முடிவில்லா கண்ணீர் (சிங்கள மொழிக்கதை)

ரி.சாமளி மிகிராணி

மொழியாக்கம்: ஆறுமுகம் தங்கவேலாயுதம்


நாளை ஏப்ரல் பதின்மூன்றாம் திகதி சிங்களப் புதுவருடம். முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் கழிந்து சென்று மேலும் ஒரு புதிய நாள் தோன்றுகின்றது. ஆனால் பாசம் உலகத்தில் அந்தரித்துப் போனதைப் போன்று எங்களது வீடு. அன்றைய நாளை நாங்கள் எவ்வளவு தூரம் மகிழ்ச்சியோடு கழித்தோம். எவ்வளவு தூரம் எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு இருந்தோம்? நீண்ட காலத்திற்குப் பின்பு புதுவருட விடுமுறையைக் கொண்டாடுவதற்கு அண்ணா வரும்வரை பொறுமையின்றிக் காத்திருந்தோம்.

அண்ணன் புதுவருடத்திற்குக் கொண்டு வருகின்ற புத்தாடைகளின் சுகந்தம் அனோமாவுக்கு இன்னமும் உணர்வதைப் போன்று இருந்தது. அந்த ஆடைகளைக் கொண்டுவந்த உடனேயே அவற்றை அணிந்துகொண்டு அழகான வடிவத்தை ரசித்து ரசித்துக் கொண்டே அண்ணாவிற்கு முன்பாக ஓடுவது நாடு ஒன்று - இராச்சியம் ஒன்று கிடைத்ததைப் போன்றது. அந்த அழகைப் பார்த்து அப்பாவித்தனமாகச் சிரிக்கின்ற அம்மாவினுடைய விழிகளின் ஓரத்தில் வடிகின்ற மெல்லிய கண்ணீர்த்துளிகளை அவள் சீத்தைப் புடவைத் தலைப்பினால் துடைப்பதை அனோமா காண்கிறாள். தாயின் விழிகளின் ஓரத்தில் இந்தக் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்து வருவது அவளது இரத்தம் தசைகளைச் சூடாக்கிக் கெர்ணடு எழுகின்ற பிள்ளைப் பாசம் என்பதை அனோமா அறிவாள்.

வேறு நாட்கள் என்றால் இதுவரையில் அம்மா பணியாரங்கள் சுட்டு முட்டிகளில் போட்டுக் கட்டி வைத்திருப்பாள். முழு வீடுமே பணியாரத்தின் வாசமாயிருக்கும். புதுவருடம் பிறப்பதற்கு முன்பே வீட்டின் முன்னால் உள்ள முள்முருக்க மரத்தில் இருந்துகொண்டு குயில் சிந்து பாடும். இந்தத் தடவை புதுவருடம் பிறப்பதற்கு குயிலும் தங்களது முள்முருக்க மரத்தை விட்டு விட்டுப் போய்விட்டதாக அனோமா நினைத்தாள்.

ஒரேயடியாக வீசிவந்த காற்றில் முள்முருக்க மரத்தின் கொப்பொன்று முறிந்துகொண்டு அனோமாவின் முன்பாக விழுந்தது. மேலும் ஒரு ஆபத்துக்கான அறிகுறி அது என அவள் நினைத்தாள். அவள் முள்முருக்கம் மரத்தின் பக்கம் பார்க்கும்போதே அவளது விழிகள் முள்முருக்க மரத்திலும் தெருவின் மறுபுறத்தில் மின்சாரத் தூணிலும் கட்டப்பட்டிருந்த காற்றில் அசைந்தாடுகின்ற வெள்ளை நிறக் கொடியின் மீதும் சென்றன. 'நாட்டின் பொருட்டு உயிரை அர்ப்பணித்த போர்வீரன் அசேல பண்டாரவுக்கு மோட்ச சுகம் கிடைப்பதாக'.

