குற்றப் த்திரிகைக்குப் தில்

 

கதை:  எம்.சுகுமாரன்

தொகுப்பு:  எம்.முகுந்தன்

மொழிபெயர்ப்பு : .இராஜாராம்

 

நான், கெ.த்யரூபன், ந்ததினைந்து ருடங்களாகத் ங்கள் ஆஃபிஸில் ஒரு ஏவலாளாகப் ணிபுரிந்து ருகிறேன். இக் காலம் முழுதும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டவேலைகளை முறையாகவும் ப் பூர்வமாகவும் செய்து முடித்தேன் என்பற்கானஒரே சாட்சி என் ச்சாட்சி ட்டுமே. இந்தமுப்பத்தியொன்பதாம் தில் எனக்கு நேரிட்டஇந்தஅவத்திற்கு நான் யாரைக் குற்றம் சொல்ல‌, என் விதியைப் ழிப்பதைத் விர‌.

என்னை ர்வீஸிலிருந்து ஸ்பெண்ட் செய்தநாள் முதல் எனது உறக்கத்தின் வேர் உலத் தொடங்கியது. நூற்றியம்பத்தாறு ரூபாய் ம்பம் வாங்கும் ஒரு ஏவலாளுக்கு ஸ்பென்ஷன் காலத்தில் கிடைக்கும் அஸிஸ்டென்ஸ் அலன்ஸை வைத்துக் கொண்டு இந் த்தில் வாழமுடியுமா? என்றவிஷம் தாங்கள் ஊகிக்கவேண்டியஒன்று. சுமுகமானரும், இத்தனை இளம் தில் உயர் வியை அடைந்தருமானதாங்கள் என்னிடம் இப்படி ந்துகொள்வீர்களென்று நான் னவில்கூடக் ருதவில்லை. ங்களைக் குறித்து நான் சிலவிஷங்களைத் தெரிந்துகொண்டிருந்தேன். தாங்கள் டிக்கும் காலத்தில் முற்போக்கு மாணஅணியின் முன் ரிசையில் இருந்தீர்கள் என்றும், உழைப்பாளிகளின் நுண்ணியல் கோட்பாட்டில் தாங்கள் இப்போதும் ம்பிக்கை வைத்திருக்கீறீர்கள் என்றும் நான் கொண்டிருந்தம்பிக்கை உலைந்து விழுந்துவிட்டது.

எனக்குக் குற்றப் த்திரிகை ந்ததினம், ங்கது அறைக்கு முன் வெகுநேரம் நின்றபிறகு ங்களைச் ந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. தாங்கள் ரிவால்விங் சேரில் சாய்ந்தர்ந்து இங்கிலீஷ் த்திரிகை டித்துக் கொண்டிருந்தீர்கள். என்னைக் ண்டபோது கோபத்தோடும் வெறுப்போடும் த்திரிகையை மேஜைமேல் வைத்தீர்கள். அன்று கூறியவார்த்தைகள் ஒருவேளை உங்களுக்கு இன்று நினைவிருக்காது. எனக்கு அவற்றை க்கமுடியாது, ஸார், அம்புபோலஅவை என்னுள் தைத்தது.

எனக்குக் கூறவேண்டியிருந்ததைக் கேட்கத் தங்களுக்கு நேரமும் வசதியும் இல்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த அறையிலிருந்து வெளியே போயிடணும். இல்லாவிட்டால் வெளியேற்ற வேறு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டி வரும். 

நான் கூப்பிய கைகளைப் பிரிக்கவேயில்லை. உங்களுடைய ஏவலாள் நீங்கள் கையெழுத்திட்ட ஃபைல்களை எடுத்துக்கொண்டு போகும்போது தன் செருப்புக் காலால் என் கால் விரலை மிதித்தான். நானும் ஒரு ஏவலாள் தான் ஸார். ஒரு செருப்பு வாங்கக்கூட வகையில்லாத ஏவலாள். ஏனென்றால், அப்போது இக் குற்றவாளிக்கூண்டிலிருந்து எப்படி விடுதலையாவது என்ற சிந்தனை மட்டுமேயிருந்தது என் மனதில்.

'என்னைக் காப்பாத்தணும் ஸார்' என்று நான் அரற்றியபோது தாங்கள் மேஜைமேல் ஓங்கிக் குத்தி 'கெட்அவுட்' என்று அலறினீர்கள்.

ஸத்யரூபன் என்றைக்கும் பணிவானவன். அந்த நிமிஷமே வெளியே சென்றேன். அறைக்கு வெளியே, 'காட் இஸ் ட்ரூத்' என்று பின்னியிருந்த கயிற்றுக் கால்மிதியில் குற்றப் பத்திரிகையை மடக்கிப் பிடித்துக்கொண்டு நான் நின்றேன்.

அப்போதுதான் உங்கள் ஏவலாள் வந்து என்னைக் கூப்பிட்டான். தாங்கள் என்னைக் கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டு அந்த நிமிஷத்தில் என் மனத்தில் உற்சாகத்தின் வசந்தம் மலர்ந்தது.

