தீபம் நா. பார்த்தசாரதியின்

மணிபல்லவம் (சரித்திர நாவல்)

பாகம் 4 (பொற்சுடர்) 

 

உள்ளடக்கம்:

பொற்சுடர்   

1. அன்பு என்னும் அமுதம்              

2. கப்பலில் வந்த கற்பூரம்             

3. கடலில் கவிழ்ந்த நம்பிக்கைகள்        

4. புரியாத புதிர்கள்             

5. கொதிப்பில் விளைந்த குரூரம்           

6. காலாந்தகன் கொலை

7. வசந்தமாலையின் தந்திரம்    

8. ஆரம் அளித்த சிந்தனைகள்   

9. செவ்வேள் திருக்கோயில்         

10. காவியத்தில் கற்ற காதல்      

11. தேடிக் குவித்த செல்வம்          

12. வழி இருண்டது 

13. நீலநாகரின் நினைவுகள்

14. படிப்படியாய் வீழ்ச்சி

15. பாவங்களின் நிழல்

16. கனவை வளர்க்கும் கண்கள்

17. வாழும் பேய்கள்

18. சோற்றுச் செருக்கு

19. சாவதற்குத் தந்த வாழ்வு

20. காளி கோட்டத்துக் கதவுகள்

21. கால ஓட்டத்தின் சிதைவுகள்

22. இருண்ட பகல்

23. சான்றாண்மை வீரன்

24. ஏழாற்றுப் பிரிவு

25. மணிநாகபுரத்து மண்

-------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

பொற்சுடர்

 

பொருள்களில் பொன்னுக்கு மட்டும் தனித்தன்மை ஒன்றுண்டு. தன்னுடைய பிரகாசம் பிறரைச் சுடாமல் தனக்குப் பெருமையும் பிறர்க்கு ஒளியும் தருகிற ஒரே ஒரு திரவியம் தங்கம். தருக்க நூல்களில் பொருள்களுக்கு இலட்சணம் சொல்லும்போது தங்கத்தை நெருப்பு என்றே சொல்கிறார்கள். தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுக முடியாமை, தன்னிடமிருந்து ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தூயதாக்குதல் - ஆகிய இவை நான்கும் தங்கத்துக்கும், நெருப்புக்கும் ஒத்த குணங்கள். நெருப்பு என்பது சுடுகின்ற பொன். பொன் என்பது சுடாத நெருப்பு. வெதும்பி வாடி இளக இளகத் தம் ஒளி வளருதல் என்பது இரண்டுக்கும் பொதுத் தன்மை. சுடுவதும், சுடாமலிருப்பதும்தான் நெருப்புக்கும் பொன்னுக்குமுள்ள ஒரே வேற்றுமை.

தொட்டால் சுடுகின்றது என்ற ஒரே காரணத்தால் பொன்னைவிடப் பிரகாசமுள்ள நெருப்புக்கு மதிப்பும் விலையும் இல்லை. சுடாதது என்ற ஒரே காரணத்திற்காக நெருப்பினும் குறைந்து குளிர்ந்த பிரகாசமுள்ள பொன்னுக்கு மதிப்பு விலை எல்லாம் உண்டு. பொன்னுக்கும் மணிக்கும் முத்துக்கும் வைர வைடுரியங்களுக்கும் - அவற்றைச் சார்ந்துள்ள பிரகாசத்தின் காரணமாகத்தான் மதிப்பு என்றால் பிரகாசத்தையே மூலவடிவமாகக் கொண்ட அக்கினிக்கு இவற்றைவிட அதிகமான மதிப்பு இருக்க வேண்டும். நெருப்பாகிய சுடுகின்ற பொன்னுக்கு விலை இல்லை. பொன்னாகிய சுடாத நெருப்புக்கு விலை உண்டு. நிலம், நீர், தீ, காற்று, காலம், திக்கு, ஆன்மா, மனம் என்று உலகத்துப் பொருள்களை ஒன்பது வகையாகப் பிரித்திருக்கிறது தருக்கம். இந்த ஒன்பது வகைகளில் தங்கம் என்னும் ஒளிமிக்க உலோகம் எவ்வகைக்குள் அடங்குமென்று ஆராய்ந்தால் நெருப்பில் அடங்கும். நெருப்பாய் அடங்கும். நெருப்பினாலே அடங்கும்.

என்றும் தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பால் தூயதாக்குதல் - ஆகிய பொன்னின் குணங் களோடு தன் கண்களின் நோக்கத்தாலேயே தீமைகளை எரிக்கும் சுடரின் குணத்தையும் சேர்த்துப் பெற்றிருக்கிற காரணத்தினால் இந்தக் கதையின் நாயகனாகிய இளங்குமரனின் நான்காம் பருவத்து வாழ்வைப் பொற்சுடராகவே உருவகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. பொன்னுக்கு விலையும் மதிப்பும் எப்போது ஏற்பட்டிருக்கும்? யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கும்: பொன்னின் ஒளியில் மதிப்பு வைக்கத் தெரிந்து கொண்ட ஒரு முதல் மனிதனும் அதைத் தொடர்ந்து அதன்மேல் அதே மதிப்பை வைக்கப் பழகி விட்ட முடிவற்ற பல மனிதர்களும் பொன்னைப் பற்றி எண்ணி எண்ணிச் சுமந்துவிட்ட எண்ணத்தின் கனம்தான் பொன்னின் கனம், பொன்னின் விலை! இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால் பொன்னுக்கு விலை இல்லைதான்.

அப்படியானால் பொன்னை மதித்து மதித்துப் பொன்னின் ஒளிக்கும் அடிமையாகி இருண்டு விட்ட மானிட இனத்தின் கண்களுக்குப் பொன்னை விடப் பிரகாசமான எதுவும் இன்றுவரை படவே இல்லையா?”

இல்லை.”

பொன்னைவிடப் பிரகாசமான ஒரு பொருளிலிருந்துதான் பொன்னே பிறந்தது!”

அப்படியா? பொன்னுக்கும் முன் மூலமான அந்தப் பொருள் எது என்று தெரிந்தால் அதைப் பொன்னைக் காட்டிலும் அதிகமாக மதிக்கத் தொடங்கி விடலாமே?”

இனிமேல்தான் தொடங்க வேண்டும் என்பதில்லை! அதை நாம் மதிக்கத் தொடங்கிய போதுதான் நமது மறைகளின் முதற் குரல் திசைகளின் செவிகளில் முதற் கேள்வியாகி ஒலித்தது. அதை நாம் மதிக்கத் தொடங்கிய போது தான் நமது வேள்விச் சாலையில் அது முதல் தெய்வமாய் வளர்ந்து எரிந்து கொழுந்து விட்டது. அதை நாம் மதிக்கத் தொடங்கிய போது தான் நம்முடைய மதிப்பு உண்மையான ஒளியைப் புரிந்து கொண்டு மதித்துப் போற்றியது.”

அதற்குப் பெயர்?”

சுடர்.”

அந்தச் சுடர் பொன்னின் ஒளியிலும் இருக்கிறது அல்லவா?”

இருக்கிறது! ஆனால் நெருப்பின் சுடரில் பொன்னிலிருப்பதைக் காட்டிலும் அதிகமான ஒளி இருக்கிறது. இயற்கைப் பொருள்களில் ஒன்றாகிய நெருப்பின் ஓர் ஒளிக்கீற்றுதான் தங்கத்திலும் தங்கமாக இருக்கிறது. தங்கமில்லாமலும் உலகில் ஒளி உண்டு. உலகில் ஒளி இல்லாவிட்டால் தங்கமே இல்லை. ஒளி இன்றேல் தங்கத்தை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாற் போலத் தங்கமாக மதித்துப் புரிந்து கொண்டிருக்க முடியாது.”

தங்கத்திலிருந்து சுடரை மட்டும் பிரித்து விட்டால்?”

சுடரிழந்த தங்கம் அப்படி அதை இழந்து விட்ட காரணத்தால் மண்ணாயிருக்கும்.”

அதாவது மண்ணில் சுடர் கலவாது தங்கம் இல்லை! தங்கம் கலவாத சுடர் உண்டு.”

தங்கம் மண்ணாயிருந்தால் அதைத் தங்கமாக மதிக்கக் காரணமாயிருக்கும் ஒளியை இதில் காண முடியாது. மண் கலவாத தனி ஒளியாயிருந்தால் அதுவே சுடும்! தங்கம் ஒளியாயிருக்கிறது. சுடவும் இல்லை. அதனால்தான் சுடுகின்ற ஒளியைக் காட்டிலும் தங்கமாகிய சுடாத ஒளிக்கு அதிக மதிப்பு.”

இந்தக் கதையின் தலைவனும், திருநாங்கூரடிகள் உருவாக்கிய காவிய நாயகனுமாகிய இளங்குமரன் ஞானப் பசி தீர்ந்தும் தீர்த்தும் வெற்றிக் கொடி நாட்டிய பின் மணிபல்லவத்துக்குப் புறப்படுகிற சமயத்தில் பொன்னாகவும் இருந்தான், சுடராகவும் இருந்தான். முழுமையான பொற்சுடராகவே இருந்தான்.

தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பால் தூயதாக்குதல் ஆகிய பொன்னின் குணங்களைப் பெற்றுத் தானே பொன்னாகி ஒளிரும் ஒருவன் வேறு பொன்னின் மேல் ஆசைப்பட என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை தான்! அவன் எல்லா ஆசைகளையும் உதிர்த்துவிட்டு நின்றபோது எல்லாருடைய ஆசைகளும் அவனைச் சூழ்ந்தன. இளங்குமரன் என்ற அந்தப் பொற்சுடருக்காக முல்லை ஏங்கினாள். சுரமஞ்சரி தவித்தாள். தன்னுடைய பெருமாளிகை நிறையக் குவிந்திருந்த அவ்வளவு பொன்னிலும் காணாத சுடரை இளங் குமரனுடைய கண்களில் கண்டு தவித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்.

தான் சார்ந்த இடங்களை ஒளியுறச் செய்யும் பொன்னைப் போல் அவர்கள் இருவருடைய ஆசை யிலும் தான் இருந்து - தன்னுடைய ஆசையில் அவர்கள் இருவரும் இல்லாமல் - அவர்களுக்கு ஒளி தந்து கொண்டிருந்தான் இளங்குமரன்.

யாரை அல்லது எதை ஆசைப்படுகிறோமோ அவர் அல்லது அது பரிசுத்தமாக இருந்தால் அந்த ஆசை விளைந்து வளர இடமாக இருப்பதன் காரணமாகவே அவை நிகழ்கின்ற மனத்துக்கும் முகத்துக்கும் அழகும் ஒளியும் உண்டாகும்! தெய்வத்தை ஆசைப்படுகிற பக்தனின் முகம், குழந்தையை ஆசைப்படுகிற தாயின் முகம், மெய்யான மாணவனை ஆசைப்படுகிற குருவின் முகம், இவைகளுக்கு வரும் அழகைப்போல் இளங்குமரனை ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அவனுடைய ஒளியையும் தங்களுடைய ஒளியையும் சேர்த்தே வளர்த்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள்.

 

உலகத்தில் பொன்னுக்குப் பொன்னாசை இல்லை. இளங்குமரனும் அப்படிப் பொற்சுடராக இருந்தான். தன்னுடைய மிகுந்த ஒளியினால் பிறருடைய ஆசைகளையும் தன்னையறியாமலே எரித்துச் சுத்தமாக்கிக் கொண்டிருந்தான் அவன். பூம்புகார்த் துறைமுகத்திலிருந்து கப்பல் நகர்ந்தபோது தன்னையறியாமலே தான் முல்லையை மனம் வெதும்பச் செய்திருப்பதை உணர்ந்த சில கணங்களில் மட்டும் சுடுகின்ற நெருப் பாகவும் தான் இருந்து விட்டது போல் தோன்றியது இளங்குமரனுக்கு. அதற்காகத் தனக்குள் வருந்தினான் அவன்.

வாழ்க்கையில் பிறரோடு பழகும்போது கோடைக் காலத்து வெயில்போல் பழகினாலும் துன்பம்; குளிர் காலத்துச் சுனை நீர் போலப் பழகினாலும் துன்பம். கோடைக் காலத்தில் குளிர்ந்த நீர் போலவும், குளிர் காலத்தில் நல்ல வெயில் போலவும், பொருந்திச் சூழ்ந்துள்ளவர்கள் மனம் வெதும்பாமலும் ஒருகால் தன் மனத்தைச் சூழ்ந்துள்ளவர்கள் வெதும்பச் செய்து விட்டால் அதைத் தாங்கிக்கொண்டு மறந்தும் - வாழத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்...’ என்று பொது வாழ்வுக்கு வேண்டிய ஒப்புரவு பற்றித் திருநாங்கூர் அடிகள் பலமுறை கூறியிருந்த பழைய அறிவுரையை எண்ணிக்கொண்டான் இளங்குமரன்.

முரடனாயிருந்து ஒளியற்றவனாகத் தோன்றினா லும் பிறர் வெறுப்பையும் - தூய்மையோடு பொற்சுடராயிருந்து ஒளிபரப்பினால் - பிறருடைய ஆசைகளையும், மோகங்களையும் எதிர்பார்த்து விலக்கிச் சுடாத நெருப்பாகவும் சுடுகின்ற நெருப்பாகவும் மாறிமாறி வாழ நேரும் விந்தையை எண்ணியபடியே கப்பலின் மேல் தளத்திலிருந்து வானத்தைப் பார்த்தான் இளங்குமரன். அவனுடைய முகத்திலும், தோளிலும், மார்பிலும் காலை வெயில் பட்டது. அவை தங்கங்களாகிய அங்கங்களாய் மின்னிப் பொற்சுடர் பரப்பின. உலகப் பொருள் யாவற்றுக்கும் ஒளி தரும் கதிரவனை வணங்கினான் ஒளிச் செல்வனாகிய இளங்குமரன்.

------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

1. அன்பு என்னும் அமுதம்

 

கடலில் தென்திசை நோக்கி விரைந்து கொண்டிருந்த அதே கப்பலில் இளங்குமரன் நின்றுகொண்டிருந்த அதே மேல் தளத்தில் பாய்மரத்தின் மறு பக்கமாக ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். இளங்குமரன் சிந்தனையில் ஆழ்ந்த மனத்தினனாக அமைதியாய் நின்று கொண்டிருந்ததனால் அவன் அங்கு இருப்பதையே மறந்து கீழே இறங்கிப்போய் விட்டதாக எண்ணிக்கொண்டு மணிமார்பனின் மனைவி தன் மனத்தில் இருந்த சில கருத்துக்களைக் கணவனிடம் பேசத் தொடங்கினாள்:

என்ன இருந்தாலும் உங்கள் நண்பருக்கு இந்தக் கல்மனம் ஆகாது. துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கப்பலில் ஏறிக்கொள்ளும்போது அவர் வேண்டு மென்றே அந்தப் பெண்ணைப் புறக்கணித்ததை நான் கவனித்தேன். அவர் விரும்பியிருந்தால்போய் வருகிறேன் முல்லை!’ என்று அந்தப் பெண்ணிடமும் இரண்டு வார்த்தைகள் பேசியிருக்கலாமே.”

பெண்ணே! முதலில் நீ இளங்குமரனை என்னுடைய நண்பர் என்று சொல்வதை இந்தக் கணமே மாற்றிக் கொள்ள வேண்டும். நான் அவரை என்னுடைய நண்பராக நினைத்துக் கொண்டிருந்த காலமும் உண்டு. இப்போது அப்படி நினைப்பதற்கே பயமாயிருக்கிறது எனக்கு. சிலவற்றிற்குக் குருவாகவும், இன்னும் சிலவற்றுக்குத் தெய்வமாகவும் இப்போது அந்த மனிதரை நான் பாவிக்கிறேன். அவரிடம் குற்றம் இருப்பதாக நினைப்பதற்கே நான் பயப்படுகிறேன். நீயோ குற்றம் இருப்பதாக வாய்திறந்து சொல்வதற்கே துணிகிறாய்! வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லையிடம் அவர் பேசாமலே வந்ததற்கு நீயாகவே விளைவு கற்பிக்கிறாய்! எல்லாவற்றிலுமே குணம்தான் நிரம்பியிருக்கிறதென்று முற்றிலும் குணமாகவே பாவிப்பது எப்படிக் கெடுதலோ, அப்படியே முற்றிலும் குற்றமாவே பாவிப்பதும் கெடுதல். அவர் அந்தப் பெண்ணிடம் பேசாமலிருந்தது குற்றமென்று நீ எப்படிச் சொல்ல முடியும்? மெளனத்துக்குப் பொருள் விரோதமென்று கொண்டால், நான் உன்னிடம் பேசாமல் இருந்த சமயங்களில் எல்லாம் கூட உன்னோடு விரோதமாயிருந்திருக்கிறேன் என்று நீ நினைக்கலாம்.”

நான் அப்படி நினைத்தால் தவறென்ன? கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர் மெளனமாகி விட்டால் அந்த மெளனத்திற்குக் காரணம் இல்லாமற் போகாது. பேச்சுக்குக் காரணமும், அர்த்தமும் இருப்பதுபோல் பேசாமைக்குக் காரணம், அர்த்தம் எல்லாம் இருந்தே ஆக வேண்டும்.”

பேச்சுக்கும், பேசாமைக்கும் ஆகிய இரண்டுக்குமே அர்த்தம் இல்லை என்று அவரே சற்றுமுன் வளநாடுடையாரிடம் கூறியதைக் கேட்கவில்லையோ நீ? மெளனத்திற்கு ஒரே அர்த்தம் மெளனமாயிருப்பது என்பதுதான்...”

அந்தப் பெண் அவருடைய மெளனத்தை அப்படி எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லையே! கப்பல் புறப்படுவதற்கு முன் நான் அவளிடம் விடை பெறுவதற்குச் சென்றேன். அப்போது அவள் எனக்கு விடை கொடுப்பதில் அசிரத்தையும், அவர் தன்னிடம் விடை பெறுவதற்கு வரமாட்டாரா என்று கவனிப்பதில் சிரத்தையும் காண்பித்தபடி நின்றிருந்தாள். அவளுடைய கண்களிலும் முகத்திலும் நம்பிக்கை அழிந்து - அது அழிந்த இடத்தில் ஏமாற்றம் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது.”

 

அப்படியா? நீ சொல்வதைக் கேட்டால் முல்லை அப்போது நின்ற நிலை சித்திரத்திற்கு நல்ல காட்சியாக அமைந்திருக்கும் போல் தோன்றுகிறதே. ஒருணர்வு அழிந்து இன்னோர் உணர்வு பிறக்கின்ற காலத்து முகபாவத்தை அப்படியே சித்தரிக்க முடிந்தால் அது ஒவியத் துறையில் ஈடுபட்டிருப்பவனுக்கு மாபெரும் வெற்றி பெண்ணே! இருள் அழிந்து ஒளி பிறக்கிற நேரத்தையும், ஒளி அழிந்து இருள் பிறக்கிற நேரத்தையும் இயற்கை வரைந்து காட்டுகிறாற்போல் முழுமையாய் வரைந்து காட்டுகிற ஓவியனோ, கவிஞனோ உலகத்தில் இதுவரை ஏற்படவில்லை!”

இந்தக் கலைஞர்களே இப்படித்தான். பிறருடைய துக்கத்திலிருந்து தேடி தங்கள் கலையைப் பிறப்பிக்கிறார்கள். ‘அவர் தன்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக் கொள்ளாமல் புறக்கணித்தது போலப் போகிறாரே என்று அந்தப் பெண் முல்லை துயரக் கோலத்தில் நின்றாள் என்று சொன்னால், அந்தக் கோலம் சித்திரத்திற்கு நன்றாக இருக்குமே என்று வாய் கூசாமல் நீங்கள் பதில் சொல்லுகிறீர்களே? இப்போது நீங்கள் கூறியதை அந்தப் பெண்ணின் தந்தை கேட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்!”

பெண்ணே! இப்படி நினைப்பதாயிருந்தால் நீ என்னைப்போல் ஒரு கலைஞனுக்கு மனைவியாக வாய்த்திருக்கக் கூடாது. ஒவ்வொரு கலைஞனுடைய மனமும் பேசாத யாழ். பிறருடைய துன்பங்களாகிய இளைத்த கைகளின் மெலிந்த விரல்கள் அந்த யாழை வருடும்போதுதான் அது பேசுகிறது. அதில் கலைப் பண்கள் பிறக்கின்றன. திருமாலும், திருமகளும், இராமனும், சீதையுமாக மண்ணில் பிறந்து மனிதர்களாக வாழ்ந்து மனிதர்களின் துன்பத்தை மனிதர்களுக்கே உரிய குறைந்த பலத்தோடு தாங்கியிராவிட்டால் எந்தக் கவியின் கையாவது இராமாயணம் எழுதத் துடித்திருக்குமா பெண்ணே?”

சிறிது காலமாக உங்கள் நண்பரோடு இருந்து அவர் பேசிய பேச்சுக்களையும், புரிந்த சமய வாதங்களையும் கேட்டாலும் கேட்டீர்கள் - இப்போது நீங்களே அவரைப்போலப் பேசத் தொடங்கிவிட்டீர்கள்.”

என்ன செய்வது? கண்ணாடி எல்லா உருவத்தையும் தனக்குள் வாங்கிக் காட்டுகிறாற் போலப் பரிசுத்தமானவர்கள் தங்களோடு பழகுகிறவர்களை யெல்லாம் சார்ந்து தன் வண்ணமாகச் செய்து விடுகிறார்கள்!”

இதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் தலை குனிந்தாள் மணிமார்பனின் மனைவி.

பதுமை! இதோ இப்படி என்னைப் பார்! உனக்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்லித் தருகிறேன் என்று தன் மனைவியை அவளுடைய அழகிய பெயரைச் சொல்லி அழைத்தான் மணிமார்பன். பிடரியில் வேர்க் கும்போது எங்கிருந்தோ தற்செயலாகக் குளிர்ச்சியை வீசிக் கொண்டு சில்லென்று பாய்ந்து வந்த தென்றலைப் போல அவன் தன்னைப் பெயர் சொல்லி அழைத்த மகிழ்ச்சியில் குழைந்து நிமிர்ந்து பார்த்தாள் பதுமை. ஓவியன் மணிமார்பன் சிரித்துக்கொண்டே அவளை நோக்கிச் சொன்னான்:

பதுமை! நீங்கள் பெண்கள். எந்த விஷயத்தையும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதற்கு அப்பால் நினைக்க முடியாது. அல்லது நினைக்க விரும்ப மாட்டீர்கள். எல்லாப் பூக்களும் மென்மை என்பது பொதுக் குணமாகி நிற்பது போல் பெண்களாகிய நீங்கள் அன்பை மட்டும் மையமாக வைத்துக் கொண்டே யாவற்றையும் சிந்திக்கிறீர்கள். ஒற்றைத் தூணில் நிற்கிற மண்டபத்துக்குப் பலம் குறைவு. தூணுக்கும் சுமை அதிகம்.”

எப்படியோ பேச்சைத் தொடங்கி எப்படியோ வளர்த்து முடிவில் பெண்களெல்லாம் உணர்ச்சி இல்லாத குத்துக்கற்கள் என்று முடிக்கிறீர்களே; இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?”

அவசரப்படாதே பதுமை! நான் சொல்ல வந்தது வேறு. நீ புரிந்து கொண்டது வேறு. கோபமோ தாபமோ, ஊடலோ, உவகையோ, எல்லா உணர்ச்சிகளையும் அன்பு என்ற ஒரே அடிப்படையில்தான் அடைகிறீர்கள் பெண்களாகிய நீங்கள். எல்லா விளைவுகளுக்கும் ஒரே காரணத்தைத் தவிர வேறு மாற்றமில்லாத வாழ்வு விரைவில் சலித்துப் போய்விடும் என்பார்கள். ஆனால் உலகத்துப் பெண் குலத்துக்கு அந்த அன்பு என்ற ஒரே காரணம் இந்த யுகம் வரை சிறிதும் சலித்ததாக எனக்குத் தெரியவில்லை. நேர் மாறாக அந்த ஒரே காரணத்தில் இன்னும் உறுதியாகக் காலூன்றிக் கொண்டுதான் நிற்க முயல்கிறீர்கள் நீங்கள். பல விளைவுகளுக்குக் காரணமாயிருக்கிற ஒரு காரணம் பல காரணங்களுக்கும் விளை வாயிருப்பது நியாயந்தான். வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லைஇளங்குமரன் தன்னிடம் சொல்லி விடைபெற வேண்டும் என்று எதிர்பார்த்ததற்கும் அவளுடைய அன்புதான் காரணம். அவர் அப்படிச் சொல்லி விடைபெறாத போது அவளுடைய முகத்தில் நம்பிக்கை அழித்து ஏமாற்றம் பிறந்ததற்கும் அந்த அன்பு தான் காரணம். மண்ணுலகத்தில் உயிரை வளர்க்கும் அமுதம் இல்லை என்றார்கள் விவரம் தெரியாதவர்கள். மண்ணுலகத்தில்தான் மெய்யான அமுதம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது பதுமை : இந்த உலகத்தில் அன்புதான் அமுதம் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த அமுதத்தை வைத்துக் கொண்டே உயிர் உறவுகளை நீண்ட காலத்துக்கு அழியாமல் வளர்த்துக் கொண்டு போகலாம்.”

ஆனால் சலிப்பு ஏற்படாத அந்தக் காரியத்தைப் பெண்களாகிய நாங்கள்தான் செய்யமுடியும் என்று ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா! குணங்கள் எல்லாம் தாய்மையிலிருந்து பிறக்கின்றன என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்களோ? உங்கள் கலைக்குத் தொடர்புடைய உதாரணத்தையே சொல்லுகிறேன். நிறங்கள் நிறமில் லாமையிலிருந்து பிறக்கின்றன. ஏழு நிறங்களிலும் அடங்காதது என்ன நிறம்?”

 

சூன்ய நிறம் என்று வைத்துக் கொள்ளேன்.”

சூன்ய நிறம் என்று நீங்கள் சொல்கிற அந்த நிறமின்மையிலிருந்து எல்லா நிறங்களும் கிளைக்க முடியுமானால் எங்கள் அன்பு என்ற ஒரே காரணத்திலிருந்து எல்லா அன்புகளும் ஏன் விளைய முடியாது?”

விளைய முடியும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன் பதுமை! என் நிலை வேறு, இளங்குமானுடைய நிலை வேறு. நான் அன்பை எதிர்பார்க்கிறவன். அன்பு செலுத்துகிறவன். அவர் தம் அன்பைப் பலர் எதிர் பார்த்து ஏங்கும்படி செய்கிறவர். அருளாளர், அன்பு செய்கிறவனுக்கும் அருள் செய்கிறவனுக்கும் வேற்றுமை உண்டு. குணங்களிலே அன்புதான் தாய்க்குணம். அருட்குணம் அன்பினின்று தோன்றிய குழந்தை. தொடர்புடையவர்கள் மேல் மட்டும் நெகிழ்கிற உறவுதான் அன்பு. தொடர்பு, தொடர்பின்மை எதையும் கருதாது எல்லா உயிர்கள் மேலும் செல்கிற பரந்த இரக்கம்தான் அருள். பரந்த எல்லையில் நின்று பார்க்கிற ஒருவரைக் குறுகிய எல்லைக்குக் கொண்டுவர முயல்வது நல்லதுதானா என்று நினைத்துப்பார்! முல்லை இளங்குமரனுடைய அன்பைத் தன்னுடைய எல்லைக்குக் கொண்டு வந்து விட முயல்கிறாள். அதே முயற்சியைச் சுரமஞ்சரியும் செய்கிறாள். பரந்த அருளாளராக உயர்ந்து விட்டவரைத் தங்களுடைய அன்பின் குறுகிய எல்லைக்குள் சிறை செய்துவிட முயல்கிற இவர்கள் இருவரில் யாருக்கு வெற்றி கிடைக்குமென்றும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை பதுமை!”

சுரமஞ்சரி என்பது யார்? உங்களுக்கு மணிமாலை பரிசளித்ததாகக் சொல்வீர்களே? அந்தப் பெண்ணா?”

அவளேதான்! அவளால்தான் இளங்குமரன் என்னும் இந்த அற்புத மனிதரை நான் என்னுடைய வாழ்க்கை வீதியில் சந்திக்க நேர்ந்தது. இந்திர விழாக் கூட்டத்தில் துாரிகையும் கையுமாகத் திரிந்து கொண்டிருந்த என்னை கூப்பிட்டு நாளங்காடியில் அவருடைய ஓவியத்தை வரைந்து தரச் சொல்லிக் கேட்டது அவள் தான். அவருடைய அழகிய சித்திரத்தை என்னுடைய கைகளால் வரையத் தொடங்கிய நாளிலிருந்தே அவருடைய குணச்சித்திரத்தை என்னுடைய மனம் வரைந்து கொள்ளத் தொடங்கி விட்டது. செல்வத்தையும் சுகபோக ஆடம்பரங்களையும் காட்டி அவற்றால் அவரைக் கவர முடியாது. செல்வத்தின் மதிப்பு மிகுதி யானால் அதைப் புறக்கணிக்கிற மனத்தின் மதிப்பு அதைவிட அதிகமென்று நினைக்கிறவர் அவர். மதிப்பு நிறைந்த பொருளைக்கூட மதிக்காமல் நிமிர்ந்து நிற்கிறவருடைய சொந்த மதிப்பை எப்படி அளக்க முடியும்? பதுமை! அவருடைய மதிப்பை அளக்க முடியாமல் தான் அந்தப் பட்டினப் பாக்கத்துப் பெண் அவருக்கு மனம் தோற்றாள்.”

பிறருடைய தோல்வியை ஒப்புக்கொண்டு தான் பெருமிதம் அடைகிறவன் வீரன். அவரோ, சுரமஞ்சரி தனக்குத் தோற்று விட்டாள் என்பதை ஒப்பி அவளுடைய தோல்வியைத் தம்முடைய வெற்றியாகக் கூடக் கொண்டாடாமல் அலட்சியம் செய்கிறார். ‘தன் தோல்வியை - தன் மனத்தின் நெகிழ்ச்சியை அவர் அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் - என்பது தான் இப்போது சுரமஞ்சரியின் தவிப்பு. அவரோ நாளங்காடியில் பலப்பல அறிஞர்களின் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். பிறருடைய அறிவின் தோல்வியை ஒப்புக் கொள்கிறவர் பிறருடைய அன்பின் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார், பதுமை!”

விசித்திரமான உண்மையாயிருக்கிறதே?”

உண்மை விசித்திரமானதாயில்லை! விசித்திரம் தான் உண்மையாயிருக்கிறது என்று மூன்றாவது குரல் ஒன்று ஒலித்ததைக் கேட்டவுடன் மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். பாய் மரத்தின் மறுபுறத்திலிருந்து சிரித்தபடியே இளங்குமரன் அவர்களுக்கு முன்னால் தோன்றினான்.

அவர் அங்கே இல்லை என்று நினைத்துக் கொண்டு தான் பேசியவற்றை யெல்லாம் அவரும் கேட்டிருக்கிறார் என்று தனக்கே புரிந்துவிட்ட அந்த விநாடியில் மணிமார்பனுடைய மனைவி சொல்லிலடங்காத அளவு நாணமும், கூச்சமும், அடைந்தாள். அவளுடைய கண்கள் இளங்குமரனை நேருக்கு நேர் எதிரே பார்ப்பதற்குக் கூசின. மலையுச்சியைக் கடந்து மேலே பறந்துவிடலாம் என்று முயன்ற சிட்டுக்குருவி அந்த மலையுச்சியின் உயரம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டு போவதைக் கண்டு அயர்ந்தாற் போலிருந்தது பதுமையின் நிலை.

சகோதரீ! உங்கள் பேருக்கு ஏற்றாற் போல் நீங்கள் பேசாமலே இருக்கிறீர்களே என்று நேற்று வரை சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று வட்டியம் முதலுமாகச் சேர்த்து உங்கள் கணவரிடம் பேசித் தீர்த்து விட்டீர்கள் என்று இளங்குமரன் முதன்முதலாக மணிமார்பனுடைய மனைவியை நோக்கிப் பேசினான். அவள் பதில் சொல்லவில்லை. அந்தக் குரலின் ஒலியில் பயந்து தயங்கி நின்றாள்.

பேர்தான் பதுமை! இந்தச் சொல்லரசியின் வார்த்தைகளுக்கு இவள் கணவனாகிய நானே அவ்வப் போது பதில் கூறத் திணறிப் போகிறேன் ஐயா என்று மணிமார்பன்தான் சிரித்தவாறே இளங்குமரனுக்குப் பதில் கூறினான். இதைக் கேட்டு இளங்குமரன் புன்னகை புரிந்தான்.

நான்... ஏதாவது... தப்பாகப் பேசியிருந்தால்... பொறுத்தருளி என்னை மன்னிக்க வேண்டும்...” என்று தயங்கித் தயங்கி ஒவ்வொரு வார்த்தையாகக் குனிந்து தலை நிமிராமலே சொன்னாள் பதுமை.

தப்பாகப் பேசியிருப்போமோ என்று இப்போது நீங்கள் நினைத்துப் பயப்படுவதுதான் பெரிய தப்பு சகோதரீ! உங்களுடைய சில கேள்விகளுக்கு உங்கள் கணவரே பதில் கூறத் திணறியதையும் நான் கவனித்தேன். நான் முல்லையிடம் கப்பலேறு முன்பு சொல்லி விடை பெற்றுக்கொள்ளாதது மூன்று பேருடைய மனங்களைத் துன்புறுத்தியிருக்கிறதென்று எனக்கே இப்போது தெரிகிறது. முல்லை துன்புற்றதைத் தவிர நீங்கள் வேறு இதற்காக மனம் வருந்தியிருக்கிறீர்கள் போலும். முல்லையின் தந்தையும் மனம் வருந்தியிருக் கிறார். அருளாளன் அன்பில்லாதவனாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அருளாளனுடைய அன்புக்குக் காரணமும், விளைவும், தனியாக இல்லை என்பதுதான் முக்கியம். நான் தன்னிடம் சொல்லி விடைபெற்றுக் கொள்ளாததை எண்ணி முல்லை வருந்தியிருப்பாளானால் அதுவும் அறியாமைதான் என்று இளங்குமரன் கூறிக்கொண்டே வந்தபோது பதுமையிடமிருந்து நடுவே சில சொற்கள் ஒலித்தன.

அன்பைத் தவிர வேறெதையும் அறியாமல் இருப்பதனால்தான் பெண்களுக்கு அறியாமையையும் ஒரு குணமாகச் சொல்லிவிட்டார்கள். மற்றவற்றை அறியா மலிருப்பது என்ற பேதமையைப் போர்வையாகப் போர்த்தி எங்கள் அன்பாகிய அறிவை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம்.”

ஏதேது? நீ இவருக்கே தத்துவம் சொல்லிக் கொடுப்பாய் போலிருக்கிறதே, பதுமை?” - என்று தன் மனைவியைக் கடிந்து கொள்வது போலக் குறுக்கிட்டான் மணிமார்பன்.

உலகத்தில் எந்தத் தத்துவத்தையும் யாரும் முடிந்து வைத்து விட்டுப் போய் விடவில்லை மணிமார்பா! உன்னுடைய மனைவியின் பேச்சிலிருந்து நான் புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமானால் அதுவும் நான் அவசியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய தத்துவம் தான். என்னையறியாமலே நான் பிறரைப் புண்படுத்தி விடுகிற சந்தர்ப்பங்கள் நேரிடாமல் எனது சான்றாண் மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றுதான் நானும் ஆசைப்படுகிறேன். பிறர் கவனத்தை அவசியமின்றிக் கவர்ந்து நம் புறமாகத் திருப்ப வேண்டாமென்று நாம் மெளனமாக இருந்து விடுவது சில சமயங்களில் பிறரைத் துன்புறுத்தி விடுகிறது. அதற்கென்ன செய்யலாம்?” என்று இளங்குமரன் பேசிக் கொண்டிருந்தபோது, ஏதோ காரியமாகக் கப்பலின் கீழ்த் தட்டுக்குப் போயிருந்த வளநாடுடையார் மரப்படிகளில் பலத்த ஓசையெழுப்பிக் கொண்டு மேலே அதிர நடந்து வந்தார்.

அவர் மேலே வந்த விதமும் அவர்களைப் பார்த்த பார்வையும் அவசரத்தையும் பரபரப்பையும் மூட்டுவன வாயிருந்தன.

அதோ பின்னால் நம்மைத் துரத்திக் கொண்டு வருவதுபோல் தொடர்ந்து வரும் அந்தப் படகைப் பார்த்தாயா, தம்பீ? முதலில் யாரோ எங்கோ படகுப் பயணம் செய்கிறார்கள் என்றெண்ணி நானே அசிரத்தையாகத்தான் இருந்தேன். அந்தப் படகில் இருப்பவர்களில் ஒருவர் அடிக்கடி ஊன்றுகோலை நம்முடைய இந்தக் கப்பல் செல்லும் திசையில் நீட்டி மற்றவர்களிடம் ஏதோ சொல்வதையும் அவர்கள் அதைக் கேட்டுப் படகின் வேகத்தை மிகுதிப்படுத்துவதையும் அந்தப் படகு நம்மை நெருங்குவதையும் கூர்ந்து கவனித்த பின்புதான் எனக்கே சந்தேகம் ஏற் பட்டது என்று சொல்லிக் கொண்டே கரைப் பக்க மாகக் கையைக் காட்டினார் வளநாடுடையார். மணிமார்பனும், இளங்குமரனும் அவர் காட்டிய திசையில் விரைந்து திரும்பிப் பார்த்தார்கள். உண்மைதான்! பின்னால் வந்துகொண்டிருந்த படகு துரத்துவதைப் போலத்தான் நெருங்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தது.

நீ கீழே போய்விடு அம்மா!” என்று வளநாடுடையார் மணிமார்பனுடைய மனைவி பதுமையைத் துரிதப்படுத்திக் கீழே அனுப்பிவிட்டுக் கணத்துக்குக் கணம் நெருங்கும் படகைக் கவனிக்கலானார். படகு அதன் உள்ளே அமர்ந்திருக்கின்றவர்களின் முகம் நன்றாகத் தெரிகிற அளவு நெருங்கிவிட்டது. மணிமார்பனுடைய பார்வை விரைந்து சென்று அந்தப் படகில் சந்தித்த முதல் முகத்தில் ஒரே ஒரு கண்தான் இருந்தது. பார்த்த அவசரத்திலும் பார்க்கப்பட்ட முகம் உண்டாக்கிய பரபரப்பிலும் ஒரு கண் இருந்தது தெரிந்ததா அல்லது ஒரு கண் இல்லாதது தெரிந்ததா என்று உணர முடியவில்லை. ஏற்கெனவே பழகிய அந்த முகத்தின் பயங்கரம் தெரிந்தது. ஒரே கண் மட்டும் இருந்ததனாலோ அல்லது ஒரு கண் இல்லாமையினாலோ படகிலிருந்தவர்களின் தோற்றத்தில் பளிரென்று பார்வையில் பதிந்த முகம் நகைவேழம்பருடையதாகத்தான் இருந்தது. அவரை இளங்குமரனும் பார்த்தான்.

ஐயா! இவன் நல்ல எண்ணத்தோடு வரவில்லை. இந்தப் பாவி பின் தொடர்வதில் ஏதோ சூழ்ச்சியிருக்கிறது என்று பயத்தில் சொற்களைக் குழறினான் மணிமார்பன். தன்னுடைய வாழ்வின் எங்கோ ஒரு மூலையில் பழைய நாட்கள் சிலவற்றில் அந்த ஒற்றைக் கண் கொலைகாரனிடம் அகப்பட்டுக் கொண்டு தான் பட்ட வேதனைகள் இந்த விநாடியில் மணிமார்பனுக்கு நினைவு வந்துவிட்டன போலும்.

பயப்படாதே! படகில் வருகிறவன் எவனாக இருந்தாலும் அவன் உயிருக்குத்தான் ஆபத்து. நாம் மூன்று பேர் - கப்பல் ஊழியர்கள்-எல்லாருமாகச் சேர்ந்தால் அந்தப் படகைப் பொடிப் பொடியாகச் செய்து கடலில் கரைத்துவிடலாம் அப்பனே?” என்று சொல்லியபடி கையில் வேலை எடுத்துக் குறி பார்க்கத் தொடங்கி விட்டார் வளநாடுடையார். மணிமார்பனும் ஒரு வேலை எடுத்துக் கொண்டான். இளங்குமரன் மட்டும் கைகட்டி நின்றவாறே முகத்தில் மெல்லிய நகை மலர இருந்தான்.

என்ன ஐயா நிற்கிறீர்கள்?. நீங்களும்...?” என்று சொற்களைத் தொடங்கிய மணிமார்பன் இளங்குமரனுடைய முகபாவத்தை நோக்கிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டான்.

மணிமார்பா! இந்த விநாடிகள்தான் எனக்கு மெய்யான சோதனை. ‘நான் அருளாளனாக இருப்பதா? அருள் என்ற விரிந்த எல்லையிலிருந்து என்னைக் குறைத்துக் கொண்டு அன்புடையவர்களுக்கு அன்பும் விரோதிகளுக்கு விரோதமும் காட்டுகிற வெறும் மனிதனாகக் கீழே இறங்கிவிடுவதா?’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான் என்றான் இளங்குமரன்.

----------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

2. கப்பலில் வந்த கற்பூரம்

 

மணிபல்லவ யாத்திரைக்காகத் திட்டமிட்டுக் கொண்டு இளங்குமரனும் வளநாடுடையாரும் பூம்புகார்த் துறைமுகத்தில் கப்பல் ஏறுவதற்கு வந்திருந்த அதே காலை நேரத்தில் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் துறைமுகத்தில் மற்றொரு பகுதியில் வந்து நின்று நங்கூரம் பாய்ச்சிக் கொண்ட வேறொரு கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை எவரும் கவனிக்கவில்லை.

பொருள்களை ஏற்றிவரும் கப்பல்கள் பண்டக சாலைகளை ஒட்டிய பகுதியில் நங்கூரம் பாய்ச்சப் படுவது வழக்கம். ஆயினும் பண்டக சாலைகளை ஒட்டித் துறை கொள்ளும் கப்பல்கள் மிகவும் பெரியவைகளாக இருந்தால் அவற்றின் மேல் தளத்தில் நின்று கொண்டிருப்பவர்களால் பூம்புகார்த் துறைமுகத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகப் பார்க்க முடியும். அப்போது வந்த கப்பல் மிகவும் பெரியது. பச்சைக் கற்பூரம், குங்குமம், பனி நீர் முதலிய நறுமணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சீன தேசத்திலிருந்து பல மாதக் கணக்கில் பயணம் செய்து வந்த மிகப் பெரிய மரக்கலம் அது. சீன தேசத்திலிருந்து வந்த கப்பலில் நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் எப்படிப் போய்ச் சேர்ந்தனர் என்பதை இப்போது கவனிக்கலாம்.

அந்த ஆண்டின் இந்திர விழாவில் சமயவாதம் புரிந்து வெற்றிமேல் வெற்றியாகப் புகழ் பெற்றுக் கொண்டிருந்த இளங்குமரனைத் தன்னுடைய மகளைக் கருவியாகப் பயன்படுத்தி பெருநிதிச் செல்வர் கொல்ல முயன்றதும், அந்த முயற்சியும் தோற்றபின் மகள் சுரமஞ்சரியை அவள் தோழியோடு மாடத்திலேயே சிறைவைத்ததும் பரம இரகசியமாக நடந்த சூழ்ச்சிகள். சுரமஞ்சரியை அவளது மாடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிறைப்படுத்திய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தான் அவளைச் சிறைப்படுத்தியிருப்பதாக மற்றவர்கள் அநுமானம் செய்யும் இடமில்லாதபடி சாமர்த்தியமாக அதைச் செய்திருந்தார் அவர். தன்னையும் நகைவேழம்பரையும் தவிர மற்றவர்களுக்கு உண்மைக் காரணத்தைத் தெரியவிடக்கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். சுரமஞ்சரியின் தாயார், சகோதரி, பெரு மாளிகைப் பெண்கள் ஆகியோர்களிடம் எல்லாம் சுரமஞ்சரியின் ஜாதகப்படி கிரகநிலை சரியில்லாத சில காலங்களில் அவள் எங்கும் வெளியேறிச் செல்லாமல் தன் மாடத்திலேயே விரதமிருந்து பரிகாரங்கள் செய்ய வேண்டுமென்று வருவதறிந்து கூறுவதில் வல்ல பூம்புகார்க் கணிகள் கூறியிருப்பதாகவும் அதன்படி அவளைத் தனிமையில் இருக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு எவரும் அவளைச் சந்திக்கலாகாதென்றும் கூறி நம்பச் செய்திருந்தார் பெருநிதிச் செல்வர். பெருமாளிகைப் பெண்களும், பிறரும் நம்பும் விதத்தில் அவருக்கு இந்த அற்புதமான பொய்யைச் சொல்லிக் கொடுத்தவர் நகைவேழம்பர்தான்.

 

இந்திர விழாவில் நாளங்காடியின் பொது இடத்தில் சுரமஞ்சரி தான் அணிந்துகொண்டிருந்த அணிகலன்களை யெல்லாம் கழற்றி எறிந்துவிட்டுஇந்தப் பல்லக்கு நரகத்துக்குப் போகும் வாகனம்! நான் இதில் ஏறி வரமாட்டேன் - என்று அடம்பிடித்த தினத்தில்தான்தன்னுடைய குடும்ப இரகசியங்கள் அந்த நாளங்காடி நாற்சந்தியில் சிதறிவிடுமோ?’ - என்று முதன் முதலாக அவர் அஞ்சினார். அதே நாளில் நகைவேழம்பர் வேறு ஏதோ ஒரு கலக்கத்தைப் பிறப்பிப்பதற்குக் காரணமான மெளனத்தோடு அவரிடம் வன்மமாயிருந்தார். தன் பெண் சுரமஞ்சரி அன்று இருந்த நிலையைக் கண்டு அவளிடம் அவருக்கே பயமாகிவிட்டது. இருளில் மாடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விடுவாளோ என்றுகூட அன்றைக்கு அவளைப் பற்றி பயந்தார் பெருநிதிச் செல்வர். அவள் அப்படி ஏதேனும் அசட்டுக் காரியம் செய்யாமல் தடுக்க நினைத்துத் தான் அவளுடைய மாடத்தின் இருளில் தானே அவளை ஒவ்வொரு கணமும் பார்த்துக்கொண்டு நிற்பது போலத் தோன்றும்படி தன்னுடைய ஊன்றுகோலை வைத்து அரட்டினார். அதே இருளில் இன்னொரு பெரிய அவமானமும் அவருக்கு ஏற்பட்டது. பகல் முழுவதும் வெயில் நெருப்பாய்க் காய்கிற நாளில் பகல் முடிந்ததும் மழை கொட்டுவதுபோல் அன்று காலையில் தொடங்கிய அளவு மீறின அமைதியோடு இருந்த நகைவேழம்பர், இரவில் அவரிடம் ஏதோ பேசச் சென்றபோது பெருநிதிச் செல்வரிடம் எரிமலையாகக் குமுறிவிட்டார்.

அதன் விளைவாக எல்லோரும் உறங்கிப் போன அந்த நள்ளிரவில் நகைவேழம்பரிடமிருந்து பெருநிதிச் செல்வர் வீனில் பெற்ற அவமானம் மறக்க முடியாதது. அந்த அவமானத்துக்குப் பதிலாக அப்போதே பெருநிதிச் செல்வர் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் நகைவேழம்பரைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பார். ஆனால் அவர் உணர்ச்சி வசப்படவில்லை. திட்டமிட்டு நிதானத்தோடு நடந்துகொண்டார். யாருக்கும் தெரியாதென்று தான் அடக்கிக் கொண்ட அந்த அவமானத்தை மேலேயுள்ள மாடத்திலிருந்து தன் மகளே பார்த்து விட்டாள் என்பதும் அவருக்குத் தெரியாது.

பகல் முழுவதும் மெளனமாயிருந்து நீங்கள் சேர்த்துக் கொண்ட ஆத்திரத்தின் விளைவு இதுதான் என்றால் இதற்காக நான் மகிழ்கிறேன் நகை வேழம்பரே!” என்று அவருக்குப் பணிந்து கொடுத்துப் பேசினார் பெருநிதிச் செல்வர். இயல்புக்கு மாறான இந்த நிதானம் நகைவேழம்பருக்கே அதிர்ச்சியை அளித்தது.

நகைவேழம்பர் நிமிர்ந்து ஒற்றைக் கண்ணால் பார்த்தார். எதிரே நின்ற பெருநிதிச் செல்வருடைய இடது கன்னத்தில் ஐந்து விரல்களின் தடமும் பதிந்திருந்தது. “உங்களுடைய ஆத்திரம் இன்னும் மீதமிருந்தால் அதை மற்றொரு கன்னத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் நண்பரே. அதற்காக நான் வருந்த மாட்டேன் என்று நகைவேழம்பரை நோக்கிச் சொல்லிவிட்டு வஞ்சகமாகச் சிரித்தார் பெருநிதிச் செல்வர். இதைக் கேட்டதும் நகைவேழம்பருக்குச் சற்றே பயம் பிறந்தது, உடலில் மெல்ல நடுக்கம் கண்டது.

மன்னிக்க வேண்டும்! அப்போது நான் மிகவும் கோபமாயிருந்தேன். அது என்னை நிதானமிழக்கும்படிச் செய்துவிட்டது.”

அதைப் பற்றிக் கவலையில்லை! நீர் நிதானத்தை இழந்துவிட்ட அதே நேரத்தில் உம்மால் இழக்கப்பட்ட நிதானமும் சேர்ந்து எனக்கு வந்துவிட்டது. ஒரே சமயத்தில் இரண்டு பேருமே நிதானம் இழந்திருந்தால் தான் கெடுதல்!... வாருங்கள். வேறு முக்கியமான காரியத்துக்காக இப்போது நமக்கு இன்னும் நிறைய நிதானம் தேவைப்படுகிறது நகைவேழம்பரே!”

சோறிட்டு வளர்ப்பவனுக்குப் பின்னால் வால் குழைத்துச் செல்லும் நாய்போல் தலைகுனிந்தபடி பெருநிதிச் செல்வரைப் பின்பற்றி நடந்தார் நகைவேழம்பர். இருவரும் பெருமாளிகைத் தோட்டத்தில் தனிமை யானதோர் இடத்தை அடைந்ததும் பெருநிதிச் செல்வர் பேசலானார்:

நம்முடைய பண்டசாலைக்கு இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து சேர்ந்திருக்க வேண்டிய கப்பல் ஒன்று இன்றுவரை வந்து சேரவில்லை. நீரும் அதை மறந்து விட்டீர். பச்சைக் கற்பூரமும் குங்குமமும், பனிநீரும் ஏற்றி வருவதற்காகச் சீனத்து வணிகன் ஒருவனிடம் பல மாதங்களுக்கு முன்னால் ஆயிரம் பொற் கழஞ்சுகள் கொடுத்து ஓலை மாற்றிக் கொண்டோமே, அதை மறந்துவிட்டீர்களா? இந்த ஆண்டு இந்திரவிழாவின் முதற் கிழமைக்குள் கப்பல் இங்கு வந்து சேருமென்று அந்த வணிகன் வாக்குக் கொடுத்தான். இன்றுவரை அந்தக் கப்பலைப் பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லை...”

