நூல்: எப்போதும் போல் இல்லை எப்போதும் !
நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி
 

கவிதை உறவு' மாத இதழின் ஆசிரியர் நாடறிந்த நல்ல மனிதர், சிறந்த கவிஞர், கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் ஏர்வாடியார் என்றால் இலக்கிய உலகம் நன்கு அறியும்.

 

கவிதை உறவு மாத இதழில் ஏழாம் பக்கத்தில் இடம்பெற்ற கவிதைகளின் தொகுப்பு மேலும் அமுதசுரபி, கலைமகள், ஓம்சக்தி, மங்கையர் மலர் போன்ற இதழ்களில் இடம்பெற்ற கவிதைகளையும், சென்னை வானொலியில் ஒளிபரப்பான கவிதைகளும் தொகுத்து கவிதை விருந்து வைத்துள்ளார்கள். 118 தலைப்புகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 

கவிதை உறவு மாத இதழ் வந்தவுடன் ஏழாம் பக்கத்தின் கவிதையை முதலில் படிக்கும் ரசிக்கும் ரசிகன் நான். நான் மட்டுமல்ல கவிதை உறவு வாசகர்கள் பலரும் இதையே வழிமொழிந்தனர். கவிதை உறவு இதழின் சிறப்புகளில் ஒன்று ஏழாம் பக்கம். சிந்திக்க வைக்கும் நல்ல கருத்துக்களை எளிமையான சொற்களின் மூலம் சிற்பி சிலை செதுக்கும் கவனத்துடன் சொற்களைச் செதுக்கி கவிச் சிற்பத்தை சிறப்பாக வழங்கி வருபவர் ஏர்வாடியார். 

இதழாசிரியர் கவிஞராக இருந்தால் இதழில் பக்கம் பக்கமாக அவர்கள் கவிதையே எழுதுவார்கள். ஆனால் ஏர்வாடியார் ஏழாம் பக்கம் தவிர வேறு எந்தப்பக்கத்திலும் அவர் கவிதையே எழுதுவதில்லை. இப்பண்பே சிறந்த பண்பாகும். திரைப்பட இயக்குனர் பிருந்தா சாரதி அவர்கள் நீண்ட நெடிய அணிந்துரையை 18 பக்கங்களில் வழங்கி உள்ளார்.  

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்பார்கூடிப் பாராட்டும் எங்கள் ஏர்வாடியார் என்று வாழ்த்துக் கவிதையை முத்தாய்ப்பாக வழங்கி உள்ளார். இந்த நூலை இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றும் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். சிறப்பு. 

பதச்சோறாக நூலிலிருந்து சில வைர வரிகள் உங்கள் பார்வைக்கு. முத்தாய்ப்பான முதல் கவிதை. எழுத்தே வாழ்க்கையாய் ...

 

உழுத நிலம் என உளத்தை / மாற்று தற்கும்

விழும் விதையாய் எழுத்தையதில் / விதைப்பதற்கும்

எழுதுகிறேன் அன்றிவேறு / எண்ணமில்லை

எழுத்தை விட எனக்கெதுவும் / சிறந்ததில்லை. 

 

எழுத்தை தவமாகக் கொண்டு தொடர்ந்து எழுதி வருபவர். இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களான கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என எல்லாத் துறையிலும் முத்திரைப் பதித்தாலும் கவிதையில் மட்டும் தனக்கென தனி பாணி அமைத்து கவிதை வளர்த்து வருபவர் ஏர்வாடியார். 

ஏழாம் பக்கத்து கவிதைகளை மொத்தமாக நூலாகப் பார்த்த்தில் மட்டற்ற மகிழ்ச்சி, ஏர்வாடியாரிடம் பேசும்போது ஏழாம்பக்கக் கவிதைகளை நூலாக்குங்கள் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறேன். வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு நன்றி அய்யா.

 புகழ்பெற்ற வானதி பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர். 

எப்போதும் போல் இல்லை எப்போதும் தலைப்பே சிந்திக்க வைத்தது உண்மை தான். இப்போது போல நாம் எப்போதும் முகமூடி அணிந்து இருந்தது இல்லை. இப்போது எப்போதும் போல் இல்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். 

கொடிய கொரோனா காலத்திலும் ஓய்வின்றி உழைத்து நூலாக்கி விட்டார்கள். முதுமுனைவர் வெ.இறையன்பு ... அவர்கள் குறிப்பிடுவது போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும். சுறுசுறுப்புத் தேனீ ஏர்வாடியார். அவரது நூல்கள் இந்த நூல் நல்ல மைல்கல்லாக மட்டுமல்ல சிறந்த கவிதைகள் மிக்க வைரவரிகள் உள்ள வைரக்கல்லாக ஒளிர்கின்றது.

 

விநாயகர் சதுர்த்தி கொண்டாடி விட்டு

விநாயகரைக் காப்பது போல்

தேர்தலைக் கொண்டாடி விட்டு

ஜனநாயகத்தைக் கரைத்து விடுகிறோம்

 

நாட்டுநடப்பை குறைந்த சொற்களின் மூலம் படம்பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் ஏர்வாடியார். 

 

நாலாவது வீட்டில்! 

 

நல்ல விஷயங்களை / நாள்தோறும் பேசுகிறோம்

நம்மில் சிலர் / நன்றாகவும் எழுதுகிறோம்

எங்கிருந்தோ / எத்தனையோ / எடுத்துகாட்டுகளை

எடுத்துக்காட்டுகிறோம் / ஆனால் / நாலாவது

வீட்டிலிருக்கிற / நல்ல மனிதர் / நாராயண

சாமி / மட்டும் / நமக்கு தெரிவதே இல்லை. 

 

உண்மை தான். அவரை, இவரை என்று எங்கு இருப்பவரை மேற்கொள் காட்டுவோம். ஆனால் நம் தெருவில் நம்மோடு வசிக்கும் நல்லவரை மேற்கோள் காட்டிட மனம் வருவதில்லை. இன்னும் சிலர்லியோ டால்ஸ்டாயை மேற்கொள் காட்டுவார்கள். ஆனால் அவரே வழிகாட்டியாக நினைத்த நம் திருவள்ளுவரை மறந்து விடுவார்கள். 

 

முரண்பாடு ! 

 

காடுகளை அழித்து மரக் / கன்றுகளை நடுகிறோம்

கொள்ளாதிரும் அடித்து விட்டு / கொடைவள்ளல் ஆகிறோம்

கொலைசெய்து பின்இரங்கல் / கூட்டங்கள் நடத்துவோம்

வன்முறைகள் செய்துவிட்டு / வரைமுறைகள் பேசுவோம்! 

 

நாட்டில் நடக்கும் முரண்பாடுகளை கவிதைகளின் மூலம் உணர்த்தி நாட்டை சீர்படுத்த செய்திட்ட முயற்சி நன்று. 

 

சுழலும் காலச் சக்கர வேகத்தில்

வாழ்க்கை என்பது / வெவ்வேறாவதால்

எப்போதும் போல் இல்லை /

 

எப்போதும் என்பது தான் உண்மை

எப்போதும் இதுவே தான் / இவ்வுலகின் தன்மை. 

 

இவ்வுலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று மாறாத தத்துவத்தை கவிதையின் மூலம் உணர்த்தியது சிறப்பு. எல்லாப் பொருளிலும் பாடி உள்ளார். பாராட்டுக்கள்.

 

வெளியீடு : வானதி பதிப்பகம்,
23,
தீனதயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை
-600 017.
பக்கங்கள்
: 208,
விலை
: ரூ.250. பேச : 044 24342810



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்