தங்களுடைய கன்னங்கள் பொலிவுற்றுச் சிவந்திருந்தன. கீழிறங்கிய கிருதாவை அளைந்தவாறு கரகரப்பான் குரலில் தாங்கள் கூறினீர்கள்:

"பத்து நாளுக்குள் பதில் தரணும். காலக்கெடு நீட்டித் தரமுடியாது. பதில் தரலையானால் எக்ஸ்பார்ட்டி விதிக்காளாகணும். நீங்கள் ஒரு விஷயத்தை நினைவு வச்சுக்கிறது நல்லது. குற்றத்தை மறுத்தால் நாங்கள் சாட்சிகளை உபயோகிப்போம். பிறகு சர்வீஸில் வைத்திருக்க மாட்டோம். குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனையின் கனம் குறையும். போகலாம்,"

நான் இன்னொரு தடவை கும்பிட்டுவிட்டு வெளியே வந்தேன். சில படிகளையும் இரண்டு வராந்தாக்களையும் தாண்டினேன். நான் வேலை செய்த டெஸ்பாட்ச் செக்ஷனை தூரத்திலிருந்து நோக்கியவாறு பெரு மூச்சுவிட்டேன். பசை காய்ச்சும் மணத்தையும், அரக்கு உருகும்போது உண்டாகும் கனத்த நெடியையும் எனக்கு இனிமேல் சுவாசிக்க முடியுமா? தொட்ட இடமெல்லாம் ஒட்டிக்கொள்ளும் அந்த அறைக்குள் எனக்கு இனிமேல் நுழையும் அதிருஷ்டம் உண்டாகுமோ?

குற்றப் பத்திரிகை கையிலிருக்கும்போது எனக்கொரு வேடிக்கை தோன்றுகிறது. எனது பெயர் ஸத்யரூபனல்லவா. யார் எனக்கு இந்தப் பெயரிட்டார்கள். சத்யத்தின் உருவம்! நல்ல வேடிக்கை. அம்மாவுக்குத்தான் இப் பெயர் முதலில் தோன்றியிருக்கும்; அப்பாவுக்குத் தோன்ற வழியில்லை. ஏனென்றால் எனக்கு ஒரு வயசு நிறைந்தபோதுதான் அப்பா ஒன்றரை வருட சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தார். 

மரியாதைக்குரிய ஐயா, அப்பா செய்த குற்றம் என்னவென்று தெரிய வேண்டாமா. இரும்புக் கடப்பாரையால் அடித்து இடியன் ராமன் பிள்ளை என்ற பெயர் கொண்ட ஒரு ஸப் - இன்ஸ்பெக்டரின் தோள் எலும்பைத் தூளாக்கினார். அப்பா குற்றம் செய்துவிட்டுத்தான் தண்டனை அனுபவித்தார். மகனோ என்றால் குற்றம் செய்யாமல் தண்டனை அனுபவிக்கப்போகிறான்.

போர்ட்டிக்கோவில் வைத்துதான் நான் எனது குற்றப் பத்திரிகையைப் பிரித்து நோக்கினேன். எனது நரம்புகளில் இரத்தம் உறைந்து போயிற்று. எனது இதயத்தின் துடிப்பு நின்றது. எனது கண்மணிக்கு முன் கருப்புத் திரை வந்து மூடியது.

இதென்ன உலகம் ஸார். மனஸா, வாக்கா, கர்மமா? எனக்குத் தெரியாது. நான் லஞ்சம் வாங்கினேனாம்! வேறு எதுவும் பொறுக்கலாம். இதுமட்டும் முடியாது. எனது விரோதிகளில் யாரோ தங்களை வேண்டுமென்றே தப்பான அபிப்பிராயம் கொள்ளச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று சொல்வதும் சரியில்லை. ஏனென்றால் எனக்கு விரோதிகளில்லை. இதென்ன மாயம். என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள் மிகவும் விசித்திரமானவைதான்.

ஒன்று: ப்ராவிடண்ட் ஃபண்டிலிருந்து தன் மகளின் திருமணத் தேவைக்காக ஆயிரம் ரூபாய் நான் - ரீஃபண்டபிள் அட்வான்சுக்காக விண்ணப்பித்த ஹெட்கான்ஸ்டபிள் பி. கெ. குஞ்சு மொய்தீனிடமிருந்து பத்து ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு சம்பந்தப்பட்ட ஸெக்ஷன் கிளார்க்கைப் பார்த்துச் சொல்லி மிக விரைவில் காரியத்தைச் சாதித்துக் கொடுத்தது.

இரண்டு: பென்ஷன் வாங்கிய தாலூகாபீஸ் டைப்பிஸ்ட் ஸ்ரீ பி. குஞ்சுராமன் பிள்ளையிடமிருந்து பதினைந்து ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட கிளார்க்கைக் கண்டு, பென்ஷனும் கிராஜூ விட்டியும் ஒரே வாரத்தில் சமாளித்துக் கொடுத்தது.

