செல்வி க.தங்கேஸ்வரிக்கு விபுலானந்தர் விருது

பாக்கியராஜா மோகனதாஸ்

ட்டு மாவட்ட முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளரும். தொல்லியல் ஆய்வுகளை மேற்க்கொண்டு ஈழத்தில் தமிழரது பூர்வீக இருப்பை உறுதிப்படுத்தியவர் செல்வி க.தங்கேஸ்வரி.

கிழக்கிலங்கையில் பலராலும் அறியப்பட்டு சுமார் மூப்பது வருடங்களுக்கு மேலாக எழுத்தாளராகவும் தொல்லியளாளராகவும் செயற்பட்டு ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்தி தமிழரது பூர்வீக இருப்பை உறுதிப்படுத்துவதில் பங்களிப்பு செய்த செல்வி கதிராமன் தங்கேஸ்வரி, கண்ணகி கலையிலக்கிய கூடலினால் விபுலானந்தர் விருது மற்றும் பொற்கிளி வழங்கி அண்மையில்(09) கெளரவிக்கப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பின் கலாசார உத்தியோகத்தராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டு மட்டு பிரதேச அபிவிருத்தியில் கனிசமான குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

மட்டுநகரின் மேற்கே பாரம்பரியங்களையும் மரபு ரீதியான வழக்காறுகளையும் இன்றும் பேணிப் பாதுகாத்து வரும் பழம்பெரும் கிராமமான கன்னிகளியாத கன்னங்குடாவில் சீனித்தம்பி கதிராமன்,வெள்ளையன் திருமஞ்சணம் தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியாக 1952 ஆம் ஆண்டு மாசி மாதம் 26 ஆம் திகதி பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை கன்னங்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் தரம் 06 தொடக்கம் 08 வரை மட்டுநகர் இராமகிருஷ்ணமிசன் மகளிர் பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் தரம் ஒன்பது தொடக்கம் உயர்தரம் வரை மட்டு வின்சனட் மகளிர் பாடசாலையிலும் கல்வி கற்றிருந்தார்.

உயர்தரத்தில் கலைத்துறை கற்று வித்தியாலங்கார பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அழகியற் துறையில் மொழியியல்,தொல்பொருளியல்,தமிழ்மொழி ஆகிய பாடங்களை அடிப்படை பாடங்களாக தெரிவு செய்ததுடன் முதல் வருடத்தில் இவர் காட்டிய கெட்டித்தனத்தாலும் தொல்பொருளியல் துறை மீதான ஈடுபாட்டினாலும் தொல்பொருளியல் சிறப்பு கற்கைக்கு தெரிவானர்.

பேரா சேனக்க பண்டார நாயக்க,டாக்டர் மார்கஸ் பெர்னாண்டோ,பேரா அபய ஆரியசிங்க,டாக்டர் லக்துசிங்க ஆகியோரிடத்தில் தொல்பொருளியலை சிங்களமொழியில் கற்று சிறப்புபட்டத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு பிரதேச தொல்பொருளியல் வரலாறு என்ற தலைப்பில் மேற்படிப்பின் நிமித்தம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆய்வுசெய்யும் வேளையில் யுத்தசூழ்நிலை உக்கிரமடைந்திருந்ததனால் 1997 ஆம் ஆண்டு இடைநிறுத்திக் கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதுடன் மேற்படிப்பினையும் கைவிட்டார்.

1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் மட்டு மாவட்டத்தில் இரண்டாவது நிலையினைப் பெற்றபோது முதலிடம் பெற்றவரினை மட்டுமே உள்வாங்கும் அவசியத்தால் அச்சந்தர்ப்பமும் அவருக்கு கைநழுவிப்போனது.