அந்தச் சீனத்து வணிகன் நம்மிடம் தவறு செய்ய மாட்டான்! இன்று அல்லது நாளைக்குக் கற்பூரக் கப்பல் துறைமுகம் வந்து சேர்ந்துவிடும்...”

வணிகனுக்குத் தவறு செய்ய வேண்டாம் என்ற மனச்சாட்சியே இருக்கலாகாது நகைவேழம்பரே! ஒவ்வொரு கணமும் தவறு செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களைத் தேடிக்கொண்டே இருப்பவன்தான் சாமர்த் தியமான வணிகன். கற்பூர வணிகனாயிற்றே. எல்லாம் நறுமணமாகத்தானிருக்கும் என்று நம்பலாகாது. மணம் கற்பூரத்துக்குத்தான் சொந்தம். அதை விற்கிறவன் கெட்ட நாற்றமுடையவனாகவும் இருக்கலாம்.”

வேண்டுமானால் நாம் அந்தக் கப்பலை எதிர் கொண்டு புறப்பட்டுத் தேடலாமே?” என்று மறுமொழி கூறினார் நகைவேழம்பர். இந்த ஏற்பாட்டின்படி மறுநாள் காலையில் வந்து சேர வேண்டிய கற்பூரக் கப்பலைத் தேடிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும். வந்து சேர வேண்டிய நாளில் எதிர்பார்த்த பொருளுடன் ஒரு கப்பல் வரவில்லையானால் அதைத் தேடி வேறு கப்பலில் எதிர்கொள்வது அந்தக் காலத்துக் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களிடையே வழக்கமாயிருந்தது. மிகப் பெரிய கப்பல் வணிகராகிய பெருநிதிச் செல்வருக்கு அடிக்கடி இந்த வேலை ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படும் போதுகளில் அவரோடு நகை வேழம்பரும் அவருக்குத் துணை போவார்.

இளங்குமரன் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் சமதண்டத்து, ஆசீவகர்களோடு வாதம் புரிந்து கொண்டிருந்த நாட்களில் பெருநிதிச் செல்வரும் நகை வேழம்பரும் பூம்புகாரின் சுற்றுப்புறக் கடலில் கற்பூரக் கப்பலைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். பதினைந்து யோசனை தூரம் வரை அலைந்து திரிந்தபின் சீனத்துக் கப்பல் எதிரே வருவது தென்பட்டது. கடற் காற்றுப் பயணத்துக்கு வசதியான திசையில் இல்லாத தால்தான் இவ்வளவு தாமதமென்று காரணம் கூறினான் அக்கப்பல் தலைவனான சீனத்து வணிகன். பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் தாங்கள் தேடுவதற்காக ஏறிச் சென்ற கப்பலைத் துறைக்குத் திருப்பிக் கொணரும் பொறுப்பை அதன் மீகாமனிடம் ஒப்படைத்துவிட்டுக் கற்பூரக் கப்பலிலேயே ஏறிக்கொண்டு பூம்புகாருக்குத் திரும்பினார்கள். அவர்கள் பூம்புகார்த் துறைமுகத்துக்குத் திரும்பிய அதே தினத்தின் காலையில்தான் இளங்குமரனும் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

பண்டசாலைக்கு எதிரே துறை கொண்ட சீனத்துக் கப்பலின் மேல் தளத்திலிருந்து முதலில் இளங்குமரனைப் பார்த்தவர் நகைவேழம்பர்தான். அவருடைய ஒற்றைக் கண்ணில் தென்பட்டபோது இளங்குமரன் நீலநாகரை வணங்கி விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

நான் ஒன்றைத் தேடிக்கொண்டு வந்தால் தேடி வராத வேறு காரியங்களும் அதே வழியில் எளிதாக வந்து மாட்டிக்கொள்கின்றன ஐயா! அதோபாருங்கள்...” என்று கூறிப் பெருநிதிச் செல்வருக்கு அந்தக் காட்சியைக் காட்டினார் நகைவேழம்பர்.

என்னுடைய இரண்டு கண்கள் பார்க்கத் தவறி விடுவதைக் கூட உம்முடைய ஒரு கண்ணால் நீர் சில சமயங்களில் பார்த்து விடுகிறீர் - என்று அதைக் கண்டு கொண்டே நகைவேழம்பருக்குப் பாராட்டு வழங்கினார் பெருநிதிச் செல்வர். இவர்கள் இருவரும் இவ்வாறு பார்த்துப் பேசிக் கொண்டிருந்த போதே அந்தக் கப்பலின் ஊழியர்கள் பெரிய படகு ஒன்றில் பண்ட சாலைக்குக் கொண்டு போவதற்காகக் கற்பூரத்தை இறக்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். இடமகன்று குழிந்த படகின் உட்புறம் ஓலைப் பாய்களை விரித்துக் குவிக்கப்பட்ட கற்பூரம் அந்தப் பகுதியெல்லாம் மணத்தைப் பரப்பியது. சீனத்துக் கப்பலில் இருந்து பணியாளர்கள் கூடை கூடையாக எடுத்துக் கொடுத்த கற்பூரத்தைத் துறைமுகத்துப் பண்டசாலை ஊழியர்கள் நால்வர் படகில் இருந்து வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த அந்த நிலையில் துறையின் மற்றொரு பகுதியில் இளங்குமரன் முதலியவர்களை ஏற்றிக் கொண்ட கப்பல் புறப்பட்டு விட்டதைக் கண்டுவிட்ட பெருநிதிச் செல்வர் நகைவேழம்பரிடம் ஏதோ சைகை செய்தார். உடனே நகைவேழம்பர் பரபரப்போடு கீழிறங்கித் தங்கள் படகுக்குள் சென்றார். சீனர்களும் சோனகர்களுமாகிய முரட்டுக் கப்பல் ஊழியர்களையும் ஏற்றிக் கொண்டு குவித்த கற்பூரத்தைப் பண்டசாலையில் கொண்டு போய் இறக்கவும் விடாமல் அப்படியே புறப்பட்டு விட்டார் நகைவேழம்பர். தமது படகில் கற்பூரம் இறக்கிக் குவிக்கப்பட்டிருப்பதையே மறந்திருந்தார் அவர். முன்னால் போகும் மணிபல்லவத்துக் கப்பலைப் பின் தொடர வேண்டும் என்றும், அதே சமயத்தில் இன்னும் சிறிது தொலைவு சென்று கரை மறைகிறவரை தாங்கள் அந்தக் கப்பலைத் துரத்துவது போல் அதிலிருப்பவர்களுக்குத் தெரியலாகாதென்றும் படகைச் செலுத்துகிறவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் நகைவேழம்பர். தற்செயலாகச் செலுத்துகிற படகு போலவே, அந்தக் கப்பலை நெருங்காமல் விலகியபடியே பின்தொடர்ந்து கொண்டிருந்தது கற்பூரப் படகு. இதனால் வளநாடுடையாரும், அவர் இளங்குமரனை அழைத்துக்கொண்டு சென்ற கப்பல் மீகாமனும் முதலிலேயே இந்தப் படகைக் கண்டிருந்தும் அவ்வளவாக இதன்மேற் கவனம் செலுத்தவில்லை. சந்தேகமும் படவில்லை.

ஏதோ படகில் சிறு வணிகர்கள் பொருள் ஏற்றிக் கொண்டு செல்லுகிறார்கள் என்று நினைத்து விட்டு விட்டார்கள்.

கரை மறைந்து தனிமையான நடுக்கடலுக்கு வந்த பின்புதான் நகைவேழம்பர் தம்முடைய சுயரூபத்தைக் காட்டினார். முன்னால் செல்லும் கப்பலை நெருங்கித் துரத்துமாறு படகு செலுத்துகிறவனுக்கு ஆணை யிட்டார். அருகில் நெருங்கியதும் தீப்பந்தங்களைக் கொளுத்தி அந்தக் கப்பலில் எறிய வேண்டுமென்றும் தம்முடன் இருந்த முரட்டு ஊழியர்களுக்கு அவசரம் அவசரமாக உத்தரவிட்டார்.

கப்பலின் மேலே தீப்பந்தங்களை எறிய வேண்டுமென்ற அந்த உத்தரவைக் கேட்டவுடனே படகோட்டி பதறிப்போய் ஏதோ சொல்ல வாய் திறந்தான். ஏற்கெனவே அவன் பாய்மரப் படகை வேகமாகச் செலுத்தவில்லை என்று அவன் மேல் அளவற்ற கோபத்தோடிருந்த நகைவேழம்பர் இப்போது அவன் தன்னிடம் பேச வந்ததையே விரும்பாதவராக, “வாயை மூடு ! உன் பேச்சு யாருக்கு வேண்டும்? காரியத்தைக் கவனி...” என்று இரைந்து அவனை அடக்கிவிட்டார். அவன் தான் கூற வந்த மிக முக்கியமான விஷயத்தைச் சொல்ல முடியாமல் அடங்கிப்போய் விட்டான். படகின் பாதுகாப்பானதொரு பகுதியில் வைத்துத் தீக்கடைக் கோல்களைக் கடைந்து விரைவாய்ப் பந்தங்களைக் கொளுத்தவும் தொடங்கி விட்டார்கள் ஊழியர்கள். கப்பலில் இருந்தவர்கள் தங்களை நோக்கி வேலை ஓங்குவதையும் நகைவேழம்பர் கவனித்தார். உடனே தீப்பந்தங்களை எறியத் தொடங்கும்படி உத்தரவு பிறந்தது. கப்பலை நோக்கிப் பந்தங்கள் பாய்ந்து பறந்தன. அப்போதிருந்த ஆத்திரத்தில் நகைவேழம்பர் முன் விளைவு, பின் விளைவைச் சிந்திக்கிற நிதானத்தை முற்றிலும் இழந்திருந்தார். ஏறக்குறைய அடிமைகளுக்குச் சமமான அந்த ஊழியர்களும் அவர் கட்டளை யிட்டதைச் செயலாக்க முனைந்தார்களே ஒழிய அந்த கட்டளைக்குக் கீழ்ப்பணிந்து செயல்படுவதால் வரும் விளைவுகளை நினைக்கவில்லை. கப்பலின் மற்றொரு மூலையில் கற்பூரம் குவிக்கப்பட்டிருப்பதை படகோட்டி ஒருவனைத் தவிர மற்றவர்கள் மறந்தே விட்டனர். அடிமைகளாயிருப்பவர்களுக்குநாம் அடிமைப்பட்டிருக்கிறோம் என்று நினைப்பதற்கே நேரமும் சுதந்திரமும் இல்லாதபோது மற்ற விளைவுகளை நினைக்க நேரம் ஏது? அந்தக் கூட்டத்தில் அடிமையல்லாதவனாகிய படகோட்டி மட்டும் ஒரு கணம் பின்விளைவை நினைத்து நகைவேழம்பரை எச்சரிப்பதற்கு வாய் திறந்தான். அவருடைய கூக்குரலையும் பயமுறுத்தலையும் கண்டுநமக்கு ஏன் வம்பு?’ - என்று இறுதியில் அவனும் அடங்கிப்போய் விட்டான். இளங் குமரனை ஒடுக்கி அடக்கி இல்லாமற் செய்துவிடும் முயற்சியில் இரண்டு மூன்று முறை தாம் தோற்றுப் போய்ப் பெருநிதிச் செல்வருக்கு முன் தலைகுனிந்து நின்ற சமயங்களை இப்போது நினைத்துக் கொண்டு விட்டார் நகைவேழம்பர். அப்படித் தலைகுனிந்து தான் நிற்க நேர்ந்த சமயங்களில் புழுவைப் பார்ப்பதுபோல் பெருநிதிச் செல்வர் தன்னை அலட்சியமாகப் பார்த்த பார்வைகளும் நினைவுக்கு வந்து அவரைக் கொலை வெறியில் முறுகச் செய்தன. செய்வதன் விளைவை நினையாமற் செயற்பட்டார் அவர். இளங்குமரனைக் கப்பலோடு கடலில் கவிழ்ந்து மூழ்கச் செய்துவிட்டு அந்த வெற்றியோடு பெருநிதிச் செல்வருக்கு முன் போய் நிற்க வேண்டுமென்ற ஒரே ஆசைதான் அவருக்கு இப்போது இருந்தது.

----------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

3. கடலில் கவிழ்ந்த நம்பிக்கைகள்

 

துரத்திக் கொண்டு வந்த படகில் இருப்பவர்கள் தீப்பந்தங்களைக் கொளுத்தித் தங்கள் கப்பலின் மேல் எரியும் அளவுக்குத் தாக்குதல் வளர்ந்து விட்டதைக் கண்டு அமைதியாகக் கைகட்டிக் கொண்டு நிற்கும் இளங்குமரனைப் பார்த்துப் பெரும் சீற்றமடைந்தார் வளநாடுடையார். “பகைவர்களுக்கு முன்னால் இரக்கம் காட்டுவது பேதமை தம்பீ! பகைக்கு முன்னால் காட்ட வேண்டிய ஒரே அறம் பகைதான். அருள் என்றால் விலை என்ன என்று கேட்கிறவர்களிடம் நீ அருள் காட்டிப் பயனில்லை. உன் மனத்தை மாற்றிக்கொள். கைகளை உதறிக்கொண்டு இந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முன் வா! பறந்து வருகிற தீப்பந்தங்கள் இந்தக் கப்பலின் பாய்மரத்தில் பட்டுவிடாதபடி மறித்துப் பிடி. நமது பாய்மரம் தீப்பட்டு எரிந்து போனால் பின்பு இந்தக் கப்பல் எந்தத் திசையில் போகுமென்று சொல்ல முடியாது. அநாதைக் கப்பலாகிக் கடலிலேயே கிடந்து அலைக்கழியும். நமது பாய்மரத்தைக் காப்பாற்று, நம்முடைய இந்தக் கப்பல் கவிழ்ந்தால் இதனோடு என்னுடைய எல்லா நம்பிக்கைகளுமே கவிழ்ந்துவிடும் - என்று ஆவேசத்தோடு கூறியபோது வளநாடுடை யாரின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்துவிட்டன. அந்தக் கிழட்டு உடல் தாங்கமுடியாத ஆவேசத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பாய்மரக் கப்பலின் மீகாமன் வளநாடுடையாருக்கு அருகில் வந்து கூறினான்.

 

பதறாதீர்கள், பெரியவரே! நமக்கு இது ஓர் எதிர்ப்பே அல்ல; கடலில் கவிழப்போவது அவர்களுடைய படகுதான். நம்முடைய பாய்மரம் தீப்பற்றுவதற்கு அவர்கள் இன்னும் பல தீப்பந்தங்களை வீசி எறிய வேண்டும். இப்போது நான் இங்கிருந்து நேரே ஒரு சிறிய தீப்பந்தத்தை வீசி எறிந்தால் போதும். அந்தப் படகே குபிரென்று பற்றிக்கொண்டு எரியும். அவர்களுடைய படகு எரிவதற்குத் தேவையான நெருப்பு அந்தப் படகுக்குள்ளேயே இருக்கிறது. சந்தேகமாயிருந்தால் இதோ பாருங்கள்...” என்று இவ்வாறு கூறியபடியே ஒரு சிறிய தீப்பந்தத்தை எடுத்து அந்தப் படகில் ஓர் இலக்கைக் குறிவைத்து வீசினான் கப்பல் தலைவன். குறி தவறாமல் பாய்ந்தது அந்தத் தீப்பந்தம். என்ன அதிசயம்! கப்பல் தலைவனுடைய தீப்பந்தம் அந்த இடத்தை நெருங்கு முன்பே படகுக்குள் தீப்பற்றி விட்டாற்போலச் சோதி மயமான மாபெரும் தீ நாக்குகள் அந்தப் படகிலிருந்து எழுந்தன. அதிலிருந்து கற்பூர மணத்தைச் சுமந்த புகைச் சுருள்கள் எங்கும் பரவின. படகில் பற்றிய நெருப்புச் சுடருக்கு நடுவே யிருந்து, “அடப்பாவி! படகில் கற்பூரம் இருப்பதை முன்பே என்னிடம் சொல்லித் தொலைத்திருக்கக் கூடாதா?” என்று குரூரமாக ஒரு குரல் வினாவியது. அந்தக் குரூரக் குரல் நகைவேழம்பருடையதென மணிமார்பன் புரிந்துகொண்டான். “ஐயா! அதைச் சொல்ல வந்தபோதுதான் நீங்கள் என்னை அடக்கிப் பேசவிடாமல் தடுத்து விட்டீர்களே!” - என்று ஏளனச் சிரிப்போடு ஒரு குரல் அதற்குப் பதிலும் கூறியது. நெருப்புக் கொழுந்துகளுக்கிடையே பயங்கரமாகத் தெரிந்த நகைவேழம்பருடைய முகத்தைத் தங்கள் கப்பலின் மேல்தளத்திலிருந்தே பார்த்தான் மணி மார்பன். அந்தக் காட்சியைக் கண்டு பயத்தினால் உடல் சிலிர்த்தது அவனுக்கு. அருவருப்போடு அவன் தன் கண்களை மூடிக்கொண்டான். “இந்த நெருப்பினால் அவியாமலிருக்கிற இவனது மற்றொரு கண்ணும் அவிந்து போய்விடும் போலிருக்கிறது...” என்று சொல்லிக் கொண்டே வளநாடுடையார் தம் கையிலிருந்த வேலைப் படகுக்குள்ளிருந்த நகைவேழம்பரின் முகத்துக்குக் குறி வைத்தபோது மீகாமன் பாய்ந்து அவரைத் தடுத்து விட்டான்.

வேண்டாம்! புனிதமான புத்த பூர்ணிமைக்கு யாத்திரை செய்யும்போது இத்தகைய முரட்டுச் செயல்களைச் செய்வது நம்முடைய யாத்திரையின் தூய்மையைக் கெடுக்கும். அந்தப் படகில் கற்பூரம் குவிந்திருப்பதை நான் முதலிலேயே பார்த்து விட்டேன். கூடியவரை அவர்களை ஒன்றும் துன்புறுத்தாமலேயே திரும்பிப் போகச் செய்து விடலாமென்றுதான் முதலில் நான் எண்ணினேன். அவர்கள் தீப்பந்தங்களை எறிந்து நமது பாய்மரத்தை எரிக்க முயல்வதைக் கண்ட பின்பு தான் நானும் அவர்களை எரித்துவிட முன் வந்தேன். இவ்வளவு பழி வாங்கியது போதும். இனி அவர்களை விட்டுவிடுங்கள் என்று கப்பல் தலைவனாகிய மீகாமன் கூறியது நியாயமாகவே தோன்றியது. உடனே அப்போது மீகாமன் கூறியபடியே செய்தார் வளநாடுடையார். மறுபடியும் அவர்கள் கப்பல் மேல் தளத்திலிருந்து திரும்பிப் பார்த்தபோது அந்தப் படகு தீயோடு மூழ்கிக் கொண்டிருப்பதையும் அதிலிருந்தவர்கள் அலைகளில் தத்தளித்தபடியே நீந்திக் கொண்டிருப்பதையும் கண்டனர். அந்தப் பகுதிக் கடற் காற்றில் எல்லாம் கற்பூரம் கருகிய மணம் மணந்து கொண்டிருந்தது.

 

கடல் தெய்வத்துக்குக் கற்பூர ஆரத்தி எடுத்து முடித்தாயிற்று, பதுமை! ஐயோ பாவம்! தங்கள் படகு நிறையக் கற்பூரத்தைக் குவித்துக் கொண்டு அடுத்தவர்கள் கப்பலில் தீப்பந்தங்களை எறியத் துணிந்த அறியாமையை இவர்கள் எங்கே கற்றுக் கொண்டார் களோ? ‘தன்வினை தன்னைச் சுடும் என்பார்களே, அந்தப் பழமொழிதான் இப்போது எனக்கு நினைவு வருகிறது பதுமை - என்று தனியே தன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தான், மணிமார்பன்.

முதல்முறை இந்திர விழாவுக்கு வந்திருந்தபோது ஏதோ ஒருநாள் இரவில் உங்களைப் புலிக்கூண்டில் தள்ளிக் கொன்றுவிட முயன்றதாகச் சொன்னிர்களே, அந்த ஒற்றைக்கண் மனிதர்தானா இவர்: அம்மம்மா! இந்த முகத்தைப் பார்த்தாலே இன்னும் பத்து நாளைக்குத் தூக்கத்தில் எல்லாம் கெட்ட சொப்பனம் காணும் போலிருக்கிறதே" என்று பயத்தில் தன் கயல்விழிகள் அகன்று விரிந்திடப் பேசினாள் மணி மார்பனுடைய மனைவி பதுமை.

ஆமாம்! ஆமாம்! ஒரு கண் இல்லாத இந்தப் பாழ் முகத்தைப் பார்த்துத் தொலைக்கிற போதெல்லாம் அப்படி ஒவ்வொரு முறை பார்த்தவுடனும் ஒரு புண்ணிய தீர்த்தத்தில் போய் மூழ்கிவிட்டு வந்துதான் அந்தப் பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் பதுமை ! சித்திரக் கலையில் எப்போதும் ஒரு தத்துவம் நிலையான தாக உண்டு. பார்க்கவும் நினைக்கவும், அழகான முகங்கள், அழகான பொருள்கள், தோற்றங்கள், சூழ்நிலைகள் கிடைத்தால் - சைத்திரீகன், படைப்பதிலும் வரைவதிலும் அதே அழகு பிரதிபலிக்கும் என்பார்கள். பாவமே கண் திறந்து பார்ப்பது போன்ற இப்படிப்பட்ட குரூர முகங்களையே தினம் தினம் பார்த்துக் கொண்டி ருந்தால் அழகு என்கிற நளின குணமே நம் நினைப்புக்குள் வராது விலகிப் போய்விடும் பதுமை!”

பாவம்! நாம் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிற இந்தக் கப்பலையே நெருப்பு மூட்டி எரியச் செய்து கவிழ்த்துவிடலாம் என்று கெட்ட எண்ணத்தோடு தேடிவந்து அவர் தானே கவிழ்ந்து போய்விட்டார்.”

அவர் மட்டும் கவிழ்ந்து போகவில்லை பதுமை! அவருடைய நம்பிக்கைகளும் தூண்டிக் கொண்டு வருகிறவருடைய எல்லா நம்பிக்கைகளும் கற்பூரத்தோடு சேர்ந்தே எரிந்து போய்க் கடலில் கவிழ்ந்துவிட்டன. பதுமை! ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்வார்களே. அது இன்று தான் என் வரையில் மெய்யாயிற்று. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் இந்தப் பயங்கர மனிதருடைய மேற்பார்வையில் நான் கொடுமைப் படுத்தப்பட்ட நாட்கள் என் வாழ்விலேயே இனி என்றும் வரமுடியாத துரதிஷ்டம் நிறைந்தவை. அந்த துரதிர்ஷ்டம் நிறைந்த நாட்களில் இந்தக் கொலைகார மனிதரை என்னென்ன வெல்லாமோ செய்துவிட வேண்டும் என்று என் கைகள் துடித்தது உண்டு; இரத்தம் கொதித்ததும் உண்டு. ஆனால் அப்போது என் கைகள் இவ்வளவு வலிமையற்றவையாக இருந்தன.”

 

இப்போது மட்டும் என்னவாம்? சித்திரக்காரர்களுக்குக் கைகள் விரல்கள் மனம் எல்லாமே எப்போதும் மென்மையானவையாகத்தானே இருக்க வேண்டும்?”

அப்படியல்ல, பதுமை ! அன்றிருந்ததைவிட இன்று நான் அதிகமான பலத்தைப் பெற்றிருக்கிறேன். அன்று என்னுடைய இரண்டு கைகளின் வலிமைதான் எனக்கு உண்டு. இன்றோ நான்கு கைகளின் வலிமைக்கு நான் உரிமையாளன்.”

எப்படி?”

எப்படியா? இதோ இந்தப் பூங்கைகளும் சேர்த்து என் கைகளில் புதியவனாக இப்போது பிணைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுக்காகவும் சேர்த்து நான் பொறுப்பு அடைந்திருக்கிறேன் என்று சொல்லிப் பதுமையின் வளை குலுங்கும் பெண்மைக் கரங்களைத் தன்னுடைய மென்மைக் கரங்களால் பற்றினான் ஓவியன் மணிமார்பன்.

ஏற்கெனவே மென்மையான கைகளிலே இன்னும் இரண்டு மெல்லிய கரங்கள் வந்து சேர்வதால் வலிமை கூடுவதற்கு வழி ஏது?”

வழி இருக்கிறது.! உன்னைப்போல் மெய்யான அன்பைச் செலுத்துகிற அழகு வாய்ந்த மங்கல மனைவி ஒருத்தியே தன் கணவனுக்கு ஆயிரம் யானைகளின் பலத்தைத் தர முடியும். பதுமை!”

கணவனுடைய புகழ்ச்சியைக் கேட்டுப் பதுமை நாணிக் கண் புதைத்தாள். குனிந்த தலை நிமிராமல் கடலைப் பார்த்துக் கொண்டே கணவனை ஒரு கேள்வி கேட்டாள் பதுமை:

ஒரு பெண்ணின் அழகும் மங்களமுமே உங்களைப் பலசாலியாக்கி யிருப்பதாக நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களே. பூம்புகார் நகரம் முழுவதும் தேடினாலும் கிடைக்காத இரண்டு பேரழகிகளின் அழகிய கைகளைப் புறக்கணிக்கிறவருக்கு அந்தப் புறக்கணிப்பால் நான்கு கைகளின் வலிமையல்லவா கிடைக்காமல் வீணாகப் போகிறது?”

நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய், பதுமை?”

அதோ அந்தக் கோடியில் நின்று கொண்டு உச்சி வானத்தில் கதிரவனின் ஒளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே அவரைப் பற்றிச் சொல்கிறேன் - என்று கப்பல் தளத்தின் மற்றொரு கோடியில் நின்று கொண்டிருந்த இளங்குமரனைக் காண்பித்தாள் பதுமை, அப்போது அவள் இதழ்களில் குறும்புப் புன்னகை முகிழ்த்தது. மணிமார்பன் தனது வலது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி அந்த மதி முகத்தின் கண்களில் வண்டு பறப்பது போல் சுழன்ற குறுகுறுப்பைப் பார்த்துக்கொண்டே அவளைக் கேட்டான்.

 

பதுமை! உலகத்தில் அத்தனை குறும்புகளும் பெண்களாகிய உங்கள் பேச்சிலிருந்துதான் கிடைத்திருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா இதை?”

ஏன் அப்படி?”

ஏனா? நான் எதையோ சொல்லத் தொடங்கினால் நீ எப்படியோ கொண்டு வந்து முடிக்கிறாய், பதுமை! பற்பல ஆறுகளுக்கு நீர் அளிக்கும் ஒரே மலையைப் போல் இளங்குமரன் தன்னுடைய பார்வையால், பேச்சால், நினைப்பால் பலருக்கு வலிமையை அளிக் கிறவர். முல்லையும் சுரமஞ்சரியும் அவரைப் பற்றி நினைப்பதனாலேயே தங்கள் அழகை வளர்த்துக் கொள்ள முடியும். தன்னைச் சேர்கின்ற கைகளுக்குத் தானே வலிமையளிக்கவல்ல அந்தப் பொற்கரங்கள் மற்றவர்களுடைய கைகளுக்கு ஆசைப்பட வேண்டியது அநாவசியம்! அவருடைய கைகள் ஆசைப்படுகின்றவை அல்ல. ஆசைப்படச் செய்கிறவை!”

நீங்கள் எப்போதுமே உங்கள் நண்பருக்காக - தவறு தவறு. உங்கள் குருவிற்காக விட்டுக் கொடுக்காமல் பேசுகிறீர்கள்.”

நீ மட்டும் என்னவாம்! உங்கள் பெண் இனத்துக்காக விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாயே.”

பதுமை சிரித்தாள். சித்திரத்தில் திட்ட முடியாத அந்தச் சிரிப்பின் நளினத்தில் தானே தூரிகையாகிக் குழைந்து இணைந்தான் மணிமார்பன் அவள் தன் முகத்தை மீண்டும் கடலின் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். இருந்தாற் போலிருந்து. “அதோ.. அங்கே பாருங்கள்...” என்று பயத்தினால் முகம் வெளிறியபடி பதுமை சுட்டிக் காட்டிய திசையில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் மணிமார்பன், அலைகளில் மிதக்கும் மரக் கட்டையொன்றில் மேலே சாய்ந்து படுத் தாற்போல் பற்றிக்கொண்டு செல்லும் மனித உருவம் ஒன்றைக் கண்டான். ஒரே ஒரு கணம் அந்த உருவம் அவர்களுடைய கப்பலின் பக்கமாக முகத்தைத் திருப்பிய போதுஅவர்தான்! அவரேதான் என்ற குரல் பதுமையின் இதழ்களிலிருந்து பயத்தோடு ஒலித்தது.

--------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

4. புரியாத புதிர்கள்

 

இருளில் தந்தையாரின் ஊன்று கோலைப் பார்த்து நடுங்கிய அதே இரவில் சுரமஞ்சரி தானும் வசந்தமாலையுமாகச் சிந்தித்துச் சிந்தித்து ஒரு முடிவு கிடைக்காமல் கலங்கும் படியாக நேர்ந்த மற்றொரு நிகழ்ச்சியும் நிகழ்ந்திருந்தது. அந்த நாளின் இரவு அவளால் மறக்கமுடியாதது. தானும் தோழியுமாகத் தங்கள் மாடத்தின் உட்புறம் நின்று பேசிக்கொண்டிருந்த போது பெருமாளிகையின் முன்புறம் வாயிலருகே யாரோ யாரையோ பளிரென்று அறைகிற ஒசை கேட்டதை உணர்ந்து விரைந்து சென்று பார்த்ததை எண்ணி எண்ணி மனம் குழம்பிக் கொண்டிருந்தாள். சுரமஞ்சரியின் சிந்தனையில் அப்போது சுழன்று கொண்டிருந்த எண்ணங்கள் யாவும் விடுவிக்க முடியாத புதிர்களாக இருந்தன. புதிர்களிலிருந்து விடுவிப்பதற்கு முன் தானே அங்கிருந்து விடுபட்டு ஓடிவிடலாம் போலத் தோன்றியது அவளுக்கு. அதுவும் இயலாமல் தான் காவலில் வைக்கப்பட்டிருப்பதை நினைத்தபோது தான் அவளுடைய வேதனை அடங்காமல் வளர்ந்தது. வேதனை வளரும்போது சிந்தனையும் வளர்ந்தது. பொதுவாகத் தங்களுக்குள் பலவீனமுடைய இருவர், பலமும் வலிமையும் கொண்டு எதையும் சந்திக்க முடிந்த ஆற்றல்கள் நிறைந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்காக ஒன்று சேருவதுண்டு. நகைவேழம்பரை முற்றிலும் அடக்கியாள முடியாதபடி தந்தையாரிடம் உள்ள ஆற்றாமை என்ன? தந்தையாரை முற்றிலும் புறக்கணித்து விட்டுத் தனித்தவராக நிமிர்ந்து நிற்க முடியாதபடி நகைவேழம்பரிடம் உள்ள ஆற்றாமை என்ன? இரண்டு ஆற்றாமைகள் ஒன்றுபடுவதால் ஏதேனும் ஓர் ஆற்றல் தோன்ற முடியுமென்று அரசியல் நுணுக்கங்களைக் கூறும்போது திருவள்ளுவரைப் போன்ற புலவர்கள் தங்கள் நூல்களில் தெரிவித்திருப்பதை நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி. இந்தச் சிந்தனைப் புதிர்களுக்கு மேல் மற்றொரு புதிரும் மறுநாள் காலை அந்த மாளிகையில் அவளுக்காகக் காத்திருந்தது. தந்தையாரையும் நகைவேழம்பரையும் மறுநாள் காலையிலிருந்து அங்கே காணவில்லை. அவர்களை வசந்தமாலையோ தானோ நேரில் பார்க்க முடியாவிட்டாலும் மாளிகையில் ஏதாவதொரு பகுதியிலிருந்து அவர்கள் இருவரும் பேசுகிற குரலையாவது சுரமஞ்சரி கேட்பாள். மறுநாள் விடிந்ததிலிருந்து மாளிகையின் எந்தப் பகுதியிலும் தனியாகவோ, சேர்ந்தோ நகைவேழம்பர் - தந்தையார் இருவருடைய குரலும் கேட்கவில்லை. அந்த இரண்டு குரலும் கேட்காததனால் மாளிகையே மாறிப்போய்த் திடீரென்று புதுமை பெற்றுவிட்டாற் போலிருந்தது. முதல்நாள் இரவில் கண்டதையும் மறுநாள் காலையில் அவர்கள் இருவரும் காணாமற் போனதையும் சேர்த்து எண்ணி இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏதேனும் காரண காரியத் தொடர்பு இருக்குமோ என்று நெஞ்சம் குழம்பினாள் சுரமஞ்சரி. நூலில் சிக்கல் விழுவதுபோல் ஒரு புதிரை அவிழ்க்கும் முயற்சியில் இன்னொரு புதிர் தோன்றிக் குழப்பத்தை மிகுதியாக்கியதே ஒழியத் தெளிவு பிறக்கவில்லை; புதிரும் விளங்கவில்லை.

வசந்தமாலை! பார்த்தாயோ, இல்லையோ? இந்த மாளிகையின் இன்றைய நாடகத்தில் காட்சி மாறி விட்டது. நடிப்பும் மாறிவிட்டது. அவர்களுடைய பேச்சுக் குரலே கேட்கவில்லை. இன்னும் என்னென்ன கெடுதல்களுக்கு ஏற்பாடு நடக்கிறதோ, தெரியவில்லை என்று தன் தோழியிடம் சொன்னாள் சுரமஞ்சரி. யாரிடமாவது ஒரு நோக்கமுமின்றிப் பேச்சுக் கொடுத்தாலும்கூட அப்போதுள்ள சூழ்நிலையில் அதுவே தன் மனதுக்கு ஆறுதலாயிருக்குமென்று அவள் எண்ணினாள்.

 

இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பெரு மாளிகையில் இரைந்து கேட்கிற குரல்கள் எவையும் ஒலிக்காது அம்மா. உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும் இன்று அதிகாலையிலேயே கடற் பயணத்துக்காகப் புறப்பட்டுப் போய்விட்டார்களாம். சீனத்திலிருந்து வந்து சேரவேண்டிய கற்பூரக் கப்பல் ஏதோ இதுவரை வரவில்லையாம். அதைத் தேடி எதிர்கொண்டு போயிருக்கிறார்களாம், திரும்பி வருவதற்குச் சில நாட்களாகும் போலத் தோன்றுகிறது. காலையில் மாளிகையின் கீழ்ப்புறத்திலிருந்து இங்கு வந்திருந்த பணிப் பெண்ணைக் கேட்டு இதைத் தெரிந்து கொண்டேன் என்றாள் தோழி.

அப்படியா? இதை என்னால் நம்ப முடியவில்லை! ஆனால் இதில் நம்பவும் இடமிருக்கிறது வசந்தமாலை. நேற்று இரவு நடுச்சாமத்துக்கு மேல் இதோ இப்போது நாம் நின்று கொண்டிருக்கிறோமே, இந்த இடத்திலிருந்து கீழே முன்புறத்து வாயிலருகே என்ன காட்சியைக் கண்டோம் என்பதை நினைவூட்டிக்கொள். தந்தையாரும் நகைவேழம்பரும் எதிரெதிரே எப்படி நின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பார். இன்றைக்குக் காலையில் பொழுது விடிந்ததும் இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கப்பலில் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்றால் யாராவது நம்புவார்களா?”

நம்புவார்களோ, மாட்டார்களோ நடந்திருக்கிறது. இன்று வைகறையில் இங்கு வந்து இந்தச் செய்தியை எனக்குக் கூறிய பணிப்பெண் மிகவும் தன்மையானவள். நமக்கு மிகவும் வேண்டியவள். அவள் பொய் சொல்லியிருக்க மாட்டாள்.”

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பதை வைத்துக் கொண்டு, நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் தீர்மானம் செய்ய முடியுமானால் என்னுடன் பிறந்த வானவல்லியும், என்னைப் பெற்று வளர்த்த நற்றாயும்கூட இப்போது இந்த மாடத்திற்குள் எட்டிப் பார்க்காமல் இப்படிப் புறக்கணிப்பாக இருப்பார்களா? இந்தப் புறக்கணிப்பை என்னவென்று சொல்லுவது? இந்த மாளிகையில் நான் ஒருத்தி உயிரோடு இருப்பதை எல்லாருமே மறந்து போய்விட வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டவர்களைப் போல நிச்சயமாக மறந்தே போய்விட்டார்களடி வசந்தமாலை! இந்த மாளிகைக்கு உள்ளே தான் இப்படி என்றால் வெளியிலாவது என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்டோ? அதுவும் இல்லை. நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே விளங்கவில்லை தோழி! இந்த மாளிகை, இதிலிருக்கிறவர்கள் எனக்குத் தருகிற புறக்ககணிப்பு எல்லாவற்றையும் நான் இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் என்னைப் பற்றியும் சிறிது நினைக் கிறார் என்று நான் அறிய நேரும்போது இந்த உலகத்திலேயே நம்பிக்கை நிறைந்தவளாக நீ என்னைக் காணலாமடி வசந்தமாலை! நாம் வாழ்வதற்கு என்று தனியாக நமக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அல்லது நம்முடைய வாழ்க்கையைக் கவனத்தோடு நோக்கிக் கொண்டிருப்பதற்குத் தனியாக ஒரு மனிதர் வேண்டும். இரண்டுமே இல்லாவிட்டால் உயிர் வாழ்வதில் பயன் என்ன? ஒன்றின் மறதி என்பது மற்றொன்றின் ஆழமான நினைவுதான்! மறப்பதற்கும் முடியாமல், நினைப்பதற்கும் பயனின்றி இப்போது நான் எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது, அம்மா! ஆனால் நான் என்ன செய்ய முடியுமென்றுதான் எனக்கும் தெரியவில்லை. உங்கள் தோழிக்கு உங்களிடம் நிறைந்த அநுதாபம் இருந்தும் அவள் வாயில்லாப் பூச்சியாயிருக்கிறாள் என்பதை நீங்களே அறிவீர்கள்.”

நீ என்ன செய்வாய்? என்னைப் போலவே நீயும் சிறைப்பட்டிருக்கிறாய்! உனக்கு என் மேல் கனிவும், அநுதாபமும் இருப்பதே நீ எனக்கு இதயபூர்வமாகச் செய்யும் உதவிதான். அந்த அநுதாபத்தைக் கூட என் தாயும் சகோதரியும் எனக்கு அளிக்க முடியவில்லை போலிருக்கிறது, வசந்தமாலை! நீ எனக்கு அளித்துக் கொண்டு வருகிற பொருள் விலை மதிப்புக்கு அப்பாற்பட்ட பெறுமானமுடையது. மனத்தில் ஆழத்திலிருந்து கிடைக்கிற மெய்யான அநுதாபத்துக்கு விலையே யில்லையடீ...”

உங்கள் தாயும், சகோதரியும் இயல்பாகவே இப்படி இருப்பார்களென்று என்னால் நம்பமுடியவில்லை. அம்மா! இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்கள் தாயும் வானவல்லியும் வந்து உங்களைக் காணமுடியாதபடி ஏதேனும் பொய் சொல்லியிருப்பார்களோ என்று நான் சந்தேகப் படுகிறேன். வெறும் ஊன்றுகோலை நிறுத்தி வைத்தே இருட்டில் உங்களையும் என்னையும் பயமுறுத்தி விடலாமென்று கருதியவர், மற்றவர்களை வேறுவிதமாகப் பயமுறுத்தியிருக்க மாட்டாரென்பது என்ன அம்மா நிச்சயம்? ஒன்று உங்கள் தாயும் சகோதரியும் பயமுறுத்தப்பட்டு உங்களைப் பார்க்க வராமல் இருக்க வேண்டும். அல்லது ஏமாற்றப்பட்டு உங்களைப் பார்க்க வராமல் இருக்க வேண்டும். வேறுவிதமாக நினைப் பதற்கு என்னால் முடியவில்லை.”

உண்மையில் இப்படி இருக்குமோ என்னவோ? ஆனால் உன்னுடைய பதில் எனக்கு ஆறுதலளிப்பதாயிருக்கிறது. நாம் எதையாவது நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது முடியாவிட்டால் யாராலாவது நினைக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் நடைப்பிணமாக வாழ்வதற்கு நம்மைப் போன்ற பெண்களால் ஆகாது. நான் அதியற்புதமான பேரழகு படைத்தவளென்று நீங்களெல்லாம் வாய்க்கு வாய் என்னைப் புகழுகிறீர்கள். இதோ இந்த மாடத்திலிருக்கும் நிலைக்கண்ணாடியும் என்னையே பிரத்தியட்சமாகக் காட்டி எனக்கே என் அழகை நிரூபிக்கிறது. ஆனால் நான் அழகாயிருக்கிறேன் என்பதை நீங்களும் இந்தக் கண்ணாடியும், இதற்கெல்லாம் மேலாகப் பூம்புகார் நகரமும் சொன்னால் கூட அவற்றுக்காக நான் பெருமைப்பட மாட்டேன். என்னுடைய அழகை யார் உணரவேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேனோ, அவர் உணர வேண்டும், அவர் நினைக்க வேண்டும். அவர் பாராட்ட வேண்டும். ஆகாயத்தை நோக்கி நிமிர்ந்து பெரிதாக எதையோ இலக்கு வைத்துக்கொண்டு பார்க்கும் அந்த நளின நயனங்களின் ஆண்மை திகழும் கம்பீரமான பார்வை கீழே குனிந்து என்னைப் பார்க்க வேண்டும். என்னைத் தேட வேண்டும், என் அதிகை நாட வேண்டும். இந்த ஆசை நிறைவேறாதவரை நான் நினைக்கிறவள்தான்; நினைக்கப்படுகிறவள் இல்லை. வசந்தமாலை ஒரு செய்தியை நான் எப்படி நினைக்கிறேனோ, அப்படியே உனக்குப் புரிய வைப்பதற்கு முடிந்த வார்த்தைகளை இப்போது நான் என்னுடைய பேச்சுக்காகத் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருடைய அழகில் நான் மனந் தோய்ந்திருக்கிறேனோ அவருடைய சொற்களாலேயே என்னுடைய அழகு அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்...”

இவ்வாறு சொல்லிக்கொண்டே வந்த சுரமஞ்சரி சொற்களை நிறுத்திக்கொண்டு வசந்தமாலையின் கண்களை உற்றுப் பார்த்தாள். அந்தக் கண்களில் குறும்பு தெரிந்தது. எதையோ சொல்ல விரும்பும் ஆவலும் தெரிந்தது.

நீங்கள் எதைச் சொல்லத் தவிக்கிறீர்களோ, அதையே உங்கள் சொற்களைக் காட்டிலும் நயமாக உங்களுடைய கண்கள் பேசுகின்றனவே அம்மா?”

வாய் திறந்து பேசியே புரியாதவர்களுக்குக் கண்களால் பேசியும் பயனில்லை, தோழி! இரண்டு வகையான பேச்சிலும் இதுவரை எனக்குத் தோல்வி தான். தொடர்ந்து தோற்றுப் போய்க்கொண்டே வருகிறவள் ஆசைப்படும்படியாக இந்த உலகத்தில் என்ன மீதமிருக்கிறது?”

வெற்றி மீதமிருக்கிறதே; அது போதாதா அம்மா? எதில் நிறையத் தோற்றுக் கொண்டிருக்கிறோமோ அதில் நிறையத் தாகம் கொள்வதும் தவிர்க்க முடியாதவை என்று நீங்களே சொல்வீர்களே...”

பார்க்கலாம்! நான் சொல்லிக் கொண்டிருப்பதில் நானே தோற்றுப் போய்விட முடியாதென்பது என்ன உறுதி என்று சொல்லிச் சிரிக்க முயன்று கொண்டே முதல்நாள் இரவிலிருந்து அந்த மாடத்தில் கிடந்த தந்தையாரின் ஊன்றுகோலைத் தன்போக்கில் கையிலெடுத்துச் சுழற்றினாள் சுரமஞ்சரி. ஒரு நோக்கமுமில்லாமல் தற்செயலாக அவள் செய்த இந்தச் செயலுக்கு முற்றிலும் எதிர்பாராத விளைவு ஒன்று ஏற்பட்டது. அந்த விளைவும் அதில் அடங்கியிருந்த உண்மையும் சுரமஞ்சரி வசந்தமாலை இருவரையுமே பெரு வியப்பில் ஆழ்த்தியது.

ஒன்றையும் செய்ய வேண்டிய குறிப்பில்லாத போது கைத்தினவாகத் தானே செய்யும் நோக்கமில்லாத காரியமாகத்தான் சுரமஞ்சரி ஊன்றுகோலின் பிடியைப் பற்றிச் சுழற்றினாள். இரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்றிருந்த அந்த யாளி முகப்பிடியோ மரைமரையாகக் கழன்று ஊன்றுகோலிலிருந்து தனியே பிரிந்து அவள் கைக்கு வந்துவிட்டது. பிடியும் ஊன்றுகோலும் தனித் தனியே கழன்றதற்காக மட்டும் சுரமஞ்சரியோ, வசந்தமாலையோ வியப்படையவில்லை. அவை தனித் தனியே கழன்றபோது அவற்றினிடையே சிறைப்பட்டுக் கிடந்த உண்மை ஒன்றும் கழன்று, வெளியேறித் தனியே தரையில் வீழ்ந்தது.

 

யாளி முகப்பிடி தனியே கழன்றபின் நீண்ட குழல் போலிருந்த ஊன்றுகோலின் உள்ளேயிருந்த சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய ஆயுதங்களைப்போல் சிறுசிறு பொன் வடிவங்களால் கோவை செய்யப்பட்ட ஆரம் ஒன்று வெளிவந்து கீழே விழுந்தது.

இது ஐம்படைத்தாலி என்னும் ஆரம் அம்மா!” என்று சொல்லிக்கொண்டே கீழே குனிந்து அந்த ஆரத்தை எடுத்துத் தலைவியிடம் நீட்டினாள் வசந்தமாலை.

சிறு குழந்தைகளுக்குக் காப்பிடும் போதல்லவா இதையும் அணிவார்கள்? இதை எதற்காக இந்த ஊன்று கோலுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்?” என்று கேட்டுக்கொண்டே அதை வாங்கி வியப்புடன் பார்க்கலானாள் சுரமஞ்சரி.

ஒருவேளை இந்த ஊன்றுகோலையே சிறு குழநதையாக நினைத்து உங்கள் தந்தையார் இதற்குக் காப்பிட்டிருக்கலாமோ, என்னவோ?” என்று நகை பாடினாள் வசந்தமாலை. சுரமஞ்சரி பதிலுக்கு நகைக்கவில்லை. அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்த ஊன்று கோல், அதன்பிடி, உள்ளேயிருந்த ஐம்படைத்தாலி யாவும் விடுபடாத புதிர்களாயிருந்தன அவளுக்கு. தந்தையாரும் நகைவேழம்பரும் கடற் பயணித்திலிருந்து திரும்புகிற வரை அந்தப் புதிர்களை விடுவிக்கும் தனது முயற்சிக்குத் தடையில்லை என்ற ஒரே ஆறுதல் மட்டும் அவளுக்கு இருந்தது.

-------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

5. கொதிப்பில் விளைந்த குரூரம்

 

மணிபல்லவத்துக்குச் செல்லும் கப்பலைப் பின் தொடர்ந்து படகில் சென்ற நகைவேழம்பரை எதிர்பார்த்துச் சீனத்துக் கப்பலின் தளத்திலேயே உச்சிப்போது வரை காத்திருந்தார் பெருநிதிச் செல்வர். பின்பு வெயிலின் .கொடுமையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கீழ்த்தளத்துக்கு வந்து அங்கிருந்தபடியே நகைவேழம்பர் திரும்பி வருவதை எதிர்பார்த்துச் சில நாழிகைகள் காத்திருந்தார். கற்பூரக் கப்பலின் உள்ளே கமழ்ந்த நறுமணம் ஏதோ ஒரு பெரிய கோவிலுக்குள் இருப்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்கிற்று. வேறு ஒரு படகின் துணை கொண்டு கப்பலில் இருந்து கற்பூரம், பனிநீர், குங்குமம் முதலிய நறுமணப் பொருள்களை முழுவதும் பண்டகச் சாலைக்குள் இறக்கி முடிக்கும் போது கதிரவன் மறையும் தருணம் ஆகிவிட்டது. நகைவேழம்பர் சென்றிருந்த படகு திரும்பி வருகிறதா என்று பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்துப் போயிற்று அவருக்கு. மேலும் சிறிது நேரம் பொழுதைக் கடத்துவதற்காக அந்தக் கப்பலின் தலைவனாகிய சீனனோடு அவர் பேச்சுக் கொடுத்தார். அதில் சிறிது நேரம் கடந்தது.

 

மருள் மாலை நேரம் முதிர்ந்து மெல்ல மெல்லப் போது இருட்டியது. கடற்கரையிலும், துறைமுகத்திலும் தீபங்கள் தென்பட்டன. கலங்கரை விளக்குகளின் உச்சி யில் நெருப்பு மூட்டினார்கள். கடலுக்குள் சென்றிருக்கும் பரதவர்கள் திரும்பி வருவதற்கு அடையாளம் போல் கரையோரத்துப் பெருவீடுகளின் மாடங்களில் விளக்கு வரிசைகள் தோன்றின. பல்வேறு திசைகளின் நாடுகளிலிருந்து நீண்ட நாட்கள் கடற் பிரயாணம் செய்து கரையடைந்திருந்த கப்பற்காரர்களின் களியாட்டங்கள் தொடங்கி வளரும் நேரமாதலால் அப்போது பூம்புகார்த் துறைமுகம் இரவில் கொலுவிருக்கும் பேரரசிபோல் பொலியத் தொடங்கியிருந்தது. கப்பல்களின் தளங்களில் இருந்து இனிய இசைக் கருவிகள் ஒலித்தன. களிப்பில் மூழ்குவோர் கூவும் ஆரவாரக் குரல்கள் துறைமுகப் பரப்பில் எங்கும் எதிரொலித்தன. நடன நங்கையர்கள் ஆடும் நளின பாதசரங்களின் இனிய ஒலிகள் எங்கும் கிளர்ந்தன. துறைமுகத்தின் எதிரே கடற்பரப்பில் தொலைவிலிருந்து வரும் ஒளிப் புள்ளிகளை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக் குமோ என்று எண்ணி எண்ணி அநுமானம் செய்தபின் அவை ஒன்றுமே அதுவாக இல்லாததை அறிந்து ஏமாந்து கொண்டிருந்த பெருநிதிச் செல்வர் இறுதியில், சீனத்துக் கப்பல் தலைவனிடமிருந்து ஒருவாறு விடை பெற்றுக் கொண்டு பெரு மாளிகைக்குப் புறப்பட்டு விட்டார். மணிபல்லவத்துக் கப்பலைத் துரத்திக் கொண்டு போன நகைவேழம்பர் திரும்பி வந்தால் அவரிடம் தான் பெருமாளிகைக்குப் போய் விட்டதாகக் கூறி அவரையும் அங்கு அனுப்புமாறு சொல்லி ஏற்பாடு செய்துவிட்டுத் தாம் மட்டும் தனியாகவே திரும்பினார் பெருநிதிச் செல்வர்.

