முற்றுகை
முற்றுகை!
சாமான்யமான
முற்றுகையா
என்ன?
முடியுடை
மூவேந்தர்களும்
சூழ்ந்து-
கொண்
டிருக்கின்றனர்.
சேர
சோழ
பாண்டியரென்னும்
அம்மூன்று
அரசர்களும்
தம்முடைய
படைப்பலம்
முழுவதையும்
திரட்டிக்கொண்டு
வந்து
பறம்பு
மலையைச்
சுற்றிக்
குவித்திருக்கின்றனர்.
சேரனுடைய
யானைப்
படையின்
மிகுதியைச்
சொல்வதா?
சோழனுடைய
ஆட்படையைச்
சொல்வதா?
பாண்டியனுடைய
குதிரைப்
படையைச்
சொல்வதா?
எதை
அதிகமென்று
சொல்வது?
இந்தப்
படைப்
பெருங்
கடலினிடையே
கூம்பு
உயர
நிற்கும்
கப்பலைப்போலப்
பாரியின்
பறம்பு
மலை
நிற்கிறது;
அந்த
மலை
எப்படி
அசைவற்று
நிற்கிறதோ
அப்படியே
மலை
மேலுள்ள
பாரியும்
அவனுடைய
உயிர்த்
தோழரான
புலவர்பெருமான்
கபிலரும்
வீரர்களும்
உள்ளத்தில்
அச்சம்
சிறிதும்
இல்லாமல்
திண்ணிய
நெஞ்சத்தோடு
நிற்கின்றனர்.
பறம்புமலையில்
அவ்வளவு
பகைப்படைகளும்
ஏறிச்சென்று
போரிடுவதென்பது
கனவிலும்
நினைக்க
முடியாத
காரியம்.
முட்புதரும்
அடர்ந்த
காடும்
பிணக்குற்ற
கொடிவழிகளும்
பாறை
வெடிப்புக்களும்
நிரம்பிய
அம்மலைச்சாரலில்
வீரர்
ஏறிச்சென்று
உச்சியை
அடைவதற்குள்
யமலோகத்திற்கே
ஏறிப்
போய்
விடுவார்கள்.
வில்லும்
வேலும்
வாளும்
கொண்ட
வீரர்கள்
மீனினங்களைப்போல
மலையடிவாரத்தில்
வட்டமிடு
கின்றனர்.
வட்டமிட்டு
என்ன
பயன்?
அவர்களுடைய
வேலும்
வாளும்
இந்த
நிலையில்
ஒன்றுக்கும்
பயன்
படா.
வில்லும்
அம்பும்
கொண்டு
பறம்பு
மலையின்
உச்சியைத்
துளைக்கப்
பார்க்கிறார்கள்.
அதைவிட
வானுலகத்தைத்
துளைத்துவிடலாம்.
கையோய்ந்து
காலோய்ந்து
உடல்
ஓய்ந்து
உள்ளம்
ஓய்ந்து
நிற்கும்
அந்தப்
பெரும்படையின்
இடையே
தங்களுடைய
திருவோலக்கத்தை
நிருமித்துக்கொண்ட
மூன்று
மன்னர்களும்
கூடி
ஆலோசிக்கலானார்கள்.
பாரி
முன்னூறே
ஊர்களை
உடைய
பறம்பு
நாட்டை
ஆளும்
சிற்றரசன்.
பறம்புமலையின்மேல்
அமைந்தது
அவன்
இராசதானி.
சிற்றரசனாக
இருந்தாலும்
அவனுடைய
பெரும்
புகழ்
வையம்
அளந்து
வானம்
முட்டியது.
இயற்புலமை
விஞ்சிய
புலவர்களிடத்தும்,
இசைத்
திறமை
கொண்ட
பாணர்
பாலும்,
நாடகத்தில்
தேர்ந்த
விறலியர்
திறத்தும்
அவன்
காட்டிய
பேரன்புக்கு
எல்லை
இல்லை.
சிறந்த
ரசிகசிரோமணி.
பெரு
வள்ளல்.
புலவருக்கும்
பாணருக்கும்
விறலியருக்கும்
அவன்
அளிக்காத
பொருள்
இல்லை.
பொன்
கொடுப்பான்,
பொருள்
கொடுப்பான்;
ஊர்
அளிப்பான்,
நாடு
நல்குவான்;குதிரையும்
யானையும்
கொடுத்து
உதவுவான்;
அவர்கள்
வேண்டினால்
தன்னையே
கொடுக்கவும்
முன்வருவான்.
கலைச்சுவை
தேரும்
பண்பும்,
கரவாத
ஈகையும்
உடைய
அவனுடைய
புகழ்
எங்கும்
பரவியது.
அவனுடைய
சிறப்பைப்
பின்னும்
பன்மடங்கு
மிகுவிக்கக்
கபிலர்
அவனுடன்
இருந்து
வாழ்ந்தார்.
புலனழுக்கற்ற
அந்தணாளரும்
புலவர்
அடி
பணிந்து
போற்றும்
கவிப்பெருமானும்
ஆகிய
அவர்
பாரிக்கு
உயிர்த்தோழராக
இருந்தார்.
தமிழ்ச்
சுவையூட்டும்
ஆசிரியராகவும்,
புலவர்களை
வரவேற்று
உபசரிக்கும்
பிரதிநிதியாகவும்,
அவைக்களப்
புலவராகவும்,
அரசியல்
துறையில்
பாரிக்கு
ஏற்ற
மந்திரத்
தலைவராகவும்
விளங்கினார்.
அவனுடைய
பெண்களாகிய
அங்கவை,சங்கவை
என்னும்
இருவரையும்
தம்
கண்மணிபோலப்
பாதுகாத்துத்
தமிழ்
பயில்வித்து
வந்தார்.
அழகிலே
சிறந்து
விளங்கிய
அவ்விளம்
பெண்கள்
கபிலரது
பழக்கத்தால்
அறிவிலும்
ஒழுக்கத்திலும்
பெண்களுக்கு
வரம்பாக
நின்றனர்.அவர்களாலும்
பாரியின்
பெருமை
உயர்ந்தது.
இவ்வளவு
சிறப்புகளையும்
பாரியிடம்
வந்து
பரிசு
பெற்றுச்
செல்லும்
புலவர்கள்,
உலகத்துக்குத்
தங்கள்
வாய்
முரசால்
அறிவித்தனர்.
பெரிய
மண்டலங்களுக்கு
அதிபதிகளாய்,
பாரியைப்
போன்ற
பல
குறுநில
மன்னர்களுக்கு
மன்னர்களாய்,
புலவர்
கூட்டங்களையும்
கலைஞர்
குழாங்களையும்
இறையிலியும்
முற்றூட்டும்
அளித்து
நிலையாகப்
பாதுகாக்கும்
பெருவண்மையராய்,
படையாலும்
பலத்தாலும்
கொடையாலும்
குலத்தாலும்
நாட்டாலும்
நகராலும்
குறைவின்றி
நிறைவு
பெற்ற
வளத்தினராய்
விளங்கிய
சேர
சோழ
பாண்டியர்கள்
காதுக்கும்
பாரியின்
புகழ்
எட்டியது.
எட்டியதோடு
மட்டும்
அல்ல.
அவர்கள்
செவி
வழியே
அம்பு
போல
நுழைந்து
உள்ளத்தே
பாய்ந்து
புண்
படுத்தியது.
