கன்னித் தமிழ்

கி.வா.ஜகந்நாதன்

மனிதராகப் பிறந்தவர் யாவரும் பேசுகின்றனர். அதாவது தம்முடைய உள்ளக் கருத்தை வேறு ஒரு வருக்கு வாயினால் ஒலிக்கும் ஒலிக்கூட்டத்தினால் புலப் படுத்துகின்றனர். அந்த ஒலிக்கூட்டத்துக்கு மொழி அல்லது பாஷையென்று பெயர். எல்லா மனிதர்களும் வாயினால் ஒலி செய்கின்றனர். ஆனால் சிலர் வாயிலிருந்து வரும் ஒலி மொழி ஆவதில்லை. எல்லோருடைய வாயிலிருந்தும் வரும் ஒலி எப்போதும் மொழி ஆவதில்லை.

நாம் வாயை அசைத்து நாக்கைப் புரட்டிப் பேசுகிறோம். அதைப் பார்த்து ஊமையும் தன் நாக்கைப் புரட்டி முழங்குகிறான். ஆனால் பாவம்! அவன் செய்யும் ஒலி மொழி ஆகாது. அப்படியே சின்னஞ் சிறு குழந்தை இனிய மழலை பேசுகிறது. அன்பினால் அதைக் குழலினும் யாழினும் இனிதென்று கொள் கின்றோமே ஒழிய அகராதியைக் கொண்டு அந்த ஒலிக்குப் பொருள் தேட முடியாது.

இந்த இரண்டு வகையான ஒலியும் மொழி ஆகாததற்குக் காரணம் எனன? மக்கள் வாயொலி மூலமாகத் தங்கள் கருத்தைப் புலப்படுத்தும்போது ஒரு வரையறையோடு அதைச்செய்கிறார்கள். அந்த வரையறை இப்படித்தான் பேச வேண்டும் என்று ஒருவர் கட்டுப்படுதாமல் உணவு உண்ணவும் ஆடை உடுத்தவும் எப்படிப் பழக்கம் ஏற்படுகிறதோ அப்படித் தானே ஏற்படுகிறது. பழக்கத்தினால் வருவதுதான் என்றாலும் அந்தப் பழக்கத்தில் உள்ள ஒரு வகைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்பாடாகவே நாம் நினைப்பதில்லை.

இடுப்பில் நம்முடைய நாட்டுக்குத் தக்கபடி ஆடை உடுத்துக்கொள்கிறோம். இந்த நாட்டுக்கு ஏற்றபடி குழம்பைச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடுகிறோம். இத்தகைய பழக்கங்கள் பிறவியோடு வரவில்லை. தாயோ தந்தையோ பிறரோ செய்வதைக் கண்டு தெரிந்து கொள்கிறோம். மொழியும் அப்படித் தான். ஊர்முழுவதும் பேசும் பேச்சுக்கிடையே வாழ் வதனால் நம்மை அறியாமல் அது நமக்குப் பழக்கமா கிறது. குழந்தைப்பிராயத்திலே இயற்கையாக வரும் ஒலி மாறி அதற்கு ஒரு வரையறை ஏற்பட்டு நாமும் தமிழில் பேசுகிறோம்.

எந்த நாட்டுக் குழந்தையானாலும் அவை இயற்கையாகப் பேசும் மொழி ஒன்றுதான். அதற்கு அகராதி இல்லை. ஆனாலும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி மழலை பேசுவதில்லை. ஆகையால் அவை ஒலிக்கும் ஒலியிடையே ஒரு பொதுமையைக் கண்டு பிடித்து அதைக் குழந்தைப் பாஷையாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு குழந்தையும் தனக்கென்று உடம்பும் உயிரும் அமைந்தது போலத் தனக்கென்று ஒரு குரலாகிய மொழியையும் பெற்றுத்தான் பிறக்கிறது.அந்த மொழியைக் கடவுள் ஒருவரே புரிந்துகொள்ளமுடியும்.