இந்த அரைக் குருடனுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்ததே அதிகம். கப்பலில் வந்த களைப்புத் தாங்க முடியவில்லை. பெருமாளிகைக்குப் போய் உடலுக்கு இதமாகக் காய்ச்சிய தைலத்தைப் பூசிக் கொண்டு வெந்நீரில் ஆடவேண்டும். யாராவது ஒரு முரட்டு யவனப் பணியாளனைத் தைலம் தேய்த்துவிடச் சொன்னால் பயணம் செய்துவிட்டு சோர்வோடு வந்த உடலுக்குப் பரம சுகமாயிருக்கும். வெவெதுப்பாக அவி சுழலும் வெந்நீரில் குளித்துவிட்டு வயிறார உணவும் முடித்தால் இந்த உலகத்தையே விலையாகக் கொடுக்கலாம் போல் அவ்வளவு நல்ல உறக்கம் இரவில் வந்து கொஞ்சும். நன்றாக உறங்கிவிட்டு நாளைக்குப் பொழுது விடிந்ததும் மற்றவற்றைக் கவனிக்கலாம்! நகைவேழம்பர் திரும்பி வந்தாரா, வரவில்லையா என்பதைப் பற்றிக்கூட இனிமேல் நாளைக்குப் பொழுது விடிந்து கண் விழித்த பின்புதான் கவலைப்பட முடியும். வேறு எந்தக் கவலையும் குறுக்கிட்டு இன்று இந்தத் தூக்கத்தைக் கெடுத்து விடக்கூடாது. இன்று இப்போது நான் படுகிற கவலைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று நல்ல உணவு, இரண்டு ஆழ்ந்த தூக்கம். கவலைதான் உறக்கத்துக்குப் பெரும் பகை என்று சுகபோகங்களைப் பற்றிய சுவையான சிந்தனையுடனே பெருமாளிகைக்குத் திரும்பியிருந்தார் பெருநிதிச் செல்வர். சொந்தச் சுகபோகங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூடத் தாம் தனியாயிருக்கும் போதுதான் அவருக்குச் சுதந்திரம். நகைவேழம்பர் கூட இருந்தால் சில பயங்களால் சொந்தச் சுகபோகங்களை நினைக்கக் கூடத் தோன்றாது அவருக்கு, தாம் சுகபோகங்களை ஆள முடிந்தவர் - என்றோ சுகபோகங்களுக்கு அதிபதி - என்றோ நினைப்புக்களை நினைத்துப் பெருமி தப்படுவதைக்கூட நகைவேழம்பர் தம் அருகிலிருக்கும் போது செய்வதற்குத் தயக்கமாகவோ அருவருப்பாகவோ இருக்கும் அவருக்கு. அதற்கு எத்தனையோ இரகசியக் காரணங்கள் இருந்தன. அவை பெருநிதிச் செல்வரே இரண்டாவதுமுறை சிந்தித்துப் பார்ப்பதற்கு அஞ்சுகிறவை. இன்று நகைவேழம்பர் அருகில் இல்லாததனால் தம் சுகபோகங்களைப் பற்றிய நினைவு அவருக்கு வந்தது. மனிதர்களில் சிலர் பக்கத்திலிருந்தால் தாங்கள் அப்படி யார் பக்கத்தில் நிற்கிறார்களோ அவர்களுடைய சிந்தனையே சுதந்திரமாக வளராதபடி செய்து கொண்டிருப்பார்கள். பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவது போல் பிறருடைய சிந்தனை தன்னிச்சையாக வளர முடியாமல் பிடித்துக் கொண்டு ஆட்டுகிற இத்தகைய மனிதர்களும் பேய்த்தன்மை பெற்றவர்களே. நகைவேழம்பரும் இப்படிப் பெருநிதிச் செல்வரைப் பேயாகப் பற்றிக் கொண்டு ஆட்டியவர்தான்.

இன்று இப்போது இந்த விநாடியில் அந்தப் பேய் தன் அருகில் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் தாம் சற்றே சுதந்திரமாக இருப்பது போலத் தோன்றியது பெருநிதிச் செல்வருக்கு. சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்பதைத் தனக்குத்தானே நிரூபித்துக் கொள்வதற்காகவாவது தன்னிச்சையாய் எதையேனும் செய்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அவர்.

ஒளிமிக்க கருங்கல்லில் செதுக்கிய மல்லனின் சிலை போலிருந்த வலிய ஊழியன் ஒருவன் அவரை அமரச் செய்து மருந்துப் பொருள்கள் இட்டுக் காய்ச்சிய தைலத்தை உடம்பில் நன்றாக அழுத்தித் தேய்த்து விட்டான். தம்முடைய உடம்பின் தசைத் தொகுதியை அந்த ஊழியனின் கைகள் அழுத்திப் பிடித்துப் பிசையும் போது கடற்பயணத்தினால் ஏற்பட்ட சோர்வு பஞ்சாய்ப் பறந்து போனது போலிருந்தது அவருக்கு, வெந்நீரில் குளித்து முடித்தபின் விதவிதமான வகைகளில் சுவையோடு சமைத்திருந்த உணவை, உடனே தூக்கம் வந்து விடுவதற்கான பெருஞ் சோர்வு ஏற்படும்படி அவர் நிறைய உண்டார். கண்ணிமைகளில் வந்து கொஞ்சும் உறக்கத்தோடு பஞ்சணையில் போய் விழுந்தார். அதற்குப் பின்பு மறுநாள் போது விடிந்ததைக்கூட அவர் காணவில்லை. அவ்வளவு சுகமான உறக்கம்.

உறக்கம் கலைந்து அவர் கண்விழித்து எழுந்து பள்ளியறை வாயிலுக்கு வந்த போது பொழுது விடிந்திருப்பதுடன் எதிர்ப்புறமிருந்து எதிர்பாராத பகை உதயமாகித் தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதையும் கண்டார்.

தீக்காயம் பட்டிருந்த முகமும் நடுநடுவே கசங்கிக் கடல் நீரில் நனைந்ததால் முடை நாற்றமடைந்து சில இடங்களில் கருகியிருந்த ஆடையுமாகப் பொழுது விடிந்ததனால் எங்கோ போய்விட்ட இருளே விடிந்ததைப் பார்க்கும் ஆசையோடு ஒர் உருவமாகி வந்தது போல நகைவேழம்பர் எதிரே வந்துகொண்டிருந்தார். முற்றிலும் கனியாமல் காய் நிலைமை மெல்ல மாறி கனியத் தொடங்கியிருந்த நாவற்காய் போல் அவருடைய ஒற்றைக் கண் செக்கச் செவேலென்று கனன்று கொண்டிருந்தது. கடலில் நீண்ட தொலைவு நீந்தி வந்த துன்பம் அவர் நின்ற கோலத்திலிருந்தே தெரிந்தது.

முதல்நாள் இரவு தான் அநுபவித்த அற்பச் சுகங்களைப் பறித்துக்கொண்டு போக வந்த பூதம் போல் எதிரே பாய்ந்து வருகிற இந்த இருளைப் பெருநிதிச் செல்வர் மருட்சியோடு பார்த்தார்.

எதிர்ப்புறமிருந்து இடி முழக்கம் கேட்டது: மின்னல் சிறியது. செங்காய் போலக் கனன்று மின்னும் ஒற்றைக் கண் பாயும் புலிப்பார்வை பார்த்தது. சொற்கள் ஊழிப் பெரும் புயலாய் ஒலித்தன.

நான் சாகவில்லை! உயிரோடு பிழைத்துத்தான் வந்திருக்கிறேன்! ஆனால் இப்போது என் நெஞ்சும் கைகளும் துடிக்கிற துடிப்பைப் பார்த்தால் யாரையாவது சாகவைக்க வேண்டும்போல் எனக்கு ஆசையாயிருக் கிறது. இப்போது என் உடம்பில் ஊறும் கொலை வெறியை எதைச் செய்தாவது நான் தணித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். நான் யாரையாவது கொல்ல வேண்டும். அல்லது என்னையே நான் கொன்றுகொள்ள வேண்டும்!. என்ன சொல்லுகிறீர்கள் பெருநிதிச் செல்வரே?...”

பெருநிதிச் செல்வருக்குச் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. கண்கள் மட்டும் விரிய விரிய விழித்துக் கொண்டு எதிரே பயத்தோடு பார்த்தன.

சொப்பனம் கண்டது போல் சிறிது போதுக்கு மட்டும் வாய்த்திருந்த முதல் நாள் சுகங்கள் மறைந்த இடம் தெரியாது போக எதிரே வந்து நிற்கும் துன்பத்தை எப்படி ஆற்றி வழிப்படுத்த முடியும் என்று சிந்திக்கலானார் பெருநிதிச் செல்வர். கோபத்திற்கு பதில் கோபம் என்கிற முறையில் தாமும் சீறினால் காரியம் கெட்டுவிடும் என்று அவருக்குத் தோன்றியது. எதிரிகளை வெல்லும் தந்திரங்களில் தலையாய தந்திரம் எதிரி சீறும்போது நாம் பயப்படுவதுபோல் சிரித்துக் கொண்டே நிதானமாயிருந்து விடுவதுதான்! எதிரியின் கோபத்தைக்கூட அலட்சியம் செய்ய வேண்டிய நிலையில் அப்போது இருந்தார் அவர்.

--------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

6. காலாந்தகன் கொலை

 

எதிரே வந்து நிற்கிற பகைவனிடமிருந்து வெம்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடனே வேர்த்து விதிர்விதிர்க்கும் படியான சொற்களை அடைந்தாலும் அந்த வெம்மையில் அப்போதே அழிந்து விடாமல் தாங்கிக் கொண்டு நிற்க வேண்டும். அப்படி நிற்பதுதான் - திண்மை என்று எண்ணித் தம்மைத் தாமே திடப்படுத்திக் கொள்ள முயன்றும், பயந்து பயந்து பழகிவிட்ட காரணத்தால் வழுக்கு மரம் ஏறினாற்போல் இடையிடையே தாம் மேற்கொண்டிருந்த உறுதியைப் பற்றிக்கொள்ள முடியாமல் கீழே நழுவினார் பெருநிதிச் செல்வர்.

 

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்

துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.’

 

என்ற அரசியல் நூல் நுணுக்கம் நினைவு வந்து மனத்தைப் பலப்படுத்தியும்கூட அரிய முயற்சியின் பேரிலேயே எதிரியின் கோபத்தை அவரால் அலட்சியம் செய்ய முடிந்தது.

எரிகின்ற நெருப்பு மலையொன்று கனன்று கொண்டே வந்து எதிரே நிற்பதுபோல் நிற்கும் நகை வேழம்பரைக் கண்டு அவருடைய அந்தக் கோபத்தை எப்படி வரவேற்று ஒடுக்குவதெனச் சிந்தித்தார் பெருநிதிச் செல்வர். எந்த வகைக் கோபத்திற்காக அதை எதிரே காணும்போதே வேர்த்து விதிர்விதிர்க்கக் கூடாதோ அந்த வகைக் கோபம்தான் அது! பின்னால் ஏற்ற சமயம் வரும்போதுதான் அந்தக் கோபத்திற்காக வேர்க்க வேண்டும் - என்று பொருள் நூல் சிந்தனைகளைத் தனக்கு அரணாக ஏற்படுத்திக் கொண்டு பாதிப் பயமும் பாதித் துணிவும் கலந்த நிலையில் பெருநிதிச் செல்வர் எதிராளியைப் பார்த்துச் சிரிக்க முயன்றார். தம்முடைய சிரிப்பு எதிரியின் முகத்தில் எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டதும் களத்தில் வெற்றியும் இன்றி வீரமரணமும் எய்தாமல் உயிரோடு தோற்றுப்போய் நிற்பதுபோல் தாமும் அப்போது தயங்கி நிற்பதாக உணர்ந்தார் அவர். அவருடைய சிரிப்பு நகைவேழம்பரின் சினத் தீயை ஆற்றுவதற்குப் பதில் வளர்த்தது.

என் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை. என் நெஞ்சின் சூடு விநாடிக்கு விநாடி வளர் கிறது. எதையாவது உடனே அழித்தொழிக்க வேண்டும் என்று என் கைகள் ஊறுகின்றன. என் எதிரே வந்து நின்றுகொண்டு நீங்கள் சிரிக்கிறீர்கள்!”

முதலில் உங்கள் கோபத்தை அழித்தொழியுங்கள்! இப்போது உடனடியாக நீங்கள் அழிக்க வேண்டிய பொருள் அதுதான். தனக்குத் தோல்வி வருகிறபோது கோபப்படுகிறவன் உண்மையான பலசாலியில்லை. நம்முடைய வாயிலின் வழியே தோல்வியும் கோபமும் சேர்ந்து உள்ளே நுழைகிறபோது தோல்வியை மட்டும் அழைத்துக் கொண்டு கோபம் உள்ளே புகுவதற்கு முன்னாலேயே கதவை அடைத்துவிட வேண்டும். இரண்டையுமே சேர்த்து உள்ளே வரவேற்றுக் கொண்டால் அதற்காகப் பின்னால் வேதனைப்பட நேரும். வெற்றியின்போது வெளிப்படையாக மிதமிஞ்சிய மகிழ்ச்சி கொள்வது எப்படிக் கெடுதலோ, அப்படியே தோல்வியின்போது கோபப்படுவதும்கூட கெடுதல் என்று தம் நிலையை உயர்த்திக் கொண்டதுபோல் பாவித்துக்கொண்டு தமது இயல்போடு ஒட்டாத அறிவுரையைப் போலியாகக் கூறினார் பெருநிதிச் செல்வர். ஆனால் மனத்திலிருந்து சுயமாக எழாத அந்த போலி அறிவுரையாலும் எதிராளி வந்து நிற்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வலையில் சிக்காமல் திமிறிக் கொண்டு வலையையே அறுக்க முயலும் முரட்டு மீனைப்போல் கட்டறுத்துக் கொண்டு மீறும் உணர்ச்சிகளோடு நின்றார் நகைவேழம்பர்.

ஐயா! பெருநிதிச் செல்வரே! மன்னிக்க வேண்டும், நீங்கள் உண்மையை மாற்றிச் சொல்கிறீர்கள். இது என்னுடைய தோல்வி அல்ல. உங்களுடைய தோல்விதான். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.”

அது எப்படி?”

அந்த மணிபல்லவத்துக் கப்பலைத் துரத்திக் கொண்டு சென்று நடுக்கடலில் தீ வைத்து மூழ்கச் செய்துவிடுமாறு கூறி நீங்கள் என்னை அனுப்பியபோது உள்ளுற என்ன நினைத்துக் கொண்டு அனுப்பினீர்கள் என்கிற இரகசியத்தை இப்போதாவது என்னிடம் சொல்வீர்களா?”

அதில் உங்களுக்கும் எனக்கும் தெரியாத புது ரகசியம் வேறு என்ன இருக்கிறது?”

இல்லை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். ஆனால் இருக்கிறது, இருப்பதாக நான் புரிந்துகொண்டேன்.”

நீங்கள் புரிந்துகொண்டதைச் சொல்லுங்களேன்.”

நான் துரத்திக் கொண்டுபோன படகுக்குள் கற்பூரம் குவிந்திருந்தது எனக்குத்தான் மறந்துவிட்டது. நீங்களாவது அதை நினைவுபடுத்தி என்னை வேறு படகில் ஏற்றி அனுப்பியிருக்கலாம். வேண்டுமென்றே இப்படி அனுப்பினர்கள் போலும். படகோட்டியும் அதை என்னிடம் கூறவில்லை. நான் படகிலிருந்து தீப்பந்தங்களை வீசும்போது கப்பலில் இருந்து எதிரிகள் பதிலுக்கு நெருப்பிட்டால் என் படகு பற்றி எரிந்து நான் மாண்டுபோய்விட வேண்டும் என்பதுதானே உங்கள் இரகசியத் திட்டம்? ஆனால் நான் நீங்கள் திட்டமிட்டு நினைத்தபடி மாண்டு போகவில்லை. தீக்காயம் பட்டுச் சிதைந்த படகின் மரச் சட்டத்தைப் புணையாகப் பற்றிக்கொண்டு மிதந்தும் நீந்தியும் அரும்பாடுபட்டுக் கரை சேர்ந்துவிட்டேன். இது என் உயிருக்கு வெற்றி. உங்கள் முயற்சிக்குத் தோல்வி. அண்மையில் சில ஆண்டுகளாக நீங்கள் என்னை ஒழித்துவிட முயலும் சந்தர்ப்பங்கள் அதிகமாகிக் கொண்டே வருவதை நானும் உணர்கிறேன்.”

 

ஒருபோதும் அப்படி இல்லை! நீங்கள் தப்புக் கணக்குப் போடுகிறீர்கள், நகைவேழம்பரே...”

புதிதாகத் தப்புக் கணக்குப் போடவில்லை. தொடக்கத்திலிருந்தே நாம் தப்பாகத்தான் கணக்குப் போட்டுக் கொண்டு வருகிறோம் ஐயா! தொடக்கத்தி லிருந்தே தப்பாகத் தொடங்குகிற கணக்கில் முடிவுவரை தப்புக்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கும்.”

இந்தப் பேச்சுக்கு அர்த்தம்?”

பழைய அர்த்தம்தான். புதிதாக ஒன்றும் இல்லை. நாம் ஒருவரையொருவர் நம்பவில்லை. நம்புவதாக நடிக்கிறோம். இருவரும் தனித்து வாழ முடியாது. சேர்ந்து வாழ முயல்கிறோம். அதுவும் முடியாது போலிருக்கிறது.”

ஏன் முடியாது என்று நினைக்கிறீர்கள்?”

அதற்கான அறிகுறிகள் உங்களிடமிருந்து எனக்குத் தென்படுகின்றன. நான் ஒவ்வொரு கணமும் உங்களைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். என் சந்தேகம் சிறிது சிறிதாக வளர்கிறது.”

சந்தேகம் என்பது கண்ணாடியில் முகம் பார்ப்பதைப் போல. நீங்கள் எந்த உணர்வோடு நிற்கிறீர்களோ அதுதான் எதிரேயிருந்து உங்களுக்குத் தெரிகிற உணர்வாகவும் இருக்கும். நீங்கள் என்னைச் சந்தேகப்படுவதாகத் தோன்றினால் அதே உணர்வுதான் எதிரேயிருக்கிற என்னிடமிருந்தும் உங்களுக்குத் தெரியும்! சீனத்துக் கப்பலில் இருந்து பண்டம் இறங்கிக் கொண்டிருந்த படகில் உங்களை அனுப்பியபோது நீங்கள் எந்தக் கப்பலை அழிக்க வேண்டும் என்று அனுப்பப்பட்டீர்களோ அந்தக் கப்பலை அழித்து விட்டுச் சுகமாகத் திரும்பி வருவீர்கள் என்ற நல்ல எண்ணத்தோடுதான் உங்களை அனுப் பினேன் நான். நீங்கள் எந்தப் படகில் புறப்பட்டீர்களோ அதன் ஒரு பகுதியில் கற்பூரம் குவிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்று நீங்களல்லவா புறப்படுமுன் கவனித்திருக்க வேண்டும்? வேறு எந்தக் கெட்ட நினைப்பும் உங்களைப் பொறுத்தவரை எனக்குக் கிடையாது. நீங்கள் இப்போது திரும்பி வந்திருக்கிற கோலத்தையும் கோபத் தையும் பார்த்தால் உங்கள் படகு தீப்பற்றி கவிழ்ந்த பின் துன்புற்று நீந்தி வந்திருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் உயிர் பிழைத்து வந்திருப்பதால் மகிழ்ச்சியும், உங்களுக்கு நிறையத் துன்பங்கள் ஏற்பட்டிருப்பதனால் வருத்தமும் அடைகிறேன் நான். காரணமின்றி நீங்கள் என்மேல் கோபமும் சந்தேகமும் கொள்வதைப் பற்றி அநுதாபமும் அடைகிறேன், நகைவேழம்பரே!”

நீங்கள் இப்போது அடைகிற மகிழ்ச்சி, வருத்தம், அநுதாபம் எல்லாம் மெய்யானவைதாமா என்று நினைக்கிறேன். காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக அவ்வப்போது ஏற்படுகிற சந்தர்ப்ப உணர்வுகளில் இவையும் சேருமானால் நான் இவற்றை நம்பிப் பயனில்லை.”

 

நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரே வழி அவநம்பிக்கைப் படாமல் இருப்பதுதான் என்று இரு காமத்திணை ஏரியருகே காமன்கோட்டத்தை ஒட்டியிருந்த நாணற் படுக்கையில் பல நாட்களுக்கு முன்பு நீங்களே என்னிடம் கூறியது உங்களுக்கு மறந்து போய்விடவில்லையே?”

இவ்வாறு பெருநிதிச் செல்வர் கேட்டபோது இந்தக் கேள்வியால் நகைவேழம்பரின் மனத்தில் எந்த உணர்வு கிளர்ந்ததோ தெரியவில்லை! குபிரென்று நெருப்புப் பற்றினாற் போல் மீண்டும் முதலில் அங்கு வந்து நுழைந்த போதிருந்த சிற்றத்தை அடைந்தார் அவர். ஆத்திரத்தில் நெடுநேரமாகச் சொல்வதற்குத் தயக்கப்பட்டுக் கொண்டிருந்த செய்தி ஒன்றை உடனே சொல்லிவிடும் துணிவு வந்து விட்டாற்போல் அப்போது பேசலானார் நகைவேழம்பர்.

நினைவூட்டக் கூடாத நிகழ்ச்சியை இப்போது உங்களுக்கு நினைவூட்டுகிறேன்! இனி நான் பொறுமையிழந்துவிட்டேன். எனக்கு அந்தப் பயங்கரமான இரவு நினைவு வருகிறது. நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி யானாலும் நினைக்கும்போது இன்றே நடந்ததுபோல் குடல் பதறவில்லையா உங்களுக்கு? சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்துக்குப் பின்னால் உள்ள கொடி வழியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் பேரிருட் பக்கமாகிய கிருஷ்ணபட்சத்து அமாவாசை இரவில் அரும்பு மீசையும் புன்னகை வடியும் முகமுமாக வந்து நின்ற காலாந்தகனை எப்படித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தோம் என்பதை நினைக்கும்போது உங்களுக்கு உடல் சிலிர்க்கவில்லையா? வன்னி மன்றத்துக்கு அப்பால் கொடி வழியின் அருகே கொன்றைப் புதருக்குள் யாரையோ பிடித்து அறையக் காத்திருப்பது போல் பாய்ந்து கொண்டு நிற்கும் அந்தப் பூதச்சிலையின் கீழே பைரவிப் பேய் மகள் ஒரு கையையும் நான் ஒரு கையையும் பற்றித் திமிறிவிடாமல் காலாந்தகனை அடக்கிக் கொண்டபோது, ஆந்தையும் கோட்டானும் அலறிய அலறலில் அந்த உயிரின் அலறலும் கலந்து கேட்டு ஒடுங்கும்படி நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை இந்தக் கணத்தில் நினைத்துப் பாருங்கள்! கொன்றைப்புதரின் பள்ளத்தில் நின்ற போதும் பூதச்சிலையின் முழங்கால் வரை உயரமாயிருந்த அந்தக் கம்பீரமான ஆண்மகனை அழிப்பதற்காக அவன் கழுத்துப் பிடரி உங்கள் கைக்கு எட்ட வேண்டும் என்று நீங்கள் பூதச் சிலையிருந்த மேடையில் அதன் பீடம் வரை ஏறி நின்றுகொண்டு உங்களுடைய கைகள் நடுங்கவும் அவனுடைய உடம்பில் உயிர் துடி துடிக்கவும் செய்தீர்களே; அதே காரியத்தை உங்களுக்கு நானே செய்துவிடும்படி நேர்ந்த சமயங்களில் எல்லாம்இப்போது வேண்டாம். பின்னால் இன்னும் நல்ல சமயம் வரும் என்று எண்ணி எண்ணித் தள்ளிக் கொண்டே வந்திருக்கிறேன் நான்! கதிரவன் உதயமாகிற இந்த வைகறை வேளையில் இதைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்? சக்கரவாளக் கோட்டத்துக் கொன்றைப் புதருக்கும், அந்தப் பூதச் சிலைக்கும் வாயிருந்தால் காலாந்தகன் துடிதுடித்து இறந்த வேதனையை இன்னும் உலகத்துக்குச் சொல்லுமே? பைரவியும் நானும் உயிருள்ளவர்களாயிருந்து அந்தக் கொலைக்கு ஒத்துழைத்துவிட்டு இப்போது சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட ஊமைகளாய் நிற்கிறோம். நீங்களோ எனக்கு நம்பிக்கையையும், நிதானத்தையும் பற்றி இன்றைக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.”

காலாந்தகன் கொலையைப் பற்றி நகைவேழம்பர் வாயிலாகக் கேட்க நேர்ந்தபோது பெருநிதிச் செல்வர் தீக்குழியில் நிற்பதுபோல் வெந்து வேர்த்து நடுங்கினார். சற்றுமுன் யாருடைய முன்னிலையில் வேர்க்கலாகாது என்று அவர் எண்ணினாரோ, அது இயலவில்லை. குரலிலும் அந்த நடுக்கம் தோன்றி அவர் மெல்லப் பேசினார்:

அன்றைக்கு, அந்த இரவில் காலாந்தகனைக் கொன்றிருக்கவில்லையானால் இன்றைக்கு நீங்களும், நானும், பைரவியும் எமபுரியில் இருப்போம்.”

நான் சொல்ல வந்தது அதற்கல்ல, பெருநிதிச் செல்வரே! காலாந்தகனுக்கு நீங்கள் நடத்திய உபசாரத்தையே உங்களுக்கும் நான் செய்ய அதிக நாழிகை ஆகாது. நானும், பைரவியுமே அதைச் செய்வதற்குப் போதும் என்று நகைவேழம்பர் சுடச்சுடச் சொல்லிய போது அவர் தன்னைச் செய்வதாகச் சொல்லியதையே உடன் செய்துவிட்டதுபோல் இருந்தது பெருநிதிச் செல்வருக்கு. ‘காலாந்தகன்... காலாந்தகன் என்று நெருப்பை நாவினால் தீண்டுவதுபோல் அந்தப் பெயரை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டே அப்படி முணுமுணுக்கும் ஒவ்வொரு முறையும் தன் நெஞ்சில் தானே கத்தியால் குத்திக் கொள்வதுபோல் வலிகண்டு துடித்தார் பெருநிதிச் செல்வர்.

------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

7. வசந்தமாலையின் தந்திரம்

 

உங்கள் தந்தையார் கடற் பயணத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார் போலிருக்கிறதம்மா! கீழே அவருடைய பேச்சுக் குரல் கேட்கிறது என்று வசந்தமாலை அன்று சாயங்காலம் கூறியபோது சுரமஞ்சரி தான் அதற்காக எந்தவிதமான மனக் கிளர்ச்சியும் அடைந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை. அதைக் கேட்காது போலவே இருந்துவிட்டாள். ஒளி சாய்ந்து இருட்டுத் தொடங்கியிருந்த பொழுதாகையால் தலைவியின் முகத்தையும் அப்போது வசந்தமாலையால் பார்க்க முடியவில்லை. தோழி மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள்:

 

தந்தையாரோடு கூடப் போயிருந்த நகைவேழம்பர் திரும்பி வரவில்லையாம் அம்மா! தந்தையார் மட்டும் மிகவும் களைப்போடு திரும்பி வந்திருக்கிறாராம். வழக்கமாக வந்து போகிற பணிப்பெண்தான் இதையும் சொன்னாள். நெடுந்தொலைவு கடற் பயணம் செல்லும் போதெல்லாம் இருவரும் சேர்ந்து போவதைப் போல் திரும்பும் போதும் சேர்ந்தே திரும்பி வருவார்கள். இந்தப் பயணத்தின்போது முதன் முறையாக இன்றுதான் அந்த வழக்கம் மாறியிருக்கிறது. உங்கள் தந்தையார் மட்டும் தனியே திரும்பி வந்திருக்கிறார்! பல நாட்களுக்குப் பின்பு பெருமாளிகையில் மீண்டும் அவருடைய குரல் தனியாகக் கேட்கிறது.”

போதுமடி வசந்தமாலை ! இவர்கள் இரண்டு பேரையும் தவிர வேறு யாரையாவது நல்லவர்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசு. குழப்பங்களையும், கவலைகளையும் உண்டாக்கும் மனிதர்களைப் பற்றியே எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டிராதே!” என்று வேதனை யோடு சலித்துக் கொண்டாள் சுரமஞ்சரி. தலைவியின் இந்த வார்த்தைகளில் இருந்த கசப்பை உணர்ந்தபின் சிறிது நேரத்துக்குத் தான் எதுவுமே பேசாமல் மெளனமாக இருந்துவிட்டால் மிகவும் நல்லது என்று உணர்ந்தாள் வசந்தமாலை.

ஒரு நோக்கமுமின்றி மாடத்தின் முன்புறமாகப் போய் மின்னத் தொடங்கியிருந்த வானத்து நட்சத் திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. சற்றைக்கெல்லாம் ஏதோ திடுமென்று நினைத்துக் கொண்டவள் போலத் தோழியிடம் மறுபடியும் திரும்பி வந்து அவளே பேசலானாள்:

வசந்தமாலை! ஒரு காரியம் எனக்கு மறந்தே போயிற்று. முதல் வேலையாக ஐம்படை அணிகளும் கோத்த இந்தப் பொன் ஆரத்தை ஊன்றுகோலின் குழலில் இட்டு யாளி முகப்பிடியையும் திருகிக் கீழே கொடுத்து அனுப்பிவிடு. தந்தையார் ஊர் திரும்பி விட்டார். இந்தப் புதிர் இங்கே இருக்கிறவரை நமக்கு நிம்மதியில்லை. தந்தையார் கடற்பயணம் போன மறுநாளிலிருந்து இன்று வரை நானும் நீயும் எப்படி யெப்படியெல்லாமோ முயன்று சிந்தித்துப் பார்க்கிறோம். நமக்கு இதில் அடங்கியிருக்கும் உண்மை விளங்கவில்லை. இந்த ஐம்படைத்தாலி யாருடையது? இதை ஊன்றுகோலில் இட்டு வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன? என்று நமக்குப் புரியவே இல்லை. என் தந்தையாருக்கு மக்களாக வாய்த்த நாங்கள் இருவருமே பெண்கள். பெண் குழந்தைகளுக்கு இந்த ஐம்படை ஆரத்தைக் காப்பாகக் கட்டமாட்டார்கள். பொன்னும், மணியும், முத்துமாக இந்த மாளிகை முழுவதும் செல்வம் இறைந்து கிடக்கிறது. இவ்வளவு பெரிய செல்வக் குவியலின் மேல் வீறுடன் நிமிர்ந்து நிற்கிற என் தந்தைக்கு இந்தச் சின்னஞ்சிறு பொன் ஐம்படைத்தாலியை இப்படிப் பாதுகாத்து ஒளித்து வைத்துப் போற்ற வேண்டிய அவசியம் என்னவென்பதுதான் எனக்குப் புரியவில்லை.”

ஒன்றா, இரண்டா? இந்த மாளிகையில் இப்படிப் புரியாதவை எத்தனையோ? ஆனால் இதைப் பற்றி புரிந்துகொள்ள மட்டும் நாம் ஆவல் காட்டுவது பொருத்தமானதுதான் அம்மா! இந்த ஊன்றுகோலை உங்கள் தந்தையார் இங்கே வைத்ததிலேயே நமக்குப் பலவிதமான சந்தேகங்கள். தற்செயலாக இதன் பிடி சுழன்ற பின்போ இன்னும் பல புதிய சந்தேகங்கள். இதைப்பற்றி வலுவில் நாம் முயற்சி செய்யாமலே நமக்குச் செய்திகள் தெரிய வேண்டுமானால் அதற்காக ஒரு தந்திரம் செய்யலாம் என்று வசந்தமாலை கூறிய வற்றில் சுரமஞ்சரி அக்கறை கொள்ளாதவள் போல மறுத்துவிட்டாள்:

நாம் ஒரு தந்திரமும் செய்ய வேண்டாம்! மற்றவர்கள் தந்திரத்துக்கு நாம் ஆளாகித் தவிப்பதே இன்னும் ஏழு பிறவிக்குப் போதுமடீ! நம்முடைய தந்திரத்துக்கும் வேறு சிலர் ஆளாகித் தவிக்க வேண்டாம். தந்திரங்களால் வருகிற குழப்பங்களையும், துன்பங்களையும் பார்க்கும்போது இந்த உலகத்தில் கடவுள் எல்லா மனிதர்களையும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவே படைத்திருக்கக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது. மறுபேச்சுப் பேசாமல் அந்த ஐம்படை ஆரத்தை ஊன்றுகோலின் உள்ளே முன்பு இருந்ததைப் போலவே இட்டுப் பிடியையும் நன்றாகத் திருகி யாராவது பணிப்பெண் இங்கு வருகிறபோது கொடுத்துத் தந்தையாரிடம் சேர்க்கச் சொல்லிவிடு. இது இங்கிருந்து போனால் நம்மைப் பிடித்த தொல்லை முக்கால் பங்கு தீர்ந்தது போலத்தான்.”

தன்னுடைய தலைவியின் குரலில் இருந்த கண்டிப்பு வசந்தமாலையையே வியக்கச் செய்தது, ஆனால் அவள் தன் வியப்பை மறைத்துக்கொண்ட குரலில் பேசினாள்; “அதற்கில்லை, அம்மா! செல்வக் குவியலின் மேல் நிமிர்ந்து நிற்கும் உங்கள் தந்தை, கேவலம் இந்தச் சின்னஞ்சிறு பொன் ஆரத்தை ஒளித்துப் பாதுகாப்பதன் காரணம் விளங்கவில்லை என்று சற்று முன்னால் நீங்களே மருண்டீர்களே! உங்களுடைய அந்த மருட்சியைப் பார்த்துத்தான் இதன் காரணம் விளங்குவதற்கு நாம் ஏதாவது தந்திரம் செய்யலாமா என்று கேட்டேன்.”

அவசியமில்லை! தந்திரத்தால் வாழ்பவர்களைப் பார்த்து வியந்துகொண்டே தாமும் தந்திரத்தில் இறங்குவது நியாயமாகாது. இந்த மாளிகையின் வாழ்க்கையைப் பார்த்துச் சில சமயங்களில் நான் பயப்படுகிறேன். சில சமயங்களில் நான் வியக்கிறேன். வேறு சில சமயங்களில் நான் எனக்குள்ளேயே சிரிக்கிறேன். அதுவும் முடியாத போது புத்தரைப்போல் மனத்துக்குள்ளேயே அழுகிறேன். இதற்கெல்லாம் காரணம் தேடி அலைவதற்குத் தந்திரங்கள் செய்யத் தொடங்கினால் நாம் செய்ய வேண்டிய தந்திரங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும், வசந்தமாலை! நானும் சமய ஞானம், தத்துவ ஞானம் எல்லாம் கற்காமல் போனது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? அவற்றையெல்லாம் கற்றிருந்தால் இளங்குமரனை காதலிக்க முடியாவிட்டாலும் அவருடைய எதிரியாயிருந்து வாதம் புரிகிற பாக்கியமாவது எனக்குக் கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. ஒருவருக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பதைப்போல் நல்ல எதிரிகள் கிடைப்பதும் கூடத் தவப் பயன்தான். இராவணனுக்கு இராமன் கிடைத்தது போல் கல்யாண குணங்கள் நிரம்பிய அழகிய எதிரியை அடைவதும் முற்பிறவியின் நற்பயன் போலும், காதலராக அடைய முடியாது தவிப்பதற்குப் பதில் நான் இளங்குமரனை எதிரியாகவாவது அடைந்திருக்கலாம். ஆயிரம் குரூரமான நட்பையும், அழகில்லாத உறவையும் பெறுவதைவிட ஓர் அழகிய எதிரி கிடைப்பது மிகப் பெரும் பாக்கியமென்று நினைக்கிறேனடி வசந்தமாலை! உனக்கு என்ன தோன்றுகிறது?”

இப்போது நீங்கள் சொல்வது நியாயம் என்று மட்டும் தோன்றுகிறது.”

மெய்யாகத்தான் சொல்கிறாயா, வசந்தமாலை! நான் பித்துக் கொண்டு விட்டேனோ என்று என் மேல் சந்தேகப்பட்டு என் பேச்சுக்கு மாறுபடாமல் என்னோடு ஒத்துப் பாடுகிறாயா?”

இல்லை! இல்லை! மெய்யாகவேதான் சொல்லுகிறேன் அம்மா!”

தலைவியிடம் பதில் பேசிக்கொண்டே முன்புறம் வந்து கீழே வீதியைத் தற்செயலாகப் பார்த்த வசந்த மாலை அங்கே அந்த வழியாக அப்போது நடந்து போய்க் கொண்டிருந்த இருவரைச் சுட்டிக் காட்டி. “அதோ பாருங்கள் என்று தலைவியிடம் கூறினாள். சுரமஞ்சரி முன்னால் வந்து அவர்களைப் பார்த்ததும் வியந்தாள்.

------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

8. ஆரம் அளித்த சிந்தனைகள்

 

தெருவில் வசந்தமாலை சுட்டிக் காட்டியவர்களைப் பார்த்ததும் சுரமஞ்சரி சற்றே வியப்பு அடைந்தாள். “முன்பு ஒரு சமயம் புறவீதியில் நம் தேரை வழி மறித்துக் கொண்டு நின்று இளங்குமரனைப் பற்றிக் கேள்வி கேட்டாளே, அந்த மறக்குடிப் பெண்தான் அவள். உடன் போகிறவன் - அவளுடைய அண்ணனாக - இருப்பான் போல் தெரிகிறது என்று வசந்தமாலைக்குப் பதில் கூறிக்கொண்டே அவளைத் தன்னருகில் காணாமல் சுரமஞ்சரி பின்னால் திரும்பியபோது வசந்தமாலை ஊன்றுகோலின் யாளி முகப்பிடியை அதன் தண்டிலே வேகமாகப் பொருத்தித் திருகிக் கொண்டிருந்தாள். ஒரு கணம் அந்தச் செயலால் தன் கவனம் கவரப்பட்டு நின்ற சுரமஞ்சரி, தான் அப்போது சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டு தோழியிடம் வேறு ஒரு கேள்வியைக் கேட்டாள்.

வசந்தமாலை! அந்த ஐம்படை ஆரத்தை உள்ளே வைத்துத்தானே திருகுகிறாய்?” என்று கேட்டாள் சுரமஞ்சரி.

தலைவியின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவதென்று சில விநாடிகள் தயங்கியபின்... “ஆமாம் என்ற பதில் வசந்தமாலையிடமிருந்து வந்தது. ஆனால் இந்தப் பதிலைக் கூறும்போது அவளுடைய முகம் இயல்பான உணர்வுடன் இல்லை. எதையோ பேச நினைத்துக் கொண்டே அந்த நினைப்புக்கு மாறான வேறொன்றைப் பேசும்போது தெரிகிற இரண்டுங் கெட்ட நிலையையே தோழியின் முகம் காட்டியது. அந்த முகத்தையும் தன் பேச்சையும் சேர்த்தே வீதிக்குத் திருப்பினாள் தோழி.

சில நாட்களுக்கு முன்னால் புறவீதியில் விசாரித்துத் தெரிந்து கொண்டேனம்மா! இப்போது வீதியில் போய்க் கொண்டிருக்கிறாளே அந்த மறக்குடிப் பெண்ணின் பெயர் முல்லை என்று சொல்லுகிறார்கள். இந்த இரவு நேரத்தில் இங்கே பட்டினப்பாக்கத்து வீதியில் அவளுக்கும் அவள் தமையனுக்கும் என்னதான் காரியமிருக்குமோ, தெரியவில்லை...”

நீ சொல்வதைப் பார்த்தால் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்குமே இந்தப் பட்டினப்பாக்கத்து வீதியில் எந்தக் காரியமும் இருக்கக் கூடாதென்பதுபோல் அல்லவா பேசுவதாகப் படுகிறது! அவளுக்குப் பட்டினப்பாக்கத்தில் என்ன காரியமோ? எத்தனை காரியமோ?” என்று சிறிது கடுமையாகவே பதில் சொன்னாள் சுரமஞ்சரி. காரணமின்றித் தலைவியின் குரலில் கடுமை பிறந்ததைப் புரிந்துகொள்ள முடியாமல் ஊன்றுகோலைக் கீழே கொடுத்து அனுப்புவதற்காகப் பணிப் பெண்ணைத் தேடிக்கொண்டு செல்வது போல அங்கிருந்து விலகிச் சென்றாள் வசந்த மாலை. தலைவி ஐம்படைத் தாலியைப் பற்றிக் கேள்வி கேட்டபோது தான் வீதியில் போகிற முல்லையைப் பற்றிச் சொல்லிப் பேச்சை மாற்றியதால் அவளுக்கு கோபம் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் அப்போது வசந்தமாலையின் சிந்தனையில் படர்ந்தது. ‘தான் எதற்காகப் பேச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்தோம் என்பதை நினைத்தபோது வசந்தமாலைக்குப் பயம் பிடித்துக்கொண்டது. தலைவிக்கு அப்போது தெரிய வேண்டாமென்று தான் மறைவாகச் செய்த தந்திரத்தை வெளிப்படையாகவே தெரிவித்துவிடலாமா என்றுகூட எண்ணினாள் அவள். தந்திரங்களிலும் சூழ்ச்சிகளிலும் மனம் வெறுத்தது போலச் சுரமஞ்சரி சற்றுமுன் பேசிய பேச்சையும் இப்போது நினைத்துக் கொண்டாள் வசந்தமாலை. இதை நினைத்தபோது இந்த நினைவுக்கு முரணான காரியத்தைத் தானே சற்றுமுன் செய்திருப்பதை எண்ணி நடுங்கினாள் அவள். தான் செய்த தந்திரமே சுரமஞ்சரியின் பார்வைக்கு இலக்காகி யிருக்குமோ என்று சந்தேகமும் கொண்டாள் அவள். இந்தச் சந்தேகம் ஏற்பட்ட மறுகணம் ஊன்றுகோலை அப்போது கீழே கொடுத்து அனுப்புகிற எண்ணத்தைக் கைவிட்டாள் வசந்தமாலை. ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவள்போல் திரும்பவும் தன் தலைவியின் அருகே சென்று நின்றாள் அவள். ஊன்றுகோலைத் தந்தை யாரிடம் கொடுத்தனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற வசந்தமாலை மறுபடியும் ஊன்றுகோலுடனேயே திரும்பி வந்து நிற்பதைக் கண்டு சுரமஞ்சரி கேட்டாள்:

என்னடி வசந்தமாலை? ஏன் ஊன்றுகோலைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டாய்?”

இதோ பாருங்கள் அம்மா என்று ஊன்றுகோலை அப்படியே தலைவியின் கைகளில் கொடுத்தாள் தோழி வசந்தமாலை.

 

இன்னும் நான் பார்க்க இதில் என்ன இருக்கிறது! இதை மறுபடியும் பார்க்க வேண்டாமென்றுதானே இதை உன்னிடம் கொடுத்து அனுப்பினேன். மறுபடி எதற்காக என்னிடமே கொண்டு வந்து கொடுக்கிறாய்? இன்று நீ ஏன் இப்படித் திடீர் திடீரென்று மாறி மாறி நடந்து கொள்கிறாய்?”

மீண்டும் ஒருமுறைதான் இதைப் பாருங்களேன் அம்மா! இப்போது பார்க்கச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. முன்பு பார்த்ததில் இப்போது ஏதாவது குறைகிறதா என்றும் பாருங்கள்...” என்று தன் இதழ்களில் சிரிப்பை வரவழைக்க முயன்று கொண்டே வசந்த மாலை மறுமொழி கூறியபோது சுரமஞ்சரி அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டுப் பின்பு மெல்ல மெல்ல ஊன்றுகோலின் யாளிமுகப் பிடியைக் கழற்றினாள்.

ஊன்றுகோலை அவள் ஒவ்வொரு மரையாகக் கழற்றக் கழற்றப் பிடியோடு சேர்த்துத் தன் நினைவும் ஒவ்வொன்றாகத் திருகப்படுவது போல உணர்ந்தாள் வசந்தமாலை.

சுரமஞ்சரி பிடியை நன்றாகக் கழற்றிக் குழலைக் கவிழ்த்தாள். முகத்தில் சந்தேகமும் பயமும் விளைந்திட மறுபடியும் ஆட்டி அசைத்துக் கொட்டுவது போல் ஊன்று கோலின் குழலைக் கவிழ்த்தாள். கவிழ்க்கப்பட்ட இடத்தில் எந்தப் பொருளும் கவிழவில்லை, சூனியம் தான் இருந்தது. அதே இடத்தின் வெறுமையைப் பார்த்துக்கொண்டே கண்களில் கோபம் பிறக்கத் தலைநிமிர்ந்து வசந்தமாலையின் முகத்தைச் சந்தித்தாள் சுரமஞ்சரி.

வசந்தமாலை! முன்பு இருந்ததில் இப்போது ஏதாவது குறைகிறதா என்று கேட்டாய் அல்லவா? கேட்டுக்கொள். குறைவது ஒன்றல்ல. ஒரே சமயத்தில் இரண்டு பொருள்கள் குறைகின்றன. முதலில் எனக்கு உன்மேலிருந்த நம்பிக்கை குறைகிறது. இரண்டாவதாக இதில் என்ன குறைகிறதென்று உனக்கே நன்கு தெரியும்!”

இதைக் கேட்டு வசந்தமாலை சிரித்தாள். சிரித்துக் கொண்டே இடுப்பிலிருந்து அதுவரை அங்கே ஒளித்து வைக்கபபட்டிருந்த அந்த ஐம்படைத் தாலியை எடுத்தாள்.

நம்பிக்கை குறையும்போதே உங்களுக்குக் கோபம் பெருகுகிறதே அம்மா? நாம் தெரிந்துகொள்ளத் தவிக்கும் உண்மைகள் நமக்கு விரைவில் தெரிய வேண்டுமானால் இந்த ஐம்படை ஆரத்தை உள்ளே வைக்காமலே ஊன்று கோலைத் தந்தையாருக்குத் திருப்பிக் கொடுத்தனுப்ப வேண்டும். ஒரு பொருள் இன்றியமையாததா அல்லவா என்பதையும் அந்தப் பொருளைத் தன்னிடம் வைத்திருப்பவருக்கு அது எவ்வளவு அவசியமென்பதையும் அறிய வேண்டுமானால் அவை அவரிடமிருந்து பிரித்து அவர் வசம் இல்லாமற் செய்து பார்த்தால்தானே அறிய முடியும்? உங்கள் தந்தையார் இந்த ஐம்படைத்தாலியை இவ்வளவு பத்திரமாக வைத்திருப்பதன் இரகசியத்தை நீங்களும் நானும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இதை அவரிடம் இல்லாமற் செய்வது தான் அம்மா! உங்களிடம் சொன்னால் கோபித்துக் கொள்வீர்களோ என்று பயந்துதான் நானாகவே இந்த வேலையைச் செய்தேன்.”

எந்த வேலையைப் பிறர் செய்வதால் குழப்பங்கள் வளருகின்றன என்று நான் வருந்தினேனோ அதே வேலையை நீயும் செய்கிறாயடி வசந்தமாலை!”

அப்படியல்ல அம்மா! ‘இது என்ன இரகசியம் என்று ஒன்றும் புரியாமல் மனத்தில் எண்ணி எண்ணிக் குழப்பம் அடைவதைக் காட்டிலும் நம்முடைய குழப்பங்களைத் தந்திரத்தினாலேயே தீர்த்துக்கொள்ள முயல்வது நல்லதுதானே?”

சுரமஞ்சரி பதில் பேசாமல் மெளனமாகத் தோழியின் கையிலிருந்த அந்தப் பொன் ஆரத்தைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தாள்.

நாளைக்கு விடிந்ததும் இந்த ஊன்றுகோலை மட்டும் தந்தையாரிடம் சேர்த்துவிடும்படி கொடுத்தனுப்புகிறேன். ஆரத்தை இங்கேயே வைத்துக்கொள்கிறேன். மற்ற இடங்களில் தேடித்தேடித் தவித்தபின் அவர் இங்கேயும் வருவார். அப்போதுதான் இது அவருக்கு எவ்வளவு அவசியமென்று நமக்குத் தெரியும் என்றாள் வசந்தமாலை.

எப்படியோ உனக்குத் தோன்றுவதுபோல் செய் என்று வேண்டா வெறுப்பாகக் கூறிவிட்டு உறங்கச் சென்றாள் சுரமஞ்சரி. மறுநாள் வைகறையில் அவள் கண் விழித்தபோது அவள் செவிகளில் ஒலித்த வார்த்தைகள் தோழியுடையனவாக இருந்தன.

அம்மா போது விடிந்ததும் முதல் வேலையாக ஐம்படை ஆரத்தை உள்ளே வைக்காமலே அந்த ஊன்று கோலைக் கொடுத்து அனுப்பிவிட்டேன். நகைவேழம்பரும் இன்று காலையில் கடற்பயணத்திலிருந்து வந்து விட்டாராம், உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும் கீழே ஏதோ கடமையாகப் பேசிக் கொண்டிருந்ததனால் உள்ளே போவதற்குப் பயந்து தந்தையாருடைய பள்ளியறை வாயிலிலேயே அவர் பார்வையில் படுகிற இடமாகப் பார்த்து ஊன்றுகோலை வைத்துவிட்டு வந்த தாகப் பணிப்பெண் கூறினாள் என்றாள் வசந்தமாலை. சுரமஞ்சரி அதைக் கேட்டுவிட்டுத் தான் எந்தவிதமான உணர்வும் அடைந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.

வசந்தமாலை! இன்றிலிருந்து என்னிடம் இத்தகைய குழப்பமான எண்ணங்களைப் பற்றியே பேசாதே. நேற்றிரவு நீண்ட நேரம் சிந்தனை செய்தபின் நான் ஒரு புதிய முடிவுக்கு வந்திருக்கிறேன். இன்று இந்த விநாடியிலிருந்து என்னுடைய வாழ்க்கையில் எனக்குப் புதிய நாள் விடிகிறது. புதிய நோக்கம் புலர்கிறது. தந்தையாருடைய ஊன்றுகோலுக்குள் இருந்த ஐம்படைத் தாலியின் இரகசியத்தைத் தெரிந்துகொள்வதைவிட அதிக ஆவலோடு தெரிந்துகொள்ள வேண்டிய வேறு துறைகளில் இப்போது என் மனம் செல்கிறது.”