வீட்டின் முன்னால் தொங்கும் பதாகையில் எழுத்துக்களின் வரிசை நீளத்திற்கு அனோமாவின் விழிகள் எத்தனை தடவைகள் சென்றனவோ தெரியாது. அதனை எத்தனை தடவைகள் வாசித்தாலும் வேண்டாமென்று போகவில்லை. அவற்றின் மத்தியில் காணப்படுகின்ற அண்ணனின் நல்ல நிறத்தோடு கூடிய அழகான முகத்தையும், இராணுவச் சீருடை அணிந்த அவனது தேகக்களையுள்ள தோரணையும் காணும்போது அவன் இறந்துபோனான் என்று அனோமாவுக்கு எவ்விதத்திலேனும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. உண்மையாக அண்ணனின் அழகான தேக லட்சணம் பொருந்திய உருவமும், நல்ல நிறமான அழகும் பொருந்துவது இராணுவ அதிகாரி ஒருவனுக்குத் தான் என அனோமா நினைத்தாள். வார்த்தெடுத்ததைப் போன்று அண்ணனின் நல்ல நிறமுள்ள முகம் புகை மண்டலத்தைப் போல அனோமாவின் விழிகளினுள்ளே ஊறுகின்ற கண்ணீர்த் துளிகளினூடே தோன்றுகின்ற போது உண்மையாகவே இந்த நிகழ்வு கனவோ நனவோ என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு இயலாத திகைப்பிலும் மலைப்பிலும் அவள் இருந்தாள்.

அம்மாவுக்கு இன்னமும் சரியான விதமாக நினைவு இல்லை. பல நாட்களுக்கு வயிற்றுக்கு உணவு இல்லாமல் உடல் இளைத்துப் போயிற்று. அனைத்தும் முடிவடைந்து இருவாரங்கள் கடந்துபோனாலும் அவை எல்லாமே பகிடியோ கனவோ என்று ஒரு தடவை அனோமா நினைத்தாள்.

அனோமாவின் மனம் கணப்பொழுதில் அந்த அதிர்ஸ்டமில்லாத நிகழ்வு காதில் விழுந்த வேளைக்கு ஓடிச்சென்றது. அனோமா மற்றைய நாளைப் போன்று விறாந்தையில் நிலாக்கதிர்களைப் பார்த்தவாறு பைத்தியம் பிடித்தவளைப் போன்று உட்கார்ந்திருந்தாள். இரவின் இருள் எந்தளவுக்குப் பயங்கரமானதாக இருந்தாலும் மரங்களிடையே வருகின்ற சந்திரனின் ஒளிக்கதிர்கள் எழுகின்றபோது ஆனந்தம் உண்டாகும் என்பது அனோமாவுக்குத் தெளிவாகியது. சந்திரனின் ஒளிக் கற்றைகளைப் பார்த்துக்கொண்டிருந்த அனோமாவின் விழிகள் ஒரேயடியாக தோட்டத்தின் பக்கம் திரும்பிய வாகனத்தின் விளக்கு வெளிச்சத்தினால் கூசிப்போயின. தோட்டத்தில் திரும்பியது ஜீப்வண்டி என்பதைக் கண்ட அனோமா அம்மாவை அழைத்தவாறே அம்பைப் போல் வேகமாக எழுந்தாள்.

'அம்மா... அம்மா... அண்ணா வருகிறார்'

அவர்கள் ஜீப் வண்டியை நிறுத்துவதற்கு முன்பே சகோதர அன்பினால் சக்தி நிறைந்த மனத்தோடு ஓடிப்போனாள். அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்ற ஜீப்பில் இருந்து இராணுவ அதிகாரிகள் குழுவினர் இறங்கினர். மற்றைய நாட்களில் கண்டிராத உத்தியோகத்தர்கள் அவர்கள். இருந்தாலும் அண்ணாவின் நண்பர்கள் சிலர் அவர்களிடையே இருந்தமையால் அவள் மிகவும் நம்பிக்கையோடு கதைத்தாள்.

' ஆ... அண்ணாக்கள்.... எங்கே... எங்கே.... எங்கே... எங்களது அண்ணா?'

தமையன் எப்போதுமே அவர்களைப் பயப்படுத்துவதற்காக கடைசியாக வாகனத்தில் இருந்து இறங்குவதனால் அனோமா சிரித்தவாறு பொறுமையின்றிக் கேட்டாள்.

'கலவரப்பட வேண்டாம் தங்கச்சி அசேல வரவில்லை. அசேலவுக்கு ஒரு சிறிய கரைச்சல்'

'பகிடி பண்ணாமல் அண்ணாவை ஜீப்பிலிருந்து இறங்கச் சொல்லுங்கோ அண்ணா... எங்களைப் பொய்யாகப் பயப்படுத்தாமல்'

எப்பவும் தமையன் இதுமாதிரி பகிடி செய்யிறபடியால் அனோமா அவ்வாறு கூறினாள்.

