுதலை.

விடுதலையால் என்ன நன்மை? என்று கேட்கும் சிலருக்காக, விடுதலைக்குப் பின் நாம் அடைந்த பயனை, முன்னேற்றத்தை, வளர்ச்சியை, சாதனையை பார்ப்போம்.

போக்குவரத்து : அன்று சென்னை செல்வதென்றால், மாட்டுவண்டியில் சென்றால் ஒரு வாரம் ஆகும். இன்று மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என்று எத்தனையோ வசதிகள், விமானம், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சம், மதுரையிலிருந்து சென்னைக்கு
50 நிமிடங்களில் சென்று விடுகிறோம்.

எழுத்துரிமை : இன்று யாரும் மனதில்பட்ட கருத்தை, சுதந்திரமாக முகநூல், வலைபூ, இணையம் என்று எளிதில் எழுதலாம்.

ஊடகம் : அன்று வானொலி தவிர ஒன்றுமில்லை. இன்று நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், இணையங்கள் இப்படி பல வளர்ச்சிகள் அடைந்துள்ளோம்.

அலைபேசி என்பது தீ போல - தீயை அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தலாம், ஊரை எரிக்கவும் பயன்படும். அலைபேசியை நன்மைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தீமைக்கு பயன்படுத்துவது நமது முட்டாள்தனம். அது அலைபேசியின் குற்றமன்று.

பெண்கள் முன்னேற்றம். அனைத்து துறையிலும் தனி முத்திரை பதித்து வருகின்றனர். நேதாஜி அவர்கள் அமைத்த படையில் அன்றே பெண்களை சேர்த்தார். நமது நாட்டில் விமான போர்ப்படை விமானியாக தற்போது பெண்களை சேர்த்து உள்ளனர். பெண்களிடையே நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், முன்னணியில் இருக்கிறோம். பெற்ற வசதிகள், பலன்கள், நன்மைகள் இவற்றை எண்ணிப்பார்க்கும் போது மகாகவி பாரதியார் பாடியது முற்றிலும் உண்மை. “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்பது.

உலகில் விலைமதிப்பற்றது எது என்றால் விடுதலை தான். அமெரிக்க ஜனாதிபதியிடம், அமெரிக்கா பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்ற போது, ‘உழைப்பு’ என்றார். இந்தியா பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்றால் ‘விடுதலை’ எனலாம்.

விடுதலைக்கு முன்பு மக்கள் எவ்வளவு துன்பத்தில் வாழ்ந்தார்கள் என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது. விடுதலைக்கு முன்பு வாழ்ந்த பெரியவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், எடுத்து இயம்புவார்கள்.

சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தாத்து நம் குற்றமே ஒழிய சுதந்திரத்தின் குற்றமன்று.
தமிழகத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திட எதிர்ப்பதும், கர்நாடகா காவேரியில் தண்ணீர் திறக்க மறுப்பதும், ஆந்திரா பாலாற்றின் குறுக்கே உள்ள அணையின் உயர்த்தை உயர்த்தியதும் வாக்கு வங்கி அரசியலாகும். அரசியல்வாதிகள் செய்யும் குற்றத்தை, விடுதலையின் மீது சுமத்துவது விவேகமன்று.

சிறிய சிட்டுக்குருவி கூட, அடைபடுவதை விட்டு, விட்டு விடுதலையாகி, உயரப் பறக்கவே விரும்புகின்றது. பறவைகள் மட்டுமல்ல, விலங்குகள் மட்டுமல்ல, செடி, கொடி போன்றவைகளும் விடுதலையை விரும்புகின்றன. எனவே இன்பமயமான, ஒளிமயமான விடுதலையை கொண்டாடி மகிழ்வோம். விடுதலை பற்றி விபரம் புரியாமல் பேசுவதை நிறுத்திடுவோம்.

விடுதலையை நல்லவிதமாக பொதுநல நோக்குடன், மனிதாபிமானத்துடன், மனிதநேயத்துடன் வழங்கி கொண்டாடி மகிழ்வோம்.
 

 

eraeravik@gmail.com