நித்திலவல்லி : மூன்றாம் பாகம்

1. சூழ்நிலைக் கனிவு

 

களப்பிரப் பேரரசுக்கு எதிராகக் கலகம் செய்ய முயல்வோர் எப்படித் தண்டிக்கப்படுவார்கள் என்பதை யாவருக்கும் எச்சரிக்கவும் பயமுறுத்தவும் கருதித் தென்னவன் மாறன் கழு ஏற்றப்பட்டதையும், அவனுக்கு உதவி செய்ய முயன்ற குற்றத்துக்காகக் காமமஞ்சரி நஞ்சூட்டிக் கொல்லப்பட்டதையும் பாண்டியநாடு முழுமையும் பறையறைந்து அறிவிக்கச் செய்திருந்தார் மாவலி முத்தரையர். இந்தச் செய்தியை அறிந்து இரண்டு மூன்று நாட்கள் உண்ணவும் உறங்கவும் பிடிக்காமல் கண்களில் நீர் நெகிழப் பித்துப் பிடித்ததுபோல் கிடந்தான் இளைய நம்பி. கொலை செய்யப்பட்ட தென்னவன் மாறன் தாயாதி உறவில் இளையநம்பிக்கு அண்ணன் முறையாக வேண்டும் என்ற உண்மையையும் அந்த வேளையில்தான் இரத்தின மாலை அவனுக்குத் தெரிவித்திருந்தாள்.

களப்பிரர்கள் கையில் சிக்கிய பின் தென்னவன் மாறன் உயிருடன் மீளமாட்டான் என்ற அநுமானம் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு இருந்தாலும் அவன் கொல்லப்பட்டு விட்டான் என்ற துயரத்தை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட அவராலும் கூடத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சூழ்நிலை கனிகிற வரை பாண்டிய மரபு மேலும் சிறிதுகாலம் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியதன் அவசியத்தை அவரும் நன்கு புரிந்து கொண்டார். தன்னிடமிருந்து கட்டளை வருவதற்கு முன் இளையநம்பி இரத்தின மாலையின் மாளிகையிலிருந்து எங்கும் வெளியேறக் கூடாதென்று மீண்டும் அவனை வற்புறுத்திச் செய்தி அனுப்பியிருந்தார் பெரியவர். கண்ணை இமை பாதுகாப்பதுபோல் அவனை அகலாமல் அருகிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இரத்தினமாலைக்கும் இரகசியமாகச் சொல்லி அனுப்பியிருந்தார் அவர். தென்னவன் மாறனை இழந்துவிட்ட சூழ்நிலையில் இளைய நம்பியைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத தாகியிருந்தது. இளம்பருவத்தினனும் இணையற்ற வீரமுடையவனும் ஆகிய ஒருவனை ஆடல் பாடல்களும், சுவையான உணவும், அலங்காரமும், சுகபோகங்களும் மட்டுமே உள்ள ஒரு மாளிகையில் நெடுங்காலமாக அடைத்து வைத்திருப்பதிலுள்ள சிரமங்களை மதுராபதி வித்தகரும் அனுமானித்திருந்தார். இருந்தாலும் வேறு வழியில்லாத காரணத்தாலும் இளைய நம்பி தங்குவதற்கு அதைவிடப் பாதுகாப்பான வேறு இடம் இல்லாததாலும் அவனை அங்கேயே தங்க வைத்துப் பத்திரமாகக் கவனித்துக் கொள்வது அவசியமாகி இருந்தது. உபசரிப்பதிலும் பேணிப் போற்றி அன்பாகப் பாதுகாப்பதிலும் இணையற்றுத் தேர்ந்திருந்த இரத்தின மாலை மட்டும் அருகில் இல்லாவிட்டால் இளைய நம்பியை அப்படி ஒரே இடத்தில் உறையச் செய்திருக்க இயலாமற் போயிருக்கும். அவளால் மட்டுமே அது இயலும். அவளால் மட்டுமே அது அப்போது இயன்றதாகியிருந்தது.

 

நாட்டைக் கைப்பற்றுவதற்கான சூழ்நிலை கணிகிற வரை தானும், தன்னைச் சேர்ந்தவர்களும், தன் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்களும் ஒடுங்கியிருப்பது போல் பாவனை காண்பிக்க எண்ணினார் பெரியவர். ஏறக்குறைய எட்டுத் திங்கள் காலம் வரை இந்த ஒடுக்கம் நீடித்தது. ‘பாண்டிய மரபாவது இனிமேல் தலை எடுப்பதாவது? அந்த மரபைத் தான் நாம் அடியோடு தொலைத்து விட்டோமே என்று களப்பிரர்கள் மனப்பூர்வமாக நம்பிப் பாண்டியர்களுக்கு எதிரான பூதபயங்கரப்படை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கைவிடுகிற வரை பொறுமையாக இருந்தார் மதுராபதி வித்தகர்.

இனி நமக்கு எதிர்ப்பே இல்லை என்று களப்பிரர்கள் அயர்ந்த பின்பே சூழ்நிலை கனிந்திருப்பதை அவர் உறுதி செய்துகொண்டார். களப்பிரர்களை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்துவதற்கு அதுதான் ஏற்ற நேரம் என்று எல்லாக் கோணங்களிலும் கணித்து முடிவு செய்த பின், அவர் வெகு காலத்துக்குப் பின் முதன் முதலாக ஒரு முனை யெதிர் மோகர் படை வீரனைத் திருமோகூருக்கு இரகசியத் தூது அனுப்பிப் பெரிய காராளரையும் கொல்லனையும் அழைத்து வருமாறு ஏவினார். அப்போது நல்ல மாரிக்காலம். ஒவ்வொரு பிற்பகலிலுமே மழை கொட்டிக் கொண்டிருந்தது. மாலையிலும் இரவிலும் திருமால்குன்றத்துச் சிலம்பாற்றில் பயங்கர வெள்ளம் பெருகி ஓடியது.

காரிருளும் இடியும் மின்னலுமாக மழை மிக மிக அதிகமாயிருந்த அந்த இரவில் பெரிய காராளரும், கொல்லனும், தப்பி வந்து அவர்களோடு திருமோகூரில் மறைந்திருந்த குறளனும் பெரியவரைக் காண்பதற்காகத் திருமால் குன்றத்துக்குத் தேடி வந்தனர். அவர்கள் தேடி வந்த சமயத்தில் பெரியவர் சிலம்பாற்றில் மறுகரையில் தங்கியிருந்தார். சிலம்பாற்றில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு அதிகமாகி இருந்ததால் திருமோகூரிலிருந்து சென்றிருந்த மூவரும் மலையின் மறுகரையில் இருளோடு இருளாக நெடுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆற்றின் குறுக்கே பாலமிட்டதுபோல் பிரம்மாண்டமான மரம் ஒன்று முறிந்து விழுந்திருந்தது. அந்த மரத்தைப் பற்றி நம்பிக் கரை கடக்கலாமா கூடாதா என்று அறிவதற்காக முதலில் தங்கள் மூவரிலுமே உருவில் சிறியவனான குறளனை அந்த மரத்தின் வழியே மறு கரைக்குச் செல்லும்படி அனுப்பிப் பார்த்தார்கள் அவர்கள். குறளன் ஓர் இடையூறுமின்றி மறுகரைக்குப் போய்ச் சேர்ந்து, அப்படிச் சேர்ந்து விட்டதற்கு அடையாளமாகக் குரலும் கொடுத்தான். தொடர்ந்து காராளரும், கொல்லனும் அந்த மரத்தைப் பற்றி ஏறி, மறுகரை சேர முடிந்தது. மறுகரையில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆபத்துதவிகள் உடனே மூவரையும் பெரியவரது இடத்திற்கு விரைந்து அழைத்துச் சென்றனர். நீண்ட காலத்திற்குப் பின்பு பெரியவர் மதுராபதி வித்தகரை முதல் முதலாகச் சந்திக்கப்போகிறோம் என்று எண்ணும் போது காராளருக்கு மெய்சிலிர்த்தது.

 

அந்த மலையில் பெரியவர் தங்கியிருந்த குகையை அடைவதற்கு ஒரு நாழிகைப் பயணத்துக்கு மேல் ஆயிற்று. குகை வாயிலில் இருந்த முனையெதிர் மோகர் படைக்காவல் வீரர்கள் நல்லடையாளம் பெற்றபின் இவர்களை உள்ளே செல்லவிட்டனர். ஆபத்துதவிகள் வெளியே தங்கி விட்டதால் முதலில் காராளரும், அடுத்துக் கொல்லனும், மூன்றாவதாகக் குறளனும் குகைக்குள்ளே சென்றனர்.

உள்ளே இருந்து தீப்பந்தத்தின் ஒளியில் பாறைமேல் மற்றொரு செம்பொற் சோதி சுடர் விரித்து இருப்பதுபோல் பத்மாசனம் இட்ட கோலத்தில் அமர்ந்திருந்தார் மதுராபதி வித்தகர். காலடியோசை கேட்டுக் கண் விழித்த அவர் நெஞ்சாண் கிடையாகக் கண்களில் நீர்மல்க வீழ்ந்து வணங்கிய காராளரையும், மற்றவர்களையும் வாழ்த்தினார். எழுந்து அங்கே வந்து விழிகளில் உணர்ச்சி நெகிழ நின்ற காராளரை நெஞ்சாரத் தழுவிக்கொண்டார். காராளர் குரல் உடைந்து உணர்வு பொங்கப் பேசலானார்:

ஐயா! பல திங்களாகத் தங்களைக் காணும் பேறு இன்றித் தாய்ப் பசுவைத் தேடித் தவிக்கும் கன்றுபோல் தவித்துப் போனேன். திருமோகூர் முழுவதுமே இருள் சூழ்ந்ததுபோல் ஆகிவிட்டது. செய்வதற்குச் செயல்களும் இல்லை. செய்யச் சொல்லிக் கட்டளை இடுவாருமில்லை. நான் அநாதையைப் போல் ஆகியிருந்தேன்.”

இப்போது செய்வதற்கு மிகப்பெரிய செயல்களும் வாய்த்திருக்கின்றன. உம்மை நம்பித் தேர்ந்தெடுத்துச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டு அனுப்புவதற்குத்தான் இப்போது இங்கு எல்லாரையுமே நான் வரவழைத்திருக்கிறேன் என்றார் பெரியவர்.

அப்படியானால் அது எளியேன் பெற்ற பெரும்பேறாக இருக்கும்! தயை கூர்ந்து கட்டளை இடவேண்டுகிறேன்.”

காராளரே உடனே நீங்கள் பல்லவர் நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் திவ்ய தேசயாத்திரை புறப்படவேண்டும். அரண்மனையிலுள்ள களப்பிரக் கலியரசனை நேரில் கண்டு, அவனுடைய வாழ்த்துக்களுடனேயே அவனிடமே சொல்லி விடைபெற்று உங்கள் திவ்ய தேச யாத்திரையைத் தொடங்கவேண்டும்...”

ஐயா தாங்கள் மெய்யாகவே அடியேனைத் திவ்ய தேசயாத்திரை போகச் சொல்கிறீர்களா, அல்லது இதுகாறும் பல திங்கட் காலமாகத் தேசப்பணியில் சோம்பி இருந்து விட்டேன் என்பதற்காக இப்படி எள்ளி நகையாடுகிறீர்களா? நாடு இன்றுள்ள நிலையில் அடியேன் எப்படி யாத்திரை போக முடியும்?”

காராளரே! நான் இப்போது உம்மிடம் விளையாட்டுப் பேச்சாகவோ உம்மைக் குத்திக் காட்டுவதற்காகவோ இந்தக் கட்டளையை இடவில்லை. நான் அப்படி எல்லாம் சற்றே சிரித்து மகிழச் சொற்களைப் பயன்படுத்தி உரையாடுகிற இயல்பு உடையவனில்லை என்பதும் உமக்கே தெரியும். அப்படி இருந்ததும் நீர் என்னிடம் இவ்வாறு கேட்பதைக் கண்டு நான் வியப்படைகிறேன்...?”

 

பொறுத்தருள வேண்டும் ஐயா! தங்கள் திருவுளக் குறிப்பை எளியேன் புரிந்துகொள்ளத் தவறி விட்டேன்.”

சூழ்நிலை நன்றாகக் கனிந்து நமக்கு இசைவாக இருக்கிறது காராளரே! வடதிசையில் பல்லவர் நாட்டிற்கும், மேற்கே சேர நாட்டிற்கும் நீர் போய்வர வேண்டும் என்று இரண்டு இடங்களைக் குறிப்பிட்டு நான் கூறியபோதே அதிலுள்ள குறிப்பை நீர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். களப்பிர அரசனிடம் சொல்லி அவன் இசைவுடன் நீர் யாத்திரையைத் தொடங்கவேண்டும் என்று நான் கூறியதிலுள்ள அரச தந்திரமும் சாதுரியமும்கூட உங்களுக்கு இதற்குள் விளங்கியிருக்க வேண்டும்.”

இப்போது நன்றாக விளங்குகிறது ஐயா! திவ்ய தேசயாத்திரை என்று கூறிக் கொள்வதாலும், களப்பிரக் கலியரசனிடமே சொல்லி விடை பெற்று யாத்திரையைத் தொடங்குவதாலும் ஐயப்பாடுகளிலிருந்து என்னை நான் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் மெய்யாகவே பல்லவர் நாட்டிலும், சேர நாட்டிலும் தங்களுக்காக அடியேன் என்னென்ன காரியங்களைச் சாதித்துக் கொண்டுவர வேண்டும் என்பதைத் தாங்கள் இனிமேல்தான் கூறப் போகிறீர்கள் என்று எண்ணுகிறேன்!”

உங்கள் எண்ணம் தவறானதில்லை காராளரே! சேர வேந்தனுக்கும், பல்லவ மன்னனுக்கும் முத்திரையிட்டு நம் இலச்சினை பொறித்த இரு இரகசிய ஓலைகளைத் தனித் தனியே நான் உங்களிடம் இப்போது தரப்போகிறேன். அந்த ஓலைகளை அவர்களிடம் சேர்ப்பதுடன், என் கருத்தை அந்த இரு பெருமன்னர்களுக்கும் விளக்கிக் கூறி நான் ஓலை மூலம் அவர்களிடம் கோரியிருக்கும் உதவிகளைப் புரிய முன் வருமாறு செய்யவேண்டும். இப்போதுள்ள நிலைமையில் உங்களைத் தவிர வேறு யார் இங்கிருந்து இப்படித் திவ்ய தேச யாத்திரை புறப்பட்டாலும் களப்பிரர்கள் அவர்கள் மேல் சந்தேகப்படுவார்கள், பின் தொடர்வார்கள், தடுப்பார்கள். ஆனால், நீங்கள் புறப்படுவதை, அதுவும் தன்னிடமே வந்து ஆசி பெற்றுப் புறப்படுவதைக் களப்பிரக் கலியரசன் தடுக்க மாட்டான். ஆனாலும் அதிலும் ஓர் அபாயம் இருக்கிறது காராளரே! அரசன் சந்தேகப்படாவிட்டாலும் அவனோடு நிழல் போல இணை பிரியாமல் இருக்கிற மாவலி முத்தரையன் உங்கள் திவ்ய தேச யாத்திரையைப் பற்றி நிச்சயமாகச் சந்தேகப்படுவான். அவனுக்கும் சந்தேகம் வர முடியாதபடி ஓர் உபாயத்தை நான் உமக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறேன்.”

என்ன உபாயம் ஐயா அது?”

கலியரசனுக்கு முன்பு நெகிழ்ந்த குரலில், கண்களில் நீர் கசிய அழுவது போன்ற தொனியோடு, ‘அரசே! நான் களப்பிரப் பேரரசுக்கு எவ்வளவோ நெல் உதவி புரிந்தும், எவ்வளவோ நன்றி விசுவாசத்தோடு இருந்தும், பூத பயங்கரப் படையினர் என் மேல் ஐயுற்று திருமோகூரில் என்னை வீட்டோடு சிறை வைத்தார்கள். சோதனைகளும் பாதுகாவலும் புரிந்தார்கள். எளியேன் பாண்டிய நாட்டு எல்லையில் திருமோகூரில் இருப்பதாலேயே தானே மாமன்னருக்கு இப்படி என்மேல் ஒரு வீணான சந்தேகம் தோன்ற நேர்ந்தது? ஆகவே மாமன்னர் மனம் எளியேன் மேல் ஐயப்பட நேரிடாதபடி இனிமேல் இன்னும் சில திங்கள் காலத்துக்குத் திவ்ய தேசங்களில் யாத்திரை செய்யவும் புண்ணிய தீர்த்தமாடவும், புனிதத்துறை படியவும் நான் முடிவு செய்து புறப்பட்டு விட்டேன். தங்கள் நம்பிக்கையிலும் மதியமைச்சர் மாவலி முத்தரையருடைய விசுவாசத்திலும், இந்த அடிமை தாழ்வாகவோ, குறைவாகவோ, மதிக்கப்பட்டு விடக்கூடாதே என்று கருதியே இப்பயணம்?’ - என்பதாகப் போய் மன்றாட வேண்டும் நீங்கள்...”

நல்ல உபாயம்! நிச்சயம் பலிக்கும்! சூழ்நிலை இசைவாக இருக்கிறது! இப்போது எதுவும் பலிக்கும்.”

அதன்பின் பல்லவனுக்கும், சேரனுக்குமாக எழுதி முத்திரை இட்ட ஓலைகளைக் காராளரிடம் அளித்துவிட்டு எங்கெங்கே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தனியே நீண்டநேரம் விவரித்தார் மதுராபதி வித்தகர். பெரியவர் எல்லாவற்றையும் கூறியபின், “தீர்த்த யாத்திரையை நான் தனியே மேற்கொள்வதா? மனைவியையும், மகளையும்கூட அழைத்துச் செல்வதா?” என்று உடனே வினாவினார் காராளர்.

நீர் குடும்பத்துடனேயே செல்லுவது நல்லது. மெய்யாக நீர் செல்லும் அரசதந்திரக் காரியம் எதுவோ, அது உம் மனைவிக்கும் மகளுக்கும்கூடத் தெரியலாகாது என்றார் பெரியவர். காராளரும் அதை ஒப்புக் கொண்டு உறுதி கூறினார்.

காராளரிடம் பேசி முடித்தபின் கொல்லனையும் குறளனையும் அழைத்து, “உனக்கும் குறளனுக்கும் நான் இடப்போகும் கட்டளை சிரமமானதுதான் என்றாலும் நம்முடைய முனை எதிர்மோகர் படை வீரர்கள் சிலரது துணையுடன் பாண்டிய நாட்டில் மோகூரிலும், வேறு பல இடங்களிலும் நாம் உருவாக்கி மறைத்து வைத்திருக்கும் வேல், வாள், கேடயம், ஈட்டி முதலிய படைக்கலங்களையும் பிற ஆயுதங்களையும் காராளர் தீர்த்த யாத்திரை முடிந்து திரும்புவதற்குள் நீங்கள் படிப்படியாய் நிலவறை வழியாக இரத்தினமாலையின் மாளிகைக்குள்ளே கடத்திக் கொண்டு போய் அங்கே அடுக்கி விடவேண்டும். இரத்தினமாலையின் மாளிகையில் இடம் போதாவிடில் அம்மாளிகையின் கீழுள்ள நிலவறைப் பகுதியிலும் வெள்ளியம்பல மன்றின் கீழுள்ள நிலவறைப் பகுதியிலும் ஆயுதங்களை அடுக்கலாம். ஆயுதங்களைக் கொண்டு போய் அடுக்கும் வேலை முடிந்ததுமே நம் வீரர்களில் இருநூற்றுவருக்கு மேல் நிலவறை வழியே சென்று இளையநம்பியோடு சேர்ந்து கொள்ள வேண்டும். மேலும் பன்னூறுபேர் வெள்ளியம்பல மன்றில் அடையாளம் காண் முடியாதபடி ஊடுருவ வேண்டும். சில நூறு பேர் நடுவூர் வசந்த மண்டபத் தோட்டத்தில் மறைந்திருக்க வேண்டும். மற்றவைகளை நான் கவனித்துக் கொள்வேன். இதற்கு இடையில் முடிந்தால் கொற்கையிலுள்ள குதிரைக் கோட்டத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானை என்னிடத்திற்கு அழைத்து வர ஒருவர் போய் வர வேண்டும் - இவ்வாறு கட்டளையிட்டு அவர்களை அனுப்பினார் பெரியவர்.

 

2. பிடி தளர்ந்தது

 

மழைக் காலத்து நள்ளிரவில் திருமால் குன்றத்து மலைக் குகையில் பெரியவர் வகுத்த திட்டங்கள் நிறைவேறின. அவர் கூறிய தந்திரமான யோசனையின் படியே காராளர் மதுரைநகர் சென்று களப்பிரர் கலியரசனையும், மாவலி முத்தரையரையும் நம்பச் செய்து, அவர்களுடைய முழு ஒப்புதலுடன், ஆசியும் பெற்றுக் குடும்பத்தோடு தீர்த்த யாத்திரையைத் திவ்ய தேசப் பயணமாகத் தொடங்கி விட்டார். திருமோகூர்க் கொல்லன், குறளன் ஆகியோர் பணிகளும், மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தன.

நாடு உண்மையாகவே அமைதியடைந்து பாண்டியர்கள் ஒடுங்கி விட்டார்கள் என்று களப்பிரர்களும், பூதபயங்கரப் படையும் நம்பி அயர்ந்திருந்த நேரம் அது. சந்தேகத்துக்கு இடமான பழைய அந்த அவிட்ட நாள் விழாவின் போது கோநகரத்தில் களப்பிரர்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தார்களோ அவ்வளவு எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இப்போது இல்லை. ‘இனி நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற அளவு கடந்த துணிவினால் அயர்ந்து போயிருந்தார்கள் அவர்கள். தென்னவன் மாறனும், காமமஞ்சரியும் கொல்லப்பட்டு விட்டதாலும், கோநகரில் சந்தேகத்துக்கு உரியவர்களாக அவர்களுக்குத் தோன்றிய அழகன் பெருமாள் முதலியவர்களை வெளியேற முடியாத காராக்கிருகத்தில் அடைத்து விட்டதாலும் கலியரசனே,

மாவலி முத்தரையரே! இனிமேல் பாண்டியர்களைப் பற்றி மறந்து விடலாம். அந்த வமிசம் போன இடத்தில் புல் முளைத்துவிட்டது - என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் மாவலி முத்தரையர் என்னவோ அதை அப்படியே ஒப்புக் கொண்டு முழுமையாக நம்பி விடவில்லை.

கலியா! நீ எவ்வளவு சொன்னாலும் அந்த மதுராபதி வித்தகன் உயிரோடு இல்லை என்பது தெரிகிறவரை இதை நான் நம்பமாட்டேன், எதற்கும் விழிப்பாயிரு ” - என்று தான் மாவலி முத்தரையர் அடிக்கடி பிடிவாதமாக அவனை எச்சரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே மாவலி முத்தரையர் இருட் சிறையில் நலிந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் முதலியவர்களிடம் இருந்து நயமாகவும், பயமாகவும் மதுராபதி வித்தகரைப் பற்றி அறிய முயன்று கொண்டே இருந்தார். ஒரு நாள் அப்படி அவர் அறிய முயன்ற போது அவர் செய்த சித்திரவதை பொறுக்க முடியாமல் அவரை வேண்டும் என்றே குழப்பிவிட்டுக் கவனத்தைத் திசை திருப்பி ஏமாற்றக் கருதிய அழகன் பெருமாள்,

ஐயா! உங்கள் சித்தரவதை பொறுக்காமல் இன்று நான் உள்ளதைச் சொல்லி விடுகிறேன்! நேற்றுவரை மதுராபதி வித்தகர் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாதென்று உங்களிடம் கூறிவந்தேன். அது பொய் பல மாதங்களுக்கு முன் அந்தப் பழைய அவிட்ட நாள் விழாவன்று கோநகரைக் கைப்பற்ற முயன்று முடியாமற் போன ஏமாற்றத்தில் மதுராபதி வித்தகர் தென்னவன் சிறுமலைக் காட்டில் ஒரு பெரிய சிகரத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார். அவர் அமரராகிப் பல மாதங்கள் ஆகி விட்டன. அவர் இறந்ததைக் களப்பிரர்கள் அறிந்தால் எங்கள் பாண்டியர் இயக்கத்தை அறவே ஒடுக்கி விடுவார்களோ என அஞ்சியே அவர் இன்னும் உயிரோடு இருந்து வழிகாட்டி வருவதாக நாங்கள் நடிக்க நேர்ந்தது!” - என்று மாவலி முத்தரையரை நம்பவைத்துவிட ஏற்ற உருக்கமான குரலில் கூறினான். அவன் எதிர்பார்த்தபடி மாவலி முத்தரையர் அதை உடனே நம்பிவிடவில்லை.

அப்பனே! நீ என்னை இவ்வளவு எளிதாக ஏமாற்றி விடமுடியாது, மதுராபதியானை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் தற்கொலை செய்து கொள்ளமாட்டான் என்பதை நான் நன்கு அறிவேன். நீ சொல்வதுபோல் அவன் இறந்திருந்தால் பாண்டியர் இயக்கமும் அத்துடன் உயிரற்றுப் போயிருக்கும்... அப்படிப் போகாததாலும் வேறு பல சான்றுகளாலும் நீ கூறுவதை நான் நம்ப முடியாது...”

நீங்கள் நம்புகிறீர்களோ நம்பவில்லையோ, நடந்தது நடந்ததுதான்...” - என்று குரல் துக்கத்தால் குன்றிக் கண்களில் நீர் நெகிழ அவர் முன் நடித்தான் அழகன் பெருமாள்.

அவனுடைய கண்ணிரும், குரலின் நெகிழ்ச்சியும் மாவலி முத்தரையரைக் குழப்பமடையச் செய்தன. ஒருவேளை உண்மையிலேயே மதுராபதி வித்தகர் மரணம் அடைந்திருப்பாரோ என்ற சந்தேகம்கூட அவருள்ளத்தில் மெல்ல எழுந்தது. ஆனால் எதிரே நிற்பவர்களால் தன் உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகிற அளவு பலவீனப்பட்டு விடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அவரைத் தடுத்தது. அவர் விழிப்பாயிருந்தார். அழகன் பெருமாளே, முதலில் பெரியவர் மதுராபதி வித்தகரைப் பற்றி அப்படி ஓர் அமங்கலமான பொய்யைச் சொல்லத் தயங்கினான் என்றாலும் எதிரிகளின் கவனத்தைத் திசைதிருப்பவும், பெரிய வரின் பாதுகாப்புக்கும் அந்தப் பொய் மிகமிகப் பயன்படும் என்ற நம்பிக்கையே அவனைத் துணிய வைத்திருந்தது.

சிறையிலேயே அப்போது உடனிருந்த காரி, கழற் சிங்கன், முதலிய நண்பர்களுக்குக்கூட அழகன் பெருமாள் கற்பனையில் சொல்லிய அந்தப் பொய் பிடிக்கவில்லை என்றாலும் அதில் ஏதேனும் தந்திர உபாயம் இருக்க வேண்டும் என்று கருதிக் கட்டுப்பட்டு அவர்கள் மெளனமாக இருந்து விட்டனர்.

 

இந்தப் பொய்யின் மூலம் தன்னையும், தன்னுடன் இருக்கும் நண்பர்களையும் இருட்சிறையிட்டு அவர்கள் புரியும் கொடுமைகளின் பிடி ஓரளவு தளரும் - தளரலாம் என்று அவன் எதிர்பார்த்தான். அந்த அளவிற்கு அது பயனளித்தது. மாவலி முத்தரையரின் கவனத்தைப் பெரியவர் இறந்து விட்டதாகச் சொல்லித் திசை திருப்பியதன் மூலம் அவரது கடுமையான சந்தேகத்தின் பிடி தளர்ந்திருப்பது மட்டும் புரிந்தது.

அவருடைய உடனடியான முதற் சந்தேகத்தைப் பிடி தளர்த்தி வேறு சந்தேகத்தில் திசை திருப்பிவிட்ட அளவு அழகன் பெருமாளுக்கு வெற்றி கிடைத்திருந்தது. மாவலி முத்தரையர் எதையும் அறிந்து கொள்ளவிடாமல் அவரது கவனம் பெரியவர் பற்றியே திரும்பச் செய்ய முடிந்தவரை அவர்கள் சாதுரியமாகவே செயல்பட்டிருந்தார்கள்.

ஒரு பிடி தளர்ந்தது. ஆனாலும் அதுவும் முழுமையாகப் பலிக்கவில்லை என்று சிறிது நேரத்தில் மாவலி முத்தரையர் பேசிய பேச்சிலிருந்து புரிந்தது. நம்பிக்கைதான் அரச காரியங்களைச் செய்பவர்களின் மூலதனமோ என்று புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் மறுபடி சீறத் தொடங்கினார் அவர். இன்னும் அவர் தங்களை ஆழம்பார்க்கிறார் என்பதை அழகன் பெருமாள் அதன் மூலம் அறிந்து கொண்டான்.

 

3. அழகன்பெருமாளின் வேதனை

 

அழகன் பெருமாள் மிக மிகச் சாதுரியமாக நடித்த அரச தந்திர நாடகத்தை மாவலிமுத்தரையர் நம்பாததுடன் விரைந்து அவனை எதிர்த்துச் சொல்லால் மடக்கினார். குறுக்குக் கேள்விகள் கேட்டு அவனைத் திகைக்கச் செய்தார்.

தம்பி! என் வயதை நோக்க நீ மிகவும் இளைஞன் தான். உன்னைப் போன்ற பாண்டியர் இயக்கத்து இளைஞர்களிடம் நான் அத்தனை எளிதாக ஏமாறி விடமாட்டேன் என்பதை நீ மறந்து விடக் கூடாது! திடீரென்று எதையாவது சொல்லி நம்பவைத்து என்னையோ, என்னைச் சேர்ந்தவர்களையோ நீ கவிழ்த்து விட முடியாது. நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்கிறோம். நீங்கள் களப்பிரர்களிடம் ஆட்சியையும், நாட்டையும் இழந்திருப்பவர்கள். இழந்ததை மீட்கத் தவிப்பவர்களின் அளவும், ஒற்றுமையும், வலிமையும், சாதுரியங்களும், எல்லாமே மிகமிகக் கூர்மையாக இருக்கும் என்பதை நான் அறிவேன் அப்பனே! முன்பு ஒருநாள் வினாவும்போது நீயே என்னிடமும், என் ஆட்களிடமும்நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகன் யாரென்றே எனக்கும் மற்றவர்களுக்கும் தெரியாது - என்பது போல் நடித்திருக்கிறாய். இன்றோ இருந்தாற் போலிருந்து உள்ளூற ஏதோ சதித்திட்டம் செய்துகொண்டு பேசுவது போலமதுராபதி வித்தகன் ஏமாற்றத்தால் மலை உச்சியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டு விட்டதாகக் கதை அளக்கிறாய்!”

இல்லை ஐயா! இதில் கதை எதுவும் கிடையாது. நான் இப்போது கூறுவதுதான் மெய்யாக நடந்த காரியம்! மதுராபதி வித்தகர் இப்போது இல்லை. நீங்கள் அவரைப் பற்றி நினைத்து விணாகக் கவலைப்பட வேண்டாம் என்று மீண்டும் உறுதியாகக் கூற முயன்றான் அழகன்பெருமாள். அவர் அதை நம்பாமலே மேலும் பேசினார்.

நீ என்னை இத்தனை சுலபமாக ஏமாற்றி விட முடியாது அப்பனே! மதுராபதி வித்தகனை எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஒரு சிறிய முயற்சி, முதல் முறை தோற்றுப் போவதை ஏற்றுத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து மலை மேல் ஏறிக் குதித்து உயிர்விடுகிற கோழை அவனில்லை. விரக்தியையே விரக்தியடையச் செய்து தன்னை அணுக விடாமல் துரத்தும் வீரன் அவன். ஏமாற்றத்தையே ஏமாற்றம் அடையச் செய்து தன்னை நெருங்கிவிடாமல் எட்டி நிற்கச் செய்கிற வல்லாண்மை அவனுக்கு உண்டு. இப்படி ஒரு கதை கட்டிவிட்டால், நீ கூறும் இதை, உண்மை என்று நம்பி நான் உன்னை இந்த இருட்சிறையிலிருந்து விடுதலை செய்வேன் என நீ நினைந்தால், அது பேதமை இதை நான் நம்பவில்லை...”

நீங்கள் என்னை விடுதலை செய்யா விட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால், மதுராபதி வித்தகர் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது உண்மைதான்! உயிரோடு இருப்பவரை மாய்ந்து போனதாக உங்களிடம் பொய்கூறி இப்போது எனக்கு ஆகப் போவது என்ன?” என்று மேலும் முன் சொன்னதையே அவரிடம் அழகன் பெருமாள் வற்புறுத்தினான். மாவலி முத்தரையர் அவன் கூறியதை ஏற்றதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும் நம்பாமல் சிறிதும் நம்பிச் சிறிதும் மனம் குழம்பினார் அவர். நேரே போய் அவர் களப்பிர அரசனிடம் அந்தச் செய்தியைக் கூறினார். கூறிய சுவட்டோடு தாம் இந்தச் செய்தியை நம்பவில்லை என்றும் களப்பிரக் கலியரசனிடம் தெரிவித்தார்.

கலியரசன், மதுராபதி வித்தகர் இருக்கிறாரோ மாண்டு போய் விட்டாரோ என்று அவரிடம் விவாதிக்கவில்லை. ஆனால் பாண்டிய வம்சம் தலையெடுக்க இனி வழியில்லை என்பதுபோல் ஏற்கெனவே தனக்குள் இருந்த ஒரு முடிவை மேலும் நம்பினான் அவன். இந்த உறுதியான நம்பிக்கையினால் கோநகரிலும், கோட்டையின் உள்ளேயும், வெளியேயும், செய்திருந்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், படை பலப் பெருக்க ஏற்பாடுகளையும் மெல்ல மெல்லப் பிடி தளர்த்தி விட்டான். படை வீரர்களில் பெரும் பகுதியைக் கோட்டையில் வைத்திருந்த நிலையை மாற்றி வடக்கேயும், தெற்கேயும் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அந்தப் படைகளைப் பிரித்து அனுப்பினான். மாவலி முத்தரையரை மீறியே இதைச் செய்தான் அவன். அழகன்பெருமாள் முதலியவர்களைக் காராக் கிருகத்தில் இருந்து விடுதலை செய்துவிடக்கூடக் கலியரசன் சித்தமாயிருந்தான். ஆனால், அதை மட்டும் முத்தரையர் பிடிவாதமாக மறுத்ததோடு தடுத்து நிறுத்தியும் விட்டார்.

இந்தப் பாண்டிய வேளாளர்கள் நம் வசம் சிறைப்பட்டிருக்கிற வரைதான் வெளியே அங்கங்கே இலைமறை காய்போல் ஒளிந்திருக்கின்ற வேறு சில பாண்டிய வேளாளர்கள் நமக்கு அஞ்சித் தயங்க முடியும். இவர்களையும் விட்டு விட்டால் மறுபடி பூசல்களை மூட்ட இவர்களே வெளியே போய்த் தூண்டினாலும் தூண்டலாம். ஆகவே, நான் சொல்கிறவரை இவர்களை நீ வெளியே விடவே கூடாது என்று அரசனைக் கடுமையாக எச்சரித்துவிட்டார் மாவலி முத்தரையர். கலியரசனும் இந்தச் சிறிய விஷயத்தில் அவரைத் தட்டிப் பேச விரும்பாமல் அவர் சொல்கிறபடியே கேட்டு விட்டான்...

அதே நேரத்தில் இருட்சிறையில்பெரியவர் இறந்து விட்டதாக உன் வாயால் நீ ஏன் அமங்கலமாக ஒரு சொல் சொல்ல வேண்டும்?” - என்று தன்னைக் கோபத்தோடு வினாவிய மற்ற நண்பர்களுக்கு அழகன் பெருமாள் ஆத்திரப் படாமல் நிதானமாக மறுமொழி கூறினான்:

நண்பர்களே? நான் இப்படி ஒரு பொய்யைக் கூறி மாவலியாரைத் திசை திருப்பி நினைக்க விட்டிருப்பதால் நமக்குப் பொன்னான வாய்ப்புகள் பல நேரும். போகப்போக நீங்களே அவற்றை அறிவீர்கள். இப்போது உங்களுக்கு அது புரியாதுதான். நான் கூறியதால் மட்டுமே பெரியவர் இல்லையாகிவிட மாட்டார். அவர் இல்லை என்பதை அந்த மாவலியாரே நம்பவில்லை; பார்த்தீர்களா? ஆனால் இந்தப் குழப்பத்தினை நான் உண்டாக்கிவிட்டிருப்பது நம் பெரியவருக்கே நல்லது. இனி இவர்கள் அவர் தலையைத் தேடி அலையும் முயற்சிகள் தானாகக் குறையும். அதனால் அவருக்கு அதிகப் பயன் விளைந்து மற்ற திட்டங்களை அவர் நினைத்தபடி நிறைவேற்றுவார். பார்த்துக் கொண்டே இருங்கள் எல்லாம் நமக்குச் சாதகமாகத் திரும்பப் போகிறது என்று அழகன்பெருமாள் கூறிய பின்பே இது விஷயத்தில் நண்பர்களின் ஐயப்பாடுகள் தீர்ந்தன. ஒரு தந்திரத்திற்காகத் தான் கூறியுள்ள இந்தப் பொய்யை உறைத்துப் பார்க்கக் கருதி மாவலி முத்தரையர் கோநகரில் பரப்புவாரானால் அதன் விளைவாகக் கோநகரிலேயே இருக்கும் தன் மனிதர்களும் கூடக் குழப்பமடைய நேரிடுமே என்ற ஒரு பயம்தான் அப்போது அழகன் பெருமாளின் அந்தரங்கத்தில் இருந்தது.

மாவலி முத்தரையர் தான் கூறிய மதுராபதி வித்தகர் பற்றிய செய்தியைக் கோநகரில் பரவச் செய்து விடுவாரானால் அதன் விளைவாகக் கணிகை இரத்தினமாலை, இளையநம்பி, பாண்டியர்களுக்கு வேண்டிய பிறர் எல்லாருமே ஒன்றும் புரியாமல் திகைக்கவும் குழப்பம் அடையவும் நேரிடுமே என்று அஞ்சினான் அழகன்பெருமாள். ஆனால், அப்படியெல்லாம் குழப்பமோ, கெடுதலோ நேராது என்றும் அவன் உள் மனத்தில் ஏதோ ஓருணர்வு உறுதியாக நம்பிக்கை அளித்தது. பெரியவரைத் தொடர்புபடுத்திக் கூறிய ஒரு பொய்க்காக அவன் மனம் வருந்தியது. ‘புரை தீர்ந்த நன்மை பயக்கக் கூடியது என்றால் அப்படிப்பட்ட ஒரு பொய்யையும் சொல்லலாமா என்ற முன்னோர் முடிவையும், வழுவமைதியையும் நினைத்தால் ஓரளவு அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது.

