குறிப்பறியமாட்டாதவன்                     

                எங்கள் பள்ளிக்கூடத்தில் 21 பேர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுப் பரீட்சை எழுதினோம். அதிலே 19 ஆண்கள், இரண்டு பெண்கள். நான் அப்போது பௌதிகம் என்றும் இப்போது இயற்பியல் என்றும் அழைக்கப்படும் பாடத்தில் மிக மோசமாகச் செய்திருந்தேன். பரீட்சை முடிவுகள் வரும் தினம் நெருங்கியது. வாழ்க்கையில் ஒரு பெரிய அடியை எதிர்பார்த்து நாட்களைக் கழித்தேன்.

                அப்பொழுது ஒரு பெரிய தவறு நேர்ந்தது. எங்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து ஏழு பேரை செயல்முறை பரீட்சைக்கு கொழும்புக்கு வரும்படி பல்கலைக் கழகம் அழைத்திருந்தது. அந்த ஏழு பேரில் என் பெயரும் இருந்தது. எங்கள் பௌதிக ஆசிரியர் ஒரு கேரளக்காரர். அவர் எங்களைக் கடைத்தேற்ற படாதபாடு பட்டிருந்தார். பட்டியலில் என் பெயர் இருந்தது என்னிலும் பார்க்க அவருக்கு கூடிய ஆச்சரியத்தை கொடுத்தது. பௌதிக செயல்முறை பாடம் நாளின் கடைசி பீரியட் என்றபடியால் நான் அநேகமாக அந்த வகுப்புக்கு போவதில்லை, கட் அடித்துவிடுவேன். அங்கே நியூட்டனின் ஈர்ப்புவிசை சோதனைகள் நடக்கும்போது நானும் அதே சோதனையை பெண்கள் பள்ளிக்கூட வாசல்களில் நடத்திக் கொண்டிருப்பேன்.

                பௌதிக மாஸ்டர் நான் அரும்பட்டாக பாஸ் பண்ணியிருக்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். செயல்முறை பரீட்சையில் ஆகக்கூடிய மார்க்ஸ் எடுத்தால் தேர்வுப் பரீட்சையில் சித்தியடைவதற்கு நல்ல சான்ஸ் இருக்கு என்றார். கொழும்புக்கு போவதற்கு இன்னும் பத்து நாட்கள் அவகாசம் இருப்பதால் நான் எந்த நாள், எந்த நேரம் என்றாலும் சோதனைக்கூடத்துக்கு வந்து செயல்முறை பரீட்சையில் என் திறமையை கூராக்கலாம் என்று சொன்னார். அத்தோடு நிற்காமல் சோதனைக்கூடம் பள்ளிக்கூடத்தின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் பச்சை கட்டடம் என்ற அதிகபட்ச தகவலையும் தந்துவிட்டு மறைந்துபோனார்.

               செயல்முறை பரீட்சைக்கு தெரிவான நாங்கள் ஏழு பேரும் ஒரே நாளில், ஒரே ரயிலில் கொழும்புக்கு பயணமானோம். அதில் காந்தருவதத்தையும் இருந்தது மூன்றுபேருக்கு கரை கொள்ளாத மகிழ்ச்சி. ஏனென்றால் அந்த மூன்றுபேரும் அவளை காதலித்தார்கள். அது அவளுடைய உண்மையான பெயர் அல்ல; நடராசா சூட்டியதுதான். சீவகசிந்தாமணியில் வரும் காந்தருவதத்தைபோலவே இவள் இருக்கிறாள் என்றும், இவள் சிரிக்கும்போது அறையில் வெளிச்சம் கூடுவதாகவும் அவன் சொன்னான். 220 றாத்தல் எடை உள்ள அவன் சொன்னதை எதிர்க்க ஒருவருக்கும் துணிச்சல் வரவில்லை