1978 ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை நிறைவு செய்து 1983 வரை கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் தொண்டர் ஆசிரியராக கற்பித்து,பிரதேச அபிவிருத்தி மற்றும் இந்துசமய கலாசார அமைச்சின் கீழ் கொழும்பில் இந்து கலாசார உத்தியோகத்தராக 1983 ஆம் ஆண்டு அரச நியமனம் பெற்று 1988 வரை கொழும்பில் கடமையாற்றியதுடன் அக்காலத்தில் அமைச்சினால் நடாத்தப்பட்ட அஸ்வமேத யாகம்,முதலாவது சைவமாநாடு என்பவற்றில் கணிசமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

மட்டு மாவட்ட கலாசார உத்தியோகத்தராக 1988 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற இவர் 2004 வரை தனது கடமைகளை பொறுப்புடன் சிறப்பாக மேற்க்கொண்டார். மாவட்ட கலாசார உத்தியோகத்தர் பதவிக்காலத்தில், கச்சேரி நூதனசலையினை அமைத்ததுடன் மட்டு மாவட்டத்தில் அறநெறிப் பாடசாலைகளை பதிவுசெய்து இயங்கவைத்துள்ளார். இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மட்டக்களப்பில் முதலாவது பெண் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு 2010 வரை கடமையாற்றினார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் பகுதிநேர விரிவுரையாளராகவும் இலங்கை கல்வித்திணைக்கள இந்துசமய பாட நூல் குழு உறுப்பினராகவும் மட்டு கச்சேரியில் மாவட்ட கலாசார சபையின் செயலாளராகவும் சர்வதேச மற்றும் தேசிய ரீதியாக இடம்பெற்ற ஆய்வரங்குகளிலும் மாநாடுகளிலும் பங்குகொண்டு ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்து பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

லெமூரியாக் கண்டம் பற்றிய ஆய்வு,கிலங்கையின் தொன்மை,ஈழத்தில் இந்துசமயத்தின் தொன்மையும் வரலாறும் கிழக்கிலங்கையில் முருக வழிபாட்டின் தொன்மை,திருப்படைக்கோயில்கள்,கிழக்கிலங்கை ஆலயங்கள்,உகந்தை முருகன் ஆலயம்,மன்னம்பிட்டி தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம்,கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்,ஈழத்தில் பத்தினி தெய்வ வழிபாடு, ஈழத்தில் நாக வழிபாடு,பண்டைய தமிழரின் நடுகற் பண்பாடு,இலங்கையில் பெளத்தம்,கலிங்க மன்னன் மாகோன் வரலாறு,குளக்கோட்டன் வரலாறு,விகாரமாதேவி,ஆன்மீகவாதிகள்,கிழக்கிலங்கை மக்களின் பாரம்பரியங்கள்,மட்டக்களப்பு பகுதியினரின் கூத்துக்கலை,பண்டைய குரவைக்கூத்தும் மட்டக்களப்பின் குரவையிடலும் கிழக்கிலங்கையின் கட்டிடக்கலை பாரம்பரியம்,மட்டக்களப்பு வயல்நிலத்தில் வழங்கப்படும் 50 செந்தமிழ்ச் சொற்கள்,கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைக் கிராமங்கள் என பல்வேறு வரலாற்று ஆய்வுகளையும் இந்துசமயம் தொடர்பான தொல்லியல் ஆய்வுகள்,வாகரை புதைபொருள் ஆய்வு, தமிழ்ச் சாசனங்கள் தொடர்பான ஆய்வுகள்,திருக்கோயிற் கல்வெட்டுக்கள்,கதிர்காம சமாது மடப்பட்டயம்,கங்குவேலிக் கல்வெட்டு,தாந்தாமலை தொல்லியல் எச்சங்கள்,கிழக்கிலங்கையின் தொன்மை,அகத்தியர் ஸ்தாபனம்,சங்கமன்கண்டி தொல்லியல் எச்சங்கள்,சுவாமி விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வுகள் போன்ற தொல்லியல் ஆய்வுகளையும் மேற்க்கொண்டு ஈழத்தில் தமிழரது பூர்வீக இருப்பை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வுகள்,குளக்கோட்டன் தரிசனம்,கலிங்க மன்னன் மகோன் வரலாறு,மட்டக்களப்பு கலைக்களஞ்சியம்,கிழக்கிலங்கையின் பூர்வீக வரலாறு,கிழக்கிலங்கையின் வழிபாட்டு பாரம்பரியங்கள் போன்ற நூல்களை எழுதி வெளியீட்டுள்ளதுடன் கல்வெட்டுக்கள் கூறும் சரித்திர உண்மைகள்,கிழக்கிலங்கையின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாறு,கிழக்கிலங்கையின் இந்துசமய பாரம்பரியங்கள் போன்ற நூல்கள் வெளியீடப்படக்கூடிய நிலையில் சுகயீனத்தினால் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள நிலையிலுள்ளது. வெகுவிரைவில் அந்நூல்கள் தனவந்தர்கள்,தொழிலதிபர்களின் முயற்சியினால் வெளியீடப்படவுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதினையும் தொல்லியல் தாரகை,தொல்லியல் சுடர் பட்டங்களையும்,சுவாமி விபுலானந்தர் உயரிய விருது,2004 ஆம் ஆண்டிற்கான அறப்பணி விருது,தேனக கலைச்சுடர் விருது,மகோன் வரலாறு நூலிற்கான இலக்கிய விருது என பல்வேறு எண்ணிலடங்கா விருதுகளை தொல்லியல் ஆய்வு மற்றும் இலக்கிய சமூகப் பணிகளுக்காக பெற்றுள்ளார்.