தான் சமயோசிதமாக இட்டுக் கட்டிக் கூறிய இந்தப் பொய்யை மாவலி முத்தரையர் முழுமையாக நம்பிவிடா விட்டாலும் மதுராபதி வித்தகர் மறைந்திருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கவேண்டும் என்ற வேகத்தைக் குறைக்கவும் திசை திருப்பவும் இது பயன்படமுடியும் என்று அழகன் பெருமாள் நம்பினான். சிறையிலிருந்தபடியே தந்திர உபாயத்தின் மூலம் செய்ய முடிந்த மிகப் பெரிய தேச சேவையாக இதை அவன் கருதினான்.

தானும், ஏனைய உபவனத்து நண்பர்களும், தென்னவன் மாறனைச் சிறை மீட்கும் குறிக்கோளுடன் பூத பயங்கரப் படையினர் போன்ற மாறு வேடத்தில் அரண்மனைக்குள் நுழைந்த போது இப்படிப் பன்னெடுங் காலமாகச் சிறையில் தாங்களே சிக்கித் தவிக்க நேரிடும் என்று அழகன் பெருமாளோ மற்றவர்களோ கனவில்கூட நினைத்ததில்லை. இப்போது இந்த இருட்சிறையிலிருந்து வெளியே என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்க முடியும் என்பதை அநுமானம் செய்வதுகூடச் சிரமமாக இருந்தது. தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றித் தென்னவன் மாறனைத் தான் விடுவித்துப் பெரியவரிடம் அழைத்துச் செல்லுமுன் களப்பிரர்கள் அந்தப் பாண்டியகுல வீரனின் நல்லுயிரை இந்த உலகிலிருந்தே விடுவித்து விட்டார்கள் என்று எண்ணும் போது அழகன் பெருமாளின் இதயம் கனத்தது. அவன் சிந்தனையில் விரக்தியும் வேதனையுமே வந்து தங்கின. அவன் எண்ணினான்:

நான் இனி இந்த இருட்சிறையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தாலும் எந்த முகத்தோடு பெரியவர் முன்னிலையிலே போய் நிற்பேன்? அப்படிப் பெரியவர் முகத்தில் விழிக்க வெட்கப்படும் நிலையுடன் இந்தச் சிறையிலிருந்து மீள்வதைவிட இதிலேயே நலிந்து ஒடுங்கி அழிந்து போவது மேல். நமது பெருமதிப்புக்குரியவர் நம்மை மதிக்காத நிலையிலும் உயிர்வாழ்வதா பெரிய காரியம்? “என்னால் சிறை மீட்க முடியாமற் போனதால் தென்னவன் மாறனைக் களப்பிரர்கள் கழு ஏற்றிக் கொன்று விட்டார்கள் - என்பதாக எப்படி நான் பெரியவரிடம் போய் வாய்கூசாமல் சொல்லுவேன்? தனக்கு இடப்பட்ட கட்டளையை வெற்றியுடன் நிறைவேற்றி விட்டு முன்னே போய் நிற்கிற வீரன் பட முடிந்த பெருமையைத் தோற்றுவிட்டு நிற்பவன் எதிர்பார்க்கவே முடியாது. நானோ தோற்றுவிட்டவன். இங்கிருந்து விடுபட்டு வெளியேறினாலும் பெரியவர் முன்னால் போய்த் தலை நிமிர்ந்து நிற்க எனக்கு இனி என்ன தகுதி இருக்கிறது! நான் இந்தச் சிறைக்குள்ளேயே சாவதுதான் மேல். எதனாலும் தாழ்ந்து போகக்கூடாது. தாழ்ந்து போய் விட்டால் அப்புறம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆபத்துதவிகள் என்றாலே ஆபத்தில் உதவவும் மீட்கவும் கடமைப்பட்டவர்கள். நானோ உதவவும் மீட்கவும் முடியாமற் போனதுடன், பிறரை ஆபத்திலிருந்து மீட்கத் தவறிய குற்றத்தோடு என்னையும், என்னைச் சேர்ந்தவர்களையும் ஆபத்தில் சிக்க வைத்துக் கொண்டு விட்ட மிகப் பெரிய குற்றத்தையும் புரிந்துவிட்டேன். இனி எனக்குக் கழுவாயோ, தீர்திறனோ இல்லவே இல்லை! நான் மிகப்பெரிய பாவி - என்று நினைத்து நினைத்து தவித்து நெக்குருகிக் கண்ணிர் வடித்தான் அழகன் பெருமாள். தான் செய்துவிட்ட பிழையால் இனிமேல் பாண்டியக் குலத்துக்கு விடிவே இல்லாமல் போய்விடுமோ என்று அவன் உள்ளம் பதறியது, பயந்தது, தவித்தது, உருகியது, உழன்றது, மறுகியது, மலைத்தது.

 

4. புன்னகையும் வார்த்தைகளும்

 

கூடற்கோநகரத்தின் வானத்தில் மழை மேகங்களோடு மெல்ல இருண்டு கொண்டு வந்த பின் மாலை வேளையில் மாளிகையின் கூடத்தில் இரத்தினமாலைக்கும் இளைய நம்பிக்கும் இடையே இந்த உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அவள் தரையில் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் அருகே அமர்ந்து அவள் பூத்தொடுக்கும் அழகைக் கண்களாலும் இதயத்தாலும் இரசித்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

இரத்தினமாலை! அழகன் பெருமாளும் உபவனத்து நண்பர்களும்தான் களப்பிரர்கள் வசம் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்று நீ சொல்கிறாய்! ஒரு விதத்தில் பார்க்கப் போனால், நானும் தான் இந்த மதுரை மாநகர எல்லைக்குள் சிறைப்பட்டிருக்கிறேன். அவர்கள் களப்பிரர்களிடம் சிறைப் பட்டிருக்கிறார்கள். நான் நம்மவர்களிடமே சிறைப்பட்டுப் போய்விட்டேன். கொலை செய்யப்பட்டுவிட்ட என் தமையன் தென்னவன் மாறனை அவர்களாலும் மீட்க முடியவில்லை. நான் மீட்பதற்கும் முயல முடியாமல் எல்லாருமாகச் சேர்ந்து என் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டீர்கள். இதன் விளைவாகக் களப்பிரர்கள் காட்டில்தான் இன்னும் மழை பெய்துகொண்டிருக்கிறது. அவர்களுடைய நல் வினைக்காலம் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.”

ஆத்திரம் வரும்போதெல்லாம் உங்களுக்கு இப்படி என்னிடம் ஏதாவது வம்புக்கு இழுத்தாகவேண்டும். என்னைப் போருக்கு இழுக்காவிட்டால் உங்களுக்குப் பொழுது போகாதோ?”

கோபித்துக்கொள்ளாதே இரத்தினமாலை! இங்கே நான் செய்ய முடிந்ததாக மீதமிருக்கும் ஒரே போர் இது தான்! வேறு போர்களிலிருந்தும் முயற்சிகளிலிருந்தும் நான்தான் தடுக்கப்பட்டிருக்கிறேனே?...”

 

யார் சொன்னார்கள் அப்படி? நீங்கள் செய்வதற்குப் பெரியபெரிய போர்கள் எல்லாம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தெரிந்துகொள்வீர்கள்.”

விரைவில் என்றால் எப்போது?”

இப்போதே இன்றிரவில் கூட அது தொடங்கப் படலாம்! நான் கூறுவது மெய்...”

மெய்யாயிருக்கலாம். ஆனால், நீ ஒன்றை மறந்து விடக் கூடாது இரத்தினமாலை. ஆயுத பலமும், ஆள்பலமும், இல்லாமல் களப்பிரர்களோடு மோத முடியாது. போருக்கு நம்மிடம் வலிமை இல்லை. போரே இல்லா விட்டாலும் ஒரு சிறு கலகம் புரியக்கூட நம்மிடம் ஆள்வலிமை இல்லை...”

போருக்கும், கலகத்துக்கும், மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதாய் நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.”

அதில் சந்தேகமென்ன? தொடக்கமும் முடிவும் நியாயமும் இலக்கணமும் உடையது போர். அதற்கு இருதரப்பிலும் வலிமை வேண்டும். ஆனால், ஒரு கலகத்தை எப்போதும் எப்படியும் எவ்வளவு குறைந்த வலிமையோடும் எங்கேயும் தொடங்கலாம். கலகத்துக்கு முடிவு இல்லை. போருக்குத் தொடக்கத்தைப் போலவே முடிவும் உண்டு...”

களப்பிரர்களை எதிர்த்து இனி நாம் செய்ய வேண்டியது போரா, கலகமா?”

நாம் நீண்ட காலம் காத்திருந்து விட்டோம். பல பூசல்களுக்கும், கலகங்களுக்கும் பின்பு கூட நமக்குப் பயன் விளையவில்லை. போருக்குத்தான் முடிவான பயன் உண்டு! கலகத்துக்கு அது இல்லை. எனவே, இம்முறை நாம் எதைச் செய்தாலும் அது நமக்கு முடிவான பயனைத்தரக்கூடியதாக இருக்கவேண்டும்.”

அப்படியானால் இங்கே நீங்கள் அதற்குத் திட்டமிடவேண்டிய காலம் வந்து விட்டது...”

வெறும் கை முழம் போட முடியாது! பெரியவரிடம் இருந்து கட்டளை இல்லை. வீரர்கள் இல்லை. மாபெரும் களப்பிர அரசை எதிர்க்கப் போதிய படைக்கலங்கள் இல்லை. திட்டமிடுவது மட்டும் எப்படிச் சாத்தியமாகும்? தரையில் உள்ள பூக்களை எடுத்துக் கைகளால் தொடுப்பதுபோல் அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.”

நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்! ஆனால், இப்போது தான் இங்கே உங்கள் எதிரே அமர்ந்து பூத்தொடுப்பது எவ்வளவு சுலபமாயிருக்கிறதோ, அவ்வளவு சுலபமாகப் போர் தொடுப்பதையும் ஆக்கி வைத்திருக்கிறோம். எல்லா ஏற்பாடுகளும் இங்கு அருகருகே உள்ளன.”

 

நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை இரத்தின மாலை! போர் தொடுப்பது என்பது பூத்தொடுப்பதை விடப் பெரிய காரியம்.”

பெரிய காரியம்தான்! ஆனால் சமயமும் வேளையும் பொருந்தியிருந்தால் அதுவே பூத்தொடுப்பதை விட எளிதாகிவிடும்...”

ஆனால் சமயமும் வேளையும் இப்போது அப்படிப் பொருந்தி வந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே? உனக்கு மட்டும் எவ்வாறு அப்படித் தோன்றுகிறது? குறை பாடுடைய கணிப்புக் காரணமாக நீ அப்படி நினைக்கிறாயா?”

எதிரே அமர்ந்து அவன் இப்படி வினாவிக் கொண்டிருந்த போது அவள் பூக்களைத் தொடுத்து முடித்திருந்தாள். தொடுத்து முடித்த கண்ணியைக் குடலையில் வைத்து எடுத்துக் கொண்டு புறப்படும்போது அவனை நோக்கி நகைத்தாள் இரத்தினமாலை. அவன் கேள்விக்கு அவள் இன்னும் மறுமொழி கூறவில்லை. அவன் மேலும் அவளை வற்புறுத்திக் கேட்டான்;

என்ன பதில் சொல்லாமலே எழுந்து போகிறாய்? வார்த்தைகளால் வினாவிய வினாவுக்குப் புன்னகை மட்டுமே பதிலாகி விடாது.”

என்ன செய்வது வார்த்தைகளைவிட அதிகப் பொருளாழம் உள்ளவற்றைப் புன்னகையால் மட்டுமே கூற முடிகிறது. சற்றே பொறுத்திருங்கள் இருட்டியதும் பதிலைச் சொற்களால் சொல்லாமல் கண்முன் காட்டியே விளக்குகிறேன் என்று கூறினாள் இரத்தினமாலை. சிறிதுநேரம் கழித்து மாளிகையின் உணவுப் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளும் மடைப்பள்ளி பணிப் பெண்களிடம், “பணிப் பெண்களே! இன்றிரவு நம் மாளிகையில் விருந்தினர்கள் இரு நூற்றுவருக்கு மேல் எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவ்வளவு பேருக்கும் இங்கேயே உணவு படைக்க வேண்டியிருக்கும் என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இதை இளையநம்பியும் கேட்க நேர்ந்தது. அவனுக்கு இது புதிராய் இருந்தது. ஆயினும் ஏனென்று அவளைக் கேட்கவில்லை.

அன்று மழையின் காரணமாக விரைந்து இருட்டியது. இருட்டி வெகுநேரமாகியும் மழை நிற்கவில்லை. மாளிகையில் எல்லா இடங்களிலும் அந்தி விளக்குகள் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் இரத்தினமாலை அவனைத் தேடி வந்து அழைத்தாள்:

தயை செய்து என்னோடு வரலாம் அல்லவா? இது கட்டளை அல்ல. அழைப்புத்தான். நீங்கள் கட்டளையை மறுக்கலாம். அழைப்பை மறுக்கக் கூடாது.”

மறுக்காமல் வருகிறேன் இரத்தினமாலை! ஆனால், ஒரு நிபந்தனை. நீ தெளிவாக எல்லாவற்றையும் வார்த்தைகளால் பேசவேண்டும். மறுபடியும் புன்னகையால் பேச முயலுவாயானால் நான் நிச்சயமாக வருவதற்கில்லை.”

 

ஏன்? என் புன்னகை உங்களுக்குப் பிடிக்க வில்லையோ?”

புன்னகை பிடிக்காமல் என்ன? புன்னகையையும் புன்னகை செய்பவளையும் சேர்ந்தே பிடிக்கிறது... ஆனால், புன்னகையைக் கருவியாகக் கொண்டு பேச்சை மறைப்பதுதான் பிடிக்க வில்லை என்று கூறி நகைத்தபடியே அவளோடு எழுந்து புறப்பட்டான் இளைய நம்பி. அவள் மாளிகையின் பின்புறம் தோட்டம் இருந்த பகுதிக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

அங்கே கூரைச்சார்பு வேய்ந்த கூடாரங்களில் கறவைப் பசுக்கள் கழுத்துமணி ஆடி ஒலிக்கப் புல் தின்று கொண்டிருந்தன. பசுக்களின் கொட்டாரத்தை அடுத்த பெரிய கூரைக் கொட்டாரத்தில் நீளமும் பருமனுமாக நூற்றுக் கணக்கான விறகுக் கட்டுகள் வரிசை குலையாமல் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. மழையில் நனைந்து விடாமல் அவை மிகமிகப் பாதுகாப்பாக அடுக்கப்பட்டிருந்ததைப் பார்த்து இளையநம்பி கேட்கலானான்:

மழைக் காலத்தில் பயன்படட்டும் என்று கட்டுக் கட்டாக விறகு வாங்கி அடுக்கியிருக்கிறாய் இரத்தினமாலை! கடந்த சில நாட்களாக வாயிற்பக்கமாகவும், புறங்கடைப் பக்கமாகவும் பணியாட்கள் விறகுக் கட்டுக்களைக் கொண்டு வந்து அடுக்கிய வண்ணமாயிருக்கிறார்கள். இவ்வளவு விறகிலும் உணவு சமைக்கத் தகுந்த அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இனி உன் மாளிகைக்கு விருந்தினர்களும் வருவார்கள் போலிருக்கிறது!”

இது போதாது! இன்னும் விறகுக் கட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் நிறைய வரவேண்டியுள்ளது.”

அப்படியா? பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரையைக் கண்ணகி தன் கற்பினால் எரித்ததாகச் சொல்வார்கள். இப்பொழுது இந்தக் களப்பிரக் கலியரசனின் மதுரையை நீ விறகினால் எரிக்கத் திட்டமிட்டிருக்கிறாய் போல் இருக்கிறது! அந்தக் கண்ணகியைப் போல் உனக்கும் மதுரையை எரித்துப் புகழ்பெறும் ஆசை வந்துவிட்டதா, என்ன?” என்று அவன் வினாவிய போது இதைச் செவியுற்றுச் சிரித்தாள் அவள். உடனே அவன் அவளைக் கேட்டான்:

பார்த்தாயா? பார்த்தாயா? மறுபடியும் புன்னகையால் பேசத் தொடங்கி விட்டாயே இரத்தின மாலை.”

ஆமாம்! நீங்கள் வார்த்தைகளால் பேசுவது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் புன்னகையால் பேசுவது எதுவோ அதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ள முயலக்கூட இல்லை...”

அப்படியா? புரிந்து கொள்ள முயல்வதற்கு என்ன செய்யவேண்டும் என்பதையாவது சொல்லேன்; அப்படியாவது புரிகிறதா என்று மீண்டும் முயன்று பார்க்கிறேன்...”

 

இதைக் கேட்டு மீண்டும் அவள் புன்னகை பூத்தாள். அவளுடைய ஒவ்வொரு புன்னகையும் அவன் வியப்பை அதிகமாக்கின. விறகுக் கட்டுக்கள் அடுக்கப்பட்டிருந்த பகுதியில் பசுக் கொட்டாரத்தின் விளக்கொளி படர்ந்திருந்தது. விளக்கொளியில் அவன் கண்காண அவள் ஒரு பெரிய விறகுக் கட்டின் கயிற்று முடிப்புக்களை அவிழ்த்துக் கட்டை நெகிழ்த்தி விட்டாள். என்ன அதிசயம்! நெகிழ்ந்த விறகுகளினிடையே வாள்களும், வேல்களும், பிற படைக் கலங்களும் மின்னின. உள்ளே ஆயுதங்களை வைத்துக் கட்டி யிருப்பது தெரியாமல் மிகச் சாதுரியமாக அந்த விறகுக் கட்டுக் கள் அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. அவள் புன்னகையின் மர்மம் இளையநம்பிக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்தது.

ஐயா திருக்கானப்பேர் வீரரே! உங்கள் கேள்விக்குப் புன்னகையால் மட்டுமே நான் மறுமொழி கூறியதாக வருத்தப்பட்டுக் கொண்டீர்கள். இப்போது வார்த்தைகளாலும் மறுமொழி கூறுகிறேன். இதோ, கேட்டுக் கொள்ளுங்கள்: இந்த விறகுகள் மதுரையை எரிக்காது. ஆனால், களப்பிரர்களை எரித்து நிர்மூலமாக்கிவிடும் என்பது என்னவோ சர்வ நிச்சயமானது.”

இப்படி அவள் பேசிமுடித்தபோது வியப்பில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அவளை நோக்கி அவன் புன்னகை புரிந்தான்.

ஒரு பெரும் போருக்கு வேண்டிய படைக்கலங்கள் விறகுக் கட்டுக்கள் மூலம் உள்ளே வந்திருப்பதை அவன் அறிந்தபோது, அது அவள் சாதுரியமா அல்லது அதை அப்படி அனுப்பி வைத்தவர்கள் சாதுரியமா என்று உடனே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வியப்பிலிருந்து அவன் மீள்வதற்குள்ளேயே,

என்னோடு வந்தால் இதைவிடப் பெரிய மற்றோர் அதிசயத்தையும் காட்டமுடியும் கருணைகூர்ந்து தாங்கள் வந்தருளவேண்டும் என்றாள் இரத்தினமாலை.

எங்கே வரவேண்டும்?”

கீழே நிலவறைக்கு என்று கூறி நிலவறை வழியே நுழைவாயிலுக்கு அவனை அழைத்துச் சென்றாள் அவள்.

  

5. அணிவகுப்பு

 

இரத்தினமாலையைப் பின் தொடர்ந்து போன இளையநம்பி சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்று நிலவறை வழிக்கான அடைப்புக் கல்லைத் திறந்தபோது, உட்புறம் ஏற்கனவே ஒளி தெரிந்தது. உடனே இளையநம்பி இரத்தின மாலையை நோக்கி, “உன்னை ஆடல் பாடல்களில் வல்லவள் என்பதைவிட ஓர் அரச தந்திர மேதை என்றே சொல்லலாம் போலிருக்கிறதே இரத்தினமாலை! நீ என் வியப்புக்களை ஒவ்வொன்றாக வளரச் செய்கிறாய் என்றான்.

எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் வியக்கின்ற வியப்புக்களும் சொல்லுகின்ற புகழ் வார்த்தைகளும் என்னைச் சேரவேண்டியவை அல்ல. அவை பெரியவர் மதுராபதி வித்தகரைச் சேர வேண்டியவை. இந்தக் காரியங்களை எல்லாம் அவரே திட்டமிடுகிறார். அவரே மூலமாக இருந்து இயக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான் என்று இரத்தினமாலை மிகவும் தன்னடக்கமாக மறுமொழி கூறினாள்.

அங்கே உள்ளே படியிறங்கிப் பார்த்ததும் நிலவறையின் இரு முனைகளிலும் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பாண்டிய வீரர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். அங்கங்கே சொருகியிருந்த தீப்பந்தங்கள் நிலவறையில் மண்டிக்கிடந்த இருளைப் போக்கியிருந்தன. படியிறங்குகிற இடத்தில் திருமோகூர்க் கொல்லன் இளையநம்பியை வணங்கி வரவேற்றான்.

எல்லாம் நல்ல ஏற்பாடுதான் இரத்தினமாலை! ஆனால் ஒரே ஒரு சந்தேகம். தந்திரமாக வீரர்களையும் ஆயுதங்களையும் கோ நகருக்குள் வரவழைத்து விட்டோம். உபவனத்திலும், அகநகரில் வெள்ளியம்பல மன்றத்தின் தோட்டத்திலுமாக இரு வேறு முனைகளில் இந்த நிலவறைக்குள்ளே இறங்கி வர வழிகள் இருக்கின்றன. எதிர்பாராதவிதமாகக் களப்பிரர்களின் படைகள் இன்றோ, நாளையோ இந்த இரு முனைகளையும் கண்டுபிடித்து உள்ளே இறங்கி இரண்டு பக்கங்களிலிருந்துமே நம்மை வளைத்துத் தாக்குமானால் நாம் என்ன செய்யமுடியும்?” என்று வினவினான் இளையநம்பி. அவனுடைய இந்த வினாவிற்கு ஒரே சமயத்தில் ஒரே விதமான மறுமொழியை இரண்டு குரல்கள் கூறின.

நீங்கள் சொல்கிறபடி செய்வதற்குப் போதுமான வீரர்களோ, ஏற்பாடுகளோ இப்போது களப்பிரர்களிடம் அக நகரில் இல்லை. தவிர இந்த இரு முனைகளிலும் யாத்திரீகர்கள்போல் தங்கி நம்மவர்கள் நூற்றுக்கணக்கில் நிலவறை வழிகளைப் பாதுகாத்து வருகிறார்கள் என்று இரத்தினமாலையும் கொல்லனும் ஏகக் காலத்தில் கூறவே, இந்த ஏற்பாட்டை அவர்கள் மிகவும் திட்டவட்டமாக முனைந்து செய்திருக்கிறார்கள் என்பது இளையநம்பிக்கு விளங்கியது.

பெரியவர் எங்கே இருக்கிறார் என்பதை இப்போதாவது சொல்லமுடியுமா அப்பனே?”என்று இளைய நம்பி கொல்லனை அணுகிக் கேட்டான். கொல்லன் முதலில் மெல்லச் சிரித்தான். பின்பு சில கணங்கள் கழித்து,

 

பொறுத்தருள வேண்டும் ஐயா! இதை அறிவதற்கு இனிமேல் தாங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய திருக்காது. ஒருவருக்கொருவர் மறைந்தும் மறைத்தும் வாழ நாளை உருவாக்கி வரும் பாண்டியர் பேரரசில் இடம் இருக்காது என்றான். இந்த மறுமொழியைக் கொல்லன் தன்னிடம் கூறிக்கொண்டிருந்தபோது மறைந்தாற்போல அவனருகே ஒட்டிக்கொண்டு நின்ற குறளனின் உருவத்தை இளையநம்பி பார்த்து விட்டான். உடனே வியப்படைந்த அவன், ''அடே இந்தத் தம்பி இங்கே எப்படி வரமுடிந்தது? இவன் தென்னவன் மாறனை மீட்பதற்கு அழகன் பெருமாளுடன் சென்ற குழுவில் அல்லவா இருந்தான்?” என்று கேட்டான். உடனே, குறளன் முன்னால் வந்து நடந்ததை ஆதியோடு அந்தமாக இளையநம்பிக்குச் சொன்னான். அவன் கூறியதை யெல்லாம் கேட்டு விட்டு, “நடுவூர் வசந்த மண்டபத்தில் நீங்கள் தப்பிய கரந்துபடை வழியெல்லாம் இவ்வளவு நாட்களுக்குப்பின் இன்னும் உனக்கு நன்றாக நினைவிருக்கிறது அல்லவா? மறுபடி ஒரு காரியம் நேருமானால் அவற்றை நீ அடையாளம் காண்பிக்க இயலுமா?” என்று வினவினான் இளையநம்பி. சிறிதும் தயங்காமல், ‘இயலும் என்று உடனே மறுமொழி கூறினான் குறளன். கொல்லனிடம் காராளர் குடும்பத்தைப்பற்றி விசாரித்தான் இளைய நம்பி. காராளர் குடும்பத்தோடு வட திசையிலும், மேற்கேயும் தீர்த்த யாத்திரை போயிருப்பதைக் கூறினான் கொல்லன். அதைக் கேட்டு இளையநம்பிக்கு ஆச்சரியமாக இருந்தது. நாடும், பாண்டியர்களும் இவ்வளவு சிரமமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இந்த வேளையில் காராளர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படித் தீர்த்தயாத்திரை போகத் துணிந்தார் என்று சிந்தித்தான் அவன். காராளரைப் பற்றியும், அவர் மகளைப் பற்றியும், வேறு அந்தரங்கச் செய்திகளையும் இளையதம்பி கொல்லனிடம் கேட்க முடியாமல் இரத்தினமாலை அங்கே உடன் இருந்தாள். கொல்லனுக்கும் இளையநம்பியிடம் மட்டும் தனியே தெரிவிக்கச் சில செய்திகள் இருந்தன. ஆனால், இருவர் விருப்பமும் நிறைவேற முடியாமல் இருந்தது. அந்த நிலையில் கொல்லன் ஒரு தந்திரம் செய்தான்.

ஐயா! தங்களுக்கு மறுப்பில்லை என்றால் நிலவறையின் மறுகோடி வரை உள்ள நம் படைக் கலன்களையும், வீரர்களையும் பார்த்து வரலாம். இந்த வீரர் குழு செயற்படும் போது தங்கள் தலைமையில் செயற்பட வேண்டும் என்பது பெரியவர் கட்டளை என்று இரத்தினமாலைக்கு ஒரு சிறிதும் சந்தேகம் தோன்றாதபடி இளையதம்பியை நிலவறையின் மறுகோடிக்குத் தன்னோடு தனியே வருமாறு அழைத்தான் கொல்லன். அதேநேரத்தில் இரத்தினமாலையும் அதை இயல்பாக வரவேற்று,

ஐயா! நீங்கள் இருவரும் பேசி ஆகவேண்டிய காரியங்களைக் கவனியுங்கள். நான் மேலே மாளிகைக்குள் போய் இவர்கள் அனைவரும் வயிறார உண்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன்என்று கூறிவிட்டுப் படியேறிச் சென்றாள். பேசிக் கொண்டே நிலவறையில் நடந்து சென்ற இளைய நம்பியும், கொல்லனும் படை வீரர்கள் கூட்டத்தை எல்லாம் கடந்து தனியானதொரு பகுதிக்கு வந்திருந்தனர். அதுவரை ஆவலை அடக்கியவாறு நடந்து வந்திருந்த இளையநம்பி கொல்லனைக் கேள்வி மேல் கேள்வியாகத் தொடுத்துக் கேட்டான்,

காராளர் எதற்காக இப்போது பார்த்துத் தீர்த்த யாத்திரை போக வேண்டும்? நல்ல சமயத்தில் அவர் இப்படி விட்டு விலகிப் போகலாமா?” என்று இளையநம்பி கேட்டதற்கு,

ஐயா! அவரை இப்போது தீர்த்த யாத்திரைக்குப் போகச் சொல்லிக் கட்டளை இட்டதே நம் பெரியவர்தான்! ஏதோ ஒரு தீர்மானத்தோடுதான் அவர் அனுப்பப்பட்டிருக் கிறார் என்று கொல்லனிடமிருந்து மறுமொழி வந்தது. அடுத்த கேள்வியை இளையநம்பி கேட்டதற்கு கொல்லன் அந்தக் கேள்வியை என்னவாக இருக்கும் என்பதைக் குறிப்பறிந்து தானே மறுமொழி கூறினான்:

ஐயா! தங்களைக் காணவும் முடியாமல், தங்களிடமிருந்து ஓலையும் பெற முடியாமல், காராளருடைய மகள் செல்வப்பூங்கோதை மிகவும் ஏங்கிப் போய் விட்டாள். என்னைக் காண நேரும்போதெல்லாம் தங்களிடம் இருந்து ஏதாவது செய்தி கிடைக்கலாம் என்ற தவிப்புடன் அவள் என்னெதிரே வந்து கண்களில் நீர்நெகிழ நிற்பது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது.”

சென்ற முறை நீ அந்த மடலைக் கொண்டு வந்து கொடுத்ததற்குப் பதிலாக நான் அனுப்பிய சந்தனத்தையும், தாழம்பூ மடலையும் நீ அங்கே கொண்டு போய்ச் சேர்த்தாய் அல்லவா?”

என்ன கேள்வி கேட்டீர்கள் ஐயா? அவற்றை நான் அங்கே கொண்டு போய்ச் சேர்த்திருக்காவிட்டால் அந்தக் கொடி உடலில் இத்தனை காலம் உயிர் தங்கியிருக்கவே முடியாமற் போயிருக்கும்...”

இளையநம்பிக்கு இதைக் கேட்டுச் சில கணங்கள் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் திக்பிரமை பிடித்துப் போய் இருந்தான். தன்னால் ஆறுதல் சொல்ல முடியாத ஒர் ஏக்கம் அப்போது தன் தலைவனைத் துன்புறுத்துவது கொல்லனுக் குப் புரிந்தது. அவனும் எதுவுமே சொல்லத் தோன்றாமல் தலைகுனிந்து நின்றான். ஒரு பேதைப் பெண்ணின் காரணமாக எவ்வளவு பெரிய வீரனும் நிலை குலைந்து ஏங்கி நின்று விடுகிற உணர்வைக் கொல்லன் வியந்தான். அடுத்த சில கணங்களில் கொல்லன் தன் நிதானத்துக்கு வந்தான்.

ஐயா! முதலில் தாங்கள் அடியேனை இந்தக் கால தாமதத்துக்காகப் பொறுத்தருள வேண்டும். காராளர் தீர்த்த யாத்திரை புறப்படுவதற்கு முந்திய தினம் மாலை இந்த ஓலைகளைத் தங்களிடம் சேர்த்துவிடும்படி செல்வப் பூங்கோதை எளியேனிடம் சேர்ப்பித்திருந்ததன் காரணமாக இதைத் தங்களிடம் இவ்வளவு நாள் கழித்துத் தர நேரிடுகிறது என்று கூறியபடியே அந்த ஓலைகளை எடுத்து இளையநம்பியிடம் கொடுத்தான் கொல்லன்.

 

இன்னும் சிறிது முன்பாகவே இதை நீ என்னிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் நீ மிகக் கொடிய தாமதக்காரன் என்றான் இளையநம்பி.

என் தவறு இதில் எதுவும் இல்லை! கணிகை மாளிகைத் தலைவியை அருகில் வைத்துக் கொண்டு இந்த ஓலையைத் தங்களிடம் தரவிரும்பாமலே இன்று காலம் தாழ்த்தினேன் என்று கொல்லனும் அதற்கு உரிய மறுமொழி சொன்னான். கைக்குக் கிடைத்த செல்வப் பூங்கோதையின் ஓலையைப் பிரிப்பதற்கு முன் கொல்லனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே இளையநம்பி அவனை ஒரு கேள்வி கேட்டான்:

நான் கோநகருக்குள் வந்த நாளிலிருந்து இங்கே இப்படி இந்தக் கணிகை மாளிகையில்தான் தங்கியிருக்கிறேன் என்பது செல்வப் பூங்கோதைக்குத் தெரியுமா?”

தெரியுமா, தெரியாதா என்பதை நான் அறிய மாட்டேன். ஆனால், என் வாயினால் அதைத் தெரிய விடவில்லை என்பதை மட்டுமே நான் உறுதி கூற முடியும் என்றான் கொல்லன். அவனுடைய சாதுரியமான மறுமொழியை உள்ளூற வியந்து கொண்டே இளையநம்பி அவனை மேலும் கேட்டான்;

தென்னவன் மாறனுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிப் பெரியவர் என்ன எண்ணுகிறார்?”

அதை நான் அறிய முடியவில்லை ஐயா! ஆனால், பெரியவரின் துயரங்களோ, மகிழ்ச்சிகளோ மிகவும் ஆழமானவை. மேலோட்டமாகத் தெரியாதவை. திருமோகூருக்கு வந்து சேர்ந்தவுடன் தென்னவன் மாறனுக்குப் பெரியவர் கூறியிருந்த அறிவுரைகளின்படி மட்டும் அவர் நடந்து கொண்டிருப்பாராயின் இப்படிச் சிறைப்பட்டிருக்கவும் கழுவேறவும் நேரவே நேர்ந்திருக்காது. தென்னவன் மாறனின் உணர்ச்சி வேகமும் முன்கோபமுமே அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டன. தாங்களும் அப்படி உணர்ச்சி வசப்பட்டு எங்காவது அகப்பட்டுக் கொண்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான், இங்கே இந்தக் கணிகை மாளிகையை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் எங்கேயும் வெளியேறி விடக்கூடாது என்று தங்களுக்குத் திரும்பத் திரும்ப வற்புறுத்திச் சொல்லி அனுப்புகிறார் பெரியவர். ‘கை கால்களைக் கட்டிப்போட்டு ஒரே இடத்தில் சிறை வைத்ததுபோல் ஆக்கிவிட்டாரே என்று தங்களுக்குக் கூடப் பெரியவர் மேல் மனத்தாங்கல் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் பெரியவர் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் தாங்கள் எங்கெங்கோ எத்தனை எத் தனையோ அபாயங்களில் சிக்கிக்கொள்ள நேர்ந்திருக்கும் என்று ஒரளவு விரிவாகவே இளையநம்பிக்கு மறுமொழி கூறினான் கொல்லன்.

காராளர் தீர்த்தயாத்திரை புறப்பட்டு எவ்வளவு காலமாயிற்று?” என்று இளைய நம்பி வினாவியபோது, “ஐயா அவர் யாத்திரை புறப்பட்டுப் போய் அதிக நாட்களாகிவிட்டன. அதனால்தான் இந்த மடலைத் தங்களிடம் இவ்வளவு காலந்தாழ்த்திச் சேர்ப்பதைப் பொறுத்தருளுமாறு முதலிலேயே கூறினேன் என்றான் கொல்லன். அவ்வளவில் கொல்லனிடம் உரையாடுவதை நிறுத்திக் கொண்டு சந்தனமும், பூக்களும், இளம்பெண்கள் மேனிக்குப் பூசிக்கொள்ளும் நறுமணச் சுண்ணமும் மணக்கும் அந்த ஓலைக் கற்றையைப் பிரித்தான் இளையநம்பி. அவன் அந்தரங்கமான அவ்வோலையைப் படித்து அறியும்போது தான் அருகில் நின்று அவனுடைய தனிமைக்கு இடையூறாகி விடலாகாது என்று கருதியும் திடும் என்று இரத்தினமாலை அங்கே வந்து விடாமல் கண்காணித்துக் கொள்ள நினைத்தும் விலகி நடந்து சென்று நிலவறையிலிருந்து கணிகை மாளிகைக்குப் படியேறுகிற இடத்தில் நின்று கொண்டான் கொல்லன். தான் நின்ற இடத்தின் பக்கச் சுவரில் சொருகியிருந்த தீப்பந்தத்தின் கீழேபோய் அந்த ஒலையைப் படிக்கலானான் இளையநம்பி. 

 

6. கடுங்கோன் ஆகுக!

 

 

இளைய நம்பிக்குச் செல்வப் பூங்கோதை எழுதியிருந்த அந்த ஓலை கோபத்தோடும் தாபத் தோடும் தொடங்கியது. அதில் கோபம் அதிகமா, தாபம் அதிகமா என்று பிரித்துக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில் அந்த மடலில் தொனித்த கோபத்திலும் தாபம் கலந்திருந்தது. அதே போல் தாபத்திலும் கோபம் கலந்திருந்தது. ஒர் அழகிய இளம் பெண்ணின் கோபத்தில் அதன் மறுபுறமுள்ள தாபங்களே அதிகம் தெரியமுடியும் என்பதைத்தான் செல்வப் பூங்கோதையின் சொற்கள் காட்டின.