                நான் கொழும்பில் இரண்டு நாள் தங்கி பரீட்சை எடுப்பதற்கு என் மாமாவின் நண்பர் கனகராசாதான் ஏற்பாடு செய்தார். அஞ்சுலாம்படி சந்திக்கு என்னை அழைத்துப்போனார். நான் எதிர்பார்த்தபடி அங்கே அஞ்சு லாம்புகள் இருக்கவில்லை. ஆனால் இரவிரவாக கூட்டுச் சேர்ந்த ஐம்பது விதமான வாசனைகள் காலை வேளைகளில் அங்கே வெளியே திறந்துவிடப்பட்டன. அந்த மணங்களில் புகையிலை, வாழைப்பழம்,   சீமெந்து, மண்ணெண்ணெய், மாட்டுச் சாணி, கருவாடு என்று சகலதும் இருக்கும். மரத்திலான படிகளில் ஏறிப்போய் இரண்டாவது மாடியில் ஒரு சிறிய அறையை எனக்கு கனகராசா காட்டினார். தண்டவாளத்து சிலீப்பர்கள் போல ஆறுபேர் அடுக்கடுக்காக அங்கே படுத்திருந்தார்கள். அந்த ஜனசமுத்திரத்தில் ஒரு துளியாக நான் கரைந்து போனேன்.  

                நான் காலையில் எழுந்து பார்த்தபோது அங்கே படுத்திருந்த அத்தனை பேரும் வேலைக்கு போய்விட்டார்கள். கனகராசா மாத்திரம் எனது துயில் கலையும்வரை காத்திருந்தார். முதல் நாள் இட்லிக்கு போட்டு மிஞ்சிய மாவில் சுட்ட நாலு தோசையை எனக்கும் தந்தார். தான் லேட் என்பதை எனக்கு உணர்த்துவதற்காக நின்றபடியே தோசையை விண்டு விண்டு விழுங்கிக்கொண்டிருந்தார். கையிலே இருந்த தோசையை வைக்க வாயை திறந்தபோதெல்லாம் ஏற்கனவே வாய்க்குள் இருந்தது கீழே விழுந்தது. அவர் அதை சட்டை செய்யவில்லை. தனக்கு கிட்டங்கியில் கணக்கெழுதும் வேலை என்றார். கிட்டங்கி என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது. கவர்னர் உத்தியோகத்துக்கு அடுத்த லெவல் என்பதுபோல 'அப்படியா' என்றேன். மகிழ்ந்துபோனார். என்னுடைய பஸ் நம்பரை இன்னொருமுறை அவரிடம் கேட்டு உறுதி செய்துகொண்டு ஆர்க்கிமெடிஸ், நியூட்டன், போயில்ஸ், கூலோம்ப் போன்ற மாபெரும் விஞ்ஞானிகளுக்கு என்னால் அன்று ஏற்படப்போகும் அபகீர்த்தியை நினைத்துக்கொண்டு புறப்பட்டேன்

                பரீட்சைக் கூடத்து கதவுக்கு வெளியே மாணவ மாணவிகள் கூடி நின்றார்கள். சரியாக ஒன்பது மணிக்கு மணி அடிக்க, அதே நேரத்தில் கதவும் திறந்தது. நாங்கள் எல்லோரும் வரிசையாகவும், இடித்துப் பிடித்துக்கொண்டும் உள்ளே நுழைந்தோம். எங்கள் நம்பர் பிரகாரம் ஒவ்வொருவருக்கும் சோதனை கருவிகள் மேசைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு ஒதுக்கப்பட்ட மேசையின் முன்பு நின்றேன். அந்தக் கருவிகளை முன்பு வகுப்பறையிலோ, விஞ்ஞானக்கூடத்திலோ, பாடப் புத்தகத்திலோ நான் பார்த்த ஞாபகம் இல்லை.

                எதற்கும் உதவக்கூடும் என்பதுபோல கேள்வித்தாளை ஒருமுறை படித்துப் பார்த்தேன். விஞ்ஞானக்கூடத்தை சுற்றிலும் நோட்டம் விட்டேன். காந்தருவதத்தைக்கு குவியக் கண்ணாடியும், மெழுகுதிரியும் கிடைத்திருந்தது. அவள் மெழுகுதிரியை கொழுத்தி அதன் பிம்பத்தை பல கோணங்களில் அவதானித்தாள். மெழுகுதிரியில் வெளிச்சம் குறையும் போதெல்லாம் அவள் பல்லை திறந்துகாட்டி சமாளிப்பாள் போலும் என்று நான் அந்த சமயத்திலும் நினைத்துக் கொண்டேன். அவள் ஏற்கனவே மேசையில் குனிந்துகொண்டு உருண்டையான எழுத்துக்களால் தன்னுடைய வினாத்தாளை நிரப்ப தொடங்கியிருந்தாள்.

