கலையும் கலைஞனும்

கி.வா.ஜகந்நாதன்

பிரம தேவன் படைப்புத் தொழிலைத் தொடங்கினான். அழகான பெண்களைப் படைத்தான். அவர்களுள் கலைமகளைப் படைத்தவுடன் அவளுடைய பேரழகிலே சொக்கிப் போனான். " நீ என் மனைவியாக இரு!" என்று வேண்டினான். அன்று முதல் கலைமகள் பிரமதேவனுடைய மனைவியாகி விட்டாள்.

இந்தப் புராணக் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நம்முடைய நண்பர்கள் சிலருக்கு இந்தக் கதையைக் கேட்கவே பிடிப்பதில்லை. "என்ன பைத்தியக்காரத் தனம்! பிரமா கலைமகளை உற்பத்தி செய்தார்; ஆகவே அவர் அவளுக்குத் தந்தை முறை ஆகவேண்டும். தந்தை தம் சொந்த மகளை மணந்துகொள்வது நியாயமா" அதை நாகரிகம் மிக்க ஒரு நாட்டினர் ஒப்புக் கொள்ளலாமா?" என்று ஏசத் தொடங்குகிறார்கள்.

இது புராணக் கதை என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அதாவது உண்மையில் நிகழ்ந்த வரலாறு அல்ல. ஏதோ கருத்தைப் புதைத்து வைத்திருக்கும் கற்பனை அது என்பதை நாம் உணரவேண்டும். இல்லையானால் கலைமகள் பிரமதேவன் நாவில் உறைகிறாள் என்பதை அப்படியே நம்பலாமா? நான்முகன் வாய்க்குள் கலைமகள் உருவோடு வாழ

பிரமதேவன் கலைஞர்களிலே பெரிய கலைஞன்; 'மலரினில் நீலவானில் மாதரார் முகத்தில் எல்லாம் இலகிய அழகை' இயற்றிய ஈசன் அவன். தொழிலாளி ஒருமுறை செய்ததையே திருப்பிச் செய்து கொண்டிருப்பான். கலைஞனோ ஒவ்வொரு கணமும் தன் படைப்பில் புதுமையைக் காட்டுவான். பிரமன் படைத்த மனிதர்கள் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அந்தப் படைப்பிலே தான் எத்தனை புதுமை! ஒருவன் முகம் போல மற்றொருவனுக்கு முகம் இல்லையே! அத்தனை திறம்படக் கலா சிருஷ்டி செய்யும் பிரமதேவனைக் கலைஞர் சிகாமணி என்று தானே சொல்ல வேண்டும்?

கலைஞன் படைப்பே தனி வகை. கலைஞன் படைக்கும்போது மற்றவர்களைவிட வேறான நிலையில் இருப்பவன்.ஆனால் அந்தப் படைப்பை நுகரும்போது அவனே முதலில் நிற்பான். அருமையான இசைக் கச்சேரி நிகழ்கிறது. இசைக் கலையில் மகா மேதாவியான ஒருவர் பாடுகிறார். அவர் பாட்டு மிகமிக உயர்ந்து விளங்குகிறது. இதைச் சபையில் உள்ளவர்கள் சொல்லவேண்டும் என்பது இல்லை. அந்த இசைக் கலைஞர் உள்ளத்துக்கே தெரியும். தாமே அநுபவித்துப் பாடினால் தான் மற்றவரையும் அநுபவிக்கச் செய்ய முடியும். ஆதலின் அவருடைய சங்கீதத்தை முதலில் அநுபவித்தவர் அவரே என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சிற்பி அற்புதமான விக்கிரகம் ஒன்றைச் செதுக்குகிறான். எங்கிருந்தோ கல்லைக் கொண்டு வந்து போட்டு உளியால் அதனை உருவாக்க முயல்கிறான். அதன்மேல் கால் வைத்துக் கொத்துகிறான். உட்கார்ந்து பொளிகிறான். வெறுங் கல்லாக இருந்தது மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. சிற்பி தன் உள்ளத்திலே செதுக்கிக்கொண்ட திருஉருவத்தைக் கல்லிலே செதுக்கிவருகிறான். முதலில் கரடு முரடான உருவம் அமைகிறது. பிறகு ஒவ்வோர் அங்கமாக நகாசு செய்யத் தொடங்குகிறான். நாளாக ஆக அது கல்லின் நிலைமையிலிருந்து மாறிக் கடவுளின் நிலைமை அடைகிறது. எல்லாம் நிறைவு பெற்றுக் கண் திறந்து விடுகிறான். அது வரையில் அது கல்லாகிச் சிலையாகி உருவமாகி இப்போது கடவுளாகி விட்டது. சிற்பியின் குடிசையிலிருந்து கோவிலுக்குப் போகிறது. அதற்கு முன்னாலே அது தெய்வமாகி விடுகிறது. அதை முத லிலே கும்பிடுகிறவன் அந்தச் சிற்பிதான். தன் கால் பட்ட கல் என்றா அதை அவன் நினைக்கிறான்? இல்லை; இல்லை. அது கடவுள் என்றே கும்பிடுகிறான். கோயி லுக்குப் போய்ப் பிரதிஷ்டை ஆன பிறகு தன் பெண்டு பிள்ளைகளுடன் போய் அர்ச்சனை செய்கிறான். அவன் படைத்த பொருளானாலும் அதனால் வரும் பயனை அநுபவிப்பதில் அவனே முந்தி நிற்கிறான்.