திருக்கானப்பேர் நம்பிக்கு அடியாள் செல்வப் பூங்கோதை வரையும் இந்த மடலை அவர் நலத்தோடும் நல்லுறவோடும் காணட்டும். தாங்கள் இந்தப் பேதையை நினைவு வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, தங்களை நித்தியமாகவும் நிரந்தரமாகவும் நினைவு வைத்துப் போற்றுவது இப் பேதையின் கடமையாகி விட்டது. திருமோகூரில் இருந்தாலாவது கொல்லன் எதிர்ப்படுகிற போதெல்லாம் நேராகவோ, குறிப்பாகவோ, தங்களைப்பற்றி விசாரித்து அறிய முடியும். இன்னும் சில திங்கள் காலத்துக்குத் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்று பெரியவர் இட்ட கட்டளையை மேற்கொண்டு நாளைக் காலையில் பிரம்மமுகூர்த்தம் கழிவதற்குள் மங்கல நேரத்தில் தந்தையும் தாயும் அவர்களோடு நானும் யாத்திரை புறப்படுகிறோம். இனிமேல் தங்களைப் பற்றி ஆவல் தீரக் கேட்டறியவோ, விசாரிக்கவோ கூட என்னருகே மனிதர்கள் இல்லை. தந்தையிடம் நானாக வலியச் சென்று தங்களைப்பற்றிப்பேச முடியாது. தாயிடம் பேசினால் அவள் சந்தேகப்படுகிறாள். என் உணர்வுகளைப் பெற்ற அன்னையிடம் கூட நான் பூரணமாகக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் ஊருக்கு நீங்கள் வழிப்போக்கராகப் பிரவேசித்த முதல் தினத்தன்று நீங்கள் என்னை ஊமை என்பதாகக் கூறி ஏளனம் செய்தீர்கள். அப்போது அன்று நான் காரியத்திற்காக ஊமையாக நடிக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் உங்களைப்பற்றிப் பேசவோ, விசாரிக்கவோ, அருகில் யாருமே அந்தரங்கமானவர்கள் இல்லாத காரணத்தால் நான் உண்மையிலேயே ஊமையைப் போலாகிவிட்டேன். வாய் திறந்து நான் பேசும் எதுவும் உங்களைப் பற்றிய பேச்சாகவே இருக்க வேண்டுமென்று தவிப்பதால் வேறெதையும் நான் பேச முடியவில்லை. செவிகளால் கேட்க முடிந்த எதுவும் உங்களைப்பற்றிய நற்செய்திகளாகவே இருக்க வேண்டும் என்று தவிப்பதால் வேறெதையுமே நான் கேட்க முடியவில்லை. உங்கள் மேற்கொண்ட காதல் இப்படி என் பொறி புலன்களின் இயக்கத்தைக்கூட ஒடுக்கி விட்டது. தாபத்தில் உருகுகிறேன். கோபத்தில் உங்களைச் சபித்துவிட வேண்டும் போல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. தாபமும் கோபமுமே என்னைக் கொல்கின்றன.

என் வரையில் நீங்கள் ஒரு சிறிதும் கருணை இல்லாதவர்! பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள் தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமை யாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப்பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடிசூடி அரியணை ஏறும் காலத்தில் இந்தச் சிறப்புப்பெயர்களும் குடிப்பெயர்களும் அவர்கள் இயற்பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும் கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடிசூட்டு விழாக்காலத்துப் பெயர் மங்கலமாக எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால் ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக்கடுங்கோன் என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். ‘பிரியத்துக்குரிய நீயே இப்படிச் சாபம் கொடுப்பது போல் என்னை அழைக்கலாமா? என்பதாக உங்களுக்கு இந்த இடத்தைப் படிக்கும்போது அடியாள் மேல் சினம் தோன்றலாம். என் வரையில் இளங்கோவாக நடந்து கொள்ளாத உங்களைக் கடுங்கோனாக வர்ணிப்பதே பொருந்தும் என்று நான் நினைத்தால் அதில் பிழை என்ன? எந்தப் பேரரசை மீட்பதற்காக நீங்கள் ஓர் எளிய வழிப்போக்கனைப் போல் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தீர்களோ அந்தப் பேரரசை மீட்கும் முதல் ஒற்றையடிப் பாதையை உங்களுக்குக் காட்ட உதவியவள் இந்தப் பேதைதான் என்பதை இதற்குள் நீங்கள் மறந்து போயிருக்க மாட்டீர்கள். அறிந்தோ அறியாமலோ அந்த முதல் வழியை நான் காட்டினேன். சாம்ராஜ்யவாதிகளுக்கு வழிகாட்டும் ஏழைகளுக்கு வெறும் அன்பைக் கூடவா நீங்கள் பிரதி உபகாரமாகத் தரலாகாது? என்னைப் போல் ஏழைகளும், பேதைகளும் அன்பைப் பெறுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களா?

நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர்தான் மென்மையான உணர்வுகளே நெகிழாத கருங்கல்லைப் போன்றவர் என்றால் தாங்களுமா அப்படி இருக்க வேண்டும்? அடியாள் முன்பு கொல்லனிடம் கொடுத்தனுப்பிய மடலை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தாழம்பூ மடலும், சிறிது பொதியை மலைச் சந்தனமும் கொடுத்து விட்டிருந்தீர்கள். ஆனால், அந்தப் பூவும், சந்தனமும் என் கைகளில் கிடைக்கும் போது வாடிப் புலர்ந்து போய்விட்டன. இந்தப் பேதையைப் பொறுத்தவரை தங்கள் அன்பும், பிரியமும்கூட இப்படி வாடிப் புலர்ந்து போய்விடுமோ என்று பயமாகவும், கவலையாகவும் இருக்கிறது. கவலையும், பயமும், தவிப்பும், தாபமும் எல்லாமே எனக்குத்தான். தங்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. மிகவும் சுகமாகவும், பாதுகாப்பாகவும், எல்லாவிதமான உபசாரங்களுடனும், தாங்கள் கோநகரில் இருந்து வருகிறீர்கள் என்று கொல்லனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதோடு, கொல்லன் என் உள்ளத்தில் பொறாமையேற்படும்படியான இன்னொரு செய்தியையும் என்னிடம் சொன்னான். ‘அம்மா! இங்கே இந்தக் காராளர் பெருமாளிகையில் தாங்கள் இடைவிடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால் அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ அப்படிக் கவனித்துக் கொள்கிற வர்களோடு அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார் - என்பதாகக் கொல்லன் என்னிடம் சொல்லியபோது, கோநகரத்தில் உங்களை அப்படி அருகிருந்து பேணி உபசரிப்பவர்கள் யாரோ அவர்கள் மேல் எனக்குப் பொறாமை தாங்க முடியவில்லை. உடனே, நான் பொறுக்க முடியாத கோபத்தோடு,

இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே! இந்தத் திருமோகூர் மாளிகையில் நான் அவரைக் கவனித்துப் பேணிப் பாதுகாத்து உபசரிப்பதுபோல் வேறு எங்கும், வேறு எவராலும் என்றும் உபசரித்துவிட முடியாது. உன் ஒப்புமையே தவறானது. நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை மிக மிகத் தவறானது - என்று கொல்லனைக் கடிந்து கொண்டேன். நீங்களே சொல்லுங்கள். உங்களிடம் இந்தப் பேதை கொண்டாட முடிந்த உரிமையை இன்னொருவரும் கொண்டாட முடியும்படியான இடத்திலேயா தாங்கள் வாழ்கிறீர்கள்? மறுபடி திருமோகூர் மண்ணில் தங்கள் பாதங்கள் பதியும் நாள் எப்போது வரும் ஐயா? இங்கு ஒருத்தி தங்களை நினைத்துத் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பதாவது தங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா?

தீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு எப்போது மீண்டும் திருமோகூர் திரும்புவோம் என்பதைத் தந்தையார் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. நான் தொழ வேண்டிய தெய்வம் மதுரையில் இருக்கிறது. என் பெற்றோர் வேறு எங்கேயோ இருக்கும் பலப்பல தெய்வங்களைத் தொழுவதற்காக என்னை அழைத்துப் போகிறார்கள். என்னுடைய தெய்வத்தின் கடுங்கோன்மை தவிர்த்து அதன் அருளை என்றைக்கு நான் அடையப்போகிறேனோ தெரிய வில்லை. தங்களைக் கடுங்கோன் என்று கூறியதற்காகப் பெருந்தன்மையோடு இந்த எளியவளைப் பொறுத்தருள வேண்டும். அப்படி ஒரு சாபமே கொடுக்கிற அளவிற்குத் தாங்கள் என்னைத் தவிக்க விட்டிருக்கிறீர்கள் என்பதைத் தான் தங்களுக்கு இந்தப் பேதை சூட்டியிருக்கும் மென்மையும் இங்கிதமில்லாத புதிய பெயர் குறிப்பிடுமே ஒழிய அகங்காரத்தைக் குறிப்பிடாது. என் அகங்காரங்களை நான் உங்களிடம் பறிகொடுத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்பதைத் தாங்களே நன்கு அறிவீர்கள். இவ்வளவில் இப்போது தங்கள் பாதாரவிந்தங்களில் மானசீகமாக வீழ்ந்து வணங்கி இந்த மடலை முடிக்கிறேன். முடிவாக ஒரு வார்த்தை-நானும் பெற்றோர்களும் தீர்த்த யாத்திரை முடித்து திரும்பும்போது நீங்கள் வெற்றிவாகை சூடி நிற்கப் போகிறீர்கள்! நாங்கள் திரும்பி வந்து அதைக் காணத்தான் போகிறோம்.”

- என்பதாக முடிந்திருந்தது அவள் மடல். பல ஓலைகளில் எழுதி இணைத்து சிறிய சுவடியாகவே ஆக்கி அனுப்பியிருந்தாள் செல்வப் பூங்கோதை, இந்த மடல் இளையநம்பியின் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்திருந்தது.

பெண்ணே நீ என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப்போல் என்மேல் அன்பு செய்யும் பெண்களிடம் நான் ஒருபோதும் கடுங்கோனாக ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளமாட்டேன் என்று அந்த ஓலையைப் படித்த உணர்ச்சிப் பெருக்கில் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன்.

ஓலையைப் படித்து முடித்த இன்பக் கிளர்ச்சி களிலிருந்து அவன் முழுமையாக விடுபடுவதற்குள் கொல்லன் விரைந்து வந்து மேலும் ஒரு செய்தியைக் கூறினான்:

ஐயா மற்றொரு நல்ல செய்தியைத் தூதன் இப்போதுதான் கொண்டு வந்தான். நம்முடைய இந்த அணிவகுப்புக்கும், ஏற்பாட்டிற்கும் சாதகமான ஒரு செயல் வட திசையில் இப்போது நடந்திருக்கிறது.”

 

7. இரு வாக்குறுதிகள்

 

படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு விளங்கி வந்த பாண்டிய மரபு மீண்டும் தலையெடுக்கும், என்று நம்ப முடிந்த நற்செய்தி முதலில் வடதிசையிலிருந்து திருமால் குன்றத்துக்கு வந்து அங்கிருந்து ஓர் ஆபத்துதவி மூலம் கணிகை மாளிகைக்குச் சொல்லி அனுப்பப்பட்டிருந்தது. திருமால் குன்றத்திலிருந்து வந்திருந்த ஆபத்துதவியிடமிருந்து செய்தியை அறிந்தவுடன் முதலில் அந்த ஊக்கமளிக்கும் செய்தியை இளையநம்பியிடம் தெரிவிப்பதற்கு ஓடோடி வந்திருந்தான் கொல்லன். அவன் மகிழ்ச்சியோடு கூறலானான்:

 

ஐயா! களப்பிரர்களை எதிர்த்து வடதிசையில் பல்லவ சைனியம் படையெடுத்து வந்திருக்கிறது. வெள்ளாற்றங் கரையில் வந்து தாக்குதலைத் தொடங்கி விட்டார்கள் பல்லவர்கள். இன்னும் சில நாட்களில் தெற்கு முனையிலோ தென் மேற்கு முனையிலோ சேர நாட்டுப் படைகளும் களப்பிரர்களை எதிர்த்துத் தாக்குதலைத் தொடங்கிவிடும். போரை எதிர்பாராவிடினும் களப்பிரர்கள் தங்களிடம் இருக்கும் முழுமையான படை பலத்தை இரு கூறாக்கி ஏற்கெனவே இந்த இரு முனைகளிலும் நிறுத்தியுள்ளனர்.”

ஆகவே, களப்பிரர்களை எதிர்த்து மூன்றாவது முனைத் தாக்குதலாகப் பாண்டியர்களாகிய நாம் உட்புக இருக்கிறோம்...”

ஆகவே போரைத் தொடங்கினால் நமக்கு வெற்றி உறுதி என்கிறாய்!”

அதில் சந்தேகம் என்ன ஐயா? நம் பெரியவர், காராளரைத் தீர்த்த யாத்திரை அனுப்பியபோதே இந்தத் திட்டத்தை மனத்திற் கொண்டுதான் அனுப்பியிருப்பார்.”

இம்முறை நாம் தோற்க முடியாது. தோற்கக் கூடாது என்று குரலில் உறுதி பொங்கக் கூறினான் இளையநம்பி. இப்போது ஓர் அரிய உண்மை அவனுக்கு நன்றாகப் புலப்படத் தொடங்கியது. காராளரைப் பெரியவர் தீர்த்த யாத்திரை என்ற பெயரில் அனுப்பி வைத்த பயணத்தின் மாபெரும் அரசியல் சாதனைகள் சிறிது சிறிதாகப் புரிந்தன. அந்த அரச தந்திரப் பயணத்தை முதலில் தவறாக எண்ணியதற்காக உள்ளூற வருந்தி வெட்கப்பட்டான் அவன். அவருடைய தீர்த்த யாத்திரையின் பயனால் மாபெரும் பாண்டிய நாடே களப்பிரர் கொடுங்கோலாட்சியில் இருந்து விடுதலை பெறப்போகிறது என்பது இளையநம்பியின் மனத்தில் தெளிவாயிற்று. மங்கல நேரம் பார்த்து நல்ல நிமித்தம் தேர்ந்து பாட்டனார் திருக்கானப்பேரில் இருந்துதன்னை நீண்ட நாட்களுக்கு முன்பு எதற்காக விடை கொடுத்து வழியனுப்பி வைத்தாரோ, அந்த நன்னோக்கம் நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திருக்கானப்பேர்க் காட்டில் அஞ்ஞாத வாசம் போல மறைந்து வாழும் பாட்டனாருக்கோ பிறருக்கோ இந்தத் திருப்பங்களும் மாறுதல்களும், அதிகமாகத் தெரிந்திருக்கக் கூட முடியாது என எண்ணினான் அவன்.

இருந்தாற்போலிருந்து வேறு ஏதோ ஞாபகம் வந்தவன் போல், “அழகன் பெருமாள் முதலியவர்களோடு களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருந்து நடுவே தப்பி வந்த அந்தக் குறளனைப் பத்திரமாக நம்மோடு இருக்கச் செய்யுங்கள். பல காரியங்களில் அவனுடைய உதவி நமக்கு வேண்டிய தாயிருக்கும்...” என்று இளையநம்பி, கொல்லனிடம் நினைவூட்டினான். வெற்றிக்குப் பின்பு நிகழ வேண்டிய உண்டாட்டு விழாவோ பெருஞ்சோற்றுக் கொண்டாட்டமோ முன்னதாகவே கொண்டாடப்பட்டது போல் அன்றிரவு கணிகை மாளிகையில் அந்த வீரர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தாள் இரத்தினமாலை. அன்றிரவு அவர்கள் நெடுநேரம் உறங்கவில்லை. வீரர்களின் வாள் போர்த்திறன், ஈட்டி எறிதல், வேல் எறிதல், வில்லை நாண் ஏற்றி அம்பு செலுத்துதல் ஆகியவற்றைத் தானே முன் நின்று பரிசோதித்துத் திருப்தி அடைந்தான் இளையநம்பி. அவனே ஒரு சோதனைக்காகக் கொல்லனோடு வாட்போர் செய்து, தன் திறமையையும் சோதித்துக் கொண்டான். வடக்கேயும், தெற்கேயும், படை எடுத்து வந்திருப்பவர்களோடு களப்பிரர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பாண்டிய நாட்டு மக்களின் ஆதரவோடு அரசைக் கைப்பற்றிவிட முடியும் என்ற உறுதி இளையநம்பிக்கு இருந்தது. பல்லாண்டுக் காலமாகப் பாண்டிய நாட்டு மக்களை இந்த உள் நாட்டுப் போருக்கு அந்தரங்கமாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார் பெரியவர். தேசபக்தி என்ற மூலக் கனல் அறவே அவிந்து பாண்டிய மக்கள் அடிமைகளாகி அடிமைத்தனத்தையே ஏற்றுக் கொண்டு விட்டதாகக் களப்பிரர்கள்தான் தப்புக் கணக்குப் போட்டிருந்தார்களே ஒழிய, அந்த மூலக் கனல் இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருந்தது. தொடர்ந்து சில நாட்களாகக் கோட்டையையும், அகநகரையும் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகளைச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் அவர்கள்.

நாலைந்து நாட்கள் கழித்து ஒர் இரவில் மீண்டும் பெரியவரிடமிருந்து ஒரு தூதுவன் இவர்களைத் தேடி வந்தான். அவன் கொண்டு வந்திருந்த ஓலையும் பொருள்களும் வெற்றி நம்பிக்கையை உறுதிப்படுத்துவன வாயிருந்தன.

திருக்கானப்பேர் நம்பிக்கு நல்வாழ்த்துக்களுடன் வரையும் ஓலை. காலம் நமக்கு இசைவாகக் கனிந்து வருகிறது. நான் அறிந்த வரையிலும் அங்கங்கே உள்ள நம் ஒற்றர்கள் சொல்லியனுப்பியிருக்கும் செய்திகளின் படியும் அடுத்த பெளர்ணமிக்குள் மதுரைக் கோட்டையில் நெடுங்காலத்திற்குப் பின் நமது மீனக் கொடியைப் பறக்க விட முடியும் என்று தெரிகிறது. கோட்டைக்குள்ளும், கோநகரி லும், உள்நாட்டின் பிற பகுதிகளிலும், அந்தப் பழைய அவிட்டநாள் விழாவின்போது இருந்த அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் களப்பிரர்களால் இப்போது செய்ய முடியவில்லையாம். எல்லா வீரர்களையும், படைபலத்தையும் அவர்கள் எல்லைகளில் குவித்து விட்டார்களாம். என்னைச் சந்திப்பதற்காக மாறோகவள நாட்டுக் கொற்கையிலிருந்து இங்கு வந்து திரும்பிய மருதன் இளநாக நிகமத்தானும் இதையே கூறிச் சென்றிருக்கிறான். தென்திசையில், நம் காரியங்களைச் செய்யுமாறு அவனுக்குக் கட்டளை இட்டிருக்கிறேன்.

இன்னும் சில நாட்களிலேயே தென் மேற்கே சேரர்கள் களப்பிரர்களைத் தாக்கத் தொடங்கி விடுவார்கள். அப்போது களப்பிரர்களின் கவனம் முழு அளவில் எல்லைகளைக் காப்பதில் தான் திரும்ப முடியும். அந்தச் சமயத்தில் வளர் பிறைக் காலத்தில் ஓர் இரவில் நீங்கள் கோட்டையைக் கைப்பற்றி நம் மீனக் கொடியை அதிகாலையில் மங்கலமான பிரம்ம முகூர்த்தத்தில் அங்கே ஏற்றிவிட வேண்டும். அநேகமாகக் களப்பிரக் கலியரசன் போர் முனைக்குப் போகமாட்டான் என்று தெரிகிறது. அவன் அரண்மனையில் இருந்தால் அவனை அழிப்பதற்கும் நீங்கள் தயங்க வேண்டியதில்லை. எதிரியை அழிப்பதும் போர் அறங்களில் முதன்மையானது. கோட்டையில் நமது கொடி ஏறிய பின் நான் அங்கு வருவேன். அதற்குமுன் நான் பாண்டிய நாட்டின் எதிர் கால நலனை முன்னிட்டுக் கேட்க இருக்கும் இரண்டு வாக்குறுதிகளைச் சூரிய சந்திரர்கள் சாட்சியாக எனக்கு அளிப்பதாக இவ்வோலை கொண்டு வரும் தூதனிடம் மாற்றோலையாகத் திருக்கானப்பேர் நம்பி வரைந்தனுப்ப வேண்டும். அந்த இருவாக்குறுதிகள் என்ன என்பதை நானே பின்பு நேரில் கூறுவேன். இவ்வோலையோடு முதல் முதலாகக் கோட்டையில் ஏற்றப்பட வேண்டிய மீனக் கொடியையும் நானே எழுதிக் கொடுத்துள்ளேன். கொடியைத் தவிர அரண்மனையில் முதல் முதலாக நுழையும்போது அணிந்து செல்ல வேண்டிய இடைவாளும், உறையும் இதனோடு உள்ளன. இந்த வாளின் நுனியில் வெற்றிகள் குவியும். இந்தவாள் ஒரு பேரரசைப் பல்லாண்டுகளுக்குப் பின்பு மீட்கும் நலத்தை அடையப்போவது என்பதையும் அறிக!' என்று முடிந்திருந்தது அவர் ஓலை.

இளையநம்பி தூது வந்திருந்தவனிடம் இருந்து அந்தக் கொடியையும், வாளையும் பயபக்தியோடு வணங்கிப் பெற்றுக் கொண்டான். இரத்தினமாலையைக் கூப்பிட்டு ஓலையும், எழுத்தாணியும் கொண்டு வரச்சொல்லி வேண்டிப் பெற்ற பின், பெரியவருக்கு மாற்றோலை வரைவதற்கு முன்னால் அவர் கேட்டிருக்கும் அந்த இரு வாக்குறுதிகள் என்னவாக இருக்க முடியும் என்று இளைய நம்பி சிந்திக்க முயன்றான். எவ்வளவோ முயன்றும் அவனால் புரிந்து கொள்ள முடியாதவைகளாக இருந்தன அவை. அதேசமயம் பாண்டிய மரபை ஒளிபெறச் செய்வதற்காகத் தம் வாழ்வையே தத்தம் செய்து கொடுத்திருக்கும் பெரியவரின் வேண்டுகோள் என்னவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதையும் அவன் உணர்ந்தான்.

தேவரீர் திருவடித் தாமரைகளில் அடியேன் இளைய நம்பி தெண்டனிட்டு வணங்கி வரையும் ஓலை. சூரிய சந்திரர்கள் சாட்சியமாகப் பாண்டிய நாட்டின் எதிர்கால நலனை முன்னிட்டுத் தாங்கள் கேட்கும் இரண்டு வாக்குறுதிகளை மறுக்காமலும் மறக்காமலும் நிறைவேற்றுவதாக ஆலவாய் அண்ணல் மேலும், இருந்தவளமுடையார் மேலும் ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன். தாங்கள் எழுதியுள்ள குறிப்புகளின்படியே எல்லாச் செயல்களையும் செய்வேன். தங்கள் நல்லாசியுடன் வந்த மீனக் கொடியையும், இடை வாளையும் வணங்கிப் பெற்றுக் கொண்டேன். ஒளிதிகழும் தங்கள் திருமுக மண்டலத்தைத் தரிசனம் செய்யும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் என்று ஓலையை எழுதி முடித்து வந்திருந்த தூதுவனிடம் கொடுத்தான் இளையநம்பி. தூதன் திரும்பியபின் கொடியையும், வாளையும் இரத்தின மாலையிடம் கொடுத்து, “மீண்டும் நான் கேட்கிற வரை இவற்றைப் பாதுகாப்பாக வைத்திரு என்றான். இரத்தின மாலை அவற்றை வாங்கிச் சென்று உள்ளே வைத்து விட்டுத் திரும்பி வந்தாள்.

ஐயா தாங்கள் வேறுபாடாக நினைக்கவில்லை என்றால் பெரியவர் இன்று இங்கே அனுப்பிய ஓலையில் தங்களுக்கு என்ன எழுதியிருந்தார் என்பதை இந்தப் பேதையும் அறிய ஆசைப்படுகிறேன் என்றாள் அவள்.

 

அந்த ஒலையை அவள் படித்தறிவதில் தவறில்லை என்று கருதிய இளையநம்பி, “நீயே படித்துப்பார் இரத்தின மாலை!” என்று அவளிடமே அதை எடுத்துக் கொடுத்து விட்டான்.

அதைப் படித்ததும் ஏதோ சிந்தனை வயப்பட்டவள் போல் நெடுநேரம் ஒன்றும் பேசாமல் அவனெதிரே அமர்ந்திருந்தாள் அவள்.

இடையிடையே அவள் நெட்டுயிர்ப்பதை இளைய நம்பி கண்டான்.

அந்த ஒலைச் செய்தி அவளுக்கு ஏன் மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளைக் கேட்டான்:

கோட்டையில் மீண்டும் நமது கொடி பறக்கப் போகிறது என்னும் செய்தி உனக்கு ஏன் மகிழ்ச்சியை அளிக்கவில்லை இரத்தினமாலை?”

...”

அவளிடமிருந்து இதற்கு மறுமொழி இல்லை. அவள் கண்களில் ஈரம் பளபளப்பதை அவன் பார்த்தான். அவள் செவ்விதழ்கள் துடித்தன. எதைக் கூறுவதற்கு அவை அப்படித் துடிக்கின்றன என்பதையும் அவனால் உடனே விளங்கிக் கொள்ள முடியவில்லை. தொலை தூரத்தில் இருந்து கேட்கும் சோகம் நிறைந்த ஓர் இன்னிசையைப் போல் மெல்லிய விசும்பல் ஒலியும், விரைந்து மூச்சுவிடும் உயிர்ப்புக்களும் அவள் பக்கமிருந்து அவன் செவிகளில் விழுந்தன. மிகமிகத் திடமானவள் என்றும், ஓரளவு ஆணின் உறுதியுள்ளவள் என்றும் அவன் நினைத்திருந்த இரத்தினமாலை இப்படிப் பேதையாக நெகிழ்ந்ததைக் காணப் பொறுக்காமல் அவன் பதறிப்போனான்.

தன் சொற்களோ, பெரியவரின் அந்த ஓலையிலுள்ள சொற்களோ அவளை எந்த விதத்தில் வருத்தியிருக்க முடியும் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஓர் இதயம் கரைந்து பொங்குவது போன்ற அந்த இனிய விசும்பல், மெல்லிய இசையாக அவன் செவிகளில் நுழைந்து இதயத்தில் பதிந்து வேதனை செய்தது.

 

8. புதிய நிபந்தனை

 

நீண்ட நேரம் வரை அந்த நிலையில் இரத்தினமாலையிடம் அவன் என்ன பேசினாலும் மறுமொழி கிடைக்கவில்லை. அவன் ஏதாவது வினாவினால் அந்த வினாவைக் கேட்டு அவள் விசும்பல் இன்னும் அதிகமாகியது. அழுகை பெருகியது. கடைசியில் அவளைப் பேசவைக்க அவன் ஒரளவு கடுமையான வார்த்தைகளைக் கூறி வினாவ வேண்டியதாகி விட்டது.

 

இரத்தினமாலை! பெண்களைப் பற்றிய ஒரு பேருண்மை இன்றுதான் எனக்குப் புரிகிறது! தங்களால் அன்பு செய்யப்படுகிற ஆடவனுக்கு நல்ல காலம் வரும் போதுகூட அதற்கும் மகிழாமல் அழுவதற்குத் துணிகிற கொடுமையான உள்ளம் பெண்களுக்கு மட்டுமே இருக்கும் போலும்.”

பேதைகளின் உள்ளங்களைக் கோட்டை கொத்தளங்களை மீட்டுக் கொடியேற்றச் செல்லும் மாமன்னர்கள் ஞாபகம் வைத்திருக்கக்கூட முடியாது ஐயா! அரசர்களின் உலகில் இதயங்களை விடக் கோட்டை கொத்தளங்கள் பெரியதாகி விடலாம். ஏற்கெனவே வெற்றி கண்ட ஒரு மனத்தை நாளை வெல்லப் போகும் ஒரு கோட்டையின் வெற்றி - ஞாபகத்தில் அவர்கள் மிக எளிதாக மறந்து போய் விடுவார்கள். அவர்களை நம்பி வலுவில் முன்வந்து அன்பினால் தோற்றவர்களை வென்றதாகக் கூட அவர்களுக்கு நினைவு இருக்காது...”

களப்பிரர்களோடு நான் இன்னும் போரைத் தொடங்கவே இல்லை! அதற்குள்ளேயே நீ உன்னோடு என்னைப் போருக்கு இழுக்கிறாய்! இதுவும் என் தீவினை என்றுதான் சொல்ல வேண்டும்.”

நீங்கள் புரியும் வாதம் பிழையானது உங்களுக்கு முன் மனப்பூர்வமாகத் தோற்று நிற்பவர்கள் உங்களிடமே தொடங்குவதற்குப் போர் எதுவும் இருக்க முடியாது.”

பின் என்ன? இல்லாமலா தொடங்குகிறாய் நீ?”

நான் எதையும் புதிதாகத் தொடங்கவில்லை. ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ அது முடியப் போகிறதே என்றுதான் கண் கலங்குகிறேன்...”

மனப்பூர்வமாகத் தொடங்கும் எதற்கும் முடிவே இல்லை இரத்தினமாலை! அதை முடியவும் விடக் கூடாது...”

பதவிகளும், சுகபோகமும், ஏற்றத் தாழ்வும் உங்களுக்கும் எனக்கும் குறுக்கே மலைகளாக நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள்...”

உண்மை! அவை உன் உடலுக்கும் என் உடலுக்கும் குறுக்கே நிற்கலாம். இதயங்களுக்கு நடுவே எதுவும் குறுக்கே நிற்க முடியுமா?”

பல திங்கள் காலம் உங்களை அன்போடு உபசரிக்கும் பேறு பெற்றதற்காக நான் முன் பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.”

நீ மட்டுமில்லை! நானும்தான்...”

 

ஆனால், இப்போது நாம் பிரியும் நாட்கள் நெருங்குகின்றன என்பதை எண்ணும்போது என்னால் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தவிப்பதை உங்களால் உணர முடியவில்லையா?”

உணராமல் இருப்பதற்கு நானோ என் இதயமோ குருடாகி விடவில்லை. நீ அணிந்த மலர் மாலைகளைத் தாங்கிய தோள்கள் இனி அரச பாரத்தைத் தாங்கப் போகின்றன. என்னுடைய புதிய சுமையை நீ கவலையோடும் அநுதாபத்தோடும் நோக்க வேண்டும். இந்த மாளிகையில் அடைப்பட்டுக் கிடந்த காலத்தில் ஒர் அரச குடும்பத்து இளைஞனுக்கு நீ அளித்த மகிழ்ச்சிகளை இனிமேல் அரியணையில் அமர்ந்திருக்கும் போதோ, போர்க்களங்களில் ஊடாடும் போதோ அவன் அடையமுடியாது...”

என்போல் திருவடித் தொண்டு செய்யும் கணிகைகள் உங்களோடு அரியணையில் ஏறிக் கொலு அமர அரச குலத்து நியாயங்கள் இடம் தரமாட்டா...”

அரசகுல நியாயங்கள் கண் இல்லாதவை! ஆனால், என் இதயத்தில் நீ கொலு வீற்றிருப்பதை எந்த நியாயமும் தடை செய்ய முடியாது...”

நீங்கள் இங்கிருந்து அரண்மனைக்குப் போய்விடுகிற மறுநாளே இந்த மாளிகை சுடுகாடு போலாகிவிடும், அதன் பின் இங்கே மங்கல வாத்தியங்களின் ஒலி எழாது. நறுமணங்கள் இராது. மாலைகளும் சந்தனமும் மணக்காது. விளக்குகள் இருண்டுவிடும். நான் உருகித் தேய்ந்து மாய்ந்து போவேன்...”

நீ உண்மையில் என்னிடம் இதயத்தைத் தோற்ற வளாயிருந்தால் அப்படிச் செய்யக்கூடாது.”

வாழ முடியாதவர்கள் சாவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கப் போகிறது!”

நாயகனைப் போர்க்களத்துக்கு அனுப்பும் தமிழ்ப் பெண்கள் அவன் திரும்பும்வரை அவன் நலத்தோடு திரும்பி வர நோன்பிருக்க வேண்டும்.”

இந்தப் போர்க்களத்தில் என் நோன்பிற்குப் பலன் இராது. நீங்கள் வென்ற மறுகணமே அரியணை என்ற மேட்டில் என் கண்ணுக்கு எட்ட முடியாத உயரத்துக்கு ஓடிப்போய் விடுவீர்கள்.”

மீண்டும் உன்னிடமே திரும்பிவருவேன்! ஆனால் அதுவரை உன் நோன்பின் பலனை எதிர்பார்த்துக் காத்திருக்க உனக்குத்தான் பொறுமை வேண்டும்.”

அப்படி எவ்வளவு காலம் நான் பொறுத்திருக்க வேண்டுமோ?”

அடுத்த பிறவிவரை பொறுத்திருக்க வேண்டும்! இந்தப் பிறவியில் நான் பாழாய்ப்போன அரச குடும்பத்தில் வேறு வழிமுறையினரே இல்லாத ஒற்றைக்கொரு வீரனாகப் பிறந்து தொலைத்துவிட்டேன் பெண்ணே! அரச பாரச்சுமை என்னை இப்போது விடவே விடாது. அந்த அரச குடும்பத்து நியாயங்கள் நீயே கூறியது போல், உன்னை என்னருகே அமரவிடவும் இசையமாட்டா. தயை செய்து இன்னும் ஒரு பிறவி வரை எனக்காக நோன்பிருந்து கழித்துவிடு இரத்தின மாலை! அடுத்த பிறவியில் நான் குழலுதும் கலைஞனா கவோ, யாழ்ப்பாணனாகவோ, ஒரு இன்னிசைக் கவிஞனாகவோ பிறக்கிறேன். அப்போது எந்த நியதிகளும் நம்மைத் தடுக்கமுடியாது என்று கூறிக் கொண்டே வருகையில் இளைய நம்பியின் கண்களிலும் நீர்மல்கி விட்டது. உணர்ச்சிப் பெருக்கில் அவன் சொற்கள் தடைப் பட்டன. அவள் அவன் நெஞ்சில் சாய்ந்தாள். அவளை ஆரத் தழுவி மகிழ்ந்தான் அவன். அவன் கண்ணிர் அவள் தலையில் சிந்தி நனைத்து அவளை மறு பிறவிக்கு அங்கீகரித்துக் கொண்டது.

ஐயா! நீங்கள் பாணனாகவோ, கலைஞனாகவோ, திரும்பி வருவது உறுதியாயின் ஒரு பிறவி என்ன ஆயிரம் பிறவிகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்று அவன் மார்பில் புதைத்த முகத்தை நிமிர்த்திக் கூறினாள் அவள். இந்தச் சொற்கள் இளையநம்பியை மெய்சிலிர்க்கச் செய்தன.

சிறிது நேரம் மன நெகிழ்ச்சியில் எதுவுமே பேச இயலாமல் வாய்ச் சொற்கள் பயனற்ற நிலையில் இளைய நம்பியும் இரத்தினமாலையும் இருந்தார்கள். மீண்டும் இரத்தினமாலைதான் முதலில் உரையாடலைத் தொடங்கினாள்:

ஐயா! நீங்கள் அழகன் பெருமாளுடன் உபவனத்திலிருந்து நிலவறை வழியே இந்த மாளிகைக்கு வந்த முதல் தினம் என்மேல் கடுங்கோபத்தோடும் உதாசீனத்தோடும் இருந்தீர்கள்... அந்த உதாசீனமும் கோபமுமே என்னைப் படிப்படியாக உங்களுக்குத் தோற்கச் செய்தன...”

முதலில் நான் மனம் வேறுபட்டு இருந்தது உண்மைதான் இரத்தினமாலை! ஆனால், உன் அன்பு மயமான உபசாரங்களும் தேனூர் மாந்திரீகன் இங்கே காயப்பட்டு வந்தபோது நீ கருணையோடு அவனுக்குச் செய்த பணி விடைகளும் என் மன வேறுபாட்டை மாற்றிவிட்டன. நீ என்னை மயக்கிவிட்டாய்...”

அது எனக்குத் தெரியாது! நான் உங்களிடம் மயங்கிப் போய் உருகுவதை மட்டுமே என் உணர்வுகள் அறிந்திருக்கின்றன. நீங்கள் என்னிடம் முதலில் மயங்காத உறுதிதான் என்னை உங்கள்பால் விரைந்து மயங்கவைத்தது...”

முன்பு ஒரு முறை நீயே கூறியதுபோல் பெரிய பூக்களைச் சிறிய நாரினால் தொடுப்பதை ஒத்து நீ உன் அன்பினால் நுணுக்கமாக் என்னைக் கட்டிவிட்டாய்...”

கட்டியும் பயனில்லை! அந்தச் சிறிய கட்டை அறுத்துக்கொண்டு பெரிய அரச போகத்தை நோக்கி ஓடிவிடப் போகிறீர்கள் நீங்கள்...”

நான் போகப் போவது உண்மை. ஆனால், நீ கட்டியிருக்கும் மெல்லிய அன்பு நார் அடுத்த பிறவிவரை அறப்போவதில்லை என்று உறுதி கூற ஆயத்த மாயிருக்கிறேன் நான்...”

 

இது மெய்யானால் அடுத்த பிறவி வரை உங்களுக்காக மகிழ்ச்சியோடு நோன்பியற்றிக் காத்திருப்பேன்.”

உன் நோன்பு என்னை எப்போதும் மானசீகமாகப் பாதுகாக்கும் இரத்தினமாலை!”

இதற்குச் சொற்களால் மறுமொழி கூறாமல் பூக்குடலையிலிருந்து ஒரு பெரிய மாலையை எடுத்து வந்து அவன் தோள்களில் சூட்டி அவனுக்குத் திலகமிட்டாள் இரத்தின மாலை. பின்பு தன் கண்களில் வழிந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவனும் புன்னகை புரிந்தான். அவளைத் தழுவிக் கொண்டான்.

இந்தப் பொன்னுடலே எக்காலமும் மாலையைப் போல் என்மேனியில் தீண்டிக் குளிர்விப்பதாக நான் பாவித்துக் கொள்வேன் இரத்தினமாலை என்று அவன் கூறியதை அவள் செவி குளிரக் கேட்டாள். அதன்பின் அன்றும், அதற்கடுத்த நாளும் இணைபிரியாமல் அருகிலிருந்து அவனை உபசரித்தாள் இரத்தின்மாலை. மூன்றாம் நாள் மறுபடி பெரியவரின் தூதன் வந்து தென்மேற்குத் திசையில் சேரர்களும் படையெடுத்து வந்து பாண்டிய நாட்டு எல்லையில் களப்பிரர்களைத் தாக்கத் தொடங்கி விட்டதாகத் தெரிவித்து விட்டுச் சென்றான்.

அகநகரையும் கோட்டையையும் இளையநம்பி கைப்பற்றுவதற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. கொற்கை மருதன் இளநாக நிகமத்தானின் உதவியால் அங்கங்கே இருந்த பாண்டிய வீரர்களுக்குப் போதுமான புதிய குதிரைகள் வந்து சேர்ந்திருந்தன.

இதற்கு இடையே கொல்லனும், இளையநம்பியும் கணிகை மாளிகையின் கீழே நிலவறையில் தனியே சந்தித்துக் கொள்ளக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தின் போது, “நான் இங்கே மிகவும் சுகமான உபசரிப்புக்களோடு நல்லதொரு பெருமாளிகையில் கவலையின்றி இருக்கிறேன் என்பது போன்ற கருத்துப்படக் காராளர் மகளிடம் கூறியிருக்கக் கூடாது. அது வீணாக அவள் மனத்தில் இல்லாத சந்தேகங்களை எல்லாம் உண்டாக்கியிருக்கிறது என்பதையே அவள் ஒலை காட்டுகிறது என்று கொல்லனைக் கடிந்து கொண்டான் இளையநம்பி.