 

அப்படி உங்கள் ஆவலைக் கவர்ந்த துறைகள் என்ன?” என்று கேட்கும் விருப்பமும்இப்போது நம் தலைவி இருக்கும் நிலையில் இதைக் கேட்கலாமா வேண்டாமா என்று பயமுமாகச் சுரமஞ்சரியைப் பார்த்தாள் வசந்தமாலை. அப்போது சுரமஞ்சரியின் முகமானது பொழுது புலர்கின்ற நேரத்தில் அழகுகள் யாவும் ஒன்று சேர்ந்து மங்கலமாய் நிறைந்தாற் போல அமைதியாயிருந்தது. எதற்காகவும் பரபரப்புக் காட்டாதது போன்ற நிறைவு அவளுடைய கண்களில் தெரிந்தது.

அதிகாலையில் தோன்றி வளர்கின்ற நேரத்து ஒளிக்கே உரிய சுறுசுறுப்போடு மாடத்தில் நுழையும் செங்கதிர்க் கற்றைகளிலே பட்டு அவளுடைய முகமும் கைகளும், பாதங்களும் நெருப்பிலே குளித்து இளகும் பொன் வெள்ளமாய்த் தெரிந்தன.

மன்னிக்க வேண்டும் அம்மா! போது விடிந்து எழுந்ததும் எழுந்திராததுமாகச் சொல்லி மனத்தைப் புண்படுத்தி விட்டேன் போலிருக்கிறது. நீங்கள் ஆசைப் படுகிற புதிய துறைகளில் உங்கள் நாட்கள் பெருக வேண்டும். வளர்ந்து பொலிக உங்கள் ஆவல். உங்கள் மனத்துக்கு விருப்பம் இருக்குமானால் தயை கூர்ந்து எனக்கும் அதைப்பற்றிச் சொல்லுங்கள். இப்போது விருப்பமில்லாவிட்டால் விருப்பம் வருகிறபோது என்னிடம் சொன்னால் போதும் என்று பணிவாகக் கூறி வணங்கிவிட்டு அப்பாற் சென்றாள் தோழி வசந்தமாலை.

--------------

 

மணிபல்லவம் -நான்காம் பருவம்

9. செவ்வேள் திருக்கோயில்

 

மாலை மயங்கி இருள் சூழ்ந்து கொண்டு வரும் நேரத்துக்கு முல்லையும் கதக்கண்ணனும் வீதியில் அந்தப் பெருமாளிகையைக் கடந்து சென்ற போது அதன் மாடத்தில் தென்பட்ட சுரமஞ்சரியையும், அவள் தோழியையும் பற்றித் தங்களுக்குள் சிறிது தொலைவுவரை பேசிக்கொண்டே போனார்கள்! அவர்கள் அப்போது பட்டினப்பாக்கத்து அரசர் பெருந்தெருவுக்கு அப்பால் உள்ள செவ்வேள் கோயிலுக்குப் போக வேண்டியிருந்தது.

இந்தப் பெண்தான் அண்ணா அன்றொரு நாள் நாளங்காடியில் அவர் சமயவாதம் புரிந்து கொண்டிருந்த போது குடலை நிறைய மலர்களைக் குவித்துக் கொண்டு வந்து அதில் மறைத்து வைத்திருந்த நச்சுப் பாம்பினால் அவரையே கொன்றுவிட முயன்றாள். இவள் பொல்லாத சூனியக்காரியாய் இருப்பாள் போல் தோன்றுகிறது. கூட்டத்தில் இருந்தவர்கள் தடுத்து விட்டார்களாம். இல்லாவிட்டால் ஆலமுற்றத்துத் தாத்தாவும் மற்றவர் களும் அங்கேயே இவள் கழுத்தைத் திருகிக் கொன்றிருப்பார்கள்...” என்று ஆத்திரத்தோடு பேசிக்கொண்டே வந்தபோது முல்லையின் முகம் போன போக்கைப் பார்த்துக் கதக்கண்ணன் மெல்ல நகைத்தான்.

ஏதேது, அந்தப் பெண்ணின் மேல் உனக்கு இருக்கும் ஆத்திரத்தைப் பார்த்தால் அவளைக் கொல்ல நீ ஒருத்தியே போதும் போலத் தோன்றுகிறதே!”

தோன்றுவது என்ன? அப்படி ஒரு சமயம் நேர்ந்தால் அதைச் செய்வதற்கும் என் கைகளுக்கு வலு உண்டு அண்ணா! நிச்சயமாக அந்தப் பெண்ணை விட நான்தான் பலசாலியாயிருப்பேன். ஒருவேளை தோற்றத்திலும் அழகிலும் வேண்டுமானால் அவள் என்னைக் காட்டிலும் சிறந்தவளாக இருக்கலாம்.”

அதுசரி! ஆனால் தோற்றத்தில் அழகாயிருப்பவர்களுக்கு அப்படி அழகாயிருப்பதும் ஒரு பெரிய பலம் ஆயிற்றே முல்லை?” என்று சொல்லிக் குறும்பாகச் சிரித்தான் அவள் தமையன்.

அழகாகவும், மணமாகவும் இருக்கிற பூக்களில் எல்லாம் முள்ளும் அதிகமாக இருக்கும் அண்ணா! தாழம்பூவில் மடல் முழுவதும் முள்ளாயிருப்பதைப் போலத் தோற்றம் நிறைய அழகையும், மனம் நிறையக் கெட்ட எண்ணத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதையே பலம் என்று எப்படிச் சொல்ல முடியும்?”

முடியுமோ, முடியாதோ? அந்தப் பட்டினப் பாக்கத்துப் பெண்ணிடம் மற்றவர்கள் அழகாக நினைக்கக்கூடிய அம்சங்கள் இரண்டு மூன்று இருக் கின்றன. முதலில் அவளுடைய செல்வமே அவளுக்கு ஓர் அழகு. அப்புறம் அவளிடம் இயற்கையாக அமைந்திருக்கிற அழகு அவளுக்கு இன்னொரு செல்வம். அந்த அழகில் அமைந்திருக்கிற வசீகரத்தன்மை மற்றொரு செல்வம். ஆனால் இவற்றையெல்லாம் நீ ஒப்புக் கொள்ள மாட்டாய். தன்னைத் தவிர இன்னொரு பெண்ணும் அழகாயிருக்கிறாள் என்று ஒப்புக்கொள்கிற பெண்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு. இந்த விஷயத்தில் பெண்களும் கலைஞர்களைப் போன்றவர்களே. பிறருடைய திறமையில் பொறாமை காணாத உண்மைக் கலைஞனைத் தேடியும் கண்டு பிடிக்க முடியாததுபோல் பிறருடைய அழகில் பொறாமை கொள்ளாத பெண்ணையும் உலகில் காண முடியாது போலிருக்கிறது, முல்லை!”

முல்லையின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கொதிப்புத் தெரிந்தது. சீற்றத்தோடு, வீதியில் நடப்பதை நிறுத்திவிட்டுத் தன் தமையனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

சீற்றமடையாதே, முல்லை! உன் மனத்தில் இருக்கிற எல்லாக் கோபத்தையும் உள்ளே சிறிதும் தங்கி விடாமல் அப்படியே முகத்தில் வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அதற்காகத்தான் வேண்டுமென்றே இப்படிப் பேசினேன்.”

 

கதக்கண்ணன் தங்கையை நோக்கிக் கைகொட்டிச் சிரித்தான். உடனே பதிலுக்குப் பதில் கேட்டுவிடத் துடிப்பவள் போல் சீறிக்கொண்டே அவனைக் கேட்டாள் முல்லை.

பெண்களை மட்டும் குறை சொல்ல வந்துவிட்டீர்களே? இன்னொருவனுடைய வீரத்தில் பொறாமைப் படாத வீரன், இன்னொருவனுடைய அறிவிலே பொறாமைப்படாத அறிவாளி உலகத்தில் எங்காவது இருக்கிறானா? நீங்கள் எல்லாம் உங்களையொத்த வீரர்களை வெற்றி கொள்ளத் தவிக்கிறீர்கள். அவரைப் போன்றவர்கள் தம்மை ஒத்த அறிவாளிகளை வெற்றி கொள்ளத் தவிக்கிறார்கள்.”

எவரைப் போன்றவர்களைச் சொல்கிறாய் முல்லை!”

அவர்தான்! அன்றைக்குச் கப்பலில் ஏறும்போதுபோய்விட்டு வருகிறேன் முல்லை - என்று என்னிடம் ஒரு வார்த்தை சொல்வதற்குக் கூடத் தோன்றாமல் முகத்தைத் தூக்கிக்கொண்டு போனாரே, அந்த மனிதரைத் தான் சொல்கிறேன் அண்ணா - என்று பேசிக் கொண்டே குனிந்து தரையைப் பார்த்தாள் முல்லை. அந்த நேரத்தில் தன் முகத்தைத் தமையன் பார்த்து விடலாகாது என்று தோன்றியது அவளுக்கு. ஆனாலும் அவன் பார்த்துவிட்டான்.

புரிகிறது முல்லை! இப்போதுகூட நீயும் நானும் அவருடைய கோவிலுக்குத்தானே வணங்குவதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். முருகக் கடவுளாகிய செவ்வேளுக்குத்தானே இளங்குமரன் என்று மற்றொரு பெயர் கூறுகிறார்கள்? அவருடைய ஞாபகம் வந்ததனால்தானோ என்னவோ இன்று மாலை நீ ஒரு நாளுமில்லாத திருநாளாய்ப் பட்டினப்பாக்கத்துக்கு வந்து இளங்குமரக் கடவுளாகிய செவ்வேள் திருக்கோவிலை வணங்க வேண்டும் என்றாய்! உன்னுடைய திருட்டுத்தனமான மனக்குறிப்பு இப்போதல்லவா எனக்குப் புரிகிறது?” - என்று கதக்கண்ணன் அவளை வம்புக்கிழுக்கத் தொடங்கியபோது, இந்த வம்பு தன்னிடம் படிப்படியாய் விளைவிக்கும் நாணங்களை மறைக்க விரும்புகிறவள் போல் அரசர் பெருந்தெருவின் அகன்ற சாலையில் விரைந்து நடந்தாள் முல்லை. கதக்கண்ணனும் தொடர்ந்து அவள் வேகத்திற்கு இணையாக நடந்தான். மாபெரும் அரண்மனையும் அதைச் சுற்றிலும் கண் பார்வைக்கு எட்டும் தொலைவு வரை அரண்மனையைப் போலவே தெரிந்த வேறு பல பெருமாளிகைகளுமாகத் தோன்றின. பூம்புகார் நகரத்தின் இதயம் போன்ற ஆரவாரமான பகுதிக்குள் புகுந்து வந்திருந்தார்கள் அவர்கள். இன்னும் சிறிது தொலைவு சென்று அடுத்த வீதியில் திரும்பினால் ஆறுமுகச் செவ்வேளாகிய முருகப் பெருமானின் அணிதிகழ் கோவில் தென்படும். கோவிலின் மேலே ஒளிவீசிப் பறக்கும் சேவற்கொடி அப்போது அவர்கள் நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அரண்மனையின் முரச மண்டபத்தில் மாலை நேரத்து மங்கல வாத்தியங்கள், முழங்கிப் பரவிக் கொண்டிருந்தன.

 

பல்வேறு பூக்களின் நறுமணமும், தீப வரிசைகளின் ஒளியும், தேரும், குதிரையும், யானையும், சிவிகையும் நிறைந்த இராசவீதியில் கலகலப்பும் இந்திரனுடைய தேவருலகத்துத் தலைநகரமாகிய அமராபதியின் வீதிகளில் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை முல்லையின் மனத்தில் ஏற்படுத்தின. செவ்வேள் கோவில் மாடத்தின்மேல் தெரிந்த சேவற் கொடி இளங்குமரன் அன்று நாளங்காடியில் ஏந்தி நின்ற ஞானக்கொடியாக மாறி அதைப் பற்றிக்கொண்டு அவனே நிற்பதுபோல அவள் கண்களுக்கு மட்டும் தெரிவது போலிருந்தது. தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இளங்குமரனுடன் தான் பழக நேர்ந்த காலத்து நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாகத் தன் மனக்கண்களில் அவளுக்குத் தெரிந்தன. அவள் அப்போது உணர்ச்சி மயமாக நெகிழ்ந்த மனத்துடனிருந்தாள். அறுமுகச் செவ் வேளாகிய குமரக் கடவுளின் அணிதிகழ் கோவிலுக்குள் நுழைந்தபோது அதற்கு முன்பே தன் மனத்தில் நுழைந்து கோவில் கொண்டுவிட்ட மற்றொரு குமரனையும் வணங்கிக் கொண்டிருந்தாள் முல்லை. அப்போது அவளுடைய மனநிலைக்குப் பொருத்தமான உற்சாகப் பேச்சு ஒன்றை அவளுடைய தமையனும் தொடங் கினான்:

முல்லை! அந்த இளங்குமரன்மேல் ஆசைப்படுகிற பெண்கள் மட்டும்தானே உன்னுடைய பொறாமைக்கும் பகைமைக்கும் உரியவர்கள்? இந்த இளங்குமரனைத் தேடி வருகிறவர்களையும் அப்படி நினைத்துவிடாதே. இவன் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள எல்லாரும் ஆசைப்படுவதற்கு உரியவன். இவனையாவது எல்லோரும் நினைக்கவும் ஆசைப்படவும் நீ உரிமை தருவாயோ இல்லையோ?” என்று கோவிலுக்குள் இருந்த குமரக் கடவுளைக் காட்டி நகைச்சுவையாகக் கதக்கண்ணன் கூறிய சொற்கள் முல்லையின் மனத்தில் மணமிக்க மலர்களை அள்ளிச் சொரிந்தாற்போல் பதிந்தன.

அப்போது செவ்வேள் கோவிலில் மணி ஒலித்தது. கண்முன் தெரிந்த கோவிலில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெய்வமான இளங்குமரனையும் - தன் மனத்தில் கோவில் கொண்டு தனக்குத் தெய்வமாகிவிட்ட இளங்குமரனையும் சேர்த்தே வணங்கினாள் முல்லை.

உன்னுடைய இளங்குமரன் கப்பலில் ஏறி மணிபல்லவத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறான் முல்லை! இந்த இளங்குமரனோ எங்கும் நகரவே முடியாமல் இந்தப் பட்டினப்பாக்கத்துக் கோவிலில் பெரிய பெரிய செல்வர்களின் வணக்கங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு இங்கேயே நிற்கிறான் என்று கதக்கண்ணன் விளையாட்டாகக் கூறியபோது அந்த இளங்குமரனும் இந்தச் செவ்வேளைப் போலவே தான் மட்டும் வணங்க முடிந்த கோவில் ஒன்றில் நகராமல் தெய்வமாக நின்றுவிட்டால் எவ்வளவு நலமாக இருக்குமென்று விநோதமானதொரு கற்பனை நினைப்பில் மூழ்கினாள் முல்லை.

அடடா! இந்தக் குமரனையும் உனக்கே தனியுரிமையாக்கிக் கொண்டு விடுவாய் போலிருக்கிறது முல்லை. நாம் வந்து நேரமாகிவிட்டது. திரும்பலாம் அல்லவா?” என்று தமையன் நினைவூட்டிய போது தான் செவ்வேள் கோவிலிலிருந்து திரும்பி வீட்டுக்குப் புறப்படும் நினைவு வந்தது.

---------

 

மணிபல்லவம் -நான்காம் பருவம்

10. காவியத்தில் கற்ற காதல்

 

நீங்கள் ஆசைப்படுகிற புதிய துறைகளில் உங்கள் நாட்கள் பெருக வேண்டும் என்று தன் தலைவி சுரமஞ் சரியை வாழ்த்திவிட்டு அப்பாற் சென்ற வசந்தமாலை, சில நாழிகைகள் கழித்து மீண்டும் திரும்பி வந்த போது சுரமஞ்சரியை முற்றிலும் புதிய சூழ்நிலையில் புதிய கோலத்தில் பார்த்தாள். அவளைச் சுற்றிலும் அந்தப் பெருமாளிகையிலிருந்த பழைய ஏட்டுச்சுவடிகள் குவிந்து கிடந்தன.

சுரமஞ்சரியின் மாடத்தில் விதம்விதமான ஓவியங்கள், வகைவகையான காவியங்களின் ஏட்டுச் சுவடிகள், சீனத்துப் பட்டுக்கள், யவனக் கைவினை, நயம் மிக்க நுண் பொருள்கள், பாண்டி நாட்டுச் சிற்பிகள், ஐம்பொன்னிற் செய்த அழகிய சிற்பங்கள் எல்லாம் நிறைய இருந்தன. ஒவ்வொரு வகைப் பொருளை ஒவ்வொரு காலத்தில் விரும்பித் தேடிச் சேர்த்திருந்தாள் அவள். இந்த வகையில் அவள் ஆசையோடு தேடிச் சேர்த்த கடைசிப் பொருள் அல்லது பொருளோடு தேடிச் சேர்த்த கடைசி ஆசை இளங் குமரனின் ஓவியம்தான். அந்த ஓவியத்துக்கு ஆசைப்பட்ட பின் வேறு எதையும் தேடிச் சேர்க்கிற ஆசையே அவளுக்கு ஏற்படவில்லை. தொடர்ந்து வேறு ஆசைகளுக்கு மனம் தாவி விடாதபடி தன் எல்லையிலேயே மனத்தை நிற்கச் செய்யும் பரிபூரணமான ஆசைகளும் உலகத்தில் உண்டு. மலை உச்சியிலிருந்து உருண்டு விழுகிற கல் கடைசியாகஇனிமேல் இதற்கு அப்பால் உருள முடியாது என்பதுபோல ஒரு நிலையாகத் தங்கி விடுகிற எல்லையும் உண்டு அல்லவா? இளங்குமரன் என்ற எல்லையில் சுரமஞ்சரியும் அப்படித்தான் கடைசியாகவும் நிறைவாகவும் தன் நினைவைத் தங்க விட்டுவிட்டாள்.

அந்த எல்லைக்கு அப்பால் அதைவிட நிறைவாகவோ அதைவிட அழகாகவோ ஆசைப்படுவதற்கு வேறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. அவளுக்கு. பண்ணோடு கலந்து நின்று இனிமை தரும் இசையைப் போல் அதற்கப்பால் விலகாமல் அதிலேயே பொருந்தி விட்டது அவள் ஆசை. தன்னுடைய பேதைப் பருவத்தில் உடம்பை அழகு செய்யும் பட்டுக்களுக்கும், அணிகலன்களுக்கும் வகை வகையாக ஆசைப்பட்டிருக்கிறாள் அவள். நினைவு தெரிந்து அறிவு வளர்ந்தபின் சுவடிகளுக்கும் ஓவியங்களுக்கும் ஆசைப்பட்டிருக்கிறாள். இந்த ஒவ்வொரு வகை ஆசையிலும் மனம் பித்தேறி அழுந்தியதைப் போலவே ஓரொரு சமயங்களில் சோர்ந்து சலித்துப் போகிற அநுபவமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. வீதியெல்லாம் சுற்றிவிட்டு நிலைக்கு வந்த தேரின் சக்கரத்தில் அப்போது தரையைத் தீண்டிக் கொண்டு இருக்கிற பகுதி எதுவோ அதுவே அதற்கு நிற்குமிடமாகி விடுவதுபோல் முன்பு சேர்த்த சுவடிகளையெல்லாம் ஊன்றிக் கற்க வேண்டுமென்ற ஆவலை அன்று அவள் அடைந்திருந்தாள். இளமையில் காவிரிப்பூம் பட்டினத்திலேயே புகழ்பெற்ற பெரும்புலவர் ஒருவரைக் கொண்டு தந்தையார் அவளுக்கும் வானவல்லிக்கும் இலக்கியங்களையும், காவியங்களையும் கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அவள் அவற்றைக் கற்ற காலமும் குறைவானது. கற்பிக்கப்பட்ட சுவடிகளும் குறைவானவை. தகடாக அறுத்து இழைத்த யானைத் தந்தத்திலும் மெல்லிய சந்தனப் பலகைகளிலும் உறையிட்டுப் பட்டு நூல்களால் இறுக்கிக் கட்டி அடுக்கப் பட்டிருந்த அந்த ஏட்டுச் சுவடிகளின்மேல் இன்று மறுபடியும் சுரமஞ்சரியின் கவனம் சென்றது. பெரு மாளிகையின் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் மறந்து விட்டு நினைவுகளின் தரத்தையும் எண்ணங்களின் உயரத்தையும் வளர்த்துக் கொள்வதற்காகக் காவியங் களிலும் இலக்கியங்களிலும் தன்மனத்தைச் செலுத்த வேண்டுமென்று தோன்றியது சுரமஞ்சரிக்கு. தான் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறவருடைய மனத்தின் உயரத்துக்குச் சமமாக இல்லாவிட்டாலும் மிகவும் குறைவாயில்லாமல் தன்னுடைய எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு நினைத்தாள் அவள்.

மிகச் சிறிய கிளையில் தொங்கும் கனமான பெரிய பழத்தைப்போல் அவள் மனம் தாங்கிக் கொண்டிருக்கிற ஆவல் அவளுடைய ஆற்றலைக் காட்டிலும் பெரிதா யிருந்தது. அந்த ஆசைக்கு உரியவனோ, ‘பெண்ணே! உன்மேல் கருணை செலுத்த முடியும். அன்பு செலுத்த முடியாது என்று இறுமாப்போடு மறுமொழி சொல்லுகிறவனாக இருக்கிறான். அந்த இறுமாப்பை இளக்கு வதற்குத் தன்னால் முடியுமா என்று அவள் பயந்த காலமும் உண்டு.

முதன் முதலாகக் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் யவன மல்லனை வெற்றி கொண்ட வீரனாக அவனைச் சந்தித்தபோது காவிரிப்பூம்பட்டினத்திலேயே திமிர் மிகுந்த அழகனாக அவனை உணர்ந்தாள் அவள். அடுத்தமுறை கப்பல் கரப்புத் தீவில் தனிமையில் சந்தித்த போது தன்மானம் நிறைந்த இளைஞனாக உணர்ந்தாள். அதற்குப் பின்பு நெடுங்காலத்துக்கு அப்புறம் நாளங்காடியில் சமய வாதம் புரியும் ஞானச் செல்வனாகச் சந்தித்தபோது, பிறருடைய துக்கத்துக்கு இரங்கும் மனம் தான் செல்வம் என்று கூறி அருள்நகை பூக்கும் கருணை மறவனாகச் சந்தித்தாள். அதற்கும் அப்புறம் தன்னுடைய பூக்குடலையிலிருந்து அவனைக் கொல்லப் புறப்பட்ட பாம்பைக் கண்டு எல்லாரும் தன்மேல் சீறியபோது புன்னகையோடு தன்னைப் பொறுத்த அவனிடம்நீங்கள் மகாகவிகளுக்கு உத்தம நாயகனாகிக் காவியங்களில் வாழ வேண்டிய பேராண்மையாளர் என்று, தானே அவனைப் புகழ்ந்து கூறியதையும் நினைத்துக் கொண்டாள், சுரமஞ்சரி. அந்தக் கருணை மறவன் மேல் தான் கொண்டிருக்கிற காதல், காவியங்களில் வருகிற அன்பைப்போல் அழியாததாகவும் நிலையான தூய்மை உடையதாகவும் இருக்க வேண்டும் என அவள் மனத்தில் உறுதி பிறந்திருந்தது. அந்த உறுதி ஒன்றுதான் அவள் மனத்தின் ஆசை நிரந்தரமாக நின்ற கடைசி எல்லையாக அவளை ஆக்கியிருந்தது.

இலக்கியங்களையும், காவியங்களையும் தங்கள் உறவையும் எண்ணிப் பார்த்துப் பழகிய காரணத்தால் ஏட்டுச் சுவடிகளில் வாழும் அந்த உணர்வுகளின் மணத்தில் திளைத்துத் திளைத்துத் தன் மனம் நிற்கும் எல்லையைத் தனது தவமாகவே ஆக்கிக் கொண்டுவிட வேண்டும் என்ற பிடிவாதம் பிறந்தது அவளுக்கு. இந்தப் பிடிவாதம் பிறந்த பின்னால் தான் இருக்கும் மாடம், தன்னோடு துணையிருக்கும் வசந்தமாலை, தன் தந்தை, நகைவேழம்பர் எல்லாரும் எல்லாமும் அவளுக்கு மறந்தே போயினர்.

அன்று காலையில் சுரமஞ்சரியின் கையிற் கிடைத்த முதற் சுவடியில் அவள் மனத்தின் தவிப்புக்களையே மேலும் வளர்ப்பதுபோல் ஒரு பழைய பாடல் வந்து வாய்த்தது.

 

வைகல் தோறும் இன்பமும் இளமையும்

எய்கணை நிழலின் கழியும், இவ் உலகத்துக்

காணீர் என்றலோ அரிதோ அதுநனி

பேணிர் ஆகுவீர்.”

 

ஒரு தலைவனிடம் அவனாற் காதலிக்கப்படும் காதலியின் தோழி ஒருத்தி சொல்வதாக இப்பகுதி அமைக்கப்பட்டிருந்தது. “வேகமாகத் தொடுக்கிற அம்பின் நிழல்போல் இந்த வாழ்க்கையும் இதன் இளமைப் பருவத்துச் சுகங்களும் உண்டாகிய வேகம் தெரிவதற்கு முன்பே மறைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உலக வாழ்வின் நிலையை நீங்கள் காணாதவர் இல்லை. இதை உணர்ந்து என் தலைவியை விட்டுப் பிரியாமல் அவள் மேல் நீங்கள் அன்பு செலுத்த வேண்டும் என்று தன் தலைவியின் சார்பில் அந்தப் பாடலில் வருகிற தோழி தலைவனிடம் கூறி வேண்டிக் கொள்வதாக இருந்த இப்பகுதியை ஏட்டிலிருந்து சுரமஞ்சரி படித்துக்கொண்டிருந்த போதுதான் வசந்தமாலையும் அவளருகே வந்து நின்றாள்.

வில்லில் நாணேற்றி வேகமாகத் தொடுக்கப்பட்டுச் செல்கிற அம்பின் நிழலைப் போல் இந்த வாழ்க்கையும் இதன் இளமைப் பருவத்துச் சுகங்களும் வேகமாக உண்டாக்கிய சுவடு தெரிவதற்கு முன்பே அழிந்து கொண்டிருக்கின்றனவே!’ என்ற கருத்துள்ள பகுதியை இரண்டாம் முறையாகப் படிக்கும்போது சுரமஞ்சரிக்குக் கண் கலங்கிவிட்டது. ‘இதை இப்படியே அவரிடம் யாராவது போய்ச் சொல்ல மாட்டார்களா? இதையும் சொல்லி, என் துக்கத்தையும் விவரித்து அவரை என் மேல் அநுதாபமும் கொள்ளச் செய்யும் திறமை வாய்ந்த தோழிகள் யாருமே எனக்கு இல்லையா?’ என்று எண்ணி எண்ணி அந்தப் பகுதிக்கு மேல் பாடலில் மனம் செல்லாமல் இளங்குமரனுடைய முகத்தை நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி.

மூன்றாவது முறையாக இதே பகுதியைத் தன் தோழி வசந்தமாலைக்கும் படித்துக் கூறிவிட்டு, “இப்படித் திறமையாக அவரிடம் பேசி என் உணர்ச்சிகளை யெல்லாம் அழகான உவமானத்தினால் விளக்குவதற்கு உன்னைப் போல் ஒரு தோழியால் முடியுமோ, வசந்த மாலை?” என்று ஏக்கத்தோடு அவளைக் கேட்டாள் சுரமஞ்சரி.

வசந்தமாலை இதற்கு என்ன மறுமொழி கூறுவதென்று அறியாமல் திகைத்தாள்; சுரமஞ்சரி அவளுடைய திகைப்பைப் பார்த்துவிட்டு, “நான் சொல்லியதே உனக்குப் புரியவில்லை போலிருக்கிறதே வசந்தமாலை!” என்று தன் தோழியைக் கேட்டாள்.

புரிகிறது அம்மா! ஆனால் உங்கள் துன்பத்தை அவரிடம் திறமையாக எடுத்துச் சொல்வதற்காகவாவது நான் ஒரு கவியாகப் பிறந்திருக்க வேண்டும். ஏனெனில் துன்பங்களையும் தப்புக்களையும் ஏக்கங்களையும் கூட அழகாகச் சொல்லுகிற திறமை கவிகளுக்கு மட்டும்தான் இருப்பதாகத் தெரிகிறது. அடுத்த பிறவியிலாவது உங்களுக்குத் தோழியாகப் பிறந்து கவியாகவும் விளங்கி நீங்கள் அன்பு செலுத்துகிறவரிடம் போய் உங்களுக்காக உவமைகளையும், உருவங்களையும் கூறி, அவருடைய மனத்தை இளக்க வேண்டும்போல எனக்கு ஆசையாயிருக்கிறது.”

போடீ வேலையற்றவளே. இந்தப் பிறவியின் ஆசைகளே இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் நீ அடுத்த பிறவிக்குப் போய்விட்டாயே?” என்று தோழிக்குப் பதில் கூறியபோது சுரமஞ்சரியின் கண்களில் தெரிந்த அழுகை குரலிலும் ஒலித்தது. அப்போது அவள் கைகளிலிருந்த அந்த ஏடு கண்ணிரில் நனைந்து கொண்டிருந்தது. தன் தலைவியை அழச் செய்த அந்த ஏடுகளின் மேல் கோபம் கோபமாக வந்தது வசந்தமாலைக்கு. அதே சமயத்தில் தலைவி எதற்காக அழு கிறாள் என்ற சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டது. ஏட்டிலே கண்ட பாட்டுக்காக அழுகிறாளா, பாட்டிலே திகழும் கருத்தால் தன் மனம் எவனை நினைவு கூர்ந்ததோ அவனுக்காக அவனை எண்ணி அழுகிறாளா என்று ஒன்றும் தெளிவாகப் புரியாமல் மருண்டாள் வசந்தமாலை. இதுவரை என்றும் ஏற்பட்டிருக்க முடியாத நிறைந்த அநுதாபம் அன்று வசந்தமாலைக்குத் தன் தலைவியின்மேல் ஏற்பட்டது.

------------

 

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

11. தேடிக் குவித்த செல்வம்

 

பொழுது புலர்ந்ததும் புலராததுமாக வந்து நகைவேழம்பர் நினைவுபடுத்திய பழைய நினைவுகளால் பெருநிதிச் செல்வர் சாகின்ற காலத்து வேதனை களையெல்லாம் உயிருடனேயே அப்போது அடைந்தவராக நடுங்கி நின்றார். ஆந்தை விழிப்பதுபோல அவருடைய கண்கள் புரண்டு உருண்டு விழித்தன. முகத்திலும் பிடரியிலும் வேர்த்துக் கொட்டியிருந்தது. மனத்தின் கருத்தோடு ஒத்துழைக்காத நலிந்த குரலில் அவர் நகைவேழம்பருக்குப் பதில் கூறினார்:

புரிந்துகொள்ளாமலே நான் இத்துணை நாட்களாகப் பாம்புக்குப் பால் வார்த்துவிட்டேன்.”

கடைசி கடைசியாக அந்தப் பாலில் நஞ்சைக் கலந்து வார்த்துக் கொடுத்த நாளையும் சேர்த்துத்தான் சொல்கிறீர்களென்று நினைக்கிறேன். நஞ்சுடையதனைக் கொல்வதற்கு இன்னொரு நஞ்சு பயன்படாது என்பதை நீங்கள் மறந்திருக்கக்கூடாது. சொந்த உயிரையும் அந்த உயிரின் நம்பிக்கைகளையும் உங்களிடம் கொடுத்துவிட்டு ஏமாறுவதற்கு எல்லாருமே காலாந்தகனாக இருக்க மாட்டார்கள் ஐயா! மேலும் நஞ்சுடைய பொருளுக்குப் புதிய நஞ்சைக் கலந்து கொடுப்பதனால் நலிவு ஏற்படுவதற்குப் பதில் பலம்தான் பெருகும்.”

உண்மைதான்! பலம் பெருகியிருப்பதை இதோ இப்போது நீங்கள் எனக்கு முன்னால் வந்து நிற்கிற விதத்திலிருந்தே நான் தெரிந்து கொள்கிறேன், நகை வேழம்பரே!”

இதைக்கேட்டு நகைவேழம்பர் அந்தப் பெரு மாளிகைக் கட்டிடமே அதிர்ச்சி அடைகிறாற்போல் இடிஇடியென்று சிரித்தார்.

தெரிந்து கொள்ளுங்கள்! தெரிந்து கொள்ளுங்கள்! நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் நான் உங்களைத் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டியவை நிறைய மீதமிருக்கின்றன. கொலையும் கொள்ளையும், குரோதமும், வஞ்சகமும் குறைவில்லாமல் புரிந்து உங்களுடைய நிலவறையில் நீங்கள் தேடிக் குவித்திருக்கிறீர்களே அந்தச் செல்வம் ஒன்று மட்டும்தான் உங்களுடைய வலிமை.”

ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உன்னைப்போல ஓர் அசுரப் பிறவியின் கொடிய நட்பு எனக்குக் கிடைத் திருக்கவில்லையானால் நான் நியாயமானவனாகவும், இந்த வஞ்சகமான வலிமை இல்லாது ஏதோ ஒருவகையில் பலவீனனாகவும் எல்லாரையும் போல வாழ்ந் திருக்கலாம்.”

 

எதிரே நிற்கிற ஒற்றைக் கண்ணனிடம் பெருநிதிச் செல்வருக்கு மதிப்புக் குறைந்து போய்விட்ட காரணத் தினால்நீ, உன்னை என்று ஏகவசனத்தில் அலட்சியமாகப் பேசத் தொடங்கிவிட்டார். அதனால் இந்தப் பேச்சு எதிராளியை இன்னும் கொதித்தெழச் செய்தது.

இந்த அசுரப் பிறவியின் சூழ்ச்சிகள் கற்பித்த வழியில் போய்த்தான் சோழ மன்னரிடம் பெருமதிப்புக்குரிய எட்டிப்பட்டம் பெற்றீர்கள். இந்த அசுரப் பிறவியின் சூழ்ச்சியைக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்ட வழிகளில் போய்த்தான் உங்களுடைய அந்தரங்க நிலவறையில் தாழி தாழியாகப் பொன்னும் மணியும் முத்தும் சேர்த்துக் குவித்திருக்கிறீர்கள். இந்த ஒற்றைக் கண்ணால் நான் உலகத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அநுபவங்களிலிருந்துதான் இரண்டு கண்களால் கூடப் பார்த்து முடிக்க இயலாத அவ்வளவு செல்வத்தை உங்களுடைய நிலவறையில் நிறையக் குவித்திருக்கிறேன்.”

எதிரி திரும்பத் திரும்பத் தன்னுடைய செல்வத்தைப் பற்றியே நினைவூட்டிப் பேசியதைக் கேட்டுப் பெருநிதிச் செல்வருக்குப் பொறுமை போய்விட்டது. அளவற்ற ஆத்திரம் பிறந்தது அவருக்கு.

பேயே! செல்வம் செல்வமென்று பறக்கின்றாயே! நிலவறையைத் திறந்து விட்டு விடுகிறேன். உனக்கு வேண்டியதை அதிலிருந்து வாரி எடுத்துக்கொண்டு போய்விடு. மறுபடி நீ என் முகத்தில் விழிக்காதே...” என்று கூறியவராகத் தம்முடைய பள்ளியறையிலிருந்தே நிலவறைக்குள் போவதற்குரிய வழியாகக் கீழே இறங்கும் படிக்கட்டில் நகைவேழம்பரையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு வேகமாகப் பாய்ந்து இறங்கினார் பெருநிதிச் செல்வர்.

கையை விடுங்கள். நான் வாரிக்கொண்டு போவதற்கு உங்களுடைய அநுமதி எதற்கு? நானே அதைச் செய்து கொள்கிறேன்!” என்று தன் கையைப் பெருநிதிச் செல்வருடைய பிடியிலிருந்து உதறிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார் நகைவேழம்பர். நிலவறைக்குச் செல்லு வதற்காக ஒவ்வொரு படியாய் மிதித்துக்கொண்டு கீழே இறங்கியபோது, தாம் மிதிக்கின்ற ஒவ்வொரு மிதியும் நகைவேழம்பருடைய கழுத்தில் படுவதுபோல் பாவித்துப் பல்லைக் கடித்துக் கொண்டு சென்றார் பெருநிதிச் செல்வர். பெருநிதிச் செல்வரையே அழுத்தி மிதிப்பதாக நினைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர். கீழே நிலவறை வந்தது. செல்வம் குவிந்திருக்கிற இடத்துக்கே மணமும் உண்டு போலும். சந்தனமும் அகிற் புகையும், பச்சைக் கற்பூரமும் அந்தப் பகுதியிற் குவிந்திருக்கிற செல்வத்தின் மிகுதியை எடுத்துச் சொல்லுவன போல் நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தன. தரையில் விலை மதிப்பற்ற சீனத்துப் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.

 

என்றாலும் அப்போது அந்த நிலவறைக்குள் புகுந்த இருவருக்கும் நறுமணத்தை உணர்கிற எண்ணமோ, பட்டுக் கம்பளத்தில் மென்மையை உணர்கிற நளின உணர்வோ சிறிதும் இல்லை. அந்த இருவருடைய நிலையையும் கண்டு சந்தர்ப்பம் தெரியாமல் பெரியவர்கள் முன்னால் சிரித்து அவர்களுடைய கோபத்தைக் கிளறிவிடுகிற சிறு பிள்ளைகளைப் போல் அங்கே குவிந்திருந்த முத்துக்களும், மணிகளும், பொற்காசுகளும் ஒளி மின்னிச் சிரித்தன. அந்த இரண்டு பேருடைய கோபத்துக்கும் நடுவே அவை இயல்பாக மின்னுவதுகூட அதிகமான துடுக்குத் தனமாகத் தோன்றுவது போலிருந்தது.

அவர்கள் இருவருக்கும் வழக்கமான நெஞ்சுத் துடிப்பைவிட அதிகமான விரைவோடு மூச்சும் இதய மும் அடித்துக்கொண்டன. விநாடிக்கு எத்தனை முறை துடிக்கிறது என்று நினைக்கவும் முடியாத வேகத்தோடு இதயம் துடித்தது. அறையில் மூலைக்கு மூலை இறைந்து கிடந்த தனித்தனி மாணிக்கக் கற்கள் எல்லாம் செக்கச் செவேரென்று மின்னியபோது அவை அத்தனையும் தனித்தனியே நகைவேழம்பரின் ஒற்றைக் கண்ணாகத் தோன்றின பெருநிதிச்செல்வருக்கு. ‘நிலவறையின் நான்கு புறமும் எவராவது முரட்டுக் கொலையாளிகளை மறைவாக இருக்கச் செய்துவிட்டுத் தம்மைத் தீர்த்து விடுகிற அந்தரங்க எண்ணத்தோடு அங்கே அவர் அழைத்து வந்திருப்பாரோ?’ என்று சந்தேகம் கொண்டவராய் ஒற்றைக் கண்ணினால் நான்கு புறமும் கூர்மை யாகப் பார்த்துக்கொண்டே, ஒவ்வோர் அடியாகப் பாதம் பெயர்த்து வைத்து உள்ளே நடந்தார் நகைவேழம்பர். ‘பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் பெருநிதிச் செல்வரின் சூழ்ச்சிகள் நகைவேழம்பருக்கு மனப்பாடம். எப்போதும் இயல்பிலேயே வேறு வழியின்றி நிரந்தரமான கோழையாக இருப்பவனைக் கண்டு பயப்பட வேண்டுவதில்லை. சில சந்தர்ப்பங் களைச் சமாளிப்பதற்காக மட்டும் கோழைபோல நடித்து விட்டுப் பின்பு எதிரியைக் கறுவறுக்க நேரம் பார்க்கும் நடிப்புக் கோழைகளை நம்பக்கூடாது. இத்தனை ஆண்டுகள் பழகியும் பெருநிதிச் செல்வர் முதல் வகைக் கோழையா, இரண்டாவது வகைக் கோழையா என்பதை முடிந்த முடிவாக அறிந்து கொண்டுவிட முடியாமல் திணறினார் நகைவேழம்பர். காரணம் அவர் இரண்டு வகைக் குணங்களையும் மாற்றி மாற்றிச் செயல்படுத் தியிருக்கிறார். அதில் எது மெய் எது போலி என்று புரிந்துகொள்வது, தந்திரத்தில் தேர்ந்தவராகிய நகைவேழம்பருக்கே அரிதாயிருந்தது. அதனால்தான் அன்று காலை நேரத்தில் அவரோடு நிலவறைக்குள் புகுந்த போது மிக நுணுக்கமான தற்காப்பு நினைவுடனேயே அங்கு நுழைய வேண்டியிருந்தது நகைவேழம்பருக்கு.

செல்வக் களஞ்சியமான காவிரிப்பூம்பட்டினத்தையே சோழ மன்னனிடமிருந்து விலைபேசி வாங்கினாலும் அதற்கு அப்புறமும் மீதமிருக்கக்கூடிய அவ்வளவு செல்வம் வேறு வேறு வடிவில் அங்கே குவிந்து கிடந்தது. இருவரும் அவற்றை எதிரெதிர்த் திசைகளிலே இருந்து பார்த்தபடி இருந்தனர். இருவருடைய நெஞ்சுத் துடிப்பையும் கேட்டு முத்துக்கள் மின்னுவதற்குப் பயந் தனவோ என இருந்தன. இருவரும் மூச்சு விடுகிற ஒலி வெகுண்டெழுந்த சர்ப்பங்கள் சீறுவதுபோல் ஒலித்தது.

ஒவ்வொரு விநாடியும் தன்னைக் கொல்லப் பாயும் முரட்டுக் கரங்களையே நான்கு புறத்திலிருந்தும் எதிர்பார்க்கிற தற்காப்போடு நின்றார் நகைவேழம்பர். பல விநாடிகள் ஒரு விளைவும் இல்லாமல் மெளனமாகக் கழியவே தான் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கிற சூழ்நிலை அங்கு இல்லை என்று அநுமானம் செய்து கொண்டு தைரியம் அடைந்தார் நகைவேழம்பர். மெல்லத் தொண்டையைக் கனைத்து விட்டுக்கொண்டு கை விரல்களைச் சொடுக்கினார். அப்போது எதிரேயிருந்து பெருநிதிச் செல்வருடைய குரல் ஒலித்தது.

செல்வம் செல்வம் என்று நீ பறந்த பேராசை தீரும் படி உனக்கு வேண்டியதை வாரிப் போகலாமே இங்கிருந்து?”

என்ன சொல்கிறீர்கள்?”

தனக்குக் காது கேட்காததுபோல் அதை மீண்டும் சொல்லும்படி இரண்டாம் முறையாகப் பெருநிதிச் செல்வரைக் கேட்டார் நகைவேழம்பர்.

-------------

 

மணிபல்லவம் -நான்காம் பருவம்

12. வழி இருண்டது

 

தான் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் , எதிரி இரண்டாவது முறையாகவும் அதைச் சொல்லும்படி தன்னை அழுத்திக் கேட்கவே, பெருநிதிச் செல்வருக்குக் கலக்கம் ஏற்பட்டது. ‘இதை எதிராளி . நம்புவானோ, மாட்டானோ என்று தானே பயந்தபடி சொல்கிற வார்த்தைகளை எதிராளியே இன்னொரு முறை சொல்லும்படி திருப்பிக் கேட்டுவிட்டால் பொய்யைப் படைத்துச் சொல்லியவனுக்கே தான் படைத்த பொய்யில் நம்பிக்கையும் பற்றும் குன்றிப் போய்விடுகிறது. இயல்பாக ஏற்படாமல் போலியாக ஏற்படுத்திக் கொண்ட ஆத்திரத்தினால், “செல்வம் செல்வம் என்று நீ பறந்த பேராசை தீரும்படி உனக்கு வேண்டியதை இங்கிருந்து வாரிக்கொண்டு போகலாமே?” என்று பொருளையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பேசிவிட்டாலும் அதே பேச்சையே இன்னும் ஒருமுறை பேசும்படி நகைவேழம்பர் கேட்டபோது பழைய கொதிப்போடும், பழைய வேகத்தோடும் பேச வரவில்லை. ஏதோ பேசினோம் என்று பேர் செய்வது போல் பேசினார் அவர்.

 

இங்கிருந்து உங்களுக்கு வேண்டியதை வாரிக் கொண்டு போகலாம் என்று சொன்னேன்.”

வேண்டியதை என்றால்...?”

எதை வேண்டுமானாலும் வாரிக்கொண்டு போகலாம் என்று சொல்கிறேன்.”

இன்னும் ஒருமுறை நன்றாகச் சிந்தித்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள். ‘எதை வேண்டுமானாலும் என்று நீங்கள் சொல்லுகிறபோது அதில் எல்லாமே அடங்கிவிடுகிறது. ஒன்றும் மீதமில்லை.”

நீ நஞ்சினும் கொடிய வஞ்சக அரக்கன், எதையும் மீதம் வைக்கமாட்டாய் என்று உணர்ந்துதான் அப்படிச் சொல்கிறேன்.”

உணர்ந்துதானே அப்படிச் சொல்கிறீர்கள். நன்றி ஐயா நன்றி! நான் இப்போது இங்கிருந்து எனக்கு வேண்டிய மிக முக்கியமானதொரு பொருளைத்தான் வாரிக் கொண்டு போக எண்ணுகிறேன். அந்த முக்கிய மான பொருள் இங்கே குவிந்திருக்கிற செல்வங்களை விடப் பெரியது. அதாவது நான் வாரிக் கொண்டு போக வேண்டிய பொருள் இதோ இங்கேதான் இருக்கிறது என்று உள்ளடங்கிய கொதிப்போடு சொல்லிக் கொண்டே வந்த நகைவேழம்பர் குபிரென்று எரிமலையாய்ச் சீறிப் பாய்ந்து பெருநிதிச் செல்வரின் நெஞ்சுக் குழியில் கையை மடக்கி வைத்து அழுத்தினார். நெஞ்சுக்குழியில் பாராங்கல்லைத் துரக்கி வைத்ததைப் போலப் பாரம் நிறைந்ததாயிருந்தது அந்தக் கை.

நான் வாரிக் கொண்டு போக வேண்டிய பொருள் இதோ இங்கே இருக்கிறது.”

இந்த வார்த்தைகளை மீண்டும் நகைவேழம்பர் கூறியபோது உலகம் அழிகிற ஊழியன் கடைசிக் குரல் போல் அவை பயங்கரமாய் ஒலித்தன. பெருநிதிச் செல்வரின் நெஞ்சு வெடித்துச் சிதறிவிடுவதற்குத் துடிப்பதுபோல் அவ்வளவு பரபரப்போடு அடித்துக் கொண்டது.

இதோ புடைத்தும், தணிந்தும் இந்த இடத்தில் மூச்சு விட்டுத் துடிக்கிறதே! இந்த உயிரை முதலில் இங்கிருந்து நான் வாரிக்கொண்டு போக வேண்டும்.”

காற்று சீறிக் கடல் பொங்குகிற ஊழிக் காலத்தின் கொடுமையை நினைவூட்டுகிற சீரழிவின் சொல்லுருவமாய் இந்த வார்த்தைகள் மறுபடியும் நகைவேழம் பருடைய நாவிலிருந்து ஒலித்தன. இப்போது அவருடைய குரல் ஒலி முன்னைக் காட்டிலும் உரத்திருந்தது. சொற்கள் தடுமாறி உடைந்த குரலில் அவருக்கு மறுமொழி கூறினார், பெருநிதிச் செல்வர்.

என்னிடமிருந்து நீ எடுத்துக்கொண்டு போக வேண்டிய பொருள் இதுதான் என்று உன் மனத்தில் உறுதி செய்து கொண்டு விட்டாயானால் உன்னை நான் மறுக்கவில்லை. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த உடம்புக்குள்ளிருந்து இது வாழ்வதற்குக் காரணமாயிருக்கிற விலைமதிப்பற்ற உயிர்ப் பொருளைக் கொள்ளை கொண்டு போகிறவன் நீயாகத்தான் இருப்பாய் என்று எனக்குத் தெரியும்! இது நான் எதிர் பார்த்ததுதான்.”

அப்படியானால் மிகவும் நல்லதாகப் போயிற்று. இதை நாம் இன்னாரிடம் இழந்துவிடுவோம் என்று எதிர்பார்த்து முன்பே இழப்பதற்கு ஆயத்தமாகிவிட்ட பொருளை இழப்பது வேதனைக்கு உரியதாக இராது.”

பேசு. நன்றாகப் பேசு. உனக்குத் தோன்றியதையெல்லாம் பேசு. இந்த மாளிகையின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வளர்ந்து நான் உனக்கு அளித்த சோற்றுச் செருக்கு எல்லாம் தீரும் மட்டும் பேசிக் கொண்டிரு. இப்போது என் நெஞ்சை அழுத்திக் கொண்டு நிற்கிறாயே. இந்த முரட்டுக் கையில் ஓடுகிற வலிமை இதே பெருமாளிகையில் தின்று கொழுத்த வலிமை என்பதை நீ மறந்து போயிருக்கலாம். ஆனால் நான் மறந்து விடுவதற்கு இயலாது. உலகத்தில் உதவிகளைப் பெற்றவர்கள் நன்றி மறந்து போய்விடும் கொடியவர்களாயிருக்கலாம். ஆனால் உதவி செய்தவர்கள் அப்படிச் செய்தோம் என்பதை மறந்து விட முடியாது.”

இருக்கலாம். ஆனால் நன்றி பாராட்டுவதும் பழைய உதவிகளை எண்ணிக்கொண்டு புதிய கெடுதல் களுக்கு அடிமைப்படுவதும் கோழைகள் செய்ய வேண்டிய காரியங்கள்.”

உதவியும் பயனும் தந்தவர்களைக் கொலை செய்ய வேண்டியதுதான் வீரன் செய்யும் காரியங்கள் போலிருக்கிறது.”

உங்கள் மனத்தை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியை என்னிடம் எதற்காகக் கேட்கிறீர்களோ தெரியவில்லை. பலமுறை நீங்கள் அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறீர்கள். ஒரு காரியத்தையே நீங்கள் செய்யும்போது அது வீரதீர சாதனையாகி விடுகிறது. அதே காரியத்தை நானும் செய்ய முன் வந்தால் அப்போது மட்டும் அதைக் கோழைத்தனம் என்கிறீர்களே, ஏன்? ஏழையின் திறமையை மட்டும் ஏன் இருட்டில் வைத்த ஓவியமாக்குகிறீர்கள்?”

இந்தக் கேள்விக்குப் பெருநிதிச் செல்வர் மறுமொழி கூறவில்லை. நகைவேழம்பரும் தமது பிடியை விடவில்லை. இருவருக்கும் இடையே அச்சமூட்டத்தக்க மெளனம் நிலவிய அந்த நேரத்தில் நிலவறைக்குள்ளே இறங்கும் படிகளில் சிலம்பொலியும் வளைகளின் ஒலியும் மெல்லக் கிளர்ந்து ஒலிக்கும்படி யாரோ நடந்து இறங்கி வருகிற ஒலி கேட்கவே, நகைவேழம்பர் பெருநிதிச் செல்வரைத் தம்முடைய முரட்டுப் பிடியிலிருந்து விடுதலை செய்துவிட்டுத் திரும்பினார். வருவது யார் என்று அறிந்துகொள்ளும் ஆவலில், பெருநிதிச்செல்வரின் கண்களும் படியிறங்குகிற பகுதியில் திரும்பின.