புண்ணிலிருந்து
பீரிட்டெழும்
குருதிபோலப்
பொறாமைத்
தீ
புறப்பட்டது. 'முன்னூறே
ஊர்களையுடைய
ஒருவேள்
இவன்.
இவனுக்கு
இத்தனை
புகழா!
இந்தப்
புகழைக்குறைக்க
வழி
தேடவேண்டும்'
என்று
சூழ்ச்சியில்
முனைந்தனர்
மூவரும்.
காரணமின்றி
அவனுடன்
போரிட
விரும்பவில்லை.ஒரு
காரணத்தை
உண்டாக்கிக்
கொள்ள
எண்ணினர்.
பாரியின்
மகளிரைத்
தமக்கு
மணம்
செய்து
கொடுக்க
வேண்டுமென்று
மூவேந்தரும்
தனித்தனியே
ஓலைபோக்கினர்.
அவர்கள்
எதிர்பார்த்ததே
நிகழ்ந்தது
செல்வச்
செருக்கில்
மூழ்கிக்
கண்
மூடிக்
கிடக்கும்
அவர்கள்
வேண்டுகோளை
பாரி
மறுத்தான்.
அதன்
விளைவாகவே
இந்தப்
பெரும்
போர்
மூண்டது.
மூன்று
மன்னர்களும்
ஒருங்கே
தம்
படைகளைக்
கூட்டிப்
பறம்பை
முற்றுகையிட்டுப்
பொருது
நின்றனர்.
படைப்பலத்தால்
பறம்பை
வெல்ல
முடியாது
என்பதை
அவர்கள்
கண்டுகொண்டார்கள்.
மேலே
என்ன
செய்வது?
பறம்பு
மலைக்கு
முன்
அவர்கள்
உள்ளம்
பணிந்து
போய்,
ஊக்கமிழந்து,
தருக்கின்றிக்
குவிந்தன.
யாவரும்
கூடி
ஆலோசித்தனர். 'இனி
நம்
அம்புகளை
எய்து
வீணாக்குவதில்
பயன்
இல்லை.
போர்முறைகளில்
இப்போது
செய்வதற்கு
உரியது
இன்னதென்று
ஆராயவேண்டும்.
பகைமன்னர்
மதிலை
வளைந்த
காலத்தில்
உள்ளே
உணவு
செல்லாமல்
முற்றுகையிட்டால்
போர்
செய்யாமலே
வெற்றி
பெறலாம்
என்று
போர்க்கலையில்
வல்லவர்கள்
சொல்வார்கள்.
அவ்வாறு
நாம்
இன்னும்
சில
மாதங்கள்
இந்த
முற்றுகையைத்
தளர்வின்றிச்
செய்துவந்தோமானால்
மேலுள்ள
குடிகளும்
வீரர்களும்
உணவின்றி
வாடுவார்கள்.
நெல்லும்
கரும்பும்
வெற்றிலையும்
மலையில்
இல்லை.
கீழிருந்துதான்
செல்லவேண்டும்.
உணவுப்
பொருள்கள்
செல்லாமல்
அடைத்துக்
காத்திருந்தோமானால்
மேலே
இருந்து
கொண்டு
வீறு
பேசுபவர்கள்
வயிறு
வாடும்போது
நம்
வழிக்கு
வருவார்கள்;
இல்லையானால்
எல்லோரும்
ஒருங்கே
அழிவார்கள்!'என்ற
முடிவுக்கு
வந்தார்கள்.
ஆதலால்
பறம்புமலையைக்
காத்துக்கொண்டு
படை
முழுவதும்
போர்விளையாமல்
அங்கே
கிடந்தன.
பறம்பு
மலை
என்னும்
கடவுளுக்குமுன்
பாடு
கிடப்பதுபோல
இருந்தது,
அந்தத்
தோற்றம்.
ஒருநாள்
மேலிருந்து
ஒரு
செய்தி
வந்தது;
அம்பிலே
கோத்து
அனுப்பிய
ஓலைச்
சுருளொன்று
படையினிடையே
வந்து
விழுந்தது.
அதைக்
கண்டவுடனே
படைத்தலைவர்களுக்கு
மகிழ்ச்சி
உண்டாயிற்று; 'சந்தேகமே
இல்லை,
இனிமேல்
சமாதானம்
செய்துகொள்ளத்தான்
வேண்டும்,
இல்லாவிட்டால்
உயிர்
தப்புவது
அரிது
என்ற
நல்லறிவு
அவர்களுக்கு
வந்திருக்கவேண்டும்.
புகலடைகிறோம்
என்பதைத்தான்
இந்த
ஓலையில்
எழுதி
விடுத்திருக்கிறார்கள்'
என்று
உள்ளம்
பொங்கிக்
கூத்தாடினார்கள்.
ஓலைச்
சுருளை
எடுத்துக்கொண்டு
மூவேந்தரும்
அவையிருக்கும்
இடத்துக்குச்
சென்று
முன்னே
வைத்தார்கள்.
'மேலே
இருந்து
வந்தது'
என்று
சொல்லுவதற்கு
முன்னே
ஆத்திரத்தோடு
பாண்டியன்
அதை
எடுத்துப்பிரித்தான்;
வாசித்தான்.
இதென்ன!
அவன்
முகத்தில்
ஒளி
மழுங்குகிறதே!
படித்துவிட்டுச்
சோழன்
கையிலே
கொடுத்தான்;
அவனும்
படித்தான்.
படைத்தலைவர்கள்
எதிர்பார்த்தது
ஒன்றும்
நிகழவில்லை;
அவன்
தோளைக்
கொட்டவில்லை;
முகம்
மலரவில்லை.
சேரன்
கையிற்
சென்றது
ஏடு;
பார்த்துவிட்டுக்
கீழே
வைத்தான்.
பாண்டியன்
மீட்டும்
எடுத்துக்
கூர்ந்து
கவனிக்கலானான்.
அவன்
கண்கள்
கலங்கின.
உள்ளத்திலே
துக்கம்
குமுறிற்றா?
கோபம்
மூண்டதா?
-
என்னவென்று
சொல்ல
முடியவில்லை.
சூழ
நிற்கும்
படைத்
தலைவர்களுக்கோ
ஒன்றும்
தெரியவில்லை.
பாண்டியன்
வாய்
திறந்தான்:
"என்ன
அழகிய
பாட்டு!
கபிலரது
வாக்கிலே
எத்தனை
சுவை!
கருத்து,
வைரம்
பாய்ந்ததுபோல
இருக்கிறது.
இத்தகைய
புலவர்
பெருமான்
ஒருவரே
போதும்,
பாரியின்
இறுமாப்பு
மேலும்
மேலும்
வளர்ந்து
ஓங்குவதற்கு.
கபிலர்
நம்முடைய
கருத்தையும்
முயற்சியையும்
அறிந்திருக்கிறார்.
நம்
முயற்சி
வீணென்று
சொல்லி
வீறுபேசுகிறார்.
நம்மைப்
பரிகாசம்
செய்கிறார்.
பாட்டின்
கருத்தைப்
பகைவரது
கருத்தென்று
எண்ணும்போது
நம்
உடம்பு
துடிக்கிறது;
உள்ளம்
சினத்தால்
குமுறுகிறது.
அதன்
கவிச்சுவையைப்
பார்க்கும்போது -
பகைமையை
மறந்து
தமிழ்
இன்பத்தை
மாத்திரம்
நுகரும்போது -
நம்முடைய
உள்ளம்
மலர்கிறது;
தலை
வணங்குகிறது.