ஐயா! நான் அப்படிக் கூறாவிட்டாலும் அகநகரில் நீங்கள் மிகமிகத் துன்பப்படுவதாக எண்ணி அவள் தவிக்க நேரிட்டு விடும். குறிப்பிட்டு எதையும் கூறாமல் பொதுவாகவே நான் அதைச் சொல்லி விட்டு வந்தேன் என்று மறுமொழி கூறினான் கொல்லன்.

நான்காம் நாள் பெரியவரிடம் இருந்து வந்த தூதன் கொண்டு வந்திருந்த கட்டளை ஓலையில் இளையநம்பி முதலியவர்கள் நிலவறை வழியே கோட்டையைக் கைப்பற்றிக் கொடியேற்றுவதற்குப் புறப்பட வேண்டிய நாள், நேரம், செயற்பட வேண்டிய முறைகள், உபாயங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தார் பெரியவர். ஓலையின் முடிவிலே ஒரு புதிய செய்தியும் இருந்தது. அதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்துப் புரிந்து கொள்ள முயன்றான் இளையநம்பி.

தீர்த்த யாத்திரை முடிந்து காராளர், மனைவியோடும் மகளோடும் திருமோகூர் திரும்பி விட்டார். களப்பிரர்களிடம் இருந்து பாண்டிய நாட்டை மீட்கும் முயற்சிக்கு உறுதுணையாகப் பல்லவர்களை வடக்கு எல்லையிலும் சேரர்களைத் தென்மேற்கு எல்லையிலும் தாக்குதல் தொடங்கச் சொல்லி உதவி கேட்டுத்தான் தீர்த்த யாத்திரை என்ற பெயரில் காராளரை அனுப்பியிருந்தேன். ஏற்கெனவே பல்லவர்கள் களப்பிரர்களைத் தமிழ் நாட்டிலிருந்து விரட்டும் எண்ணம் கொண்டிருந்ததால் நமது வேண்டுகோளை ஒரு நிபந்தனையுமின்றி உடனே ஏற்று விட்டார்கள். ஏற்றதற்கு அடையாளமாக வடக்கு எல்லையில் வெள்ளாற்றங்கரையில் அவர்கள் படை களப்பிரர்களை எதிர்த்து வந்து போர் முரசு கொட்டிவிட்டது. ஆனால், தென்மேற்கே நமக்கு உதவ வந்துள்ள சேர வேந்தன், இப்போது ஏறக்குறைய ஒரு சிற்றரசனின் நிலையில் இருந்தாலும் நமக்கு இந்த உதவியைச் செய்ய ஒரு நிபந்தனை இட்டிருக்கிறான். அதை இப்போதே உன்னிடம் கூற எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால், வேறு வழி இல்லை. அந்த நிபந்தனைக்கு உன் சார்பில் நான் இணங்கி விட்டேன். என் பொருட்டு நீயும் அதற்கு இணங்கியே ஆகவேண்டும். நாம் அரசைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடும்போது அந்த நிபந்தனை என்ன என்பதை உனக்குச் சொல்லுகிறேன் என்று ஓலையை முடித்திருந்தார் அவர்.

 

9. புது மழை

 

தீர்த்த யாத்திரை முடித்து திரும்பியதுமே மகளையும் மனைவியையும் திருமோகூரில் கொண்டு வந்து விட்ட பின், உடனே பெரியவரைச் சந்திப்பதற்காகத் திருமால் குன்றத்திற்கு விரைந்தார் பெரிய காராளர். அப்படிச் சென்றவர் அதன் பின் பல நாட்கள் ஊர் திரும்பவில்லை. பெரியவருடனேயே திருமால் குன்றத்தில் தங்கிவிட்டார் அவர். பெரியவருடன் சேர்ந்து செய்யப் பல பணிகள் அவருக்கு இருந்தன.

நீண்ட யாத்திரையை முள்ளின் மேற் கழிப்பது போல் கழித்துவிட்டுத் திரும்பியிருந்த செல்வப்பூங்கோதைக்கு இளைய நம்பியைப் பற்றி யாரிடமுமே பேச முடியாமல் ஒரே தவிப்பாயிருந்தது. கொல்லன் ஊரில் இல்லை என்று தெரிந்தது. ஊரிலும், சுற்றுப்புறங்களிலும் புதுமை தெரிந்தது. ஏதோ மிகப் பெரிய மாறுதல்களை எதிர்பார்க்கும் அமைதி தென்பட்டது. எங்கும் பூதபயங்கரப் படைவீரர்களே காணப் படவில்லை. மக்கள் அங்கங்கே கூடுமிடங்களில் எல்லாம் வெளிப்படையாகவே களப்பிரர்களை எதிர்த்தும் தூற்றியும் பாண்டியர்களை ஆதரித்தும் வாழ்த்தியும் நிர்ப்பயமாக உரையாடத் தொடங்கினர். வடக்கேயும், தென்மேற்கேயும் போர்கள் நடப்பதால், உள்நாட்டில் களப்பிரர்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் இடையே அகப்பட்டு விட்ட நிலையில் நலிந்திருப்பதை எங்கும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டார்கள். நாட்டு நிலைமை தெளிவாகப் புரியும்படி இருந்தது.

இந்நிலையில் ஒரு பிற்பகலில் வெளியே மழை பெய்து கொண்டிருந்தபோது தாயும் செல்வப் பூங்கோதையும் மாளிகைக் கூடத்தில் அம்மானை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மானை ஆடும் வேளையில் மகளின் மனப் போக்கை அறிந்த தாய், விளையாட்டின் போது பாடும் பாடலில் தானே சுயமாக இரண்டு மூன்று அடிகளை இட்டுக்கட்டி இயற்றி,

 

கலிகொண்ட களப்பிரனைக் கொன்ற புகழ்
மலிகொண்டு
திருக்கானம் மகிழ்நம்பி
வலிகொண்டு
வென்றானென்றம்மானை

 

என்பது போலப் பாடிவிட்டு மகள் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். தாய் எண்ணியது போலவே அந்தப் பாடல் பகுதி மகளின் கவனத்தைக் கவர்ந்தது. அவள் உடனே அம்மானை ஆடுவதை நிறுத்திவிட்டு, “இப்போது நீ பாடியதை எனக்காக இன்னொரு முறை பாடு அம்மா!” என்று குழைந்த குரலில் ஆவலோடு தாயைக் கேட்டாள். மகளின் வேண்டுகோளுக்காகத் தாய் மீண்டும் அந்த அடிகளைப் பாடினாள். உடனே மகள் குறுக்கிட்டுக் கேட்கலானாள்:

உன் பாடலில் பொருட்பிழை இலக்கணப் பிழை காலவழு எல்லாமே குறைவின்றி நிறைந்திருக்கின்றன அம்மா! இந்தக் கணம் வரை நாம் களப்பிரர்களின் ஆட்சியில்தான் இருக்கிறோம். நீ பாடலில் பாடியிருப்பது போல் திருக்கானப் பேர் நம்பி இன்னும் களப்பிரர்களை வெல்லவும் இல்லை. கொல்லவும் இல்லை.”

இப்படிப் பாடுவதுதான் அம்மானையில் வழக்கம் மகளே! மிகைப்படுத்திப் பாடுவதும், விரைவில் நிகழ இருப்பதை இப்போதே நிகழ்ந்து விட்டதுபோல் பாடுவதும் எல்லாம் அம்மானை விளையாடும்போது இயல்பாக நடப்பதுதான்...”

நீ ஆசைப்படுவது எல்லாம் நீ ஆசைப்படுகிறாய் என்பதற்காகவே நடந்து விடுமா அம்மா?”

நான் ஆசைப்படுவது மட்டுமில்லையடீ, பெண்ணே! நீ உன் அந்தரங்கம் நிறைய ஆசைப்படுவது எதுவோ அதைப் புரிந்து கொண்டு உன் திருப்திக்காகவே இப்படிப் பாடினேன்! நீயோ என்னிடம் ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாய்...”

 

நேருக்கு நேர் தாய் இவ்வாறு கூறியதும் செல்வப் பூங்கோதை கையும் களவுமாகப் பிடிப்பட்டுவிட்ட உணர் வேடு நாணித் தலை கவிழ்ந்தாள். தன் அந்தரங்கத்தை மிக மிகத் தந்திரமாகத் தாய் கண்டு பிடித்து விட்டாளே என்று கூசினாள் அவள்.

நீண்ட நேரமாகப் பெண் குனிந்த தலை நிமிராமல் இருக்கவே, “விளையாட்டைத் தொடரலாம் வா - என்று அவள் மோவாயைத் தொட்டு முகத்தை நிமிர்த்திய தாய் திகைத்தாள். மகளின் நீண்ட அழகிய மீன்விழிகளில் நீர் மல்கியிருந்தது. அது ஆனந்தக் கண்ணிரா, துயரக் கண்ணிரா என்று புரிந்து கொள்ள முடியாமல் மலைத்தாள் தாய். மகளைத் தழுவியபடி, “எதற்காகக் கண்ணிர் சிந்துகிறாய் மகளே! நீ மகிழ வேண்டும் என்பதற்காக நான் இட்டுக் கட்டி இயற்றிய பாடலைக் கேட்டு நீயே அழுதால் என்ன செய்வது? கவலையை விட்டுவிடு முகமலர்ந்து சிரித்தபடி என்னைப் பார். உன் அந்தரங்கம் எனக்குத் தெரியும். அதை நான் நிறை வேற்றி வைக்கிறேன் என்று ஆறுதலாகச் சொன்னாள் தாய்.

உனக்குத் தெரியாதம்மா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறதி அதிகம். அவர்கள் தங்களை நினைத்துத் தவிக்கும் பேதைகளை எளிதாக மறந்து விடுவார்கள். இதிகாச காலத்தில் இருந்து அப்படித்தான் நடந்திருக்கிறது. சகுந்தலையின் கதை என்ன? தன்னை மறந்து போய்விட்ட ஓர் அரசனை மறக்க முடியாமல் அவள் எவ்வளவு தவித்தாள்?”

நீ அப்படித் தவிப்பதற்கு அவசியம் நேராது மகளே! உன் தந்தை உன்னை அழவிட மாட்டார்.”

தாய் இப்படிக் கூறியபோது அவளை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்க்கக் கூசியவளாக மகள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு கேட்டாள்:

அம்மா! நாம் நிலங்களை ஆளும் வேளாளர் குடியினர். மாபெரும் பாண்டியப் பேரரசை நம் விருப்பப்படி இசைய வைக்கச் சக்தி இல்லாதவர்கள் என்பதை எல்லாம் மறந்து விட்டுப் பேசாதே. ஏதோ சிரம தசையில் இருந்த போது ஒர் அரச குடும்பத்து வாலிபருக்கு நாம் வழி காட்டி உதவினோம். நம் மாளிகையில் விருந்திட்டோம். நமது சித்திர வண்டியில் ஆயிரம் தாமரைப் பூக்களால் மூடி மறைத்து அகநகரில் கொண்டுபோய் விட்டோம். இந்த உதவிகளுக்கு இவற்றை விடப் பெரிய மாற்று உதவியை அவர்களிடமிருந்து நீ எதிர்பார்க்க முடியுமா அம்மா?”

முடியும்! நீ நினைப்பது போல் நாம் அரச குடும்பத் தோடு தொடர்பற்றவர்கள் இல்லை. பல தலைமுறைகளுக்கு முன் களப்பிரர் ஆட்சி வராத நற்காலத்தில் இந்தக் குடும்பத்தில் பாண்டிய இளவரசர்கள் பெண் எடுத்திருக்கிறார்கள். மணந்திருக்கிறார்கள் என்றெல்லாம் வரலாறு உண்டு. தவிர, உன் தந்தைக்கு இந்தப் பாண்டியப் பேரரசும் பெரியவர் மதுராபதி வித்தகரும் மிகமிகக் கடமைப்பட்டிருக்கிறார்கள். உன் தந்தை அறக் கோட்டங்கள் என்றும் ஊட்டுப் பிறை என்றும் பெயர் சூட்டிப் பல இடங்களில் முனை எதிர் மோகர் படையினரையும், ஆபத்துதவிகளையும் நெடுங் காலமாகப் பேணி வளர்த்தவர். அவர் இட்ட செஞ்சோற்று உதவியால்தான் நாளைக்குப் பாண்டிப் பேரரசே களப்பிரர்களிடமிருந்து மீளப் போகிறது. அந்தச் செஞ்சோற்றுக் கடனைத் திருக்கானப்பேர் நம்பி மறந்துவிடவோ மறுத்து விடவோ முடியாது.”

தாய் கூறிய ஒரு வரலாறு செல்வப் பூங்கோதையின் வயிற்றில் பால் வார்த்தது. பல தலைமுறைகளுக்கு முன் பாண்டிய அரச மரபினர், இந்தக் குடும்பத்தின் முன்னோர்களிடம் பெண் எடுத்து மணந்திருக்கிறார்கள் -என்று அவள் கூறிய சமயத்தில் செல்வப் பூங்கோதை மகிழச்சியால் மனம் பூரித்தாள். திருக்கானப்பேர் நம்பிக்கும் தனக்கும் நடுவே முறைகள், வரம்புகள் என்ற பெயரில் எதுவும் குறுக்கே நிற்க முடியாதென்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது. செஞ்சோற்றுக் கடனையும் காதலையும் தொடர்பு படுத்தி வாக்குறுதி கேட்கும் காரியத்தைத் தன் தந்தை ஒருபோதும் செய்ய மாட்டார் என்பதை அவள் அறிவாள். தந்தையை வற்புறுத்தித் தன் தாயே பிடிவாதம் செய்தாலும் பெரியவரையோ, இளைய நம்பியையோ வற்புறுத்துவதற்குத் தந்தையின் பெருந்தன்மை நிறைந்த உள்ளம் இசையாது என்பதும் அவளுக்குத் தெரிந்ததுதான். ஆனால் தாய் என்னவோ, “கவலைப்படாதே மகளே, நானாயிற்று!” -என்பது போல் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள். தாய் கூறியதை அவளால் நிறைவேற்ற முடியுமா முடியாதா என்பதில் ஐயப்பாடு இருந்தாலும், தாய் ஒருத்தியாவது தன் இதயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாளே என்பது ஆறுதலாக இருந்தது. மனத்தின் அந்தரங்கமான சுமையினை நம்பிக்கையான மற்றொரு தலைக்கு மாற்றிய நிம்மதி இப்போது செல்வப் பூங்கோதைக்குக் கிடைத்திருந்தது. நம்பிக்கையை இழக்க முடியாமல் தாய் உறுதிப்படுத்தியிருந்தாள் என்றாலும் என்ன ஆகுமோ? -என்ற அச்சமும் கூடவே இருந்தது. திருமோகூர்க் கொற்றவைக் கோயிலின் அருகே இருள்மங்கும் அந்தி வேளையில் முதன் முதலாக இளையநம்பியாரைச் சந்தித்த அநுபவம் தொடங்கி ஒவ்வொன்றாக மீண்டும் எண்ணிப் பார்த்தாள் அவள். பசித்த போது பழங் கணக்குப் பார்ப்பது போலிருந்தது அவள் நிலை. இளையநம்பி திருமோகூருக்கு வந்தது, அங்கிருந்து தாமரைப் பூங்குவியலில் மறைந்து அகநகருக்குள் சென்றது, எல்லாம் நேற்றும் அதற்கு முன்தினமும் தான் நடந்திருந்தவை போல அவ்வளவு பசுமையாக அவள் உள்ளத்தில் நினைவிருந்தன.

பெண்ணே! உனக்கு எவ்வாறு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் இப்போது சொல்ல முடியும். இந்த உதவியைச் செய்ததற்காகக் காலம் உள்ளளவும் நீ பெருமைப்படலாம் என்று அன்றைக்கு முதன் முதலாகச் சந்தித்தபோது திருமோகூர்க் கொற்றவைக் கோவிலுக்குப் போகிற வழியில் தன்னிடம் இளையநம்பி கூறியிருந்த சொற்கள் அவளுக்கு இந்தக் கணத்திலும் ஞாபகம் வந்து ஆறுதலளித்தன. அந்தப் பழைய நினைவுகள் இப்போது அவள் செல்வமாயிருந்தன. அந்தச் செல்வத்தைக் குறைவின்றி இன்றும் அவள் ஆண்டு கொண்டிருந்தாள்.

 

இன்று தாயுடன் அம்மானை ஆடியபோது செல்வப் பூங்கோதை தன் மனத்துக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தரவல்ல வேறொரு குறிப்பையும் புரிந்து கொண்டிருந்தாள். தன் ஆருயிர்த் தாயினால், தான் நன்றாகவும் அநுதாபத்துடனும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது அவளுக்கு ஆறுதலளித்தது. இந்தப் பிரியமும், அன்பும் இப்படித் தன் கருத்துக்கு இசைவாக இருக்கும் என்பதைத் தான் முன்பே நன்றாக விளங்கிக் கொள்ள முடியாமற் போனதற்காக இப்போது வருந்தினாள் அவள். தீர்த்தயாத்திரை செல்லும் முன் தாயின் நல்லுள்ளம் புரியாமல்தாய் தன்மேல் சந்தேகப்படுவதாக இளையநம்பிக்குக் கொல்லன் மூலம் எழுதியனுப்பிய ஓலையில் தானே தவறாகக் குறிப்பிட்டு விட்டதை எண்ணி அவள் மனம் கூசியது. மகள் என்ற முறையோடும் அன்பு உரிமையோடும் தாய் தன்னை இடைவிடாமல் பேணிக் கவனிப்பதையே அவள் தன்மேல் சந்தேகப்பட்டுக் கண்காணிக்கிறாளோ என்பதாகத் தான் கருதி அஞ்சியது எவ்வளவு பெரிய பேதைமை என்று இப்போது உணர்ந்தாள் செல்வப்பூங்கோதை, தாயின் அன்பும் ஆதரவும், ‘மகளே! உன் தந்தையும் நானும் உன்னைத் தவிக்கவிட மாட்டோம் - என்ற உறுதிமொழியும் வெளிப்படையாகக் கிடைத்தபின் அன்று செல்வப் பூங்கோதை மிகமிக உற்சாகமாயிருந்தாள். நீண்ட காலத்துக்குப்பின் அவள் இதழ்கள் தெரிந்தவையும், அறிந்தவையும் ஆகிய பாடல்களை முறித்தும், முறியாமலும் மகிழ்ச்சியோடு இசைத்தன. புறங்கடையில் தோட்டத்தில் போய்க் காரணமின்றி மழையில் நனைந்தபடியே உலாவினாள் அவள். மாளிகைக்குள் திரும்பி ஆடியில்* முகம் பார்த்து மகிழ்ந்தாள். தாயைக் கூப்பிட்டுக் குழல் நீவி, எண்ணெய் பூசி, வாரிப் பூ முடித்துவிடச் சொன்னாள். நெற்றியில் திலகமிட்டு அழகு பார்த்துக் கொண்டாள். புதுக் கூறையுடுத்திப் புனைந்து கொண்டாள். இடையிடையே தீர்த்தயாத்திரைக்கு முந்திய நாளன்று, ‘சாம்ராஜ்யாதிபதிகளுக்கு வழிகாட்டும் பேதைகளுக்கு அவர்கள் அன்பைக் கூடவா பிரதியுபகாரமாகத் தரக்கூடாது?’ என்று திருமோகூர்க் கொல்லனிடம் தான் கொடுத்தனுப்பியிருந்த ஓலையில் இளையநம்பியைக் கேட்டிருந்த கேள்வியும் நினைவுக்கு வந்தது. தன்னுடைய அந்தக் கேள்வியைக் கண்டு அவர் என்ன நினைப்பார்? - என்றும் இப்போது அவள் சிந்தித்தாள்.

 

(* கண்ணாடிக்கு அக்காலப் பெயர்)

 

பெண்ணே அம்மானை விளையாடி முடித்ததிலிருந்தே இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய். நெடுநாளைக்குப் பின்பு இன்றுதான் உன் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன். ஊரில் பெய்யும் புது மழையைப் போல் உன் இதயத்திலும் ஏதோ புது மழை பெய்து கொண்டிருக்கிறதடி பெண்னே! இனி என்றும் இப்படியே இரு என்று அந்த வேளையில் அவளருகே வந்த தாய் அவளை வாழ்த்தினாள். முகத்தில் பரவும் நாணத்தைத் தவிர்க்க முடியாமலும் அந்தரங்கமான உணர்வுகளைத் தாய்க்குத் தெரியவிடாமலும் வேறு புறம் திரும்பித் தலைகுனிந்தாள் மகள். தாய் கூறியது போலவே தன் இதயமாகிய நிலத்தில் ஏதோ புது மழை பெய்து குளிர்விப்பதை அவளும் அப்போது புரிந்துகொண்டு தான் இருந்தாள்.

 

10. அளப்பரிய தியாகம்

 

பெரியவர் மதுராபதி வித்தகர் தன் சார்பில் சேரவேந்தனிடம் ஒப்புக் கொண்டிருக்கும் நிபந்தனை என்னவாக இருக்கும் என்று எண்ணித் தயங்கவோ, அஞ்சவோ செய்யாமல் முழு மனத்தோடு அதையும் ஏற்றுக்கொண்டான் இளையநம்பி. உடனே திருமால் குன்றத்திலிருந்து பெரியவர் அனுப்பியிருந்த தூதனிடம், ‘ஐயா! தாங்கள் சேரனுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதியை என் வாக்குறுதியாகவே கருதி நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் செய்யும் எந்தச் செயலிலும் பாண்டிய நாட்டின் எதிர்கால நன்மைதான் அடிப்படையாயிருக்கும் என்பதை எளியேன் நன்கு அறிவேன் என்று விநயமாகவும், வணக்கத்துடனும் மறுமொழி ஓலை எழுதிக் கொடுத்தனுப்பி விட்டான் அவன்.

பெரியவரிடம் இருந்து வந்த தூதன் மறுமொழி ஓலையோடு திரும்பிச் சென்றபின் கீழேயுள்ள நிலவறையில் வீரர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த கொல்லனை உடனே தன்னைச் சந்திக்கவருமாறு கணிகை மாளிகையின் மேற்பகுதிக்குக் கூப்பிட்டு அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் வருவதற்குள் ஓலைகளை எடுத்து எழுத்தாணியால் ஏதோ அவற்றில் எழுதத் தொடங்கினான். சிறிது நேரங்கழித்து எழுதுவதை நிறுத்திக்கொண்டு, ஏதோ, நினைவுக்கு வந்தவன் போல் திருமோகூரிலிருந்து காராளர் மகள் செல்வப்பூங்கோதை அனுப்பியிருந்த பழைய ஓலைகளை எடுத்து மீண்டும் படிக்கலானான். படித்துவிட்டுத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். சில கணங்களில் சிரிப்பு மெல்ல மெல்ல அவன் முகத்திலிருந்து மறைந்தது. முகத்தில் துயரம் தெரிய வேதனையோடு நெட்டுயிர்க்கத் தொடங்கினான். அவன் துயரமும் மகிழ்ச்சியும் மாறி மாறி நிலவிட அவன் மனத்திற்குள் ஏதோ ஒரு போராட்டம் நிகழத் தொடங்கியிருந்தது. எழுதுவதற்கு எடுத்த ஓலைகளில் மீண்டும் அவன் எழுதத் தொடங்கியபோது யாரோ மிக அருகில் நடந்து வரும் காலடியோசை கேட்டது. நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்காமலே வருவது கொல்லன் இல்லை என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. காலடி ஓசையை முந்திக் கொண்டு வரும் நறுமணங்களும், கைவளைகள், காற்சிலம்புகள் ஆகியவற்றின் இங்கித நாதங்களும் இரத்தினமாலைதான் தன்னருகே வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனை உணரச் செய்தன.

உடனே அவன் முன்னெச்சரிக்கையும் விழிப்பும் அடைந்தவனாகச் செல்வப்பூங்கோதையிடமிருந்து தனக்கு வந்திருந்த ஓலைகளையும், அப்போது செல்வப் பூங் கோதைக்குக் கொடுத்தனுப்புவதற்காகத் தான் வரைந்து கொண்டிருந்த ஓலையையும் எழுத்தாணியையும் எல்லாவற்றையும் சேர்த்து விரைந்து மேலாடையால் போர்த்தி மறைக்க முயன்றான்.

இன்னிசையாய்க் கலீரென்ற சிரிப்பொலி அவன் செவிகளை நிறைத்தது. அவன் முயற்சியை இரத்தினமாலை கவனித்துவிட்டாள் என்பதற்கு இந்தச் சிரிப்பொலி அடையாளமாய் இருந்தது. அவன் நிமிர்ந்து அவளை ஏறிட்டுப் பார்த்து வினாவினான்:

ஏன் சிரிக்கிறாய் இரத்தினமாலை?”

ஏன் சிரிக்கிறேன் என்று உங்கள் மனத்தையே கேட்டுப் பாருங்கள்! தெரியும்! அடுத்த பிறவிவரை உங்களுக்காகக் காத்திருக்கத் துணிந்தவளை இந்தப் பிறவியிலேயே நீங்கள் நம்பாததைப் பார்த்துத்தான் சிரிக்கிறேன்.”

நான் உன்னை நம்பவில்லை என்பதை நீ இப்போது எப்படிக் கண்டுபிடித்தாய்?”

என்னிடமே மறைக்கவும் ஒளிக்கவும் உங்களுக்கு இரகசியங்கள் இருக்கின்றன. அப்படி நான் எதையும் உங்களிடம் ஒளிக்க முயன்றதில்லை...” இளையநம்பியின் நெஞ்சில் சுரீரென்று தைத்தன இந்தச் சொற்கள். உடனே ஒரு வைராக்கியத்தோடும் நிர்ப்பயமான நேர்மையோடும் எந்த அந்தரங்கத்தையும் பங்கிட்டுக் கொள்ள ஏற்ற அவளிடம் எதையும் மறைக்க வேண்டியதில்லை என்ற நியாய உணர்வோடும் மேலாடையால் மறைத்திருந்த ஓலைகளை எல்லாம் எடுத்து, “இந்தா இதில் உன்னிடம் ஒளிக்க எதுவும் இல்லை. இவற்றை நீயும் படிக்கலாம். இவற்றைப் படித்த பின்பும் நீ அடுத்த பிறவி வரை எனக்காகக் காத்திருக்கச் சித்தமாயிருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு இரத்தின மாலை!” என்று அவற்றை அவளிடம் அளிக்கலானான் இளையநம்பி.

அவள் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமலே அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள்.

சில வேளைகளில் உன் வார்த்தைகளைவிட புன்னகைகள் கடுமையானவையாக இருக்கின்றன, இரத்தினமாலை!”

ஐயா! இப்போது நான் கூறப்போவதைக் கேட்டு நீங்கள் திகைப்படையவோ, என் மேல் கோபப்படவோ கூடாது. என்னைப் பொருத்தருள வேண்டும்! இந்த ஓலைகளை நீங்கள் அறியாமலே பலமுறை உங்கள் அங்கியிலிருந்து ஏற்கெனவே எடுத்துப் படித்திருப்பதற்காகத் தாங்கள் இந்தப் பேதையை முதலில் மன்னிக்க வேண்டும்.” 

அப்படியானால் அதை ஏன் என்னிடம் நீ மறைத்தாய்?”

மறைத்ததற்குக் காரணம் உண்டு. என்னால் தாங்கள் சலனமோ மனக்கிலேசமோ அடைந்து ஒரு பாவமும் அறியாத அந்தப் பேதை செல்வப்பூங்கோதையிடம் வேறுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காகவே நான் இவற்றை அறிந்ததை உங்களிடம் காண்பித்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் இவற்றை அறிந்த பின்பே என் நிலையை அவளோடு ஒப்பிட்டுச் சிந்தித்துக் கொண்டு தான் அன்று நான் உங்களிடம், ‘ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ, அது முடியப் போகிறதே என்று தான் நான் கண் கலங்குகிறேன். புதிதாக எதையும் தொடங்கவில்லை என்று கண்ணிர் சிந்திக் கதறினேன். நீங்கள் உறுதி கூறிய பின்பு அடுத்த பிறவி வரை காத்திருப்பதாக வாக்களித்தேன். என் தியாகத்தை நான் இந்தச் செல்வப்பூங்கோதையின் நலனுக்காகவே செய் தேன் என்பதைக்கூட அன்று நான் உங்களிடம் கூறவில்லை. காரணம் அவ்வளவு ஏமாற்றங்களையும் நிராசைகளையும் தாங்கிக் கொள்ளும் மனோதிடமும், உறுதியும் அந்தத் திருமோகூர்ப் பெண்ணுக்கு இருக்கும் என்று அவள் எழுதிய ஓலைகளிலிருந்து தெரியவில்லை. அவளுடைய உரிமை முதன்மையானது. உங்களைப் போன்றதொரு சாம்ராஜ்யாதிபதிக்கு அந்த அரசை நோக்கிச் செல்லும் முதல் ஒற்றையடிப் பாதையையே அவள் காட்டியிருக்கிறாள். அவள் என்னை விடப் பாக்கியசாலி. என்னைவிடக் கொடுத்து வைத்தவள். என்னைவிட உங்களை உலகறிய மணப்பதற்கு ஏற்ற குடிப்பிறப்பு உள்ளவள். நானோ அரச தந்திரங்களோடும், அரசியல் சூழ்ச்சிகளோடும் பழகிப் பழகி மனம் மரத்துப் போனவள். பெரிய ஏமாற்றங்களைக் கூட என்னால் எளிதாகத் தாங்கிக் கொண்டு விட முடியும். அவளால் அது முடியாது... முடியும் என்று தோன்றவும் இல்லை...”

பேசிக் கொண்டே வந்தவள் பேச்சுத் தடைப்பட்டு இருந்தாற்போல் இருந்து சிறு குழந்தைபோல் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். மேலே அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவள் செய்திருக்கும் அந்தரங்கமான தியாகம் எவ்வளவு பெரியது என்று நினைக்க நினைக்க இளையநம்பியின் மனத்தில் அந்தத் தியாகத்தின் எல்லை பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது.

உனக்கு நான் மிகப் பெரிய கொடுமை செய்து விட்டேன் இரத்தினமாலை! நீ ஏன் இப்போது அழுகிறாய்? கல் நெஞ்சனாகிய நான் அல்லவா கதறி அழவேண்டும்? அழவும் முடியாத பாவியாகி விட்டேனே நான்?” என்று விரக்தியோடு கூடிய ஒரு சினத்தின் வயப்பட்டவனாக அந்த ஓலைகளைக் கிழிக்க முற்பட்ட இளையநம்பியை அவள் தடுத்தாள். கண்ணீருக்கிடையே அவனிடம் மன்றாடினாள்: 

எந்தப் பேதைக்காக நான் தியாகம் செய்தேனோ அவள் துன்பப்படக் கூடாது ஐயா? இப்போது நீங்கள் அவளுக்குக் கொடுத்தனுப்ப எழுதத் தொடங்கிய ஓலையை மகிழ்ச்சியோடு எழுதிக் கொல்லனிடம் கொடுத்தனுப்ப வேண்டும். இல்லையானால் நீங்களே இந்தப் பேதையின் தியாகத்தை அர்த்த மற்றதாக்கி விடுகிறீர்கள் என்று ஆகும்.”

திக்பிரமை பிடித்தவனாக வீற்றிருந்த இளைய நம்பி கண்களில் நீர்மல்க அவள் கூறியபடியே செய்வதாகத் தலையசைத்தான். தான் செய்த தியாகத்தைக் கூட ஓர் அரச தந்திரக் காரியம் போல் மிகமிக இரகசியமாகவும், யாருக்கும் தெரியாமல் ஆத்மார்த்தமாகவும் அவள் செய்திருப்பதை உணர்ந்து அவளை எப்படி வியப்பது என்றும் எப்படிப் புகழ்வது என்றும் சொற்கள் கிடைக்காமல் திகைத்திருந்தான் இளைய நம்பி. அவன் இதயத்தில் இரத்தினமாலை ஒரு புனிதமான தியாக தேவதையாகக் குடியேறிக் கொலுவீற்று விட்டாள். எவ்வளவு பெரியவள் என்று அவன் ஏற்கெனவே அவளைப் பற்றி மதிப்பிட்டிருந்தானோ, அதையும் விடப் பெரியவளாக இப்போது உயர்ந்திருந்தாள் அவள். கணிகை மாளிகையில் அடியெடுத்து வைத்த முதற்கணத்தில் தனக்கும் அழகன் பெருமாளுக்கும் நடந்த விவாதமும் அன்று அழகன் பெருமாள் இரத்தினமாலையின் குணச் சிறப்பை வியந்து புகழ்ந்ததும் இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தன. பெரியவர் மதுராபதி வித்தகர் போன்ற பெரிய ஞானியின் ஆசிமொழியை இரத்தினமாலை எப்படி அடைந்திருக்க முடியும் என்பது இப்போது அவனுக்கு மிகமிக எளிதாகவே புரிந்தது. அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உடல் புல்லரித்தது.

இரத்தினமாலை கண்ணிரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகை பூத்தபடி நின்றிருந்தாள்.

ஓலையை எழுதி முடித்துச் செல்வப் பூங்கோதைக்கு அனுப்புங்கள் ஐயா! உங்கள் தனிமைக்கு இப்போது இங்கே நான் இடையூறாக இருக்க விரும்பவில்லை என்று சிரித்தபடியே கூறிவிட்டு உட்புறம் சென்று மறைந்தாள் அவள். நெடுநேரம் திகைத்திருந்துவிட்டுப் பின் ஒருவாறு ஓலையை எழுதி முடித்தான் இளையநம்பி. அதற்குள் கொல்லனும் கூப்பிட்டனுப்பிய கட்டளையை ஏற்று நிலவறையிலிருந்து வந்திருந்தான்.

நாளை இரவு நாம் கோட்டைக்குள் புகுந்து ஆட்சியைக் கைப்பற்றி நமது மீனக்கொடியை மீண்டும் மதுரை மாநகரில் பறக்கச் செய்யப் போகிறோம். அதற்குள் நீ திருமோகூர் சென்று இந்த ஓலையை எனக்காகக் காராளர் மகளிடம் சேர்த்துவிட முடியுமா?” என்று இளையநம்பி அவனைக் கேட்டான். உடனே அதைச் செய்ய இணங்கி ஓலையை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் கொல்லன். ‘விரைந்து மீண்டும் நிலவறைக்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்பதை அவனிடம் ஒரு முறைக்கு இரு முறையாக வற்புறுத்திய பின் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் திருமோகூருக்குப் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் எதிர்பாராத விதமாகத் திருமால் குன்றத்திலிருந்து காராளரும், அவரோடு இளையநம்பிக்குப் புதியவனாகிய இன்னோர் இளைஞனும் நிலவறை வழியே கணிகை மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள்.

 

11. இரத்தினமாலையின் முத்துமாலை

 

நீண்ட நாட்களுக்குப் பின்பு காராளரைச் சந்தித்ததும் ஏற்பட்ட வியப்பில் அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ செய்திகள் இருந்தும் இளையநம்பியால் சில கணங்கள் எதுவும் பேச முடியவில்லை. தவிரவும், காராளரோடு வந்திருந்த புதிய இளைஞன் வேறு உடன் - இருந்ததால், இளையநம்பி அவரிடம் மனம் விட்டுப் பேசவும் இயலவில்லை. ஒருவருக்கொருவர் நலன் விசாரித்துக் கொள்ள முடிந்த அளவில் உரையாடல் நின்று போயிற்று. அப்போது காராளரே முன் வந்து, “பெரியவர் தங்களிடம் இந்த ஒலையைச் சேர்த்து விடச் சொல்லிக் கொடுத்தனுப்பினார் என்று ஓர் ஓலையை எடுத்து இளைய நம்பியிடம் அளித்திருந்தார். பிடரியிலும் காதோரங்களிலும் சுருண்டு வளர்ந்திருந்த முடியுடனும், பெண்மை முகச் சாயலுடனும் காராளரின் அருகே நின்று கொண்டிருக்கும் இந்தப் புதிய இளைஞனைப் பற்றிப் பெரியவர் அந்த ஓலையில் ஏதாவது எழுதியிருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தபடியே அதை முத்திரை நீக்கிப் பிரித்தான் இளையநம்பி. அவன் எதிர்பார்த்தது. வீண் போகவில்லை. அந்தச் செய்திகள் அதில் இருந்தன.

... மங்கல நல்வாழ்த்துக்களுடனும் நற்பேறுகளுடனும் இளையநம்பி காண்பதற்கு விடுக்கும் ஓலை. இந்த ஓலைதான் திருமால் குன்றத்திலிருந்து நான் உனக்கு விடுக்கும் இறுதி ஓலையாக இருக்கும். என் இடத்தை இனி நீ அறிவதால் அபாயமில்லை. இதற்குப் பின்னால் இப்படி மறைந்திருந்து யாரும் அறியாமல் உனக்கு ஓலையனுப்பவும், கட்டளைகளை இடவும், உபாயங்களைச் சொல்லிக் கொடுக்கவும் அவசியம் இராது. விரைவில் மதுரைமாநகரத்து அரியணையில் புகழ் பெற்ற பாண்டியர் வெண்கொற்றக் குடையின் கீழ் நீ வெளிப் படையாக அரசு வீற்றிருப்பாய். களப்பிரர் ஆட்சியால் வீழ்ச்சியடைந்து விட்ட நமது சமயமும், மொழியும், கலைகளும், நாகரிகமும் மீண்டும் வளரும். நீ அவற்றை வளரச் செய்வாய் என்ற திடநம்பிக்கை எனக்கு உண்டு. நாளை நள்ளிரவு நடு யாமத்திற்குப் பின்னர் களப்பிரக் கருநாடவேந்தன் கலியரசனின்* ஆட்சி பாண்டிய நாட்டில் இருக்கமுடியாது.