                பூலோகசிங்கம் இன்னும் அதிர்ஷ்டக்காரன். அவனுக்கு கிடைத்தது பெண்டுலம் சோதனை. இதை அவன் நூற்றிருபது தடவைகளாவது பயிற்சி செய்திருப்பான். பத்மநாபனுக்கு எட்டாம் வகுப்புக்காரர்கள் செய்யும் போயில்ஸ் விதிகள். நடராசாவின் மேசையில் ஓம்ஸ் லோ சம்பந்தப்பட்ட மின்சார கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. நடராசா மின்சாரத்திலும் வேகமாக வேலைசெய்தான். இன்னும் சில நிமிடங்களில் முடித்துவிடுவான் போல பட்டது.

                மறுபடியும் என் மேசையை பார்த்தேன். விசைச்சுருளும், இரும்புக் குண்டுகளும் மனித கைபடாமல் அப்படியே பளபளவென்று இருந்தன. விசைச்சுருளின் இழுவை நீளத்தை அளக்க வசதியாக ஒரு ரூலரும் செங்குத்தாக பொருத்தப்பட்டு என் அசைவுக்காக காத்து நின்றது. ஒரு தூரக்கண்ணாடியும் இருந்தது. செய்முறைக் குறிப்புகளும் ஒரு சமாந்திரமும் தரப்பட்டிருந்தது. தூரக்கண்ணாடியில் முதலில் இடது கண்ணால் பார்த்தேன்; பிறகு வலது கண்ணால் பார்த்தேன். ஒன்றுமே தெரியவில்லை. மறுபடியும் கேள்வித் தாளைப் படித்தேன். சுவரில் தொங்கிய மணிக்கூட்டைப் பார்த்தேன். மறுபடியும் கண்ணாடிக்குள் கண்ணைவிட்டு தேடினேன். இப்படியே நேரம் கழிந்தது.

                பரீட்சை அதிகாரி தென்படார். செருப்பின் அடியில் ஒட்டியிருக்கும் ஏதோ ஒன்றை தேய்ப்பதுபோல ஆறுதலாக நடந்து வந்தார். 'இதிலே ஒருத்தன் மரம் மாதிரி நிற்கிறானே, இவன் இங்கே காலூன்றி நின்ற பிறகு இவன் தலைமயிர் அரை இன்ச் வளர்ந்துவிட்டதே. இவனை என்னவென்று விசாரிப்போம்' என்ற கரிசனை கொஞ்சமும் இல்லாமல் என்னை கடந்துபோனார். அவர் இரண்டாவது சுற்று வந்தபோது இன்னும் கிட்ட வந்து என்னுடைய விடைத்தாளை எட்டிப் பார்த்தார். அதிலே ஒரு வரிகூட, ஒரு வசனம்கூட, ஒரு வார்த்தைகூட இல்லாதது கண்டு அவர் மிகவும் திருப்திப்பட்டு திரும்பிப் போனார்.

                எங்கள் செயல்முறை பரீட்சைக்கு 45 நிமிடம் அனுமதித்திருந்தார்கள். இரண்டு வருடப் படிப்பும், 12 மணிநேர ரயில் பிரயாணமும், நாலு தோசையும் இந்த 45 நிமிடத்துக்குத்தான். என்னுடைய வியர்வை என் பெனியனை நனைத்து, சேர்ட்டையும் நனைத்துவிட்டது. என் உடம்பில் இருக்கும் அவ்வளவு தண்ணீரும் என் முதுகுத் தண்டில் சேர்ந்து மெள்ள மெள்ள இறங்குவது எனக்கு தெரிந்தது. முப்பது நிமிடம் ஓடிவிட்டது. மூளையில் ஒரே இருட்டு. தூரக்கண்ணாடியிலும் எப்படியோ அதே இருட்டுத்தான் தெரிந்தது.

