தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் - 2018

னடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியம் சார்ந்து பணியாற்றும் ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கிவருகின்றது. வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த புனைவுக்கான விருது, அபுனைவுக்கான விருது, மாணவர் கட்டுரைப் போட்டி பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கும் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் படைப்பாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இவ்வாண்டுக்கான இயல்விருது விழா கடந்த ஞாயிறு (யூன் மாதம் 10ஆம் திகதி) அன்று மாலை ரொறொன்ரோவில் நடைபெற்றது.

கவிதை, சிறுகதை, கட்டுரைகள் என கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் இயங்கிவரும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இவ்வாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வண்ணதாசன் அவர்கள் வந்து நிகழ்வை முழுமைப்படுத்தினார். இவர் தவிர தண்ணீர் திரைப்படப் புகழ் தீபா மேத்தா, நியுயோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிய முனைவர் பாலா சுவாமிநாதன் உள்ளிட்டோரும் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

புனைவு இலக்கியத்திற்கான விருதினை வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் என்ற நாவலுக்காக எழுத்தாளர் தமிழ்மகனுக்கும், அபுனைவு இலக்கியத்திற்கான விருதினை கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வளமும் என்ற நூலுக்காக பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களுக்கும், கவிதைக்கான விருதினை அம்மை என்ற கவிதைத் தொகுப்பிற்காக கவிஞர் பா.அகிலன் என்பவருக்கும் வழங்கப்பட்டது. ஆங்கில இலக்கியத்திற்கான பரிசு அனுக் அருட்பிரகாசமும், மொழிபெயர்ப்பிற்கான விருது டி.ஐ.அரவிந்தனுக்கும், சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருது சசிகரன் பத்மநாதனுக்கும் மாணவர் கட்டுரைப் போட்டிக்கான பரிசு செல்வி சங்கரி
விஜேந்திராவுக்கும் வழங்கப்பட்டது. தமிழ் இலக்கிய சிறப்புப் பரிசு தி.ஞானசேகனுக்கும், கலாநிரி நிக்கோலப்பிள்ளைக்கும் வழங்கப்பட்டது. கவிஞர் செழியன் நினைவுப் பரிசு சிவகுமாரனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது எழுத்தாளர் வண்ணதாசனுடைய 'அந்தரப்பூ' என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது. நூலை பேராசிரியர் சொர்ணவேல் வெளியிட அதை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார்.