 

(* ஆதாரம் - வேள்விக்குடிச் செப்பேடுகள்)

 

நாளை நள்ளிரவிற் கோட்டையைக் கைப்பற்றுமுன் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றி இந்த ஓலையில் உனக்கு நான் தெரிவிக்கப்போகிறேன். இதிற்கண்ட கட்டளைகளை அணுவளவும் பிழையாமல் நிறைவேற்ற வேண்டியது உன் கடமை. இந்தக் கடமையை நீ செம்மையாக நிறைவேற்றுகையில் உனக்கு உறுதுணையாயிருப்பதற்காகவே காராளரையும் அனுப்பி இருக்கிறேன். காராளரோடு வந்திருக்கும் புதிய இளைஞன் யார் என்ற கேள்வி இப்போது உன் மனதில் எழலாம். நீ திருக்கானப் பேர்க்காட்டிலிருந்து முதன்முதலாக என்னைச் சந்திக்கத் திருமோகூருக்கு வந்த மறுநாள் காலையில், ‘களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றுவிட்ட இருவரைத் தவிரப் பாண்டிய அரச வம்சத்தில் நீ உட்பட இன்னும் மூவர் எஞ்சியிருக்கிறீர்கள் என்று நான் உன்னிடம் கூறினேன். உடனே நீ என்னிடம் அந்த மூவரில் உன்னொருவனைத் தவிர, ‘மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள்?’ என்று கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இப்போது நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ. நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம் என்று அன்று அந்த அதிகாலை வேளையில் உனக்கு நான் மறுமொழி கூறியிருந்தேன். தீவினையோ அல்லது நமது துர்ப்பாக்கியமோ தெரியவில்லை; அதில் ஒருவனை நீ சந்திக்க முடியாமலே போய்விட்டது. களப்பிரர்கள் அவனைக் கழுவேற்றிக் கொன்று விட்டார்கள். தென்னவன் மாறன் கழுவேற்றப்பட்ட தினத்தன்று அவன் உனக்குத் தமையன் முறை ஆகவேண்டும் என்ற உண்மையை உன்னிடம் தெரிவித்துவிட்டதாக இரத்தினமாலை எனக்கு அறிவித்திருந்தாள். அந்தத் தென்னவன் மாறனைத் தவிர எஞ்சியிருக்கும் மற்றொருவன் தான் இப்போது காராளரோடு உன்னைக் காண வந்திருக்கிறான். இவன் பெயர் பெருஞ்சித்திரன். இதுவரை இவன் மாறாக வளநாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய கொற்கையில் குதிரை கொட்டாரத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானின் பொறுப்பில் வளர்ந்தவன். பாண்டியர் குலநிதியாகிய நவநித்திலங்களோடு சில திங்களுக்கு முன்புதான் இவன் என்னைக் காண வந்தான். இதற்கு மேல் குறிப்பறியும் திறனுள்ள உனக்கு நான் எதையும் அதிகமாகக் கூற வேண்டியதில்லை. வீரமோ, திடசித்தமோ, ஆண்மையோ அதிகம் இல்லாத இந்தப் பிள்ளையாண்டான் உனக்குத் தம்பி முறை ஆக வேண்டும். ஒரு தம்பியைத் தமையன் எப்படி வரவேற்க வேண்டுமோ அப்படி முறையாக நீ இவனை வரவேற்கவும், ஏற்றுக்கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறாய். எனினும் மிகப் பெரிய சாதனைகளைச் சாதித்துக் கொடுக்கும் எந்தத் திறனையும் நீ இவனிடம் எதிர்பார்க்க முடியாது. பிறவற்றைக் காராளர் உன்னிடம் விவரிப்பார். இனி இந்த ஓலையின் தொடக்கத்தில் நான் உனக்கு இடப்போவதாகக் கூறிய கட்டளைகள் வருமாறு:

வெள்ளியம்பலத்திலும், அகநகரின் பிறபகுதிகளிலும் நம்மவர்கள் நிறைய ஊடுருவி இருக்கிறபடியால் நாளை மாலை மயங்குகிற வேளையில் அவர்களைக் கொண்டு புறத்தாக்குதலைத் தொடங்க வேண்டும். இந்தப் புறத் தாக்குதலுக்கு நீ தலைமை தாங்கிப் படை நடத்திச் செல்லக்கூடாது. களப்பிரர்கள் அகநகரில் இப்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். பார்வைக்கு நன்றாகத் தெரிந்தாலும் ஒரு மணல் கோட்டை எப்படித் தொட்டால் உடனே சரிந்து விழுந்து விடுமோ அப்படித் தான் களப்பிரர்களின் கோட்டையும் இப்போது இருக்கிறது. படை வீரர்கள் எல்லாரும் எல்லைகளில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மமதையின் காரணமாகத் தானே போர்க் களத்திற்குச் செல்லாமல் படைவீரர்களே வெற்றியை ஈட்டிக் கொண்டு வருவார்கள் என்ற தப்புக் கணக்கில் களப்பிரக் கலியரசன் மதுரையிலேயே அரண்மனையில் மாவலி முத்தரையனுடன் வட்டாடிக்கொண்டு* கிடக்கிறான். கூடியவரை அரண்மனையிலும், அகநகர் எல்லையிலும் உள்ள சிறிதளவு களப்பிர வீரர்களின் எண்ணிக்கையும் தனித்தனியே சிதறும்படியாகச் செய்து பல முனைகளில் அவர்களைப் பிரித்துத் தாக்கவேண்டியது நம் கடமை.

 

(* தாயக்கட்டம் போல் ஒரு விளையாட்டு)

 

வெளிப்படையாக நடைபெறும் புறத்தாக்குதலைத் தொடங்கி அரண்மனையை வளைத்துக் கொள்ளச் செல்லும் நம் வீரர்கள் குழுவிற்குப் பெருஞ்சித்திரன் மட்டும் தலைமை தாங்கினால் போதும். மாலையில் தொடங்கும் இந்தப் புறத் தாக்குதலால் நள்ளிரவுக்குள் நமக்குச் சாதகமான பல மாறுதல்கள் ஏற்படும். நள்ளிரவில் இந்த மாறுதல்கள் தெரிந்த பின் சூழ்நிலையை உறுதி செய்துகொண்டு அதன்பின் நீயும் காராளரும், கொல்லனும் நிலவறையிலுள்ள நம் வீரர்களும் கரந்துபடை வழியாக அரண்மனையிற் புகமுடியும். அவ்வாறு அரண்மனையில் புகுந்ததும் முதல் வேலையாக அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் அழகன் பெருமாள் முதலியவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் அரண்மனையில் எங்கே சிறைப்பட்டிருப்பார்கள் என்பதை உங்களுக்குக் காட்டுவதற்கு உங்களோடு இருக்கும் உபவனத்துக் குறளன் உதவியாக இருப்பான். மதுரை மாநகரத்துக் கோட்டையில் நம் மீனக்கொடி பறக்கத் தொடங்கியதும் அதைக்கண்டு வந்து என்னிடம் தெரிவிக்க வையையின் இக்கரையில் செல்லூர் அருகே நானே ஆட்களை நிறுத்தியிருக்கிறேன். கோட்டை யில் நம் கொடி பறப்பதை அறிந்த சில நாழிகைகளில் நானும் என்னோடு மறைந்திருக்கும் மற்றவர்களும் கிழக்குக் கோட்டை வாயில் வழியே அகநகரில் புகுந்து அங்கே அரண்மனைக்கு வந்து சேருவோம். இக்கட்டளைகளை எவ்விதத் தயக்கமும், ஐயப்பாடும் இன்றி நிறைவேற்றுக...” என்று பெரியவர் ஓலையை முடித்திருந்தார்.

ஓலையைப் படித்து முடித்ததும் பெருஞ்சித்திரனை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு உறவு சொல்லி மகிழ்ந்தான் இளையநம்பி. அரச வம்சத்தின் கடைசி இரண்டு குலக் கொழுந்துகள் சந்தித்துத் தழுவிக் கொண்ட அந்தக் காட்சியைக் காராளர் விழிகளில் ஆனந்தக் கண்ணிர் மல்கக் கண்டு மகிழ்ந்தார். 

இரத்தினமாலை தன் மாளிகைக்குப் புதிய விருந்தினர்களாகிய காராளரையும், பெருஞ்சித்திரனையும் வரவேற்று உபசரிக்கத் தொடங்கினாள். உணர்ச்சிக் குமுறல்களை எல்லாம் உள்ளேயே அடக்கிக்கொண்டு இரத்தினமாலை அவ்வளவு விரைவாய் வந்திருப்பவர்களுக்கு முன்னால் எப்படி இத்தனை இயல்பாகச் சிரித்து மகிழவும், வரவேற்கவும் முடிகிறதென எண்ணி வியந்தான் இளையநம்பி. அவளுடைய திறமையை அவன் அப்போது காணமுடிந்தது.

அன்று அந்த மாளிகையில் அவர்கள் மூவரையும் ஒரு சேர அமரவைத்து விருந்து பரிமாறினாள் இரத்தினமாலை. விருந்துண்டு முடிந்ததும் மாளிகைக் கூடத்தில் அமர்ந்து மிகமிக நுட்பமான அரச தந்திர உபாயங்களைப் பற்றிக் காராளரும் இளையநம்பியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாக உடனிருந்த பெருஞ்சித்திரன் இருந்ததையும் இடையிடையே கொட்டாவி விட்டபடி உறக்கக் கலக்கத்தில் இருந்ததையும் கவனித்துக் கொண்டே இளையநம்பி, “தம்பீ நீ உறங்கப் போவதாயிருந்தால் போகலாம் என்று சிரித்துக் கொண்டே அவனை நோக்கிச் சொன்னான். பெருஞ்சித்திரனோ இளையநம்பி அப்படிச் சொல்லுவதற்காகவே காத்திருந்தவனைப் போல் உடனே எழுந்திருந்து உறங்கப் போய்விட்டான். அதைக் கண்டு இளையநம்பி பெரிதும் ஏமாற்றம் அடைந் தான். ஏமாற்றத்தோடு அவன் காராளரைக் கேட்டான்:

ஐயா, நாளை மாலை அரண்மனையை வளைத்துப் புறத்தாக்குதல் நடத்திச் செல்லும் படையணிக்கு இவன் தலைமை தாங்கினால் போதும் என்று பெரியவர் கட்டளையிட்டிருக்கிறாரே; அதை நினைத்தால்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. இவனோ பொறுப்பில்லாதவனாகத் தெரிகிறான். மன உறுதியும் போதாது போலிருக்கிறதே?”

உண்மைதான்! ஆனால், பெரியவருக்கும் இவனைப் பற்றி நன்கு தெரியும்: தெரிந்திருந்தும் அந்தப் படையணிக்கு இவனைத் தலைவனாக அவர் நியமித்திருக்கிறார் என்றால் அதில் வேறு ஏதாவது நுணுக்கமான காரணம் இருக்கும். அவர் கட்டளைப்படியே செய்து விடுவதுதான் நமக்கு நல்லது...” என்றார் காராளர். பெருஞ்சித்திரனைக் கண்டு மிகமிக வேதனையும் ஏமாற்றமும் அடைந்திருந்தான் இளையநம்பி. புகழ்மிக்க பாண்டிய மரபில் வந்தவனாகவே நம்ப முடியாதபடி விடலைத்தனமாகவும், விட்டேற்றியாகவும் தோன்றினான் அவன். ஒடுக்கப்பட்டுவிட்ட ஓர் அரச குடும்பத்து இளைஞனுக்கு இந்த இளம் பருவத்தில் தான் இழந்த நாட்டை மீட்பதில் எவ்வளவு ஆவலும் சுறுசுறுப்பும் இருக்க வேண்டுமோ அதில் ஒரு சிறிதும் பெருஞ்சித்திரனிடம் இல்லை என்பது இளையநம்பிக்குப் புரிந்தது.

தென்னவன் மாறனின் இயல்பு இவனுக்கு நேர் மாறானது ஐயா! சீறிப் பாயும் பதினாறடி வேங்கை போன்ற கனலும் தோற்றமும், எதிரிகள் பெயரைக் கேட்டாலே பொங்கி எழும் வீரமும் தென்னவன் மாறனுடையவை. இந்தப் போரில் தென்னவன் மாறன் இருந்திருக்க வேண்டும் ஐயா என்று கொலையுண்ட பாண்டிய குல மகாவீரனும் இளையநம்பிக்குத் தமையன் முறையுடையவனும் ஆகிய தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டினார் காராளர். களப்பிரர்களால் சிறை செய்யப்பட்டுக் கொலையுண்ட தன் தமையனைப் பற்றி அவர் நினைவூட்டவே ஓரிரு கணங்கள் ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே கண் கலங்கிப்போய் இருந்துவிட்டான் இளைய நம்பி. அவன் அடைந்த வேதனையைக் கண்டு தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டியதன் மூலம் அப்போது அவன் உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கச் செய்து விட்டோமோ என்று காராளருக்குக் கூட வருத்தமாக இருந்தது. அவனைத் தனிமையில் இருக்க விட்டு விட்டு இரத்தினமாலையைத் தேடி அவளிடம் பேசுவதற்குச் சென்றார் காராளர்.

அதன் பின்பு பிற்பகல் வரை அவர்கள் ஒருவருக் கொருவர் சந்தித்து உரையாடிக் கொள்ள வாய்ப்பின்றியே கழிந்தது. முன்னிரவின் தொடக்கத்திலேயே இளைய நம்பியால் திருமோகூர் அனுப்பப்பட்டிருந்த கொல்லன் திரும்பி வந்து சேர்ந்திருந்தான்.

ஐயா! தங்கள் ஓலையைக் காராளர் திருமகளிடம் சேர்த்துவிட மட்டுமே முடிந்தது. ஓலையைக் காராளர் மகள் படித்தறிகிறவரை காத்திருந்து மறுமொழியோ, மாற்று ஓலையோ தரச்சொல்லிப் பெற்றுவர நேரமில்லை. நான் காலந்தாழ்த்தாமல் உடனே இங்கு திரும்பி வரவேண்டும் என்று தாங்கள் கட்டளை இட்டிருந்ததைக் கருதிதான் விரைந்து திரும்பிவிட்டேன். இங்கு நான் வந்து நிலவறையிற் படியேறி மேலே வரும்போதுதான் ஏற்கெனவே காராளரும், கொற்கைப் பெருஞ்சித்திரனும் இங்கு வந்து சேர்ந்திருப்பதாக நம் வீரர்கள் கூறினார்கள் என்றான் திருமோகூர் கொல்லன். காராளர் மூலம் அறியக் கிடைத்த பெரியவரின் கட்டளைகளை எல்லாம் கொல்லனிடமும் விவரித்தான் இளையநம்பி. கொல்லனும் அவற்றையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டபின் -

அகநகரின் புறத்தாக்குதலைத் தாங்கள் தலைமை நடத்துவது காரணமாகத் தங்களுக்கு அபாயம் எதுவும் நேரிட்டுவிடக் கூடாதே என்று கருதித்தான் பெரியவர் கொற்கைப் பெருஞ்சித்திரனை அதற்கு அனுப்பச் சொல்லி இருக்கிறார் போலும் என்று சொன்னான். உடனே அதற்கு இளையநம்பியிடமிருந்து பதில் வந்தது.

இது உன் அநுமானம் என்று நினைக்கிறேன்...”

ஆம்! ஆனால் இந்த அதுமானத்தில் பிழையிருக்காது என்பது மட்டும் உறுதி என்று மீண்டும் தீர்மானமாக அழுத்திச் சொன்னான். இளையநம்பி அவனிடம் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டான்.

ஆமாம், இந்தப்பெருஞ்சித்திரன் கொற்கைக் குதிரைக் கோட்டத்துத் தலைவன் மருதன் இளநாக நிகமத்தானுடைய பொறுப்பில் வளர்ந்தும் ஏன் இப்படி ஒரு பொறுப்பும் அறியாத விட்டேற்றியாகத் தலையெடுத்திருக்கிறான்?” 

மருதன் இளநாக நிகமத்தார் குதிரைகளை வளர்ப்பதிலும் பழக்குவதிலும், தேர்ச்சி பெற்றவர். மனிதர்களைப் பழக்குவதிலும், வளர்ப்பதிலும் அவர் திறமை எவ்வளவு என்பதற்கு நம் பெருஞ்சித்திரனே சான்று!”

கொல்லனின் இந்த மறுமொழியைக் கேட்டு இளையநம்பிக்குச் சிரிப்பு வந்தது. இரும்புப்பட்டறையில் பொன் இழை போன்ற நகைச்சுவையாக முதன்முதலாக இப்போதுதான் அவனிடமிருந்து கேட்டான் இளையநம்பி. பேசிக்கொண்டே இருவரும் மாளிகையின் அலங்கார மண்டபத்தருகே சென்றனர். அங்கே பேரொளியாக மின்னும் தீபாலங்காரங்களிடையே விளக்குகளுடன் பகை செய்வது போற் சுடர்மின்னுகிற வெண்முத்துக்களைக் கொட்டிக் குவித்து ஒவ்வொன்றாகத் தேர்ந்து பட்டு நூலில் கோத்து ஆரமாக்கிக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை.

என்ன? முத்துமாலை உருவாகிக் கொண்டிருக்கிறாற் போலிருக்கிறதே? நாங்கள் எல்லாம் வாள் முனையைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கே இரத்தின மாலையின் கையிலோ முத்துமாலை கோர்க்கப்படுகிறது...” என்று கூறியபடியே அருகில் வந்த இளையநம்பியை ஒன்றும் மறுமொழி கூறாமல் அமைதியாக ஏறிட்டுப் பார்த்தாள் இரத்தினமாலை. சில கணங்கள்.அந்த அமைதி நீடித்தது. பின்பு நிதானமாக அவனிடம் இந்த மறுமொழியைக் கூறினாள்.

அரசகுமாரர்கள் வாள் முனையைக் கூராக்குவார்கள். போர் முனையில் வெற்றி பெறுவார்கள்! அப்படி வெற்றி பெற்றபின் அவர்களை மணக்கும் உரிமையுள்ள நற்குடியிற் பிறந்த பெண்ணழகிகள் அந்த அரசகுமாரரை மாலை சூடி மணக்க ஓடோடி வருவார்கள். அப்படி மணக்கும் வேளையில் அந்தப் பாக்கியத்தைப் பெற்ற பெண்ணரசிக்கு அந்தப் பாக்கியத்தைப் பெற முடியாத என் போன்ற பேதைகள் இப்படி அன்பளிப்பாக எதையேனும் தொடுத்தோ, சூடியோ கொடுக்கத்தான் முடியும்.”

கொல்லன் உடனிருந்ததால் சுபாவமாகச் சொல்லுவது போல் இந்தச் சொற்களை அவள் கூறியிருந்தாலும் நீறுபூத்த நெருப்பைப்போல் இதன் ஆழத்திலிருந்து அவளுடைய துயர வெம்மை கனல்வதை இளையநம்பி உணர முடிந்தது. அந்த நிலையில் அவளோடு அதிகம் பேச விரும்பாமல் கொல்லனுடன் நிலவறைக்குச் சென்று படைவீரர்களைக் கவனிக்கும் எண்ணத்தோடு புறப்பட்டான் இளையநம்பி.

 

12. எதிர்பாராத அழைப்பு

 

புறத்தே பெய்த புது மழையைப் போல் இதயத்திலும் ஒரு புது மழை பெய்தாற் போன்ற மகிழ்ச்சி நிலவியதை அடுத்து முற்றிலும் எதிர்பாராதவிதமாய் மின்னலைப் போல் வந்து தோன்றிய கொல்லன், இளையநம்பியின் அந்த ஓலையைக் கொடுத்து விட்டுப் போகவே, செல்வப் பூங்கோதையின் உவகை கட்டுக்கடங்காத பூரிப்பாகப் பெருகியது. பல நாள் வெம்மையைப் புறத்தே போக்கிவிட்ட அந்தப் புது மழையைப் போல் தன் இதயத்தின் கோபதாபங்கள் எல்லாமே உடன் மறைந்து விட்டாற் போலிருந்தது அவளுக்கு. காத்தற் கடவுளாகிய இருந்த வளமுடைய பெருமாளே தன் துயரங்களுக்கு இரங்கி அருள் புரிந்து விட்டதாக அவள் உணர்ந்தாள். தானே உருகி உருகி ஓலைகளை எழுதிக் கொண்டிருந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து அவரிடம் இருந்தும் ஓர் ஓலை தனக்கு மறுமொழியாகக் கிடைத்ததைத் திருவிழாக் கொண்டாடி வரவேற்கலாம் போலிருந்தது. அதை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வதற்கு ஏற்ற தனிமையை நாடி மாளிகையின் பின்புறமிருந்த மலர்வனத்திற்குச் சென்றாள் அவள். மாலை வேளையின் இதமான சூழ்நிலையும் அவ ளுடைய உல்லாசத்திற்குத் துணை புரிவதாயிருந்தது. தாயின் கண்காணிப்பிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமான உற்சாகத்தோடு அந்த ஓலையைப் படிக்க விரும்பினாள் அவள்.

என்மேல் அன்பு செய்வதையே ஒரு நோன்பாக இயற்றி வரும் ஆருயிர்க் காதலை உடைய செல்வப் பூங்கோதைக்கு இளைய நம்பி வரையும் மடல்! சூழ்நிலை இயைந்து வராத காரணத்தால் நீ ஆறுதலடையும்படி என் கைப்பட இதுவரை நான் எதுவும் உனக்கு எழுத முடியவில்லை. என் பக்கம் அது ஒரு குறைதான். ஆனால் அந்தக் குறை நீ எனக்குக்கடுங்கோன் என்று குரூரமாகவும், கோபமாகவும் பெயர் சூட்டிச்சபிக்கும் அளவிற்குப் பெரியது என்பதை அண்மையில் நீ எழுதியதைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். ஆருயிர்க் காதலனுக்குச் சாபம் கொடுக்கும் அளவிற்கு அன்பில் உரிமையும் அதிகாரமும் உள்ள பெண்கள் திருமோகூரில்தான் பிறக்க முடியும் என்று தெரிகிறது. காராளர் குடும்பம் பாண்டிய அரச வம்சத்துக்கு இணையான பெருமை உடையது. அந்தக் குடும்பத்து இளம்பெண் ஒருத்திக்குத் தன் காதலன் மேற் சாபம் விடும் அளவு கோபம்கூட இருக்கலாம்தான். ஆனால், உன் கோபத்தில் திரும்பத் திரும்ப நீ சுமத்தியிருக்கும் ஒரு குற்றத்தை நான் மறுக்க முடியும். நான் ஏதோ உன்னை அடியோடு மறந்து போய்விட்டது போலவும், நீ மட்டுமே என்னை நினைத்துத் தவித்துக் கொணடிருப்பது போலவும் எழுதுகிறாய். நான் மறந்ததை நீ எப்படி அறிய முடியும்? நீ என்னை மறவாமல் நினைந்துருகுவதை நிரூபிக்க நான் எல்லாவற்றையுமே மறந்து விட்டதைப்போல ஒரு குற்றத்தை என் தலையில் சுமத்த வேண்டியது அவசியம்தானா? நியாயம்தானா? நீ கொற்றவைக் கோயிலுக்கு ஒரு மண்டலம் நெய் விளக்குப் போட்டதும், இருந்தவளமுடையாரை ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களால் அர்ச்சித்ததும் ஒருபோதும் வீண் போகாது. என் பிரிவு உன்னை மெய்யாகவே ஊமையாக்கி விட்டதாக இரண்டு ஓலைகளிலுமே திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறாய்! பேச்சுத்தான் ஊமையாகி இருக்கிறதே ஒழிய உன் கோபதாபங்கள் இன்னும் ஊமையானதாகத் தெரியவில்லை. 

கொற்றவைக் கோயிலுக்கு நெய் விளக்கு வேண்டுதல், இருந்த வளமுடையாருக்கு ஆயிரத்தெட்டுத் தாமரை மலர் அர்ச்சனை, ஆகியவை போதாதென்று இப்போது தாய் தந்தையுடன் தீர்த்த யாத்திரை வேறு சென்று விட்டு வந்திருக்கிறாய். இவ்வளவு புண்ணியப் பயன்களைப் படைகள் போல் ஒன்று சேர்த்துத் திரட்டி வைத்துக் கொண்டிருக்கிற நீ வெற்றி பெறாமல் வேறு யார் வெற்றி பெறப் போகிறார்கள் செல்வப்பூங்கோதை? உன் அன்புக்குப் புண்ணியப் பயன் இருக்கும்போது நீ பயப்படுவானேன்? இங்கிதமான குரலில் கடுமையான வார்த்தையைச் சொன்னாலும் இனிமையாகத்தான் இருக்கும். அதுபோல் பிரியத்திற்குரிய நீ என்னைக்கடுங்கோன் என்று அழைக்கிறாய். ஆனால், இன்று இந்த விநாடியில் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது வேறு ஒருவருக்கும் நான்கடுங்கோன் ஆகிவிட்டேன். என்னை இத்தனை காலம் இந்த மதுரை மாநகரில் மறைந்திருக்க இடம் அளித்து அன்போடு பேணி உபசரித்துக் கண்ணை இமை காப்பதுபோல் காத்த ஒருவருக்கு உண்மையிலேயே நான் கடுங்கோனாக நேர்ந்து விட்டது. இங்கே நான் கடுங்கோனாக நேர்ந்ததே உனக்குக் கடுங் கோனாகக் கூடாது என்பதனால்தான். இதை நீ இப்போது விளங்கிக் கொள்ள இயலாவிடினும் எப்போதாவது நானே உன்னிடம் விளக்கிச் சொல்லுவேன். உன் வெற்றியில் இங்கே என்னருகிலுள்ள இன்னொருவருடைய தியாகம் அடங்கப் போகிறது.

நான் உன்னை நினைக்கவே இல்லை என்று நீ என் மேல் குற்றம் சுமத்தும் போது எனக்கு, இளமையில் திருக்கானப்பேரில் நான் கல்வி கற்ற காலத்து நிகழ்ச்சி ஒன்று நினைவு வருகிறது பெண்ணே! என்னோடு ஒரு சாலை மாணவனாகக் கற்ற இளைஞன் ஒருவன், தான் காதலித்த பெண்ணை அடையமுடியாத ஏமாற்றத்தில் பித்துப்பிடித்து மடலேறும்* நிலைக்குப் போய் எக்காலமும் அவள் பெயரையே கூவி அரற்றிக் கொண்டு தெருக்களில் திரிந்தான். திருமோகூரில் உன் தந்தையோடு அமர்ந்து விருந்துண்ண மாளிகைக்குள் வந்தபோது அன்று முதன்முதலாக நீயும் உன் தாயும் என்னை மங்கல ஆரத்தி எடுத்து வரவேற்றிர்கள். அப்போது நீ என்னை நோக்கிச் சிரித்த சிரிப்பைக் கண்டு எனக்கு அந்தத் திருக்கானப்பேர்ப் பித்தனின் காதல்தான் நினைவு வந்தது. உன் சிரிப்பில் எங்கே நான் பித்தனாகி விடுவேனோ என்றுகூட அஞ்சினேன். அந்தத் திருக்கானப் பேர்ப் பித்தனைப்போல் நான் தெருவில் எல்லாம் உன்னைப் பெயர் சொல்லிக் கூவித் திரிந்தால்தான் எனக்கு உன் ஞாபகம் இருப்பதாய் நீ நம்புவாய் போலிருக்கிறது. அழகிய பெண்ணின் புன்சிரிப்பில் எதிரே நிற்கிற இளைஞன் கவியாகிறான் என்பார்கள். நீ அந்த திருக்கானப்பேர்ப் பித்தனைப்போல் என்னையும் கவியாக்கி விட்டாய். மொழியின் நயங்களையும், பொருள் நுணுக்கங்களையும், தேர்ந்த கை மலர் தொடுப்பது போல், பதங்களை இணைக்கும் இங்கிதங்களையும் அறியாத பாமரனைக்கூட ஓர் அழகிய பெண் கவிஞன் ஆக்கி விடுகிறாள். நான் பாமரன் இல்லை. ஆனால் என்னையும் நீ கவியாக்கியிருப்பதை அறிந்தால் உன் மனம் ஒரு வேளை அதற்காக மகிழலாம். கர்வப்படலாம். கீழ்வரும் பாடல் மூலம் உனக்கு அந்தக் கர்வத்தை நான் அளிக்கலாமா?

(* தான் காதலித்த பெண்ணை அடைய வேண்டிக் கூரிய பனை மடலாற் செய்த குதிரையில் ஏறி ஓர் இளைஞன் தன்னையே கொடுமைப்படுத்திக் கொள்ளுதல்)

 

முத்தும் பவழமும் -
நல்லி
தழும் முறுவலுமாய்ச்
சித்திரமே
போல்வந்தென்
சிந்தை
குடிபுகுந்த
நித்தில
வல்லி!
செல்வப்
பூங்கோதாய்!
கத்தும்
கடல்ஏழும்
சூழ்தரு
காசினியில்
சித்தம்
நினைப்புச்
செய்கை
உள்ளளவும்
எத்தாலும்
நின்னை
மறப்பறியேன்
என்பதனை
வித்தும்
முளையும்போற்
கலந்திணைந்த
விருப்பத்தால்
சற்றேனும்
நினைத்திருந்தால்
தவிர்ந்திடுவாய்
சீற்றமெலாம்

 

இப்போது சொல் செல்வப்பூங்கோதை! ஒவ்வோர் அழகிய பேதைப் பெண்ணும் தன்னை நினைத்துத் தவிக்கும் யாரோ ஓர் ஆண் மகனைக் கவிஞனாக்கிவிட்டு அவன் கவிஞனாகியதற்குக் காரணமே தான் என்பதை மறந்து திரிகிறாள் என்பது எவ்வளவு நியாயமான வாதம்? நீயும் அப்படி மறந்து திரிகிறாய் என்று நான் உன்மேற் குற்றம் சுமத்த முயன்றால் அது எவ்வளவிற்குப் பொருந்துமோ அவ்வளவிற்கே நீ நான் உன்னை மறந்து விட்டதாக என் மேற் சுமத்தும் குற்றமும் பொருந்தும். நான் உன்னைவிடக் கருணை உள்ளவன் பெண்ணே! நீ சிறிதும் இங்கிதமில்லாமல் என்னைக்கடுங்கோன் என்று சபித்தாய். நானோ உன்னை அழகிய சிறப்புப் பெயர்த்தொடராகத் தேர்ந்து நித்திலவல்லி என அழைத்திருக்கிறேன். யாருடைய காதற் பெருந்தன்மை அதிகம், யார் மறக்கவில்லை என்பதற்கெல்லாம் இவைகளே சாட்சி.”

என்று அந்த ஓலையை முடித்திருந்தான் இளையநம்பி. இந்த ஓலையைப் படித்து முடித்ததும் மகிழ்ச்சியின் எல்லையில் திளைத்தாள் செல்வப் பூங்கோதை. அவ்வளவு நாட்களாக இளையநம்பியைப் பிரிந்தும் காணாமலும் இருந்ததால் ஏற்பட்ட தாபம் எல்லாம் இந்த ஒரே ஒரு கனத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது போலிருந்தது. அந்த ஓலையைத் திரும்பப் படித்து மகிழ்ந்தாள் அவள். நீற்றறையின் வெம்மையில் வாடியவன், நீரில் மீண்டும் மீண்டும் மூழ்கி எழுவதை ஒத்திருந்தது அவள் செய்கை. தாபம், தவிப்பு என்ற நீற்றறையில் பல நாட்களாகப் புழுங்கிய அவள்மேல் தண்ணென்று அன்பு மழையே பெய்ததுபோல் வந்திருந்தது அந்த ஓலை. ஓலையைக் கொடுத்ததுமே கொல்லன் விரைந்து திரும்பிப் போய்விட்டானே என்றெண்ணி இப்போது வருந்தினாள் அவள். அவன் திரும்பிப் போகாமல் இருந்தாலாவது ஓர் ஓலையை எழுதி அவருக்குக் கொடுத்தனுப்பலாம் என்றும் கழிவிரக்கம் கொண்டாள் அவள். மகிழ்ச்சி வெறியில் உடல் சிலிர்த்தது. நிலை கொள்ளாத உவகையில் தோட்டத்து மாதவிக் கொடியை யாரும் காணாத தனிமையில் தழுவி மகிழ்ந்தாள் அவள். பூங்கொத்துக்களை முகத்தோடு முகம் சேர்த்து மென்மையையும் நறுமணத்தையும் நுகர்ந்தாள். வாய் இனிமையாக இசைத்துக் களித்தது. ‘நித்திலவல்லி என்ற அந்த அழகிய பெயரை மெல்லிய குரலில் தனக்குத் தானே சொல்லிப் பார்த்துக் கொண்டாள். மானாகத் துள்ளியும் மயிலாக ஆடியும் தன் மகிழ்ச்சி வெள்ளம் தோட்டம் நிறையப் பெருகும்படி குயிலாக இசைத்தும் உவகை பூத்தாள்.

பெறற்கரிய செல்வமாகிய அந்த ஓலையை மறைத்துக் கொண்டு மீண்டும் அவள் மாளிகைக்குள் நுழைந்தபோது மாளிகையில் தாய் அந்திவிளக்கு ஏற்றிக் கொண்டிருந்தாள். பெருமாளிகை வாயிற் புறமாகிய தெரு முன்றிலில் யாரோ கூப்பிடுவது கேட்டு, “யார் என்று போய்ப் பார்த்துவிட்டு வா மகளே!” என்று செல்வப்பூங்கோதையை வேண்டினாள் தாய். வாயிலுக்கு விரைந்தபோது படி தடுக்கவே ஒரு கணம் தயங்கி நின்றாள் மகள். மாளிகை நடுக் கூடத்திற்கும் வாயிற் புறத்துக்கும் இடையே நெடுந் தொலைவு நடந்து செல்ல வேண்டியிருந்தது; இருட்டிவிட்டதால் தெரு முன்றிலில் நிற்பவர் யாரென்று உள்ளேயிருந்து காண முடியவில்லை. இடைகழியின் மங்கலான விளக்குகள் இருளோடு போராடிக் கொண்டிருந்தன.

பழையபடி வாயிற்புறமிருந்து மீண்டும் யாரோ கூப்பிடுகிற குரல் எழவே, தாய், 

உன்னைத்தான் செல்வப் பூங்கோதை மறந்து விட் டாயா அதற்குள்? வாயிற்புறம் போய் யாரென்று பார்த்து விட்டு வா அம்மா என்று மறுபடியும் நினைவூட்டினாள். நடை தடுக்கித் தயங்கி இருந்த செல்வப்பூங்கோதை வாயிலுக்குச் சென்றாள். இடைகழிகளில் அம்பாரம் அம்பாரமாகக் குவித்திருந்த புதுநெல் மணம் நாசியில் புகுந்து நிறைந்தது. களஞ்சியங்கள் இருந்த கூடாரத்தையும் கடந்து அவள் முன் வாயிற்புறத்திற்கு வந்து பார்த்தபோது, அங்கே இருளோடு இருளாக இருவர் நின்றிருந்தனர். அவர்கள் இருவருமே விளக்கொளியில் நேருக்கு நேர் முன்வந்து நிற்கத் தயங்குவதாகத் தோன்றியது. முதலில் அஞ்சினாலும் பின்பு துணிவடைந்தாள் அவள்.

யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” - என்று கேட்டுக் கொண்டே மாடப் பிறையிலிருந்த கை விளக்கை எடுத்து அவர்கள் அருகே ஒளியைப் பரவவிட்ட செல்வப் பூங்கோதை, இருவரும் யாரென்று தெரிந்ததும் திகைத்தாள். அவர்கள் இருவரும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மெய்க் காவலாக நியமிக்கப்பட்டிருந்த தென்னவன் ஆபத்துதவிகளாக இருக்கக் கண்டு அவளுக்கு வியப்பாயிருந்தது. பெரியவர் அந்தப் பகுதியை விட்டு எங்கோ மறைவாகப் போய்ப் பல திங்கள் காலம் கடந்த பின் நீண்ட நாட்களுக்கு அப்பால் தன் எதிரே அவருடைய மெய்க் காவலர்களைக் கண்டு ஒன்றும் புரியாத மனக் குழப்பத்தோடு,

தந்தையார் ஊரில் இல்லை! உங்களுக்கு என்ன வேண்டும்? பெரியவர் இப்போது எங்கே எழுந்தருளி இருக்கிறார்?” என்று வினவினாள் அவள்.

உங்கள் தந்தையார் இப்போது இங்கே திருமோகூரில் இல்லை என்பதை நாங்களும் அறிவோம் அம்மா. இப்போது நாங்கள் தேடி வந்தது உங்களைத்தான்! உங்கள் தந்தையாரை அல்ல... பெரியவர் இப்போது இந்தக் கணத்தில் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்காக இங்கே திருமோகூருக்கே எழுந்தருளி ஆல மரத்தடியில் தங்கியிருக்கிறார் என்று நாங்கள் கூறினால் நம்புவதற்கு அரியதாயிருக்கும்.”

மெய்யாகவா இங்கு எழுந்தருளியிருக்கிறார்?”

உயிரே போவதானாலும் தென்னவன் ஆபத்துதவிகள் பெரியவர் பற்றி மெய் அல்லாததைக் கூறமாட்டோம் அம்மா! அவர் கட்டளைப்படியே தங்களை உடனே அழைத்துச் செல்லத்தான் இப்போது இங்கு வந்தோம்.” 

இதைக் கேட்டு அவள் திகைப்பும் குழப்பமும் முன்னை விட அதிகமாயின.

 

13. மகாமேருவும் மாதவிக்கொடியும்

 

பெரியவர் மதுராபதி வித்தகர் பேதைப் பெண்களில் ஒருத்தியாகிய தன்னைச் சந்திப்பதற்காகவே மீண்டும் திருமோகூர் வந்திருக்கிறார் என்பதைத் தன் செவிகளாற் கேட்டுமே செல்வப்பூங்கோதை அதை நம்பமுடியாமல் திகைத்தாள். பெரியவரை எந்நேரமும் நிழல் போற் காத்துவரும் அந்த ஆபத்துதவிகள் இருவரையும் அவள் நன்கு அறிவாளாகையினால் அவர்கள் மேல் அவளுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் எழவில்லை. பொய் சொல்லுவார்கள் என்றோ, ஏமாற்றுவார்கள் என்றோ அவர்களைப் பற்றி நினைப்பது கூடப் பெரும் பாவம் என்பதை அவள் தெளிவாக உணர்ந்திருந்தாள். அப்படியிருந்தும் காரணமின்றியே அவள் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. பதற்றத்தோடு அவள் அவர்களைக் கேட்டாள்:

உள்ளே போய்ச் சொல்லி அன்னையையும் உடன் அழைத்துக் கொண்டு வரலாம் அல்லவா?”

இல்லை, அம்மா! தங்களை மட்டுமே தனியே அழைத்துவரச் சொல்லித்தான் கட்டளை!”