பிரமதேவனாகிய கலைஞன் ஓர் அழகுப் பிழம்பைப் படைத்தான். அதன் இன்பத்தை நுகர்ந்தான். சங்கீத வித்துவான் தன் சங்கீதத்தைத் தானே அநுப விப்பதுபோலவும், சிற்பி தான் படைத்த உருவத்தைத் தானே வணங்குவது போலவும் நுகர்ந்தான். வேறு விதமாகச் சொல்லிப் பார்க்கலாம். சங்கீதம் மற்றவர் களுக்கு இன்பம் தருவதற்குக் காரணம், சங்கீத வித்து வானுக்கே அது இன்பம் தந்தது தான். விக்கிரகம் மற்றவர்களால் வணங்கப் பெறுவது, அதைப் படைத்த சிற்பியே முதலில் வணங்கினதால்தான். பிரமதேவன் தான் படைத்த கலைப் பிழம்பைத் தானே மதித்துச் சிறந்த இடத்தில் வைத்துப் பயன் கொண்டான்; உலகம் பிறகே பயன் கொள்ளுகிறது. கலைமகள் பிரமாவின் மனைவி. ஒரு பெண், ஓர் ஆடவனுக்கு மனைவி என்று சொல்லுகிற வகையில், அவர்களி டையே உள்ள உறவு உடம்பைக்கொண்டு அளப்பது அன்று. அங்கே உடம்பே இல்லை. நான்முகன் என்ற ஒருவன் உடம்பு படைத்து உப்புக்கும் அரிசிக்கும் கேடாக வாழவில்லை. அவன் ஒரு தத்து வம்; கலைஞன் பண்பைக் குறிக்கும் தத்துவம். அப் படியே கலைமகளும் அங்கம் படைத்த பெண் அல்ல. இன்று பிறந்து நாளைக்குப் பக்குவமாகி அதற்கு அடுத்த நாள் கிழவியாகி மறுநாள் செத்துப்போகும் மனித உடல் படைத்தவள் அல்ல. நித்திய யௌ வனம் உடையவளாய், நித்திய சுந்தரியாகித் தன்னை அடைந்தார் யாவருக்கும் உடலுக்கு அப்பாற்பட்ட தூய இன்பத்தை உதவுபவளாக இருப்பவள். அவள் பலருக்கு இன்பத்தைத் தருபவள். ஆனால் கன்னி. அவள் பலருடைய நாவில் இருப்பவள். ஆனால் சிறிதும் குறைவுபடாதவள். எதைப் படைத்தாலும் அவள் அருள் வேண்டும். கலைத்திறமை இல்லாத படைப்பில் புதுமை இல்லை; இன்பம் இல்லை; கலைமகள் என்னும் கற்பனை இத்தனை தத்துவத்தையும் உள் ளடக்கிக் கொண்டு நிற்கிறது.

கலைத்திறமையைத் தெய்வீகப் பண்பாய்ப் போற்று வது இந்த நாட்டு வழக்கம். கலைஞர்களைத் தெய்வத்துக்குச் சமானமாக வைத்து வணங்குவது பாரத சமுதாயத்தின் சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயத் தையும் கருத்தையும் உணர்ந்தால்தான், பிரமன் கலை மகளைப் படைத்து மணந்துகொண்டான் என்பதனுள் ஆழ்ந்து நிற்கும் கலையிலக்கணமும், கலைஞன் இலக் கணமும் புலப்படும்

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)