'என்ன இப்படி வெளியிலை நின்று கொண்டு.... வீட்டுக்குள்ளை வாங்கோ மக்கள்... எங்கை எங்கடை மகன்...? இன்னமும் வாகனத்தின் உள்ளேயா?'

வீட்டினுள் இருந்து வெளியே வந்த அம்மா சிரித்தவாறே கேட்டாள்.

'அம்மா கலவரம் அடையவேண்டாம். அசேலவுக்கு சின்னதொரு கரைச்சல். நேற்று இரவு அசேலவின் முகாமிற்குப் புலிகள் அடிச்சிட்டாங்கள்'

அசேலவுக்கு சூடுபட்டது பற்றி சொல்லாமல் இருப்பதற்கு முடியாததனால் இராணுவ அதிகாரிகள் சொல்லிக்கொண்டார்கள்.

'ஐயோ... என்னுடைய மகனுக்கு என்ன மஹத்தயா... மிகவும் கஷ;டமா? இப்ப எங்கே? ஐயோ... கடவுளே என்னுடைய மகன்...'

அம்மா அழுதபடியே கேட்டாள். அழத் தொடங்கிய அம்மாவை ஆறுதல் படுத்துவதற்கு அவர்கள் முன் வந்தாலும் அசேலவுக்கு என்ன நேர்ந்தது என்று அவர்களுக்கும் சரியான விதமாகத் தெரிந்திருக்கவில்லை.

'சேர் எனது அண்ணாவுக்கு என்ன? உயிரோடு இருக்கிறாரா?'

பாதி நினைவோடு அனோமா வினா எழுப்பினாள். தான் என்ன விதமாக நடந்துகொள்கிறாள் என்பது அவளுக்கே ஞாபகம் இல்லை.

'இந்த யுத்தத்திற்குச் செல்வது எல்லாருக்கும் பொது தங்கச்சி. யுத்தத்திற்கு சென்று உயிரை விடுவது என்பது நாட்டிற்கே பெருமை'

'எனது அண்ணா இறக்கவில்லை. அண்ணாவினது உடல் எங்கே? எனக்கு இதை நம்பமுடியாது'

'அமைதியடையுங்கோ தங்கச்சி'

இந்த இரைச்சல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து பலர் ஓடிவந்தார்கள்.

'கடைசித் தாக்குதலில்... பலருக்கும் சூடுபட்டு... அவர்கள் உடல்கள் எல்லாவற்றையும் எரிச்சிட்டாங்கள்..... போனவர்கள் திரும்பி வராதபடியால் அவங்களும் அழிஞ்சிட்டாங்கள் என்று.... நாங்கள் தெரிந்துகொண்டோம்'

'ஐயோ எனது தங்கமே... ஏன் இப்படி நடந்தது...?'

'ஐயோ அண்ணா ஏன் எங்களை விட்டிட்டுப் போனாய்?'

அனோமாவும் அம்மாவும் ஒன்றாகக் கட்டிப்பிடித்து அழுதபடி விழுந்தார்கள்.

சின்னமாமாவோடு அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு அதில் எதையுமே நம்புவதற்கு அவளுக்கு முடியாததைப் போன்று அனோமா தானாகவே கத்தினாள்.

கடைசித் தடவையாகவேனும் தனது சகோதரனின் முகத்தைப் பார்ப்பதற்கேனும் முடியாமற் போனது. அண்ணனை நினைத்து ஏழாவது நாளில் பௌத்தமத போதனைகளைக் கூறி தானம் செய்வதற்கு மாத்திரமே அவர்களுக்கு முடிந்தது.

அண்ணா எப்படியோ அல்லது எங்கோ ஒழிந்திருந்து விட்டு என்றோ ஒருநாள் மீண்டும் வீட்டுக்கு வரலாம் என்று அனோமா பல தடவைகள் தாயாரிடம் கூறினாள். அந்த நேரத்தில் மாத்திரம் தாயார் சின்னச் சிரிப்பொன்றை முகத்தில் தங்கவைத்துக் கொண்டு இரண்டு கண்களையும் திறந்த வண்ணம் அனோமாவின் முகத்தைப் பார்த்தபடி சின்னஞ்சிறுமியைப் போன்று இருப்பாள்.