அப்படியானால் உள்ளே சென்று தாயிடம் வேறு ஏதாவது புனைந்து சொல்லிவிட்டு நான் மட்டும் வருகிறேன் - என்று அவர்களிடம் கூறிவிட்டு மாளிகைக்குள் சென்ற செல்வப்பூங்கோதை கொற்றவைக் கோவிலுக்குச் சென்று வருவதாகத் தாயிடம் கூறி விடை பெற்றபின் மீண்டும் வாயிற்புறம் வந்தாள். தாய்வாயிற்புறம் யார்?’ என்று கேட்டபோது வேறு ஏதோ புனைந்து கூறியிருந்தாள் அவள். தாயிடம் கூறியது பொய்யாகி விடாமல், போகிற வழியிலேயே கொற்றவையை வணங்கிச் செல்லவும் நினைத்தாள்.

போகலாம்! வாருங்கள் என்று சொல்லி அவர்கள் புறப்பட்டதும் பின் தொடர்ந்தாள் அவள். வாயிற்புறம் வரும்போது முதலில் நடை தடுக்கியதனாலும், மனம் இனம் புரியாமலே வேகமாக அடித்துக் கொண்டதாலும், இன்னதென்று புரியாத ஒருவகை மருட்சியும், பயமும் ஆட்கொண்டிருந்ததாலும் இளையநம்பியின் காதல் மயமான ஓலையைப் படித்த உற்சாகம் அவள் இதயத்தில் இன்னும் நிறைவாக இருந்தது. அந்த உற்சாகம் அவளை எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நடந்துபோகச் செய்ய முடியும் போலிருந்தது. நடு வழியில் கோவில் வாயிலில் ஒரு கணம் நின்று கொற்றவையை வணங்கினாள். மனத்தின் உற்சாகம் புறத்தே தெரிய அப்போதில் அவள் நடையே ஓட்டமாக இருந்தது. பெரியவர் வழக்கமாகத் தங்கும் அந்தப் பெரிய ஆலமரத்தடிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவளை அழைத்து வந்த ஆபத்துதவிகள் வெளிப்புறமே விலகி நின்று கொண்டனர். உள்ளே செல்லும் முன்பாக வந்த வேகம் குறைந்து அவள் கால்கள் வெளிப்புறமே தயங்கின. என்ன காரணத்தினாலோ உள்ளே செல்வதற்குக் கால்கள் நகர மறுப்பதை அவள் உணர்ந்தாள். ஆனால் செயல்பட முடியவில்லை.

அன்று என்னவோ இருள் சூழ்ந்துவிட்ட அந்த நேரத்தில் அந்தப் பழம் பெரும் ஆலமரமும் அதைச் சுற்றிய பகுதிகளும் இயல்பை மீறிய அமைதியோடு தென்பட்டன. குகைபோல் இருந்த அடிமரப் பொந்தின் முனையில் ஒளிதந்து தீப்பந்தம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. முன்பெல்லாம் பெரியவர் இதே இடத்தில் தங்கியிருந்த போது இந்தப் பகுதி இந்த நேரத்திற்கு எவ்வளவு கலகலப்பாக இருக்குமோ அவ்வளவு கலகலப்பாக இன்று இப்போது இல்லை என்பது போல் அவளுக்குப் புரிந்தது. எல்லாமே எதையுமே எதிர்பார்த்து ஒடுங்கி உறைந்து போயிருப்பது போல் ஒரு சூனிய அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இவ்வளவு இரகசியமான இத்தனை குறைவான எண்ணிக்கையுள்ள ஆபத்துதவிகளுடன் எதற்காகத் திடீரென்று இவர் திருமோகூருக்கு மீண்டும் வந்திருக்கிறார் என்று சிந்திக்கவும், அநுமானிக்கவும் முயன்று தோற்றது அவள் மனம்.

வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் துணிந்து ஒவ்வோர் அடியாகப் பெயர்த்து வைத்து உள்ளே சென்றாள் அவள். கணிரென்ற அந்தக் குரல் அவளை வரவேற்றது.

வா, அம்மா! நீயும் உன் அன்னையும் மற்றவர்களும் நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?”

முன்னைவிடத் தேசு நிறைந்து சுடர் விரிக்கும் அந்தத் தோற்றத்தையும் முகத்திலிருந்து ஊடுருவும் ஒளிநிறைந்த கண்களையும் பார்த்துக் கூசிய அவள் ஒரிரு கணங்கள் மறுமொழி கூற வார்த்தைகளே இன்றி திகைத்தாற்போல் அப்படியே நின்று விட்டாள். செம்பொன் நிறமுடையதும் மிகப் பெரியதுமான மகாமேரு மலையைத் திடீரென்று மிக அருகில் கண்டு துவண்ட ஒரு சிறிய மாதவிக் கொடிபோல் தளர்ந்து திகைத்திருந்தாள் செல்வப் பூங்கோதை. மீண்டும் அவர் குரலே ஒலித்தது:

உன்னைத்தானே கேட்கிறேனம்மா? ஏன் பதில் சொல்லாமல் நின்று விட்டாய்?”

தங்கள் திருவருளால் இதுவரை நலத்துக்கு ஒரு குறைவும் இல்லை, ஐயா!”

மீண்டும் இமையாமல் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு, அவர் கூறினார்:

இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருப்பதாகத் தெரிகிறது செல்வப்பூங்கோதை!”

தங்களை ஒத்த பெரியோர்களைக் கண்டு வணங்கும் பேறு கிடைத்தால் இந்தப் பேதை அதற்காக அடையாத மகிழ்ச்சியை வேறு எதற்காக அடைய முடியும்.” 

இன்று உன் பேச்சுக்கூட மிகவும் சாதுரியமாக இருக்கிறது. ஆயினும் இது என்னைக் காண்பதற்கும் முன்பாகவே உனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரிகிறது பெண்ணே...”

இந்தச் சொற்களைக் கேட்டு நடுங்கிய நடுக்கத்தில் தன் இடைக்கச்சினுள் மறைக்கப்பட்டிருந்த இளையநம்பியின் ஒலையே மெல்ல நழுவி அவர் முன்பாகக் கீழே விழுந்து விடுமோ என்று அஞ்சினாள் செல்வப்பூங்கோதை. இந்த வினாவிற்குப் பின் எதிரே அமர்ந்திருந்த அந்தக் கம்பீரமான வடிவம் மிகப் பெரிய சிகரமாய் உயர்வது போலவும், தான் அந்தச் சிகரத்தின் முன்னே பெருங் காற்றில் ஆடும் ஒரு சிறு தளிர்க்கொடிபோல் தளர்வதாகவும் உணர்ந்தாள் அவள். பயத்தில் அவளுடைய உடல் பதறியது. பேச்சை வேறு திசைக்கு மாற்ற முயன்று,

ஐயா தீர்த்தயாத்திரை முடிந்து திரும்பித் திருமோகூர் வந்ததுமே என் தந்தை இங்கிருந்து வெளியேறியவர் தான்; இன்னும் அவர் திரும்பி வரவில்லையே?” என்றாள்.

அவர் வேறெங்கும் போய்விடவில்லை, செல்வப் பூங்கோதை! என்னிடம்தான் வந்திருந்தார். இப்போதும் என் காரியமாகத்தான் போயிருக்கிறார். தீர்த்தயாத்திரை முடிந்ததும் நான் தான் அவரை என்னிடம் உடனே வரச் சொல்லியிருந்தேன் என்று அதற்கு அவரிடமிருந்து மறுமொழி வந்தது; தன்னையும் தன் உள்ளுணர்வுகளையும் அவர் காண விடாமல் விலக்கும் நோக்கத்தோடு வேறு பேச்சுக்களை வளர்க்க விரும்பிய அவள், “இவ்வளவு காலமாகத் தாங்கள் எங்கே சென்றிருந்தீர்கள் ஐயா?” என்று கேட்க எண்ணினாள்; ஆனால் அப்படி எண்ணிய மறு கணமே அந்தக் கேள்வி தன் நிலைமையை மீறியது என்னும் பயத்துடன் அவ்வாறு அவரை வினாவும் எண்ணத்தை உடனே விரைந்து தவிர்த்தாள்.

இவ்வளவு காலமாகத் திருமோகூர் எல்லையில் தங்களைக் கண்டு வணங்கும் பேறு எங்களுக்குக் கிட்ட வில்லையே; ஏன்?’ என்று வேண்டுமானால் பணிவாகவும், அதே கேள்வியை வேறுவிதமாக மாற்றிக் கேட்கலாமே தவிர, முதலில் நினைத்தபடி, ‘எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு காலம்?’ என்பது போல் அவரைக் கேட்கவே கூடாது என்று தன் நாவை அடக்கிக் கொண்டு விட்டாள் அவள். வாளின் நுனியில் நடப்பதுபோல் மிகமிக எச்சரிக்கை உணர்வோடு அவள் அவர் முன்பு நிற்க வேண்டியிருந்தது.

அவள் இவ்வாறு சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே அவர் காலடியிலும் அருகிலும் இருந்த புற்றுக்களில் இருந்து நாகப் பாம்புகள் சீறியபடி செக்கச் செவேரென்று பிளந்த நாவோடு வெளிப்பட்டு உடலின் மேலேறின. படமெடுத்தன; அவரோ அசையாமல் அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

கழுத்திலும், தோளிலும் காலிலும் கொடிய நாக சர்ப்பங்களோடு முன்பும் சில சந்தர்ப்பங்களில் இப்படிக் கோலத்தில் அவள் அவரைக் கண்டு பயந்திருக்கிறாள். இன்றும் கூட அந்தப் பயத்தையும், நடுக்கத்தையும் அவளால் தன்னிடமிருந்து தவிர்க்க முடியவில்லை. பயமும் திகைப்பும் மாறி மாறித் தெரியும் விழிகளோடு அவள் அவர் எதிரே மருண்டு நின்று கொண்டிருந்தாள். அந்த நிலையில் அவரே சிறிது நேரத்திற்குப்பின் மெல்ல மீண்டும் அவளை வினாவத் தொடங்கினார்:

இன்று மாலையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சியோடு இருப்பதை நான் குறுக்கிட்டுப் பாழாக்கி விட்டேனே என்று உனக்கு என்மேல் கோபம் வருகிறதல்லவா?”

 

அப்படி ஒரு போதும் இல்லை ஐயா. தாங்கள் என் போன்ற பேதைகளின் கோபத்துக்கு அப்பாற்பட்டவர்! இன்னும் சொன்னால் என்னை ஒத்த பேதைகளைக் கோபித்துக் கொள்வதற்கும், கடிந்து கொள்வதற்கும் உரியவர்...”

நீ சொல்வது போல் உரிமை இருப்பதாக நினைத்துக் கொண்டுதான் நானும் இங்கு இன்று வந்தேன். உன்னைக் கூப்பிட்டனுப்பினேன். நீயும் என் அழைப்புக் கிணங்கி வந்திருக்கிறாய்...”

நேராக எதைச் சொல்ல முடியாததனால் இதையெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவர் சொல்லியதிலிருந்து சொல்ல விரும்புவதைப் புரிந்து கொள்ளமுடியாமல் மருண்டாள் செல்வப் பூங்கோதை. அதிகாரமோ, ஆணையோ, சினமோ, சீற்றமோ சிறிதுமின்றி அவர் எல்லையற்ற நிதானத்தோடும், எல்லையற்ற பொறுமையோடும் இன்று தன்னிடம் பேசியதே அவளுக்குச் சந்தேகத்தையும் பயத்தையும் உண்டாக்கிற்று. இந்த அடக்கம் இயல்பானதில்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது. இந்த நிதானமும் ஐயப்பாட்டிற்கு உரியதாகவே அவளுக்குத் தோன்றியது. தந்தையாரை இவரே வேறு காரியமாக எங்கோ அனுப்பியிருக்கிறார். தாயை உடன் அழைத்து வரவேண்டாம் என்று முன்கூட்டியே இவர் எனக்குச் சொல்லி அனுப்பி விட்டார். என்னை மட்டும் தனியே அழைத்து இப்படிப் பேசுவதற்கு அது என்னதான் அவ்வளவு பெரிய அந்தரங்கமாக இருக்கும் என்று அவள் மனம் ஒவ்வொரு கணமும் நினைத்துத் தயங்கிக் கொண்டேதான் இருந்தது. அந்தத் தயக்கத்தோடுதான் அவள் அவர் முன்பாக அப்போது நின்று கொண்டிருந்தாள்.

செல்வப்பூங்கோதை! முன்பெல்லாம் வெள்ளிக் கிழமைகளில் மாலை தோறும் எனக்கு நீ கொண்டு வந்து அளித்த தேனும் தினைமாவும் எவ்வளவு சுவையாக இருந்தன தெரியுமா?” என்று சிறிது நேர மெளனத்திற்குப்பின் பழைய நாட்களில் எப்போதோ அவள் செய்த உபசாரம் ஒன்றை இருந்தாற்போலிருந்து நினைவுகூர்ந்து பேசினார், அவர். இப்படி அவர் பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தித் தன் மனத்தை மெல்ல மெல்ல இளகச் செய்வது அவளுக்கே புரிந்தாலும் அவருடைய பேச்சில் இசைந்து வணங்கி வசப்படுவதைத் தவிர்க்க ஆற்றலின்றி இருந்தாள். மிகவும் பணிவாக அவளே அவரை வேண்டவும் செய்தாள்:-

ஐயா! இப்போது கூடத் தாங்கள் கட்டளையிட்டால் நாளைக்கே தங்களுக்குத் தேனும், தினைமாவும் கொண்டு வந்து படைக்கின்ற பேறு இந்தப் பேதைக்குக் கிடைக்கும்...”

இன்று நீ மிகமிக மகிழ்ச்சியாயிருப்பதால் உன்னை நான் விரைவாக விடைகொடுத்து அனுப்புவதுதான் முறை. செல்வப்பூங்கோதை நாளை மாலைக்குள் நீ மீண்டும் வா! வரும்போது இந்தக் கிழவனின் ஆசையை மறந்து விடாமல் தேனும் தினைமாவும் கொண்டுவா... நாளை இரவில் நான் இங்கிருந்து புறப்பட்டு விடுவேன். கோநகர் சென்று வையையின் வடகரையில் மறைந்து தங்கப் போகிறேன். அப்படிப் புறப்படு முன் இந்தக் கிழவனுக்கு உன்னிடமிருந்து ஒரு நல்வாக்குக் கிடைக்க வேண்டும் அந்த நல்வாக்கைக் கோரவே இன்று இங்கு வந்தேன்! நீ மறுக்க மாட்டாய் என்பதை நான் அறிவேன்.”

ஐயா! தங்களைப் போன்றவர்கள் வேண்டவும், கோரவும் செய்கிற அளவு நான் அத்துணைப் பெரியவளில்லை. தாங்கள் எனக்குக் கட்டளை இடவேண்டும். தங்கள் கட்டளைக்கு இந்தப் பேதை எக்காலத்திலும் கடமைப்பட்டிருப்பவள். தாங்கள் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றக் காத்திருக்கிறோம் என்று மிகவும் பணிவாகக் கைகூப்பினாள் செல்வப்பூங்கோதை. இப்படி வணங்கும் போதே அவரைக் கருங்கல்லாகவும், தன்னை மென்மையான மலர் மாலையாகவும் ஒப்பிட்டுச் சிந்தித்துத் தான் முன்பொரு முறை அஞ்சியதையும் நினைத்துக் கொண்டாள் அவள். கொடியாகத் துவண்டு பணிந்து மறுமொழி கூறிக் கொண்டிருந்தாலும் உள்ளுற அவளுக்கு அவரிடம் அச்சமாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. அந்த மா மலை, வாடித்துவளும் கொடி போன்ற தன்னைத் தலையெடுக்க விடாதபடி எந்தத் தந்திரத்தினாலாவது நசுக்கி விடுமோ என்று. பயந்து பதறினாள் அவள். தன்னைப் போன்ற பேதைப் பெண்களைப் பற்றி இவ்வளவு அக்கறையோடும், பிரியத் தோடும் நினைக்கிற வழக்கமே இல்லாத அவர், இன்று காட்டும் இந்தப் பரிவைப் பார்த்து அவள் வியந்ததை விடப் பயந்ததே அதிகமாயிருந்தது.

நாளைக்கு மாலையில் மீண்டும் வா அம்மா! தேனையும் திணைமாவையும் மட்டும் மறந்து விடாதே.” என்று கூப்பிட்டனுப்பிய விரைவுக்கு ஏற்ப எதையுமே பேசாமல் தனக்கு அவர் மிகவும் சுலபமாகவே விடை கொடுத்துத் திரும்பப் போகச் சொல்லியதையும் அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் எதற்காகவோ தன்னைச் சிறிது விட்டுப் பிடிக்க முயல்கிறார் போலும் என்றும் அவளுக்கே தோன்றியது. மாளிகை வரை ஆபத்துதவிகள் துணை வந்து அவளைத் திரும்பக் கொண்டு வந்து விட்டனர். இரவு முழுதுமே அவருடைய பரிவின் காரணத்தைப் பற்றிச் சிந்தித்துப் புரிந்து கொள்ள முயன்றாள் அவள்.

 

14. கொற்றவை சாட்சியாக...

 

எதிர்பாராத விதமாகத் தன்னை நோக்கிப் பெருகும் அந்தப் பரிவின் காரணம் அவளுடைய அநுமானத்திற்கும் எட்டாததாகவே இருந்தது. பெரியவர் திருமோகூருக்கு வந்திருப்பதையோ, தான் போய் அவரைச் சந்தித்ததையோ தாயிடம் கூட அவள் சொல்லவில்லை. இரவு நெடுநேரம் உறக்கமின்றி அவள் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்த போதும், “பெண்ணே அந்தி மயங்குகிற வேளையில் புறப்பட்டுப் போய்க் கொற்றவைக் கோவிலில் இப்படி உறங்காமலிருக்க வரம் பெறுவதற்காகத்தான் அவ்வளவு நாழிகை காத்திருந்து வேண்டிவந்தாயா!” என்றுதான் தாயே அவளைக் கடிந்து கொண்டாள். தான் கொற்றவைக் கோவிலுக்குச் சென்று வருவதாகச் சொல்லி விட்டுப் பெரியவர் அனுப்பியிருந்த ஆபத்துதவிகளோடு புறப்பட்டுச் சென்றதைப் பற்றித் தாய் ஐயுறவில்லை என்பதை அவளுடைய சொற்களாலேயே விளங்கிக் கொண்டாள் செல்வப்பூங்கோதை.

மறுநாள் காலை பொழுது புலர்ந்து நீராடி முடித்ததுமே உரலில் தினை இடிக்கத் தொடங்கினாள் அவள். இப்படி அடிக்கடி அவள் தினை இடிப்பதும் வழக்கமான காரியமே என்பதனால் தாய் அதைப் பற்றியும் அவளை எதுவும் கேட்கவில்லை. பெரியவரே வாய் திறந்து கேட்டிருக்கிறார் என்பதனால் நல்ல செந்தினையாக எடுத்து முறத்தில் இட்டு நொய்யும், துறுங்கும் களைந்து புடைத்த பின்பே உரலில் கொட்டி இடிக்கலானாள். நாவின் சுவைக்கு ஆசைப்பட்டுத் தான் பெரியவர் தேனும் தினைமாவும் கொண்டு வரச் சொல்லித் தன்னை வேண்டிக் கொண்டதாக அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. கசப்பு நிறைந்த காஞ்சிரங் காயையும் வேப்பிலைக் கொழுந்தையும் தின்று உடலை வைரம் பாய்ந்ததாக்கிக் கொண்டிருப்பவர், தேனுக்கும் தினைமாவுக்கும் ஆசைப்பட்டுத் தன்னை வரவழைத்துப் பேசியிருக்கமுடியும் என்பதை அவளால் ஒப்புக்கொள்ளவும் இயலவில்லை. வேறு ஏதோ பெரிய வேண்டுகோளைத் தன்னிடம் கேட்பதற்கு ஏற்ற பரிவையும் பக்குவத்தையும் உண்டாக்குவதற்குத் தக்கபடிதான் இருப்பதையும், இல்லாததையும் சோதித்து ஆழம் பார்க்கவே இந்த ஏற்பாடோ என்று அவளுக்குச் சந்தேகமாயிருந்தது. சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் மிகவும் சிரத்தையாகத் திணைமாவை இடித்துப் பிசைந்தாள் அவள். மாளிகைப் பணியாட்களிடம் நல்ல கொம்புத் தேனாகத் தேடி இறக்கிப் பிழிந்து வருமாறு அனுப்பினாள். பிற்பகலுக்குள் செங்குழம்பாகப் புத்தம் புதிய கொம்புத் தேன் பிழிந்த நுரையோடு வந்து சேர்ந்தது. பதம் பார்த்து அளவாகவும் சுவையாகவும் கலந்து நெல்லிக்கனிப் பிரமாணத்திற்கு உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டாள். தனியே ஒரு சிறிய குவளையில் தேனும் எடுத்துக் கொண்டாள். பெரியவரைத் தேடி அவள் மாளிகையிலிருந்து புறப்படும்போது பிற்பகல் கழிந்து மாலை வேளை தொடங்கியிருந்தது. முதல் நாளைப் போலவே கொற்றவைக் கோயிலுக்குச் சென்று வலங்கிவிட்டுத் திரும்பி வருவதாகத்தான் தாயிடம் சொல்லிக் கொள்ள முடிந்தது. இன்றும் ஆபத்துதவிகள் தன்னைத் தேடி வந்து அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று எதிர்பார்த்திராமல் அவளே புறப்பட்டிருந்தாள். வழியில் கொற்றவைக் கோயிலை வலம் வந்து வணங்கிச் செல்லவும் நேரம் இருந்தது. அந்த வழிபாட்டையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொண்டு அப்புறம் ஆலமரத்தடிக்குச் சென்றாள் அவள்.

அங்கே அவள் சென்றபோது உள்ளே அமர்ந்து கொண்டிராமல் ஆலமரத்தின் விழுதுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக நடந்து உலவிக் கொண்டிருந்தார் பெரியவர். அவளைப் பார்த்ததும் அவரருகே மரத்தடியில் நின்றிருந்த ஆபத்துதவிகள் இன்றும் தொலைவாக விலகிச்சென்று நின்று கொண்டனர். 

வா, அம்மா! உன்னைத்தான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் சில நாழிகைகளில் நான் கோநகரை நோக்கிப் புறப்பட வேண்டும் என்றுதான் கூறி வரவேற்றாரே ஒழிய அவள் கைக்கலசத்தில் இருந்த திணைமாவையோ குவளையில் இருந்த தேனையோ அவர் கவனித்ததாகவே தெரியவில்லை.

ஐயா தேனும் தினைமாவும் கொண்டு வரச் சொன்னீர்களே! நானே காலையிலிருந்து மா இடித்துப் பிசைந்து புதுத்தேன் பிழிந்து கொண்டு வந்திருக்கிறேன் என்று அவள் கூறினாள்; அவருக்கு அது மறந்து போயிற்றா, அல்லது அதைவிடப் பெரிய வேறு ஏதாவது நினைவைப் பற்றி விட்டதா என்று புரிந்து கொள்ள முடியாமல் மருண்டாள் அவள். அவரோ ஒரு சிறிதும் தயங்காமல் பசுமைப் பாய் பரப்பியது போன்ற அந்தப் புல்தரையில் அப்படியே அமர்ந்து கீழே உதிர்ந்திருந்த பழுத்த ஆலிலை ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு பிச்சைப்பாத்திரத்தை நீட்டும் ஒரு துறவியைப் போல் அதை அவள் முன் நீட்டினார்.

உடனே அவள் சிரித்துக்கொண்டே இரண்டு உருண்டை தினைமாவை அந்த ஆலிலையில் இட்டுக் குவளையிலிருந்த சிறிது கொம்புத் தேனையும் ஊற்றினாள். அவ்வளவில்

எனக்கு இது போதும் அம்மா! மற்றவற்றை எல்லாம் அப்படியே அதோ அவர்களிடம் பாத்திரத்தோடு கொடுத்துவிடு...” என்று கூறித் தொலைவில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவிகளைச் சுட்டிக் காட்டினார். அவளும் அப்படியே செய்தாள்.

தேனும் தினைமாவும் கொண்டு வா - என்று முதல் நாளிரவு அவர் தனக்குக் கட்டளையிட்டது தன் சிரத்தையையும், உபசரிக்கும் இயல்பையும் சோதிப்பதற்காகத்தான் என்பது இப்போது அவளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. தன்னைப் புரிந்துகொள்ள அது ஒரு பாவனை என்பதை அவள் விளங்கிக் கொண்டாள். உண்பதிலோ, ருசிகளிலோ அந்த மாபெரும் அரச தந்திரிக்கு அவ்வளவு அக்கறை இல்லை என்பது முன்பே அவளுக்குத் தெரிந்திருந்த உண்மை, இன்று மீண்டும் உறுதிப்பட்டது. கடந்த காலத்தில் பல நாட்களில் தந்தை சொல்லி அவள் கனிகளும், தேனும், தினைமாவும் கொண்டு வந்து அவருக்குப் படைத்த போதுகளிலேயே அவரைப் புரிந்து கொண்டிருந்தாலும் நேற்று அவரே தினைமாவுக்காகவும், தேனுக்காகவும் தவிப்பதுபோல் ஆடிய சாதுரிய நாடகம் அவளையே ஏமாற்றியிருந்தது. அவர் ஏதோ பெரிய காரியத்திற்காகப் பேதையாகிய தன்னை ஆழம் பார்க்கிறார் என்பதை அவள் தன் மனத்தில் உறுதி செய்து கொண்டு விட்டாள். அவர் உண்ணுகிறவரை பொறுத்திருந்த அவள், பதற்றமின்றி நிதானமாக அவருடைய இருப்பிடம் வரைசென்று கைகழுவவும், பருகவும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவரை உபசரித்தாள். பின்பு அவரே என்ன சொல்லுகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் சிறிது நேரம் அவருடைய முகமண்டலத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெண்ணுடனும் கூடவே பிறந்துவிடும் பிறவி சாதுரியமும், பாதுகாப்பு உணர்வுமே அப்போது அவளுக்குத் துணைநின்றது. அவரோ அவள்தான் முதலில் கேட்கட்டுமே என்று விட்டுப் பிடிப்பது போன்ற மன நிலையில் தேனையும் திணைமாவையும் பற்றி மட்டும் நான்கு வார்த்தைகள் பாராட்டிச் சொல்லிவிட்டு வாளா இருந்தார். ‘எதற்காகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்! எதற்காகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்?’ என்று அவளே எண்ணி ஏங்கித் தவிக்க விட்டபின் ஓடி ஓடித் தவித்த மானைத் தந்திரமாக வலை வீசிப் பிடிப்பது போல் இறுதியாக அவளை வீழ்த்தும் சாதுரியமான வேடனைப் போன்று தன் சொற்களை அடக்கி மெளனமாகக் காத்திருந்தார் அவர். எதிர் எதிர் மெளனங்களை இருவருமே ஒருவருக்கு ஒருவர் விரும்பாத அந்த நிலை சிறிது நேரம் நீடித்தது. ஆவலை அடக்க முடியாமல் அவள் தன் மெளனக் கோட்டையின் கதவுகளைத் தானே திறந்து கொண்டு வெளிப்பட்டாள்:

ஐயா! தாங்கள் இந்தப் பேதையைத் தனியே கூப்பிட்டனுப்பிய காரியம் பெரியதாயிருக்க வேண்டும். அது இன்னும் எளியாளிடம் தெரிவிக்கப்படவில்லை... அந்தக் கட் டளைக்காகவே இன்னும் இங்கே காத்து நிற்கிறேன் நான்...”

உன்னிடம் நான் இங்கிருந்து புறப்படுமுன் ஒரு நல்வாக்கு வேண்டப்போகிறேன் என்று நேற்றே சொல்லி யிருந்தேன்... நினைவிருக்கிறதா, செல்வப் பூங்கோதை?”

நன்றாக நினைவிருக்கிறது ஐயா...”

ஒரு வீரனின் குறிக்கோள் தன் வாளுக்கு மட்டும் வெற்றியைத் தேடுவதோடு நிறைவு பெற்றுவிடுகிறது அம்மா! ஆனால் என்னைப்போல ஓர் அரச தந்திரி நான் சார்ந்திருக்கும் தேசம் முழுமையும் வெற்றி பெறுகிறவரை அறிவினால் போராட வேண்டியிருக்கிறது... இடைவிடாமல் போராட வேண்டியிருக்கிறது. நிகழ்கால வெற்றிக்காக மட்டுமின்றி எதிர்கால வெற்றியையும் இன்றே தீர்மானித்துப் போராட வேண்டியிருக்கிறது.”

அவர் எதற்காக இதைத் தன்னிடம் கூறுகிறார் என்பது அவளுக்கு உடனே புரியவில்லை. ஆனால் மனம் மட்டும் பதறியது. பதற்றத்தோடு பதற்றமாக அவள் கேட்டாள்:

ஐயா! பாண்டி நாட்டை மீட்கத் தாங்கள் மேற்கொண்ட துன்பங்கள் பெரியவை. நன்றிக்குரியவை... என்றுமே மறக்கமுடியாதவை.”

ஆனால், அந்தத் துன்பங்களைப் புரிந்துகொள்ளாமல் முன்பு சில வேளைகளில் நீயும் என்மேல் கோபப்பட்டு உனக்குள் கொதித்திருக்கிறாய், செல்வப்பூங்கோதை!”

அவள் துணுக்குற்றாள். எல்லாமே அவருக்குத் தெரிந்திருக்குமோ என்று பயமாகவும் இருந்தது. ஆயினும் விட்டுக்கொடுக்காமல் பேசினாள்: 

அப்படி இந்தப் பேதை அறியாமையால் எப்போதேனும் எண்ணியிருந்தாலும் அதைத் தாங்கள் பொறுத்தருளக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் ஐயா!”

கோபிப்பதற்கும், பொறுப்பதற்கும் இது தருணமில்லை பெண்ணே நாளை பொழுது புலர்வதற்குள் மதுரைமாநகரின் கோட்டையில் பாண்டியர் மீனக் கொடி பறக்கத் தொடங்கிவிடும். கீழே இறங்கி வேற்றவர் கொடி பறக்க நேரிடாமல் இருக்க இங்குள்ள ஒவ்வொருவரும் சபதம் செய்யவேண்டும். அந்த வகையில் நீ செய்யவேண்டிய சபதமும் ஒன்றுண்டு.”

தங்கள் கட்டளை எதுவாயினும் அதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன், ஐயா! தயங்காமல் சொல்லி யருளுங்கள், ஏற்கத் தலை வணங்கி நிற்கிறேன்.”

வெற்றி பெரும் பாண்டியர் நலனுக்கு இடையூறாக எந்த நலனையும் நான் அடைய முயலமாட்டேன். பாண்டிய நாட்டின் நலனைவிட என் சொந்த நலன் பெரிதில்லை என்று கொற்றவை சாட்சியாக ஒரு சத்தியம் செய்யவேண்டும் நீ. இப்படிச் சத்தியங்களையும் வாக்குறுதிகளையும் என்னுடன் பழகும் எல்லோரிடமும் நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன் அம்மா! அதுபோல் இப்போது உன்னிடமும் கேட்கிறேன்.”

செல்வப் பூங்கோதை உடனே அந்தச் சத்தியத்தைச் செய்ய முயன்றபோது சொல் எழாமல் அவள் நா இடறி அரற்றியது. மனத்தை திடப்படுத்திக்கொண்டு அவர் கூறிய சொற்களையே மீண்டும் சொல்லிக் கொற்றவை சாட்சியாகச் சத்தியம் செய்தாள் அவள். அவர் முகம் முதன்முதலாக அவள் கண்காண மலர்ந்தது. ஒரு மகிழ்ச்சிக்காக இப்படி வெளிப்படையாக அவர் மலர்வதை இன்றுதான் அவள் காண்கிறாள். அது அவளுக்குக் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது.

இப்படிச் சில சத்தியங்கள் செய்யும்போது பொதுவாக இருக்கலாம். ஆனால், நிரூபணமாகும்போதுதான் அது எவ்வளவு பெரியது என்று உலகுக்குப் புரியும். நீ இன்று செய்த சத்தியமும் அப்படிப் பெரியது. செல்வப் பூங்கோதை!” - என்றார் அவர்.

அவரே புகழ்ந்த இந்தச் சொற்களை உடனே அவளுக்குத் தெளிவாக விளங்கவில்லை என்றாலும் அவரை வணங்கி விடை பெற்றாள் அவள். அவரும் அவளை உணர்வு நெகிழ்ந்த குரலில் வாழ்த்தி அனுப்பினார். அவள் தயங்கித் தயங்கி நடந்து சென்றாள். அவள் தோற்றம் மறைந்ததும் ஈரம் நெகிழ்ந்திருந்த கண்களை மேலாடையால் துடைத்துக் கொண்டு அவர் ஆபத்துதவிகளைக் கைதட்டி அழைத்து, “இன்னும் சிறிது நேரத்தில் நாம் கோநகர் செல்ல எல்லாம் ஆயத்தமாகட்டும் என்று கட்டளையிட்டார். அவரது அந்தக் கட்டளைக் குரலில் இருந்த உணர்வின் நெகிழ்ச்சி அவர்களுக்கே புதுமையாயிருந்தது.

 

15. போர் மூண்டது

 

அன்று அதிகாலையிலிருந்தே பாண்டிய நாட்டின் கோநகரமாகிய மதுரை எதையோ விரைந்து எதிர்பார்ப்பது போன்ற மர்மமான அமைதியில் திளைத் திருந்தது. அரண்மனைக்குள்ளும், கோட்டை மதில்களின் புறத்தேயும் வெறிச்சோடிக் கிடந்தது. பிரதான வாயில்களிலும் முக்கிய இடங்களிலும் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள களப்பிர வீரர்கள் கூரிய, வேல்களை ஏந்தியபடி காத்துக் கொண்டிருந்தனர். கோநகரப் பொதுமக்கள் எதையோ புரிந்து கொண்டது போலவும், எதையோ வரவேற்பது போலவும், எதற்கோ ஆயத்தமாயிருப்பது போலவும் தோன்றினர். வெள்ளியம்பல மன்றத்தில் வெள்ளம்போல் பெரிய யாத்திரிகர் கூட்டம் கூடியிருந்தது. பெருமழை பெய்ய மேகங்கள் கூடி மூட்டம் இருட்டிப்பது போல் நகர் எங்கும் ஒரு மர்மமான சூழ்நிலை மூடியிருந்ததைக் கூர்ந்து நோக்குகிற எவரும் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் கட்டுப்படுத்திவிட முடியாத ஓர் உணர்ச்சி, நகர் எல்லையில் மெல்ல மெல்லப் பொங்கிப் புடைத்துக் கிளர்ந்து எழுந்து கொண்டிருந்தது. இருந்த வளமுடையார் கோவிலிலும், ஆலவாய் இறையனார் திருக்கோயிலிலும், ஆறுபோற் பெருங்கூட்டம் வழிபட திரும்பிக் கொண்டிருந்தது. திருப்பரங்குன்றிலிருந்து கோநகருக்கு வந்து சேரும் அரச வீதியாகிய புறச்சாலையில் கடல்போற் பெரிய மக்கள் கூட்டம் தென்பட்டது. எல்லாரும் அகநகரைச் சேர்ந்தவர் களாகவும் தெரியவில்லை. புலவர்களைப் போல் சிலர் தோன்றினார்கள். உழுதுண்ணும் வேளாண்குடி மக்களைப் போல் சிலர் தோன்றினார்கள்; மற்போர் மைந்தர்களைப் போல் சிலர் தோன்றினார்கள். எல்லாரும் ஒரே நோக்க முடையவர்கள்தான் என்பது போல் அவர்களைப் பற்றி அநுமானம் செய்து கொள்ள மட்டும் இடமிருந்தது. வந்திருப்பவர்களின் தோற்றங்கள் வேறு வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாகவே இருக்கும் என்று நினைக்க முடிந்த விதத்திலேயே அவர்கள் ஒருவருக் கொருவர் பழகிக் கொண்டனர். கலகத்துக்குக் கருக் கொள்வது போல் பகல் முழுவதும் இதே நிலை நீடித்தது. கதிரவன் மலையில் விழுகிற நேரத்துக்கு முதற் கலகம் விளைந்தது. இரத்தம் சிந்தியது.

வெள்ளியம் பல மன்றில் இறங்கித் தங்கியிருக்கும் யாத்திரிகர் கூட்டம் முழுமையுமே மாறுவேடத்தில் வந்திருக்கும் பாண்டிய வேளாளர் படையோ என்ற ஐயப்பாட்டோடு பிற்பகலில் மாவலி முத்தரையர், கலியரசனைக் கண்டு பேசி எச்சரித்தார். கொற்கையில் இருந்து போர் முனைகளுக்குப் போக வேண்டிய குதிரைகள் போகவில்லை என்பதும் அவரால் கலியரசனுக்குத் தெரிந்தது.

கலியா குடிமுழுகி விட்டது. முன்பு பழைய அவிட்டநாள் விழாவின்போது அவர்கள் ஏமாந்தார்கள். இப்போது நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். கோநகரில் இந்தக் கணத்தில் ஆயிரக்கணக்கான பாண்டிய வீரர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். புறநகரிலும் அவர்கள் கூடி வளைத்திருக்கிறார்கள். நம்முடைய எல்லா வலிமையையும் எல்லைகளில் குவித்து விட்டதால் இங்கே இப்போது நாம் பலவீனமாயிருக்கிறோம்! கப்பலில் வந்திறங்கிய குதிரைகளும் பாண்டிய வேளாளர்களால் கைப்பற்றப்பட்டிருக்குமோ என அஞ்சுகிறேன்.”

இதைக் கேட்டுக் களப்பிரக் கலியரசன் துள்ளி எழுந்தான். முன் கோபத்தில் பற்களை நறநற வென்று கடித்தான். தீயெழ விழித்தான். சீறினான். அரண்மனை எல்லையிலிருந்த சில நூறு வீரர்களை ஒன்று திரட்டி மாவலி முத்தரையர் தலைமையில் உடனே வெள்ளியம் பல மன்றத்திற்குத் துரத்தினான். அரண்மனை உட்கோட்டை மதில்களை அடைத்துக் கொண்டான். உள்ளேயிருந்த எஞ்சிய களப்பிர வீரர்களை மதில்மேல் ஆங்காங்கே மறைந்திருந்து மதிற்புறத்தை வளைக்க வரும் பாண்டிய வீரர்கள் மேல் வேலெறிந்தும், அம்பெய்தும், தாக்குமாறு கட்டளையிட்டான். பதற்றத்தில் அவனுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தடுமாறினான்.