                அப்பொழுது கடவுள் தோன்றினார். கட்டை கால்சட்டை, மஞ்சள் ஸ்வெட்டர் அணிந்து. அவர் கைகளில் படிந்திருந்த ஊத்தை அப்படியே வேகம் குறையாமல் அவருடைய ஸ்வெட்டரிலும் அப்பிப்போய் இருந்தது. அவர் ஒரு உதவியாளர் அல்ல; அதிலும் கீழே - விஞ்ஞானக்கூடத்தில் வேலைபார்க்கும் ஒரு வேலையாள். நான் எளிதாக பார்க்கக்கூடிய ஒரு இடத்தில், ஆனால் சோதனை அதிகாரி பார்க்கமுடியாத ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே போய் நின்றார். இரண்டு பக்கமும் முழுசிப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார். அந்தக் கண்களில் பயம் நிறைந்திருந்தது. தன்னுடைய இரண்டு ஆள்காட்டி விரல்களையும் தூக்கி ஒரு சுழட்டு சுழட்டி காட்டினார். பிறகு வந்த மாதிரியே மறைந்துவிட்டார்.

                நான் யோசித்தேன். இந்தக் ஸ்வெட்டர்காரரின் குறிப்பில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. நித்திரையில் இருந்த  என்னுடைய மூளை எழும்பியது. தூரக்கண்ணாடியை சுழற்றி எதிர்ப்பக்கத்தை என் முன்னால் கொண்டுவந்து அதற்குள்ளால் பார்த்தேன். தேவலோகம் தெரிந்தது; உலகம் தெரிந்தது. விஞ்ஞானக்கூடம் தெரிந்தது. விசைச்சுருள் தெரிந்ததுஇவ்வளவு நேரமும் தவறான கண்ணாடி வழியால் பார்த்திருக்கிறேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

                ஐந்தே நிமிடத்தில் அடுத்தடுத்து எட்டு அளவுகள் எடுத்தேன். அவற்றை வைத்து வரைந்த கிராஃப் ஒரு ரூல்தடியிலும் பார்க்க நேரானதாக இருந்தது. கோணத்தை அளந்து, அவர்கள் கொடுத்த சமாந்திரத்தை நிரப்பி, கணக்குகளை விரைவாக செய்து முடித்தேன். புவியீர்ப்பு g யின் மதிப்பு 981 செ.மீட்டர் என்று வந்தது. நம்பமுடிகிறதா? நியூட்டனான நியூட்டனுக்கே இப்படியான ஒரு விடை  கிடைத்திருக்குமா என்பது என் சந்தேகம். என் விடைத்தாளை ஒழுங்குபடுத்தி அடுக்கவும் மணி அடித்தது.

                சோதனை முடிந்து நான் வெளியே வந்தபோது சினிமா தியேட்டர் வாசல்களில் நிற்பதுபோல அடுத்த சோதனைக்கான மாணவ மாணவிகள் வரிசையாக நின்றனர். என்னைக் கண்டதும் மண்டிபோட்டு குனிந்து குனிந்து வணங்கினர். பயில்வான் போன்ற நடராசா நாய்க்குட்டிபோல என் காலடியில் நடந்து வந்தான். பல்கலைக்கழகத்தில் இருந்து அஞ்சுலாம்படி சந்திவரைக்கும் அலரி மலர்கள் தூவி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