மாதக் கணக்கில் வளர்ந்த குழந்தை அழுகை யொலியும்,'ங்கு' சப்தமும் மாறி வளர்ந்து மழலை பிதற்றத் தொடங்கும்போது அதன் தாய் தந்தையர் பழக்கத்தால் அந்தக் குழந்தையின் பேச்சுக்குப் பொருள் தெரிந்து கொள்கிறார்கள். அந்தப் பருவத் தில் ஒவ்வொரு குழந்தையின் பேச்சும் அந்த அந்தக் குழந்தையின் பெற்றோருக்குத்தான் அர்த்தமாகும். சேக்கிழார் என்ற புலவர் இதை ஓரிடத்திற் சொல்லுகிறார். பெரிய புராணத்தில் அவையடக்கத்தில் இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறார்.

"என் மனசுக்குள் சிவபக்தர்களுடைய பெருமையைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதனால் இந்த நூலைப் பாடினேன். என் கருத்து முழுவதையும் இந்த நூல் வெளியிடாமல் இருக்கலாம். ஆனாலும் என் கருத்து இன்னதென்று உணர்ந்த பெரியவர்கள் அந்தக் கருத்துக்கு ஏற்ற சொற்களும் அமைப்பும் இதில் இல்லாவிட்டாலும் அவை இருப்பதாகவே பாவிக்க வேண்டும்; தாமே அவற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும்" என்று அவையடக்கம் சொல்ல வந்தவர் அதற்கு உபமானம் ஒன்று காட்டுகிறார்.

"குழந்தை பேசும்போது அது ஏதோ ஒன்றைக் கருதித்தான் பேசுகிறது. அந்தக் கருத்தைத் தன் மழலைச் சொல்லில் தெரிவித்து விடலாம் என்ற ஆசையோடு பேசுகிறது.ஆனால் யாவருக்கும் அது விளங்குகிறதா? இல்லை. அந்தக் குழந்தையின் கருத்தை யாருமே உணர்வதில்லையா? சிலர் உணர்ந்து கொள்கிறார்கள். அந்தக் குழந்தையினிடம் அன்பு வைத்துப் பழகுபவர்கள் அது இன்னது வேண்டுமென்று கேட்கிறது என்ற கருத்தைத் தெரிந்து கொண்டு, அந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொன்னதாகவே கொள்கிறார்கள். 'போக்கிரி, பால் வேண்டுமென்று கேட்கிறான்!' என்று அயல் வீட்டுக் காரருக்கும் அந்த மொழியின் பொருளை விளக்குகிறார்கள். அவர்கள் எப்படித் தம் குழந்தையின் கருத்தை உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்ற வாக்கியங்களைத் தாங்களே பெய்து கொள்ளுகிறார்களோ அப்படி என் திறத்தில் பெரியவர்கள் செய்ய வேண்டும்" என்று பொருள் விரியும்படியாகாச் சேக்கிழார் பாடி யிருக்கிறார்.

 

செப்பல் உற்ற பொருளின் கருத்தினால்

அப்பொருட்குரை யாவரும் கொள்வரால்

{பொருள்-குழந்தை. அப் பொருட்கு உரை- அந்த

அர்த்தத்துக்கு ஏற்ற மொழியை}

 

குழந்தை பிறகு மொழியைத் தெரிந்து கொள்கிறது. ஆனால் ஊமை எப்போதும் தெரிந்து கொள்வதில்லை.காரணம் பிறர் பேசும் ஒலியைக் கேட்டு அந்த மாதிரிப் பேச அவனுக்குச் செவி இல்லை. உதட்டையும் நாக்கையும் பார்த்து ஏதோசிரமப்பட்டு உளறுகிறான். பாஷை அந்த முயற்சிக்குள்ளே அடங்கினது அல்லவே!

