கோவலர்வாய் வைத்த குழல்
கவிஞர் மாவிலி மைந்தன்
சி.சண்முகராஜா

பாவலர்கள்
சிந்தைதரும் பாவகையும் பண்சுமந்தே
தேவனடி போற்றும் திருமுறையும் - காவிரிபோல்
நாவலர்தம் நாத்தவழும் நற்றமிழும் நம்செவிக்குக்
கோவலர்வாய் வைத்த குழல்.
சிந்தனையின் பூக்களினைச் சீராகச் சேர்த்துவைத்து
வந்தமையும் கற்பனையில் வார்த்தெடுத்துச் - சந்தமுடன்
ஆவலினைத் தூண்டு மருங்கவிதை சாற்றிலதே
கோவலர்வாய் வைத்த குழல்.
தத்தும் நடைநடந்து தாவி யெனையணைத்து
முத்தம் கொடுத்தின்ப மூட்டிவைத்துச் - சித்தத்தின்
பூவழியும் தேன்மழலை புன்னகையோ டார்க்குமொலி
கோவலர்வாய் வைத்த குழல்.
காண்க கனவுகளைக் காணுமவை மெய்ப்படுமே
பூண்க உழைப்பென்னும் பொன்னணியை - வீண்விரய
மாவதில்லை யுந்த னயராத ஊக்கமதே
கோவலர்வாய் வைத்த குழல்.
இல்லம் சிறக்கு மிருள்போ யொளிபெருகும்
துல்லியமாய் வாழ்க்கை துலங்கிவரும் - நல்மனையும்
பூவனமே யுள்ளம் புரிந்துநடந் தாலதுவே
கோவலர்வாய் வைத்த குழல்.

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்