அண்ணாவின் மரணச் செய்தியைக் கேட்ட நேரத்தில் இருந்து அம்மா அரை நினைவோட இருந்தாள். ஏற்பட்ட திடீர் அதிர்ச்சியினால் அம்மாவினது நினைவு சிக்கலாகிப் போயிருந்தது. தானங்கள் வழங்குவதற்கு அக்கம் பக்கத்தவர்களின் உதவி ஒத்தாசைகள் இல்லையென்றால் இந்த வேளையில் என்ன செய்திருக்க முடியுமென்று நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அனோமாவுக்கு முடியவில்லை.

'அண்ணா இறக்கவில்லை அம்மா. அண்ணா என்றைக்காவது எங்களைப் பார்க்க வருவார்' என்று அனோமா அடிக்கடி அம்மாவுக்குக் கூறினாள். அவ்வாறு இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவன் மற்றைய நாள் வீட்டுக்கு வந்த செய்தியை என்றோ ஒருநாள் பத்திரிகையில் படித்தது அனோமாவின் நினைவிற்கு வந்தது.

'அம்மா அண்ணா என்றாவது வருவார்'.

சுயநினைவில்லாத அம்மாவிடம் அனோமா அவ்வாறு கூறும்போது அவளுக்கு மீண்டும் சுயநினைவு வந்ததைப் போன்று இருக்கும். தான் சொல்வதைக் கேட்கும் அம்மாமீது அனோமாவின் இதயத்தில் ஏற்படுவது அனுதாபமே. 'உண்மைக்கு முகம் கொடுக்க வேண்டும்' என்ற உணர்வு மீண்டும் ஒருதடவை அனோமாவுக்கு ஏற்பட்டது. அண்ணா இறந்து போய்விட்டார். அவர் மீண்டும் எந்த நாளிலும் வரமாட்டார். ஆனால் அண்ணாவின் சம்பளம் அம்மாவின் கைக்குக் கிடைக்கும்.

'எனது மகன் இல்லாமல் எனக்கும் என்ன பணம்? எனது ஒரே மகன் நாட்டிற்காக இனத்திற்காகவா எனது ராசா நீ யுத்தத்திற்குப் போனாய்?' தடவைக்குத் தடவை சுயநினைவு திரும்பும் அம்மா பைத்தியம் பிடித்தவளைப் போன்று அழுது விழுவாள். அம்மாவின் இந்த நிலவரத்தைப் பார்த்துக்கொண்டிருக்க அனோமாவுக்கு முடிவதில்லை. அம்மாவைப் பார்க்கும்போது சூடாக்கிய ஈயத்துண்டொன்றை இதயத்தில் செலுத்தியதைப் போன்ற உணர்வு அனோமாவுக்குத் தோன்றியது.

'அம்மாவை நல்லதொரு டொக்டரிடம் காண்பிக்க வேண்டும்' சின்னமாமா பலதடவைகள் அதுபற்றி ஞாபகப்படுத்தினார்.

'உண்மையாகவே அண்ணா யுத்தத்திற்குச் சென்றது நாட்டின் இனத்தின் பொருட்டா?' அனோமா தனக்குள்ளேயே வினா எழுப்பினாள். அண்ணா உயர்தரம் சித்தியடைந்து வீட்டிற்கு வந்து இருந்தது, பொருத்தமான தொழில் ஒன்று கிடைக்கும்வரை தொழில்கள் பலகிடைத்தாலும் அதில் எதையுமே அண்ணா விரும்பாதது.....

'அண்ணாவுக்கும் தொழில் இல்லை... நான் கட்டுநாயக்கா ஆடைத் தொழிற்சாலைக்கு என்றாலும் போறன் அம்மா. இன்னும் அம்மாவுக்கு பாரமா இருக்கிறது எப்படி'

அம்மா தும்புத் தொழிற்சாலையில் வேலை செய்து சம்பாதிக்கும் சிறிது பணத்தில் மூவரும் வாழ்வதற்கு முடியாததாலும் தும்புத் தொழிற்சாலையிலேயே கரைந்து போகும் அம்மாவினுடைய மெலிந்த தேகத்தைப் பார்க்க முடியாததாலும் ஒருநாள் அம்மாவிடம் கூறினாள்.