மூன்று: மெடிகல் காலேஜ் அஸிஸ்டண்ட் ப்ரோஃபஸர் டாக்டர் குஞ்ஞீணி நாயருக்கு ஸரண்டர் - லீவு ஸாலரியுடன் இரண்டு மாதத்து சம்பளமுட்பட ஆயிரத்து முந்நூற்றுச் சில்வானம் ரூபாயின் பே - ஸ்லிப் வாங்கிக் கொடுத்து ட்ரஷரி காப்பி சட்டென்று கிடைக்கச் செய்கிறேன் என்ற நிபந்தனையில் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டது.

என் கண்கள் நிறைந்து வழிந்தன. வெளியே வெயில் எரிகிறது. என் தொண்டை வறண்டது. வாட்டர் கூலர் கெட்டுப்போயிருக்கிறது. இல்லாவிட்டால் இரு டம்ளர் குளிர்ந்த நீர் குடித்திருக்கலாமாயிருந்தது.

ஸார், நான் என்னையே தேற்றிக்கொள்ள முயன்றேன். என் தளரும் மனதிற்குத் தாங்கு தூண்களமைக்க நான் பாடுபட்டேன். நான் கூப்பிட்டேன், டேய், ஸத்யரூபா! படுமுட்டாளே! உனக்கு இத்தனை மூளையில்லாமப் போச்சே! நீ கனவில்கூட நினைக்காத ஒரு குற்றத்திற்காக நீ தண்டனை பெறமாட்டாய். உனக்கு நீதி கிட்டும். எளியவனுக்கு நீதி கிடைக்கல்லைன்னா வேறு யாருக்கடா இங்கே நீதி கிடைக்கும்? தைரியமாயிரு. இளைஞரான உன் மேலதிகாரி உழைப்பாளிகளின் கோட் பாடுகளில் மிகவும் நம்பிக்கையுள்ளவர். உனக்கு ஒரு மண்ணும் ஆகாது.

நான் ஆஃபீஸ் கேட்டைத் தாண்டினேன். வாகனங்கள் என்னை விரோதியாக நினைத்துவிட்டன என்று தோன்றத்தக்க விதத்திலேயே ஹாரனும் ஹீரனும் அடித்தன. காஃபி ஹவுஸிலிருந்து வெளியே வந்த கோவிந்தனும், தாமஸும்,அச்சுதனும் என்னைப் பார்த்தபோது நின்றனர். இந்தக் குமாஸ்தாக்களுக்கு நான் மிகவும் வேண்டப்பட்டவன். எலெக்ட்ரிஸிடி பில் கட்டுவது, டெய்ரியிலிருந்து பால் கூப்பன் வாங்குவது, ட்ரஷரியில் சலான் கட்டுவது போன்ற வேலைகளையெல்லாம் நான் இவர்களுக்குச் செய்து கொடுப்பேன். முதல் தேதியன்று இவர்களெல்லாம் 'ஸத்யரூபா, காஃபி குடிச்சுக்கோ' ன்னு சொல்லி ஒரு ரூபாய் கொடுப்பதுண்டு. ஆனால் இந்தவாட்டி, அதைத் தவிர இரண்டிரண்டு ரூபாய் வீதம் பாக்கட்டில் போட்டுத்தந்தார்கள். எனது இந்த வேதனையான நிலைமையை அறிந்ததினால் இருக்கலாம். அவர்களது முகத்தில் இரக்கத்தின் வாடிய பூக்கள் இருந்தன. எனக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. நட்பின் முன்னால் எனது தொண்டை அடைத்தது. நான் முகத்தைக் குனிந்து நடந்தேன்.

செக்ரட்டேரியட்டின் பாதையில் வழக்கத்தைவிட அதிகமான கூட்டம் காணப்பட்டது. காற்றில் சிவப்புக் கொடிகள் பறந்து விளையாடுகின்றன. நிழலில் நின்று நான் அதை நோக்கியிருந்தபோது ஒரு போலீஸ்காரன் என் பக்கத்தில் ஓடிவந்தான். என் தோளில் கை வைத்து நட்புடன் உபதேசித்தான். "ஸார், இங்க நிக்காதிங்க. இவங்க கலாட்டா பண்ணுவாங்க. அந்த மாதிரி டைப் ஆசாமிங்க. கொடியைப் பாக்கலியா. அதனால சட்டுனு இங்கிருந்து போயிடுங்க. லாத்திக்கு, சொந்தக்காரர்களையோ தெரிஞ்சவங்களையோ வித்தியாசமாத் தெரியாது."

போலீஸ்காரரின் அவசரத்தைப் பார்த்து நான் ஓடவில்லை. ஆனாலும் உள்ளூர பயமாயிருந்தது. நான் அந்த பயத்தை மறைத்துக்கொண்டு மெதுவாக நடந்தேன். போலீஸ்காரன் கொஞ்சதூரம் என்னோடு வந்தான். அவன் சொல்லிக்கொண்டிருந்தான்: நீங்களானதுனாலதான் எனக்குக் கஷ்டம். உபகாரம் செய்தவங்களை என்னால மறக்க முடியாது ஸார். அது என் வீக்னஸ்."