தொன்மை மிகு கிழக்கிலங்கை வரலாற்றினை விடுத்து இலங்கை வரலாற்றினை முழுமைப்படுத்திவிட முடியாது.கிழக்கிலங்கை வரலாற்றுத் தகவல்கள் கால ஓட்டத்திற்கேற்ப மறைவுற எத்தனித்தபொழுது அதனை சீர்படுத்துவதில் பலரது பங்களிப்புகளும் உதவியுள்ளன.மட்டக்களப்பு சமூகமானது தனது இருப்பினை நிறுவிக்கொள்ளவும் எதிர்கால இருப்பிற்கான வழிவகைகளை உருவாக்கி கொள்ளவும் அப்பகுதியின் தொன்மை வரலாறு ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.கிழக்கிலங்கை வரலாற்றினை செம்மைப்படுத்தியோருள் செல்வி தங்கேஸ்வரியவர்களுக்கு தனியிடம் உண்டு.

சிறந்த ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் தொல்லியலாளராகவும் விளங்கும் க.தங்கேஸ்வரி,மட்டக்களப்பு பகுதியின் அபிவிருத்திக்கும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கும் கணிசமான பங்களிப்பினை நல்கியிருக்கின்றார். மட்டு பகுதியின் வரலாறு, சமயம், சமூகம், பாரம்பரியங்கள்,கலைகள் என பல்துறை சார் சிறப்புகளை வெளிப்படுத்துவதாக அவரது ஆய்வுகள் மற்றும் பணிகள் அமைகின்றன.

மட்டக்களப்பின் வரலாற்று முக்கியத்துவம்,அதன் சிறப்பு மற்றும் மட்டக்களப்பினரின் பண்டைய பெருமைகள் ஆகியவற்றை எடுத்தியம்பும் வகையில் நூல்கள், ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு ஈழத்து வரலாற்றினை முழுமைப்படுத்துவதற்கு பணிபுரிந்துள்ள வகையில் க.தங்கேஸ்வரி முக்கியப்படுத்தப்படவேண்டியவராவார்.

மட்டக்களப்பின் வரலாறு பற்றி பலர் எழுதியிருப்பினும் பண்டைக்காலம் முதல் ஈழத்தில் மட்டக்களப்பு பெற்றிருந்த வரலாற்று முக்கியத்துவம்,அரசாட்சி புரிந்த ஆட்சியாளர்கள் பற்றிய கால ஒழுங்குடனான தெளிவுபடுத்தப்பட்ட வரலாற்றினை எழுதியுள்ளமை சிறப்புப்பெறுகின்றது.

தமிழர் தொன்மை,சிறப்பு,பண்டைய பாரம்பரியங்கள், மரபுகள்,வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள் என விளிம்பில் காணப்படுகின்ற பல விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த மிகவும் கடின முயற்சி செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பாரம்பரிய வைத்திய கற்கை நெறியினையும் கிழக்கு பல்கலையில் வரலாற்றுத் துறையினையும் கொணர்ந்திருந்தார். மட்டக்களப்பில் மூன்று கல்வி வலயங்களுடன் நாலாவது வலயமாக மட்டு மேற்கு கல்வி வலயம் உருவாகவும் அடிப்படையாக இருந்துள்ளார்.

இவ்வாறு பல்துறைகளில் பணியாற்றி வரும் இவர் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கண்ணகி கலையிலக்கியக் கூடலின் துணைத்தலைவராகவும் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.