மாவலி முத்தரையர் தன்னுடன் கலியரசன் அனுப்பிய நூறு களப்பிர வீரர்களோடு வெள்ளியம்பல மன்றத்தை நெருங்குவதற்கு முன்பே நிலைமை கை மீறிப் போயிருந்தது. வெள்ளியம்பல மன்றிலில் இருந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களும், தேசாந்திரிகளின் கோலம் மாறிப் போர் வீரர்களாக எழுந்து நின்றனர். அவர்கள் மூட்டை முடிப்புக்கள் எல்லாம் அவிழ்க்கப்பட்டு ஆயுதங்களாக வெளிப்பட்டு வேலாகவும் வாளாகவும் கேடயங்களாகவும் விளங்கின. “நீங்கள் முன்னேறிச் சென்று எதிரிகளைத் தாக்குங்கள்!நான் இதோ வருகிறேன்...” என்று வெள்ளியம்பல மன்றிலின் எதிரே இருந்த ஜைன மடத்திற்குள் நுழைந்த மாவலி முத்தரையர் மறுபடி வரவே இல்லை. பாண்டியர் பெரும்படையின் நடுவே சிக்கிய நூறு களப்பிர வீரர்களில் பெரும்பாலோர் மாண்டனர். சிலர் சின்னாபின்னமாகி மூலைக்கொருவராகச் சிதறி ஓடினர். பாண்டியர் படைக்கும் ஓரளவு சிறு இழப்பு ஏற்பட்டது. படையணியின் முன்னே வெள்ளியம்பல மன்றிலின் வாயிலில் தலைமை ஏற்று நின்ற கொற்கைப் பெருஞ்சித்திரன் போரில் மாண்டு போனான். குறிப்பிடத்தக்க அந்த மரணம் பாண்டிய வீரர்களின் குருதியில் சூடேற்றி வெறியூட்டியது. பழிக்குப் பழியாகப் பல களப்பிர வீரர்களை வெட்டி வீழ்த்தினார்கள், அவர்கள். அரண்மனை உட்கோட்டையை வளைத்துப் பிடிக்கப் பாண்டியர் படை முன்னேறியது. எண்ணிக்கையிற் சிறிய அளவினராக வந்த களப்பிர வீரர்கள் தாக்குதலைத் தொடங்கிய வேகத்தில் பாண்டியர் அணியின் தலைவனும் இளவரசர்களில் ஒருவனும் ஆகிய கொற்கைப் பெருஞ்சித்திரனைக் கொன்று விடவே, பாண்டியர் அணிக்கு அடக்க முடியாத ஆத்திரம் மூண்டு விட்டது. வெள்ளியம்பல மன்றிலின் மன்றிலில் போரின் முதல் களப்பலியாகப் பாண்டியர்கள் பக்கமிருந்து பெருஞ்சித்திரன் மாண்டான் என்றால், களப்பிரர்கள் பக்கம் பல வீரர்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள். கதிரவன் மறைந்து நன்றாக இருட்டுவதற்குள் அகநகர் எல்லையில் போர் முழு அளவில் மூண்டுவிட்டது. சில நாழிகைப் போதிலேயே அரண்மனை உட் கோட்டையைத் தவிர அகநகரிலும், புறநகரிலும் எல்லாப் பகுதிகளிலும் பாண்டியர் படையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிவிட்டன. உட்கோட்டை மதில்களை முற்றுகையிட்டும் உள்ளே இருந்தவர்கள் முற்றுகைக்கு வீழ்ந்து விடாமல் நேரத்தைக் கடத்தி வந்தார்கள். மதில்மேல் அங்கங்கே மறைந்திருந்த சில களப்பிர வீரர்கள் கீழே முற்றுகையிட்டிருந்தவர்கள் மேல் கல்லெறிதல், அம்பு எய்தல் போன்ற தாக்குதல்களைச் செய்து கொண்டுதான் இருந்தனர். முற்றுகை தொடங்கியதுமே நடந்தவற்றை இளைய நம்பிக்கு அறிவிக்க உடனே ஒரு பாண்டிய வீரன் கணிகை மாளிகைக்கு அனுப்பப்பட்டிருந்தான். கணிகை மாளிகையின் நிலவறையில் பல நூறு வீரர்களோடு இளையநம்பியும், காராளரும், கொல்லனும் ஆயுதபாணிகளாகப் போர்க் கோலம் பூண்டு காத்திருந்தனர். புறத்தாக்குதலைப் பற்றிய விளைவுகளை அறிந்து நிலவறை வழியே உட்கோட்டையில் அரண்மனைக்குள் ஊடுருவி வெளியே மதிற்புறத்தை வளைத்துக் கொண்டிருக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருப்பது, கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டு அவர்களை உள்ளே ஏற்பது போன்ற செயல்களுக்கு ஆயத்தமாக இருந்தார்கள். இளைய நம்பி முதலியவர்கள், முன்னணிப் படையோடு பெரியவர் மதுராபதி வித்தகர் ஓலை மூலம் இட்டிருந்த கட்டளைப்படியே பெருஞ்சித்திரனை அனுப்பிவிட்டு இப்படி ஆயத்தமாகக் காத்திருந்தவர்களுக்குப் பெருஞ்சித்திரன் வெள்ளியம்பலத்துக்கு முன்னால் நடந்த போரில் மாண்டு விட்டான் என்ற செய்தி பெரிதும் அதிர்ச்சியை அளித்தது.

பெருவீரனான ஒரு தமையனையும் களப்பிரர்கள் கொன்று விட்டார்கள். பயந்த சுபாவமுள்ளவனான ஒரு தம்பியையும் இப்போது களப்பிரர்கள் கொன்றுவிட்டார்கள். நான் மட்டும் இந்த அரசைப் போரிட்டு வென்று என்ன செய்யப் போகிறேன்?” என்று கண் கலங்கியபடி மனம் சோர்ந்து பேசினான் இளையநம்பி. காராளரும் கொல்லனும் எவ்வளவோ ஆறுதல்கூறிப் பார்த்தனர். சோர்வின்றி உடனே தாங்கள் உட்கோட்டையில் நுழைந்து தாமதமின்றிக் கோட்டைக் கதவுகளைத் திறந்து வெளியே மதிலை வளைத்துக் கொண்டிருப்பவர்களை உள்ளே ஏற்றுக் கொண்டு வெற்றிக்குப் பாடுபடவேண்டும் என்பதை அவர்கள் இளைய நம்பியிடம் எடுத்துக் கூறினார்கள்.

ஐயா! தங்களைப்போல்தான் நீண்ட காலத்துக்கு முன் குருட்சேத்திரப் போர்க்களத்தில் மகாவீரனான அர்ச்சுனனும் சேர்ந்து நின்றான். அப்போது அவன் சோர்வைப் போக்குவதற்குக் கரியமேனிக் கடவுளாகிய கண்ணபிரானே அறிவுரை கூற வேண்டியிருந்தது. தங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு நான் ஞானியில்லை. ஆகினும்அரசகுலத்தோர் போர்க்களத்தில் சோர்ந்து நிற்பது, அறமாகாது என்பதை மட்டுமே கூற என்னால் முடியும் என்றார் காராளர். அவருடைய சொற்களும், பாரதப் போரைச் சுட்டிக்காட்டி அவர் கூறிய போர் அறமும் இளையநம்பியின் தளர்ச்சியைப் போக்கி அவனை உறுதிப்படுத்தின. இரத்தினமாலையும் அவனுக்கு ஆறுதல் கூறினாள். அவளும் கணிகை மாளிகைப்பெண்களும், ‘வாகை சூட வேண்டும் என்று வாழ்த்தொலி இசைத்து வெற்றித் திலகமிட்டு இளையநம்பிக்கு விடை கொடுத்தனர். நிலவறைப் படை விரைந்து புறப்பட்டது. காராளரும், கொல்லனும் உபவனத்துக் குறளனும் பின் தொடர இளையநம்பி படை நடத்திச் சென்றான். வெள்ளியம்பலத்தில் படை வெளியேறி மீண்டும் நள்ளிரவில் நடுவூர்ப் பகுதியிலுள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தில் நுழைந்தது. அங்கிருந்து குறளன் காட்டிய நிலவறை வழியே அரண்மனை உட்கோட்டையில் புகுந்தனர். அந்த வழியாக நேரே சென்றால் அழகன்பெருமாள் முதலியவர்கள் அடைக்கப்பட்டிருந்த பாதாளச் சிறைக்கூடம் இருந்த பகுதிக்குள் செல்ல முடியும் என்று குறளன் கூறினான். பெரியவர் கட்டளைப்படி முதலில் அழகன் பெருமாள் முதலியவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை நினைவூட்டினார்கள் காராளரும் கொல்லனும். எல்லாமே திட்டமிட்டதுபோல் காலத்துடன் நிறைவேறின. உட்கோட்டையிலோ, சிறைகூடப் பகுதிகளிலோ இவர்களை எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. அங்கங்கே இருந்த களப்பிர வீரர்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பாண்டியர்களின் மதிற்புற முற்றுகையாகிய உழிஞைப் போரை எதிர்க்க நிறுத்தியிருந்தார்கள். கோட்டை மிக எளிதாக வீழ்ந்துவிடும் என்று உள்ளே நுழைந்ததுமே இளையநம்பிக்குப் புரிந்தது. பெரியவரே தம் ஓலையில் ஒப்பிட்டுச் சொல்லியிருந்ததுபோல் அப்போதுள்ள நிலையில் அது வெறும் மணல்கோட்டைபோல்தான் இருந்தது. எல்லாமே பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன. உள்ளே நுழைந்ததும் இவர்கள் சிறைக்கூடங்களைத் தகர்த்து விடுவித்தபோது அந்த இருட் கூடத்தில் யார் எதற்காகக் கதவுகளை உடைத்துத் தங்களை விடுவிக்கிறார்கள் என்பதை முதலில் அழகன் பெருமாள் முதலியவர்களே புரிந்து கொள்ள முடியவில்லை. அருகில் வந்து தழுவிக் குரல் கொடுத்தபோது தான் நண்பர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். நல்ல உணவும், நல்ல காற்றும், நல்ல ஒளியும் இல்லாமல் அவர்கள் அந்தச் சிறையில் வாடித் தளர்ந்திருந்தனர். பாதாளச் சிறைப் பகுதியிலிருந்து மேற்புறம் அரண் மனைப் பகுதிக்கு வந்தவுடன் அவர்கள் எதிர்பாராதது ஒன்று நடந்தது. உடன் வந்துகொண்டிருந்த திருமோகூர் அறக்கோட்டத்து மல்லன் திடீரென்று வெறி கொண்டவனாக மாறி அருகே நின்றிருந்த கொல்லனின் இடைவாளை உருவிக் கொண்டு, “தென்னவன் மாறனைக் கொன்ற அந்தப் பாவியைப் பழி தீர்க்காமல் விட மாட்டேன் என்று உரத்த குரலில் சூளுரைத்தவாறே உருவிய வாளுடன் அரண்மனைக் குள் பாய்ந்து ஓடினான். மின்னல் வேகத்தில் புயல் புறப்பட்டதுபோல் பாய்ந்து ஓடிய அவனை யாராலும் அப்போது தடுக்க முடியவில்லை.

மல்லா பொறு... ஆத்திரப்படாதே என்று காராளர் கூறியதையும் அவன் பொருட்படுத்தவில்லை.

இளையநம்பியின் தலைமையில் நிலவறை வழியாக அரண்மனைக்குள் நுழைந்த வீரர்கள் நான்கு வேறு அணிகளாகப் பிரிந்தனர். இளையநம்பி ஓரணியையும், காராளர், கொல்லன், அழகன் பெருமாள் ஆகிய மற்ற மூன்று அணிகளையும் தலைமை தாங்கி நடத்திக் கோட்டைக் கதவுகளைத் திறந்தனர். வெளியே முற்றுகை இட்டிருந்த பாண்டிய வீரர்களும் உள்ளே நுழைந்ததால் பாண்டியர் படைபலம் கடலாகப் பெருகியிருந்தது. கோட்டை வீழ்ந்து விட்டது. அரண்மனை வாயிலில் பல்லாயிரம் பாண்டிய வீரர்கள் வாழ்த்தொலி முழக்க இளஞ்சிங்கம் போல் நின்று கொண்டிருந்தான், இளைய நம்பி. அவன் கண்காணக் களப்பிரர் கொடி கீழிறக்கப்பட்டது. காராளர் முதலியவர்கள் எல்லாரும் பயபக்தியோடு அவனருகே நின்று கொண்டிருந்தனர்.

அந்த வேளையில் அரண்மனையின் உட்புறமிருந்து அதே பழைய வெறிக்குரலோடும் உருவிய வாளோடும் ஓடி வந்தான் மல்லன். இப்போது அவன் கை வாளில் குருதி படிந்திருந்தது. “பழி தீர்ந்தது... என் எதிரியைக் கொன்று விட்டேன் என்று வெறியோடு கூவியபடியே ஓடிவந்து அந்தக் குருதி படிந்த வாளை இளைய நம்பியின் காலடியில் வைத்து விட்டு மூச்சு இரைக்க அவனை வணங்கி நின்றான் மல்லன்.

 16. கோட்டையும் குல நிதியும்

 

மல்லன் தெரிவித்த செய்தியைக் கேட்டதும் அழகன் பெருமாள், இளையநம்பியின் காதருகே வந்து மெல்லக் கூறினான்:

ஐயா! தென்னவன் மாறனைக் கொன்றதற்காகக் களப்பிரக் கலியரசனைத் தன் கைகளாலேயே பழி வாங்கப் போவதாகச் சிறையிலிருக்கும்போதே இவன் பல நாள் விடாமல் கோபத்தோடு எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அதை இப்போது நிறைவேற்றிவிட்டான் என்று தெரிகிறது! கலியரசனோடு போரிடும் வேலை இனி நமக்கு இல்லை. அதை இவன் நிறைவேற்றிப் பழிதீர்த்து விட்டான்.” பகைவனின் குருதி படிந்த அந்தக் கொலை வாளைப் பார்த்து இளையநம்பியின் கண்கள் கூசின. அந்த வாளில் யாருடைய குருதி படிந்திருந்ததோ அந்தக் குருதிக்கு உரியவன் தன் உடன் பிறந்தவர்களில் இருவரையும், உடன் பிறவாத சகோதரர்களாகிய பாண்டிய வீரர்களையும் கொன்றிருக்கிறான் என்பது நினைவு வந்தவுடன் அவனுடைய கூச்சம் அகன்று மனதில் கடுமை சூடேறியது. கோட்டையைக் கைப்பற்றியதும் முதல் கட்டளையாக, “இங்கே அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள களப்பிரப் பெண்களையும், நகரின் எல்லையிலுள்ள பாலி மொழிப் புலவர்களையும், கலைஞர்களையும், களப்பிரர்களின் சமயத்தைச் சேர்ந்த துறவிகளையும் மிகவும் பாதுகாப்பாகப் பாண்டிய நாட்டின் எல்லை வரை வெளியேற்றிக்கொண்டு போய்விட்டு வர வேண்டும் என்று முன் எச்சரிக்கையாக அறிவித்திருந்தான் இளையநம்பி.

களப்பிரர்-பாண்டியர் பழம்பகையில் பெண்களும், புலவர்களும், கலைஞர்களும், துறவிகளும் துன்புற நேரிடக் கூடாது என்றே முன்னெச்சரிக்கையோடு இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாண்டிய மரபின் பெயர் களங்கப்படும் விதத்தில் எந்தப் பூசலும் கோநகரில் நிகழ்ந்து விடக் கூடாதென்பதில் இளையநம்பி கண்ணும் கருத்துமாயிருந்தான். பாண்டிய மரபின் பெருமைக் குறைவின்றி உரிய முறையில் இலவந்திகைக் காட்டில் பெருஞ்சித்திரனின் அந்திமக் கிரியைகள் நடைபெற்றன. அது முடிந்து மீண்டும் அரண்மனைக்குத் திரும்பும் பெரியவர் கூறியிருந்த பிரம்ம முகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரே நல்வாழ்த்துக்களுடன் அனுப்பியிருந்த கொடியை மதுரை மாநகரக் கோட்டையில் ஏற்றவேண்டும். ஊரறிய உலகறிய மீண்டும் பாண்டியப் பேரரசு உதயமாவதன் அடையாளமாக இப்போது அவர்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது.

வைகறையின் குளிர்ந்த காற்றோடு அந்தக் கொடியேற்றத்திற்கு வானமே வாழ்த்துக் கூறுவதுபோல் மெல்லிய பூஞ்சாரலாக மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது. விடிகாலைப் பறவைகளின் குரல்களும், வைகறைப் பண்பாடும் இசைவாணர் வாழ்த்தொலிகளும், கோட்டை மூன்றிலில் கூடியிருந்த ஆயிரமாயிரம் பாண்டிய வீரர்களும், ஆபத்துதவிகளும், முனையெதிர்மோகர் படையினரும் செய்த மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க மதுரை மாநகரின் பழம்பெரும் கோட்டையிலே மீண்டும் பாண்டியர் மீன் கொடி ஏறியது. இருள் நீங்கிப் பொழுதும் புலர்ந்தது. கொடியுடன் பெரியவர் கொடுத்தனுப்பியிருந்த இடை வாளை அணிந்து ஆலவாய் இறையனார் கோயிலுக்கும், இருந்த வளமுடையார் கோயிலுக்கும் சென்று வணங்கிய பின் மங்கல வேளையில் அரண்மனையிற் பிரவேசம் செய்தான் இளையநம்பி.

மதுரைமாநகரத்து அரண்மனையின் கீழ்த்திசையில் கோட்டை மதில்களிலே தெரியும் காலைக் கதிரவனின் ஒளியைக் கண்டபோது, முதன் முதலாகத் தான் பெரியவர் மதுராபதி வித்தகரைத் திருமோகூரில் சந்தித்த போது பாண்டிய நாட்டில் இருட்டிப் போய் நெடுங்காலமாயிற்று என்று அவர் கூறியதற்கு மறுமொழியாக, ‘ஒவ்வோர் இருட்டுக்குப் பின்னும் ஒரு வைகறை உண்டு ஐயா என்று நம்பிக்கையோடு அவருக்கு மறுமொழி கூறியிருந்தது, இன்று இப்படி நிதரிசனமாகி இருப்பதை உணர்ந்தான்.

அரண்மனைக்குள்ளோ, கொலுமண்டபத்திலோ அதிக நேரம் தங்காமல்கொடி ஏறிப் பறக்கத் தொடங்கிய சில நாழிகை நேரத்திற் கிழக்குக் கோட்டை வாயில் வழியாக நானே நகருக்குள் வருவேன் - என்று பெரியவர் தெரிவித்திருந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு காராளரும் பரிவாரமும் புடைசூழக் கிழக்குக் கோட்டை வாயிலுக்கு விரைந்தான் இளையநம்பி. பாண்டியப் பேரரசு மீண்டும் உதயமாகக் காரணமான பெரியவரை வரவேற்பைத் தன் முதற்கடமையாக அவன் கருதினான்.

கோநகரக் குடிமக்கள் இந்த மாபெரும் வெற்றிக்காகக் காத்திருந்தவர்களைப் போல் தெரு எங்கும் தோரணங்கள் கட்டி வாழை மரங்கள் நட்டுக் கோலமிட்டு அலங்கரித்திருந்தனர். கோநகரும், சுற்றுப்புறங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. மங்கல வாத்தியங்களும், வெற்றி முரசங்களும், வாழ்த்தொலிகளும் எல்லாத் திசைகளிலும் எழுந்து பேராரவாரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. இளையநம்பி கிழக்குக் கோட்டை வாயிலுக்குப் போய்ச் சேருவதற்கு முன்பே அங்கே ஆயிரம் வெண் புரவிகளில் அணிவகுத்த வீரர்களோடு புறப்பட்டுக் கொற்கையிலிருந்து வந்து காத்திருந்தான் குதிரைக் கோட்டத்து மருதன் இளநாக நிகமத்தான். முகபடாம் தரித்த யானையின் மேல் அந்துவன் எடுப்பாக அமர்ந்திருந்தான். இளையநம்பியைக் கண்டதும் யானைப்பாகன் அந்துவன், “அரசே! இந்த ஏழையின் முகராசிக்குக் கெட்டபெயர் வராமல் காப்பாற்றியதற்காக தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரிய வில்லை. ‘இந்த நகரத்தில் முதலில் என் முகத்தில் விழிப்பவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் வந்த காரியம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று பல திங்கள் காலத்துக்கு முன் உங்களிடம் சொல்லியதை இப்போது நிறைவேற்றி விட்டேன் -என்றான். அவனுடைய கள்ளங் கபடமற்ற பாராட்டை ஏற்றுப் புன்முறுவல் பூத்தான் இளையநம்பி.

பூரண் கும்பத்துடனும் மங்கல தீபத்துடனும் பெரியவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கும் நோக்குடனும் அங்கே தன் பணிப்பெண்களோடு காத்திருந்தாள் கணிகை இரத்தினமாலை. கிழக்குக்கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை வரை அழைத்துச் செல்வதற்காக இரத்தின மாலையின் முத்துப்பல்லக்கும் காத்திருந்தது. அழகிய பெண்கள் இருமருங்கும் வெண்சாமரம் வீசக் காத்திருந்தனர். வழிநெடுக மலர்களைத் தூவியிருந்தார்கள். மங்கலப் பொருள்களைச் சிதறியிருந்தார்கள்.

பாண்டியன் இளையநம்பி, நகருக்குள் பிரவேசிக்கப் போகும் அந்த மாபெரும் அரச தந்திரிக்கு மாலை சூட்டி வரவேற்பதற்காகவே காராளரோடும், அழகன்பெருமாளோடும் பரிவாரங்களோடும் காத்திருந்தான். நெடுநேரம் காத்திருந்தபின் கீழ்த்திசையில் மற்றொரு சூரியன் புதிதாக உதித்து வந்ததுபோல் ஒளிதிகழும் அந்தப் பேருருவம் ஆபத்துதவிகள் சூழ வந்து தோன்றியதும் கடல் அலைபோல் கூட்டத்தில் பேராரவாரம் எழுந்தது. வாழ்த்தொளி விண்ணை எட்டியது. மதிற்கூவர்களின் மேலிருந்தும், கோட்டைக் கதவுகளிலிருந்தும் மரங்களின் மேலிருந்தும் அந்த ஒளிமயமான பேருருவத்தின் மேல் மலர்மாரி பொழிந்தது. இன்றுதான் வாழ்விலேயே ஒரு புதிய மாறுதலாக உணர்வுகளே தெரியவிடாத அந்த முகமண்டலத்தில் வெளிப்படை யாகப் புன்முறுவலைப் பார்த்தான் இளையநம்பி. இரத்தின மாலை நிறைகுடமும், மங்கல தீபமும் காண்பித்து ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றாள். முழந்தாள் மண்ணில் பதிய மண்டியிட்டு வணங்கிய பாண்டியன் இளையநம்பியைத் தூக்கி நிறுத்தி, நெஞ்சாரத் தழுவிக் கொண்டார் பெரியவர் மதுராபதி வித்தகர். நாத்தழுதழுக்க இளையநம்பி அவரிடம் கூறலானான்:

ஐயா! இந்தப் பேரரசை நீங்கள்தான் மீட்டுத் தந்திருக்கிறீர்கள்! நான் வெறும் கருவிதான். ஆயுதங்களும் வீரர்களும் வென்ற வெற்றி என்பதைவிட இதைத் தங்கள் சாதுரியத்தின் அரச தந்திர வெற்றி என்றே கூறலாம்.” 

இந்த வெற்றியில் என் சாதுரியம் மட்டுமில்லை! இதோ இவர்களுக்கு எல்லாம் அதில் பங்கு இருக்கிறது என்று தம்மைச் சூழ இருந்த காராளர், கொல்லன், அழகன் பெருமாள், இரத்தினமாலை, யானைப்பாகன் அந்துவன், ஆபத்துதவிகள், உபவனத்து ஊழியர்கள், மருதன் இளநாக நிகமத்தான் எல்லாரையும் சுட்டிக் காண்பித்தார் பெரியவர். அப்போது அவருக்குப் பின்புறம் நின்ற ஆபத்துதவி ஒருவன் முன்னால் வந்து அதுவரை தன் கையிற் சுமந்து கொண்டிருந்த ஒரு பேழையை அவரிடம் கொடுத்தான்.

இளையநம்பி நெடுங்காலத்துக்கு முன் இந்நாட்டைக் களப்பிரர்களிடம் தோற்றபோது இங்கே மதுரை மாநகரத்து அரண்மனையிலிருந்து இரவோடிரவாக நிலவறை வழியே வெளியேறிய உன் முன்னோர்கள் இது தங்கள் குலநிதி என்பதற்கு ஒர் அடையாளமாக அரண்மனை கருவூலத்திலிருந்து ஒன்பதே ஒன்பது முத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள் என்பது செவிவழி வழக்கு. இந்த முத்துக்கள் சில தலைமுறைகளாகக் கொற்கையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அண்மையில்தான் இவற்றோடு உன் தம்பி முறையிலான பெருஞ்சித்திரன் நான் கூப்பிட்டனுப்பி என்னிடம் வந்தான். நேற்று மாலைப் போரில் அவன் மாண்ட செய்தியையும் வருகிற வழியில் கேள்விப்பட்டு வருந்தினேன். இப்போது உன் குலநிதியாகிய இந்த முத்துக்களை உன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டியது என் கடமை. உன் அரச பண்டாரமாகிய பொக்கிஷத்தில் இந்த முத்துக்களை முதலில் கொண்டுபோய் வைத்து ஆட்சியைத் தொடங்கு!” என்று கூறிப் பேழையைத் திறந்து முத்துக்களை எல்லார் முன்னிலையிலும் எடுத்து இளைய நம்பியிடம் வழங்கினார் பெரியவர். வணக்கத்தோடு அவற்றைப் பெற்றுக் கொண்டான் இளையநம்பி.

அந்த முத்துக்களை கண்களில் ஒத்திக்கொண்டு அவன் நிமிர்ந்தபோது இரத்தினமாலை கண்களில் நீர் நெகிழ அவனையே இமையாமல் பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.

மதுராபதி வித்தகர் இரத்தினமாலையின் முத்துப் பல்லக்கில் நகர் வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அரண்மனையை அடைந்தார். ஏழு வெண் புரவிகள் பூட்டிய தேரில் இளைய நம்பியும் நகருலாவாகச் சுற்றி வந்து அரண்மனையை அடைந்தான். பெரியவர் ஆவலாய் இறையனார் திருக்கோயிலுக்கும் உவணச்சேவற் கொடி உயர்த்திய இருந்தவனத்திற்கும் சென்று நெஞ்சுருக வழிபட்டு வணங்கினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நலிந்து போயிருந்த கோநகரின் சிறந்த புலவர்கள், கலைஞர்கள், வீரர்கள், சமயவாதிகள் அறக்கோட்டங்கள் எல்லாரையும் எல்லாவற்றையும் மீண்டும் மதுரைமாநகரின் புகழுக்கும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரியதாகும்படி அவர் இளைய நம்பியிடம் கூறி மாற்றினார். இளையநம்பியின் பாட்டனாரும் தம்முடைய நெருங்கிய நண்பரும் ஆகிய திருக்கானப்பேர் பாண்டியர்குல விழுப்பரையரை உடனே எல்லாப் பெருமைகளுடனும் உரிய கெளரவத்துடனும் கோநகருக்கு அழைத்து வருமாறு தூதர்கள் அனுப்பச் செய்தார். காராளரைக் கூப்பிட்டு, “கோநகரின் வெற்றி மங்கலக் கோலாகலங்ளைக் கண்டுகளிக்க உங்களுடைய குடும்பத்தினரைப் புறப்பட்டு வரச்சொல்லி ஆளனுப்புங்கள் என்று கட்டளையிட்டார். காராளரும் உடனே தம் மனைவியையும் மகள் செல்வப்பூங்கோதையையும் கோநகருக்கு அழைத்து வருமாறு கொல்லனை திரு மோகூருக்கு அனுப்பி வைத்தார். பைந்தமிழ்ப் புலவர்கள் அரண்மனைக் கொலுமண்டபத்தில் வந்து வெற்றி மங்கலம் பாடிப் பரிசுகள் பெறலாமென்று எங்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மிக முதிய புலவரும், பாண்டிய மரபுக்கு மிகவும் வேண்டியவருமான ஒருவர் இளையநம்பிக்கு முடி சூட்டுங் காலத்துச் சிறப்புப் பெயராக, ‘இருள் தீர்த்த பாண்டியன் என்ற அடைமொழியை வழங்கிப் புகழ்மாலை சூட்டினார். தொடர்ந்து கோநகரும் அரண்மனையும் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தது. திருக்கானப்பேரிலிருந்து பாண்டியகுல விழுப்பரையர் சில நாட்களில் அழைத்து வரப்பட்டார். செல்வப் பூங்கோதையும், அவள் தாயும் கோநகருக்கு முன்பே வந்து சேர்ந்தார்கள். இன்னும் எல்லைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்களின் முடிவு தெரியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். கோட்டையில் மீனக் கொடி பறக்கத் தொடங்கி ஏழு நாட்கள் ஒடிவிட்டன. எட்டாம் நாள் காலையில் போர் நிகழும் எல்லைகளிலிருந்து தூதர்கள் தேடி வந்திருக்கிறார்கள் என்று அறிந்ததும் பெரியவர் அவர்களைச் சந்திக்க வந்தார். அரண்மனையில் தூதர்களை எதிர்கொள்ளும் அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்துக்கு அவர் வந்தபோது இளையநம்பியும் அங்கே இருந்தான்.

 

17. கடமையும் காதலும்

 

போர் நிகழும் எல்லைகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் வெற்றிச் செய்தி கொண்டு வந்திருந் தார்கள். கோநகரையும், சுற்றுப் புறங்களையும் பாண்டியர்கள் கைப்பற்றி விட்டதன் விளைவாக வடக்கே வெள்ளாற்றங்கரைப் போரில் களப்பிரப் படை வீரர்கள் சின்னாபின்னமாகி அழிந்தார்கள். எஞ்சியவர்கள் மதுரைக்கு திரும்பாமல் தங்கள் பூர்வீகமாகிய வட கருநாடக நாட்டை நோக்கித் தோற்று ஓடிப் போய் விட்டார்கள். பாண்டியர்கள் உள்நாட்டையும், கோநகர் கோட்டையையும் அரண்மனையையும் கைப்பற்றி வென்று களப்பிரக் கலியரசனைக் கொன்றுவிட்டார்கள் என்று செய்தி தெரிந்ததும் களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த பூதபயங்கரப் படையினருக்கும், ஏனைய களப்பிர வீரர்களுக்கும் மிகப்பெரிய தடுமாற்றமும் தளர்ச்சியும் ஏற்பட்டன. இரண்டு போர் முனைகளிலுமே களப்பிர வீரர்கள் தெம்பிழந்து நம்பிக்கையற்றுப் போயினர். தோல்விக்கும், வீழ்ச்சிக்கும், இதுவே காரணமாய் அமைந்தது. பாண்டிய நாட்டின் வடக்கு எல்லைப்போரில் ஈடுபட்ட களப்பிர வீரர்களாவது தலை தப்பினால் போதும் என்று தோற்றதும் சொந்தநாட்டிற்குத் திரும்பியோடும் வாய்ப்பிருந்தது. தென் மேற்கே சேரனோடு போரிட்டுக் கொண்டிருந்த களப்பிர சேனையோ பெரும்பகுதி அழிந்துவிட்டது. எஞ்சியவர்களைச் சேரன் சிறைப்பிடித்து விட்டான் என்று தெரிந்தது.

இந்தப் போரில் வென்றால் வெற்றி பெற்றதுமே மதுரை மாநகரில் நிகழப்போகும் புதிய பாண்டியப் பேரரசின் முடி சூட்டுவிழா வைபவத்திற்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என முன்பே சேரனுக்கும், பல்லவனுக்கும் எழுதியிருந்த ஓலைகளில் இவர்களை மதுரைக்கு அழைத்திருந்தார் பெரியவர். இப்போது போர் முடிவுக்குப்பின் இன்று வெற்றிச் செய்தியோடு பாண்டிய நாட்டின் தலைநகருக்கு வந்திருந்த தூதர்கள் இருவரில் சேரவேந்தனின் தூதுவன் தன்னுடைய அரசன் முடிசூட்டு வைபவத்துக்காகப் பரிவாரங்களோடு மதுரையை நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தான். பல்லவ வேந்தன் சிம்ம விஷ்ணுவோ, களப்பிரநாடு தன்னுடைய எல்லையில் இருப்பதாலும் பாண்டிய நாட்டிலும், தெற்கெல்லையிலும் வெள்ளாற்றங்கரையிலும் தோற்ற தோல்விகளுக்காகப் பழி வாங்குவதற்காக களப்பிரர்கள் எந்த சமயத்திலும் தன் மேல் படையெடுக்கலாம் என்பதாலும் மதுரை மாநகருக்கு வந்து முடிசூட்டு விழாவில் கலந்து மகிழ இயலாதென்று, தன் தூதன் மூலம் மதுராபதி வித்தகருக்குச் சொல்லியிருந்தான். பல்லவன் சொல்லி அனுப்பியதில் உள்ள நியாயம் பெரியவருக்குப்புரிந்தது. பல்லவன் சிம்மவிஷ்ணு காலத்தாற் செய்த உதவிக்கு நன்றி உரைத்துப் பதில் ஓலை வரைந்து தூதனிடம் கொடுத்திருந்தார். அவர் முடிசூட்டு விழாவுக்காக பல்லவ மன்னன் மதுரை வந்தால் அந்த நேரம் பார்த்து பல்லவ மண்ணிற் படையெடுத்துத் துன்புறுத்தக் களப்பிரர்கள் தயங்கமாட்டார்கள் என்பதைப் பெரியவர் புரிந்து கொள்ள முடிந்தது. வடதிசையிலிருந்து மீண்டும் தெற்கே களப்பிரர் படையெடுப்பு நேராதிருக்க வலிமை வாய்ந்த சிம்மவிஷ்ணு அரணாகவும் பாதுகாப்பாகவும் நடுவே இருக்கவேண்டிய இன்றியமையாத நிலையை உணர்ந்தே மதுரைக் கோநகரின் மங்கல முடிசூட்டு விழாவுக்கு வரச்சொல்லி மீண்டும் அவனை வற்புறுத்தாமல் விட்டுவிட்டார் பெரியவர். மற்றொருவனாகிய சேர தூதனிடம், “மகிழ்ச்சியோடு உங்கள் சேர வேந்தனை வரவேற்கக் காத்திருக்கிறோம் என்பதையும், போருக்கு முன் உங்கள் அரசனுக்கு நான் அளித்திருக்கும் வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்பதையும் எதிர்கொண்டு சென்று தெரிவித்து உங்கள் அரசனை இங்கு அழைத்துவா!” என்று சொல்லி விளக்கி அனுப்பினார் மதுராபதி வித்தகர். அவர் முன்னிலையில் அரச தூதர்களுக்குரிய முறைகளுடனும், பெருமைகளுடனும், அவர்களை விடை கொடுத்து வழியனுப்பி வைத்தான் இளையநம்பி.

வந்திருந்த தூதர்கள் புறப்பட்டுச் சென்றபின் அந்த மாபெரும் அலங்காரக் கூடத்தில் பெரியவர் மதுராபதி வித்தகரும், பாண்டியன் இளைய நம்பியும் தனியே எதிர் எதிராக நின்று கொண்டிருந்தனர். பிரம்மாண்டமான தூண்களும், பளிங்குத் தரையும், முத்துப் பதித்த இருக்கைகளும், இரத்தினக் கம்பளங்களும் எல்லாம் நிசப்தமாக ஒடுங்கியிருந்து அவர்கள் இருவரையும் கவனிப்பது போல தோன்றின. அவனிடம் பேசுவதற்கு என்று அவரிடமும், அவரிடம் பேசுவதற்கென்று அவனிடமும் இரகசியங்கள் இருந்தன. முதலில் யார் தொடங்குவது, எப்படித் தொடங்குவது என்று ஒரே சமயத்தில் இருவருமே தயங்கி நின்றாற் போலிருந்தது அவர்கள் நிலை. அவருடைய அந்தப் பெரிய கண்கள் அவனையே நேருக்கு நேர் நோக்கிக் கொண்டிருந்தன. சில கணங்கள் தயக்கத்திலும், மெளனத்திலும் கழிந்த பின் அவர் தாம் முதலில் பேசினார்:

இந்தக் கணத்தில் நீ என்னிடம் கேட்கத் தவிப்பது என்னவாக இருக்கும் என்பதை நானே புரிந்து கொள்ள முடிகிறது. இளையநம்பி! நான் உன்னிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டுவிட்டால், அதன்பின் நீ என்னிடம் கேட்க நினைத்ததைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமலும் போய்விடலாம்! அரசர்கள் கொடுக்க வேண்டியவர்களே, தவிர கேட்க வேண்டியவர்கள் இல்லை! ஆனால், நீ இன்னும் முறைப்படி முடிசூட்டிக் கொண்டு பாண்டிய நாட்டின் அரசன் ஆகிவிடவில்லை. ஆகவே நான் உனக்குக் கட்டளையிடலாம். அரசனாகிய பின் உன்னிடம் என் வாக்குறுதிகளை நான் கேட்க முடியுமோ, முடியாதோ? இப்போதே உன்னிடம் அவற்றைக் கேட்டு விடுகிறேன்.”

ஐயா! தாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது! இந்த அரசே தாங்கள் மீட்டுத் தந்தது. இதில் தங்களுக்கில்லாத உரிமையா? தாங்கள் வேண்டும் வாக்குறுதிகள் எவையாயினும் சிரமேற்கொண்டு அவற்றை உடனே நிறை வேற்றுவது என் கடமையாகும்.”

உன் பணிவைப் பாராட்டுகிறேன்; ஆனால் உன் பணிவையும், அன்பையும் தவறாகப் பயன்படுத்தி, முன் கேட்காத புதிய வாக்குறுதிகள் எதையும் இப்போது மீண்டும் நான் கேட்டுவிடமாட்டேன், பயப்படாதே. சூரிய சந்திரர்கள் சாட்சியாக ஆலவாய் இறையனார் மேலும், இருந்த வளமுடைய பெருமாள் மேலும் ஆணையிட்டு எனக்கு இரு வாக்குறுதிகள் நீ அளித்திருக்கிறாய். என் சார்பில் போரில் உதவுவதற்கு நிபந்தனையாகச் சேர மன்னனுக்கு ஒரு வாக்குறுதியும் தனியே அளித்திருக்கிறாய்...”

ஆம், ஐயா! நன்றாக நினைவிருக்கிறது. அந்த வாக்குறுதிகள் என்னவென்று கூறினால், இப்போதே அவற்றை நான் நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.”