போலீஸ்காரன் விடைபெற்றுக்கொண்டு போனான்.

திடீரென்று ஒரு முழக்கம். லாத்தி சார்ஜ். ஆட்கள் சிதறினர். பூட்ஸின் சப்தமும் கூக்குரலும் நெருங்கி வருகின்றன. நான் இடது பக்கமிருந்த வழியில் நுழைந்து ஓடினேன்.

வாடகை அறையை அடைந்த பின்னும் என் மூச்சிறைப்பு நின்றிருக்கவில்லை. நான் யோசித்துப்பார்க்கிறேன், ஸார். அந்தப் போலீஸ்காரன் உபதேசம் பண்ணியிருக்காவிட்டால் நான் இப்போது ஆஸ்பத்திரியிலல்லவா இருந்திருப்பேன். பாருங்கள் ஸார், குறைந்த வருமானக்காரனுக்குக் குறைந்த வருமானக்காரனிடமுள்ள மதிப்பை. ஆனால் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் பாக்கியிருந்தது. உதவி செய்தவர்களை மறக்க முடியாது - அப்படி இப்படின்னு அந்தப் போலீஸ்காரன் சொன்னானில்லையா? அதென்ன? நான் மண்டையை உடைச்சுக்கல்லை. போலீஸ்காரனுக்கு ஆள் மாறிப்போயிருக்கும். ஆனாலும் போலீஸ்காரங்களிலேயும் இருக்காங்களே இப்படிப்பட்ட மனிதாபிமானிகள்.

என் வாடகை அறையை நீங்க பார்த்ததில்லை. பார்த்திருந்தால் இந்த ஏழையைக் கஷ்டப்படுத்த உங்களுக்கு மனது வந்திருக்காது. ஆக மொத்தம் இருக்கிற ஒரே ஜன்னலின் பக்கத்தில், அடுத்த கட்டடத்துச் சுவர். என் அறைக்குள் காற்றும் வெளிச்சமும் நுழைய விடாம ஒரு ராட்சசனைப்போல அது நிற்கிறது. பேர்பெற்ற ஒரு நகர முக்யஸ்தனின் இரண்டு மாடிக்கட்டடம் அது. அது போகட்டும். என் அறைக்குள் பாருங்க. நான், ஒருஸ்டவ், இரண்டு மூணு அலுமினியப் பாத்திரங்கள், ஒரு கொடியும் அதில் சில கசங்கின உடுப்புக்களும். அவ்வளவுதான். ஸார், நான் ஒரு ரேஷன் கார்டு வாங்க என்ன பாடுபட்டேன் தெரியுமா? காலையில் கஞ்சி குடிச்சு, மத்யானத்துக்கு சோறு கட்டியெடுத்துக்கிட்டு நான் ஆஃபீசுக்குப் போகணும். சத்துணவு குறைவானதினால் எனக்கு சரும வியாதி இருக்கு.

ஒரு தவறு நடந்து போச்சு. பத்திரிகை வாங்கிப் படிக்கும்படியா எனக்கொண்ணும் சம்பளத்தில் மிச்சம் கெடையாது. அதனால ரேஷன் கார்டைப் புதுப்பிக்கவேண்டிய நாள் எல்லாம் தெரியவேயில்லை.

போனவாரம் எனக்கு ரேஷன் கிடைக்கலை. ஸஸ்பென்ஷன்ல இருந்ததினால எனக்கு நிறைய நேரம் இருந்தது. ரேஷனிங் ஆஃபீசரைப் போய்ப் பார்த்தேன். என்னை அவர் விரட்டினார். எனக்கு ரேஷன் கார்டு தேவையில்லைன்னும், சாப்பிடணும்னா புதுப்பிக்கிற தேதியை நினைவு வச்சிருப்பேன். அப்படின்னெல்லாம் சொன்னார். என்னவானாலும் கொஞ்சம் தாமதமாகும். இரண்டு மூணு வாரம் இனிமே ஹோட்டல்ல சாப்பிட்டாப் போதும். என்ன செய்யறதுண்ணு தெரியலை. முழுச் சம்பளம் கிடைச்சே வாழ்க்கை நடத்தக் கஷ்டப்படற நான், ஸஸ்பென்ஷன் சமயத்துல கிடைக்கிற தொகையை வச்சு எப்படி வாழுறது மனமுடைந்து ரேஷன் ஆஃபீஸின் வராந்தாவிலே நின்னேன்.

ஒரு ஆள் முதுகில் தட்டினபோதுதான் எனக்கு சுயநினைவு வந்திச்சு. தலை நரைத்த அந்த மனிதன் என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கு ஞாபகப்படுத்திக்கவே முடியலை. ஆனாலும் நானும் சிரிச்சேன்.