தமிழ் நாட்டில் தமிழை ஒவ்வொரு வீட்டிலும் பேசுகிறார்கள். அந்த வீட்டுப் பேச்சிலே கூட ஒரு தனிமை உண்டு. அதை முதலில் குழந்தை தெரிந்து கொள்கிறது. பிறகு ஊராரோடு பழகி அது தன் பேச்சை விருத்தி செய்து கொள்கிறது. இந்தப் பழக்கம் நடை கற்பதுபோல இயற்கையாகவே வருகிறது. அயல் வீட்டில் வாழ்பவர்கள் நெருங்கிப் பழகுபவர்களாக இருந்து, அவர்கள் வேறு மொழி பேசினால், அதையும் குழந்தை எளிதில் பழகிக் கொள்கிறது. வீட்டில் ஒரு மொழியும் வெளியில் வேறு மொழியும் வழங்கும் இடங்களில் வளரும் குழந்தை களுக்கு அந்த இரண்டும் மிக எளிதில் வந்து விடுகின்றன.

 

இதனால் அந்த இரண்டு மொழிகளும் மிகவும் சுலபமாக எல்லோருக்கும் வந்து விடும் என்று சொல்லலாமா? மொழிக்கு சில வரையறைகள் இருக்கின் றன. மொழி வழங்கும் சமுதாயத்துக்குப் புறம்பே இருந்து அந்த மொழியைக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு அதன் வரையறைகள் தனியே தோற்றும்; கஷ்டமாகவும் இருக்கும். அந்தச் சமுதாயத்திலே பிறந்து வளரும் மக்களுக்கோ அநேகமாக அந்த வரையறையைத் தனியே கவனிக்கும் சந்தர்ப்பம் இருப்பதில்லை. அவர்கள் கவனிக்காவிட்டாலும், வரையறையான அமைப்பை உடைமையினால்தான் ஒரு மொழி, மொழி நிலையை அடைகிறது என்ற உண்மை எப்போதும் உண்மையாகவே நிற்கும்.

தமிழ் மொழி தமிழுலகம் என்னும் இடத்தில் வழங்குவது. அதற்கு இட வரம்பு உண்டு. இன்ன கருத்தை இப்படிச் சொல்ல வேண்டும் என்ற முறை உண்டு. அந்த முறையைத் தனியே புலவர்கள் கவனித்தார்கள். கவனித்து ஆராய்ந்ததைத் தனியே எழுதினார்கள். அதுதான் இலக்கணம். ஒரு பொருள் இருந்தால் அதற்குக் குணம் உண்டு. அந்தக் குணத்தை அதிலிருந்து வேறு பிரிக்க முடியாது. ஆனாலும் அதைப் பற்றிப் பேசும் போதும் ஆராய்ச்சி பண்ணும் போதும் குணத்தைத் தனியே எடுத் துச்சொல்லி விவகரிக்கிறோம். ரோஜாப் பூவிலே செம்மை இருக்கிறது. செம்மையை ரோஜாப் பூவி லிருந்து பிரிக்கமுடியாது. ஆனாலும் ரோஜாப்பூவில் செம்மை நிறம் இருக்கிறது எந்று பேச்சில் வழங்கு கிறோம். அதுபோலவே மொழியில் ஒரு வரம்பு இருக்கிறது என்று சொல்கிறோம். இந்த வரம்புக்கு இலக்கணம் என்ற பெயரைப் பெரியோர்கள் கொடுத்திருக்கிறார்கள். தமிழாகிய ரோஜாப்பூவின் குணம் இலக்கணம். அந்த இலக்கணத்தைத் தனியே பிரிக்க முடியாது. ஆனால் தனியே பார்க்கலாம்; தனியே விவகரிக்கலாம்.

