"தொல்காப்பியத்தில் இசை" புதுச்சேரியில் சிறப்புச் சொற்பொழிவு

முனைவர் மு.இளங்கோவன்

லகத் தொல்காப்பிய   மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் தொல்காப்பியத்தில் இசை என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. 10. 04.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.15 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி புதுச்சேரி, நீட இராசப்பையர் வீதியில் அமைந்துள்ள செகா கலைக்கூடத்தில் நடைபெற்றது. பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் ப.பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின்   மேனாள் இசைப் பேராசிரியர் முனைவர் இராச. கலைவாணி கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் இசை என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். தமிழில் கிடைத்துள்ள தொல்காப்பியத்தில் இசை குறித்த பல்வேறு குறிப்புகள் உள்ளதை எடுத்துக்காட்டி விளக்கினார். தொல்காப்பியர் இசை பற்றியும், பாவகைகள் பற்றியும் இசைக்கருவிகள் பற்றியும் இசை வடிவங்கள் பற்றியும் கூறிய செய்திகளை எடுத்துரைத்தார். இசைக்கலைஞர்கள் பற்றியும் அக்காலத்தில் நடைபெற்ற கூத்துகள் பற்றியும் தொல்காப்பியம் வழிநின்று விளக்கினார். தொல்காப்பியர் குறிப்பிடும் பெரும்பண் பற்றியும், கிளைப்பண் பற்றியும் இவர் உரையில் செய்திகள் இடம்பெற்றன.  

திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருள்வேந்தன் பாவைச்செல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவாளருக்குப் பாராட்டுமடல் வழங்கினார். பிரான்சுநாட்டுப் பேராசிரியர் திரு. மொரே அவர்கள் கலந்துகொண்டு சிறுப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். புதுச்சேரியைச் சேர்ந்த தூ.சடகோபன், பேராசிரியர் இராச. குழந்தைவேலனார் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினர். நிகழ்ச்சியின் நிறைவில் செல்வி த. ஏழிசைப்பாவையின் நாட்டிய நிகழ்வு நடைபெற்றது. முனைவர் அரங்க.மு. முருகையன் நன்றியுரை வழங்கினார். தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளை சிறப்பாகச் செய்திருந்தது.