என்ன இங்கே என்று கேட்டபோது நான் துக்கத்தை ஆற்றிக் கொள்வதற்காக எல்லாவற்றையும் திறந்து சொன்னேன். ரொம்ப சுலபமான காரியங்கிற மாதிரி எங்கையிலிருந்து ரேஷன் கார்டை வாங்கிக்கொண்டு அந்த மனிதன் உள்ளே போனான். நான் அப்பக்கூட என் கட்டி வைத்திருந்த நினைவை அவிழ்த்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கே பார்த்தோம்? கேட்கிறது நல்லாயிருக்காது. என் ஞாபகச்சக்திக் குறைவுக்கு இதுபோல ஏராளம் உதாரணங்களுண்டு.

 

சுருக்கமாகச் சொல்றேன் ஸார். அரை மணி நேரத்துக்குள்ள எனக்குப் புதுப்பித்த ரேஷன் கார்டு கெடைச்சுடுத்து. அந்த மனிதன் என்கிட்ட சொன்னான். பென்ஷன் வாங்கிட்டாலும் ஆஃபீசருக்கு தான் ரொம்ப வேண்டியவன்னு.

சட்டென்று பாதையில் ஒரு ஆளைப் பார்த்தபோது போட்டுமா என்று கேட்டுவிட்டு அந்த வயசாளி வெளியே போய்விட்டான்.

குற்றப் பத்திரிக்கைக்குப் பதிலில் இதையெல்லாமெதுக்குச் சொல்றான்னு உங்களுக்குத் தோன்றலாம். தங்களுக்கு இளம் வயசு, ஸார். உலக அனுபவம் இல்லை. உலகத்துல நீங்களும் நானும் மட்டுமில்லையே. கோடானு கோடி மனித உயிர்கள் உண்டு. அவர்களில் ஒன்றோ இரண்டோ பரந்த இதயமுள்ளவரை இங்கே பரிச்சயப்படுத்துகிறேன், அவ்வளவு தான். மன்னிக்கனும், ஸார்.

பத்து நாட்கள்தானே பதில் கொடுக்கத் தந்திருந்தது. ஐந்து நாட்கள் ஆயின. பகலில் தூங்குவதனால் இரவில் தூக்கமில்லை. இரவில் தூக்கம் இல்லாததினால் துர்ச்சொப்பனம் கண்டு தூக்கிவாரிப்போட்டு எழுந்திருக்கிறதில்லை.

உடம்பு முழுதும் ரொம்பச் சொறிகிறது. கஞ்சியும் சிறு பயறும் தொடர்ந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். வாரத்தில் ஒரு தடவைதான் கொஞ்சம் எண்ணெய் தலையில் வைக்கிறது. பின்னே சொறி எப்படி வராமல் இருக்கும்? இரவு முழுவதும் சொறிந்தது, உடம்பில் நிறையக் கீறல்கள். பொறுக்க முடியாமப் போனதும் நான் மெடிகல் காலேஜ் ஆஸ்பத்திரிக்குப் போகத் தீர்மானிச்சேன்.

நீண்ட க்யூவில் நான் வெகுநேரம் காத்து நின்றேன். கடைசியில் க்யூ என் பின்னாலாயிற்று.

ஹாஃப் டோர் திறந்து நான் டாக்டரைக் கும்பிட்டேன். டாக்டர் மனம் திறந்து சிரித்தார். என்னைப் பிடித்து ஸ்டூலில் உட்காரவைத்தார். எனது நோய்பற்றிய விவரங்களை விசாரித்தார். என் உடற்பாகங்களை சிரத்தையுடன் பரிசோதனை செய்தார். மாத்திரை எழுதினார்.

அவர் சொன்னார்: இந்த மாத்திரை இங்கே கிடையாது. வெளியேயிருந்து வாங்கணும்.

ரொம்ப விலை. ஒண்ணுக்கு அறுபத்தஞ்சு பைசாவோ என்னவோ ஆகும். உங்களுக்குக் கஷ்டம்.

டாக்டர் மேஜை டிராயரை இழுத்துத் திறந்தார்.

கம்பெனிக்காரங்க தந்தது. இத எடுத்துக்குங்க.

நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டர்களில் இத்தனை நல்லவர் ஒருவரா? 

நான் எழுந்து கும்பிட்டேன்.

இப்பொழுது அவர் சொன்னார்: இதைச் சாப்பிட்டா பூரணமா குணமாகும். இல்லாட்டா வாங்க.... தயங்கவேண்டாம்... நீங்கள் எனக்காக ட்ரஷரிக்கும் அங்கயும் இங்கயும்

ஓடினீங்கள்ளே.

சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நா உயர்வதற்குள் அடுத்த நோயாளி ஸ்டூலில் அமர்ந்தான். நான் வெளியே போனேன்.

ஆள் மாறிப்போயிருக்கலாம். ஒரே முகச்சாயல் உள்ள பலரும் இருக்காங்களே இந்த போமியில். எனக்கொரு தந்திரம் தோன்றியது. எப்படியோ ஆகட்டும், சும்மா மாத்திரை கிடைச்சுதுல்லே. சீக்கிரமா இங்கிருந்து போயிடணும். ஆள மாறிப்போச்சுன்னு டாக்டர் திரும்பிக் கூப்பிட்டுட்டா.