'அவ்வளவு தூரத்திற்குப் போகவேண்டாம் தங்கச்சி. நான் இந்த வீட்டில் இருக்கும்போது எப்படி தங்கச்சியைக் கொண்டு உழைச்சுச் சாப்பிடுவது? அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் சாப்பிட உடுக்கத் தருவதற்கு எனக்கு முடியும். ஓம் எனக்கு முடியும். இப்ப இனி தொழில் தேடியாச்சுது. இராணுவத்துக்குப் போறதுக்கு விண்ணப்பம் போட்டு முடிஞ்சிது'

'என்ன மகன்?'

'ஐயோ அண்ணா?'

'ஐயோ என்ரை தங்கம். மகனே உனது எண்ணத்தை மாற்று எனது மகனே.... எனது உயிர் இருக்கும்வரை இந்தத் தும்புத் தொழிற்சாலை வேலைக்குப் போய் உங்களுக்கு சாப்பிட உடுக்கத் தாறன். இந்த அம்மா இன்னும் கொஞ்சக் காலத்திற்காவது சீவித்து இருப்பதைப் பார்க்க விரும்பினா உந்த எண்ணத்தை மாற்று மகனே'

'ஐயோ அண்ணா இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அம்மா சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ அண்ணா...'

'இதைக்கேள் தங்கச்சி யதார்த்தத்துக்கு முகம் கொடுக்கப் பழகிக் கொள்ளுங்கோ. எவ்வளவு தூரம் படிச்சாலும் தொழில் இல்லாத எந்த ஒருத்தனும் கடைசியிலை போறது இதுக்குத்தான். சும்மா சாப்பிட்டுக் குடிச்சு உலகத்துக்குப் பாரமா இருக்கிறதைவிட தான் பிறந்த நாட்டுக்கு சேவையை நிறைவேற்ற வேணும். தங்கச்சி அம்மாவுக்கு நீயும் விளங்கப்படுத்து. யுத்தத்திற்குப் போய் இறந்தாலும்... இறப்பது தன்னுடைய நாட்டுக்குச் சேவை செய்துதானே. அது எனது மனதுக்குப் பெரிய ஆறுதல். அடுத்தது அம்மா எவ்வளவு பெருமைப்பட வேணும். தனக்கு இருந்த ஒரே மகன் நாட்டை இனத்தைப் பாதுகாக்க யுத்தத்திற்குப் போனான் என்று'

அம்மாவும் அனோமாவும் எவ்வளவு அழுது புரண்டாலும் அண்ணன் அந்தத் தீர்மானத்தை மாற்றவில்லை. அந்தக் கணப்பொழுதில் இருந்து வீட்டில் சோறும் சமைக்கவில்லை. சமைச்ச சோறும் சரியாக வயிற்றில் விழவும் இல்லை. மனதில் எரியும் நெருப்பினால் வயிற்றில் விழுந்த சோறும் கருகிப்போனது. வயிறு நிரம்பியது கண்ணீர்களினாலேயே. நாட்கள் கழிந்ததும் கண்ணீரோடுதான்.

'நாட்டை இனத்தைப் பாதுகாக்க யுத்தத்திற்குச் சென்ற மகன் ஒருவனின் தாய் எந்தளவுக்குப் பெருமைப்பட வேணும்? எனது மகன் படைவீரனாகப்போனது நாட்டின் இனத்தின் பொருட்டு உயிரை அர்ப்பணிக்க நாட்டை பாதுகாக்க' முற்காலத்து விகாரமகா தேவியைப் போன்று அப்படிச் சொல்வதற்கு அம்மாவுக்கு இடம் இருந்தது. ஆனால் அம்மா சொல்லவில்லை.

'அம்மா வடக்கில் கொடிய தமிழர்கள். தெற்கில் இந்து சமுத்திரம். நான் எப்படி கரங்களையும் பாதங்களையும் நீட்டித்தலை சாய்ப்பது?'

கைமுனு இளவரசன் போன்று அண்ணா அப்படிச் சொல்லவும் இல்லை.