ஒவ்வொரு
சொல்லையும்
சுவைத்துச்
சுவைத்துப்
பார்க்க
வேண்டும்
என்ற
ஆவல்
எழும்புகிறது....போர்க்களத்தில்
புலமைக்கு
இடமில்லை;
வாள்
முனையில்
தமிழின்பத்துக்கு
வகை
இல்லை;
பகையுணர்ச்சிக்குமுன்
கலையின்
சாந்திக்குத்
தரிப்பில்லை....
என்ன
இது!
என்னை
இந்தக்
கவிதை
அடிமையாக்கிவிடுகிறதே!
கவிதையை
விட்டுக்
கருத்தைப்
பார்க்கவேண்டும்.
கபிலரை
மறந்து
பாரியை
நெஞ்சின்
முன்
நிறுத்தவேண்டும்.
நீங்களே
பாருங்கள்"
என்று
சொல்லி
வழுதி
அந்த
ஏட்டைப்
படைத்தலைவருள்
முதல்வனிடம்
அளித்தான்.
தலைவன்
வாசித்தான்;
உண்மையை
உணர்ந்தான்.
பறம்பு
மலையின்
இயற்கை
வளம்
இந்த
முற்றுகையை
எதிர்த்து
நிற்கும்
வலியைப்
பாரிக்கு
அளித்திருக்கிறது
என்ற
கருத்தை
அந்தப்
பாட்டு
வெளியாக்கிற்று.
"நீங்கள்
மூன்று
பேரும்
ஒருகாலும்
சேராதவர்கள்.
இப்போது
சேர்ந்து
வந்திருக்கிறீர்கள்.
எல்லோருடைய
முரசும்
சேர்ந்து
முழக்கும்
முழக்கம்
எங்கள்
காதைச்
செவிடுபடச்
செய்கிறது.
ஆனாலும்
என்ன
பிரயோசனம்?
பாரியின்
பறம்பு
மலை
அவ்வளவு
சுலபமாக
வசப்படுவதல்ல!
இதைப்
பார்க்கும்போது
இரக்கந்தான்
உண்டாகிறது.
"நீங்கள்
பல
காலம்
முற்றுகையிட்டால்
உணவுப்
பொருள்
கிடைக்க
வழியில்லாமல்
நாங்கள்
மாண்டு
மடிவோம்
என்று
நினைக்கிறீர்கள்.
எங்கள்
பறம்பு
மலை
அவ்வளவு
வறியது
அன்று.
மண்ணை
உழுது
விளைவிக்கும்
உணவுப்
பொருள்களால்தான்
நாங்கள்
உயிர்
பிழைக்கவேண்டும்
என்ற
அவசியமே
இல்லை.
காலைமுதல்
மாலை
வரையில்
உழைத்து
உழுது
பயிரிடும்
சிரமம்
இல்லாமலே
எங்களுக்குப்
பறம்பு
மலை
நான்கு
உணவுப்
பொருள்களைத்
தருகின்றது.
எங்கும்
அடர்ந்து
வளர்ந்துள்ள
மூங்கிலிலே
நெல்
விளைகின்றது.
அதைக்
கொண்டு
நாங்கள்
சோறு
சமைத்துக்கொள்ளலாம்.
பலாமரங்களில்
இனிய
சுளைகளோடு
கூடிய
பழங்கள்
கனிந்து
உதிர்கின்றன.
அவற்றை
நாங்கள்
உணவுக்கு
வியஞ்சனமாகக்
கொள்வோம்.
தளதள
வென்று
படர்ந்திருக்கும்
வள்ளிக்கொடி
கணக்கில்லாமல்
உள்ளது.
அதன்
கிழங்கு
வேறு
இருக்கிறது.
பொதுவாக,
உண்ணும்
உணவுக்கு
இவை
போதும்.
பெரு
விருந்து
நுகரவேண்டுமானால்,
இதோ
தேனடை
இருக்கிறது.
நன்றாக
முற்றி
விளைந்த
அடைகளிலிருந்து
தேன்
சொரிந்துகொண்டே
இருக்கிறது.
அதைக்
கலத்தில்
ஏந்திக்
குடிக்கவேண்டியதுதான்.
"எவ்வளவு
நாளைக்கு
இந்த
வாழ்வு
என்று
நீங்கள்
நினைக்கலாம்.
எங்கள்
பறம்பு
மலையின்
பரப்பு
உங்களுக்குத்
தெரியாது.
ஆகாசத்தைப்
போலப்
பரந்திருக்கிறது
இது.
அந்த
ஆகாசத்திலே
எவ்வளவு
நட்சத்திரங்கள்
இருக்கின்றனவோ,
அவ்வளவு
சுனைகள்
இங்கே
இருக்கின்றன.
ஆகையால்
நீர்வளத்திலே
சிறிதும்
குறைவில்லை.
உயிர்
வாழ்வதற்குப்
பிறர்
கையை
எதிர்பாராமல்
எங்களைப்
பறம்பு
மலை
வைத்திருக்கிறது.
"பாவம்!
இதைக்
கேட்டால்
நீங்கள்
ஏமாந்து
போவீர்கள்.
உங்கள்
யானைப்படை
எவ்வளவோ
பெரிதாக
இருக்கலாம்;
ஒவ்வொரு
மரத்திலும்
ஒவ்வொரு
யானையைக்
கட்டி
நிறுத்தியிருக்கலாம்.
உங்கள்
தேர்ப்
படை
மிகப்
பரந்ததாக
இருக்கலாம்;
கையகலம்
இடம்
இருந்தாலும்
அங்கெல்லாம்
உங்கள்
தேர்
நிற்கலாம்.
இவ்வளவு
இருந்தும்
ஒரு
பயனும்
இல்லையே!
நீங்கள்
தலை
கீழாக
நின்று
முயன்றாலும்
இந்த
மலை
உங்கள்
வசமாகப்
போவதில்லை;
உங்கள்
முயற்சி
வீணாகிவிடும்.
உங்களுடைய
ஆயுத
பலத்துக்கு
அஞ்சி
இந்த
மலையைப்
பாரி
கொடுக்க
மாட்டான்.
யானை,
தேர்,
வாள்,
உங்கள்
வீரம்
யாவும்
கவைக்கு
உதவாத
நிலையில்
உள்ளன.
"உங்களுக்குப்
பறம்பு
மலை
அவசியம்
வேண்டுமென்றால்
நான்
வழி
சொல்கிறேன்.
அதை
வசப்படுத்தும்
தந்திரம்
எனக்குத்
தெரியும்.
பேசாமல்
இந்த
யானையையும்
குதிரையையும்
ஊருக்கு
அனுப்பிவிடுங்கள்.
வேலையும்
வாளையும்
ஒடித்து
அடுப்பிலே
வையுங்கள்.
எங்கேயாவது
நல்ல
நரம்புக்
கட்டுக்களை
உடைய
யாழ்
இருந்தால்
பார்த்து
ஆளுக்கு
ஒன்றை
எடுத்துக்
கொள்ளுங்கள்.
கொஞ்சம்
இசையையும்
கற்றுக்
கொண்டு
யாழைச்
சுருதிகூட்டி
வாசியுங்கள்.
உங்கள்
தேவிமார்
இருக்கிறார்களே,
அவர்களை
விறலியராக
உங்களோடு
அழைத்துக்கொள்ளுங்கள்.
