நல்லுணர்வே வாழ்க்கையை வசந்தமாக்கும்
பாவலர் கருமலைத்தமிழாழன்

மேடுபள்ளம்
நிறைந்ததுவே வாழ்க்கைப் பாதை
மேன்மையொடு இழிவுமங்கே நின்றி ருக்கும்
கோடுகளாய் நீண்டிருக்கும் வழியெல் லாமே
கொடுந்துயரம் இன்பமுமே காத்தி ருக்கும் !
ஏடுகளில் படித்தபடி இருந்தி டாது
எதிர்த்துவரும் அனுபவங்கள் வழியைக் காட்டும்
தேடுகின்ற ஆர்வமுடன் உழைப்பி ருந்தால்
தெளிவான பாதையிலே செல்லும் வாழ்க்கை !
சுற்றங்கள் நம்முடனே
வருவ தற்கும்
சூழ்ந்திருப்போர் நல்லுறவில் இருப்ப தற்கும்
உற்றவர்கள் பகையின்றி இணைவ தற்கும்
உறவெல்லாம் அன்புடனே அணைப்ப தற்கும்
பெற்றிருக்கும் பெருஞ்செல்வம் துணைசெய் யாது
பேர்புகழும் அழைத்துவந்து நிறுத்தி டாது
கற்றகல்வி உதவிடாது மனத்தி ருந்து
கசிகின்ற நல்லுணர்வே செய்யும் எல்லாம் !
நல்லுணவு உடல்நலத்தைப்
பேணு மன்றி
நால்வரினை நம்முடனே சேர்த்தி டாது
நல்லபுகழ் பெருமையினைத் தருவ தன்றி
நன்மைசெய்யும் நண்பரினைத் தந்தி டாது !
நல்லன்பால் பிறக்கின்ற நல்லு ணர்வை
நாம்காட்டின் வாழ்வெல்லாம் வசந்த மோடு
வெல்கின்ற நல்லுறவு வந்து சேர்ந்து
வெறுப்போடு காழ்ப்பெல்லாம் பறந்து போகும் !

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|