யாழ்ப்பாண
நூலகம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

எரித்தனரே
எரித்தனரே ஈழ மண்ணில்
எரித்தனரே தமிழினத்துப் பிஞ்சை யெல்லாம்
கரிக்கட்டை ஆக்கினரே காடை யர்கள்
காலந்தான் மாறினாலும் மாறா வடுக்கள் !
உரியதொரு சுவடொன்றும் இல்லா வண்ணம்
உரித்திட்ட ஆடுகள்போல் தமிழர் மேனி
சரித்திரத்தை மாற்றுதற்கே செய்த போல
சாய்த்திட்டார் யாழ்ப்பாண நூல கத்தை !
இனமழிக்க மொழியழிக்க வேண்டும் அந்த
இனம்காட்டும் நூலழிக்க வேண்டு மென்றே
மனம்கொன்ற சிங்களர்கள் ஒன்று சேர்ந்து
மகத்தான யாழ்ப்பாண நூல கத்தை
தினம்பல்லா யிரவர்கள் படித்து வந்த
தீந்தமிழின் பலலட்ச நூல்கள் தம்மை
வனமழித்த குரங்கைப்போல் தீயை வைத்தே
வரலாற்றை அழித்ததுபோல் மகிழ்ச்சி கொண்டார் !
முத்தமிழைப் பறைசாற்றும் இயலின் நூல்கள்
முந்தையிசை நாடகத்தை இயம்பும் நூல்கள்
எத்திக்கும் தமிழனாண்ட சான்று நூல்கள்
எல்லாமும் எரிந்ததன்று வெறிய ராலே !
தித்திக்க அவையெல்லாம் மீண்டு மங்கே
திருவாகப் புதுப்பித்தார் ஒளிரு தின்று
புத்தாக்கம் நூலகந்தான் பெற்ற போன்று
பூத்திடுமே ஈழந்தான் உறுதி யாக !
(1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.)

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்