எல்லோரும்
சேர்ந்து
ஆடிக்கொண்டும்
பாடிக்கொண்டும்
பாரியினிடம்
வந்து
கேளுங்கள்;
பறம்பு
மலை
ஒன்றுதானா?
பறம்பு
நாட்டையும்
சேர்த்துக்
கொடுத்து
விடுவான்''.
பாட்டில்
இவ்வளவு
பொருளும்
- இதற்கு
மேற்பட்ட
பொருள்கூட
-
அடங்கியிருந்தது. 'நீங்கள்
போர்
செய்யத்
தகுதியுடையவர்கள்
அல்ல.
பாரியின்
புகழ்
பாடும்
பாணர்களாகத்
தகுதியுடையவர்கள்'
என்பது
கபிலர்
கருத்தா?
அல்லது,
'பகைமைக்
கண்ணோடு
பார்த்தால்
பாரியின்
பெருமை
தெரியாது;
அவன்
உங்களுக்கு
வசமாகான்;
அமைதியையுடைய
கலைகளை
உணர்ந்து
அவன்
நட்பை
நாடுங்கள்.
அப்போது
அவனை
அடையலாம்'
என்ற
உண்மையை
அவர்
சொன்னரா?
உண்மை
விளங்காமல்
படைத்தலைவர்களும்
மயக்கமும்,
வியப்பும்,
மானமும்
போராட
நின்றனர்.
'இனி
என்ன
செய்வது?'
என்ற
சூழ்ச்சியில்
தலைப்பட்டனர்
பேரரசர்
மூவரும்.''வேறு
ஒன்றும்
செய்வதற்கு
இல்லை.
நம்மை
அவமானம்
செய்து
இழித்துக்
கூறி
நகைக்கிறார்
கபிலர்.
பாரியின்
அகம்பாவத்தை
அவர்
இதன்
மூலமாகத்
தெரிவித்திருக்கிறார்.
பார்க்கலாம்
இவர்களுடைய
வீரத்தை
! மூங்கி
லரிசி
தின்று
வயிறு
நிரம்புமா?
குடிகள்
யாவரும்
தின்பதற்கு
அது
போதுமா?
பலாப்பழத்தைத்
தின்
றால்
வீரம்
வருமா?
இவர்களுடைய
பறம்பு
வளம்
வெறும்
வாய்ப்
பந்தல்
தான்.
இன்னும்
சில
காலம்
முற்
றுகையிட்டால்
அந்த
வளம்
எப்படி
இருக்கிறதென்று
தெரிந்துகொள்ளலாம்.
பலாப்பழம்
எப்பொழுதும்
பழுக்காது;
மூங்கில்
ஒவ்வொரு
நாளும்
விளை
யாது.
இந்தக்
கோடை
வரட்டும்;
வள்ளிக்
கிழங்கு
இவர்களுக்குக்
கிடைப்பதைப்
பார்க்கலாம் "என்று
ஏளனக்
குரலோடு
பேசினான்
சோழன்.
முற்றுகையைத்
தளர்த்தாமல்
இருந்தனர்
மூவரும்.படைகளையெல்லாம்
அங்கே
காவல்
புரிய
வைத்துத்
தங்கள்
தங்கள்
நகரத்திற்குச்
சென்றனர்.
இடையிடையே
வந்து
சில
காலம்
தங்கிப்
படைத்
தலைவர்களுக்கு
ஊக்கமளித்தனர்.
நாட்கள்
சென்றன;
வாரங்கள்
கடந்தன;
பல
மாதங்கள்
கழிந்தன.
பறம்பு
மலை
நின்றது;
அதனை
முற்றுகையிட்ட
படைகளும்
அதனடியிலே
கிடந்தன;
வீணே
சோறுண்டு
பொழுதுபோக்கிக்
கிடந்தன.ஒரு
வருஷம்
ஆயிற்று;
இரண்டாண்டுகள்
கடந்தன.
அங்குள்ள
படைகள்
நிலைப்படைகளாயின;
போர்
செய்வதைக்கூட
மறந்துபோயிருக்கலாம்.
பறம்பு
மலையின்மேல்
உள்ளவர்கள்
வாழ்வு
எப்படி
இருந்தது?
குடிகளுக்கு
உழவர்
உழாத
நான்கு
உணவுகள்
கிடைத்தன.
ஆயினும்
நெல்லஞ்
சோற்றை
உண்டு
பழகினவர்களுக்கு
மூங்கிலரிசிச்
சோறு
செல்லுமா?
வயிற்றுக்கில்லாமல்
சாகும்
நிலை
யாருக்கும்
வராது.
ஆனாலும்
சுவையற்ற
உணவைத்
தின்பதில்
உண்டாகும்
அருவருப்பைத்
தடுக்க
முடியவில்லை.
பாரியும்
கபிலரும்
படைவீரரும்
ஒவ்வொரு
நாளும்
கூடிக்
குடிமக்களுக்கு
வேண்டிய
வகசதிகளைச்
செய்து
வந்தனர்.
உணவுப்
பொருள்களை
அரண்மனையிலே
சேமித்து
வைத்து
அவர்களுக்கு
அளித்தனர்.
மலைவளத்தையும்
மலைவிளை
பொருள்களின்
இயல்பையும்
நன்கு
உணர்ந்த
கபிலர்
எந்த
எந்தப்
பொருளை
உணவாகக்
கொள்ளலாம்
என்பதை
அநுபவத்தால்
தெரிந்து
வைத்திருந்தார்.
இயற்கையின்
எழில்
நலங்களையும்,
இயற்கைப்
பொருள்களின்
இயல்புகளையும்
தீர
ஆராய்ந்து
தெரிந்திருந்த
அவருடைய
யோசனையால்
பறம்பு
மலைமேல்
உள்ளவர்களுக்கு
உணவுக்
குறை
ஒன்றும்
உண்டாகவில்லை.
ஒரு
நாள்
பாரியும்
கபிலரும்
கூடிப்
பேசிக்
கொண்டிருந்தனர்:
"பாரிவேளே,
கீழே
முற்றுகையிட்டவர்கள்
வெளியிலிருந்து
உணவு
நமக்குக்
கிடைக்கக்
கூடாதென்று
எண்ணியிருக்கிறார்கள்.
வெளியிலிருந்து
உணவுப்பொருள்
வராவிட்டாலும்
நாம்
சுகமாக
உயிர்
வாழ்வோம்
என்பதைத்
தெரிவித்து
விட்டோம்.
அது
போதாது.
அவர்கள்
எண்ணத்திற்கு
மாறாக,
அவர்களுடைய
முற்றுகைக்கு
மீறி
வெளியிலிருந்து
நமக்கு
உணவுப்பொருள்
கிடைக்கும்படி
செய்ய
வேண்டும்
" என்றார்
கபிலர்.
"அது
எப்படி
முடியும்?
பறம்பு
மலைமேல்
யாரும்
வர
முடியாதபடி
நாம்
வாயில்களை
அடைத்திருக்கிறோம்.
அவர்களும்
சூழ
நிற்கிறார்கள்.
வேடம்
புனைந்து
யாரேனும்
வந்தால்
கொண்டுவரலாம்.
அத்தகையவர்களை
நம்
பகைவர்கள்
அணுகவிட
மாட்டார்களே !"
என்று
சந்தேகத்தோடு
கேட்டான்
பாரி.
"பகைவர்களுடைய
கட்டுக்கும்
காவலுக்கும்
பறம்புமலை
நெகிழாது.