என் மரியாதைக்குரிய மேலதிகாரி, இந்த டாக்டரைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். என்னைவிட நாலு மடங்குச் சம்பளம் வாங்கும் மனுஷன். அந்த நடத்தையைப் பாத்தீங்களா. மருந்து சாப்பிடாமலேயே என் வியாதி பாதி குறைஞ்சதுபோல.

மணி நேரங்கள் உதிர்கின்றன. எனது தினங்கள் எண்ணப்பட்டு விட்டன. எழுதும் முறைகள் உங்கள் கையில் ரப்பர்போல. நான் கையளும்போது அவை உருக்காகிவிடுகின்றன. ஆச்சரியம்தான்.

இன்று ஐந்து மணிக்குப் பத்தாம்நாள் தீருகிறது. இன்று காலையிலும் நான் தங்களைக் காண ஒரு முயற்சி செய்தேன். முதல்முறை அனுமதி மறுக்கப்பட்டது. நீங்கள் யாரோ பெரிய மனிதர்களிடம் முக்கியமான சில விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தீர்களாம். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நான் திரும்பவும் வந்தேன். சிணுங்கிக் கொண்டுதான் உங்கள் ஏவலாள் அந்த வாசலைத் திறந்துவிட்டான்.

தங்கள் முன் நிற்கையில் என் கண்கள் நிறைந்து துளும்பிக் கொண்டிருந்தன. என்னைக் காப்பாற்றணும் ஸார். என்ன சொன்னாலும் உங்களைத் தவிர வேறு யாராலும் என்னைக் காப்பாற்ற முடியாது.

தாங்கள் புருவத்தைச் சுளித்து நோக்கிக்கொண்டிருந்த ஃபைலை டக்கென்று ஓசையுடன் மூடினீர்கள்.

பதில் கொண்டு வந்திருக்கீங்களா?

இல்லை. நான் புலம்பினேன். 

இன்றைக்கு. ஐந்துக்கு முன்னால கிடைக்கணும். இல்லாவிட்டால் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது. லஞ்சக் கேஸ். குற்றத்தை ஒப்புக்கொள்வதுதான் நல்லது. ப்ளீஸ் கெட்டவுட்.

எனது ரணத்தில் ஊசி முனைகள் இறங்கின. ஹாலிலும் மற்ற இடங்களிலும் எனது சக ஊழியர்கள் கவனமாக வேலை பார்க்கிறார்கள். என் உடம்பு வியர்த்து வழிந்துகொண்டிருந்தது. நம்ம ஆஃபீஸில் அந்தப் பெரிய ஆலமரம் இல்லே, அதன் கீழே போய் நின்றேன். என் வியர்வை எப்போதும் வற்றாதென்று எனக்குத் தோன்றியது.

நான் தலையை உயர்த்தியபோது யூனியன் ஆஃபீஸை கண்டேன். என் மனமெனும் இரவில் ஒரு நட்சத்திரம் உதித்தது. இத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந்தாய் என்று செக்ரட்டரி கேட்கும்போது என்ன பதில் சொல்வது? சொல்லலாமே: செய்யாத ஒரு குற்றத்திற்கு நான் எதற்காக பதில் கொடுக்கணும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன் இத்தனை காலம்.

நான் படிகள் ஏறினேன். செகரட்டரி என்னவோ முக்கியமாக எழுதிக்கொண்டிருந்தார். சற்று நேரம் நின்றேன். ஒரு தடவை இருமியபோதுதான் செக்ரட்டரி முகத்தை உயர்த்தினார்.

ஹலோ ஸத்யரூபன் விஷயத்தை நானறிந்தேன். சீஃப்பை நேரில் பார்த்துச் சொல்லலியா?

சொன்னேன் ஸார். ஒரு பிரயோசனமும் இல்லை.

வீட்டுக்குப் போய் பார்த்திருக்கலாமே.

ஒன்றும் சொல்வதற்கில்லை. துக்கம் வீங்கி நிற்கிறது. போகவில்லை ஸார்.

செக்ரட்டரி முனகினார். தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்ததில் கவனம் செலுத்தினார். பட்டென்று தலையை உயர்த்தினார்.

இந்த நோட்டீஸை எழுதினப்புறம் நான் சீஃப்பைப் பார்க்கிறேன் நில்லுங்க.

நான் செக்ரட்டரியின் மேஜைப் பக்கத்தில் நின்றேன்.