வானவல்லி மெல்ல அடிமேல் அடி வைத்துப் படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் அவளுடைய அன்னையும் பெருமாளிகைப் பணிப் பெண்கள் இருவரும் ஆக நான்கு பெண்கள் நில வறைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன காரியத்துக்காக அப்போது அங்கே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், தனக்கு ஒருவிதத்தில் மிகவும் அருமையான பயனை விளைவிக்கத் தக்கதாக, அவர்களுடைய குறுக்கீடு அமைவதை எண்ணி எண்ணி வியந்தார் பெருநிதிச் செல்வர். அவர் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சியில் அவரை முற்றிலும் கைவிட்டு விடுகிறாற் போல் ஒரு மாறுதல் நிகழ்ந்துவிட இருந்தது. நிலவறைக்குள் நின்றுகொண்டிருந்த நகைவேழம்பரையும் அவரையும் பார்த்து விட்டுஇப்போது இங்கே நுழைய வேண்டாம் என்று குறிப்போடு, திரும்புகிற எண்ணத்துடன் அந்தப் பெண்கள் தயங்கி மேலே மீண்டும் போக இருந்தபோது பெருநிதிச் செல்வரே முந்திக் கொண்டார். “வானவல்லி! நீயும் உன் அன்னையும் ஏன் அங்கேயே நின்றுவிட்டீர்கள்? நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே என்பதற்காக நீங்கள் தயங்கித் திரும்ப வேண்டியதில்லை. உங்களுக்கு ஏதாவது மாலையில் கோப்பதற்கு முத்துக்கள் வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். வாருங்கள் உங்களுக்கு வேண்டிய முத்துக்களைப் பொறுக்கிக் கொள்ளலாம். நகைவேழம்பர் வேறு துணையிருக்கிறார். முத்துக்களை பொறுக்கித் தேர்ந்தெடுப்பதில் இணையற்ற திறமையுடையவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே யாராவது அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று திரும்பிப் போவார்களோ? வேண்டிய முத்துக்களைத் தேர்ந்தெடுக்கலாம் வாருங்கள் என்று நிறைந்த உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களை அழைத்தார். அவர்கள் இறங்கி வந்தார்கள்.

நகைவேழம்பரே! எங்கே உங்களுடைய திறமையைக் காட்டுங்கள், பார்க்கலாம். இவர்களுக்கு ஒளியிற் சிறந்த நல்ல முத்துக்கள் வேண்டும் என்று பெருநிதிச் செல்வர் அவரை முதுகில் தட்டிக் கொடுத்தபோது அவருக்கு உள்ளே சினம் கொதித்தாலும் வெளிப்படையாக விட்டுக் கொடுக்க முடியவில்லை. முத்துக்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் குவியலுக்கருகே அவர் அமர்ந்து குனிந்தார். அந்தப் பெண்களும் அருகில் வந்து அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டார்கள்.

அரை நாழிகைக்குப் பின் அவர்களுக்கு வேண்டிய முத்துக்களைப் பொறுக்கி அனுப்பிவிட்டு, பெருநிதிச் செல்வர் நிலவறையில் நின்றிருந்த தூணருகே அடக்க முடியாத ஆத்திரத்தோடு நகைவேழம்பர் திரும்பிப் பார்த்தபோது அங்கே அந்தத் தூண்தான் நின்றது. அதனருகே நின்றவரைக் காணவில்லை; வஞ்சக எண்ணத்தோடு அவர் தூணின் மறுபுறம் ஒளிந்திருக்கலாமோ என்று கைகளை ஓங்கிக்கொண்டு தூணின் பின்புறம் பாய்ந்தார் நகைவேழம்பர். தன்னால் ஆத்திரத்தோடு தேடப்பட்டவர் அப்போது அந்த நிலவறையின் எல்லையிலிருந்தே தப்பிப் போய்விட்டார் என்று நகை வேழம்பருக்குத் தீர்மானமாகத் தெரிந்தபோது தலை போகிற வேகத்தோடு பதறிப் பறந்து நிலவறையிலிருந்து வெளியேறும் படிகளில் தாவியேறினார் அவர். கடைசிப் படிக்கு அப்பால் கனமான இரும்புக் கதவு அடைக்கப்பட்டு, அது அடைக்கப்பட்டதனால் அந்த இடத்தில் இருளும் கனத்திருந்தது. தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். அதற்கு அப்பால் அவர் செல்ல வேண்டிய வழி மூடப்பட்டு இருண்டு போயிருந்தது.

-----------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

13. நீலநாகரின் நினைவுகள்

 

நீலநாகருடைய வாழ்க்கையில் சந்திப்புக்கும், பிரிவுக்கும், அதிகமான வாய்ப்புக்கள் ஏற்பட்டதில்லை. யாரையாவது சந்திக்க வேண்டும் என்று தவித்துத் தவித்து அவர் வருந்தியதுமில்லை. அப்படித் தன்னைத் தவிக்கச் செய்தவரை எதிரே சந்தித்து அதனால் மகிழ்ந்ததுமில்லை. பிரிந்து துக்கப்பட்டதும் இல்லை. ஊசியின் நுனிபோல் வீரனுடைய வாழ்க்கை, குறி வைப்பதில் தைத்துப் பாய்கிற தன்மை ஒன்றே ஆற்றல். எஃகுபோல் இறுகிய உடலும் உள்ளமும் கொண்டு நெடுங்காலமாகச் சிறந்து விளங்கி வரும் ஆலமுற்றத்து மரம்போல் படர்ந்து நிமிர்ந்து தனி நின்ற பெரு வீரராகிய அவர் இப்போது முதன் முதலாக ஒரு பிரிவை உணர்ந்தார். இன்னதென்று கூற முடியாத ஏதோ ஒரு உணர்வு தம் மனத்தில் கலங்குவதையும் கலக்குவதையும் அறிந்தபோது அதுதான் பிரிவாயிருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. யாருடைய பயணத்தினால் இப்போது அவருடைய மனம் பிரிவை உணர்கிறதோ அவனுடைய வாழ்வின் தொடக்க நாளிலிருந்தே அவனைச் சில நாட்கள், பல நாட்கள், திங்கள்கள் காணவும் பேசவும் நேராமல் பிரிந்திருக்கிறார் அவர். அப்போதெல்லாம் அதைப் பிரிவென்று உணரவோ அதற்காகக் கலங்கவோ தோன்றியதில்லை அவருக்கு. படைக்கலப் பயிற்சியை எல்லாம் முடித்துக் கொண்டு இளங்குமரன் ஆல முற்றத்திலிருந்து அருட்செல்வருடைய தவச்சாலையிலேயே போய் வசிக்கத் தொடங்கியபோதோ அவன் திருநாங்கூரில் தங்கியிருந்த போதோ காவிரிப்பூம் பட்டினத்தில் அவன் இல்லை என்பதை மட்டும் அவர் உணர்ந்திருந்தாரே ஒழிய அதற்காகச் சிறிதும் வருந்தியதில்லை. இன்று அவனை மணிபல்லவத்துக்குக் கப்பலேற்றிய பின்போ அதற்காக வருந்தவும், அந்தப் பிரிவை உணரவும் வேண்டும்போல அவர் தவித்தார். திருநாங்கூரில் பெற்ற கல்வியோடு. அந்தக் கல்வியால் அழகு பெற்று, அகமும் முகமும் ஒளிர வந்து நின்று பூம்புகாரில் பேரறிஞர்களையெல்லாம் வென்று வாகை சூடிய வெற்றியோடு அவன் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுச் சென்றபோது தன் பக்கத்திலேயே தன்னோடு இருக்க வேண்டிய அரும் பொருள் ஒன்று தன்னிடமிருந்து பிரிந்து செல்லுவது போல எண்ணி ஏங்கினார் அவர். ‘வாளையும் வேலையும் எடுத்து ஆள்வதுதான் ஆண்மை என்று எண்ணிக் கொண்டிராதே. மனதை நன்றாக ஆளவேண்டும் அதுதான் ஆண்மை என்று எப்போதோ இளங்குமரனுக்கு அறிவுரை சொல்லியிருந்தார் அவர். ஆனால் தன்னுடைய மனத்தையே ஆள முடியாமல் அவர் இப்போது தவித்தார். மூப்புக் காலத்தில் தன் ஒரே புதல்வனைப் பிரிய நேர்ந்த தந்தையின் தளர்ந்த மனநிலையோடு இருந்தார் அவர்.

 

இந்த இளங்குமரனுக்கும், தனக்கும் முன் பிறவி தொடர்பு ஏதேனும் விட்டகுறை தொட்ட குறையாக இருக்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் அந்த விநாடியிலும் அவரைச் சுற்றி அவருடைய மாணவர்களாக நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தன்னைத் தெய்வமாக மதித்து வணங்குகிறவர்கள் என்றும் அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் மனம் இளங்குமரன் ஒருவன் மேல்தான் பாசம் கொண்டது. தான் கற்பித்த படைக்கலப் பயிற்சியையும் விட அதிகமாக மனத்துக்கு வளந்தர முடிந்த பயிற்சியை அவன் திருநாங்கூரில் பெற்றுக் கொண்டு வந்திருப்பதாகவும் அவருக்குத் தோன்றியது. அவன் மனத்தினாலும் சிந்தனைகளாலும் முதிராதவனாக உடலினால் மட்டும் வலிமை முதிர்ந்து நின்றபோது இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் தான் அவனுக்கு அறிவுரை கூற நேர்ந்த சந்தர்ப்பங்களையும் திருநாங்கூரிலிருந்து திரும்பியபின் மனத்தினாலும் சிந்தனைகளாலும் முதிர்ந்து அவனே பலருக்கு அறிவுரை கூற நேர்ந்த சந்தர்ப்பங்களையும் இணைத்து நினைத்துப் பார்த்தபோது நீலநாகருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணிர் அரும்பிற்று. ஒரு காலத்தில் தனக்குக் கற்பித்தவற்றைக் காட்டிலும் அதிகமானவற்றைத் திருநாங்கூர் அடிகள் இளங்குமரனுக்குக் கற்பித்திருப்பதாகத் தெரிந்தும் தன்னுடைய ஆசிரியரிடம் அவருக்குக் கோபமோ, பொறாமையோ வரவில்லை.

அவருடைய தத்துவங்கள் நிலைத்து வாழ்வதற்குத் தகுந்த உரமான மனநிலம் எது என்று தேடி உணர்ந்து அதில் அவர் அவற்றைப் பயிர் செய்திருக்கிறார் என்று திருப்தி கொண்டாரே தவிரச், சிறிதும் பொறாமைப் படவில்லை. மாறாகப் பலமுறை அதற்காகப் பெருமைப் பட்டிருக்கிறார் அவர்.

நீலநாகா! நான் இவ்வளவு காலம் தவம் செய்து கொண்டிருந்ததன் பலனே இப்போது இந்த மாணவனாக விளைந்து என்னிடம் வந்திருப்பதாக எண்ணுகிறேன். பெண்களுக்கு நல்ல நாயகர்கள் கிடைப்பது போல் கலைகளுக்கும் அவற்றை ஆள்பவர்கள் தகுதி நிறைந்தவர்களாகக் கிடைக்க வேண்டும். இந்த இளைஞனுடைய மனம் எதையும் ஆள்வதற்கு உரிய பக்குவம் பெற்றிருக்கிறது. ‘நான் குருவாகக் கிடைத்ததற்கு முற்பிறவியில் தாங்கள் தவம் செய்திருக்க வேண்டும் என்று எத்தனையோ இளைஞர்கள் என்னிடமே என்னை வியந்திருக்கிறார்கள். நானோ இளங்குமரன் என்னும் ஒரு சிறந்த மாணவன் என்னிடம் வந்து சேர்வதற்காக இத்தனை நாள் எனக்குள்ளே தவம் செய்து கொண்டிருந்ததாக உணர்கிறேன் என்று முன்பு எப்போதோ திருநாங்கூரடிகள் தன்னிடம் மனம் நெகிழ்ந்து கூறியிருந்ததை நினைத்துக் கொண்டார் நீலநாகர். திருநாங்கூர் அடிகள் யாரைப் பற்றியும் எதற்காகவும் மிகைப்படப் புகழ்ந்து பேசாதவர். பிறருடைய தகுதிகளைக்கூடப் புரிந்து மனத்தில் நினைத்துக் கொள்வதுதான் அவருடைய வழக்கம். அப்படிப்பட்டவருடைய சொற்களாலேயே இளங்குமரன் புகழப்பட்டதை நினைத்தபோது மெய்சிலிர்த்தார் நீலநாக மறவர். தன்னைப் புகழ்வதாலும் கூட அப்படிப் புகழ்கிறவர்களை இன்பமடையச் செய்யும் பவித்திரமான பிறவியாக அவன் தோன்றியிருப்பதை இந்தச் சம்பவத்தின்போது நீலநாகர் புரிந்துகொண்டார்.

இளங்குமரன் காவிரிப்பூம்பட்டினத்துச் சம்பாபதி வனத்தில் விடலைப் பருவத்து இளைஞனாகத் திரிந்து முரட்டுச் செயல்களைப் புரிந்தபோதுகூட அப்படியும் ஒரு காட்டாற்று வாழ்க்கையைச் சிறிது காலம் வாழ்ந்து பார்த்துவிட்டுப் பின்பு அதில் ஒன்றுமில்லை என்று கைவிட்டு விடுவதற்காகவே அவன் அப்படி வாழ்ந்தது போலத் தோன்றியது நீலநாகருக்கு. அவனுடைய இளமைப் பருவத்து வாழ்வை எண்ணியபோது பயனில்லாத காரியத்தைச் செய்வதிலும் இன்னதிலே இன்ன காரணத்தினால் பயனில்லை என்று பயனின்மையைப் புரிந்து கொள்வதாகிய ஒரு பயன் உண்டு என்று மணிபல்லவத்துக்குக் கப்பலேறிப் புறப்படுவதற்கு முந்திய நாள் அவனே வளநாடுடையாரிடம் கூறிக்கொண்டிருந்த சொற்களைத்தான் இப்போது நினைத்துக்கொண்டார் நீலநாகர். அப்படிப் பயனின்மையைப் புரிந்துகொள்வதற்கு வாழ்ந்த வாழ்க்கைதானோ அந்தப் பருவத்தில் அவன் வாழ்ந்தவை என்று நினைந்து வியக்க முடிவது தவிர அதைப் பற்றிப் பிழையாக எண்ணுவதற்கு வரவில்லை அவருக்கு. ‘இந்த உடம்பின் வலிமையை எதிர்ப்பதற்குத் துணிவுள்ளவர்கள் யாராவது இருக் கிறார்களா?’ என்று எதிரே வருகிறவர்களையெல்லாம் கேள்வி கேட்பது போன்ற உடம்போடு அப்போது மதர்த்துத் திரிந்த அதே இளங்குமரன்தான் இப்போது நாளங்காடியில் அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்ணின் மேல் இந்திர விழாக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடுஞ் சீற்றமடைந்து கல்லெறிய முற்பட்டபோது அந்தக் கல்லெறியை எல்லாம் தன் உடலில் தாங்கிக்கொள்ள முன்வந்து அருள்நகை பூத்தவன் என்பதை நினைத்துக் கொண்டார் நீலநாகர்.

அதே நாளங்காடியில் இளங்குமரன் பசி மயக்கத்தினால் சோர்ந்து தன் மார்பில் சாய்ந்தபோது அவனுடைய அந்தப் பொன்னுடல் தன்மேல் கற்பூர மணம் கமழச் செய்ததையும் முகுந்தபட்டரை வாதத்தில் வென்று அந்த வெற்றியாலும் அகங்காரம் அடையாமல் தன்னடக்கமாக அவருக்கு மறுமொழி கூறியதையும், வார்த்தைகளை அளவாகவும் ஆற்றலுள்ளவையாகவும் பயன்படுத்தி எதிரியை விநாடி நேரத்தில் வீழ்த்தி விடவல்ல சமதண்டத்து ஆசீவகர்களைக் கூட்டமாக வென்றதையும் எண்ணி எண்ணிப் பூரித்தார் நீலநாக மறவர்.

இளங்குமரனுடைய வாழ்க்கையில் வீரம் இருந்தது. அழகு இருந்தது; காதல் இருந்தது; அறிவு இருந்தது; அருள் இருந்தது. இன்னும் மகாகவிகள் எவ்வெவ்வற்றை யெல்லாம் காவிய குணங்கள் என்று தேர்ந்தெடுத்துத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடிப் போற்றிக் கவிதையாகவும், காவியமாகவும் எழுதி வைத்திருக்கிறார் களோ அவையெல்லாம் அவனுடைய வாழ்வில் இருப்பதாகப் புரிந்து கொண்டார் நீலநாகர். பெண்ணின் செவிகளில் போய்ப் பொருந்திய பின்பு குண்டலங்களுக்கு அப்படிப் பொருந்திய இடத்தால் அழகு வருவதாகப் பொற்கொல்லர்கள் கூறுவதை நீலநாகர் வன்மையாக மறுத்திருக்கிறார். ‘குண்டலத்தால் பெண்ணுக்கு அழகு வளர்வதாக வேண்டுமானால் சொல்லலாம். பெண்ணால் குண்டலத்துக்கு அழகில்லை என்று முரட்டுத்தனமாக ஆலமுற்றத்துப் பொற்கொல்லர்களிடம் பலமுறை வாதிட்டிருக்கிறார் அவர். அவரே இப்போது அந்த உவமையை வேறு விதமாக மாற்றி இளங்குமரனோடு பொருத்தி நினைக்கத் தொடங்கி யிருந்தார். இளங்குமரன் காவிய குணங்களைப் பெற்றதனால் அழகு கொண்டான் என்பதற்குப் பதிலாகக் காவிய குணங்கள் தமக்கு நாயகனாக அவனைப் பெற்றதனால் அழகு கொண்டிருக்க முடியும் என்று மாற்றி நினைத்தார் அவர். ‘நான் நினைத்துக் கொண்டிருக்கிற எண்ணங்களை விதைப்பதற்கு எனக்கு காவிய நாயகன் வேண்டும் என்று முதன் முதலாக இளங்குமரனைத் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு போனபோது தம்மிடம் அடிகள் கூறியது இப்போது மீண்டும் நினைவு வந்தது அவருக்கு. மலை பொங்குவது போல் அவருடைய உடம்பு பெருகி நெட்டுயிர்த்தது. ஆலமுற்றத்துக் கடற்பரப்பும், அதன் கோடியில் தொடு வானமும் கடலும் இணைவதுபோலத் தெரிந்த பொய்யழகும் அவருடைய கண்களில் தெரியாமல் மறைந்து அந்த இடமெல்லாம் இளங்குமரனே தெரிந்தான்.

உலகத்தில் ஏதாவது ஒரு பொருளின்மேல் மட்டும் அதிகமாக ஆசைப்படுகிறவன் வீரனாக இருக்க முடியாது. நிறைந்த வீரன் என்பவன் ஒருவகையில் துறவியாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைப் போல் எல்லாவற்றையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். ஆசைப்பட்டுச் சேர்ப்பதற்கு ஒரு பங்கு ஆற்றல் போதுமென்றால், ஆசைப்பட்டுச் சேர்த்த பொருளையும் அதைச் சேர்க்கக் காரணமாயிருந்த ஆசையையும் விடுவதற்கு இரண்டு பங்கு ஆற்றல் வேண்டும். உயர்ந்த தரத்து வீரம் என்று இதைத்தான் நீலநாகர் எண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்கமான வாழ்க்கை நோக்கமும் இதுதான். அடித்துப் பிடித்துச் சேர்த்து வைக்கும் வீரத்தைவிடஇதை இழக்கக் கூடாது என்கிற வகையைச் சேர்ந்த சிறந்த செல்வத்தையும் மனம் ஒப்பி இழக்கத் துணிகிற வீரன்தான் தேர்ந்தவன் என்ற குறிக்கோள் அவ ருடையது. ஆனால் அவராலேயே இப்போது இளங்குமரனைப் பற்றிய நினைவை இழப்பதற்குத் துணிய முடியவில்லை. அந்நினைவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக மனத்தில் எண்ணி எண்ணித் திரும்பத் திரும்பச் சேர்த்து வைக்க முயலுகிற பேராசைக்காரராக மாறிக் கொண்டிருந்தார் அவர்.

-----------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

14. படிப்படியாய் வீழ்ச்சி

 

ஏமாறக்கூடாது ஏமாறக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தும் அந்த நினைப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தாலேயே தான் ஏமாந்து போய்விட்டதை உணர்ந்தார் நகைவேழம்பர். பெருநிதிச் செல்வர் . இயல்பாகவே கோழையா, நடிப்புக் கோழையா என்று புரிந்துகொள்ள முடியாமல் நீண்ட காலமாகத் தான் கொண்டிருந்த மனக்குழப்பம் இன்று தெளிவாகிவிட்டதாக தோன்றியது அவருக்கு. தானாகவே வருகிற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதிலும், சில சந்தர்ப்பங்களைத் தனக்காகவே வரும்படி செய்துகொள்வதிலும் பெருநிதிச் செல்வர் வல்லவர் என்பதைப் பலமுறை உடனிருந்தே அறிந்திருந்த நகைவேழம்பர் இன்று அதைத் தனது சொந்த அனுபவத்திலும் புரிந்துகொண்டார்.

பெருநிதிச் செல்வரை வெற்றி கொள்வதற்கு இதற்கு முன் தனிமையிலே தனக்கு வாய்த்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தான் நழுவ விட்டிருப்பதையும் நினைத்துக் கொண்டார். பொருளையும் செல்வத்தையும் இழப்பதை விடச் சந்தர்ப்பங்களை இழப்பது மிகவும் பரிதாபகரமானது. அந்த வகையில் தன்னுடைய இறுதிச் சந்தர்ப்பத்தையும் இப்போது தான் இழந்துவிட்டதாக உணர்ந்தார் அவர். அந்த உணர்ச்சியைத் தாங்கிக் கொள்வது வேதனை மிக்கதாயிருந்தது.

நிலவறைக்கு மேலே ஏறிச் செல்வதற்கு வழி இல்லாமல் அடைக்கப்பட்ட கதவின் கீழே இருளில் அமர்ந்து சிந்தித்தார் நகைவேழம்பர். ‘சாவதற்கு நான் கவலைப்படவில்லை. என்றாவது ஒருநாள் எல்லாரும் சாகத்தான் வேண்டும். அது இதற்கு முன்னாலும் எனக்கு நேர்ந்திருக்கலாம். ஏனோ நேரவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் வளரவும் பயன் படாமல், அழியவும் பயன்படாமல், வீணாய்ப் போன சந்தர்ப்பங்களை வரிசையாக நினைத்துக் கொண்டால் நான் நிறைய வீணாகியிருப்பதாய்த்தான் எனக்கே தெரிகிறது. நான் இனிமேலும் வீணாகக் கூடாதென்று முயன்று கொண்டிருக்கும்போது என் முயற்சியே வீணாகிவிட்டது. எனக்கு மீதமிருக்கிற இந்த ஒரு கண்ணால்கூட நான் பார்ப்பதற்கு இனி ஒன்றுமில்லைதான். இனிமேல் என்னுடைய வழி நிச்சயமாக இருண்டு போய்விட்டது. இனி நான் எந்த வழியைப் பார்ப்பதென்று எனக்கே விளங்கவில்லை. இதோ இப்போது இங்கே என் வழி அடைக்கப்பட்டு இருண்டு போயிருப்பதைப்போல் நான் என்னுடைய எதிரியின் வழியை அடைத்துவிடுவதற்கு நேர்ந்த சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவ விட்டிருக்கிறேன். நானும் பெருநிதிச் செல்வரும் நண்பர்களாக இருந்து எங்களுக்கு வேறு எதிரிகளைத் தேடிக் கொண்ட காலம் மலையேறிவிட்டது. மற்றவர்கைளை எதிர்ப்பதற்காகவும் கெடுப்பதற்காகவும் தங்களுக்குள் நண்பர் களாகச் சேர்ந்த இருவர் அதே கெடுதலையும் எதிர்ப்பையும் தங்களுக்குள் சொந்தமாகவே அநுபவிக்க நேரிட்டால் இப்படித்தான் ஆகும் என்கிற விளைவு இன்று எனக்குத் தீர்மானமாக விளங்கிவிட்டது.’

இருளில் கன்னத்தில் கையூன்றியபடியே அமர்ந்து இப்படியெல்லாம் நினைத்தபோது நகைவேழம்பருடைய மனத்தில் உணர்ச்சிகள் மாறி மாறிப் பொங்கின. சில விநாடிகள் எதற்காகவோ தான் ஆத்திரப்பட வேண்டும் போலவும், இன்னும் சில விநாடிகள் எந்த ஏமாற்றத் திற்காகவோ தான் வருத்தப்பட வேண்டும் போலவும் தோன்றியது அவருக்கு. கைத்தினவு தீர அந்த நிலவறையின் எல்லைக்குள் குவிந்து கிடக்கும் பொற்காசுகளை எல்லாம் வாரி இறைத்துவிட வேண்டும்போல, அவருடைய கைகளின் விரல்கள் துடித்தன. இப்படிச் சிறைப்பட்டதைப் போல நிலவறையில் அடைக்கப்பட்டு அவமானமடைவதற்குப் பதில் கடலில் தீப்பிடித்த அந்தக் கற்பூரப் படகிலேயே நான் மாண்டு போயிருக் கலாம் என்று நினைத்தார். பொழுது விடிகிற நேரத்தில் பெருநிதிச் செல்வருடைய வாழ்க்கையை ஒரேயடியாக இருளச் செய்துவிடலாமென்று திட்டமிட்ட மனத்தோடு தான் வந்ததையும் அவரைப் பயமுறுத்தியதையும் இறுதியில் நிகழ்ச்சிகள் எப்படியெப்படியோ மாறித் தன்னுடைய வாழ்க்கையே இருண்டுபோய் விட்டதையும் நினைத்தபோது இப்படித்தான் இது நடந்துவிட்டது என்று நடந்ததை முடிவாக நம்ப முடியாதது போலிருந்தது. அவ்வளவு வேகமாகவும் அது நடந்திருந்தது. தன்னுடைய அநுமானத்தால் தொட முடிந்த எல்லைக்கு அப்பாலும் பெருநிதிச் செல்வரின் சூழ்ச்சித் திறன் அதிகமாய்ப் பெருகி வளர்ந்திருப்பதை இன்று நிதரிசனமாகப் புரிந்து கொண்டார் அவர்.

சற்று முன் முத்துக்களைத் தேர்ந்தெடுக்கும் போதே என் போதாத காலத்தையும் நான் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டேன்! ‘இவர்களுக்கு முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள் என்று அவர் என் முதுகில் தட்டிக் கொடுத்தபோது நான் என்னுடைய ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு அந்தக் கணமே அவருடைய பணியாளனாக மாறிவிட்டது எவ்வளவு பெரிய அறியாமை!’ - என்று தன்னுடைய தவற்றை எண்ணியபோது அந்த நிலவறையில் கருங்கற் சுவர்களும், தளமும் இற்று விழுகிற பெருங்குரலில் பயங்கரமாகக் கதறி அழ வேண்டும் போலத் தோன்றியது அவருக்கு. அந்த இருளடைந்த நிலவறையில் அடைபட்டுக் கிடக்கிறவரை பொற்காசுகளும், முத்தும் மணியும் எப்படித் தம் பயனையும், மதிப்பையும் பெறுவதற்கு முடியாதனவாகிப் பெறுமானமின்றி முடங்கிவிட்டனவோ அப்படியே தன்னுடைய ஆற்றலும் முடங்கிவிட்டதாகத் தெரிந்தது அவருக்கு. பயன்படுத்துகிற வரையிலும் ஆற்றல் மதிப்பு ஒன்றுமில்லாமல் போகிற காசுகளைப் போலவே தானும் ஒன்றும் செய்ய முடியாமல் அடைபட்டுப் கிடக்க நேர்ந்த போதாத காலத்தை எண்ணி எண்ணி நொந்தார் அவர். படிகளில் இறங்கிக் கீழே சென்றார். கால் வைத்த இடங்களில் எல்லாம் பொன்னும், மணியும் மிதிபட்டன. தான் நடக்கும் ஓசையே தன்னால் கேட்பதற்குப் பொறுமையற்ற ஒலியாக எதிரொலிப்பது போல் ஒரு பிரமை அவருக்கு உண்டாயிற்று. சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்துக்கு அருகில் காலாந்தகனைக் கொன்ற இரவை இப்போது அவர் மீண்டும் நினைத்துக் கொண்டார். வாழ்நாளிலேயே எதற்கும் நடுங்கியறியாதவருக்கு இந்தச் சமயத்தில் அந்தப் பழைய நிகழ்ச்சியை நினைக்க நேர்ந்ததால் உடம்பு புல்லரித்தது.

 

அடடா! ஓர் ஆதரவும் எட்டமுடியாத அநாதையாக அல்லவா இங்கே அடைபட்டு விட்டேன். நான் இப்படி அடைபட்டிருப்பது பைரவிக்குத் தெரிந்தால் அவளிடமிருந்து எனக்கு ஏதாவது உதவி கிடைக்கலாம். வன்னி மன்றத்திலிருக்கும் கபாலிகர்களையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு நள்ளிரவில் இந்த மாளிகையின்மேல் படையெடுத்து வந்தாவது என்னைக் காப்பாற்றிவிடுவாள். ஆனால் அவளுக்கு இதை யார் போய்த் தெரிவிப்பார்கள்! இனிமேல் இந்த நிலவறைக்கு வெளியே உள்ள உலகத்துக்கு நான் செத்துப் போய் விட்டதுபோலத்தான். ‘நான் இன்னும் வாழ்கிறேன் சாகவில்லை - என்பதை உலகத்துக்கு நிரூபிப்பதற்கு இனி என் கையில் என்ன இருக்கிறது?’

இப்படித் தனக்குள் என்னென்னவோ எண்ணியபடியே சிறைபட்ட புலியைப் போலச் சுற்றிச் சுற்றி அந்த நிலவறையில் நடந்தார் அவர். எது நடக்கவில்லையோ அது நடந்திருந்தால் என்னவென்று எண்ணிப் பார்க்கும் பொய்க்களிப்பிலும் அவருடைய மனம் ஈடுபட்டது, பெருநிதிச் செல்வரின் மனைவியும் வானவல்லி முதலிய பெருமாளிகைப் பெண்களும் அப்போது முத்துக்களுக்காக நிலவறைக்குள் வந்திராவிட்டால், தானே பெருநிதிச் செல்வரை இப்போது தன்னை அவர் அடைத்துப் போட்டிருப்பது போல அடைத்துப் போட்டு விட்டோ அழித்துப் போட்டுவிட்டோ வெளியேறியிருக்கலாம் என்று எது நடக்கவில்லையோ அதை நினைத்தார் நகைவேழம்பர். அப்படி அவரைத் தான் அடைத்து விட்டுத் தப்பியிருந்தால் இந்த நிலவறையின் இருண்ட மூலையில் அவர் என்னென்ன எண்ணித் தவிப்பார் என்று எதிரிக்குத் துன்பங்களைப் புனைவித்துக் கற்பனை செய்யும் பொய்ச் சுகத்தில் சிறிது நேரம் வரை தன்னில் மறந்திருந்தார் அவர். குருட்டுக் கற்பனையாகக் கண்ணை மூடிக்கொண்டு இப்படி எண்ணியவாறே நிலவறையில் இருளில் நடந்தபோது எதிரே ஆள் உயரத்திற்கு நின்ற ஐம்பொன் சிலையில் தன் நெற்றிப் பொட்டு இடித்து விண் விண் என்று தெரிக்கும் வலியோடு அலறினார் அவர். அந்தக் குரூரமான அலறல் ஒலி சுழன்று சுழன்று செய்த பாவங்கள் செய்தவனையே திரும்ப அணுகுவது போல் நிலவறைக்குள்ளேயே எதிரொலித்தன. நெற்றியில் இரத்தம் கசிந்தது. புருவ மேடுகள் வலி பொறுக்க முடியாமல் துடித்தன. இரண்டு கைகளாலும் நெற்றியை அப்படியே அழுத்திக் கொண்டு கீழே உட்கார்ந்தார் அவர்.

தான் அப்படி எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தோம் என்று அவருக்கே தெரியாது. நடுவில் ஒரே ஒருமுறை நிலவறையின் மேற்பக்கத்தில் கதவு திறக்கப்பட்டு திறக்கப்பட்ட வேகத்திலேயே மூடப்படுவது போல் ஓசை கேட்டது. அப்போது அவருக்கிருந்த வலியின் வேதனை களில் அந்த ஓசையையும் பொருட்படுத்தத் தோன்றவே இல்லை. அப்படியே கதவு திறக்கப்பட்ட ஓசையைப் பொருட்படுத்தத் தோன்றியிருந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்துவதற்குள் கதவு மூடப்படுகிற விரைந்த ஓசையும் கேட்டிருக்கும். அவர் பொருட்படுத்தியதற்குப் பயன் ஒன்றும் கிடைத்திராது.

 

சிலையில் மோதி இடித்த இடத்தில் நெற்றிமேடு அப்பமாக வீங்கியிருந்தது. தளர்ந்த நடையில் ஒவ்வொரு படியாக மேலே ஏறி மீண்டும் கதவருகே அவர் சென்ற போது சிறிது நேரத்திற்கு முன் கதவு விரைவாகத் திறந்து மூடுவதுபோல் ஓசை கேட்டதன் காரணம் அந்த இடத்தில் அவருக்கு விளங்கிற்று. அங்கே கதவுக்குக் கீழே இருந்த முதற்படியின் மேல் ஒரு மண் மிடா நிறையச் சோறும் பக்கத்திலேயே இன்னொரு மண் கலயத்தில் குடிப்பதற்குத் தண்ணிரும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் அவை அங்கு அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையையும் பார்த்தபோது நகைவேழம்பருக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

எனக்குச் சோறு ஒரு கேடா?” என்று கத்திக் கொண்டே படிமேல் ஏறி நின்று அந்த மண் கலயத்தையும் மிடாவையும் காலால் ஓங்கி உதைத்தார் அவர். அவை படிகளில் உருண்டு உடைந்து சிந்திச் சிதறின. அந்த சமயத்தில் மேலே பெருநிதிச் செல்வர் யாரிடமோ பேசிவிட்டு இரைந்து சிரிக்கிற ஒலியைக் கேட்டு அவருடைய கொதிப்பு இன்னும் அதிகமாகியது. அந்தச் சிரிப்பு தன் செவிகளில் கேட்க முடியாத தொலைவுக்கு ஓடிப்போய்விட வேண்டுமென்று அவர் நிலவறைப் படிகளில் கீழே இறங்குவதற்குத் தாவியபோது உடைந்த மிடாவிலிருந்து அங்கே சிதறியிருந்த சோறு அவர் காலில் பட்டு நன்றாகச் சறுக்கிவிட்டது.

-------------

 

மணிபல்லவம் -நான்காம் பருவம்

15. பாவங்களின் நிழல்

 

நகைவேழம்பர் நிலவறைக்குள்ளே படிப்படியாய் வீழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பெருநிதிச் செல்வர் மேலே மாளிகைக்குள் தன் மகள் வானவல்லியிடம் மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

நீ நல்ல காரியம் செய்தாய் பெண்ணே! என் குறிப்பைப் புரிந்துகொண்டு நீ திரும்பிவிடாமல் நிலவறைக்குள் இறங்கி வந்ததனால்தான் நான் இவ்வளவும் செய்ய முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் நீதான் இன்று என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்.”

எங்களுக்காக நகைவேழம்பர் முத்துக்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது நீங்கள் நிலவறை யிலிருந்து ஒசைப்படாமல் வெளியேறுவதற்கு முன்நான் போகிறேன். நீங்களும் முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தாமதமின்றி உடன் மேலே ஏறி வந்துவிடுங்கள் என்பதுபோல் எனக்குச் சைகை செய்தீர்களே; அப்போது தான் உங்கள் குறிப்பும் நோக்கமும் எனக்கு நன்றாகப் புரிந்தது அப்பா. நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது அந்த மனிதரிடமிருந்து விலகித் தப்பிச் சென்றுவிட எண்ணுகிறீர்கள் என்று நான் ஒருவாறு அனுமானித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. என்னோடு வந்திருந்த தோழிப் பெண்களையும், அம்மாவையும் இழுத்துக்கொண்டு நான் படியேறி மேலே திரும்பி வருகிறவரை எனக்கும் பயம்தான். நாங்கள் எல்லாரும் மேலே வந்து சேர்ந்தவுடன் கதவருகே காத்திருந்த நீங்கள் நிலவறையை மூடிய பின்புதான் எனக்கு நிம்மதியாக உயிர்ப்பு வந்தது அப்பா!”

நிலவறைக்குள் நீங்கள் எல்லாரும் முத்துத் தேர்ந்தெடுக்க நுழைகிறவரை அங்கே எனக்கு உயிர்ப்பே இல்லை வானவல்லி! நான் எதையோ நினைத்து அந்தக் குருடனை நிலவறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றேன். கடைசியில் அது வேறுவிதமாக மாறி என் உயிரையே நான் இழக்கும்படி நேரும்போல ஆகிவிட்டது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவனுடைய கோபத்தை அவன் இழக்கும்படி செய்ய வேண்டுமானால் அதைவிட அதிக மதிப்புள்ளவற்றையும் நான் அவனுக்காக இழந்துவிடத் துணிவதுபோல அவனுக்கு எதிரே ஒரு போக்குக் காட்ட வேண்டும். அவன் ஆத்திரப்படும்போது எல்லாம் நான் இப்படிப் போக்குக் காட்டித்தான் அவனுடைய ஆத்திரத்தைத் தனித்துப் பழையபடி அவனை என்னுடைய நன்றிக்கு அடிமை யாக்கிக் கொள்வது வழக்கம். இன்றும் அதே முறையை மேற்கொள்ளத்தான் அவனை இந்த மாளிகையின் செல்வங்கள் எல்லாம் குவிந்திருக்கும் நிதியறையான நிலவறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றேன். ஆனால் இன்று அவனுடைய ஆத்திர நோய்க்கு என்னுடைய பழைய மருந்து பொருந்திக் குணம் தரவில்லை. என்னுடைய தந்திரங்களே தம் ஆற்றலில் நலிந்து போய் மிக நல்ல சமயத்தில் என்னைக் கைவிட்டு விட்டன. நான் விழிப்பாயிருக்கத் தவறிவிட்டேன். ‘நம்முடைய வழக்கமான பழைய தந்திரங்களில் அவற்றுக்கு ஆளாகிறவர்கள் சந்தேகப்படத் தொடங்கி விட்டார்கள் என்று அறியும்போதே நாம் புதிய தந்திரங்களுக்கு மாறிவிட வேண்டும் என்று அரச தந்திரிகளுக்குச் சொல்லியிருக்கிற இரகசியத்தை என்னைப் போன்ற வாணிகர்களும் கடைப்பிடிக்கலாம் பெண்ணே! நான் எதற்காக இப்படியெல்லாம் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டும் சூழ்ச்சிகளுக்கு ஆளாகியும் துன்பங்களையும் அடைகிறேன் என்று புரியாமல் உங்களுக்கெல்லாம் என்மேல் சந்தேகம் உண்டாகலாம். ஆனால் என் வாழ்க்கை இவற்றில்தான் கிடக்கிறது. இவற்றால் தான் நடக்கிறது. இவற்றால்தான் முடியவும் போகிறது என்று மகளிடம் உணர்ச்சி குமுறக் குமுறப் பேசினார் பெருநிதிச்செல்வர்.

அதுவரை எதிரே நின்று கேட்டுக்கொண்டிருந்த வானவல்லிக்கு இப்போது தந்தையாருடைய முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. தான் அவரிடமிருந்து கேட்கக் கூடாததும், கேட்க வேண்டாததுமாகியவற்றைக் கேட்பதாக உணர்ந்து அஞ்சினாள் அவள். ஆனால் அவரோ நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார்.

 

சிறு வயதில் நீ கற்றிருக்கிற அற நூல்களும், நீதி நூல்களும் இவற்றையெல்லாம் பாவம் என்று உனக்குக் கற்பித்திருக்கும். ஆனால், உலகத்தில் தோன்றியிருக்கிற அறநூல்கள் எல்லாம் எவை எவைகளைப் பாவங்களாகச் சொல்லியிருக்கின்றனவோ அவைகளோடு மட்டும் உலகிலுள்ள பாவங்களின் எண்ணிக்கை முடிந்து விடுவதாகத் தெரியவில்லை. எத்தனை எத்தனையோ புதிய பாவங்கள் வளர்கின்றன. பெண்ணே! நான் எல்லாவகைப் பாவங்களிலும் அழுந்தி நிற்கிறேன். இன்னும் விரும்பிச் செய்வதற்குப் புதிய பாவங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன். அப்படித்தான் என்னால் இருக்க முடியும். ஆனால் இந்தக் குருடனைப் போல் எனக்கே பாவங்களைச் செய்கிறவனை என்னால் மன்னிக்க முடியாது. உலகில் கழுத்து வரை பாவங்களில் அழுந்திக் கொண்டு நின்றாலும் - நான் தான் பிறரை அழித்துக்கொண்டு நிற்க வேண்டும். என்னை யாரும் அழித்துவிட முயலக்கூடாது. இது என் வாழ்க்கையின் இரகசியம்.”

வெறி முற்றுவதுபோல் பேச்சு வளர வளரத் தந்தையின் முகம், கண்களில் குருதியை உமிழ்ந்து கொண்டே எதிரே வந்து நிற்கும் பேயின் முகம் போல மாறித் தெரிவதைக் கண்டு வானவல்லி அங்கிருந்து உடனே ஓடிவிட வேண்டும்போல அவ்வளவு அதிகமாக அச்சமடைந்தாள். அவர் கூறிக்கொண்டு வருகிறவைகள் எல்லாம் தனக்கு எச்சரிக்கையா, பயமுறுத்தலா, அல்லது ஆத்திரத்தில் விளைகிற வெறும் பேச்சா என்று புரிந்துகொள்ள முடியாமல் மனம் குழம்பினாள் அவள். இதற்கு முன்பு என்றும் அவளிடம் அவர் இப்படிப் பேசியதில்லை. இப்படித் தன்னிடம் பேசுவதில் அவருடைய பலம் தெரிகிறதா, பலவீனம் தெரிகிறதா என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. கேட்கிறவரைச் சிந்திக்கவிடாத விரைவுடன் வெள்ளமாகப் பாய்ந்து வருகிற முரட்டுப் பேச்சாக இருந்தது அது. பேச்சு நிற்கிற இடைவெளியாக வாய்க்கும் சில கணங்களிலும் இடியிடியென்று கொடிய பேய்ச் சிரிப்புச் சிரித்தார் அவர். தன் தாயும் தோழிகளும் அந்தப்புரப் பகுதிக்குச் சென்றபோது தானும் அவர்களோடு வெளியேறிப் போய்விடாமல் அவரோடு தங்கியது தவறு என்று இப்போதுதான் வானவல்லி உணர்ந்தாள்.

அவர் எவனோ ஒரு ஊழியனை வரவழைத்துச் சோறும் நீரும் கொண்டு வரச்செய்து நிலவறைக் கதவை மெல்லத் திறந்து உள்ளே வைத்துவிட்டு மூடியபோதும் அவள் அவரருகே தான் இருந்தாள். அடுத்துச் சிறிது நாழிகைக்குப் பின் உள்ளே நிலவறையில் சோற்று மிடாவும் நீர்க்கலயமும், உடைபடுகிற, ஒசையும், தொடர்ந்து வேறு பல ஓசைகளும் கேட்டபோதும் கூட அவள் அவரோடுதான் இருந்தாள். நிலவறையிலிருந்து அந்த ஒசை மேலே ஒலி மங்கிய விதத்தில் கேட்கும் போதெல்லாம் தந்தையின் முகத்தில் உணர்ச்சிகள் மாறிவருவதையும் வானவல்லி கூர்ந்து கவனித்தாள். அவரைப் புரிந்துகொள்ள அவளால் முடியவில்லை. விதம் விதமாக மாறினார் அவர்.

அடிபட்ட நாயாய் உள்ளே சிறைப்பட்டுக் கிடந்து உடம்பில் கொழுப்பு வற்றி எலும்பும் தோலுமாய்க் காய்ந்துபோய் மறுபடி இந்த நிலவறையிலிருந்து வெளியேறும்போது, இவன் நான் விடுகிற மூச்சுக் காற்றில் தடுமாறி விழ வேண்டும். மறுபடி என்னிடம் ஆத்திரப்பட்டு என்னை எதிர்ப்பதற்கு இவனிடம் ஆத்திரமோ, வலிமையோ மீதமிருக்கக் கூடாது. அப்படிக் காய வைத்தால்தான் புத்தி வரும் இந்தக் குருடனுக்கு!”

இவ்வாறு பேசிக்கொண்டே வந்த தந்தையார் தாம் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தின் வாயில் நிலையருகே இருந்த தமது ஊன்றுகோலைப் பார்த்து விட்டு அதை எடுப்பதற்காகக் காலைச் சாய்த்து நடந்து விரைந்ததைக் கண்டு தானே முந்திச் சென்று எடுத்து வந்து அதை அவர் கையில் கொடுத்தாள் வானவல்லி. அதைப் பெற்றுக்கொள்ளும்போது அவருடைய கைகள் நடுங்கின. அப்படி நடுங்குவதை அவர் மறைத்துக் கொள்ள முயன்றும் வானவல்லி கூர்ந்து பார்த்துத் தெரிந்துகொண்டாள்.

இந்த ஊன்றுகோல் ஒன்றுதான் நான் மெய்யாக நம்ப முடிந்த துணை பெண்ணே! சில சமயங்களில் மனிதர்களை மட்டும் நம்பிக்கொண்டு காலூன்றி நிற்க முடிவதில்லை. முதல் வசதி மனிதர்களைப் போல் இதற்கு மனம் இல்லை. மனம் இருந்தால் இதுவும் எனக்கு எதிராக முயன்று ஏதாவது செய்து என் காலை இடறிவிட முயன்றாலும் முயலலாம் என்று வான வல்லியிடம் சொல்லிக்கொண்டே வேறு புறமாகத் திரும்பி அந்த ஊன்றுகோலின் பிடியை மெல்லத் திருகினார் பெருநிதிச்செல்வர். அதுதான் சமயமென்று வானவல்லி அங்கிருந்து நழுவிவிட முயன்றாள். அவள் அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவதற்குத் தவிக்கிறாள் என்பதை ஏற்கெனவே தெரிந்து வைத்துக் கொண்டிருந்தது போல்இரு போகலாம் என்றார் அவர். தந்தையார் ஊன்றுகோலின் கைப்பிடியை ஏதோ செய்துகொண்டு தன் பக்கம் திரும்பிப் பார்க்காமலே இப்படிக் கூறியதைக் கேட்டபோது அவருடைய கட்டளையை மீறிப் பயந்து அங்கேயே நின்றுவிடுவதா என்று சிந்தித்தபடி நின்ற இடத்திலேயே சிறிது தயங்கினாள் வானவல்லி.

அப்போது அவரே ஊன்றுகோலின் பிடியைத் திருகி அழுத்திக்கொண்டு அவள் பக்கமாகத் திரும்பினார்.

பெண்ணே! நில், நீ போவதற்கு ஒன்றும் அவசரமில்லை. சற்று முன்பு இந்த ஊன்றுகோலைப் போல மனமும் சிந்தனையும் இல்லாத பொருள்கள் யார் காலையும் இடறிவிடாமல் ஊன்றி நின்றுகொள்ளத் துணை புரியுமென்று கூறினேனே! அதுவும் தவறான கருத்துத்தான். இப்படிப் பொருள் கூடச் சில சமயங்களில் நிற்கத் துணை புரியாது காலை இடறி ஏமாற்றி விடுகின்றன. இதோ பார்!” என்று கூறி, அந்த ஊன்று கோலை வீசி எறிந்தார். அது பிடி வேறு, தண்டு வேறாகக் கழன்று பிரிந்து விழுந்தது. அப்போது வானவல்லி சீற்றம் கொதிக்கும் அவருடைய முகத்தில் பாவங்களின் நிழலை எல்லாம் பார்த்தாள்.

--------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

16. கனவை வளர்க்கும் கண்கள்

 

ஏக்கறுதல் என்ற தமிழ் வார்த் தைக்குப் பொருள் ஆசையால் தாழ்தல் என்று இளமையில் தனக்கு இலக்கியங்களைக் கற்பித்த புலவர் கூறியிருந்ததை இன்று நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி. நன்றாக முற்றிக் கனிந்த முழுமையான கனியைப்போல இந்த வார்த்தையில் நிரம்பியிருக்கும் பொருளை எல்லாம் இன்று அவள் உணர்ந்தாள். ஆசைக்கு உரிய பொருள் மேலே மேலே எட்ட முடியாத உயரத்துக்கு விலகிப் போகும் போது அதன்மேல் ஆசை வைத்தவர்கள் கீழே தாழ்ந்துதான் போய் விடுகிறார்கள். முன்பு இருந்த இடத்தினின்று தணிந்து கீழே சரிவது தான் தாழ்வு என்பதில்லை. இது நமக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படும் இலக்கு எதுவோ அது நம்மினும் மேலே உயர்ந்து விட்டாலே நமக்குத் தாழ்வு தான் என்று தன் குறையை உணர்கிற மனநிலையோடு கையிலிருந்த ஏடுகளையெல்லாம் பட்டு நூலில் கட்டிச் சுற்றி வைத்து விட்டு ஏக்கப் பெருமூச்சு விட்டாள் சுரமஞ்சரி.

அவளுக்கு எதிரே மேற்குப் புறத்துப் பலகணியின் முன் மாடத்துக்கு அப்பால் அந்தி வானம் செந்தழல் பரந்து, அதில் சிறிது சிறிதாய் மஞ்சளும் கலந்து கொண்டிருந்தது. நான்கு காத தூரம் பரந்து கிடக்கும் அந்தப் பெரிய பூம்புகார் நகரத்தில் ஒவ்வொரு மாலைப் போதும் யார் யாருடைய வாழ்க்கையில் என்னென்ன மாறுதல்களை எல்லாம் உண்டாக்குகின்றனவோ! அவளைப் பொறுத்தவரை ஒரு மாறுதலும் இல்லை. அவளுடைய காலை நேரம் அந்த மாடத்தின் கிழக்குப் பக்கத்துப் பலகணியில் பிறக்கிறது. மேற்குப் பக்கத்துப் பலகணியில் முடிந்துவிடுகிறது. இவற்றுக்கு இடையே தான் அவளுடைய ஆசைகளும் அவளும், ஏங்கி ஏக்கற்றுக் கொண்டிருக்கும்படி நேர்ந்துள்ளது. காலையில் தான் கற்ற கவிதையில் வந்த உவமை இப்போது அவளுக்கு மீண்டும் நினைவு வந்தது.