இங்குள்ள
நாமும்
பணியோம்.
அவர்கள்
செருக்கை
அடக்க
இம்மலையில்
வாழும்
நம்
நண்பர்களை
அனுப்ப
எண்ணியிருக்கிறேன்.
அவர்கள்
கீழே
நாட்டுக்குச்
சென்று
நெற்கதிர்களைக்
கொணர்ந்து
நமக்குக்
கொடுப்பார்கள்"
"தாங்கள்
சொல்வது
விளங்கவில்லை.
நம்முடைய
அன்பர்களுக்குப்
பகைவர்கள்
வழி
விடுவார்களா?"
"அவர்கள்
வழி
விட
வேண்டாம்.
கடவுள்
வழி
விட்டிருக்கிறார் .
அந்த
வழியை
அடைக்கப்
பிரமதேவனாலும்
இயலாது."
"அந்தணர்
பெரும,
தங்கள்
வார்த்தைகள்
எப்பொழுதும்
பொய்யானதில்லை.
கருத்தில்லாத
சொற்கள்
தங்கள்
வாக்கில்
வருவதும்
இல்லை.
ஆனால்
இந்த
மொழிகளை
என்
காது
கேட்டும்,
அவற்றினுள்
அடங்கிய
கருத்தை
உணர்ந்துகொள்ளும்
ஆற்றல்
என்
பேதை
அறிவுக்கு
இல்லை."
"நான்
உறுதியாகச்
சொல்கிறேன்.
இன்னும்
சில
நாட்களில்
நாம்
இறைவனுக்கு
நெல்லஞ்
சோற்றை
நிவேதிக்க
முடியும்'
அந்தப்
பிரசாதத்தை
நாம்
உண்ணலாம்.
குடிகளும்
ஓரளவு
சுவை
காணச்
செய்யலாம்,
பொறுத்திருந்து
பார்த்தால்
தெரியும்."
மாதங்கள்
கடந்தன.
ஒரு
நல்ல
நாள்;
அன்று
பறம்புமலையிலுள்ள
திருக்கோயிலில்
இறைவனுக்குப்
பெரிய
பூசை
நடைபெற்றது.
குடிமக்கள்
யாவருக்கும்
இறைவனுக்கு
நிவேதனமான
அன்னம்
கிடைத்தது!
ஆம்.
பல
காலமாக
அவர்கள்
மறந்திருந்த
நெல்லஞ்
சோறு
தான்
அது!
சந்தேகமே
இல்லை.
கண்ணை
நம்பாவிட்டாலும்
பிறந்தது
முதல்
பழகி
ருசியறிந்த
நாக்குக்
கூடவா
பொய்
சொல்லும்?
அதோ
கோயிலின்
முன்னே
குவிந்திருக்கும்
சிறு
நெற்குவியல்
கூடப்
பொய்யா?
கொத்தாகக்
கட்டித்
தொங்க
விட்டிருக்கும்
நெற்கதிர்
கூடப்
பொய்யா?
எல்லோரும்
வியப்பே
உருவமாகிப்
பிரசாதத்தை
உண்டார்கள்.
களி
துளும்பும்
அகமும்,
மலர்ந்து
விளங்கும்
முகமும்
படைத்த
அவர்களுக்கிடையே
பாரியும்
கபிலரும்
வீற்றிருக்கின்றனர்.
அருகில்
நூற்றுக்
கணக்கான
கிளிகளும்
குருவிகளும்
நெல்லையும்
வேறு
தானியங்களையும்
கொரித்துக்
கொண்டிருக்கின்றன.தங்கள்
குடிமக்களோடு
அந்தப்
பறவைகளும்
விருந்தயர
வேண்டும்
என்பது
கபிலருடைய
விருப்பம்.
கிளிகளையும்
குருவிகளையும்
பழக்குவதில்
அவர்
வல்லவர்.
அவ்வளவு
பறவைகளும்
அவருடைய
ஏவலுக்கு
அடங்கி
நிற்பன.
"பாரி,
பாரி"
என்று
தம்முடைய
மழலைப்
பேச்சிலே
கிளிகள்
கொஞ்சுகின்றன.
"பிரசாதத்தில்
சில
உருண்டைகள்
மிச்சம்
இருக்கட்டும்.
கீழே
இருக்கிறார்களே,
அவர்களுக்கும்
அனுப்பலாம்.
அவர்கள்
நம்பால்
பகைமை
பாராட்டினாலும்
நாம்
நண்பு
பாராட்டலாம் "
என்று
சொல்லிக்
கபிலர்
பாரியைப்
பார்த்தார்.
சில
சோற்றுருண்டைகளை
இலையில்
பொதிந்து
ஓர்
அம்பிலே
கோத்துப்
பாரி
வில்லில்
வைத்து
எய்தான்.
அடுத்த
கணத்தில்
நேரே
படைத்தலைவன்
பாசறைக்கு
முன்னே
அது
சென்று
வீழ்ந்தது.
'பறம்பு
] மலையில்
இறைவனுக்கு
‘நிவேதனமான
அன்னம்'
என்ற
குறிப்போடு
உள்ள
ஓலையொன்றும்
அதில்
இருந்தது.
படைத்தலைவன்
அவற்றைப்
பார்த்தான்;
பிரமித்தான்.
நண்பர்களுகெல்லாம்
காட்டினான்.
"இந்த
அதிசயத்தை
நம்
அரசர்களுக்குத்
தெரிவிக்க
வேண்டும்.
பாரிக்குப்
பறம்புமலையும்
கபிலருமே
பலம்
என்று
இருந்தோம்.
இப்போது
தெய்வமே
அவன்
பக்கமாக
இருக்கிறது.
வானவர்களே
நெல்லை
அனுப்புகிறார்கள்
போலும்!"
என்று
உணர்ச்சி
ததும்பக்
கூறினான்.
வஞ்சிக்கும்
உறையூருக்கும்
மதுரைக்கும்
ஆட்கள்
ஓடினர்.
"அதிசயம்,
அதிசயம்"
என்று
சொல்லிப்
படைத்தலைவர்
திருமுகத்தைக்
கொடுத்தனர்.
மூன்று
வேந்தர்களும்
உடனே
புறப்பட்டுப்
பறம்புமலை
யடியில்
வந்து
சேர்ந்தனர்.
மூவரும்
கூடினர்;
படைத்தலைவர்களைக்
கூட்டினர்.
" இந்தப்
பறம்புமலை
ஒரு
தெய்வம்;
இதை
ஆளும்
பாரி
ஒரு
தெய்வம்;
அவனுக்கு
வாய்த்த
கபிலர்
ஒரு
பெரிய
தெய்வம்"
என்று
அருண்டுபோய்
அவர்கள்
சொல்லி
விடுதலை
வேண்டினர்.
இதென்ன!
மறுபடியும்
ஓர்
ஓலைச்
சுருள்
வந்து
விழுந்தது.
அதனோடு
ஒரு
நெற்கதிரும்
துணையாக
வந்தது.
தம்முடைய
கண்ணாலே
நெற்கதிரைக்
கண்டபோது
அந்த
முடி
மன்னர்களின்
அடி
வயிறு
பகீரென்றது.
கபிலர்
பாடல்
ஒன்று
அனுப்பியிருந்தார்.
ஆனால்
இந்தத்
தடவை
பாட்டு
மிகவும்
சுருக்கமாக
இருந்தது.
நாலே
வரி. "பாவம்!