                 நான் நாலு வருடங்கள் பல்கலைக்கழகத்தில் படித்தேன். மஞ்சள் ஸ்வெட்டர் அணிந்த அந்த மனிதரின் பெயர் பியதாசா என்பதைக் கண்டுபிடித்தேன். இந்த நாலு வருடங்களிலும் அவரை நான் சந்தித்து ஒரு வார்த்தை பேசியதில்லை. இவ்வளவிற்கும் நான் அவர் வேலைசெய்த அதே சோதனைக்கூடத்திலேயே என் சோதனைகளை செய்தேன். என்னை இங்கே கண்டால் அவர் அங்கே போய்விடுவார். அங்கே கண்டால் இங்கே போய்விடுவார். அன்று அவர் கொடுத்த குறிப்பை வேறு யாராவது பார்த்திருந்தால் அவர் வேலையை இழந்திருப்பார். அவருடைய பென்சனும் போயிருக்கும். முன்பின் தெரியாத என்னைக் காப்பாற்ற எதற்காக இப்படி ஆபத்தான ஒரு வழியை தேர்ந்தெடுத்தார். நிச்சயம் எங்கள் இருவரில் ஒருவர் நடுரோட்டில் நின்றிருப்போம்.

                பல்கலைக்கழகத்தில் என்னுடைய கடைசிநாள் அன்று எதேச்சையாக எதிர் திசையில் பியதாசா அதே மஞ்சள் ஸ்வெட்டரில் வந்துகொண்டிருந்தார். நான் அவரை மடக்கினேன். 'நீங்கள் செய்த உதவியை என்னால் மறக்கமுடியாது. என் வாழ்க்கை முழுவதும் உங்களை நினைப்பேன்.' இப்படி சொன்னேன். வெறும் வார்த்தைகள் அல்ல; மனதாரவே சொன்னேன்.

                அவருடைய முகம் பீதியால் நிறைந்தது. அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தார். நடுங்கும் குரலில் 'என்ன உதவி? யார் செய்தது? எனக்கு ஒன்றுமே தெரியாது' என்று சொல்லிவிட்டு கிலிபிடித்தவர்போல அந்த இடத்தைவிட்டு அகன்றார். நான் சற்று முன்புவரை அவர்  நின்ற அந்த இடத்தை பார்த்தபடியே சில நிமிடங்கள் திகைத்துப்போய் நின்றேன்.  

                இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். எத்தனையோ வருடங்களுக்குமுன் கொடுத்த வாக்குப் பிரகாரம் பியதாசாவை பல இரவுகள் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. திறந்திருக்கும் மேல்மாடியில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் புறப்பட்ட நட்சத்திரங்களின் ஒளியை எதிர்பார்த்திருக்கும் கணங்களில் மீண்டும் யோசிக்கிறேன். துரியோதனனும் பீமனும் யுத்தம் செய்தபோது கிருஷ்ணன் தன் தொடையிலே தட்டி ஒரு சைகை கொடுத்தான். குறிப்பறிந்த பீமன் துரியோதனனின் தொடையை கதாயுதத்தால் பிளந்து யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தான் என்று படித்திருந்தேன்

                இரண்டு விரல்களை சுழற்றி பியதாசா எனக்கு கொடுத்த சைகையில் நான் அன்று பரீட்சையில் பாஸ் பண்ணினேன். அதன் பயனாக பல்கலைக்கழகத் தேர்விலும் வெற்றி பெற்றேன். பிறகு என் வாழ்க்கையின் போக்கு எப்படி எப்படியெல்லாமோ மாறி எங்கேயெல்லாமோ என்னை தூக்கிப் போனது

                அன்று அந்த சைகை எனக்கு கிடைத்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும். நான் பெயிலாகியிருப்பேன். பல்கலைக்கழகப் படிப்பு எனக்கு எட்டாமல் போயிருக்கும். நான் அரசாங்க அலுவலகம் ஒன்றில் எழுதுவினைஞனாக பணியாற்றியிருக்கலாம்ஒரு தனியார் கம்பனியில் வீடுவீடாகச் சென்று விற்பனை செய்யும் ஊழியனாகியிருக்கலாம். கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு எண்பது ரூபாவுக்கு நாலு புகைப்படம் என்று கூவி எடுக்கும் புகைப்படக்காரனாகியிருக்கலாம். கிட்டங்கியில் கணக்கு எழுதலாம். யார் கண்டது, ஓர் எழுத்தாளனாகக்கூட ஆகியிருக்கலாம்.

                முற்றும்

 

-அ.முத்துலிங்கம்
 

 amuttu@gmail.com

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)