செக்ரட்டரி எழுதிக்கொண்டிருந்தார். சிலருடைய வாயை மூடிக் கட்டி, ஒரு பகுதியினரின் குறுகிய மனப்பான்மைபூண்ட அரசியலிலிருந்து உண்டான மேடையாக இந்த அமைப்பை மாற்றுவதற்கான ஈனமான தந்திரத்தின் ஒரு பாகமாக அதைக் காணவேண்டியிருக்கிறது. இந்தத் துண்டாடும் போக்குகளை இந்த ஆபீஸின் மேன்மை தங்கிய அங்கத்தினர்கள் எதிர்த்துத் தோல்வியடையச் செய்வார்களென்றும், இப்புதிய 'ஜனாதிபத்யவாதி'களை மற்றத் துறைகளிலிருப்பதைப் போல் அங்கேயும் தனிப்படுத்துவார்கள் என்றும், எனக்கு நிச்சயமாகத் தெரியும். வணக்கங்களுடன்...

 

வாங்க...

குற்றப் பத்திரிகையை செக்ரட்டரி வாங்கினார்.

நான் செக்ரட்டரியின் பின்னால் நடந்தேன். என் மனதின் இரவில் இன்னும் நிறைய நட்சத்திரங்கள் உதித்து உயரத் தொடங்கின. நான் காப்பாற்றப் படுவேன்.

செக்ரட்டரி சீஃபின் அறைக்குள் போனார். நான் ஒரு மூலையில் சுவரில் நகத்தால் கூடத் தொடாமல் நின்றேன். என் கை கால்கள் கவலையின் சில்லிப்பில் விறைத்துக்கொண்டிருந்தன.

ஒரு எதிர்பாராத நிமிடத்தில் ஓசையுடன் வாசலைத் திறந்துகொண்டு செக்ரட்டரி வெளியே வந்தார்.

குற்றப் பத்திரிகையை அலட்சியமாக என் முன்னால் எறிந்தார். செக்ரட்டரியின் கண்கள் சிவந்திருந்தன.

செக்ரட்டரியின் குரல்:

லஞ்சம் வாங்கியவனைக் காப்பாற்றும்படி யாரும் எங்கேயும் சொல்லவில்லை. நக்கிப் பிச்சை வாங்கறபோது யோசிச்சிருக்கணும். போலீஸ் காரன், பென்ஷன் ஆசாமி, டாக்டர் இவங்களுடைய ரிட்டன் கம்ப்ளெய்ண்ட்ஸை எடுத்து எனக்குக் காட்டினார். என் தோல் சுருங்கிப் போச்சு.

வேண்டாம். எனக்கு இதொண்ணும் கேட்க வேண்டியதில்லை. இவங்களுடைய கம்ப்ளெயிண்ட் மட்டுமானா சாட்சியில்லைன்னு சொல்லித் தப்பலாம். நீங்க காசு வாங்கறதைப் பார்த்ததாகச் சம்பந்தப்பட்ட செக்ஷன் கிளார்க்குகள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

புளுகு சார், பச்சைப்புளுகு.

புளுகா, கோவிந்தனும், தாமஸூம், அச்சுதனும் கைப்பட எழுதிக் கொடுத்தது புளுகோ?... போதும்... போதும். இப்படி நக்கித் தனமா லஞ்சம் வாங்கும் ஒங்களுக்கெல்லாம் செக்ரட்டரியா இருக்கிறதே எனக்கு அவமானம். நீங்க எங்க போய்த் தொலைஞ்சாலும் எனக்கொண்ணுமில்லை.

செக்ரட்டரி படியிறங்கிப் போனபோது ஒரு சின்னக் குழந்தையைப் போல எனக்கு உரக்க அழத் தோன்றியது.

எனது மதிப்பிற்குரிய மேலதிகாரி, இனி நான் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு நேரம் இப்படிக் கண்களைத் துடைத்துக்கொண்டு நிற்பது? உழைப்பாளியின் கோட்பாட்டை மனவறைக்குள் போட்டுப் பூட்டிச் சாவியைக் கிணற்றில் போட்டுவிட்டுக் கையை வீசி நடக்கும் தாங்களும், கதவைப் பூட்டி, கோட்பாடுகளை, முற்றத்தில் மட்டும் உலவ அனுமதிக்கும் செக்ரட்டரியும் என்னைப் புறக்கணித்த சூழ்நிலையில் நான் என்ன செய்யவேண்டும்? ‘புலிக்குப் பிறந்தால் நகமில்லாமலிருக்காது என்ற பழமொழியை நினைத்து, உங்கள் வாசற்கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்து, நாற்காலியையோ, ரூல் தடியையோ எடுத்து உங்களை அடித்துப்போட்டுவிட்டு நேராகப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சரணடையலாம். காக்கிச் சட்டைக்காரர்கள் என்னை மிகக் கடுமையாகப் பிழிந்தெடுத்துவிடுவார்கள். எனது எலும்புக்கும் சதைக்குமுள்ள உறவைப் பிரிப்பார்கள். நான் ஜெயில் கம்பிகளுக் குள்ளாவேன்.

கற்பனை செய்யத்தான் என்னால் முடியும். நடத்த முடியாது. எனக்கு வாழணும். இப் பரந்த உலகில் பட்டினி கிடந்தாவது எனக்கு வாழணும். இதனுடைய கடைசித் துணுக்கு வரை எனக்குக் கடிக்கணும்.