இந்தப்
பெரிய
மலை
இரங்கத்தக்கது;
வேலால்
இதை
வெல்லுதல்
அரசர்களால்
சாத்தியம்
இல்லை.
ஆனால்
நீலோற்பலம்
போன்ற
மையுண்ட
கண்களைக்
கொண்ட
நாட்டியப்
பெண்
கிணைப்பறையைத்
தட்டிப்
பாடிக்கொண்டு
வந்தால்
அவள்
சுலபமாக
இதனைப்
பெறலாம்"
என்று
மட்டும்
எழுதியிருந்தார்.
"இனி
மேல்
மீசையைச்
சிரைத்துவிட்டு
மஞ்சள்
பூசி
வளையல்
அணிந்து
விறலி
வே
ஷம்
போட்டுக்கொண்டு
வாருங்கள்!
ஆண்
பிள்ளைத்
தனம்
வேண்டாம்"
என்று
காறித்
துப்பினாற்
கூட
அவ்வளவு
காரம்
இராது.
அதே
கருத்தைக்
குளிர்ச்சியாகக்
கொல்லும்
விஷத்தைப்
போல
அந்தப்
பாட்டு
வெளிப்படுத்தியது.
பாண்டியன்
கவிதையைப்
படித்தான்;
சோழன்
அதன்
கருத்தை
உணர்ந்தான்;
சேரன்
பாரியின்
பெருமையை
ஓர்ந்தான்.
‘இனி
இந்த
முயற்சியினால்
பயன்
இல்லை'
என்று
ஒவ்வொருவரும்
எண்ணினர்.
ஒருவர்
முகத்தை
ஒருவர்
பார்த்து
அலங்க
மலங்க
விழித்தனர்.
எல்லோர்
கருத்தும்
ஒன்றே
என்பது
தெளிவாயிற்று. "
சரி,
இவ்வளவு
காலம்
இங்கே
காவல்
புரிந்த
நம்
படைகளுக்கு
வேறு
போர்க்களத்தை
உண்டாக்கிக்
கொடுப்போம்"
யாவரும்
தங்கள்
தங்கள்
இடத்திற்குப்
போகலாம்"
என்று
மூன்று
அரசர்களும்
ஒரே
குரலில்
உத்தரவிட்டனர்.
பறம்புமலை
காலை
யிளஞ்
சுடரோன்முன்
பொன்மலை
போலப்
பொலிந்து
நிமிர்ந்து
நின்றது;
பாரியின்
புகழ்போல
வானை
யளாவ
ஓங்கி
நின்றது.
அன்று
மீட்டும்
பறம்புமலை
இறைவன்
கோயிலில்
சிறப்பான
பூசை
நடந்தது.
நாட்டிலிருந்து
உணவு
வர
இப்போது
தடையொன்றும்
இல்லை.நெல்லும்
வெல்ல
குவியல்
குவியலாக
வந்தன.
புலவரும்
கலைஞரும்
திரண்டு
வந்தனர்.
அரண்மனையில்
பெருங்கூட்டம்.
ஆடலும்
பாடலும்
முழங்கின.
முரசும்
சங்கும்
ஒலித்தன.
கபிலரும்
பாரியும்
அறிவுக்கும்
கொடைக்கும்
அடையாளம்
போல
வீற்றிருக்கின்றனர்.
ஒருபால்
கிளிகளும்
குருவிகளும்
சர்க்கரைப்
பொங்கல்
விருந்துண்டன.
"பாரி
வாழ்க!"
என்று
வாழ்த்துவாரோடு
கிளிகளும்
சேர்ந்து,
"பாரி
வாழ்க"
என்கின்றன.
"கபிலர்
வாழ்க"
என்று
வாழ்த்துவாரோடு
பாரியும்
சேர்ந்து
வாழ்த்துகின்றான்.
கபிலர்
வேதமோதும்
தம்
இனிய
கண்டத்திலிருந்து
புறப்படும்
கணீரென்ற
தொனியில்,
"நம்முடைய
தோழர்களாக
வளர்ந்து
முற்றுகைக்
காலத்தில்
இரவில்
காட்டிலிருந்து
நெற்
கதிர்
கொண்டுவந்து
நமக்கு
உதவிய
இந்தக்
கிளிகளும்
குருவிகளும்
வாழ்க!"
என்று
வாழ்த்தினார்.
யமன்
வாயில்
மண்
காலத்தின்
கோலத்தால்
சோழநாடு
இரண்டு
பிரிவு
பட்டு
இரண்டு
அரசர்களின்
ஆட்சிக்கு
உட்பட்டது.
நலங்கிள்ளி,
நெடுங்கிள்ளி
என்னும்
இருவரும்
சோழ
குலத்தினரே.
இருவரும்
தனித்தனியே
ஒவ்வொரு
பகுதியை
ஆண்டுவந்தனர்.
அவ்விருவருக்கும்
இடையே
இருந்த
பகைமை
மிகக்
கடுமையானது.
கடுமை,
கொடுங்கடுமை
மிகக்
கொடுங்கடுமை
என்று
அந்தப்
பகைமையின்
உரத்தை
எப்படிச்
சொன்னாலும்
பற்றாது.
இருவரும்
வீரத்திலும்
கொடையிலும்
ஒத்தவர்கள்;
புலவர்களைப்
போற்றுபவர்கள்.
ஆயினும்
அவ்விருவரும்
ஒன்றவில்லை.
இந்தப்
பகைநிலைக்கிடையே
துன்புற்றவர்கள்
குடிமக்களே.
சோழநாடு
மிகப்
பழங்காலமுதல்
பிரிவின்றிச்
சிறந்திருந்தது.
நாடு
முழுவதும்
உடல்
போலவும்
அதனைத்
தனியாளும்
அரசன்
உயிர்போலவும்
இருப்பதாகக்
கவிஞர்
வருணிப்பது
வழக்கம்.
இப்பொழுதோ
அந்த
உடல்
இரண்டு
துண்டுபட்டுக்
கிடக்கின்றது.
ஒரு
பகுதியில்
உள்ள
குடிகள்
மற்றொரு
பகுதியிலுள்ளா
ரோடு
கலந்து
பழக
வழியில்லை.
அது
பகைவன்
நாடு
என்ற
ஒரு
பெருந்தடை.
அவர்களிடையே
நெடுங்காலமாக
இருந்த
உறவையும்
நட்பையும்
வியாபாரம்
முதலியவற்றையும்
அறுத்துவிட்டது.
மகளைக்
கொடுக்க
தந்தை
நலங்கிள்ளியின்
ஆட்சியின்
கீழ்
இருப்பான்;
மகளும்
மருமகனும்
நெடுங்கிள்ளியின்
குடிமக்களாக
இருப்பார்கள்.
இருசாராரும்
ஒருவரை
ஒருவர்
பார்த்துப்
பழக
வாய்ப்பில்லை.
என்ன
செய்வது!
அரசர்களுக்குள்
உண்டாகிய
பகைமை
நாடு
முழுவதும்
துன்புற
ஏதுவாகியது.
'இதைக்காட்டிலும்
அரசன்
இல்லாத
நாடு
சிறந்ததாகஇருக்குமே.
நினைத்தபடி
நினைத்த
இடத்துக்குப்
போகலாம்,
வரலாம்,
திரியலாம்'
என்று
எண்ணி
வருந்தினர்
சிலர்.
தமிழ்நாட்டில்
புலவர்களுக்கு
இருந்த
நன்மதிப்பை
என்னவென்று
சொல்வது!