அவர் இதற்கு மறுமொழி கூறத் தயங்கி அவனை நோக்கி மெல்லப் புன்னகை பூத்தார். பின்பு கூறலானார்.

என் வாக்குறுதிகள் இரண்டும் சுலபமானவை. பாண்டிய நாட்டின் நீண்ட கால நலனை மனத்திற் கொண்டவை. அவற்றை நீ உடனே ஏற்றுக் கொண்டுவிட முடியும். ஆனால்... சேரனுக்காக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி மட்டும் சற்றே சிரமமானது...?”

 

சிரமமானது என்று எதுவுமே இருக்க முடியாது ஐயா! போரில் நமக்கு உதவி, நம் நாட்டை மீட்டுக் கொடுத்தவர்களுக்கு நாம் அளித்த வாக்குறுதியை மறக்க முடியுமா?”

மறக்க முடியாது. மறக்கவும் கூடாது! ஆனால், இந்த உலகில் கண்ணிரோடுதான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும்...”

தாங்கள் கூறுவது புரியவில்லையே ஐயா?”

அவன் குழப்பத்தோடு அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவரே தயங்கினாற்போல் நின்றார்; மீண்டும் மெளனமும், ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கும் அமைதியும் இருவருக்கு இடையேயும் நிலவின. மெளனம் நீங்கி அவனே அவரைக் கேட்டான்:

தயை கூர்ந்து வாக்குறுதிகளைச் சொல்லுங்கள் ஐயா?”

இளையநம்பி என் முன்னோர்கள் பரம்பரையாகச் சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள். நான் அந்த மரபில் வந்தவனாக இருந்தும், என் காலம் முழுவதும் நான் களப்பிரர்களை ஒழிக்கச் சாதுரியமும் சூழ்ச்சியும் புரிவதிலேயே கழித்துவிட்டேன். காரணம், களப்பிரர் ஆட்சி நடந்த தலை முறைகளில் அவர்கள் சிறிது சிறிதாகத் தமிழ் நாகரிகத்தையே அழித்துவிட முயன்றார்கள். தமிழ்ச் சங்கத்தை அழித்தார்கள், தமிழ்ப் புலவர்களைச் சீரழியவிட்டார்கள். ஆகவே, நீ செய்யவேண்டிய முதற் காரியம், உன் முன்னோர்கள் புகழ்பெற நடத்திய தமிழ்ச் சங்கத்தை மீண்டும் நடத்திப் புலவர்கள் தமிழாராயவும், நூல்களை அரங்கேற்றவும், பரிசில் பெறவும் உதவுவதாக இருக்கவேண்டும். ஒரு மொழியோடு நாகரிகமும் அழியாமற் காக்க இதை நீ உடனே செய்யவேண்டும். இந்த வேண்டுகோளை உன் முதல் வாக்குறுதியால் நிறைவேற்று!”

மகிழ்ச்சியோடு நிறைவேற்றுகிறேன் ஐயா! இனி அடுத்த வாக்குறுதிக்கான வேண்டுகோளைச் சொல்லுங்கள்!”

உன் ஆட்சிக்காலம் வரை, எக் காரணத்தைக் கொண்டும் நீ பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களோடு போரைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் மீண்டும் களப்பிரர்கள் தனியாகவோ, வேறு யாருடனாவது சேர்ந்தோ உன்மேல் படையெடுத்து வருவது தவிர்க்க முடியாததாகி விடும். நட்புள்ள எல்லைப்புற நாடுகள் இருந்தால், உன்னால் துணிவாக எதையும் சாதிக்க முடியும்!”

தங்களது இந்த இரண்டாவது வாக்குறுதியையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் ஐயா!” 

பொறு இப்படி அவசரப்பட்டு ஒப்புக்கொள்வதை விட இந்த இரண்டாவது வாக்குறுதியை ஒரளவு நிதானமாகச் சிந்தித்தபின் ஒப்புக்கொள்வதே உனக்கு நல்லது!”

சிந்திக்கவோ, தயங்கவோ இதில் எதுவும் இல்லை ஐயா! எனக்கும் நாட்டுக்கும் நன்மை தராத எதையுமே தாங்கள் ஒருபோதும் கூறமாட்டீர்கள்...”

இதில் ஒரு வேளை உன் நன்மை பாதிக்கப்பட்டாலும், நாட்டின் நன்மையைப் பாதிக்க விடமாட்டேன் நான்!”

என்று அவன் கூறிய வாக்கியத்தையே சிறிது திருத்தி அர்த்தம் நிறையச் சிரித்தபடியே மீண்டும் திருப்பிச் சொன்னார் அவர். அதை ஏன் அவர் அப்படித் திருப்பிச் சொல்கிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லையாயினும் சேரனின் சார்பில் நிறைவேற்றியாக வேண்டிய மூன்றாவது வாக்குறுதியைக் கூறுமாறு அவன் அவரை வேண்டினான்:

எதற்காகவோ அவர் மீண்டும் தயங்கினார். அவனைக் கூர்ந்து பார்த்தார். பின்பு மெல்ல அதைச் சொல்லத் தொடங்கினார்:

போரில் நமக்கு உதவியதற்கு ஒர் அடையாளப் பிரதியுபகாரமாகச் சேரமன்னனின் மகளைப் பாண்டிய நாட்டு வெற்றிக்குப்பின் முடிசூடும் முதற் பாண்டியனின் பட்டத் தரசியாக ஏற்கவேண்டும் என்பதுதான் மூன்றாவது வேண்டு கோள்! இப்போதுள்ள சூழ்நிலையில் பாண்டிய நாட்டின் எல்லைப்புற அரசன் ஒருவனிடம் பெண்கொண்டு மணந்து உறவை வளர்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக இன்றியமையாதது ஆகும் இதைக் கேட்டு இளைய நம்பியின் முகம் போன போக்கைப் பார்த்து அவர் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டார். எதுவுமே பதில் பேசத் தோன்றாமல் அப்படியே திக்பிரமை பிடித்து நின்றுவிட்டான் அவன். “நான் உன்னிடம் கேட்கவேண்டியவற்றைக் கேட்டு விட்டால் அதன்பின் நீ என்னிடம் கேட்க நினைத்ததைக் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமலும் போய் விடலாம் - என்று, உரையாடலைத் தொடங்கும்போதே, அவர் கூறி யதை இப்போது மறுமுறை நினைத்தான் அவன். நினைவுகள் தளர்ந்து உணர்வுகள் ஓய்ந்து அந்த வேண்டுகோளைச் செவியுற்றபின், கண்களில் நீர் மல்க அவன் தம் எதிரே நின்ற வேதனைக் கோலத்தைக் கண்டு அவருக்கே வருத்தமாக இருந்தது. அவர் கூறினார்.

என்மேல் தவறில்லை இளையநம்பி! ‘இந்த உலகில் கண்ணிரோடுதான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்று நான் முதலிலேயே சொல்லி விட்டேன்.”

இதில் என் கண்ணிர் மட்டுமில்லை ஐயா, திருமோகூர்க் காராளர் மகள் செல்வப்பூங்கோதையின் கண்ணிரும் அடங்கியிருக்கிறது...”

எனக்கு எல்லாம் தெரியும்! கொல்லனிடம் இருந்து நான் அனைத்தையும் கேட்டறிந்திருக்கிறேன். நானாகவும் உங்கள் நேசத்தை அநுமானித்திருந்தேன். காராளர் மகளை மணக்க விரும்பும் உன் ஆசையைத்தான் நீ இன்று இங்கே என்னிடம் வெளியிட இருந்தாய் என்பதைக்கூட நான் அறிவேன். அதனால்தான், ‘நான் என் வாக்குறுதிகளைக் கூறியபின், நீ என்னிடம் கேட்க எதுவும் இல்லாமலும் போகலாம் - என்று முதலிலேயே கூறியிருந்தேன்!”

இப்படி ஒரு நிலை வரும் என்றால், நான் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை முயன்று வென்றிருக்க வேண்டியதே இல்லை. ஒரு பாவமும் அறியாத பேதைப் பெண்ணொருத்தியைக் கண்ணிர் சிந்தி அழவிட்டுவிட்டு நான் அரியணை ஏறுவதைவிடச் சாவது மேலான காரியமாக இருக்கும் ஐயா!”

இப்படி ஒரு கோழையைப் போல் பேசாதே! நீ நினைத்தா இந்த வெற்றியும் மாற்றமும் விளைந்தன? நாட்டின் நன்மையை விட எந்தத் தனி ஒருத்தியின் கண்ணிரும் பெரியதில்லை. ‘நாட்டின் நன்மைக்குக் குறுக்கே நிற்கமாட் டேன் என்று அந்த ஒருத்தியிடமே கொற்றவை சாட்சியாகச் சத்தியம் செய்து வாக்கு வாங்கியிருக்கிறேன் நான்...”

நீங்கள் வாக்கு வாங்கியிருக்கலாம்! ஆனால், இந்த நாட்டின் வெற்றியை நாடி நான் முதன் முதலாகத் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தபோது அந்த வெற்றிக்காகத் தங்களைக் காண வேண்டிய முதல் ஒற்றையடிப் பாதையை எனக்குக் காண்பித்தவள் அவள்...”

சில ஒற்றையடிப் பாதைகளில் அதைக் காட்டுகிறவர் உடன் நடந்து வர முடியாமலும் போய்விடலாம்.”

ஆனால், அதில் நடக்கத் தொடங்கியவன் அதன் வழியே நடந்து ராஜபாட்டைக்கு சேர்ந்தவுடன் முதற் சிறு வழியைக் காட்டியவர்களை மறந்து விடுவது, என்ன நியாயம் ஐயா?”

இளையநம்பி நியாயங்களைக் கேட்டு என்னைச் சோதனை செய்யாதே. இதில் உன்னையும், செல்வப் பூங்கோதையையும் விட என் அந்தராத்மா கோவென்று கதறி உங்களைப் போல் அழ முடியாதபடி அறிவும் சாதுரியமுமே என்னைக் கல்லாக்கியிருக்கின்றன என்பதை நீ அறிவாயா?”

இதைக் கேட்ட பின் அவனால் அப்போது அவரை எதிர்த்து எதுவும் பேசமுடியவில்லை.

மூன்று வாக்குறுதிகளை நீயும், நாட்டின் நன்மைக்குக் குறுக்கே நிற்பதில்லை என்ற ஒரு வாக்குறுதியைச் செல்வப் பூங்கோதையும் ஏற்கிறீர்கள்?” என்று அவர் மீண்டும் உரத்த குரலில் கட்டளைபோல் கூறியதும், கடமையை உணர்ந்துஆம் என்பதற்கு அடையாளமாக கண்ணிரோடு அவர் முன்பு தலை வணங்கினான் அவன்.

 

18. முடிவற்று நீளும் பயணம்

 

இளையநம்பியிடம் பேசித் தமக்கு வேண்டிய வாக்குறுதிகளை வாங்கிய பின்பு, கதறியழுகின்ற வேதனை உள்ளேயும் ஒரு மாபெரும் பேரரசை உருவாக்க வேண்டிய அரச தந்திரியின் பிடிவாதம் புறத்தேயும் தோன்ற வறண்ட கடமை உணர்வு ஒன்றே நோக்கமாகக் காராளரையும் அவர் மனைவியையும் மகளையும் அதே இடத்திற்குக் கூப்பிட்டனுப்பினார் மதுராபதி வித்தகர். அவர்கள் பணிவாக எதிரே வந்து வணங்கினார்கள். முதலில் நேரே சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் பெரியவர், காராளரின் பல்லாண்டுக் கால உதவிகளை ஒவ்வொன்றாக அவரிடமே நினைவு கூர்ந்து விவரித்துப் புகழ்ந்தார். திடீரென்று அவர் ஏன் தன்னிடம் அவ்வளவு மனம் நெகிழ்ந்து புகழ்கிறார் என்று காராளரே உள்ளுறத் திகைத்திருந்தபோது, பெரியவர் மெல்லத் தம் நோக்கத்தைச் சொல்லத் தொடங்கினார்:

பழம் பெருமை மிக்க இந்தப் பாண்டிய நாட்டுக்காகக் கடந்த பல ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவோ சுகபோகங்களையும், செல்வங்களையும் இழந்து தியாகம் செய்திருக்கிறீர்கள்! இன்றோ, அவற்றை எல்லாம் விடப் பெரியதும் அரியதும், ஒரு பெண் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க முடியாததுமான ஒன்றை விட்டுக் கொடுத்து உம்முடைய மகள் ஒரு தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக நான் அவளிடமே கொற்றவை சாட்சியாக வாக்குறுதி பெற்றிருக்கிறேன். என்றாலும் ஒரு வாக்குறுதிக்காக இணங்குவது போல் கட்டுப்பட்டு அவள் அந்தத் தியாகத்தைச் செய்வதை விட, அவளே மனம் விரும்பிச் செய்யும் தியாகமாக அது அமைந்தால் நான் மகிழ்வேன்...” என்று தொடங்கித் தயக்கத்தோடு ஒவ்வொரு வார்த்தையாகக் கோர்த்துப் பேசுவதுபோல் வேண்டுகோளை மெல்ல வெளியிட்டார். செல்வப் பூங்கோதையிடம் நேரில் கூறத் தயங்கி அவள் தந்தையிடம் பேசுவதுபோல் அவர் இவற்றைப் பேசியிருந்தாலும் அவளை எதிர் நோக்கியே சொற்கள் கூறப் பட்டிருந்தன.

அவர் எதிர்பார்த்ததுபோல் அவள் கண்ணீர் சிந்தி அழவில்லை. கதறவில்லை. சீறவில்லை. சாடவில்லை. ஒரு சிலையாகி நின்றுவிட்டாற்போல் ஆடாமல் அசையாமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஏளனமும் சோகமும், வறட்சியும் விரக்தியும் அவள் விழிகளில் மாறி மாறித் தோன்றுகிறார்போல் அவர் பார்வையில் பட்டது. அவள் இன்னும் சாந்தமாகவே நின்று கொண்டிருந்தாள். நீண்டநேரம் அப்படி நின்றபின் அவரைப் பார்த்து விரக்தியோடு சிரித்தாள் அவள்.

உன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றும் புரியவில்லை செல்வப் பூங்கோதை?”

ஒன்றுமில்லை ஐயா! ஏதோ நினைத்துக்கொண்டேன் சிரித்தேன். அதை நீங்கள் புரிந்துகொண்டாலும் புரிந்து கொள்ளாவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் உங்களைப் போன்ற மேதைகளுக்கு அறிவு மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை. இதயம் இல்லாதவர்களால் இதயம் உள்ளவர்களின் அழுகையையும், சிரிப்பையும், கண்ணீரையும், வேர்வையையும் புரிந்துகொள்ள முடியாது தான். இந்த உலகில் உங்களைப் போன்றவர்கள் ஒவ்வொரு தலைமுறையில் யாராவது ஒரு பேதையின் அன்பைப் பலியிட்டு அந்தப் பலிபீடத்தின்மேல் சிம்மாசனங்களின் உறுதிக்குக் கால்களை நடுகிறீர்கள். செய்யுங்கள்... எத்தனை காலம் வேண்டுமானாலும் இப்படிச் செய்துபாருங்கள். உங்களால் மனித இதயங்களையும் அன்பையும் சேர விடாமற் செய்ய முடியலாம். ஆனால் அழித்து விட முடியாது...”

உன் சொற்களால் பன்னெடுங்காலமாகச் சாகாமல் வடக்கிருப்பதுபோல், உயிருடன் நோன்பிருந்து ருசிகளை வெறுத்திருக்கும் இந்தக் கிழவனை இன்று நீ கொல்கிறாய் செல்வப்பூங்கோதை!”

ஏமாற்றத்தினால் ஏற்கெனவே செத்துப் போய் விட்டவர்கள், எப்படி ஐயா மற்றவர்களைக் கொல்ல முடியும்?”

நாம் பிழை செய்து விட்டோமோ என்ற தாழ்மை உணர்வை, என் வாழ்நாளிலேயே இன்று உன்முன் இந்தக் கணத்தில் அடைவது போல் வேறென்றும் எங்கும் நான் அடைந்ததில்லை செல்வப்பூங்கோதை! மகளே! நான் இதற்கு மேல் தாங்கமாட்டேன்! என்னைப் பொறுத்துக் கொள்...”

ஐயா! அதிகம் பேசி உங்களைப் புண்படுத்தி விட்டதற்காக வருந்துகிறேன். உங்களுக்குக் கொற்றவை சாட்சியாக வாக்கு அளித்தபடி பாண்டிய நாட்டின் எதிர்கால நலனுக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். நீண்ட நாட்களுக்கு முன் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு பெண் இந்த மதுரையையே தீயிட்டு எரித்தாள். இன்று எனக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால், நான் அதற்காக இன்று மதுரையை எரிக்கமாட்டேன். எரிக்கவும் கூடாது; இந்த ஆறாத்துயரில் என் இதயம் மட்டுமே எரியும். அவர், சேரன் மகளையோ, சோழன் மகளையோ அல்லது பாண்டிய நாட்டின் எதிர்கால நலனுக்கும், எல்லைப்புறப் பாதுகாப்புக்கும் அவசியமான எல்லா அரசர்களின் எல்லாப் பெண்களையுமோ மணந்து கொள்ளட்டும். அதைப்பற்றி நான் வருந்தவில்லை. தயை செய்து எனக்கும் என் பெற்றோருக்கும் இப்போது இங்கிருந்து விடை கொடுத்து அனுப்புங்கள்.”

இப்படிவருந்தவில்லை என்று அவள் கூறிய குரலிலேயே துயரம் வெள்ளமாகத் தெரிந்தது. ஆசி கூறும் பாவனையில் வலது கையை உயர்த்தியபடியே தளர்ந்து கண் கலங்கி நின்றார், சிறிது நேரத்திற்குமுன் அவளால் இதயமற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெரியவர். அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்றார்கள். புறப்படுமுன் காராளரை நெஞ்சாரத் தழுவிக் கொண்ட வித்தகர், “தயை கூர்ந்து உடனே திருமோகூருக்குத் திரும்பிப் போய் விடாதீர்கள். முடிசூட்டு விழாவின்போது பழம்பெரும் பாண்டிய குல மரபுப்படி உங்களைப்போல ஒரு வேளாளர் தான் திருமுடியை எடுத்து அளிக்க வேண்டும்! இங்கே இருந்து அதைச் செய்வதற்கு உரியவர் நீங்களே!” என்று வேண்டினார். காராளரும் உணர்வு நெகிழ்ந்த குரலில் அதற்கு இணங்கினார்.

காராளரும் அவர் மனைவியும் மகளும் விடைபெற்றுச் சென்ற பின்பும்கூட நெடுநேரம் மேலே எதுவும் செயற்பட முடியாமல் பிரமை பிடித்தாற்போல் அமர்ந்திருந்தார் மதுராதிபதி வித்தகர். நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கவலைகள் பட நேரலாம். ஆனால் அவரோ அப்போது நிறைவேற்றிவிட்ட சில காரியங்களை நினைத்துக் கவலையும், துயரமும் பட நேரிட்டிருந்தது. இந்த வெற்றி மகிழ்ச்சிக்குக் கீழே யார் யாருடைய துயரங்கள் மூடப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிக் கணக்கிட்ட போது எதற்கும் கலங்காத அவர் மனமும் கலங்கியது. உருகியது. உழன்றது.

காராளர் மகள் செல்வப் பூங்கோதை தான் எல்லாரையும் விட அதிகமாக அழுது அடம்பிடிப்பாள் என்று எதிர்பார்த் திருந்தார் அவர். ஆனால் அவள் தன்னை எதிர் கொண்ட அடக்கமும், அமைதியும் அவரையே உள்ளமுருகச் செய்து விட்டன. அவளுடைய சகிப்புத் தன்மையும், கொடுத்த வாக் குறுதியைக் காக்கும் வன்மையும் இவ்வளவு பெரிதாயிருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. பற்றற்ற துறவிகளை எல்லாம் விடப் பெரிய துறவியாக அவள் நடந்து கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு முன் அவரே கூசிக் கூனிச் சிறிதாகியிருந்தாற்போல் தமக்குத்தாமே உணர்ந்திருந்தார். அவள் கூறியிருந்த சொற்கள் இன்னும் அவர் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. உறுத்திக் கொண்டேயிருந்தன:

உங்களுக்குக் கொற்றவை சாட்சியாக வாக்களித்தபடி நாட்டின் எதிர்கால நலனுக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். நீண்ட நாட்களுக்கு முன் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை, என்பதற்காக இங்கு ஒரு பெண் மதுரையையே எரித்தாள். இன்று எனக்கும் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் அதற்காக நான் இன்று மதுரையை எரிக்க மாட்டேன். எரிக்கவும் கூடாது. இந்த ஆறாத்துயரில் என் இதயம் மட்டுமே எரியும்.”

- என்ற அவளுடைய சொற்களை நினைத்தபோது இவ்வளவு பெரிய அன்பைப் பிரித்து வைத்துத்தான் ஒரு பேரரசைக் காப்பாற்ற வேண்டுமா என்று அவர் மனமே நடுங்கியது. முன்பு திருமால் குன்றத்தில் மறைந்திருந்த போது நினைத்துத் திட்டமிட்டபடி தான் எல்லாப் பந்த பாசங்களிலிருந்தும் விடுபட்டு உடனே இப்போதே துறவியாக வடதிசை நோக்கி இமயத்தையும், கங்கையையும் நாடிப் புறப்பட்டு விடலாமா என்று கூடத் தோன்றியது அவருக்கு. ‘பல்லாண்டுக் காலமாகப் பாடுபட்டு மீட்ட பாண்டிய நாட்டின் வளர்ச்சிக்கு அருகிலிருந்து அறிவுரை கூறாமல் பெரியவர் இப்படி விலகிப் போகலாமா?’ -என மக்கள் தன்னைப் பழி தூற்றுவார்களோ என்ற ஒரே பயத்தில்தான் அதைச் செய்யத் தயங்கினார் அவர். வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகிய பாண்டி நாட்டை மீட்கும் பணியைச் செய்த உடன் அதை விட்டு விட்டு ஓடுவது கோழைத்தனமாகிவிடும் என்றும் தோன்றியது. அவரால் எல்லாவற்றையும் துறக்க முடிந்தது. தேசபக்தியைத் துறக்க முடியவில்லை. நாட்டுப் பற்றை விட முடியவில்லை. காராளர் போன்ற வேண்டியவர்களைக் கண்ணிர் சிந்த வைத்தும் கூட நாட்டைக் காக்க விரும்பினார் அவர். தான் நடந்து கொண்ட விதத்தினால் காராளர் மகள் செல்வப்பூங்கோதை அவருடைய கருங்கல் மனத்தையும் இளக்கிக் கலங்க வைத்திருந்தாள். அவளுக்காக உருகி வருந்தினார் அவர்.

உங்களைப் போன்ற மேதைகளுக்கு வெறும் அறிவு மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை. இதயம் இல்லாதவர்களால் இதயமுள்ளவர்களின் அழுகையையும், சிரிப்பையும், கண்ணிரையும், வேர்வையையும் புரிந்து கொள்ள முடியாதுதான்?” என்று அவள் சற்றுமுன் தன்னைக் கேட்டிருந்த சொற்கள் இன்னும் அவருடைய உள்ளத்தைச் சுட்டுக் கொண்டிருந்தன. அவரால் அதைச் சுலபமாக மறந்துவிட முடியவில்லை. ஓர் அழகிய பேதையின் தூய்மையான உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து துயரப்படுத்தி அந்தத் துயரத்தின் மேல் ஓர் அரசை நிலை நாட்டித்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இப்போது அவருள்ளேயும் எழுந்தது. சேரனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி நினைவு வரவே, உடனே இப்படிப் புறக்கணிக்க முடியாததாகவும் இருந்தது அந்தப் பிரச்சனை. இளையநம்பியையும் கண் கலங்கச் செய்து, காராளர் செல்வ மகளையும் கண்கலங்கச் செய்து, இவர்கள் இருவரையும் தவிர அவருடைய அநுமானத்திலேயே அவருக்குப் புரிந்திருந்தபடி கணிகை இரத்தினமாலையையும் அந்தரங்கமாக நெஞ்சழிய வைத்து இப்படி நாம் ஓர் அரசதந்திரச் சதுரங்கம் ஆடி விட்டோமே என்று எண்ணிய போது எதற்கும் கலங்கியறியாத அவரது அந்த உள்ளமும் கலங்கியது. கழிவிரக்கப்பட்டது.

தென்னவன் மாறனின் கழுஏற்றம், பெருஞ்சித்திரனின் மரணம், ஆகியவற்றின் போதெல்லாம்கூட ஆறுதலடைய முடிந்ததுபோல், இந்தக் காராளர் மகளின் வேதனையைத் தாங்கி மறந்து ஆறுதலடைய முடியாமல் தவித்தார் அவர். அந்தத் திருமோகூர்ப் பெண் சீறிச்சினந்து ஆவேசமாக எதிர்த்து வாதிடாமல் அமைதியாக அடங்கிப் பணிந்தே தன்னை வென்று விட்டிருப்பது இப்போதுதான் அவருக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. தன் இதயம் இவ்வளவு தவிப்பதை சிறிதும் புரிந்து கொள்ளாமல், ‘உங்களுக்கு இதயமில்லை என்று அவள் தன் முன்பு நின்று குற்றம் சுமத்தியதையும் நினைத்தார் அவர் தன் இதயம் தனிமையில் படும் வேதனையை அவளறியும்படி அவளிடமே நெஞ்சைப் பிளந்து காண்பித்துவிட முடியுமானால் எவ்வளவு தெளிவாயிருக்கும் என்றும் தோன்றியது அவருக்கு.

கவலைகள் இதயத்தை வாட்டிப் பிழிந்தாலும் சேரவேந்தனிடம் அளித்துள்ள வாக்குறுதியையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாதென்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதிக நேரம் அவர் கவலைப்பட்டு ஒடுங்கிச் செயலிழந்து அமர்ந்திருக்க முடியவில்லை. பரிவாரங் களோடு கோநகருக்கு வந்து கொண்டிருக்கும் சேர வேந்தனை வரவேற்க அவர் ஆயத்தமாக வேண்டியிருந்தது. ஊரறிய உலகறிய வெளியிடவோ, பிறரிடம் பங்கிட்டுக் கொண்டு பேசிக் கவலை தவிர்க்கவோ முடியாத அந்தரங்கத் துயரங்களை மனத்திலேயே புதைத்துக் கொண்டு எழுந்து நடந்தார். அவர் சேரனை எதிர்கொண்டு வரவேற்கப் பரிவாரங்களுடனும் அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேருடனும் அரண்மனை முன்றிலில் இளையநம்பி முதலியவர்கள் ஏற்கனவே காத்திருப்பதாகவும், அவர்கள் அவரை எதிர்பார்ப்பதாகவும் அழகன்பெருமாள் வந்து அழைத்தான். அவரது முகத்தில் அமைதியின்மை தெரியாவிட்டாலும் வாட்டம் இருப்பதை அழகன்பெருமாள் காணமுடிந்தது. பாண்டியப்பேரரசை மீண்டும் வென்று உருவாக்கிய மகாமேதையின் அந்தக் கணத்துக் கவலைகள் என்னவாக இருக்கும், எவ்வளவாக இருக்கும் என்பதை அவனாலும் அப்போது கணிக்க முடியவில்லை.

கோலாகலமான வரவேற்பிற்கிடையே சேரவேந்தன் தன் பரிவாரங்களோடும், பட்டத்தரசியோடும், பாண்டிய நாட்டின் பட்டத்தரசியாகச் சில தினங்களில் ஆகும் பேறு பெற்ற தன் மகளோடும் மதுரை மாநகருக்கு வந்து சேர்ந்தான். மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டது. அலங்கரிக்கப்பட்ட யானை மேல் அமர்ந்து வள்ளுவன் முடிசூட்டு விழாச் செய்தியையும், பாண்டியனுக்கும், சேரன் மகளுக்கும் மணமங்கலம் நிகழ இருக்கும் செய்தியையும் முரசறைந்து நகருக்கும், சுற்றுப்புறங்களுக்கும் அறிவித்துப் பரப்பினான். நகர் எங்கும் உண்டாட்டுகள் நிறைந்தன. நகர் எங்கும் பெருஞ்சோற்றுப் படையல்கள் நிகழ்ந்தன. வீரர்களும் புலவர்களும், கலைஞர்களும், பாணர்களும், பாடினிகளும், அரண்மனைக் கொலுமண்டபத்திலிருந்து கூட்டம் கூட்டமாகப் பரிசில் பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர். மங்கல வாத்தியங்களின் இன்னிசை ஒலி நகரம் எங்கும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.

அரண்மனை அந்தப்புர மகளிருக்கு அலங்கரிக்கும் உரிமை பெற்ற இரத்தினமாலை, தான் கோர்த்து வைத்திருந்த முத்துமாலையால் இளையநம்பியின் பட்டத்தரசியாக வந்திருக்கும் சேரன் மகளை அலங்கரிக்கும்போது தன் சொந்த உணர்வுகளை எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும் அவளுக்குக் கண் கலங்கியது. நெஞ்சில் ஏதோ வந்து அடைப்பது போலிருந்தது. கூர்ந்து நோக்கினால் அவள் சேரன் மகளுக்கு அணிவித்துவிட்ட முத்துமாலையைத் தவிர, அவளுடைய கண்களிலும் ஒரு முத்துமாலை பிறந்து கொண்டிருந்தது தெரியும். எந்த முத்துமாலையைத் திருமோகூர்க் காராளர் மகள் செல்வப் பூங்கோதைக்கு அணிவிக்க வேண்டியிருக்கும் என்று அவள் எண்ணி எண்ணித் தொடுத்திருந்தாளோ, அதே முத்துமாலையினை இப்போது சேரன் மகளுக்கு அணிவிக்க நேர்ந்திருந்தது. முன்பு, தன் துயரத்துக்காகக் கண்ணிர் சிந்திய அவள், இப்போதெல்லாம் செல்வப்பூங்கோதைக்கு நேர்ந்துவிட்ட பெருந்துயரத்துக்காகவும், அந்த நாட்டுப்புறத்துப் பேதைப் பெண்ணை எண்ணியும் கண்ணிர் சிந்தினாள்.

முடிசூட்டு விழாவும், மணமங்கலமும் நிகழ்கிறவரை இருந்து செல்ல வேண்டும் என்று பெரியவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கி, அரண்மனையில் தங்கியிருந்த காராளரும், அவர் மகளும், மனைவியும் தங்கள் மனவேதனை பிறருக்கு வெளிப்பட்டுத் தெரிந்து விடாமல் மிகவும் அடக்கமாகவும், எதுவுமே நடவாதது போலவும் இருக்க முயன்றனர். ஒரே ஒரு கணம் எப்படியாவது செல்வப் பூங்கோதையைக் கண்டு தன் நிலைமையை விளக்கிட எண்ணிய இளையநம்பிக்கு அரண்மனையின் பரபரப்பிலும் முடிசூட்டு விழா ஆரவாரங்களிலும் அது இயலாமலே தட்டிப் போய்க் கொண்டிருந்தது.

அரண்மனையில் மங்கல நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தன. முடிசூட்டு விழாவுக்குப் பல்லவன் வரவில்லை என்றாலும், அவன் சார்பில் ஒர் அரச தூதர் வந்திருந்தார். முடிசூட்டுவிழா நேரத்தில் காராளர் உழவர் குடிக்கே உரிய கைராசியோடு முத்துக்கள் பதித்த திருமுடியை எடுத்து அரசனுக்கு அணிவதற்காக அளித்தார். உடனே முடிசூட்டு விழாக் காலத்துத் தொன்றுதொட்டு வரும் மரபாக முதுபெரு புலவர் ஒருவர் எழுந்து முன்பே இளையநம்பிக்கு அளிக்கப்பட்டிருந்த 'இருள் தீர்த்த பாண்டியர்' என்ற சிறப்புப் பெயரைச்சூட்டி அரசனை வாழ்த்தினார். உடனே முடிசூடிக் கொண்ட பாண்டியன் இளையநம்பியே எழுந்து, “என் குடிமக்களில் அனைவரினும் என்னுடைய பேரன்பின் இருப்பிடமான ஒருவர் முன்பே எனக்குப்பாண்டிய கடுங்கோன் என்று கோபமாகச் சிறப்புப் பெயர் சூட்டிவிட்டார். அப்படிப் பெயர் சூட்டிய அன்பு உள்ளம் இப்போது இந்தப் பேரவையிலேயே இருந்தாலும் உங்களிடம் யாரென்று கூறமுடியாமல் இருக்கிறேன். என் மக்கள் இந்தக் கணத்திலிருந்து இனி எந்நாளும் என்னைப்பாண்டியன் கடுங்கோன் - என்று அழைப்பார்களாயின் அந்தப் பெயரை எனக்குச் சூட்டியவரின் நினைவால் நான் அளவிலா மகிழ்ச்சி கொள்வேன் என்று பல்லாயிரம் பேர்களிடையே வெளிப்படையாகப் பிரகடனம் செய்த போது, பெண்களின் கூட்டத்தோடு கூட்டமாக நீறுபூத்த நெருப்பாய் நின்று கொண்டிருந்த செல்வப்பூங்கோதையின் அழகிய கண்களில் நீர் மல்கியது. யாரும் தன்னைக் கவனித்துவிடாமல் தன்னுடைய கண்ணிரை அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டாள் அவள். ஆனாலும் அந்தப் பெருங் கூட்டத்தில் இரண்டு கண்கள் அப்போதும் அவளைக் கவனிக்கத் தவறவில்லை.அவை, மதுராபதி வித்தகரின் கண்கள். தாங்கள் கூறியஇருள் தீர்த்த பாண்டியன் என்னும் பொருள் பொதிந்த பெயரை விட்டு விட்டு அரசன் தானே ஏன்கடுங்கோன் என்ற இங்கிதமில்லாத குரூரமான பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டான் என்பது அந்த அவையிலிருந்த புலவர்களுக்கு மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.

முடிசூட்டு விழா நிகழ்ந்த மறுநாள் அதிகாலையில் இருள் பிரியுமுன்பே வைகறையில் காராளர் குடும்பத்தினர் திருமோகூருக்குப் பயணமானார்கள். கொல்லனும் அவர்களோடு புறப்பட்டு விட்டான்.

அந்த வேளையில் அரண்மனை முன்றிலில் பெரியவர் மதுராபதிவித்தகரும், திருக்கானப்பேர்க் கிழவர் பாண்டிய குல விழுப்பரையரும், அழகன் பெருமாளும் விடைகொடுத்து அவர்களை வழியனுப்பினர். கண்களில் நீர் சரிவதையும், உள்ளே இதயம் பொருமுவதையும் மறைத்தவளாய் இருளில் சித்திரம் அசைவதுபோல் நடந்து வந்து பெரியவரை அவர் பாதங்களில் சிரந்தாழ்த்தி வணங்கினாள் செல்வப்பூங்கோதை. தன் பாதங்களில் வெம்மையாக அவள் கண்ணிர் நெகிழ்வதை உணர்ந்து மனம் கலங்கினார், எதற்கும் கலங்காத அந்த மகா மேதை. நாத்தழுதழுக்க அவர் அவளிடம் கூறினார்:

என்னைப் பொறுத்துக்கொள் மகளே! என்மேல் தவறில்லை! நீ என்னிடம் திருமோகூரில் அன்று வாக்குறுதி அளித்துச் சத்தியம் செய்த போதே சில சத்தியங்கள் செய்யும் போது பொதுவாக இருக்கலாம்: ஆனால் மீண்டும் நிரூபணமாகும் போதுதான் அது எவ்வளவு பெரியது என்று உலகுக்குப் புரியும் என்பதாக நான் கூறிய வார்த்தைகள் இன்றும் உனக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். உன் சத்தியமும் இன்று அப்படி மிகப் பெரியதாக நிரூபணமாகி விட்டது அம்மா. ”

இதற்கு அவள் மறுமொழி எதுவும் கூறவில்லை.

அவர்கள் எல்லோரும் விடை பெற்றுப் புறப்பட்டார்கள். பயணத்தின்போது யாரும் யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கோநகரின் கோலாகலமான ஒலிகள் குன்றின. காட்சிகள் மறைந்தன. பாண்டியர் கோநகரும், வையையாறும் திருமருதமுன்துறையும் மெல்லமெல்லச் செல்வப்பூங்கோதையின் கண் பார்வையிலிருந்து நழுவின. நீர்த்திரை கண்களை மறைத்தது. எத்துணையோ பல முறைகள் வந்து திரும்பும்போதெல்லாம் கோநகரிலிருந்து மிகமிக அருகில் இருந்த திருமோகூர் இப்போது மட்டும் பலகாத தூரத்துக்கு முடிவற்று நீண்டு வழி பெருகிக் கொண்டே போவதுபோல் பிரமையாயிருந்தது அவளுக்கு. இன்னும் நெடுந்துாரம் இந்த வேதனையைத் தாங்கியபடியே முடிவற்றுப் பயணம் செய்யவேண்டும் போல் ஏதோ கனமான சுமை தன்னை அழுத்துவதை நெஞ்சில் உணர்ந்தாள் அவள். இருந்தாற் போலிருந்து இதமான மெல்லிய ஆண் குரல் ஒன்று,

 

நித்திலவல்லி செல்வப்பூங் கோதாய்
கத்தும்
கடலேழும் சூழ்தரு காசினியில்
சித்தம்
நினைப்புச் செய்கை உள்ளளவும்
எத்தாலும்
நின்னை மறப்பறியேன்...”

 

எனப் பின்னாலிருந்து கூவி அழைப்பதுபோல் தோன்றியது. ஆனால், பின்புறம் வழியைத் திரும்பிப் பார்த்த போது அப்படித் தன்னை யாரும் அழைக்கவில்லை, அது வீண் பிரமைதான் என்று தெரிந்தது. திரும்பிய கண்களில் ஒரு கணம் மேக மண்டலங்களை எட்டுவது போல் உயர்ந்த மதுரை மாநகர்க் கோட்டையின் உச்சியில் பறக்கும் புகழ் பெற்ற பாண்டியர்களின் மீனக் கொடி தொலை தூரத்தில் மங்கலாகத் தென்பட்டது. அடுத்த கணமே சென்று கொண்டிருந்த வழி, திரும்பியவுடன் அவள் பார்வை யிலிருந்து மறைந்துவிட்டது.

 

நிறைந்தது

-------------

 

 

நித்திலவல்லி-பாகம்-2 நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள் சிலவற்றைப் பார்க்க

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)