வில்லில் இருந்து புறப்பட்டுப் பாய்ந்து கொண்டிருக்கிற அம்பின் நிழலைப்போல இந்த வாழ்வின் வேகத் திற்கு இடையே சுகங்களும் தோன்றித், தோன்றிய வேகத்திலேயே அழிந்து கொண்டிருக்கின்றன.

தோன்றுவதாவது, அழிவதாவது? தோன்றினால் தானே அழிய முடியும்? என்னுடைய வாழ்க்கையில் நான் ஆசைப்படுகிற சுகங்கள் இன்னும் தோன்றவே இல்லையே! கிழக்குப் பக்கத்திலிருந்து தெரியும் ஒளி மேற்குப் பக்கத்தில் ஓடி மறைவதற்குள் இந்தச் செல்வச் சிறைக்குள் எத்தனை சுகங்கள் தோன்றிட முடியும்? ‘நான் மட்டும் கவியாகப் பிறந்திருந்தேனானால் இப்போது உங்களுடைய துக்கங்களை யாரிடம் போய்ச் சொல்ல வேண்டுமோ அவரிடம் போய் அழகிய உவமை உருவங்களோடு சொல்லிவிடுவேன் அம்மா!’ என்று வசந்தமாலை குறைப்பட்டுக் கொள்கிறாள். இங்கே எனக்குச் சுகம் இல்லை. சுகத்தைப் பற்றிய நினைவுகளும் ஏக்கங்களுமே நிறைய இருக்கின்றன. நினைவே அநுபவமாகிவிடாது. ஏக்கமே, எதற்காக ஏங்குகிறோமோ அதை அடையும் முயற்சியாகி விடாது. நினைப்பதும் ஏங்குவதும், மனத்தின் பசிக்கு அடை யாளங்கள். அவற்றாலேயே மனம் நிரம்பிவிடாது என்று எண்ணியபடியே எழுந்துபோய் நகரத்தின் பல பகுதிகள் கண் பார்வையில் படுகிறாற்போல் மாடத்தின் முன்புறம் நின்றுகொண்டு நோக்கினாள் சுரமஞ்சரி.

அவளுடைய பார்வையில் தன்னைப் போலவே யாருக்காகவோ ஏங்கி அழுவது போலத்தான் அந்த நேரத்தில் மேற்குத் திசை வானமும் தெரிந்தது. பக்கத்து வீதியாகிய அரச வீதியின் மாளிகை ஒன்றிலிருந்து யாரோ ஓர் இசைக் கலைஞன் வேய்ங்குழலில் சோகத்தைப் பேசும் நோதிறப் பண்ணை வாசித்துக் கொண்டிருந்தான். தன் மனத்தில் ஏங்கி ஏக்கற்றுத் தவிக்கும் சோகத்தையும், மேற்கு வானில் காட்சியாய்ப் புலப்பட்ட சோக அழகையும், அந்தக் கலைஞனுடைய குழலிசை சாட்சியாய் நின்று பேசுவது போல் தோன்றியது சுரமஞ்சரிக்கு. மாடத்தின் உட்புறம் தூப கலசங்களில் நெருப்பிட்டு அகில் தூவிக் கொண்டிருந்தாள் வசந்தமாலை. அந்த நறுமணப் புகைச்சுருள்களும் காற்றில் கலந்து வந்தன. முல்லையும் மல்லிகையுமாகத் தான் சூடிக் கொள்ள வேண்டும் என்று கொடுத்தனுப்பப் பட்டிருந்த பூக்களைச் சூடிக்கொள்ளும் விருப்பமில்லாமல் அப்படியே மஞ்சத்தின் ஒரு மூலையில் வீசி எறிந்திருந்தாள் அவள். அந்தப் பூக்களின் நறுமணமும் எழுந்து பரவிற்று இப்போது.

போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கும் இளம் பருவத்து வீரனைப் பல ஆயுதங்களோடு பல முரட்டு எதிரிகள் ஒன்று சேர்ந்து கொண்டு தாக்குவதுபோல் அந்த இசையின் சோக இனிமையும், மாலையின் அந்தி மயக்கமும், பூக்களும் அகிலும் பிறப்பித்த நறுமணமும், சொந்த மனத்தின் பசிகளும் ஒன்று சேர்ந்து தன்னைத் துன்புறுத்துவதை அவள் உணர்ந்தாள், தவித்தாள், பின்பு உருகினாள்.

அப்படியே அந்த மாடத்தின் கோடியில் அது முடியும் இடத்திலிருந்து பறந்துபோய் அதற்கு அப்பால் உள்ள உலகத்தில் தன் மனம் விரும்புகிற ஒர் இடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. பேதைப் பருவம் முடிந்து நினைவு தெரிந்த பெண்ணாய் வளர்ந்துவிட்ட பின் தன் மனத்தில் அழுத்தமாய் ஏற்பட்டிருந்த பொதுவான கர்வமும், செல்வச் செருக்கும், அழகுத் திமிரும் இன்று படிப்படியாகக் குறைந்து, ‘தானும்கூட ஆசைப்பட்டு நிறை வேற்றிக்கொள்ள வேண்டிய குறை ஒன்று உண்டு என்று ஏங்குகிற அளவுக்குத் தன் மனம் தாழ்ந்திருப்பது அவளுக்கே புரிந்தது. ஆசையால் தாழும்போது கர்வத்தால் உயர முடியாதென்றும் இந்த அநுபவம் அவளுக்குப் புரிய வைத்திருந்தது.

பெண்ணின் அழகு பற்றிய செருக்கு அவளுடைய காதலால் அழிந்துபோகிறது. ஆணின் பெருமிதம் பற்றிய செருக்கு அவனுடைய மெய்யுணர்வாலும் பக்தியாலும் அழிந்து போகிறது என்று சொல்லப்படுகிற தத்துவத்தை முன்பெல்லாம் சுரமஞ்சரி ஒப்புக்கொண்டதில்லை. ‘வீரமும் செல்வமும் பற்றிய காரணங்களால் ஆண் பிள்ளைக்கு வருகிற செருக்கு வேண்டுமானால் பக்தியால் அழியலாம். பெண்ணின் அழகு பற்றிய செருக்கு அவளிடமிருந்து என்றும் அழியாது என்று சுரமஞ்சரி எண்ணிக் கொண்டிருந்த எண்ணம் இப்போது மெல்லத் தேய்ந்து போய்விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பழைய இந்திர விழாவின்போது கடற்கரை மற்போரில் இளங்குமரனைச் சந்தித்த நாளிலிருந்து இந்த வருடத்து இந்திர விழாவில் அவரையே மீண்டும் நாளங்காடிச் சொற்போரில் சந்தித்தது வரை உள்ள நீண்ட காலத்தில் தன்னுடைய செருக்குப் படிப்படியாகத் தேய்ந்திருப்பது அவளுக்குத் தெரிந்தது.

காற்றில் வந்த வேய்ங்குழலிசை அவளுடைய சோகத்தை மேலும் வளர்த்தது. துயரங்களை மறப்பதற்காகத்தான் அவள் காவியங்களையும், இலக்கியங்களையும் கற்க விரும்பினாள். அவற்றிலிருந்தும் அதே துயரம் பிறந்த போதுதான் அவள் பொறுமை இழக்கும்படி ஆயிற்று. தன்னுடைய கண் பார்வை செல்ல முடிந்த தொலைவு வரை நகரத்தின் தோற்றத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி. மாலைப் போதின் இருள் கவிழ்ந்த அழகு நகரின் தோற்றத்தில் தெரிந்தது. அந்த நகரத்தில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் தன்னுடைய இளம் வயதிலிருந்து அவள் திரும்பத் திரும்பப் பலமுறை பார்த்திருக்கிறாள். கவேரவனம் என்ற சோலையையும், உய்யான வனம் என்னும் தோட்டத்தையும் தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்த்திருக்கிறாள். உய்யான வனமும், கவேர வனமும் பார்க்கக்கூடாதவை என்று தடுக்கப் பட்டவை. இல்லாவிட்டால், அவற்றையும் சுற்றிப் பார்க்கிற வாய்ப்பை அவள் முன்பே அடைந்திருக்க முடியும். அப்படியெல்லாம் பலமுறை பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருந்தாலும் இன்று இப்படி அடைபட்டுக் கிடக்கிறபோது இன்னும் எதையோ பார்ப்பதற்கு விட்டு வைத்திருப்பது போலவும், அதை உடனே போய்ப் பார்த்துவிட வேண்டும் போலவும் அவள் மனம் குறுகுறுப்பு அடைந்தது. இந்தக் குறுகுறுப்புத் தன் மனத்தில் அப்போது ஏற்படுவதன் காரணம்தான் அவளுக்கே விளங்கவில்லை.

எந்தப் பொருளின் மேலாவது அளவுகடந்து ஆசைப்படும்போது இப்படி விடுபட்டுப் பறக்க வேண்டும் போலத் தவிப்பது மனத்தின் இயல்பா? அல்லது ஏக்கத்தின் விளைவா?’ என்று முடிவு கிடைக்காத சிந்தனையில் அழுந்தி நின்றாள் அவள்.

நினைவுகளால் மனத்தின் பசி தணிவதில்லை. நினைவுகள்தாம் பசியை வளர்க்கின்றன. நினைவுகளே பசியாகவும் செய்கின்றன. நினைவுகள் எதை அடையத் தவிக்கின்றனவோ, அதை அடைகிற அநுபவம்தான் மனத்தின் பசிக்கு உணவு என்று எண்ணிக் கொண்டே இருள் பரவத் தொடங்கியிருந்த நகரிலிருந்து தன் கண்களையும், சோகம் பரப்பிக் கொண்டிருந்த குழலிசை யிலிருந்து தன் செவிகளையும் விடுவித்து மீட்டுக் கொண்டு அவள் உள்ளே திரும்பியபோது பூக்களின் மணமும், அகிற்புகையின் வாசனையும் முன்னைக் காட்டிலும் அதிகமாக நெருங்கிக் கொண்டு பரவி அவளைத் தாக்கின.

 

பரிபூரணமான இசையின் விளைவு அழுகையாயிருக்கிறது. நல்ல மணங்களை உணரும்போது ஆழ்ந்த துயரங்கள் நினைவு வருகின்றன. உயர்ந்த கவிதைகளின் பொருள் புரியும் போது மனத்தில் ஏக்கம் பிறக்கிறது. மறைகின்ற கதிரவனையும் மேற்கு வானத்தையும் காணும்போது உலகத்தின் கடைசிக் காட்சியைப் பார்ப்பதுபோல் எண்ணங்களில் ஒர் அநுதாபம் பொங்குகிறது. நான் இன்று மட்டும் இவற்றை உணர்கிறேன். எல்லாக் காட்சியிலிருந்தும், எல்லா உணர்விலிருந்தும் ஆழ்ந்த துயரத்தைத் தவிர வேறொன்றையும் பெற முடியாத துர்ப்பாக்கியவதியாக இப்படி நான் எப்போது மாறினேன்?’

சிந்தனையில் இப்படி ஆயிரம் எண்ணங்கள் சேர்ந்தும் பிரிந்தும் தவித்திட விளக்குச் சுடர்களைத் தணித்துவிட்டு மங்கலான இருளைப் பரவச் செய்து கொண்டபின் மஞ்சத்தில் சாய்ந்து படுத்தாள் சுரமஞ்சரி. பொற்பேழை நிறைய நெய் அதிரசங்களும், பல்சுவைப் பணியாரங்களும், பழங்களும், வற்றக் காய்ச்சிய பாலும் கொண்டு வந்து வைத்துக்கொண்டு சுரமஞ்சரியை உண்ணுவதற்கு அழைத்தாள் தோழி வசந்தமாலை.

தோழி! நீ கொண்டு வந்திருக்கும் உணவுகள் என் மனத்தின் பசியை ஆற்றுவதற்குப் பயன்படாதவை. இவற்றைக் கொண்டுபோய்விடு. எனக்கு இவற்றில் விருப்பமில்லை. இந்த மஞ்சத்தில் சாய்ந்துகொண்டு இப்படியே ஏதாவது மனதிற்குப் பிரியமான நினைவு களை எல்லாம் நினைக்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. நன்றாகத் தூங்கியும் விடாமல் நன்றாக விழித்துக் கொண்டுமிராமல் எவையேனும் நினைவுகளில் மிதக்க ஆசைப்படுகின்றேன் நான் என்று தோழிக்கு மறுமொழி கூறினாள் சுரமஞ்சரி. தோழி இதைக் கேட்டு மறுபேச்சுப் பேசாமல் திரும்பிப் போய்விட்டாள்.

சுரமஞ்சரி இரண்டு புறக்கண்களையும் மூடிக் கொண்டு மனக்கண்களால் தான் விரும்பிய முகத்தையும் எண்ணங்களையும் காணலானாள். சில நாழிகைகளில் அப்படியே சோர்ந்து போய்த் தூங்கியும்விட்டாள். அவளுடைய அந்தத் தூக்கத்தில் அதற்கு முந்திய நினைவுகளோடு தொடர்புடைய கனவு ஒன்று நிகழ்ந்தது.

ஆலமுற்றத்துக் கோவிலில் முல்லையும் இளங்குமரனும் அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள். முல்லை இளங்குமரனுடைய கழுத்தில் மணமாலை சூட்டுவதற்காகத் தன் பொற்கரங்களை உயர்த்துகிறாள். அப்போது தொலைவிலிருந்து தானும் ஒரு மணமாலையோடு சுரமஞ்சரி இளங்குமரனை நோக்கி ஓடி வருகிறாள். முல்லையின் கைகள் இளங்குமரனை நெருங்க நெருங்கச் சுரமஞ்சரியின் இதயம் வேகமாகத் துடிக்கிறது. இளங்குமரனுக்கும் முல்லைக்கும் நடுவே தான் ஆற்றல் குறைந்து சிறியவளாகி விட்டதுபோல் நம்பிக்கை தளர்ந்தும், ஆசை தளராமல் நெஞ்சம் பதற ஓடி வருகிறாள் அவள்.

 

முல்லை சூட்டுவதற்கு இருக்கும் மாலை அவனுடைய தோள்களில் படியும் முன்பு அவன் சற்றே திரும்பித் தான் ஓடி வருவதை ஒருமுறை பார்க்கவாவது வேண்டும் போலத் தவித்தாள் சுரமஞ்சரி.

இளங்குமரனின் அழகிய கண்களைச் சந்திக்க அவளுடைய கண்கள் விரைந்து முந்துகின்றன.

அவளுடைய ஆசை வீண் போகவில்லை. முல்லை யின் மாலையை ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு இளங்குமரனே திரும்பிச் சுரமஞ்சரி ஓடி வருவதைப் பார்த்துவிடுகிறான். அப்படி பார்க்கும்போது அவனுடைய கண்களே சிரிப்பது போன்ற குறிப்புடன் அவளைப் பார்க்கின்றன. அந்தக் கண்களின் பார் வையைச் சந்தித்ததும் மேலே ஓடுவதற்கு முடியாமல் அவள் அப்படியே நாணி நிற்கிறாள். அவளுடைய ஆசைக் கனவுகளை அவனுடைய அந்தக் கண்களே வளர்க்கின்றன. இந்தச் சமயத்தில் யாரோ வந்து சுரமஞ்சரியின் தோளைத்தொட்டு அவளை எழுப்பினார்கள். அவளுடைய கனவு கலைந்தது.

-----------

 

மணிபல்லவம் -நான்காம் பருவம்

17. வாழும் பேய்கள்

 

படிப்படியாக வீழ்ச்சி என்று சொல்வார்களே அந்த வீழ்ச்சியை இன்று ஒரே நாளில் நகைவேழம்பர் அடைந்து விட்டார். சறுக்கி விழ நேர்வது உண்டுதான். ஆனால் இவ்வளவு உயரத்திலிருந்து சறுக்கி விழுந்திருக்கக்கூடாது. முழங்கால்களிலும், கைமூட்டுகளிலும் பலமான அடிகள் பட்டிருந்தன. இடுப்பிலோ, காலிலோ எங்கோ மிகவும் பலமான அடிபட்டிருந்ததென்றும் அவரால் உணர முடிந்தது. உடலில் வார்த்தைகளால் அளவிட்டு உரைக்க முடியாத சோர்வு தெரிந்தது. நிலவறையின் கடைசிப் படிக்கும் கீழே நிலைகுலைந்து உருண்டு விழுந்த போது அவருடைய கண்முன் எல்லாம் தலைகீழாகச் சுழல்வது போலத் தெரிந்தது. வலது கால் பாதத்தை அழுத்தி ஊன்றிக்கொண்டு உந்தி எழுந்திருக்க முயன்றார் அவர். எழ முடியவில்லை.

ஆண்டுக் கணக்கில் பிணியுற்று முடங்கிக் கிடந்தது போல் உடம்பு வலித்தது. இரண்டு கால்களில் ஏதோ ஒன்றில் எலும்பு முறிந்திருக்குமோ என்று பயமும் நடுக்கமும் பிறந்த போது கருங்கல்லாய் இறுகிப் போயிருந்த அந்தக் கொடியவருக்குக் கூடக்கோவென்று கதறி அழுதுவிட வேண்டும் போல் வருத்தமாக இருந்தது. முழங்கால்களில் இரத்தமும் கசியத் தொடங்கி விட்டது. இதே பெருநிதிச் செல்வரின் மாளிகைக்குக் கீழே உள்ள இரகசியச் சிறைக்கூடங்களிலும், கொடிய விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் காராக்கிருகங்களிலும் இப்போது தான் வைக்கப்பட்டிருப்பது போலப் பலரைப் பல சமயங்களில் முன்பு தன் கைகளாலேயே தள்ளி அடைத்ததையெல்லாம் வரிசையாக நினைத்துப் பார்த்தார் நகைவேழம்பர். நாய்க்குச் சோறு வைப்பது போல் இன்று தனக்குச் சோறும் நீரும் வைக்கப் பட்டதைத் தான் கேவலமாக எண்ணுவது போலத் தானே அவர்களும் அன்று எண்ணித் துடித்திருப்பார்கள் என்று ஞாபகம் உண்டாயிற்று அவருக்கு.

அப்போது தான் நிதியறையின் படிகளிலிருந்து மட்டும் சறுக்கியிருப்பதாக அவர் நினைக்கவில்லை. வாழ்க்கையில் தன்னுடைய எல்லா நம்பிக்கைகளி லிருந்துமே சறுக்கியிருப்பதாகத் தோன்றியது. மனைவி, மக்கள், உள்ளம், உறவு எதுவுமே இல்லாமல் யாருக்காக இவ்வளவு கொடுமையாக வாழ்ந்தோம் என்று நினைத்துப் பார்க்க முயன்றார் அவர். கொடுமையாக வாழ்ந்தோமா அல்லது பொய்யாக வாழ்ந்தோமா என்று தனக்குத்தானே அவர் கேட்டுக்கொண்ட கேள்வி இரண்டு பிரிவுகளாகக் கிளைத்தது. இந்த விநாடி வரையில் என்னென்ன பாவங்களையும், கொடுமை களையும் நான் செய்திருக்கிறேன் என்று தனக்குத் தானே பிரித்து எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே அவருக்கு ஏற்படவில்லை. காரணம் தான் செய்யாமல் எஞ்சிப் போகும்படி விட்ட பாவம் ஒன்றுமில்லை என்று அவருக்கே தெரிந்திருந்தது!

அவர் தன் மனத்தில் தனக்குத்தானே கேட்டுக் கொண்ட இரண்டு கேள்விகளுக்கு விடையே கிடைக்க வில்லை. ‘இதுவரை நல்லதாக என்ன செய்தோம்? கெட்டதாக என்ன செய்யவில்லை இந்த இரண்டு கேள்விகளுக்கும், ‘ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை!’ என்பதைத் தவிர வேறு பதில் ஏதும் அவருடைய மனத்திலிருந்து எழவே இல்லை.

தன்னுடைய பெயரின் பொருளுக்குச் சிறிதுகூடப் பொருத்தமில்லாமலே தான் வாழ்ந்திருப்பதாக நினைவு வந்தது அவருக்கு. நகைவேழம்பர் என்றால் பிறருக்குச் சிரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்குகிற பரியாசகர் என்று தான் காவிரிப் பூம்பட்டினத்துக் கூத்தரங்கங் களிலும், நாடகக் கலைஞர்களிடையேயும் பொருள் படுவது வழக்கம். தானும் எப்போதோ ஒரு காலத்தில் அப்படிச் சில ஆண்டுகள் இருந்ததைக் கடந்த காலத்துக் கழிவிரக்கமாக அவரால் நினைத்துக்கொள்ள முடிந்தது. இப்படி மாறியபின்பு தன் பழைய பெயருக்கு ஏற்பத் தான் யாருக்கும் சிரிப்போ மகிழ்ச்சியோ ஏற்படுத்தியதாக அவருக்கு ஞாபகம் இல்லை.

பூம்புகாரின் பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் சந்திக்கிற நாளங்காடியின் கலகலப்பான இடத்தில் கூத்தரங்கம் ஒன்றில் அவர் புகழ்பெற்ற நகைச்சுவை வேழம்பராக இருந்த காலம், அதிலிருந்து மாறியபோதே பொய்யாய்ப் போய்விட்டது. பெருநிதிச் செல்வரோடு தொடர்பும் பழக்கமும் ஏற்பட்ட பின் வஞ்சகப் பேயாய்த் தான் வாழ்ந்த கொடிய வாழ்க்கையும் இன்று இப்படி அடைபட்ட பின்னர் இந்த விநாடியிலிருந்து பொய்யாய்ப் போய்விட்டது.

 

இப்படி எத்தனை எத்தனை பொய்கள்? படியிலிருந்து உருண்டு விழுந்ததும் காலை ஊன்றி எழ முடியாமல் போனபோது சென்ற விநாடிவரை கால் ஊன்றி நடந்ததும் பொய்யாய்ப் போய்விட்டது. நடந்தவை எல்லாம் பொய்யாகவும் நடக்கின்றவை யெல்லாம் உண்மையாகவும், நடக்க இருப்பவை யெல்லாம் சந்தேகங்களாகவும், தன் வாழ்க்கையே மாற்றிக்கொண்டு தாம் என்றிருந்தோ கெட்டுப்போய் விட்ட கொடுமையை நினைத்து நினைத்துக் கண்ணிர் வற்றுகிறவரை அழ வேண்டும்போல் இருந்தது அவருக்கு. இந்த ஏலாமையும் பயமும்கூடச் சில கணங்கள்தான் நீடித்தது. மனம் சபலப்பட்டு மாறி மறுபடியும் கொடுமையில் நம்பிக்கை வந்த கணத்தில் காலை ஊன்றி எழுந் திருந்துவிட முயல்வதும், ‘எழ முடியவில்லை. எலும்பு முறிந்துதான் போயிருக்கிறது என்று உணர்கிற கணத்தில் அழுது விடுவதுபோல் தளர்வதுமாக அந்த நேரத்தில் அந்த நிலவறையில் கணத்திற்குக் கணம் பொய்யா யிருந்தது நகைவேழம்பருடைய காலம்.

இனிமேலும் தனக்கு சமயமும் பொருத்தமாக வாய்த்து உடம்பிலும் வலிமையிருந்தால் அந்த வாய்ப்பைத் தவறவிடாமல் எதிரியைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று இப்போது கூட வைரமாகவும் கொடுமையாகவும் நினைப்பதற்கு அவரால் முடிந்தது. ஆனால் எரியுண்டு போன படகில் பட்ட தீக்காயங்களும், கடலில் நெடுந்தொலைவு நீந்தி வந்த களைப்பும், பசியும், படிகளில் பயங்கரமாகச் சறுக்கி விழுந்த வேதனையும் சேர்ந்து தனக்குக் கெடுதல் செய்ய வேண்டிய கெட்ட கோள்கள் எல்லாம் இனி உன்னை இப்படியே விடமாட்டோம் என்று ஒன்றாகச் சேர்த்து வந்து வளைத்துக் கொண்டு விட்டாற்போல் அவரை மலைப்பு அடையச் செய்திருந்தன. அவர் வீழ்ந்து விட்டார். இப்போது நிச்சயமாக வீழ்ந்தே விட்டார்.

நிதியறையின் எதிர்ப்புறத்திலிருந்து இருளடைந்த சுவர் திடீரென்று பிளப்பது போலவும் அந்தப் பிளவிலிருந்த ஒரு புலி பயங்கரமாகப் பாய்ந்து கொண்டு வருவது போலவும், அந்தப் புலியே அருகில் வரும்போது பெருநிதிச் செல்வராக மாறிவிடுவது போலவும் பிரமையான பொய்க் காட்சிகள் அவர் கண்ணில் தெரிந்தன. தானும் புலியாக மாறி எதிர்த்துப் போராடுவதுபோலக் கற்பனை செய்ய முயன்றார் அவர்.

மரணாவஸ்தை மரணாவஸ்தை என்று சொல் கிறார்களே, அது இப்படித்தான் இருக்குமோ?’ என்று அப்போது நினைக்கத் தோன்றியது நகைவேழம்பருக்கு. இப்படி நினைத்தபோது தன்னைச் சுற்றிலும் காலனின் கொடிய பாசக் கயிறுகள் சுழன்று சுழன்று வீசப்பட்டு விழுவது போலவும், தான் அந்தக் கொடிய பாசத்தில் சிக்கிக்கொண்டு விடாமல் தப்பித்துவிட உடனே முயல வேண்டும் போலவும் அவருக்குத் தோன்றியது. பதறி எழுந்து அங்கிருந்து ஓடிவிடும் நோக்கத்துடன் வலது கால் பாதத்தைப் பதித்து ஊன்றி மேலே எழ முயன்று மறுபடி கீழேயே விழுந்தார் அவர்.

 

அப்படி விழுந்ததும் அவருக்கு முன்னைவிடத் தளர்ச்சி பெருகியது. முழங்கால்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். தொட்ட இடத்தில் இரத்தம் பச்சையாகப் பட்டுக் கை நனைந்தது. பாவத்தைத் தொடுவதுபோல் அவருக்கே அருவருப்பாக இருந்தது அப்போது.

உன் உயிரைக் கொடுத்துவிடு! இனிமேல் நீ வாழ்வதைக்கூடப் பொய்யாக்கி விட வேண்டும் என்று யாரோ பேய்க் கூச்சல் இட்டுக்கொண்டே வந்து தன் கழுத்தை இறுக்குவது போல் இருந்தது அவருக்கு.

அந்த விநாடியில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மெய்யா, பொய்யா என்று புரியாமல் அவர் உடல் நடுநடுங்கி, நினைவிழப்பது போலத் தலை சாய்ந்தார். இருட்டில் அடைபட்டுக் கிடந்த வெளவால் ஒன்று தன் சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு அவருடைய தலைக்குமேல் பறந்துவிட்டு மீண்டும் தன்னுடைய பழைய இடத்தில் போய்த் தலைகீழாகத் தொங்கியது.

-------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

18. சோற்றுச் செருக்கு

 

தந்தையார் கீழே எறிந்த ஊன்றுகோல், பிடி வேறு, தண்டு வேறாகக் கழன்று விழுந்தபோது, ‘இப்படிப் பொருள் கூடச் சில சமயங்களில் நிற்கத் துணை புரியாது. இடறி என்னை ஏமாற்றி விடுகின்றன என்று அவர் கூறிய வார்த்தைகளுக்கு நேரான பொருள் வானவல்லிக்குப் புரிந்தது. ஆனால் அந்த வார்த்தைகளில் அடங்கியிருப்பதாக அவள் சந்தேகப்பட்ட ஏதோ ஒரு குறிப்புப் பொருள் மட்டும் அவளுக்குப் புரியவேயில்லை.

ஊன்றி நிற்பதற்குப் பயன்படவில்லை என்பதை அப்படிச் சொல்லுகிறாரா? அல்லது அதில் இருப்பதாக அவர் நம்பிக்கொண்டிருந்த வேறு பயன் ஒன்று இல்லாமற் போய்விட்டதை அப்படிச் சொல்கிறாரா?’

ஒன்றும் புரியாமல் மருண்டு நின்ற வானவல்லி முதலில் நினைத்தது போலக் கூடிய விரைவில் அவர் முன்னிலையிலேயிருந்து தப்பிச் சென்றுவிட வேண்டு மென்றுதான் மீண்டும் நினைத்தாள். சுற்றிலும் நெருப்புக் கனலும் நீற்றறையில் நிற்பது போல இப்போது அங்கே நின்றாள் அவள். அவருடைய கோபத்துக்கு அப்படி ஓர் ஆற்றல் உண்டு என்பதைப் பலமுறை கண்டு உணர்ந்திருக்கிறாள் அவள். அந்தக் கோபம் சூழ்நிலையையே மாற்றி அமைத்துவிடும். கோடை வெயிலைப் போல் அதற்கு ஆளாகிற எல்லாரையும் வாட்டிவிடும். கொடுமையான வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வெயிலில் நிற்கிறவர்கள் அங்கிருந்து நிழலைத் தேடி உடனே ஓடிப்போய் விடுவதற்குத் தவிப்பதுபோல் அவர் கனன்று சீறும்போது அதற்கு ஆளாகிறவர்களும், சுற்றி இருப்பவர்களும், அதிலிருந்து விலகி ஓடிவிடத் தவிப்பது உண்டு.

அவருக்கு முன்னால் இப்போது வானவல்லியும் அப்படித்தான் தவித்துக்கொண்டு நின்றாள். அவளு டைய தவிப்பைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது புரிந்துகொண்டே புரியாதது போலவோ அவர் மேலும் பேசினார்.

மகளே, நான் நம்பிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் என்மேல் அவநம்பிக்கை உண்டாவதைப் போன்ற அறிகுறிகள் சிறிது காலமாக எனக்குத் தெரிகின்றன. இதே நிலைமை இப்படியே வளருமானால் நான் இனிமேல் எப்படி மாறுவேன் என்று உறுதி சொல்ல முடியாது. என்றாவது ஒருநாள் இப்படியே இந்தப் பெருமாளிகைக்கு நெருப்பிட்டுக் கொளுத்திவிட்டு இங்குள்ள எல்லாரும் அழிந்தது தெரிந்தபின் நானும் அழிந்து சாக வேண்டியதுதான். எல்லாவற்றையும் அழித்து ஒழித்து நிர்மூலமாக்கிவிட்டு நானும் அழிய வேண்டும். நான் அழியும்போது இங்கு எதுவும் அழிக்கப் படாமல் மீதமிருக்கக் கூடாது. இன்ன பொருளை இன்ன இடத்தில் வைத்திருக்கிறோம் என்று நான் நம்பிக் கொண்டிருந்தவை எல்லாம் எனக்குத் தெரியாமலே இடம் மாறியிருக்கின்றன. யாரிடத்தில் எல்லாம் பொதியமலை சரிந்தாலும் சரியாதென்ற உறுதியோடு நான் நம்பிக்கை வைத்திருந்தேனோ அவர்களிடத்திலேயே அது இல்லை என்று இப்போது தெரிகிறது. எங்கெல்லாம் மிகவும் மதிப்பும் பெறுமானமும் உள்ள பொருள்களைப் பொதிந்து வைத்திருந்தேனோ அங்கெல் லாம் அவற்றைக் காணவில்லை. இதோ கீழே சுழன்று விழுந்து கிடக்கின்றதே, இந்த ஊன்றுகோலின் தண்டுக்கும், பிடிக்கும் நடுவே உள்ள குழலில் நான் வைத்திருந்த அரும் பெரும் பண்டம் ஒன்றையுமே இப்போது இதில் காண முடியவில்லை மகளே!”

ஆத்திரமாகப் பேசிக் கொண்டே வந்தவர் அதையெல்லாம் சொல்வதற்கும் கேட்கச் செய்வதற்கும் அவள் தகுதியுடையவள் இல்லை என்பதைத் திடீரென்று உணர்ந்து கொண்டு விட்டதைப் போலப் பேச்சை நடுவிலேயே நிறுத்தினார். அதுவரை தாம் பேசியிருந்த பேச்சுக்களால் மகளுடைய முகத்தில் என்னென்ன உணர்வுகள் விளைந்திருக்கின்றன என்பதை அவளே பார்த்துவிட முடியாத வேகத்தில் அவளுடைய முகத் திலிருந்து தான் பார்த்துத் தெரிந்து கொண்டு விரைவாய்க் கீழே குனிந்து ஊன்றுகோலையும் பிடியையும் எடுத்துத் திருகினார் அவர்.

வானவல்லி அந்த நேரத்தைத் தான் வெளியேறிச் செல்வதற்கு அவர் கொடுத்த அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து மெல்ல நழுவினாள். அவரும் அவளைத் தடுக்கவில்லை. அப்போது அவருக்கும் வேறு வேலைகள் அவசரமானவையாகவும் அவசியமானவையாகவும் செய்வதற்கு இருந்ததனால் அவள் அங்கிருந்து போவது பற்றி நினைக்கவோ கவலைப்படவோ விரும்பவில்லை அவர்.

 

அவள் சென்றதும்ஊன்றுகோலில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த ஐம்படைத் தாலியை யார் அதிலிருந்து எடுத்திருக்க முடியும்?’ என்ற சிந்தனையில் அவர் மூழ்கினார். அந்தப் பொருள் அவ்வளவு பத்திரமாக அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் உண்மை தன்னைத் தவிர இன்னும் ஒரே ஒருவருக்குத் தான் தெரியும் என்ற ஞாபகம் அவருக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையையே மாற்றித் தள்ளிவிடக் கூடிய பெரிய இரகசியங்களுக்கு அடையாளமான அந்த ஐம்படைத் தாலி இந்த ஊன்றுகோலுக்குள் வைக்கப்பட்ட போது நான் என் இரு கண்களால் பார்த்ததைத் தவிர இன்னும் ஒரு கண் மட்டும் பார்த்திருக்கிறது. அந்தப் பொருள் இதனுள் வைக்கப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்து இப்போது திருடியிருக்க முடியுமானால் அப்படித் திருடியவன் அந்த ஒரு கண்ணுக்கு உரியவனா கத்தான் இருக்க வேண்டும். கற்பூரக் கப்பலைத் தேடிக் கொண்டு கடற்பயணம் செல்வதற்குமுன் சுரமஞ்சரியை பயமுறுத்தி மருட்டுவதற்கு ஓர் அடையாளமாக இதை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் இருட்டில் அவள் மாடத்திலே வைத்து விட்டு வந்தவனும் அந்த ஒற்றைக் கண்ணுக்கு உரியவன்தான். ஏதோ திட்டமிட்டு என்னைக் கவிழ்த்துவிடும் எண்ணத்தோடுதான் அவன் அந்த ஐம்படைத் தாலியை இதற்குள்ளேயிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும். அதை இதிலிருந்து வெளியேற்றுவதற்கும் என் உயிரையே உடம்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் அதிக வேறுபாடில்லை. இந்த ஊன்றுகோல் யாரை மருட்டுவதற்காக அந்த மாடத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்ததோ அந்த மாடத்திலிருந்தவர்களுக்கு இதைப் பிடி வேறு தண்டு வேறாகக் கழற்ற முடியும் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லாதபோது அவர்கள் அதை இதிலிருந்து வெளியே எடுத்திருப்பார்களோ என்று நான் சந்தேகப்படுவதற்கும் இடமில்லை.

சந்தேகமில்லாமல் இது நகைவேழம்பருடைய வேலைதான். இந்த ஐம்படைத் தாலியும் அதைப் பற்றிய உண்மைகளும் அவரால் வெளிப்படுத்தப் பெறுவதற்கு முன்னால் அவருடைய உயிரையே இந்த உலகத்தி லிருந்து நான் முதலில் வெளிப்படுத்தி விட்டால் என்ன?’ என்று கொடுமையாகவும், குரூரமாகவும் முதிர்ந்து நின்று நினைத்தார் பெருநிதிச் செல்வர். இப்போது அந்த ஒற்றைக்கண் வேங்கை தன்னிடம் வகையாக மாட்டிக் கொண்டு அடைபட்டிருப்பதால் தான் நினைப்பதைச் செய்வது சாத்தியமானதே என்று நம்பினார் அவர்.

இந்த அவசரமான தீர்மானத்திற்கு வந்தவுடனே பெருமாளிகையில் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான காவலன் ஒருவனைக் கூப்பிட்டு, “நீ இப்போது உடனே புறப்பட்டுப்போய் மருவூர்ப் பாக்கத்து அலைவாய்க் கரையில் உள்ள யவனப்பாடியில் இருக்கும் நாகர்குலத்து மறவனான அருவாளனை இங்கே அழைத்துக் கொண்டு வரவேண்டும். இன்று கதிரவன் மறையும் போதுக்குள் நீ அவனோடு திரும்பி இங்கே வர முடியாவிட்டால் உன்னால் எனக்கு ஒரு பயனும் இல்லை. சம்பாபதி வனம், சக்கரவாளத்துக் காடுகள், காவிரிக்கரை நாணற் புதர் எங்கெல்லாம் தேட முடியுமோ அங்கெல்லாம் தேடி அருவாளனைக் கண்டு பிடித்து இங்கே திரும்பி வரும்போது அவனோடு வா. அவன் இல்லாவிட்டால் வராதே...” என்று உறுதியான கட்டளையாகச் சொல்லி அனுப்பினார் பெருநிதிச் செல்வர். அவருக்கு அந்தரங்கமானவனாகிய அந்த காவலன் உடனே அதைச் செய்வதற்குப் புறப்பட்டான்.

அவனை அனுப்பிவிட்டுச் சிந்தனைக்குரிய பல சந்தேகங்களை மாற்றி மாற்றி நினைத்துப் பாதி பயமும் பாதி அவநம்பிக்கைகளுமாகக் குழம்பினார் அவர். நிம்மதி சிறிதும் இல்லாமல் என்னென்னவோ எண்ணிப் பரபரப்படைந்திருந்தன அவருடைய உணர்வுகள்.

என் பயம் வீணானது. காரணமற்றது. பொய்யானது. இன்னும் ஆயிரம் நகைவேழம்பர்கள் எனக்கு எதிராக மாறினாலும் அந்தக் காலாந்தகன் மறுபடி உயிரோடு பிழைத்து வந்தாலும் என்னை என்ன செய்து விட முடியும்? செத்தவர்கள் பேயாக மாறி வேண்டுமானாலும் வரலாம். பிழைத்து வர முடியாது. இது தெரிந்தும் நான் ஏன் பதறுகிறேன்? என் உடல் எதற்காக நடுங்குகிறது?’ என்று எண்ணி எண்ணி மாய்ந்தபடியே வெளியே சென்றிருக்கும் காவலன், நாகர் குலத்து அருவாளனை அழைத்து வருவதையே எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர். அப்போது வேறு எந்த வேலையையும் செய்வதற்குப் பொறுமை இல்லை அவருக்கு. பட்டினப் பாக்கத்தில் வானளாவ நிமிர்ந்து நிற்கும் தன்னுடைய அந்த மாளிகை ஒவ்வோரடுக்காகச் சரிவது போல் அவருடைய மனக்கண்ணில் அழிவைக் குறிக்கிற பொய்த் தோற்றங்கள் வரிசையாய்த் தோன்றின.

அன்று மாலை இருட்டுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னால் அவர் அனுப்பியிருந்த காவலன் நாகர் குலத்து அருவாள மறவனோடு திரும்பி வந்துவிட்டான். இறைச்சி மலையாக வளர்ந்திருந்த அந்த முரட்டு நாகன் பெருநிதிச் செல்வருடைய அந்தரங்க அறையில் நுழைந்து அவரை வணங்கிவிட்டுப் பணிவாக எதிரே நின்றான். அவனை அழைத்து வந்த காவலனை அங்கிருந்து வெளியே போய்விடுமாறு குறிப்புக் காட்டினார் பெருநிதிச் செல்வர். காவலன் வெளியேறியதும் மாச பர்வதமாக வந்து நின்ற அருவாளனை நெருங்கி மெல்லிய குரலில் அவனை வேண்டிக்கொண்டார் அவர்.

அருவாளா! நீண்ட நாட்களுக்கு முன்னால் ஓர் இந்திர விழாவில் நானும் நகைவேழம்பரும் உன்னை ஒரு காரியத்துக்குத் துண்டிவிட்டு அனுப்பினோம். சம்பாபதி வனத்து இருளில் அந்த முனிவரையும் அவருடைய வளர்ப்புப் பிள்ளையையும் எமனுலகுக்கு அனுப்பிவிடச் சொல்லி நாங்கள் உன்னை அனுப்பிய காரியம் அன்று உன்னால் நடைபெறவில்லை. இருந்தும் இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு உன்னை நான் மீண்டும் இங்கே அழைத்திருக்கிறேன். இன்று நான் உன்னைச் செய்யச் சொல்லி வேண்டிக்கொள்ளப் போகிற செயல் உன் நிலையில் உனக்கு மிகவும் சிறியது தான். ஆனால் என் நினைப்பில் அது மிகவும் பெரியது, அவசியமானது. அவசரமானது. அதை நீ செய்வதற்கு மறுக்கக்கூடாது.”

 

அருவாளன் தன்னுடைய பயங்கரமான உருட்டு விழிகளால் விழித்து அவரைப் பார்த்துவிட்டுச் சிறிது நேரம் தயங்கியபின் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்து மறுமொழி கூறினான்.

ஐயா! என்னுடைய இந்த உடம்பில் இருக்கிற செருக்கு எதுவோ அது நீங்கள் எனக்கு அளித்தது. நீங்கள் வளர்த்தது. உங்களுடைய சோற்றுச் செருக்கால் நிமிர்ந்து நிற்கிற நான் உங்கள் கட்டளையை மறுப்பேனா?”

நீ நான் சொல்லுவதற்கு ஒப்புக்கொண்டால் மட்டும் போதும். என்னுடைய உதவிகளுக்கு என்னிடமே நன்றி சொல்ல வேண்டாம். என்னால் உதவி பெற்றவர்கள் என்மேல் நன்றியுடையவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நான் சமீப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டேன் அருவாளா! என்னுடைய சோற்றை நான் யார் யாருக்கு எல்லாம் இட்டேனோ அவர்கள் என்னை எதிர்க்கும் செருக்கைத்தான் அடைந்திருக்கிறார்களே ஒழிய என்னைக் காக்கும் செருக்கை அடைந்திருப்பதாக நானே நம்பவில்லை. நான் இட்ட சோறு அதைத் தின்பவர்களிடம் நன்றியை வளர்த்திருக்கும் என்பதில் எனக்கே நம்பிக்கை இல்லை. நீ மெய்யாகவே என்னைப் புகழ்ந்தாலும் இப்போதுள்ள என் மனநிலையில் உன் புகழ்ச்சியை நான் போலியானதென்றே நினைப்பேன். இன்று காலையிலிருந்து எனக்கு என் மேலேயே நம்பிக்கை இல்லை...”

நிறைய மனக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள் போல் தோன்றுகிறது ஐயா! இப்படிப்பட்ட நிலையில் உங்களை நான் இதற்கு முன்பு சந்தித்ததே இல்லை. உங்கள் அந்தரங்க நண்பர் நகைவேழம்பர் அருகில் இருந்தால் இப்படி உங்களைக் கவலைப்பட விட் டிருக்கமாட்டாரே? அவர் இப்போது எங்கே?” என்று அருவாளன் கேட்டான்.

இப்போது என்னுடைய கவலையே அவர் இங்கு இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதைப் பற்றிய கவலைதான் அருவாளா! அவர் இருப்பதுதான் எனக்குக் கவலை. என் கவலை தீர வேண்டுமானால் அவர் இல்லாமல் தொலைய வேண்டும்!” என்று கூறிவிட்டு அந்தக் கூற்றைக் கேட்கிறவனின் முகத்து விளைவை அறிவதற்காக அருவாளனுடைய கொடிய முகத்தைக் கூர்ந்து பார்த்தார் அவர். அருவாளனுடைய முகத்தில் திகைப்பும் சந்தேகமும் தெரிந்தன.

நான்தானா இப்படிப் பேசுகிறேன் என்று என்மேல் சந்தேகப்படாதே, அருவாளா! இன்று இரவு நடு யாமம் முடிவதற்குள் இந்த நகரத்தில் ஓர் உயிர் உன் கையால் குறைய வேண்டும். அப்படிக் குறைகிற உயிர் என் கவலையைத் தீர்க்கிற உயிராகவும் இருக்க வேண்டும். அந்த உயிர் போகும்போது என் கவலையும் போய்விட வேண்டும்.”

அருவாளன் மெளனமாக அவரையே பார்த்துக் கொண்டு நின்றான். இரும்புப் பலகை போன்ற அவனுடைய பரந்த மார்பு மேலெழுந்து விரிந்து விம்மி தணிந்தது. அவர் அவனுடைய அந்த மெளனத்தைப் பொறுக்க முடியாமல் அவனைச் சீறிக் கோபித்துக் கொண்டார்.

ஏன் இன்னும் மெளனமாக இருக்கிறாய்? இப்போது மட்டும் நான் அளித்த சோற்றுச் செருக்கு உன்னிடமிருந்து எங்கே போய் ஒளிந்து கொண்டது?”

இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் அவன் தலை தாழ்ந்தது. இந்தக் கேள்வியினால் அவன் மடக்கப்பட்டு விட்டான் என்பதைச் சொல்வது போல அவனுடைய முகபாவமும் மாறியது.

செய்கிறேன், ஐயா! செய்கிறேன். நீங்கள் எதைச் சொல்லுகிறீர்களோ அதைச் செய்து உங்களிடமிருந்து நான் பெற்ற சோற்றுச் செருக்குக்கு நன்றி செலுத்தி விடுகிறேன்...” என்று ஆவேசத்தோடு அவருக்குப் பதில் கூறினான் அவன்.

----------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

19. சாவதற்குத் தந்த வாழ்வு

 

அருவாளனுடைய சம்மதம் பெருநிதிச் செல்வருக்கு நிறைந்த நிம்மதியை அளித்தது. அவர் விருப்பத்தைச் செயலாக்க அவன் முன் வந்ததில் அவருக்குப் பரம திருப்தி ஏற்பட்டிருந்தது.

நல்லது! உன்னுடைய நன்றி யிலாவது நான் நம்புவதற்கு இன்னும் இடம் இருக்கிறது. என்னிடம் நீ தின்ற சோறு என்னை ஆதரிக்கும் செருக்கைத்தான் உனக்குத் தந்திருக்கிறது. என்னையே எதிர்க்கும் செருக்கைத் தரவில்லை. போய்விட்டு உன் கூட்டாளியோடு இன்றிரவு நடு யாமத்துக்கு இரண்டு நாழிகை இருக்கும்போது திரும்பவும் இங்கே வா. முதலில் உன் கையில் ஒப்படைத்து அப்புறம் எமன் கைக்கு மாற்ற வேண்டிய உயிரை இப்போது இந்த மாளிகையின் நிதியறையில்தான் அடைத்து வைத்திருக்கிறேன். இன்றிரவு அந்த உயிருக்கு அதன் உடம்பிலிருந்து விடுதலை அளித்துவிடலாம் என்று கூறி அருவாளனுக்கு விடை கொடுத்து அனுப்பினார் பெருநிதிச் செல்வர். அவர் கூறியபடி நள்ளிரவுக்கு முன்னால் மறுபடி அங்கே வருவதாக ஒப்புக் கொண்டு புறப்பட்டுச் சென்றான் அருவாளன்.

அங்கிருந்து அவன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்தில் தன்னுடைய இன்னொரு சந்தேகத்தையும் உடனே தீர்த்துக் கொண்டுவிட எண்ணியவராய்ச் சுரமஞ்சரியைச் சிறை வைத்திருந்த மாடத்துக்கு ஏறிச் சென்றார் அவர். அப்போது அந்த மாடமும் அதன் பகுதிகளும் வழக்கத்தை மீறிய அமைதியோடு இருந்தன. மாடத்தின் உட்பக்கம் சுரமஞ்சரியோ வசந்தமாலையோ பேசிக்கொள்ளும் ஒலிகூடக் கேட்கவில்லை. இருவரும் அந்த முன்னிரவு வேளையிலேயே தூங்கியிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவர் கதவைத் தட்டினார். சிறிதுநேரம் வரை அவருக்கு ஒரு பதிலும் இல்லை. மறுபடியும் அவர் முன்னைவிடப் பலமாகத் தட்டிய போது வளைகுலுங்கும் ஒலியோடு யாரோ நடந்து வந்து கதவைத் திறந்தார்கள்.

கதவைத் திறந்தவள் தோழிப் பெண்ணாகிய வசந்த மாலை என்று தெரிந்ததும்சுரமஞ்சரி அதற்குள் உறங்கி விட்டாளா பெண்ணே?” என்று அவர் அவளிடம் கேட்டார். தன்னை அந்த நேரத்தில் அங்கே கண்டு அந்தத் தோழிப் பெண் பயந்து நடுங்குவதை அவர் பார்த்தார். தனக்குப் பதில் சொல்வதற்குக் கூட நா எழாமல் அவள் அச்சம் கொண்டு திகைத்துப் போய் நிற்பதைப் பொறுக்க முடியாமல் மறுபடி அதே கேள்வியை முன்னினும் உரத்த குரலில் கேட்டார் பெருநிதிச் செல்வர். அந்தக் குரல் அவளை மேலும் நடுநடுங்கச் செய்தது.

இதோ தலைவியை எழுப்புகிறேன் என்று கூறிக் கொண்டே சுரமஞ்சரி தூங்கிக் கொண்டிருந்த மஞ்சத்தருகே சென்று மெல்ல அவளுடைய தோளைத் தொட்டு எழுப்பினாள் வசந்தமாலை. அப்படி எழுப்புவதற்கு முன் தூங்கும் தன் தலைவியின் முகத்தை அவள் பார்த்த போது அந்த முகம் உறக்கத்திலும் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அச்சிரிப்புக்குக் காரணமான ஏதோ ஒர் இனிய கனவு தலைவிக்குக் கிடைத்திருக்க வேண்டும் எனப் புரிந்தது வசந்தமாலைக்கு. அப்படிப்பட்ட கனவிலிருந்து அவளை வலிய எழுப்பும் துன்பமான செயலைத் தன் கைகளால் தானே செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடு தலைவியை எழுப்பினாள் தோழிப் பெண். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்த சுரமஞ்சரி முற்றிலும் விழிப்புக் கொள்ளாத அரைகுறை உறக்கத்தில், “வசந்தமாலை! அவருடைய கண்களில் என்னுடைய கனவுகள் வளருகிறதடீ என்று வாய் சோர்ந்து எதையோ முன்னும் பின்னும் தொடர்பின்றி அரற்றினாள். தலைவி அரற்றும் அந்தச் சொற்கள் கதவருகே வந்து நிற்கும் பெருநிதிச் செல்வரின் செவிகளில் கேட்டுவிடக் கூடாதே என்று பயந்த வசந்த மாலைஅம்மா! கனவைப் பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம். முதலில் நன்றாக விழித்துக் கொள்ளுங்கள்! இப்போது வாயிலில் உங்கள் தந்தையார் வந்து நின்றுகொண்டிருக்கிறார் என்று தலைவியின் காதருகே குனிந்து பதற்றத்தோடு மெல்லச் சொன்னாள். தந்தையின் பெயரைக் கேட்டதும் அந்த நேரத்தில் கேட்கக் கூடாத பேய் பூதங்களைப் பற்றிக் கேட்டுவிட்டது போலத் திடுக்கிட்டு எழுந்து நின்றாள் சுரமஞ்சரி. அவளுடைய கண்கள் பயத்தினால் மருண்டு பார்த்தன. வாயிலில் தந்தை ஊன்றுகோலுடன் வந்து குரூரமான பார்வையோடு நின்று கொண்டு, “ஒன்றுமில்லை! உனக்கு என்மேல் இருக்கிற கோபத்தில் இந்த நேரத்துக்கு நான் இங்கே தேடி வருவதே தவறு என்று நீ சீறினாலும் சீறுவாய். நான் வந்த காரியம் அவ்வளவு பெரிய சீற்றத்துக்குக் கூடத் தகுதியானது இல்லை. அது மிகவும் சிறியது! இதோ இப்படி என் பக்கமாகப் பார்! இந்த ஊன்றுகோலை உனக்கு நினைவிருக்கிறதோ?” - என்று அந்த ஊன்றுகோலை முன்னால் காண்பித்தபடி வாயிற்புறத்திலிருந்தே அவர் அவளைக் கேட்டார்.