சாதாரண
ஜனங்களுக்கு
இல்லாத
பெருமையும்
உரிமையும்
அவர்களுக்கு
இருந்தன.
ஒருவருக்கொருவர்
பகைமை
சாதிக்கும்
இரு
பெருவேந்தரிடத்தும்
சென்று
பரிசு
பெறும்
உரிமையை
அவர்கள்
படைத்திருந்தார்கள்.
இன்று
ஒரு
புலவர்
மதுரையிலே
பாண்டியன்
அவைக்களத்தில்
தம்முடைய
நாவன்மையைப்
புலப்படுத்திப்
பரிசு
பெறுவார்.
நாளை
அவரே
பாண்டியனுக்குப்
பரம
விரோதியாகிய
சோழன்பால்
சென்று
அவனையும்
பாடிப்
பரிசு
பெறுவார்.
அவர்களுக்கு
எங்கும்
அடையா
நெடுங்கதவுதான்.
இளந்தத்தன்
என்னும்
புலவன்
இளம்
பருவத்தை
யுடையவன்;
கற்பன
கற்றுக்
கேட்பன
கேட்டு
இப்பொழுதான்
உலக
அரங்கத்தில்
உலவக்
கால்
வைத்திருக்கிறான்.
அவனைப்
பலர்
அறியார்.
இனி
மேல்தான்
அவன்
தன்
புலமையைத்
தமிழ்நாட்டில்
நிலை
நிறுத்திக்கொள்ள
வேண்டும்.
தகுதியறிந்து
பரிசளிக்கும்
வள்ளல்
யாரென்று
ஆராய்ந்தறிந்த
அப்புலவன்
சோழன்
நலங்கிள்ளியின்
அரசவையை
அணுகினான்.
தன்னுடைய
புலமைத்
திறத்தைப்
புலப்படுத்தினான்.
இளமை
முறுக்கோடு
அவன்
வாயிலிருந்து
வந்த
தமிழ்க்
கவிதை
நலங்கிள்ளியின்
உள்ளத்தே
இன்பத்தைப்
பாய்ச்சியது."இவ்வளவு
காலமாகத்
தாங்கள்
இந்தப்
பக்கம்
வந்ததேயில்லையே"
என்றான்
நலங்கிள்ளி.
"கூட்டைவிட்டு
முதல்
முதலாக
வெளியேறும்
சிறு
குருவி
நான்.
இன்னும்
தமிழ்நாட்டின்
விரிவை
உணரும்
பாக்கியம்
கிடைக்கவில்லை.
முதல்
முதலாக
இந்த
அவைக்களத்திலே
என்
கவிக்
குழந்தையைத்
தவழவிடுகிறேன்.
அதனை
ஆதரித்துப்
போற்றும்
செவிலித்
தாயைக்
கண்டுகொண்டேன்.
நல்ல
சகுனம்
இது.
இனி
நான்
ஊக்கம்
பெறுவேன்;
தமிழ்
மன்னர்களை
என்
கவிதைக்
காணிக்கையுடன்
கண்டு
நட்புப்பூண்பேன்.
உலகையும்
வலம்
வருவேன்."
இளம்
புலவன்
உற்சாகத்தோடு
பேசிய
பேச்சிலே
அவனுடைய
உள்ள
எழுச்சி
பூரணமாக
வெளிப்
பட்டது.
மனிதன்
தொடங்கும்
முயற்சிகளிலெல்லாம்
வெற்றி
உண்டாகிவிடுகிறதா?
பெரும்பாலும்
தோல்வியைத்தான்
அவன்
காண்கிறான்.
இந்தப்
புலவன்
தன்
முதல்
முயற்சியிலேயே
வெற்றி
பெற்றான்.
வரிசை
யறிந்து
பாராட்டும்
வள்ளலிடம்
முதற்
பரிசைப்
பெற்றான்.
அவனுக்கு
ஊக்கம்
உண்டாகத்
தடை
என்ன?
உலகத்தையும்
வலம்
வரலாமென்ற
பெருமிதம்
எழுவதற்கு
அந்த
ஊக்கமும்
பயமறியாத
இளமையும்
ஆதாரமாக
இருந்தன.
புலவர்களுக்குச்
சம்மானம்
பெரிதல்ல;
விருந்தும்
பெரிதல்ல.
யானைகளையும்
குதிரைகளையும்
ஆயிரம்
ஆயிரமாகக்
கொடுத்தாலும்
அவர்கள்
மகிழ
மாட்டார்கள்.
தரம்
அறிந்து
பாராட்டும்
வள்ளல்களையே
அவர்கள்
தேடுவார்கள்.
தம்முடைய
கவிதையின்
நயத்தை
அறிந்து
இன்புற்றுப்
பாராட்டி
அவர்கள்
அளிக்கும்
பரிசில்
எவ்வளவு
சிறியதானாலும்
பெரு
மகிழ்ச்சியோடு
பெற்றுக்கொள்வார்கள்.
நலங்கிள்ளி
வரிசை
யறிபவர்களிற்
சிறந்தவன்.
இனிய
கவிதையைக்
கேட்பதிலும்,
அக்கவிதையின்
தரந்தெரிந்து
பாராட்டுவதிலும்,
நல்ல
கவிஞர்களை
நாட்டுக்கு
அணியாக
எண்ணிப்
போற்றி
வழிபடுவதிலும்
யாருக்கும்
இளையாதவன்.
இது
தமிழ்
உலகம்
அறிந்த
செய்தி.
இளந்தத்தன்
அவன்
புகழைப்
பலரும்
சொல்லக்
கேட்டுத்தான்
அவன்பால்
வந்தான்.
வந்தது
வீண்
போகவில்லை.
வீண்
போவதா?
புலவன்
தான்
நினைத்ததற்குப்
பல
மடங்கு
அதிகமான
பரிசிலைப்
பெற்றான்;
பாராட்டைப்
பெற்றான்;
எல்லாவற்றையும்
விட,
'இனி
எங்கும்
உலாவித்
தமிழ்
பரப்பலாம்'
என்ற
தைரியத்தைப்
பெற்றான்.
சிலநாள்
நலங்கிள்ளியின்
உபசாரத்தில்
பொழுது
போவதே
தெரியாமல்
இருந்த
இளந்தத்தன்,
"தமிழ்
நாட்டின்
விரிவை
அளந்தறிய
விடை
கொடுக்க
வேண்டும்"
என்று
சோழனிடம்
தெரிவித்தான்.
வரும்
புலவரை
வாவென்று
சொல்லத்
தெரியுமேயன்றிப்
போகும்
புலவர்களைப்
போவென்று
சொல்லத்
தெரியாது
அவனுக்கு.
"அடிக்கடி
வரவேண்டும்
என்னை
மறவாமல்
இருக்கவேண்டும்.
உலக
முழுவதும்
புலவர்களுக்கு
ஊர்.
ஆனாலும்
இந்த
இடத்திலே
தனிப்பற்று
இருந்தால்
நான்
பெரும்
பேறு
பெற்றவனாவேன்"
என்ற
நயஞ்
செறிந்த
வார்த்தைகள்
சோழனிடமிருந்து
வந்தன.
"மறப்பதா?
எப்படி
முடியும்?
முதல்
முதலாகப்
பரிசு
பெற்ற
இந்த
இடத்தை
மறந்தால்
என்னிலும்
பாவி
ஒருவனும்
இருக்க
முடியாது.