'நாட்டிற்காக இனத்திற்காக அல்ல அம்மா. அம்மாவினுடைய பசியைப் போக்க. தங்கச்சி திருமணம் முடித்துப் போவதற்குச் சீதனம் தேடிக்கொள்ள வீட்டில் செடி ஒன்றை நட்டுக் கொள்வதற்கு நான் யுத்தத்திற்குப் போறன். அதில் கிடைக்கிற சிறிது பணம் எனக்கு யுத்தத்தைவிடப் பெரிது அம்மா'

அண்ணா கூறியது அப்படித்தான். பூரணமான உண்மையும் அதுதான். அண்ணா யுத்தத்திற்குப் போனது அதற்காகத்தான். பற்றாக்குறைகள் இல்லாத எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு வேறு மார்க்கம் இல்லாதபடியால். வாழ்க்கையில் தோற்றுப் போனது அதனாற்தான். இதுபோன்ற குடும்பங்களில் இளந்தாரிகள் யுத்தத்திற்குப் போவது தனது சகோதரனைப் போன்று குடும்பப் பாரத்தைத் தாங்குவதற்காக இருக்கவேண்டும் என்ற உணர்வு அனோமாவுக்குப் பல தடவைகள் தோன்றின.

'குணவதிக்கு இப்ப வசதி. இராணுவத்தின் சம்பளம்தானே. அவளுடைய ஒரே மகன் ஐயோ அவனையும்... என்னுடைய ஒன்றை என்றால் நான் தெருத்தெருவா பிச்சை எடுத்துச் சாப்பிட்டாலும் இராணுவத்திற்கு அனுப்ப மாட்டன்'

கீழ் வீட்டுப் பெரியம்மா பல இடங்களிலும் கூறியிருந்தாள். ஆனால் அம்மா அண்ணாவை திட்டமிட்டு இராணுவத்திற்கு அனுப்பவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அம்மாவும் அனோமாவும் பல நாட்கள் கண்ணீரைச் சிந்தியது துடித்தது அண்ணா இராணுவத்திற்குப் போவதை நிறுத்துவதற்கே. ஆனால் அண்ணா மேலும் பொறுக்கவில்லை. வறுமையினின்றும் மீள்வதற்கு எடுக்கவேண்டிய வழியை அண்ணா தேர்ந்தெடுத்ததனால் அண்ணாவில் குற்றம் சொல்ல இயலாது. அதேபோன்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்களது வாய்களை மூடவும் முடியாது. ஊரார்களின் இந்தக் கதைகளைக் கேட்க முடியாததாலேயே ஆரம்ப நாட்களில் அம்மா வெளியே செல்லவில்லை.

'நீ ஏன் அனோமா இவ்வளவு படிச்சிருந்த அண்ணாவை இராணுவத்திற்குப் போக விட்டனி?'

ஒருநாள் சின்னமச்சாள் இப்படிக் கேட்டாள். தங்கள் குடும்பத்தைப் பார்த்துச் சிரிப்பதற்கே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை அனோமா தெரிந்து கொண்டிருந்தாள்.

'நாட்டை, இனத்தைப் பாதுகாக்க இந்த மாதிரி வீரஇளைஞர்களை யுத்தத்திற்கு அனுப்பவில்லை என்றால் வேறு யார் போவது?' அனோமா அவ்வாறு கூறியது இதயத்தின் ஆழத்தில் எழுந்த அண்ணன் மீதான அனுதாபத்தினால்.

அண்ணா இராணுவத்திற்குப் போன நாட் தொடக்கம் வாரத்தில் ஒரு தடவையாவது பன்சலவிற்கு சென்று போதிபூசை செய்வதற்கு கடவுளை வேண்டுவதற்கு அம்மாவும் அனோமாவும் முயற்சி எடுத்தார்கள். அவர்களின் மனங்களைச் சரிப்படுத்துவதற்கு இருந்தது அது மாத்திரமே. அது மனதிற்குச் சுகம் ஆறுதல். ஆனால் அவை அனைத்தும் பயனற்றுப் போனது இன்று தெளிவாகியுள்ளது. இதுவரை காலமும் அண்ணாவை பாதுகாத்துத் தருமாறு வேண்டியது யாரிடமிருந்து என அனோமா நினைத்தாள்.

