அகிலமெலாம் நட்புநாள் ஓங்குக
தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

கண்ணிலே
ஒளியின் சாயல்
காட்டிடும் முகத்தின் நட்பு
வெண்ணிலா வானிற் போகும்
வீதியில் முகிலின் நட்பு
மண்ணிலே மழையின் தேறல்
வயம்தரும் பயிரின் நட்பு
எண்ணரும் உலகின் வார்ப்பில்
இன்றிந்த நாளே நட்பு!
அண்ணள
வாகக் கொஞ்சும்
அகத்தினிற் கருணை நட்பு
விண்ணள வான கோளும்
விளக்கிடும் தமிழின் நட்பு
கண்ணியம் என்ப தென்ன?
கடமையும் அறிவும் நட்பு
பெண்ணியம் பேசு வோரே
போற்றுவீர் கற்பின் நட்பே!
முப்பது
ஆடி தன்னில்
முகிழ்த்தது உலக நட்பு
செப்பிடும் உலகிற் பேசிச்
சிறந்திடும் மொழிகள் நட்பு
தப்பினிற் பொருதல் இல்லாத்
தானையோர் தேச நட்பு
முப்படை இருந்தால் என்ன
மேவிட வேண்டும் நட்பு!
சர்வதே
சத்தும் நட்பு
சார்ந்ததோர் உலகின் நட்பு
கர்ச்சனை இளைஞர்க் குள்ளே
கலாச்சாரம் சமூகம் நட்பு
பற்பல கோட்பாட் டின்பால்
பற்றிடும் மதங்கள் நட்பு
அற்புதம் என்ப தெல்லாம்
அகிலத்தின் நட்பே நட்பு!
நட்பினை
வலிந்து ஏற்று
நம்பியர் நங்கை யோடும்
பெட்பினைச் சமூகக் கோட்டைப்
போற்றிடும் இனங்க ளெல்லாம்
முட்புதர்க் குள்ளே யாயும்
முடிச்சினைப் போடீர் என்றே
நட்புநாள் சமைத்தார் ஐநா
நாயகர் வாழ்க! வாழ்க!

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்