எனக்குத்
தாயகம்
இது"
என்று
கூறிப்
புறப்பட்டான்
புலவன்.
சோழ
நாட்டின்
மற்றொரு
பகுதிக்கு
உறையூர்
தலைநகரம்.
அங்கிருந்து
ஆண்டு
வந்தான்
நெடுங்கிள்ளி.
நலங்கிள்ளியின்
குணச்சிறப்பு
அவ்வளவும்
அவனிடம்
இல்லை.
ஆயினும்
பழங்குடியிற்
பிறந்து
பயின்ற
பெருமையால்
பல
நல்லியல்புகள்
அவனிடம்
அமைந்திருந்தன.
இளந்தத்தன்
நலங்கிள்ளியிடம்
பெற்ற
வரிசையுடன்
புறப்பட்டான்.
உறையூர்
சென்று
நெடுங்கிள்ளியையும்
பார்த்துப்
பிறகு
மற்ற
நாடுகளுக்குப்
போகலாம்
என்று
எண்ணினான்.
'இனி
நமக்கு
எங்கும்
சிறப்பு
உண்டாகும்'
என்ற
உறுதியான
நம்பிக்கையோடு
அவன்
நெடுங்கிள்ளியின்
ராஜ்யத்தில்
புகுந்து
உறையூரை
அடைந்தான்.
'நெடுங்கிள்ளியின்மேல்
படையெடுப்பதற்காகச்
சோழன்
நலங்கிள்ளி
படைகளைக்
கூட்டுகிறான்'
என்ற
செய்தி
அப்போது
நாட்டில்
உலவியது.
அதனால்
நெடுங்கிள்ளியும்
தன்
நாட்டுப்
படைவீரர்களை
நகரத்தில்
கூட்டிவைத்திருந்தான்.
போருக்கு
ஆயுத்தமாக
அவ்வீரர்கள்
இந்தச்
சமயத்தில்
இளந்தத்தன்
உறையூர்
வீதியிலே
சென்றான்.
அவனைக்
கண்ட
ஒரு
வீரன்,
'இவன்
யாரோ
புதியவனாக
இருக்கிறான்.
பகைவன்
நாட்டிலிருந்து
வருகிறானோ
என்னவோ?'
என்று
எண்ணித்
தன்
படைத்தலைவனுக்கு
அதனைக்
கூறினான்.
தலைவன்
பார்த்தான்;
உடனே,
"சந்தேகம்
என்ன?
நலங்கிள்ளியிடமிருந்து
ஒற்றனாக
வந்திருப்பான்.
இவனை
மறித்துக்
காவல்
செய்யுங்கள்"
என்ற
கட்டளையை
அவன்
இட்டுவிட்டான்.
இளந்தத்தன்
சிறைப்பட்டான்.
அவன்
வார்த்தை
ஒன்றும்
முரட்டுப்
போர்வீரர்களின்
காதில்
ஏறவில்லை."
நான்
நலங்கிள்ளியிடமிருந்து
வருவது
உண்மைதான்.
ஆனால்
நான்
ஒற்றன்
அல்ல.
அவனிடம்
பாடிப்
பரிசு
பெற்று
வருகிறேன்.
அவன்
அளித்த
பரிசுப்
பொருள்களை
இதோ
பாருங்கள்"
என்றான்.
"இதெல்லாம்
வேஷம்;
பொய்.
புலவன்
போல
வேஷம்
போட்டால்
சர்வ
சுதந்திரம்
உண்டென்று
தெரிந்துகொண்டு
இப்படிப்
புறப்பட்டாய்
போலும்!"
"
நான்
பிறவியிலேயே
புலவன்
தான்.
நான்
பாடின
பாட்டை
வேண்டுமானால்
சொல்லுகிறேன்,
கேளுங்கள்."
"அதெல்லாம்
சூழ்ச்சி.
வேறு
யாராவது
இயற்றிய
பாட்டை
நீ
தெரிந்துகொண்டு
இங்கே
கதை
பேசு
கிறாய்."
"புதிய
கவிதையைச்
சொல்லட்டுமா?
அப்பொழுதாவது
நான்
புலவனென்று
தெரிந்துகொண்டு
விட்டு
விடுவீர்களா?"
புதிய
கவிதையும்
வேண்டாம்;
மண்ணும்
வேண்டாம்.
அதெல்லாம்
யமதர்மராஜன்
சந்நிதானத்தில்
போய்ச்
சொல்லிக்கொள்.
நீ
புலவனென்றால்
பல
பேருக்குத்
தெரிந்திருக்குமே.
இங்கே
யாரையாவது
தெரியுமா?"
இளந்தத்தன்
இப்பொழுதானே
வெளியே
புறப்பட்டிருக்கிறான்?
அவனுக்கு
யாரைத்
தெரியும்?
"ஐயோ!
இந்த
ஊருக்கே
நான்
வந்ததில்லையே!
இப்பொழுதுதானே
வருகிறேன்?
எனக்குப்
பழக்க
மானவர்
ஒருவரும்
இல்லையே!"
என்று
புலம்பினான்.
நெடுங்கிள்ளியிடம், 'பகையரசனிடமிருந்து
வந்த
ஓர்
ஒற்றனைச்
சிறைப்படுத்தியிருக்கிறேன்'
என்ற
செய்தி
படைத்தலைவனிடமிருந்து
சென்றது.
அரசன்
முன்பின்
யோசிக்கவில்லை; "தாமதம்
ஏன்?
கொன்று
விடுங்கள்"
என்ற
ஆணையை
வீசினான்.
'முதற்
பரிசு
நலங்கிள்ளி
தந்தான்.
இரண்டாம்
பரிசு
யமனிடம்
பெறப்போகிறோம்!'
இதுதான்
இளங்
தத்தன்
உள்ளத்தில்
நின்ற
எண்ணம்.
அட
மனித
வாழ்வே!
அற்ப
சந்தோஷமே!
நேற்று
அவன்
இருந்த
இருப்பென்ன!
நின்ற
நிலை
என்ன!
வைத்திருந்த
நம்பிக்கை
என்ன~!
உலக
முழுவதும்
தன்னை
வரவேற்கும்
கைகளையும்
பாராட்டும்
வாய்களையும்
கற்பனைக்
கண்ணாலே
கண்டான்;
இன்றோ
யமன்
அவன்
முன்
நிற்கிறான்.
எந்தச்
சமயத்தில்
அவன்
தலை
தனியே
பூமியில்
உருளப்போகிறதோ!
எந்த
வேளையில்
அவன்
புறப்பட்டானோ!
அவன்
தமிழ்நாடு
முழுவதும்
பிரயாணம்
செய்து
திரும்ப
எண்ணிப்
புறப்பட்டிருக்கவேண்டும்;
திரும்பாப்
பிரயாணத்துக்காகவா
அவன்
நாள்
பார்த்தான்!
எவ்வளவோ
சம்மானங்களைச்
சுமக்க
முடியாமல்
சுமந்து
வரலாமென்ற
ஆசையோடு
புறப்பட்டான்.
இந்த
உடற்பாரங்கூட
இல்லாமல்
செய்யுமென்றால்
உறையூருக்கு
அவன்
வந்திருப்பானா?
அவன்
கவிதையை
மறந்தான்;
நலங்கிள்ளியை
மறந்தான்.
உயிர்
நின்று
ஊசலாட
வாழ்நாளின்
இறுதி
எல்லையிலே
நின்றான்.
------
|