தமிழ்
வாழும் காலம் வாழ்வான் கண்ணதாசன்
பாவலர் கருமலைத்தமிழாழன்

பூத்திட்ட
புதுநிலவாய் வந்து
பூரிக்கும் கவிதைகளைத் தந்து
மாத்தமிழின் மணமாக நின்றான் – எல்லா
மக்கள்தம் மனமெல்லாம் வென்றான் !
சங்கத்துப் பாக்களினைப் படித்துச்
சாறெல்லாம் எளிமையாக வடித்துப்
பொங்குகவி சிந்துகளாய் ஆக்கினான் – கல்லாப்
பாமரர்க்கும் புரியுமாறு தேக்கினான் !
திரைப்படத்துத் துறையினிலே நுழைந்து
தித்திக்கும் இசையினிலே குழைந்து
புரைநீக்கும் கருத்துகளைக் குவித்தான் – பழம்
மூடத்தை அகற்றும்பா விரித்தான் !
தென்றலெனும் ஏடுதனைத் துவக்கிச்
செந்தமிழின் பாத்துறையைப் புதுக்கிக்
கன்னலெனும் கவிவாணர் பெருக்கினான் – நெஞ்சுள்
கனல்கின்ற கவிசொட்ட முடுக்கினான் !
நாளுமொரு அரசியலைப் பேசி
நாட்டிலுள்ள கட்சிகளை ஏசி
கூடிநிற்கும் கவித்துவத்தால் தோழனானான் - எல்லாக்
கூட்டத்தார் மதிக்கின்ற கவிஞனானான் !
பிறமொழியின் கவிதைகளைத் தமிழாக்கித்
திறனாய்வுத் துறைதன்னைச் செயலாக்கிச்
சிறுகதையைப் புதுப்பார்வை தனிலளித்தான் – கண்ண
தாசனெனும் இதழ்தன்னை அகற்களித்தான் !
பகுத்றிவில் தன்கருத்தைத் தொடங்கிப்
பக்குவத்தில் ஆத்திகனாய் அடங்கிப்
பாட்டாலே பாரதிக்கு நேசனானான் - பக்திப்
பரவசத்தால் கண்ணனுக்குத் தாசனானான் !
கல்லக்குடி சிறைதனிலே படுத்துக்
கற்கண்டு மாங்கனியைப் பறித்துப்
பொங்கலிலே தைப்பாவை கையளித்தான் - தமிழ்ப்
பொறையனுக்குக் காதலியை வாழ்த்தளித்தான் !
நூற்றுக்கும் மேலாக நூலெழுதி
நுவல்கின்ற தமிழுக்குச் சீரெழுதி
போற்றும்பல் லாயிரமாய்ப் பாதந்தான் – காலம்
போனாலும் நிலைக்கின்ற படிவேய்ந்தான் !
வாழ்கின்ற போதேநல் பாராட்டு
வளம்பெற்ற கவிஞரெனச் சீராட்டு
வாழ்வெல்லாம் தமிழென்றே வாழ்ந்தான் - தமிழ்
வாழ்கின்ற காலமெலலாம் வாழ்வான் !
(யூன்24
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்)

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்