எனக்கு மன்னிப்புத் தரணும். தாங்கள் தந்த குற்றப் பத்திரிகையில் சொல்லியிருப்ப-தெல்லாம் சரிதான், குறைந்த வருமானமுள்ள ஒரு ஏவலாள் லஞ்சத்தையன்றி வேறெதை நம்புவது!

போலீஸ்காரனிடமிருந்து வாங்கிய பத்து ரூபாயில் என் மகளுக்கு ஒரு தாவணி வாங்கிக் கொடுத்தேன். பென்ஷன்காரனிடமிருந்து வாங்கிய பதினைந்து ரூபாய்க்கு வயோதிக நோயாளியான என் அப்பாவுக்குக் கம்பளி உடுப்பும், டாக்டரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாய்க்குப் பித்த நோயாளியான என் மனைவிக்கு இரும்புச்சத்து மாத்திரையும் வாங்கினேன்.

இனிமேல் ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டேன், ஸார். தரித்திரம் பொறுக்க முடியாமல் செய்திட்டது. எனக்கு மன்னிப்புத் தரணும். வாழ ஆசைப்படும் இந்த ஏழைக்கு மன்னிப்புத் தரவேண்டும்.

ஆயிற்று சார். மணி நாலரையாகிறது. இடையிடையே மை இறங்காத ஒரு பேனாதான் என் கையிலுள்ளது. அதை வைத்துத்தான் இவ்வளவு எழுதினேன். நான் ஏழு வரை தான் படிச்சிருக்கேன். அதனால் இதில் ஏராளம் இலக்கணப் பிழைகள் இருக்கலாம். பொறுத்துக் கொள்ளவேண்டும்.

எனது எதிர்காலம் பூரணமாகத் தங்களுடைய பேனா முனையிலிருப்பதால் எதற்கும் தங்களுடைய அனுமதியை நான் கேட்பேன். கடைசியாக எனக்கு ஒரே ஒரு விண்ணப்பம்.

இப் பதிலை தங்களை நேரில் கண்டு சமர்ப்பித்த பிறகு நான் நேராக என் வாடகையறைக்குத்தான் போகிறேன். என் இதயத்தின் நான்கு சுவர்களும் தகர்ந்துபோகும் வித்த்திலிருக்கிறது துக்கத்தின் பெருக்கம். அந்த அறையில் கிடந்து நான் என் அப்பாவை நினைத்துக்கொள்வேன். கோழையான நான் இந்தச் சந்தர்ப்பத்திலாவது தீரரான என் அப்பாவைப் பற்றி நினைத்துப் பெருமைப்படட்டும்! ஐம்பத்தியிரண்டில் என்று தோன்றுகிறது. ஒரு விவசாயிப் போராட்ட்த்தில் ஆலப்புழை லாக்கப்யில் கிடந்து அப்பா இறந்தார். ஸெரிபரல் த்ராம்பாஸிஸ் அது இதென்று சொல்ல யாரும் மெனக்கெடவில்லை. ஆஸ்பத்திரியைப்போல லாக்கப்பிலும் மரணம் சாதாரணமாயிருந்தது. மரணம் குண்டூசியாக, பசுந்துடைப்பக் குச்சியாக, உருண்ட தடியாக, மிளகாய்ப் பொடியாக அங்கே பிரத்யட்சமாகிக்கொண்டிருந்தது. அப்பாவைப்பற்றி நினைக் கையில் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை, ஸார். வேண்டிய வரையிலும் அழுது போதுமென்றாகும்போது நான் என்னைப்பற்றி நினைக்கிறேன். இந்த நகரத்தில், முப்பத்தியொன்பதாவது வயதிலும் பிரம்மச்சாரியாக்க் கழிக்கும் என் எதிர்காலம் என்ன?....

என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஸார்.

என்னை அழ அனுமதிக்க வேண்டும்.

அழுது அழுது நான் என் இதயத்தைக் கழுவட்டும்.

 

கதாசிரியர் அறிமுகம்:


எம். சுகுமாரன்

பிறப்பு 1943-ல், பாலக்காடு ஜில்லாவில். ஹைஸ்கூல் படிப்பிற்குப் பின்னர் திருவனந்தபுரத்தில் அக்கௌன்ட்ஸ் ஜெனரல் ஆஃபீஸில் லோயர் டிவிஷன் கிளார்க்காக வேலை பார்க்கிறார். மலையாளமொழியில் நடக்கும் சலனங்களிலிருந்து விலகி நின்று, வாழ்க்கை மணமிக்க கதைகள் எழுதுகிறார். ஒரு சுறுசுறுப்பான ட்ரேட்யூனியன் தொண்டர். மறியல்களில் பங்கெடுத்தத்தைத் தொடர்ந்து இப்போது ஸஸ்பென்ஷனில் இருக்கிறார்.

நூல்கள் - பாறை, ஆழிமுகம் (நாவல்கள்).

முகவரி - டி.ஸி. நம்பர் 23/519? வஞ்சியூர், திருவனந்தபுரம் - 1, கேரளா.

-------