 

அந்தக் கேள்வியைச் சிறிதும் இலட்சியம் செய்யாதவளாய் நின்றாள் சுரமஞ்சரி. ‘தான் அப்போது அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாற் போல ஒரு வெறுப்பு அவள் முகத்தில் தெரிவதை வசந்தமாலையும் பார்த்தாள். தானும் தன் தலைவியும் தெரிந்துகொள்ள வேண்டிய அருமை உண்மை ஒன்றை இந்தச் சமயத்தில் தெரிந்து கொண்டுவிட விரும்பினாள் வசந்தமாலை. உடனே அவள் மெல்ல மறுபடியும் தன் தலைவியின் காதருகே சென்று, “அம்மா! அந்த ஐம்படைத் தாலியைக் காணாமல் தவித்துக் கொண்டு தான் இப்போது இவர் பதறிப்போய் இங்கே வந்திருக்கிறார். நாம் அதைப் பற்றிய இரகசியத்தைத் தெரிந்து கொள்ள இதுதான் ஏற்ற சமயம். சிறிது நேரம் தேடிப் பார்ப்பது போல் இந்த மாடத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றிவிட்டு என்னிடமே இருக்கும் இந்த ஐம்படைத் தாலியை எடுத்து இங்கு ஏதோ ஒரு மூலையில் கிடைத்தததாகச் சொல்லி இவரிடம் கொடுத்து விடுகிறேன். அப்படிக் கொடுப்பதற்கு முன்னும் கொடுத்த பின்னும் இவர் அடைகிற உணர்ச்சிகளை நாம் இருவருமே கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று கூறினாள். தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி கூறாமல் அலட்சியம் செய்ததைப் போலவே தோழியின் இந்தத் தந்திர முயற்சியையும் அவள் அலட்சியம் செய்தாள். தலைவியின் அலட்சியத்தைத் தனக்குச் சம்மதமாகப் புரிந்துகொண்ட தோழி தன் திட்டப் படியே செய்தாள். சிறிது நேரம் பெருநிதிச் செல்வரின் பொறுமையைச் சோதித்தபின், “ஐயா! எங்களுடைய மாடத்தில் உங்கள் ஊன்றுகோல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கீழே இந்தப் பொருள் கிடந்தது. இதை உங்களிடம் கொடுத்துவிட வேண்டுமென்று பத்திரமாக நான் எடுத்து வைத்திருந்தேன் என்று அந்த ஐம்படைத் தாலியை அவரிடம் பயபக்தியோடு கொடுத்து விட்டாள் வசந்தமாலை. அப்போதும் சுரமஞ்சரி ஒன்றும் பேசாமல் தன் தந்தையையும், வசந்தமாலையையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டுதான் நின்றாள். மனத்திற்கு விருப்பமான கனவு கலைக்கப்பட்டு நனவுலகத்தின் துன்பமயமான அநுபவங்களை அந்த நேரத்திலே தான் அடைய நேர்ந்ததை வெறுத்தாள் அவள்.

பெருநிதிச் செல்வரோ அவர்கள் இரண்டு பேர்களும் தன் முகத்திலிருந்து தெரிந்து கொள்வதற்குக் காத்திருந்த உணர்ச்சிகளைச் சிறிதளவும் தன்னிடம் தெரியவிடாமல் சர்வசாதாரணமாக அந்த ஐம்படைத் தாலியைத் தன் கையில் வாங்கிக்கொண்டு நின்றார். வாங்கிக் கொண்ட விதத்திலும் வாங்கிக் கையில் வைத்துக் கொண்ட விதத்திலும் எந்த அவசியமும் தெரியாத அலட்சிய பாவம் திகழ நின்றுகொண்டு ஓரிரு கணங்களுக்கு அந்தப் பொருளைப் பற்றிய நினைவையே அவர்களிடமிருந்து மறைப்பதற்காக, “இது என்ன? இந்தப் பொற் பேழை நிறையக் கொண்டு வந்து இங்கே வைத்த பணியாரங்களும் உணவும் அப்படியே இருக்கின்றன? நீங்கள் இருவருமே ஒன்றும் உண்ண வில்லையா?” என்று கவனத்தில் பட்ட வேறொரு காட்சியைப் பற்றித் தேவையைவிட அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர் போலக் கேட்டார். அவர் தங்களை அப்போது திட்டமிட்டுக் கொண்டு ஏமாற்றுகிறார் என்று சுரமஞ்சரிக்கும் வசந்தமாலைக்கும் ஓரளவு புரிந்தது. தொலைந்துபோன ஐம்படைத் தாலி திரும்பக் கிடைத்ததால் தனக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியைத் தெரியவிடாமல் செய்வதற்காகத்தான் கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டாத சிறிய விஷயமான இந்த உணவுப் பேழையைப் பற்றி அவர் விசாரிக்கிறார் என்றும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். நொடிப்போதில் எதிரே நிற்கிறவர்களுடைய ஆவலையும் மனப்போக்கையும் புரிந்துகொண்டு தாம் அதற்கேற்ப விரைந்து மாறிக்கொண்டு எதிரேயிருப்பவர்களின் உணர்வைத் தாங்கி நிற்கும் அந்தத் தந்திரத்தைப் பார்த்து வியப்பதா, பயப்படுவதா என்றே புரியாமல் மலைத்து நின்றார்கள் தோழியும் அவளுடைய தலைவியும். அப்போது அவருடைய குரல் இருந்தாற் போலிருந்து திடீரென்று உரம் பெற்று மிக வலிமையாக அவர்களை நோக்கி ஒலித்தது:

பெண்ணே! உன்னைக் காட்டிலும் உன்னுடைய தந்தைக்குப் புத்தி அதிகமாக இருக்கும் என்பதை நீ ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒர் இந்திரவிழாவின் இரண்டாவது நாள் பூத சதுக்கத்துக் கூட்டத்தில் யாரோ பிள்ளையாண்டானைக் கண்டுபிடித்து அழைத்து வந்து அவனுடைய ஓவியத்தை வரைந்து வாங்கினாய் அல்லவா? அந்த நாளிலிருந்து இன்று இந்த ஐம்படைத் தாலியைக் கீழே கிடந்ததென்று சொல்லி என்னிடம் தோழி மூலமாக எடுத்துக் கொடுக்கச் செய்யும் இந்த விநாடி வரை உன் தந்தைக்கே விருப்பமில்லாத பல காரியங்களை நீ வரிசையாகச் செய்திருக்கிறாய் என்பதைப் புரிந்துகொள். இந்த நிலையைத் தெளிவுபடுத்தி விவரமாக உனக்கு இப்போது சொல்ல முடியாதவனாக இருக்கிறேன் நான். ஆனால் சுருக்கமாக உனக்கு ஒன்று சொல்ல முடியும். இன்று உன் தந்தையின் எல்லா நினைவுகளும் எவை எவற்றை எண்ணிக் கவலையும் குழப்பமும் அடை கின்றனவோ அவற்றையெல்லாம் அப்படி உயிர்த்து எழச் செய்தவள் நீதான் என்பதைப் படிப்படியாகக் காரண காரியங்களோடு உன்னிடம் விளக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய எனக்கு இன்று நேரமில்லை. இப்படிப் பெற்று வளர்த்துப் பேணி உனக்கு நான் தந்த வாழ்வு என்னுடைய சாவுக்கு நானே இட்டிருக்கிற வித்தோ என்று நினைத்துக் கொண்டு பயப்பட வேண்டிய காலமும் வந்துவிட்டது என்று வாயிலுக்கு அப்பால் ஒரு காலும் இப்பால் ஒரு காலுமாகப் போகிற போக்கிலே பேசுவதுபோல் அவர் பேசிவிட்டுப் போன வார்த்தைகள் சுரமஞ்சரியும் அவள் தோழியும் தீர்த்துக் கொண்டு தெளிவு பெற விரும்பிய குழப்பங்களைப் போலப் பலமடங்கு புதிய குழப்பங்களை அவர்களுக்கு இப்போது அளித்துவிட்டன.

அந்த ஐம்படைத் தாலி திரும்பக் கிடைத்த நிகழ்ச்சியையே ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாக்கி விடுகிறவரைப்போல் அதற்குச் சில கணங்கள் இடைவெளியளித்து அதை மிகவும் அலட்சியம் செய்து தாங்களும் அதைச் சாதாரணமாகக் கருதத் தொடங்கி விட்ட நேரத்தில், ‘உனக்கு நான் தந்திருக்கிற வாழ்வால் எனக்கு நீ தரப் போவது சாவுதான் என்று துணிந்து அவர்களிடம் புதிர் போட்டுவிட்டுப் போயிருந்தார் அவர்.

 

அங்கிருந்து அவர் தலை மறைந்ததும், “பத்துப் பன்னிரண்டு பேரரசர்களுக்குச் சூழ்ச்சிகளைக் கற்பித்துச் சொல்லிக் கொடுக்கும் ஒரே ஓர் அமைச்சராக இருக்கிற அளவு அற்புதமான சூழ்ச்சிகளைப் பாடம் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிற ஒருவர் உங்கள் தந்தையாயிருக்கிறார் என்பதற்காக நீங்களும் பெருமைப் படலாமே அம்மா என்று சுரமஞ்சரியிடம் மெல்லச் சொல்லி சிரித்தாள் வசந்தமாலை.

-----------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

20. காளி கோட்டத்துக் கதவுகள்

 

நள்ளிரவு நெருங்க நெருங்கப் பூம்புகாரின் பட்டினப்பாக்கத்து வீதிகளில் ஓசை ஒலிகள் சிறிது சிறிதாக அடங்கி மெளனம் கவிந்து கொண்டிருந்தது. தொலைவில் எங்கோ ஒரு கூத்தரங் கத்தில் பதினாறு மாத்திரைக் கால அளவு ஒலிக்கும் மிகப் பெரிய பார்வதிலோசனம் என்ற தாளத்தை யாரோ ஆர்வம் மிக்க கலைஞன் ஒருவன் வாசித்துக் கொண்டிருந்தான். ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்த அகலமான தெருக்களில் ஏதோ பயங்கரமான காரியத்திற்குச் சங்கேதம்போல இந்தத் தாளத்தின் ஓசை எதிரொலித்து அதிர்ந்து கொண்டி ருந்தது. ‘திடுதிம்திடுதிம் என்று குடமுழாவில் இந்தத் தாளம் வாசிக்கப்படும் ஒலியைக் கேட்டபடியே இதற்கேற்ப வேகமாகப் பாதம் பெயர்த்து நடந்து பெரு மாளிகைக்குச் சென்றுகொண்டிருப்பது போல் தனிமை யான வீதியில் அருவாளனும் அவனுடைய கூட்டாளியும் மிக விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

நள்ளிரவுக்கு இரண்டு நாழிகை இருக்கும்போதே வந்துவிடுகிறேன் என்று பெருநிதிச் செல்வருக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்கைக் காப்பாற்று வதற்காகத் தன் மனம் அப்போது நினைத்துக் கொண்டு தவிக்கிற வேகத்திற்கு ஏற்பக் கால்களால் நடக்க முடியவில்லையே என்ற பரபரப்போடு போய்க் கொண்டிருந்தான் நாகர் குலத்து அருவாள மறவன்.

பிறரைப் பயமுறுத்துவதற்காகவும், கொலை செய் வதற்காகவும் நான் எத்தனையோ முறை கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறேன். ஆனால் இன்று மாலை என்னைக் கூப்பிட்டனுப்பி என்னிடம் பெருநிதிச் செல்வர் வேண்டிக் கொண்ட காரியமோ என்னையே பயமுறுத்திவிட்டதே!’ என்று அப்போது அருவாள மறவனுடைய மனம் எண்ணியது. கொடுமைக்கு எல்லாம் பெரிய கொடுமையாகிச் சூழ்ச்சிக்கு எல்லாம் பெரிய சூழ்ச்சியாகித் தங்களைப் போன்றவர்களுக்கு வழிகாட்டும் மாபெரும் கொடிய சக்தியாயிருந்த நகைவேழம்பரையே கொன்று தீர்த்துவிடச் சொல்லித் தன்னை அவர் துண்டுவதை எண்ணியபோதே அருவாளனுக்கு உடம்பு சிலிர்த்தது. வாழ்க்கையில் எதற் காகவும் பயப்படுகிற நிலை அருவாளனுக்கு இன்றுவரை ஏற்பட்டதில்லை. இவ்வளவு பெரிய பூம்புகார் நகரத்தில் இரண்டே இரண்டு பேர்தான் அவனுக்கு வியப்பையும், மலைப்பையும் உண்டாக்கியிருக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவரை அவன் இன்றிரவு தன் கையாலேயே கொல்லப் போகிறான். இந்தக் கொலையைச் செய்வதன் மூலமே மற்றொருவருக்கு நன்றி செலுத்தப் போகிறான். கடைசியில் இந்த நகரில் இனிமேல் அவனுடைய மலைப்புக்குரியவராக ஒரே ஒருவர்தான் மீதமிருக்கப் போகிறார். அந்த ஒருவர் யாரோ அவருக்கு இனி அவன் ஆட்பட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால், நீண்ட நாட்களாக அவன் அவருக்குச் செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கிறான். சோற்றுக் கடனும் நன்றிகடனும் படுவது பொருட்கடன் படுவதைவிட வேதனையானது என்று, இந்த விநாடியில் தான் செய்வதற்குப் போய்க் கொண்டிருந்த காரியத்தினால் நன்றாக உணர்ந்திருந்தான் அருவாளன். இந்த அருவருப்பும், உணர்ச்சியும் அவன் மனத்தினுள் ஏற்பட்ட கணத்தில் தொலைவாக எங்கோ ஒலித்துக் கொண்டிருந்த பார்வதிலோசனம் என்ற தாளம் குபிரென்று முன்பு ஒலித்ததை விடக் கடுமையாகிப் பெரியதாய் அதிர்ந்து பூம்புகார் நகரத்தையே கிடுகிடுக்கச் செய்வது போலப் பிரமையை உண்டாக்கிற்று. அருவாளனால் அந்த நேரத்தில் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியாத கொடுமையான ஒலியாயிருந்தது அது.

அந்த இராப்போதில் அருவாளனும் அவனுடைய கூட்டாளியும் பெருமாளிகையை நெருங்கியபோது அது நிசப்தமாயிருந்தது. அன்று மாலையில் அருவாளனை அழைத்துப் போவதற்காக வந்திருந்த அதே காவலன் பெருமாளிகை வாயிலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அருவாளனையும் அவனோடு வந்தவனையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்து அழைத்துக் கொண்டு போய் ஓசையற்ற இருண்ட மாளிகையின் முன்கூடங்களைக் கடந்து பெருநிதிச் செல்வருடைய அந்தரங்கமான பகுதியில் கொண்டு சேர்த்தான் அந்தக் காவலன்.

ஏதோ பெரிய விளைவை எதிர்பார்த்துக் காத்திருக்கிற பரந்த மெளனம்தான் அங்கு நிலவியது. அருவாளனோடு உடன் வந்திருந்த மற்றொரு நாகனை வெளியே இருக்கச் செய்துவிட்டுப் பெருநிதிச் செல்வரும் அருவாளனும் தனியே சிறிது நேரம் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். சிறிது நாழிகைக்குப் பின்பு முன்னேற்பாடாகத் திட்டமிட்ட கொலை எண்ணத்தோடு நகைவேழம்பர் அடைக்கப்பட்டிருந்த நிதி யறைக்குள் அவர்கள் மூவரும் இருண்ட நிழல்களே இருளில் படியிறங்கிச் செல்வது போலச் சென்றபோது அந்தக் காரியத்தைப் பார்க்க இரவுக்கே வெட்கமாக இருந்ததோ, என்னவோ? எங்கும் அடர்ந்து செறிந்து கொண்டு, இருளே, நாணத்தோடு இந்தச் செயலைக் கூர்ந்து கவனிப்பது போலிருந்தது அது.

 

அருவாளனும், பெருநிதிச் செல்வரும் தத்தம் கைகளில் உருவிய வாளுடனும் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறவனுடைய வரம்பில்லாத எதிர்ப்பை எந்தக் கணமும் தங்களுக்கு மிக அண்மையில் எதிர்பார்க்கிற கவனத்துடனும் நிலவறையில் இறங்கியபின் மூன்றாமவன் அவர்கள் செய்யப் போகிற காரியத்துக்கு ஒளி தருவதற்காகத் தன்னிடம் அவர்களே சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி நிலவறைக்காகக் கீழே இறங்கும் வழியில் மூன்றாவது படியிலோ நான்காவது படியிலோ நின்று கொண்டு தீப்பந்தத்தைக் காண்பித்தான்.

ஆனால் அந்தத் தீப்பந்தத்தின் ஒளி நிலவறைப் படிகளுக்குக் கீழே பரவிக் கண்களுக்குப் புலப்பட வைத்த காட்சியைப் பார்த்த பின்புதான் அருவாள னுக்கும், பெருநிதிச் செல்வருக்கும் அப்போது தாங்கள் செய்ய வேண்டிய காரியத்துக்காக எடுத்துக் கொண்ட கவனமும், அடைந்திருந்த பரபரப்பும் அனாவசியமானவை என்று புரிந்தது. அந்தச் சமயத்தில் அவ்வளவு மிகையான முயற்சி செய்து தாங்க வேண்டிய எதிர்பையோ, தாக்குதலையோ அங்கிருக்கும் எதிரியிடமிருந்து பெற வழியில்லை என்று அந்த எதிரி கிடந்த சூழ்நிலையிலிருந்தே தெரிந்துகொள்ள முடிந்தது. பெருநிதிச் செல்வர் அருவாளனின் காதருகே மெல்லச் சொன்னார்:-

இந்த ஒற்றைக் கண்ணனை எதிலும் முழுமையாக நம்பி விடுவதற்கு இல்லை. நீயும் நானும் அருகில் வருகிறவரை இப்படிச் சோர்ந்து சுருண்டு விழுந்து கிடப்பது போலப் பொய்யாகக் கிடந்துவிட்டு நாம் இருவரும் பக்கத்தில் நெருங்கியதும் திடீரென்று எழுந்திருந்து பாய்ந்தாலும் பாய்வான்; உலகத்தில் உள்ள தீமைகள் எல்லாம் இவன் நினைவிலிருந்துதான் தொடங்க முடியும் என்பதை நீ மறந்துவிடாதே அருவாளா!”

அப்போது அவருடைய இந்தச் சொற்களைக் கேட்டுவிட்டுயாரைத்தான் இந்த உலகில் நம்ப முடிகிறது!’ என்று தன் மனத்திற்குள்ளேயே நினைத்துச் சிரித்துக் கொண்டான் அருவாளன்.

இவர் விழுந்து கிடக்கிற நிலையைப் பார்த்தால் எனக்கு அப்படித் தோன்றவில்லை ஐயா! அடிபட்டு விழுந்திருப்பது போல்தான் தெரிகிறது. அதோ பாருங்கள் குருதி கசியும் காயங்கள் தெரிகின்றன. தரையிலும் குருதி வடிந்திருக்கிறது. நீங்கள் கூறிய விவரங்களிலிருந்து கடலில் கற்பூர மரக்கலம் தீப்பற்றியதால் நீந்திக் கடந்து வந்தது தொடங்கி இவர் இந்த விநாடி வரை பட்டினி கிடக்கிறார் என்றும் தெரிகிறது. ஆகவே பொய்யாக நடித்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இப்போது இவருக்கு இல்லை. உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் நீங்கள் விலகி நிற்கலாம். இவரை நான் கவனிக்கிறேன் என்று பெருநிதிச் செல்வரிடம் கூறிவிட்டுக் கீழே குனிந்து நோக்கினான் அருவாளன். பெருநிதிச் செல்வர் விலகியே நின்றார். அருவாளன் பார்த்ததில் நகை வேழம்பர் பிரக்ஞையின்றித் துவண்டு கிடந்தார். உடலில் பல பகுதிகளில் ஆழமான காயங்களும், ஊமை அடிகளும் பட்டிருந்தன. முழங்கால் முட்டியில் இரத்தம் பெருகி வடிந்து தணிந்திருப்பதைப் பார்த்துப் புரிந்து கொண்டான் அருவாளன்.

 

நகைவேழம்பருடைய முழங்காலில் அந்த இடத்தை அருவாளன் தொட்டபோது கிணற்றுக்குள்ளிருந்து மரண வேதனையோடு பேசுகிறாற் போன்ற நலிந்த குரலில் வலியோடு அவர் முனகினார். மூச்சு இன்னும் இருக்கிறது என்பதைத் தவிர அதிகமான பலம் எதுவும் அந்த உடம்பில் அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. கற்பூரத் தீயினால் காந்திப்போய்க் கருகி, எரிந்த புண்களும் அங்கங்கே அந்த உடலிலே தெரிந்தன. மூடி அவிந்து போகாமல் பார்ப்பதற்கு மீதமிருந்த ஒரே ஒரு கண்ணும் கூடத் தளர்ந்து குழிந்து வாடிச் சொருகி இமையின் கீழ் இடுங்கியிருந்தது. புண்ணைப் பார்ப்பது போல் விகாரமாகத் தோன்றிய அந்தப் பூத உடம்பின் அருகேயிருந்து விலகி மெல்ல எழுந்து நின்று கொண்டு இன்னதென்று விளக்கிச் சொல்ல முடியாத ஏதோ ஒரு மாற்றம் தன்னுடைய குரலில் ஒளிப்பதைத் தானே தவிர்த்துக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ, முடியாமல் பெருநிதிச் செல்வரிடம் பேசினான் அருவாளன்.

எந்த உயிரை இந்த உடம்பிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று இவ்வளவு முன்னேற்பாடும் திட்டமும் செய்தீர்களோ, அந்த உயிருக்குரியவர் இப்போதே முக்கால்வாசி இறந்துபோய் விட்டார் போலத் தோன்றுகின்றதே ஐயா...”

அருவாளன் கூறிய இந்தச் சொற்களைக் கேட்டு இவற்றுக்காகப் பெரிதும் மகிழவேண்டும் போல ஆசை யாயிருந்தும் கூட அருவாளனுக்குத் தெரியும்படி இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது நல்லதல்ல என்று தந்திரமாக மாற்றிக்கொண்டார் அவர்.

அப்படி முடிந்த முடிவாகச் சொல்லிவிடாதே அருவாளா! இப்படிப்பட்ட மனிதர்களுக்குச் சாவதற்கு விநாடி நேரம் இருக்கும்போதுகூட ஆவேசம் வருவதுண்டு.”

முக்கால்வாசி தனக்குத்தானே செத்துப்போய் விட்ட உயிரை மேலும் வலிந்து கொல்ல வேண்டு மென்று கருதி வாளெடுப்பது வீரமுள்ளவர்களுக்குத் தகுமா என்றுதான் நான் தயங்குகிறேன் ஐயா!” என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்த்துத் தன் முகத்தை நோக்கிய அருவாளனைத் தனது பார்வையாலேயே அளந்தார் பெருநிதிச் செல்வர். அவருடைய சந்தேகத்தைப் புரிந்துகொண்ட அருவாள நாகன் அதை மாற்றிவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு மேலே படியில் தீப்பந்தத்துடனே நின்ற தன் தோழனை இன்னும் கீழிறங்கி மிக அருகே வந்துவிடுமாறு கையை ஆட்டி அழைத்தான்.

சந்தேகமும் அவநம்பிக்கையும் இரட்டைப் பிறவிகள். இரண்டும் மனத்தின் பலவீனத்திலிருந்துதான் பிறக்கின்றன என்று எதிரேயிருந்த பெருநிதிச் செல் வருடைய முகத்தில் காணும் உணர்வுகளைக் கொண்டு நினைத்தான் அருவாளன்.

எதிர்த்துப் போரிடவோ, பாய்ந்து தாக்கவோ, நகைவேழம்பருடைய உடலில் அப்போது சிறிதளவுகூடத் தெம்பில்லை என்பதை அருவாள நாகன் அவருக்கு நிதரிசனமாக நிரூபித்த பின்புதான் அவனை நோக்கி வேறு ஒரு கட்டளையிட்டார் அவர்.

அருவாளா! இது இந்த மாளிகையின் நிதி அறை! இவரைப்போல் மிகக் கொடிய ஒருவர் இங்குதான் இறந்து போனார் என்ற கெட்ட நினைப்போடு இந்த இடத்திற்குள் நுழையும் போதெல்லாம் எனக்கோ என்னுடைய இந்தச் செல்வத்தை ஆளப்போகும் வழி முறையினருக்கோ சிறிதும் பயமோ அமங்கலமான எண்ணமோ ஏற்படக்கூடாது. நீயும், உன் கூட்டாளியும் பாவப் புண்கள் நிறைந்த இந்த உடம்பை இங்கிருந்து கடத்திக்கொண்டு போய்ச் சக்கரவாளத்தைச் சுற்றியிருக்கும் காடுகளில் எங்காவது போட்டுவிட்டால் நல்லது. ஆனால் அப்படிப் போட்டுவிட்டு உடனே திரும்பி வந்துவிடாதே. இந்த மனிதரின் உடம்பில் இருந்த உயிர் பிரிந்து நீங்கிவிட்டது என்று முடிவாய் அறிந்துகொண்டு வந்து நீ எனக்குத் தெரிவித்த பின்புதான் என் மனத்தின் எல்லையிலிருந்து கவலைகள் பிரிந்து நீங்கும். விடிகிறவரை எவ்வளவு நேரமானாலும் நீ வந்து சொல்லப்போகிற செய்திக்காகக் காத்துக் கொண்டிருப்பேன் நான்.”

இதைக் கேட்ட பின்பு தன் மனம் எந்த உணர்வுகளையும் சிந்திக்க முடியாதபடி தான் அவருக்குப் பட்டிருந்த சோற்றுக் கடனைத் தீர்ப்பதற்கு முற்படுவது போல் எந்திரமாக மாறினான் அருவாளன். அவர் சொல்லியதைச் செயற்படுத்துகிறவனாகித் தன் வலிமையை எல்லாம் பயன்படுத்தி நகைவேழம்பருடைய உடம்பைத் தூக்கித் தோளில் சார்த்திக் கொண்டான். தீப்பந்தத்தை அங்கேயே வைத்துவிட்டுத் தன்னோடு பின் தொடருமாறு தன் கூட்டாளியிடம் கூறிவிட்டுப் படிகளில் ஏறினான் அருவாளன். திண்மை வாய்ந்த அவனுடைய தோள்களின் பலம் நகைவேழம்பருடைய உடம்பாகிய சுமையைத் தாங்குவதனால் குறையவில்லை. அந்தச் சமயத்தில் தன் மனம் சுமந்து கொண்டிருந்த நினைவுகளின் சுமைதான் தனது பலத்தைக் குறைக்கும் பெருந்துன்பமாயிருந்தது அருவாளனுக்கு.

நகைவேழம்பரைச் சுமந்துகொண்டு அருவாளனும் அவனுடன் வந்தவனும் பெருமாளிகையிலிருந்து வெளி யேறுமுன், “அருவாளா! நினைவு வைத்துக் கொள். நாளைக்குப் பூம்புகாரின் கதிரவன் உதிக்கும்போது இந்த ஒரு கண்ணுக்கும் பார்க்கும் ஆற்றல் இருக்கக்கூடாது என்று தம் கையிலிருந்த ஊன்றுகோலின் நுனியினாலேயே அலட்சியமாக அவன் தோளில் சுமையாகியிருந்த நகைவேழம்பரின் உடம்பைச் சுட்டிக் காட்டினார் பெருநிதிச் செல்வர்.

செய்கிறேன் ஐயா! நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் பொழுது விடியும். இவருக்கு மட்டும் விடியவே விடியாது. அவ்வளவு செய்தால் போதும் அல்லவா?” என்று ஒரு முறை திரும்பி அவரிடம் கேட்டுவிட்டு மேலே நடந்தான் அருவாளன். அதன்பின் அவன் அங்கிருந்து நடந்த வேகத்தை நடையா, ஓட்டமா என்று பிரித்துச் சொல்ல முடியாது.

நான்கு நாழிகைக்குப் பின் சக்கரவாளக் கோட்டத்துக் காட்டின் உள்ளே பாழடைந்த காளிக்கோட்டம் ஒன்றில் போய்த்தான் தன்னுடைய தோள் சுமையை அவனால் இறக்குவதற்கு முடிந்தது. நரிகள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்தோடும் அடர்த்தியான புதர்கள் சூழ்ந்த அந்தக் காளிக் கோட்டத்தின் முன்புறத்தில் தான் சுமந்து வந்த உடலைக் கிடத்திவிட்டு, முடிந்து போய்க் கொண்டிருக்கிற இந்த உயிரை தாமே இன்னும் விரைவில் முடித்துவிட்டு அறிவிக்க வேண்டியவரிடம் போய் அறிவித்துவிடலாமா? அல்லது தானே முடிகிற வரை இதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டுப் போகலாமா? என்று தயங்கியபோது வேறு ஒரு புதிய யோசனையும் அவனுக்கு உண்டாயிற்று.

இவரோ இன்று நிச்சயமாகச் சாகப் போகிறார். அதற்கு முன்னால் இவரைக் கொஞ்சம் வாழச்செய்து பார்த்தால் என்ன! அப்படிச் செய்தால் சாவதற்கு முந்திய இவரது எண்ணங்களையாவது நான் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுமே?’ என்று நினைத்தான் அருவாளநாகன். தான் நினைத்ததைச் செயற் படுத்துவதற்கு அந்த இடத்துச் சூழ்நிலை ஏற்றதுதானா என்று அறிந்துகொள்ள முயல்வது போலச் சுற்றும் முற்றும் பார்த்தான் அவன்.

நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; எனக்கு என்ன வந்தது?’ என்று அவனுக்குத் தன் மொழியில் எடுத்தெறிந்து பதில் சொல்வதைப் போலக் காளிகோட்டத்துத் திரிசூலத்தின் நுனியில் உட்கார்ந்திருந்த கோட்டான் ஒன்று நாலைந்து முறை தொடர்பாகக் கத்தி விட்டு விருட்டென்று எழும்பிப் பறந்து சென்றது. மனிதத் தலைபோல் தலையும் பருந்து உடலும் கொண்டு மயானங்களில் திரியும் ஆண்டலை எனப்படும் கொடிய பறவைகள் நாலைந்து காளிக் கோட்டத்து இடி சுவரில் இருந்தன. பிரம்மாண்டமான மண் பிரதிமை ஒன்று கோட்டத்துக்குள் நுழைகிற இடத்தின் வலது பக்கமாகத் தன் குழிந்த கண்களை உருட்டி விழித்தபடியிருந்தது. வேறு எந்த அந்நிய மனிதர்களின் அரவமும் அப்போது அங்கே இல்லை.

தம்பி! காளி கோட்டத்தின் உட்பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று போய் பார்த்து வாஎன உடனிருந்த தோழனை ஏவினான் அருவாளன். அவன் போய்ப் பார்த்துவிட்டு உடனே வந்து காளி சிலையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதாகச் சொன்னான்.

 

அப்போது கீழே கிடத்தியிருந்த நகைவேழம்பரின் உடல் மெல்ல அசைந்தது. ஈனசுவரத்தில் அவர் ஏதோ முனகுவதும் கேட்டது. அவரருகே சென்று மண்டியிட்டு அமர்ந்துகொண்டே அருவாளன், “தம்பீ! இப்போது இவருக்குச் சற்றே சக்தியூட்டிச் சிறிது நேரம் இவரைப் பேசச் செய்தால் ஏதாவது பயனுள்ள செய்திகள் இவரிடமிருந்து நமக்குத் தெரியலாமென்று நான் எண்ணுகிறேன். நீ போய்ப் பக்கத்தில் எங்காவது தண்ணிர் இருந்தால் கொண்டு வா. தண்ணிர் மட்டும் போதாது. இதோ இந்தத் திரிசூலத்துக்கு மேலே உள்ள நெல்லி மரக்கிளையில் அம்மானைக் காய்களைப் போல் முற்றிக் கனிந்த பெரிய பெரிய நெல்லிக்கனிகள் சரம் சரமாய்த் தொங்குகின்றன. அவற்றில் நாலு கனிகளைப் புறித்துக் கல்லில் தட்டி நீரில் கலந்து, அந்தச் சாற்றை இவருடைய வாயில் ஊற்றிப் பார்க்கலாம். இந்த இடத்தில் அதைவிட அதிகமாகச் சத்துள்ள உணவு எதையும் இப்போது நாம் இவருக்குத் தருவதற்கு வழியில்லை என்று அங்கே அருகில் தன்னுடன் இருந்தவனை ஏவினான். ‘பெருநிதிச் செல்வருக்கும் நகைவேழம் பருக்கும் என்ன காரணத்தினால் இத்தனை பெரிய முறிவு ஏற்பட்டது? இவரைக் கொன்று தீர்த்து விட்டுத் தாம் மட்டும் தனியே நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று ஆசைப்படும் அளவுக்கு அவர் இவர்மேல் வைரம் கொண்டது ஏன்?’ என்பன போல் தன் மனத்தினுள் விடைபெறாத மலட்டு வினாக்களாய் நிற்கும் பல சந்தேகங்களைச் செத்துப் போவதற்கு இருக்கும் இந்த ஒற்றைக் கண் மனிதர் உயிருடன் இருக்கும் போதே இவரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டு மென்று அந்தரங்கமாக உண்டான நைப்பாசையை அருவாளனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.

கொடுமையின் இலக்கணமாக விளங்கிய இந்த ஒற்றைக் கண் மனிதருக்கு இப்படி ஒரு பரிதாபமான சாவா?’ என்று எண்ணும் போதே இதன் இரகசியத்தை அறிந்து கொண்டு விட வேண்டும் என்ற ஆவல் அவனுடைய மனத்தில் உந்தியது.

நகைவேழம்பரது முகத்தில் தண்ணிர் தெளித்தும் வாயில் இனிய நெல்லிக்கனிச் சாற்றோடு கலந்த நீரை ஊற்றியும் அந்த முகத்திலிருந்த ஒற்றைக்கண் விழித்துக் கொண்டு தன்னைக் காணச் செய்வதற்காக அருவாளன் செய்த முயற்சிகள் வீண் போகவில்லை. அவர் கண் திறந்தார், மெல்ல மெல்ல வாய் திறந்து பேசவும் செய்தார். தன் எதிரே நிற்கிற கொலை மறவர்கள், தான் அப்போது கிடத்தப்பட்டிருந்த இடம், தன் நிலை, எல்லாவற்றையும் பார்த்துக் கேள்வி கேட்டு ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ளாமல், தனக்குத் தானாகவே புரிந்துகொண்டு ஒரு நிதானத்துக்கு வந்தபின் கிடத்தப்பட்ட இடத்தில் இருந்தே தலையை மட்டும் மெல்ல நிமிர்த்தி, “நீ அலைவாய்க்கரை யவனப்பாடியைச் சேர்ந்த நாகர் குலத்து அருவாள மறவன் அல்லவா?” என்று அவனை நோக்கி அவன் பெயரோ, ஞாபகமோ சிறிதும் குன்றாமல் தம் குரல் மட்டும் குன்றிப்போய்க் கேட்டார் அவர். ‘ஆமாம் என்பதற்கு அறிகுறியாக அவரை நோக்கித் தலையாட்டினான் அருவாளன். அடுத்தகணம் அவனை நோக்கி வேகமாக அவரே மேலும் சொல்லலானார்:

நான் இப்போது எந்த நிலையில் இங்கே கொண்டு வந்து எதற்காகக் கிடத்தப்பட்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நீ எனக்கு விளக்கிச் சொல்லுவதற்கு ஆசைப் படாதே அப்பனே! அதற்கு அவசியமே இல்லை. சொல்லாமல் எனக்கே எல்லாம் புரிகிறது. இந்த ஒரே ஒரு கண்ணுக்கு உலகத்தைப் பார்க்கும் ஒளி எந்தக் கடைசி விநாடி வரை இருக்கிறதோ, அதுவரை எல்லாமே புரியும். கண்ணெதிரே பார்ப்பவற்றில் எல்லாம் ஒருவன் தன்னுடைய சாவை மட்டுமே காண்பதுபோல் தவிக்கின்ற தவிப்புத்தான் மரண வேதனையாக இருக்குமானால், அதையே இப்போது நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்று நீ புரிந்து கொள்ளலாம். இந்த வேதனையை மீறிக்கொண்டு எழுந்து நிற்க இப்போது எனக்கு வலிமை இல்லை. காலிலும் எலும்பு முறிந்திருக்கிறது. என்னுடைய இயல்பைப் பற்றி உனக்கும் நன்றாகத் தெரியும். தெரியாதவற்றைக் கேள்விப்பட்டும் இருப்பாய். என்னைப் போன்ற ஒருவனுக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டதென்றாவது தெரிந்துகொள்ள நீ ஆசைப்படலாம். அப்படி ஆசைப் படுவது மனித இயற்கைதான். நானோ என்றும் என்னை மனிதனாகவே நினைத்துக் கொண்டதில்லை. என்னை ஒரு பெரிய அரக்கனாகப் பாவித்துக்கொண்டு அந்தப் பாவனையினாலேயே நான் பலமுறை பெருமைப்பட்டு இருக்கிறேன். கடைசியாக இப்போதும் எனக்கு அந்தப் பெருமை இருப்பதைத்தான் நான் உணர்கிறேன். பலபேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழகிய எனக்கு நான் சாகவேண்டும் என்றும் செத்துப்போய்க் கொண்டிருக்கிறேன் என்றும் உணர்வதுகூடப் பெரிதாக எதையும் இழக்கப் போவதுபோல் ஒரு மலைப்புக்குரிய விஷயமாகத் தோன்றவில்லை. சாக வேண்டியதுதான். ஆனால் இப்படி நான் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு செத்துப்போக வேண்டாம்போல என்னுள் நானே வளர்த்துக் கொண்டிருக்கிற அரக்கத்தன்மை எனக்கு நினைவூட்டுகிறது. பலபேரை கொன்ற போது கூட இப்படி வஞ்சகமாக ஏமாற்றித்தான் கொன்றிருக்கிறேன். என்றாலும் நானே இப்படிச் சாக வேண்டிய அவசியம் எனக்கு வந்திருக்கக் கூடாது தான். நான் பிறருக்குத் தீமைகள் புரிவதற்காகக் கடைப்பிடித்த வழிகளை என்னைத் தவிரப் பிறர் புரிந்துகொண்டு என்னிடமே செயற்படக்கூடாது என்று நினைக்கிற பேராசைக்காரனாகவே இதுவரை வளர்ந்துவிட்டேன் நான். இன்னும் சிறிது காலம் வாழவேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. காரணம் என்ன தெரியுமா? அப்படி வாழ்ந்தால் இப்போது இப்படி நான் சாவதற்கு ஏற்பாடு செய்தவரை வாழ விடாமல் எமனுலகுக்கு அனுப்பியிருப்பேன். அதுவும் முடியாமல் போய்விட்டது. முடியவில்லையே என்பதற்காகவும் நான் வருத்தப்படக் கூடாது. இன்னும் வாழ்வதற்கு முடியவில்லையே என்பதற்காகவே வருத்தப்படாமல் மிகவும் தைரியமாகச் சாக வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் என் நினைப்பில் இப்போது ஏதோ ஒன்று குறைகிறது அப்பனே! நான் அரக்கனாகவே என்னை இது வரை பாவித்துக் கொண்டிருந்தது தவறு! நானும் ஏதோ ஒரு வகையில் வெறும் மனிதன்தான் என்று பொல்லாத குறும்புக்குரல் ஒன்று என் மனத்திலிருந்து இந்தச் சாவு வேளையிலே எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது!

இதோ இந்தக் காளி கோட்டத்தின் பாழடைந்த கதவுகளைப் பார்! எவ்வளவு பழமையடைந்து விட்டன இவை! சாகும்போது நானும் இப்படித்தான் ஆகி விட்டேன். என்னால் எல்லாவற்றையும் மூடி மறைக்க முடியவில்லை. என் மனத்தில் இறுகிப் போயிருந்த பல எண்ணங்கள் இப்போது உடைகின்றன... என்னால் எதையும் பாதுகாக்க முடியவில்லை! இந்தப் பழைய கதவுகளைப் போலவே எதையும் மறைத்துக் காக்க முடியாமல் நான் உடைந்திருக்கிறேன்.”

தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தவர் பேச்சை நிறுத்திவிட்டு அருவாள மறவனையும் அவனுடைய தோழனையும் உற்றுப் பார்க்கலானார்.

சில கணங்கள் மூன்று பேர்களுடைய கண் பார்வையும் ஒன்றிலொன்று இணைந்து பிரியாமல் இலயித்திருந்தது. காற்றின் ஓசை மட்டும்தான் அப்போது அப்பகுதியில் கேட்டது.

மறுபடியும் அவரே பேசத் தொடங்கினார்:

தெரிந்தோ தெரியாமலோ இப்போது இந்தக் காளி கோவிலில் நீ என்னைக் கிடத்தியிருக்கும் இடம் நான் சாவதற்கு மிகவும் பொருத்தமானது. சந்தேகமாயிருந்தால் நீயே மறுபடி பார்! இப்போது நான் சாய்ந்து கொண்டிருக்கிற இடம் இந்தக் கோவிலின் பலிபீடம்.

இதில் ஒரு காலத்தில் நிறைய இரத்தக்கறை படிந்திருக்கும். மறுபடி இன்னும் படியப்போகிறது. அப்படிப் படியப்போகிற இரத்தம் என்னுடைய பாவ இரத்தமாக இருக்கும்.

என்னைப் பலிகொடுத்துவிட வேண்டியதுதான். ஆனால் பலி வாங்கிக் கொள்ள வேண்டியவர் மட்டும் ஏனோ இங்கு வரவில்லை. இந்தக் காளிகோட்டத்துப் புதரைச் சுற்றிலும் இப்போது ஊளையிடுகின்ற சுடுகாட்டு நரிகள் எல்லாம் என்னுடைய இரத்தத்துக்காகவும் இறைச்சிக்காகவும் ஊளையிட்டுக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பார்க்க ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்தக் கற்பனையை எண்ணுவதில் எனக்குப் பயமே இல்லை.”

-------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

21. கால ஓட்டத்தின் சிதைவுகள்

 

சோர்ந்து தளர்ந்து சாகக் கிடக்கிற அந்தக் கோலத்திலும் கூட அவருடைய காட்டாற்றுப் பேச்சில் குறுக்கிட்டு நடுவே பேசுவதற்குப் பயமாக இருந்தது அருவாளனுக்கு. அவருடைய தோற்றத்தில் ஏதோ ஓர் அம்சத்துக்கு இப்படிப் பயமுறுத்துகிற ஆற்றல் இருப்பதாக அவன் உணர்ந்தான். ‘விடிவதற்குள் இவரைத் தீர்த்துவிடாமல் திரும்பினால் பெருநிதிச் செல்வர் என்னைத் தீர்த்து விடுவாரே என்ற நினைப்பு வேறு இடையிடையே தோன்றி அருவாள மறவனுக்குத் தன் நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது. உடனே தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கவும் அவனால் முடியவில்லை. அவரோ அந்தப் பழைய பலி பீடத்தில் சாய்ந்துகொண்டு உயிரைக் கொடுப்பதற்கு முன்னால் உணர்ச்சிகளை வாரி வாரிக் கொடுத்துக் குமுறிக் கொண்டிருந்தார். அவர் பேச்சுக் குறையவுமில்லை. நிற்கவுமில்லை. தொடர்ந்தது.

 

அருவாளா! என்னுடைய நினைவுகளையெல்லாம் காலம் தேய்த்துச் சிதைத்து விட்டது. நானே கால ஓட்டத்தில் சிதைந்து போய் விட்டேன். இந்தப் பட்டினப்பாக்கத்தில் எட்டிப் பட்டமும் ஏனாதிப் பட்டமும் பெற்று வாழும் பெரிய பெரிய செல்வர்களுக்கு நீயும் நானும் நம்மைப் போன்றவர்களும் வெறும் கதவுகளைப் போலத்தான் பயன்படுகிறோம். கதவுகளால் எவை எவை மறைக்கப்பட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவற்றை மறைக்க ஆற்றலின்றிக் கதவுகள் சிதைத்து போனால் பழைய கதவு களைக் கழற்றி எறிந்துவிட்டுப் புதிய கதவுகளை மாற்ற வேண்டியதுதானே? பெருநிதிச் செல்வருடைய எல்லா இரகசியங்களுக்கும் நான் பலமான கதவாயிருந்த காலத்தில் அவர் என்னை நன்றாகப் பேணினார்! எதை எதை நான் மறைத்துப் பாதுகாத்தேனோ அவற்றை நானே வெளிப்படுத்தி விடுவேனோ என்று அவர் நம்பிக்கை இழந்த காலத்தில் நான் இப்படி அழிக்கப்பட்டு விட்டேன். பிறருக்குப் பயன்பட்டு அழிகிற எல்லாரும் கடைசியில் இப்படிக் கதவுகளைப் போலத் தான் ஆகிறார்கள். போகட்டும் உடைந்த கதவினால் பயனும் பாதுகாப்பும் இருக்க முடியாது தான். உன்னிடமிருந்து எனக்குச் சில செய்திகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் மிக உயர்ந்த இடத்திலிந்து உருண்டு விழுந்து விட்டேன் அருவாளா! அந்தப் பெருமாளிகையின் நிலவறையிலேயே நான் இறந்துபோய் விடுவேனோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய சாவு கூட அந்த மாளிகையின் எல்லைக்குள்ளே நடக்ககூடாது என்று பெருநிதிச்செல்வர் கருதி விட்டாற்போல் இருக்கிறது...” என்று நலிந்த குரலில் நகைவேழம்பர் கூறிக்கொண்டு வந்த அவருடைய சொற்களால் மனம் மாறியிருந்த அருவாளன் அவர் மேல் சிறிது இரக்கமும் கொள்ளத் தொடங்கியிருந்தான்.

பிறரைக் காப்பதற்குப் பயன்பட்டுப் பின்பு தன்னையே காத்துக் கொள்ள முடியாமல் அழிந்து போகிற எல்லாருடைய கதையும் என் நிலையில்தான் இருக்கும் என்று அவர் கூறியிருந்த வாக்கியம் அவன் மனத்தில் இனம் புரியாததோர் ஊமைக் கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தது. அந்தக் கிளர்ச்சியினால் அவரிடமே சிறிது தைரியமாகப் பேசினான் அவன்.

ஐயா! நாம் பிறருக்குப் பயன்படலாம். ஆனால் நமக்கும் ஓரளவு பயன்படுகிறவராகப் பார்த்துத்தான் நாம் பயன்படவேண்டும். நீங்கள் அந்த மாளிகையின் எல்லையில் இருந்தாலே உங்கள் உயிர் பேயாகி அங்கே உலாவும்; அப்படி உலாவுவதுகூடக் கெடுதல் என்று எண்ணிப் பயந்து ஒதுங்குகிறவருக்குப் போய்ப் பயன் பட்டு வீணாகி விட்டீர்கள் நீங்கள்.”

இந்தச் சொற்களைக் கேட்டதும் பலிபீடத்தில் சாய்ந்து கொண்டிருந்த நகைவேழம்பர் தலையை நிமிர்த்திக் கண்ணில் வெறியும், தவிப்பும் மாறி மாறித் தெரிய, “அப்படியும் சொன்னானா அந்தப் பாவி? தெரிந்துகொள், அருவாளா! உனக்கும் ஒருநாள் அவனிடம் இந்தக் கதிதான். அந்த பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வனுக்கு நன்றிக் கடனும், சோற்றுக் கடனும் பட்டிருப்பதாக மயங்கி வீணில் அடிமையாகப் போய்விடாதே. ஏழையாயிருந்து பட்டினி கிடப்பது கூடச் சுகம். அடிமையாக இருந்து வயிறார உண்பது கூட நோய் என்று இந்த மரணாவஸ்தை நிறைந்த கடைசிக் கணத்தில் என் மனத்தின் குருட்டுத்தனம் நீங்கி எனக்கு ஒரு ஞானம் வருகிறது. இனிமேல் வந்து பயன் என்ன! நான் அடிமையாயிருந்து கொண்டே சுதந்திரமாய் இருப்பதாய் எண்ணிக் கொண்டு தப்பான நம்பிக்கையோடு கொடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். எவ்வளவு சுதந்திரமாக இருந்தாலும், எல்லாரும் என்றைக்காவது ஒருநாள் மரணத்துக்கு அடிமையாகித் தீர வேண்டியது தான் போலிருக்கிறதென்று இப்போது புதிதாகப் புரிந்து கொண்டவன் போலக் கடைசியாக இந்தப் பலிபீடத்தில் வந்து வீழ்ந்துவிட்டேன் பார். என் வாழ்வு இவ்வளவு தான். இனிமேல் எனக்கு என்ன இருக்கிறது? ஆனால்...”

சிறிது நேரம் தயங்கிவிட்டு அவர் மேலும் பேசினார்: “இனிமேல் ஒன்றுமில்லை என்றும் கை விடுவது முடியாது. கடைசியாக நான் செய்வதற்கு இன்னும் ஏதோ இருக்கிறது. பெருமாளிகையில் செத்துப் போனால் கூட நான் பேயாயிருந்து பின்னால் பய முறுத்துவேனோ என்று அஞ்சிப் பெருநிதிச் செல்வன் என்னை இங்கே தூக்கிக் கொண்டு வந்து கொல்லச் சொன்னான் அல்லவா? நான் பேயாயிருந்து அந்தக் கொடியவனுக்கு கெடுதல் செய்ய முடியுமானால் அதைச் செய்யத்தக்க விதத்தில் சாவதற்கு இப்போதும் என்னால் முடியும். அப்பனே! இப்படியே என்னைத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் போட்டுவிடு. நான் கடலிலேயே சாகிறேன். பூம்புகாரின் கடற்பரப்பில் எல்லாம் நான் இறந்தபின் பேயாக உலவுகிறேன். அந்தப் பாதக மனிதனுடைய கப்பல்களையெல்லாம் அறைந்து கடலில் கவிழ்க்கிறேன். அவருடைய பெரும் கடல் வாணிகத்தையே கவிழ்த்து விடுகிறேன். அந்தக் கப்பல்களில் ஏதாவதொன்றில் எப்போதாவது அந்தப் பாதகனும் பயணம் செய்துகொண்டு வருவான் அல்லவா? அப்போது அவனை இந்த இரண்டு கைகளாலும் பிடித்து பேயறை அறைந்து கழுத்தை நெரித்து அப்படியே கடலில் தள்ளி...!”