'என்றாவது எனக்கு ஏதாவது நேர்ந்தால் தங்கச்சியை நல்ல ஒருவனுக்குக் குடுங்கோ அம்மா'

ஒருமுறை விடுமுறைக்கு வந்திருந்த அண்ணா கூறியவைகள் அனோமாவின் நினைவில் தோன்றியது.

'என்ன கதை நீ கதைக்கிறாய் மகன்'

'அதுதான் சரியான உண்மை. யுத்தத்திற்கு முகம் குடுக்கவேணும் அம்மா. அதனுடைய நிலவரத்தை விளங்கிக் கொள்ளுங்கோ. இப்படியாவது பிறந்த நாட்டுக்கு சேவையை நிறைவேற்றுவதற்கு கிடைத்த அதிர்ஸ்டம் என்று நினையுங்கோ அம்மா. யுத்தத்தினால் அனாதையாகிப் போகின்றவர்களில் சிங்களம், தமிழ் என்று பேதம் இல்லை. எல்லாருமே மனிதர்கள். எதற்காக இப்படிச் சாகவேண்டும்?'

அண்ணா கதைப்பது விரக்தியடைந்தவரைப் போன்று மகாசேனா மலையைப் புரட்டுபவரைப் போன்று. நீண்ட யோசனையில் ஆழ்ந்த அண்ணா மீண்டும் அம்மாவோடும் அனோமாவோடும் அதிகம் பிதற்றத் தொடங்கினான்.

'என்னைக் கொல்லமுடியாது. அம்மாக்கள் பயப்படவேண்டாம். செத்தாலும் அம்மாக்களுக்கு கரைச்சல் ஏற்படாது. எனது சம்பளம் வீட்டுக்கே கிடைக்கும். வீடுவாசல் வேலை இன்னும் கொஞ்சம்தான் இருக்கு. அதையும் இந்த மாதம் கழிவதற்கு முன்பு முடித்துக்கொள்ள இயலும். அதற்குப் பிறகு தங்கச்சியினுடைய நடவடிக்கையை ஒழுங்கு செய்வம்'.

அண்ணா அனைத்தையும் கூறியபோது அனோமாவின் இருவிழிகளிலும் கண்ணீர் பெருகியது. எப்பவுமே கதைக்காதவைகளை அண்ணா அம்மாவோடு கதைத்தது சரியாக அப்பா ஒருவரைப் போன்று. அப்பா இருந்த காலத்திலையும் அம்மாவோடு அனோமாவைப் பற்றியோ அண்ணாவைப் பற்றியோ இந்தளவுக்கு கதைத்ததில்லை.

அண்ணாவுக்கு மஞ்சள் பலாக்காய் அதிகம் பிடிக்கும். பொரிச்சமீனையும், நெத்தலியையும் வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு நித்திரை வரும்வரை அண்ணா அவற்றைப் பற்றியே கூறுவார். இல்லையென்றால் யுத்தத்தின் பயங்கரம் பற்றிச் சொல்லுவார். தன்னுடைய அனுபவங்களை அம்மாவின் முன்னால் வெளிப்படுத்துவதற்கு அவர் விரும்பாதது அம்மா கலவரமடைவார் என்ற பயத்தினால். அண்ணாவினுடைய நண்பர்களுக்கு யுத்தம் பற்றிச் சொல்கின்றவைகளை திருட்டுத்தனமாகவே அவள் கேட்டிருந்தாள். அவை அந்த அளவிற்குப் பயங்கரமானவை.

'நான் இங்கை இருந்ததற்கு எனக்கு எப்பவுமே வெடிச்சத்தமே கேட்கிறது... அது எனது காதுகளில் வைப்பிலிட்டது போல... அம்மா என்னால் எப்பவுமே யுத்தத்தினின்றும் மீளமுடியாது. எனக்கு மாவீரனாக வேண்டிய தேவை இல்லை. ஆனால் நாங்கள் நன்றாக வாழவேண்டும் என்றால் நான் யுத்தத்திற்குப் போகவேண்டும்.'

அண்ணா தொடர்ச்சியாகக் கூறுவார். அண்ணா கூறுபவைகளைக் கேட்பதற்கு ஆசையாக இருக்கும். அதேபோன்று துக்கமான, வேதனையான அனுபவங்கள் பற்றிக் கூறும்போது அண்ணாவினுடைய விழிகள் இரண்டிலும் பிரகாசிக்கும் கண்ணீர் சொரிந்து கீழே வரும்போது சரியாக நட்சத்திரத் துணிக்கைகள் போன்று இருக்கும். அண்ணாவின் இருவிழிகளிலும் நட்சத்திரமலர்கள் மலரும்.