ரோஜாப்பூவுக்குச் செம்மை இயற்கையாகவே அமைந்துபோல மொழிக்கும் வரையறை அது பிறந்தபோதே அமைந்துவிட்டது. ஆனாலும் சீதோஷ்ண நிலையினாலும் தாவர நூலாருடைய முயற்சியாலும் ரோஜாப்பூவின் நிறத்தில் வேறுபாடுகள் அமைவது போலத் தமிழின் வரையறைகள் மாற லாம். அந்த மாற்றம் நினைத்த பொழுது நினைத்தவர் கள் நினைத்தபடி அமைவது அல்ல. அது மாற்றப்படுவது அன்று; தானே மாறுவது. அந்த மாற்றத்தை உணர்ந்து இன்னபடி மாறியிருக்கிற தென்று ஒரு புலவன் சொன்னால் அது புதிய இலக்கணம் ஆகும். அந்தப் புதிய இலக்கணத்துக்காக மொழி மாறுவதில்லை மொழியின் அமைப்பு மாறி வருவதனால் இலக்கணமும் மாறுகிறது.

தமிழ்மொழி பல காலமாகத் தமிழருடைய கருத்தைப் புலப்படுத்தும் கருவியாக இருந்தது. பிறகு கலைத் திறமை பெற்றுப் பல பல நூல்களாகவும் உருப் பெற்றது. மனிதர்கள் பேசும் மொழி தினந்தோறும் உண்ணும் உணவைப் போன்றது. அவருள்ளே புலவர் இயற்றிய நூல்கள் வசதியுள்ளவர்கள் அமைத்த விருந்தைப் போன்றவை. தமிழில் இந்த இரண்டுக்கும் பஞ்சமே இல்லை.

பேச்சு வழக்கு மாயாமல் நூல் சிருஷ்டியும் மங்காமல் மேலும் மேலும் வளர்ந்துவரும் ஒரு மொழியில் அவ்வப்போது புதிய புதிய துறைகள் அமைவது இயற்கை. புதிய புதிய அழகு பொலிவதும் இயல்பே. தமிழில் இப்படி உண்டான மாற்றத்தைப் பார்த்தால் மிக அதிகமென்று சொல்ல முடியாது. புதிதாக உண் டான மொழியில் தான் புதிது புதிதாக வளர்ச்சி உண் டாகும். ஒரு மரம் செடியாக இருக்கும் போது மாதத் துக்கு மாதம் அதன் வளர்ச்சி நன்றாகத் தென்படும். ஆனால் அது மரமாக வளர்ந்து சேகேறி வானளாவிப் படர்ந்து நிற்கும் போது அதில் உண்டாகும் வளர்ச்ச்சி அவ்வளவாகத் தென்படாது. தன்பால் உண்டான வயிரத்தைப் பாதுகாத்துக் கொண்டு அது நிற்கும். அவசியமான வளர்ச்சி யெல்லாம் அமைந்து விட்ட படியால் புதிய புதிய மலரையும் குழையையும் தோற்று விக்கும் அளவோடு அது தன் புதுமையைக் காட்டும்.

தமிழ் இப்படி வளர்ந்து சேகேறிப்போன மொழி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்டான தொல்காப்பியத்தைக் கொண்டு அக்காலத்தில் வழங்கிய வழக்கைத் தெரிந்து கொள்கிறோம். இன்னும் பெரும் பாலும் அந்த வழக்கை யொட்டியே தமிழ் நிற்கிற தென்று தெரிகிறது. முன்னரே பண்பட்ட மொழி யாக இருப்பதால் தமிழ் திடீர் திடீரென்று மாறவில்லை. அன்று தொல்காப்பியர் காட்டிய இலக்கணங்களிற் பெரும் பகுதி இக்காலத்துத் தமிழுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

இதனால், தமிழ் வளரவில்லை யென்பது கருத்தல்ல. புதிய மலரும் புதிய தளிரும் பொதுளித் தமிழ் புதுமையோடு விளங்குகிறது. அடி மரம் சேகேறிக் காலத்தால் அலைக்கப்படாமல் நிற்கிறது. அதனால் தான் இதனைக் கன்னித் தமிழ் என்று புலவர்கள் பாராட்டுகிறார்கள். இந்தக் கன்னி மிகப் பழையவள்; ஆனா லும் மிகப் புதியவள். இவளுடைய இலக்கணத்தைச் சொல்லும் தொல்காப்பியம் பழைய நூல்; ஆனால் புதிய காலத்திற்கும் பொருத்தமானது.

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)