'ஆனால் அம்மா... நாட்டின் இனத்தின் வலிக்காக யுத்தத்திற்கு வந்தவர்கள் யாரும் இல்லை. யாருமே இல்லை. எல்லாமே பணத்திற்காக. குடும்பப் பிரச்சினை, தன்னுடைய பிரச்சனை, தொழில் இல்லாத பிரச்சனை. இந்த எல்லாப் பிரச்சினைகளாலும் தானே யுத்தத்திற்குப் போவது. சுருக்கமாகச் சொன்னால் யுத்தமும் பிரச்சனை. நாங்கள் யுத்தம் செய்கிறோம். எங்களையும் பாதுகாக்க வேண்டும். நாட்டையும் பாதுகாக்க வேண்டும். அது எங்களுடைய தொழில்.'

இரவு வரைக்கும் அண்ணா சொன்னவைகளை அம்மாவும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அண்ணாவின் கதையின் மூலம் யுத்தகளத்தின் சுயரூபம் அனோமாவுக்கு நன்கு புரிந்தது. அண்ணா என்றும் சொல்லியிராதவைகளைச் சொல்லியபோது அனோமாவின் மனதில் ஏதோ ஒரு புதுமை தோன்றியது. அண்ணாவின் நெஞ்சத்தில் இருந்து உணர்ச்சிகள் எல்லாவற்றையும் நசுக்கிப் பிழிந்து நீராக்கி அனுப்பியதைப் போன்று இருந்தது.

இறுதியாக அண்ணாவின் இறந்த உடலைக் காண்பதற்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. அண்ணாவை சரியாக திருடர்கள் தளவாடிச் சென்றதைப் போன்றிருந்தது. ஆனால் என்றோ ஒருநாள் எந்த ஒரு நொடிப் பொழுதிலாவது 'அம்மா.... தங்கச்சி....' என்று சொல்லிக்கொண்டு அண்ணா வீட்டுக்கு வரலாம் என்று அனோமா ஆயிரம் எதிர்பார்ப்புக்களை பொதியாக கட்டிக்கொண்டாள்.

'மகன் இன்று வருவானா மகள்? மகன் சாப்பிட விரும்பின பலாக்காய்க் கறி ஆக்க ஒரு பிஞ்சுப் பலாக்காய் கூட மரத்திலை இல்லை'

அனோமா சுய உலகில் பாதம் பதித்தது அம்மாவின் சப்தத்தினாலேயே. அம்மா முற்றத்தில் இறங்கிச் சென்று பிஞ்சுப் பலாக்காயைத் தேடுகின்றாள். வரட்சிக் காலத்தில் ஆறுகள், சிறு அருவிகள், குட்டைகள் வரண்டு போவதைப் போன்று அனோமாவின் இருவிழிகளிலும் சுரப்பதற்கு கண்ணீர் இல்லாமற் போயிற்று.

மற்றைய நாட்களில் ஏழ்மையினாலும், வறுமையினாலும் துன்பப்பட்டு மூவரும் சாப்பிடாமலும் இருந்துள்ளனர். ஆனால் இன்று கையில் காசு, பணம் கிடைத்தும் மகிழ்ச்சி மனதைவிட்டு காததூரம் சென்றிருந்தது. மீண்டும் அந்த மகிழ்ச்சியான இடத்திற்கு எப்போ வரலாம் என்பதை கனவிலும் கூட நினைக்க முடியாதிருந்தது.

'நல்லதோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு, வாழ்வதற்கு, அம்மா அப்பாவையோ தம்பி தங்கையையோ வாழப்பண்ணுவதற்கு வேறொரு மார்க்கத்தை தெரிந்தெடுப்பதற்கு எங்களது நாட்டு இளைஞர்களுக்கு காலம் வந்துள்ளது என்று கூவி அழைத்துச் சொல்வதற்கு இயலும் என்றால்.....' என நினைத்த அனோமா நீண்டதொரு பெருமூச்சை வெளிக்கொணர்ந்தாள்.