சொல்லிக் கொண்டே வந்தவர் உணர்ச்சித் துடிப்பில் எதிரே யாருடைய கழுத்தோ தன்னுடைய பிடியில் உண்மையாகவே இருப்பதாகக் கருதிக் கொண்டு இரண்டு கைகளாலும் நெரிக்க முயன்றபடி எழுந்திருக்க முற்பட்டுக் கால் ஊன்றி நிற்க முடியாத காரணத்தால் மறுபடி பலிபீடத்திலேயே முடங்கிச் சாய்ந்து விழுந்தார்.

விழுந்தவருக்கு மூச்சு இரைத்தது. கண் சொருகிச் சொருகி விழித்தது. அந்த இரும்பு நெஞ்சு விம்மி விம்மித் தணிந்தது. அருவாளன் மறுபடி அவரருகே மண்டியிட்டு அமர்ந்து அந்த நெஞ்சைத் தடவிக் கொடுத்தான். அவருடைய அநுபவங்களைப் பார்த்து அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. தனக்கே அவற்றிலிருந்து தேவையான பாடங்கள் கிடைப்பது போலவும் இருந்தது.

இவரைப்போல் கொடுமையாகவும் பயங்கரமாகவும் இனி ஒருவர் வாழ முடியாது. இவருக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருப்பது போல் கொடுமையான சாவும் இன்னொருவருக்குக் கிடைக்கக் கூடாது. கிடைக்கவும் வேண்டாம். இன்னொருவர் தாங்கிப் பொறுத்துக் கொள்ள முடியாதது இந்த விதமான சாவு என்று எண்ணி எண்ணி மலைத்தான் அருவாளன். இன்னும் கொஞ்சம் நெல்லிக்கனிச் சாறு கலந்து நீரை அவர் வாயில் ஊற்றும்படி தன் தோழனுக்குச் சைகை செய்தான் அருவாளன்.

அவனும் அதைச் செய்தான். மீண்டும் சில விநாடிகள் மரண வேதனை. மீண்டும் சில விநாடிகள் தெளிவு. அந்த நிலையில் அவர் அருவாளனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். விரக்தியினாலும் இனி நாம்சாகத்தான் போகிறோம் என்ற உறுதியினாலும் அப்போது மிகமிக மனத் தெளிவுடன் அவர் அவனிடம் ஒளிவு மறைவின்றிப் பேசினார். “அருவாளா! நீ இப்பொழுது என்னைப் பார்த்து பரிதாபப்படுவது போல் நான் சாவது ஒன்றும் அவ்வளவு வேதனையான காரியமில்லை எனக்கு. ஏனென்றால் இந்த உலகத்தில் நாளைக்கு வாழ்வதற்காக என்று நான் எதையும் சேர்த்து வைத்திருக்கவில்லை. பெருநிதிச் செல்வனைப் போலச் செல்வத்தை மலை மலையாகக் குவித்து வைத்திருந்தால் அதைக் காக்கவும் அநுபவிக்கவும் ஆசைப்பட்டாவது நாளைக்கும் அதற்கு அப்புறமும் நான் வாழ்வதற்கு விரும்ப வேண்டும். பாவங்களைத் தவிர வேறு எவற்றையும் இனிமேல் அனுபவிப்பதற்காக என்று நான் சேர்த்து வைக்கவில்லை. என்னுடைய கணக்கில் இப்போது நிறையப் பாவங்கள் இருக்கும். ‘அந்தப் பாவங்களை எல்லாம் அநுபவிப்பதற்கு நான் மீண்டும் பிறக்க வேண்டியிருக்குமே என்று நீ சந்தேகப்படுவாய். பிறந்தால் இன்னும் புதிதாக நிறையப் பாவங்கள் செய்து அடுத்த பிறவியிலும் இப்படியே கெட்டவனாக வாழ்ந்து விடுவேனோ என்று தான் நான் மறுபடி பிறக்கவே பயப்படுகிறேன். இப்படித்தான் வாழ வேண்டும் என்று நியாயமோ வரம்போ உள்ள எந்த ஒரு வாழ்க்கையையும் இந்தப் பிறவிலேயே பழகிக் கொள்ள முடியாதவன் அடுத்த பிறவியில் மட்டும் எப்படி ஒழுங்காக வாழமுடியும் என்று நானே என்னைப் பற்றிச் சந்தேகப்படுகிறேன். உனக்கு நன்றாக என்னைப் பற்றித் தெரியும். நான் நிறையக் கொலை செய்திருக்கிறேன். நிறையக் கொள்ளையடித்திருக்கிறேன். நிறையப் பொய் சொல்லியிருக்கிறேன். நிறையச் சூழ்ச்சி செய்திருக்கிறேன். ஆனால் அவ்வளவும் எனக்காக மட்டும் அல்ல! யாருடைய மாளிகையிலோ நிதியறையை நிரப்புவதற்காக நான் என்னுடைய கணக்கில் பாவங்களை நிறைத்துக் கொண்டு கெட்டுப் போய்விட்டேன்.

நான் இப்படிச் சுகமாக நலிந்து மந்தமாக மெல்ல மெல்லச் சாவது எனக்கே பிடிக்கவில்லை. யாராவது நாலைந்து பேராகச் சேர்ந்து கொண்டு கணம் கணமாகத் துடிக்கத் துடிக்கச் சித்திரவதை செய்து என்னைக் கொல்ல வேண்டும் போல் இப்போது எனக்கே ஆசையாக இருக்கிறது. மந்தமாக நோயாளியைப் போலச் சாவது சோம்பேறித்தனமான சாவு. என்னைப் போல் அப்படி வாழ்ந்தவன் சோம்பேறித்தனமாக இப்படியா சாவது? நீயே சொல் அருவாளா? என்னைச் சித்திரவதை செய்தாலும் என்னுடைய வாய் அலறாது! கண்களில் நீர் நெகிழாது. அப்படி உடம்பையும் மனத்தையும் கல்லாகவும் இரும்பாகவும் நான் பழக்கியிருக்கிறேன். நீயும் உங்கள் உலகமும் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நான் இப்படி வாழ்ந்தது கூட ஒருவகைத் துறவுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் என்னைப் போலவே இவற்றைத் துறவாக ஒப்புக் கொள்கிறவள் ஒருத்தி இதே சக்கரவாளத்துக் காட்டில் இன்னும் சிறிது தொலைவிலுள்ள வன்னி மன்றத்தில் இருக்கிறாள். சாவதற்கு முன் அவளை நான் ஒருமுறை பார்த்துவிட்டுச் சாக வேண்டும். நீயும் உன் தோழனும் போய் எனக்காக அவளை இங்கே அழைத்து வர முடியுமா? அவள் பெயர் பைரவி. கபாலிகர்களுடைய வன்னி மன்றத்திலே போய் யாரிடம் அவள் பெயரைச் சொல்லிக் கேட்டாலும் தெரியும். எனக்கு ஒரே ஓர் ஆசை. நிராசையோடு நான் சாக விரும்பவில்லை. என்னை இக்கதிக்கு ஆளாக்கியவனைப் பற்றிய எல்லா இரகசியங்களும் எனக்குத் தெரிந்திருப்பது போலவே அந்தக் கபாலிகைக்கும் தெரியும். அந்தக் கொடும்பாவியைப் பழிவாங்கும் பொறுப்பை இன்று அவளிடம் நான் ஒப்படைக்கப் போகிறேன். அந்தப் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டுவிட்டால் பின்பு நான் நிம்மதியாகச் சாகலாம்.”

இவ்வாறு அவர் விடுத்த வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் அருவாளனும் அவ னுடைய தோழனும் கபாலிகையாகிய பைரவியை அழைத்துக் கொண்டு வருவதற்காக வன்னிமன்றத்துக்குச் சென்றனர். அவர் பலிபீடத்தில் தலையைச் சாய்த்து உறங்குவது போல் கண்ணை மூடினார். கண்ணை மூடு முன் கடைசியாக அவர் பார்த்த பொருள் காளி கோட்டத்தின் சிதைந்த பழங்கதவாயிருந்தது.

சில கணங்களுக்குப்பின் அரை குறைப் பிரக்ஞையுடனே அவர் மெல்லக் கண் திறந்து பார்த்தபோது சுற்றிலும் ஒரே நரிக் கூட்டமாகத் தெரிந்தது. இறைச்சி தின்று பழகிய சுடுகாட்டு நரிகள் பயங்கரமாக ஊளை யிட்டுக் கொண்டு அவர் கிடந்த பலிபீடத்தைச் சூழ்ந்தன.

-----------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

22. இருண்ட பகல்

 

அப்போது நகைவேழம்பருடைய மனத்துக்குள்ளே முன்பு கணத்துக்குக் கணம் பொய்யாய் அழிந்து கொண்டிருந்த வாழ்வு இனி நிலையாகவே அழிந்துவிடப் போகிறதென்று வாழ்வைப் பற்றிய அவநம்பிக்கைகளும், மரணத்தைப் பற்றிய நம்பிக்கையும் ஒன்றாகவே சூழ்ந்து கொண்டிருந்தன. நெருங்கி வந்து கொண்டிருக்கும் சாவைத் தைரியமாகவும், உற்சாகமாகவும் வரவேற்க வேண்டும் என்று போலியாக அவர் ஏற்படுத்திக் கொள்ள முயன்ற வைராக்கியம் பயன்படவில்லை.

அவர் சிரிக்க முயன்றார். ஆனால் அழுகை தான் வந்தது. துணிவாக இருக்க முயன்றார். ஆனால் இந்த உலகத்தையும் இதன் நாட்களையும் இனி இழந்து விடப் போகிறோமே என்று தளர்ச்சி தான் பெருகிற்று. சாவின் பயங்கர ஓலம்போல் விகாரமான நரிக் கூப்பாடுகள் அவரைச் சூழ்ந்தன. பெரிய நரி ஒன்று கோரமாக வாய் திறந்து கத்திகளின் நுனிகளை அடுக்கியது போன்ற பல் வரிசை தெரியப் பாய்ந்து வந்து அவரது தொடையில் வாய் வைத்தது. மற்றொரு நரி பலி பீடத்தை ஒட்டினாற் போலத் தாவி அவருடைய தோளில் பற்களைப் பதித்தது. அவர் எந்த வகையான மரணத்துக்கு ஆசைப்பட்டாரோ அதுவே அவருக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அவரே அதிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓட முயன்றாலும் முடியாதபடி சாவின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்து விட்டன. எழுந்து ஓடிவிடலாம் என்றால் முறிந்துபோன காலுக்கு மேலே எழுந்து நிற்கின்ற ஆற்றலும் இல்லை. கூட்டம் கூட்டமாகச் சிறுத்தைப் புலிகளைப் போல் வந்து மேலே பாய்ந்து சதையைக் கவ்விக் குதறும் கொடிய நரிகளை எதிர்த்துப் போராடுகிற வலிமை அவரது கைகளிலும் உடம்பிலும் அப்போது இல்லை.

தனது உடலில் சதையைக் குருதி சிந்தக் கவ்வி இழுத்துக் குதறும் காட்சியைத் தன்னுடைய கண்ணி னாலேயே பார்க்கும் அநுபவம் விசித்திரமாகத்தான் இருந்தது. அதுவே குரூரமாகவும் இருந்தது.

என்னை நாலைந்து பேராகச் சூழ்ந்து கொண்டு அணுஅணுவாகச் சித்திரவதை செய்தாலும் என்னுடைய வாய் அலறாது. கண்ணில் நீர் நெகிழாது. அப்படி என் உடம்பையும், மனத்தையும் கல்லாகவும் இரும்பாகவும் நானே பழக்கியிருக்கிறேன் என்று தானே சிறிது நேரத்துக்கு முன் அருவாளனிடம் கூறிய சொற்களை இப்போது நினைத்துக் கொண்டு சிரிக்க முயன்றார் அவர். நரிகள் மேலே விழுந்து தாறுமாறாகப் பிடுங்கிய வலியினாலும், வேதனையினாலும் அவருக்குச் சிரிப்பும் வரவில்லை.

எப்படி வாழ வேண்டாமோ அப்படி இதுவரை வாழ்ந்துவிட்டேன். அப்படி வாழக்கூடாது என்று தெரிந்திருந்தும் அப்படியே வாழ்ந்தேன். அந்த வாழ்வு இப்போது இப்படி முடிகிறது என்று உயிர் வேதனை யோடு உடம்பில் வலி துடிக்கத் துடிக்க அவர் நினைத்த கடைசிக் கணத்தில், சிவந்து போய்த் தனியாய் முகத்துக்கே புண்போல் இருந்த அந்த ஒற்றைக் கண்ணின் மேல் குறிவைத்துப் பாய்ந்தது ஒரு நரி, கண்ணின் பார்வை அவியும்போதே உயிரின் கடைசிப் பார்வையையும் முடித்துவிட விரும்புவதுபோல் அவருடைய குரல் வளையைக் கவ்வியது மற்றொரு நரி! அதற்குப் பின் அந்த முகத்தில் கண்ணே இல்லை, கண்ணிருந்தாலும் பார்ப்பதற்கு உயிருணர்ச்சி இல்லை. அவ்வளவு ஏன்? அந்த உடம்பே முழு உருவமாக இல்லை.

அருவாள மறவனும் அவனுடைய தோழனும் வன்னி மன்றத்துக்குப் போய்க் கபாலிகையாகிய பைரவியை அழைத்துக் கொண்டு காளிகோட்டத்துக்குத் திரும்பி வந்தபோது அங்கே நகைவேழம்பர் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டிருந்த மனித உடம்பை முழுமையாகக் காண முடியவில்லை. பலிபீடத்தின் மேலும் அதைச் சுற்றிலும் ஒரே நரிக் கூட்டமாகச் சூழ்ந்திருந்தது. அருவாளனும், அவன் தோழனும் பைரவியும் இறைச்சி நெடியிற் கூடியிருந்த அந்த நரிக் கூட்டத்தை அரும்பாடு பட்டு விரட்டிவிட்டுப் பார்த்த போதுகூட அவருடைய உடம்பில் நரிகளுக்குப் பறிகொடுத்து இழந்த பகுதிகளைத் தவிர எஞ்சியவை மட்டுமே கிடைத்தன. அப்படி இழந்து போயிருந்த பகுதிகளில் மிக முதன்மையானது அவருடைய உயிராயிருந்தது.

சொல்ல முடியாத துயரமும் இரக்கமும் வந்து நெஞ்சை அடைக்க அருவாளன் உடைந்து தளர்ந்த குரலில் தன் நண்பனையும் கபாலிகையையும் பார்த்துச் சொன்னான்.

மனிதர்கள் கெட்டவர்களாக இருக்கலாம். பாவிகளாகவும் பாதகர்களாவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் உலகத்தில் சாவது பயங்கரமானதுதான். பொதுவாகச் சாவதே பயங்கரமானது என்றால் பயங்கரமாகவே சாவதென்பது எவ்வளவு வேதனையானது? இவர் தமது கடைசி ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளாமலே செத்துப்போய் விட்டார். வாழும்போது நகைவேழம்பர் என்ற பெயருக்கேற்ப இவர் முகத்தில் நான் சிரிப்பையே பார்த்ததில்லை. ஆனால் சாவதற்கு முன்போமரணத்தைக்கூடச் சிரித்தபடியே என்னால் சந்திக்க முடியும் என்று என்னிடமே சிரித்துக்கொண்டு சொன்னார் இவர். செத்த பின்போ இவருடைய சாவே இப்படி சிரிப்புக் குரியதாகிவிட்டது.”

இருக்கலாம்! ஆனால் இவரைப்போல் ஒருவர் துணையாக நின்று உதவியிராவிட்டால் இவர் யாருக்குத் துணை நின்று உதவினாரோ அவருடைய செல்வச் செழிப்பு நிறைந்த பெருவாழ்வே இதற்குள் ஊர் சிரித்துப் போயிருக்கும் என்றாள் பைரவி. இயல்பாகவே விகாரமாயிருந்த அவள் முகம் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது இரத்த வெறி கொண்டு குமுறுவது போல் இன்னும் கொடுமையாகத் தோன்றியது. பெருநிதிச் செல்வரைப் பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைப்பதற்காகத்தான் உன்னை அவர் இங்கே கூப்பிட்டனுப்பினார் என்னும் உண்மையை அந்தப் பேய் மகளிடம் இப்போது தானே கூறி விடலாமா என்று எண்ணினான் அருவாளன். ஆனால் தானே அதைக் கூறுவது பொருந்தாது என்று நினைத்து உடனே அடக்கிக் கொண்டான். கண்களில் நீர் கலங்க அந்தப் பேய் மகள் காளிகோட்டத்துப் பலிபீடத்தின் அருகே கன்னத்தில் கை ஊன்றி அமர்ந்து விட்ட சமயத்தில் மெல்ல மெல்ல இருள் வெளி வாங்கிக் கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது.

தாங்கள் பெருநிதிச் செல்வருக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்கு நினைவு வரவே அருவாளனும், அவன் தோழனும் மெல்ல அங்கிருந்து நழுவினர். காளிகோட்டத்தில் நகைவேழம்பருடைய கோர மரணத்தைக் கண்டுவிட்டுப் பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அருவாளனுடைய மனம் மிகவும் தளர்ந்து போயிருந்தது. தான் இன்றுவரை வாழ்ந்ததும் இனிமேல் வாழப் போவதுமாகிய வாழ்க்கையின் மேலேயே அவனுக்கு வெறுப்பாயிருந்தது. நகைவேழம்பருடைய சாவை அவர் ஒருவருடைய சொந்த அழிவாக மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. அந்த ஒருவருடைய சாவில் தன்னைப் போன்ற பலருடைய நம்பிக்கைகளும் சேர்ந்து செத்து அழிந்திருப்பதாக அவன் எண்ணினான். சாவதற்கு முன்னால் அந்த ஒற்றைக் கண் மனிதர் அவனிடம் பேசிய பேச்சுக்களால் அவனுடைய மனத்தில் பெருநிதிச் செல்வர் மேலேயே வெறுப்பும் அவநம்பிக்கையும் பெருகுமாறு செய்துவிட்டுப் போயிருந்தார். சாவதற்கு முன் அவர் பேசியிருந்த பேச்சுக்கள் இன்னும்கூட அவன் செவிகளில் ஒலிப்பன போலிருந்தன. அவன் நினைக்கலானான்:

அந்தச் செல்வருக்கு நான் சோற்றுக்கடன் பட்டிருக்கிறேன், நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்று இப்போது என்னுடைய உடலில் இருக்கிற சோற்றுச் செருக்கு அவர் அளித்தது. ஆனாலும் இந்த விநாடியே அவருடைய வழிகளிலிருந்து நான் விலகிவிட வேண்டும் போல் எனக்கு அவர் மேல் வெறுப்பாக இருக்கிறது. அடிமையாக இருந்து அடைகிற சுகம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது நோய்தான் என்று சாவதற்கு முன் அவர் கூறினாரே! எனக்கும் ஒருநாள் இந்த கதி நேரலாம் என்று கூடச் சொன்னாரே!’ என்று பலவிதமாகச் சிந்தித்துக் கொண்டே சென்றபோது அருவாளனுடைய மனத்தில் பெருநிதிச் செல்வரைப் பற்றிய மதிப்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து அழிந்து விட்டது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையை அடைகிறவரை அருவாள மறவன் தன் தோழனிடம் அப்போது தன் மனத்தில் கிளர்ந்த எண்ணங்களை உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டே போனான். அப்படிப் பேசாமல் தனக்குள்ளேயே தன் சிந்தனைகளை அடக்கிக் கொண்டு போவதற்கு அப்போது அவனால் முடியவில்லை.

அருவாளனும் அவன் தோழனும் பெருமாளிகைக்குள் நுழைந்தபோது பூம்புகாரின் கிழக்கு வானத்தில் பகல் பிறந்து கொண்டிருந்தது. விடிய விடியத் தங்களை எதிர்பார்த்து விழித்திருந்த சோர்வைப் பெருநிதிச் செல்வரின் முகத்திலும் சிவந்து போயிருந்த விழிகளிலும் அவர்கள் கண்டார்கள். அப்போதிருந்த மனநிலையில் அருவாளனுக்கு அவர் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை.

போன காரியம் என்ன ஆயிற்று?’ என்பதைக் கண் பார்வையில் குறிப்பாலேயே அவர்களிடம் வினவினார் பெருநிதிச் செல்வர். வார்த்தைகளை செலவழிக்காமலே பிறந்த குறிப்புக் கேள்வியாயிருந்தது.

உங்கள் கவலை தீர்ந்துவிட்டது என்று அவர் முகத்தைப் பார்க்க விரும்பாதவன் போலத் தரையைப் பார்த்துக் கொண்டே மறுமொழி கூறினான் அருவாளன். அப்போது அவனுடைய சோர்வையும் தளர்ச்சியையும் உற்சாகமின்மையையும் அவரே கண்டு புரிந்துகொண்டு விட்டார்.

நீயும் உன் தோழனும் நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த படியே காரியத்தை முடித்துக் கொண்டுதான் வெற்றியோடு திரும்ப வந்திருக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்கள் இருவர் முகங்களிலும் நான் உற்சாகத்தையோ பெருமையையோ காண முடியவில்லையே? அது ஏன்?”

சிறிது தயங்கியபின் அருவாளன் அவருடைய இந்தக் கேள்விக்கு விடை கூறினான்:

ஐயா! சில காரியங்களைச் செய்தபின் அப்படிச் செய்ததற்காக எந்த விதத்திலும் பெருமிதப்பட முடிவ தில்லை. மேலும் அந்த மனிதருடைய சாவு இயல்பாகவே நேர்ந்துவிட்டது. நாங்கள் ஏதும் செய்வதற்கு முயலு முன்பே அவர் தாமாகவே அழிந்து போய்விட்டார் என்று தொடங்கிக் காளிகோட்டத்தில் நடந்தவற்றை எல்லாம் அவரிடம் சொன்னான். அப்படிச் சொல்லிய போது நகைவேழம்பருடைய கடைசி ஆசையையும் அதற்காகத் தாங்களே வன்னி மன்றத்துக்குப் போய்ப் பைரவியை அவரிடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்ததையும் மட்டும் அவரிடம் கூறாமலே மறைத்து விட்டான் அருவாளன்!

சிறிது நேரம் இரு, அருவாளா! இதோ வருகிறேன் என்று கூறி அவர்களை அங்கேயே நிறுத்திவிட்டு உட்பக்கமாகச் சென்றார் பெருநிதிச் செல்வர். அவர் எதற்காக அப்போது உள்ளே செல்கிறார் என்பது அருவாளனுக்கும் ஏறத்தாழ அநுமானமாகத் தெரிந்தது. அவன் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். இந்த முறை அவரிடம் தான் எதற்காகவும் நன்றிக் கடன் படக்கூடாதென்று தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் தலை நிமிர்ந்த போது கைநிறையப் பொற் காசுகளோடும் வாய் நிறைய வாணிகச் சிரிப்புடனும் பெருநிதிச் செல்வர் உள்ளேயிருந்து வெளியே வந்து அவனெதிரே நின்று கொண்டிருந்தார்.

இந்தா, இவற்றைப் பெற்றுக்கொள்..”

அவருடைய கைகள் பொற்காசுகளோடு அவனுக்கு முன் நீண்டன. அவன் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் சிறிதும் எதிர்பாராத வேறு ஒரு காரியத்தை அருவாளன் அப்போது செய்தான்.

ஐயா! பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் என்னுடைய இடுப்புக் கச்சையில் அணிவித்த இந்தக் கொடுவாளை இன்று உங்களிடமே திருப்பி அளித்து விடுகிறேன். இத்தகைய காரியங்களைச் செய்யும் துணிவு நேற்றிலிருந்து என்னைக் கைவிட்டு விட்டது. தயை கூர்ந்து என்னை விட்டுவிடுங்கள். மறுபடியும் உங்களிடம் நன்றிக் கடன் படச் சொல்லாதீர்கள் என்று கூறியவாறே தன் வாளை உறையிலிருந்து கழற்றி அவர் காலடியில் இட்டான் அருவாளன். தொடர்ந்து அவனுடன் அருகில் நின்ற தோழனின் வாளும் அதே போலக் கழற்றப்பட்டு அவருடைய காலடியில் வந்து விழுந்தது.

இப்படிச் செய்துவிட்டு அருவாளனும் அவன் நண்பனும் கைகட்டிப் பணிவாக அவரெதிரே நின்ற போது அவர் பெருஞ்சீற்றம் கொண்டார். காசுகளைக் கீழே எறிந்துவிட்டுத் தம் ஊன்றுகோலைப் பற்றியது அவர் கை. அவருடைய கால் செருப்பின் கீழ் அவன் எறிந்த வாள் ஓங்கி மிதிபட்டது. அந்த ஊன்றுகோலை ஓசையெழும்படி தரையில் அழுத்தி ஊன்றிக் கொண்டே அருவாளனிடம் சினமாகப் பேசினார் அவர்.

என்னைப் பற்றி நீ என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் விரும்பியபடி நடந்து கொள்ளத் தவறுகிறபோது நீ என் எதிரியாகிறாய் என்பதை மறவாதே...?”

நாங்கள் யாருக்கும் எதிரியாக விரும்பவில்லை ஐயா? அடிமையாக இருந்துவிடவும் ஆசைப்படவில்லை. எங்களுக்கு விடை கொடுங்கள் என்று இப்படிச் சொல்லிவிட்டு அருவாளனும், அவன் தோழனும் அவருடைய விடையை எதிர்பாராமலே விரைந்து அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். இந்தச் செயல் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிர்பாராத இந்த அதிர்ச்சியால் விடிந்து பிறந்து கொண்டிருந்த பகற்போதே திடீரென்று இருண்டு போய்விட்டாற் போலிருந்தது பெருநிதிச் செல்வருக்கு. அவருடைய நெஞ்சில் கவலைகள் இன்று மீண்டும் பிறந்தன.

----------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

23. சான்றாண்மை வீரன்

 

கப்பலில் காலைக் கதிரவனின் பொன்னொளி பாய்ந்து பரவிக் கொண்டிருந்தது. நீலக் கடற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காலை வெயிலில் மின்னும் பசுமையான தீவுகள் தென்பட்டன. உடலில் அருவி நீர் சிதறிப் பாய்ந்து நீராட்டுவது போல் காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. அப்போதுதான் துயில் நீங்கியெழுந்த பதுமை தனக்கும் முன்பாகவே எழுந்திருந்து தளத்தில் நின்றுகொண்டு கடலையும் கதிரவன் உதிக்கும் காட்சியையும் கவனித்துக் கொண்டிருந்த தன் கணவனருகே சென்றாள். அவளுடைய கை வளைகளும் கால் சிலம்புகளும் கப்பலின் ஆட்டத்தில் நளினமாய் ஒலித்தன. கிழக்கு வானத்தில் இளஞ் சிவப்பும், கடல் நீரின் நீல நிறமும் வண்ணச் சித்திரங்களாய் ஒன்றுபட்டுக் கலக்கும் அழகில் ஈடுபட்டிருந்த மணிமார்பன் தனக்குப் பின்னால் வளையொலியும், சிலம்பொலியும் மெல்லக் கிளர்ந்து ஒலிக்கக் கேட்டுத் திரும்பினான். பதுமை வந்துகொண்டிருந்தாள். கிழக்கே சூரியன் உதயமாவதைப் பார்ப்பதற்காகச் சந்திரன் உதயமாகி எழுந்து வருவதைப் போலவும் பதுமையின் முகம் அப்போது மிகவும் அழகாயிருந்தது. தன்னுடைய கற்பனையைத் தன் மனைவி பாராட்ட வேண்டும் என்ற ஆவலோடு அவளிடம் பேச்சுக் கொடுத்தான் அவன்.

இங்கே கதிரவன் உதயமாகும் அழகைப் பார்க்கலாம் என்று நான் எழுந்து வந்து நின்றேன் பதுமை. இப்போது பின் பக்கம் திரும்பிப் பார்த்தால் குளிர் நிலவு பொழியும் கதிர்களோடு சந்திரன் உதயமா யிருக்கிறான்! இது என்ன அதிசயமோ!”

அவன் கூறியது புரியாமல், “எங்கே? எங்கே?” என்று கேட்டு நாற்புறமும் நோக்கி மருண்டாள் பதுமை.

எங்கேயா? இதோ... இங்கே!” என்று தன் அருகே வந்து நின்ற அவள் முகத்தைத் தொட்டுக் கொண்டே சொல்லிச் சிரித்தான் மணிமார்பன். பதுமை நாணத்தோடு அந்தப் பேச்சை உடனே வேறு கருத்துக்கு மாற்றினாள்.

இரண்டு மூன்று நாட்களாக எனக்கு நல்ல உறக்கமே இல்லை. உறக்கத்தில் கூட அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றிய கெட்ட சொப்பனங்கள்தான் காண்கின்றன. அன்றைக்குக் கற்பூர மரக்கலத்தில் தீப்பற்றிய பின் கட்டையைப் பற்றிக்கொண்டு அவர் மிதந்தபோது அவரைப் பார்த்ததனால் வந்த வினை இது. நேற்றிரவு மட்டும் அவரைப் பற்றிய கனவில் ஒரு மாறுதல் எற்பட்டது. அந்த ஒற்றைக் கண் மனிதரைப் பற்றிய கனவில் நேற்றைய அனுபவம் மட்டும் எனக்கு ஒரு புதுமை. காட்டு வழியில் ஓர் இடத்தில் நாலைந்து முரட்டு மனிதர்களாகச் சேர்ந்துகொண்டு அவரை அடித்துக் கொன்று விடுகிறாற் போலக் கனவு கண்டேன்.”

கனவில் தானே அப்படி நடந்தது? உண்மையாகவே அப்படி நடந்திருந்தால் கூட நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் பதுமை! அப்படி அடிபட்டுச் சாக வேண்டிய பெரிய கொடும்பாவிதான் அவன். ஆயினும் இதற்குள் சாகமாட்டான் அவன். சாவையே ஏமாற்றி அனுப்பிவிடக் கூடிய கொடுந்துணிவும் அவனுக்கு உண்டு. அன்று நீயும் நானும் அவன் கடலில் மிதந்து சீரழிந்ததைப் பார்த்தோம் அல்லவா? அப்படி மிதப்பதும், நீந்துவதும் கூட அவனுக்குத் துன்பமில்லை. அவனும் அவனை வைத்து ஆளும் பெருநிதிச் செல்வரும் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கடல் பயணத்திலும், கடல் கடந்து வாணிகம் செய்வதிலுமே கழித்தவர்கள். இந்த இரண்டு மூன்று நாட்களாய்க் கப்பல் பயணம் செய்துகொண்டு வருகிற நாமே இத்தனை யோசனை தூரம்தான் கடக்க முடிந்திருக்கிறது. ஆனால் அந்த ஒற்றைக் கண் வேங்கையோ இதற்குள் நீந்தியே பூம்புகாரின் கரைக்குள் போய்ச் சேர்ந்திருக்கும் என்றான் மணிமார்பன்.

போதும்! இரையாதீர்கள். அதோ இந்தக் கப்பலின் கோடியில் அவர்கள் ஏதோ ஆழ்ந்த ஈடுபாட்டுடன் தங்களுக்குள் தனியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இரைவது, அவர்களுடைய பேச்சுக்கு இடையூறாக முடியலாமோ, என்னவோ?” என்று சொல்லிக் கொண்டே தன் மனைவி பதுமை அப்போது சுட்டிக் காண்பித்த பகுதியில் பார்த்த மணிமார்பன் பெரிதும் வியப்பு அடைந்தான்.

குளிர்ந்த காற்று வீசும் இந்த வைகறை வேளையில் இளங்குமரனும் வளநாடுடையாரும் எதைப்பற்றி இவ்வளவு ஈடுபட்டுத் தனிமையில் பேசிக்கொண்டிருக்க முடியும் என்று அவனுக்கே புரிந்துகொள்ள முடியவில்லை.

வீரசோழிய வளநாடுடையாரின் முகபாவத்தி லிருந்து அவர் இளங்குமரனிடம் ஏதோ கடுமையான விஷயத்தை வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. இளங்குமரனின் முகமோ மலர்ச்சி குன்றாமலே அவர் கூறுவனவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் சாயலைக் காட்டியது. இடையிடையே அவர் கோபமாகக் கூறுவனவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கும் சாயலைக் காட்டியது. இடையிடையே அவர் கோபமாகக் கூறுவனவற்றைக் கேட்டு அவன் புன்முறுவல் பூப்பதையும் மணிமார்பன் கவனித்தான். தன் ஆவலை அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. “பதுமை நீ இங்கேயே இரு என்று கூறிவிட்டு வளநாடுடையாரும் இளங்குமரனும் பேசிக் கொண்டிருந்த பகுதிக்கு மிக அருகில் ஒரு பாய் மரத்தின் மறைவில் போய்த் தனக்கு அவர்கள் தெரியும் படியாகவும் தன்னை அவர்கள் பார்த்துவிட முடியாதபடியும் நின்று கொண்டான் மணிமார்பன். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை அவன் அங்கிருந்து நன்றாகக் கேட்க முடிந்தது. வளநாடுடையார் ஆத்திரத்தோடு இளங்குமரனைக் கேட்டுக் கொண்டிருந்தார்:

நீ இவ்வளவு பெரிய கோழையாக மாறியிருப்பாய் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லை தம்பீ! நீ சென்று கொண்டிருக்கிற கப்பலையே தீக்கிரையாக்கி அழித்து விடும் திட்டத்தோடு வந்து கொடியவர்கள் தீப்பந்தங்களை வீசும்போது நான் அருளாளன் என்னிடம் இதற்கு எதிர்ப்பு இல்லை என்று நீ எனக்கு மறுமொழி கூறுகிறாய். நடந்து மறந்துபோன நிகழ்ச்சியை மறுபடியும் நினைவூட்டிப் பேசுகிறேனே என்று நீ என்மேல் வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்ப்புக்கு முன்னால் துறவியாக நின்றுவிடுவது கருணை மறம் என்று நீ எண்ணிக் கொண்டிருக்கிறாய் போல் தோன்றுகிறது. ஏலாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் அன்பு செலுத்திக் கருணை காட்டுவதுதான் கருணை மறம். கொடியவர்களை எதிர்க்க வேண்டிய வேளையில் கைகட்டி நிற்பதும் கருணை மறம் காட்டுவதும் உன் ஆண்மைக்கு அழகில்லை...”

பெரியவரே! நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அறிவினாலும் மனத்தினாலும் வாழ விரும்புகிறவர்கள் உலகில் புதிய ஆண்மை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள். அதுதான் சான்றாண்மை. சால்பை ஆள்வதுதான் சாற்றாண்மை. சான்றாண்மைக் குணத்தை நம்புகிறவர்கள், எதையும் எதிர்ப்பதை வீரமாகக் கொள்வதில்லை. பொறுத்து நிற்பதைத்தான் வீரமாகக் கொள்கிறார்கள். எதையும் எதிர்த்துக் குமுறி நிற்பதுதான் வீரமென்று நம்பிக் கொண்டு நான் வாழ்ந்த காலமும் உண்டு. அப்போது உடல் வலிமையை மட்டும் நம்புகிற பேராண்மையாளனாக இருந்தேன் நான். இப்போதோ உடல் வலிமையில் பெரிது என்று எண்ணுகிற சான்றாண்மையாளனாக என்னை மாற்றி விட்டார் திருநாங்கூர் அடிகள். இப்படி நான் சான்றாண்மை வீரனாக மாறியதைத் தானே நீங்கள் பெரிய கோழைத்தனம் என்று குறிப்பிடுகிறீர்கள்?” எனச் சிரித்தபடியே இளங்குமரன் அவருக்கு மறுமொழி கூறினான். வளநாடுடையார் மீண்டும் அவனைக் கேட்டார்.

உடம்பின் வலிமையால் நீ பலரை எதிர்க்க வேண்டிய அவசியம் மறுபடியும் உன் வாழ்வில் எப்போதாவது நேர்ந்தால் நீ என்ன செய்வாய்?”

அப்படிப்பட்ட துன்பங்களினால் என்னுடைய சான்றாண்மை வலுவடையுமே ஒழியக் குன்றாது. துக்க நிவாரணம் தேடும்போதுதான் மனித மனம் பிரகாசித்து ஒளிரும் என்று நான் நம்புகிறேன், பெரியவரே! சுடச்சுட ஒளிரும் பொன்போல் கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களிலும், கவலைப்படத் தகுந்த துக்கங்களிலும் வெதும்பி, வெதும்பி இறுதியில் உணர்ச்சிகளைக் கடந்து போய் நின்று ஒளிர்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்று என் ஆசிரியராகிய திருநாங்கூர்த் தவச் செல்வர் எனக்கு அருளுரை கூறியிருக்கிறார். கருணை மறமும்கூட அகங்காரத்துக்கு இடமுண்டாக்கலாம். ‘நாம் நிறையக் கருணை செலுத்துகிறோம் என்று நினைத்து அதனாலேயே மனம் வீங்குவதுகூடப் பாவம்தான். கருணை மறவனிலும் மேலே உயர்ந்து சான்றாண்மை மறவனாக எல்லையற்ற நிதானத்தில் போய் நின்றுகொண்டு இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டும்போல் ஆசையாக இருக்கிறது எனக்கு. திருநாங்கூரில் கற்று நிறைந்த பின் பூம்புகாரின் வீதிகளிலும் சமயவாதிகளின் பட்டி மண்டபங்களிலும், இப்போது, உங்களோடு இந்தக் கப்பலிலும் நான் திரிந்து கொண்டிருப்பது கூட உலக அநுபவத்தில் தோய்ந்து தோய்ந்து அதிலிருந்தும் ஞானத்தைக் கற்பதற்காகத்தான். சேற்றில் பிறந்தும் சேறு படாமல் மேலெழுந்து மலர்கிற தாமரையைப் போல் இந்த உலகியல்கள் என்னை மேல் நோக்கி மலர்விக்கத் துணை புரிய வேண்டுமே ஒழியக் கீழே தள்ளி மறுபடியும் அழுக்கில் புரட்டி எடுத்துவிடக் கூடாது.”

இவற்றைச் சொல்லும்பொழுது நேர்கிழக்கே உதித்துக் கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் எல்லாம் இளங்குமரனின் முகத்தில் பட்டு அந்த அழகிய முகத்தைத் தெய்வீகப் பொற் சுடராக்கின. அந்தக் கணத்தில் அப்படியே கைகூப்பி வணங்கி விடலாம் போலத் தூய்மையாய்த் தெரிந்த அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த வளநாடுடையாருக்குக் கோபம் வரவில்லை. இனம் புரியாத தயக்கத்தோடு அவர் அவனை நோக்கி மேலும் சிலவற்றை வற்புறுத்திக் கூறினார்.

---------

மணிபல்லவம் -நான்காம் பாகம்

24. ஏழாற்றுப் பிரிவு

 

சான்றாண்மை வீரம் என்று இளங்குமரன் எதைச் சொல்லிப் பெருமைப்பட்டானோ அதை அவனிடமே மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினார் வீரசோழிய வளநாடுடையார்:

தம்பீ! உன்னுடைய சொற்கள் என்னால் மறுக்க முடியாதவையாயிருக்கின்றன. ஆனால் நான் இந்த உலக வாழ்க்கையில் உன்னைவிட மூத்தவன். அதிக அநுபவங்களை உடையவன். நீ உடல் வலிமையைப் பயன்படுத்திப் போரிட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உன் வாழ்வில் வரலாமென்றே எனக்குத் தோன்றுகிறது.”

இதைக் கேட்டு இளங்குமரன் மறுமொழி கூறாமல் சிரித்தான். அவனுடைய இந்தச் சிரிப்பினால் வளநாடுடையாரின் நெஞ்சில் ஆத்திரம் பொங்குவதை அவருடைய முகமும் கண்களும் காட்டின. மறுபடி அவர் அவனிடம் பேசிய சொற்களிலும் ஆத்திரம்தான் தொனித்தது.

எனக்கென்ன வந்தது? இந்தத் தள்ளாத வயதில் இப்படியெல்லாம் கடலிலும், கப்பலிலும் உன்னை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு நான் அலைவதை நீயே விரும்பவில்லையானால் இந்தக் கணமே என் முயற்சி களை நான் கைவிட்டு விடலாம். ஆனால் இப்படிச் செய்வதாக வேறொருவருக்கு வாக்குக் கொடுத்து விட்டதன் காரணமாக இதை நான் செய்தாக வேண்டியிருக்கிறது. நீயோ என் வார்த்தைகளைச் செவியேற்றுக் கொள்ளாமலே என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்.”

கேட்கிறவர் பரிதாபம் கொள்ளத்தக்க சொற்களில் அவர் இப்படிக் கூறியபோது இதைக் கேட்ட இளங்குமரனுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. காரணமின்றி அந்த முதியவருடைய மனத்தைப் புண்படுத்தும் சொற்களைத் தான் பேசி விடலாகாது என்று எண்ணிக் கொண்டே பரிவுடன் அவரருகிற் சென்று மறுமொழி கூறினான் அவன்:

உங்களோடு பயணம் புறப்பட்டு வந்ததற்காகவோ, அலைவதற்காகவோ நான் வருந்துவதாக நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது ஐயா! வலிமை என்று நீங்கள் கூறினர்களே, அதைப்பற்றி மட்டும்தான் நான் உங்களோடு கருத்து வேறுபாடு கொண்டு சிரித்தேன். கொன்று குவிப்பதையும் பிறரை அழித்தொழிப்பதையும்தான் வலிமை என்று நீங்கள் கருதிப் பேசியதாகத் தோன்றியது. நான் அவற்றை வலிமையாகக் கருதாததனால் தான் சிரித்தேன். தன் காலடியில் அடைக்கலம் என்று வந்து விழுந்த புறாவைத் துரத்திக் கொண்டு தொடர்ந்த வேடனைத் தன் உடல் வலிமையாலும் ஆட்சியின் படை வலிமையாலும்தானே ஓட ஓட விரட்ட முடியும் என்று தெரிந்திருந்தும், அந்த வேடன் அப்போது எதைத் தன்னுரிமையாக முன் நிறுத்தி வாதிட்டானோ அந்தக் கருத்தின் வலிமையை மறுக்க முடியாமல் உடம்பிலிருந்து சதையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் வலிமை மெய்யான வீரம் அல்லவா? போரிடுவதும், எதிர்ப்பதும், அழிப்பதும்தான் மனிதனுடைய வலிமை என்று சொல்லிப் புகழுவீர்களானால் பிறருக்காக உயிரையும் உடம்பையும் அழித்துக் கொள்வதற்குக் கூடத் துணிகிற சிபி போன்றவர்களை இன்னும் அதிகமான ஆற்றலுள்ள வார்த்தையால் அல்லவா புகழ வேண்டும்? நான் அதை எண்ணித்தான் சிரித்தேன்...”

சிரிப்பாய் தம்பீ! சிரிப்பாய், நீ ஏன் சிரிக்க மாட்டாய்? இப்படிப் பேசுவதைத் தவிர வேறெதையும் திருநாங்கூரில் போய் நீ கற்றுக்கொண்டு வரவில்லை போலிருக்கிறது? நல்ல பிள்ளையாயிருந்து என் சொற்படி கேட்டு இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்னால் உன்னை நான் திருநாங்கூரில் வந்து முதல் முறை அழைத்தபோதே என்னோடு இந்தத் தீவுக்குப் புறப்பட்டு வந்திருந்தால் உன்னுடைய வாழ்க்கையில் இதற்குள் எவ்வளவோ நல்ல மாறுதல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கும்

என்னென்ன நல்ல மாறுதல்கள் எல்லாம் ஏற்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேனோ, அவையெல்லாம் என் வாழ்வில் இப்போதே நிறைந்த அளவில் ஏற்பட்டு விட்டன ஐயா! என் மனம் நிறைய எல்லையற்ற கருணை எப்போதும் பெருகி நிற்கும்படி நான் வாழ வேண்டும். அந்தக் கருணைதான் வீரம் என்று எனக்குத் தோன்றுகிறது. அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் எப்போதும் எங்கும் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பதுதான். அவ்வாறு நினைக்கும் வலிமைதான் இப்போது என்னிடம் மீதமிருக்கிறது. மற்ற வலிமைகளை எல்லாம்இவற்றை இனி இழந்துவிடத் தான் வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு இழந்தாற்போல நானே படிப்படியாய் இழந்துவிட்டேன். இப்படி அவற்றையெல்லாம் இழந்து விட்டு வெறும் கருணை மறவனாக நிற்கும் என்னிடம் வந்து, ‘மறுபடி உடல் வலிமையைக் காட்டிப் போரிட வேண்டிய காலம் உன்வாழ்வில் வரலாம் - என்று நீங்கள் கூறிய வார்த்தைகளே எனக்குச் சிரிப்பு மூட்டின.”

இவ்வாறு இளங்குமரன் வளநாடுடையாருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்தபோது கப்பல் தலைவனு டைய எச்சரிக்கைக் குரல் குறுக்கிட்டுப் பெரிதாக ஒலித்தது. அலைகளின் நெருக்கமும் குமுறுலும் அதிகமாயிருப்பதனால் எல்லாரும் கீழ்த்தளத்துக்கு வந்து பாதுகாப்பாயிருக்க வேண்டுமென்று கப்பல் தலைவன் உரத்த குரலில் கட்டளையிட்டான். குடை சுற்றி ஆடுவதுபோல் மரக்கலம் இரண்டு பக்கமும் சாய்ந்து சாய்ந்து நிமிரத் தொடங்கியிருந்தது. கப்பல் தலைவன் அவர்களருகே வந்து மேலும் விளக்கமாகக் கூறினான்:

ஐயா! இந்த இடத்திலிருந்து இன்னும் சிறிது தொலைவுவரை இது ஒரு பெரிய நீர்ச்சந்தி. நாக நாட்டுப் பெருந்தீவின் ஆட்சிக்கு அடங்கிய ஏழு சிறு தீவுகளை ஊடறுத்துக் கொண்டு கடல் ஒன்று சேருகிற இடம் இது. ஏழாற்றுப் பிரிவு என்றும் ஏமாற்றுக் கடவு என்றும் சொல்லிச் சொல்லிக் கப்பல்காரர்கள் பயந்து கொண்டே பயணம் செய்து கடக்க வேண்டிய பகுதியில் இப்போது நாமும் நுழைந்துவிட்டோம். மிகவும் கவன மாக இந்த ஏழாற்றுத் துறையைக் கடந்துவிட்டால் நாக நாட்டுப் பெருந்தீவகத்தின் நுனியை அடையலாம். பெருந்தீவகத்தின் நுனியில் மேற்குக் கரையைச் சார்ந்த சங்குவேலி என்னும் அழகிய துறைமுகத்தில் இறங்கி மிக அருகிலுள்ள மணிநாகபுரத்தில் சில நாழிகை தங்குவது புத்த பூர்ணிமைக்கு யாத்திரை செய்பவர்கள் எல்லாரும் அனுசரிக்க வேண்டிய வழக்கம் ஆகும்.

மணிநாகபுரம்* நாகநாட்டுத் தலைநகர். அது இரத்தினங்களும் முத்துக்களும், மணிகளும் நிறைந்து செல்வ வளம் கொழிக்கும் நகரம். நாகர்கள் வழிபாடு செய்யும் இரத்தின மயமான நாகதெய்வக் கோட்டம் ஒன்றும் அந்த நகரத்தின் நடுவே உண்டு. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய மணிபீடமாக அதைச் சொல்லுவார்கள். மணிநாகபுரத்தின் மேற்குக் கரை மிகவும் அழகானது. கரைநெடுகிலும் வேலியிட்டாற் போல் சங்குகளும், பவழக் கொடிகளும் ஒதுக்கப்பட்டுக் கிடப்பது கண்கொள்ளாக் காட்சியாயிருப்பதை நீங்களே காண்பீர்கள். சங்குவேலி என்று அந்தத் துறைக்குப் பெயர் வாய்த்த காரணமே இதுதான். இங்குள்ள ஆரவாரமான கடல் நிலையும் அலைகளின் மிகுதியும்தான் அந்தக் கரையில் வேலியிட்டாற் போலச் சங்குகள் ஒதுங்கக் காரணம் என்று சொல்லுகிறார்கள். சங்குவேலியிலிருந்து பிற்பகலில் புறப்பட்டால் அதே கரையை ஒட்டினாற்போல நாலைந்து நாழிகைப் பயணத்துக்குள் மணிபல்லவத் தீவை அடைந்து விடலாம். பெருந்தீவகத்தி லிருந்து சற்றே பிரிந்து கடலில் மிதக்கும் அழகிய பசுந்தளிர்போல் மணிபல்லவத்தீவு தெரியும். நாளைக்குப் பொழுது புலர்ந்ததும் புத்த பூர்ணிமையாயிருப்பதால் இன்று மாலை நாம் போய்ச் சேரும்போது அந்தத் தீவு கோலாகலமாயிருக்கும் என்று அந்த இடத்தின் அழகுகளைத் தான் சொல்லி வருணித்துக் கொண்டிருந்த திறமையால், மரக்கலம் அப்போது கடந்து சென்று கொண்டிருந்த ஏழாற்றுப் பிரிவின் பயங்கரத்தில் அவர்கள் கவனம் செல்லாமல் காத்தான் கப்பல் தலைவன்.

*ஆதாரம்: யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பான வைபவ விமரிசனம், மகாவமிசம்.

புத்த பூர்ணிமைக்காகப் பூம்புகாரிலிருந்து முன்பே புறப்பட்டிருக்கும் கப்பல்களைக் கூடச் சங்குவேலியில் நாம் சந்திக்கலாம் அல்லவா?” என்று இளங்குமரன் கப்பல் தலைவனைக் கேட்டான்.

மணிநாகபுரம் நாகநாட்டுத் தீவகத்தின் பெரிய பட்டினம். மரபுக்காக, அந்தத் தீவில் கப்பலை நிறுத்தி இறங்காதவர்கள் கூட அந்த நகரத்தின் அழகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றாவது சில நாழிகை அங்கு இறங்கித் தங்குவார்கள். அதனால் நீங்கள் பல நாட்டு மரக்கலங்களையும் மக்களையும் சங்குவேலியிலும் மணி நாகபுரத்து வீதிகளிலும் சந்திக்க முடியும். மணிபீடத்தை வணங்குவதற்காகச் சிலரும், ஏமாற்றுப் பிரிவைத் துன்பமின்றிக் கடந்ததற்காக நாகர் கோட்டத்தில் வழிபாடியற்றி வணங்குவதற்குச் சிலரும், நாகர்களின் இரத்தின மயமான பட்டினத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சிலருமாக அங்கே எல்லாவிதமான நோக்கங் களையுடைய எல்லாரும் இறங்கி விட்டுத்தான் அப்புறம் புத்த பூர்ணிமைக்காகப் போவார்கள் என்று கப்பல் தலைவன் தனக்கு மறுமொழி கூறியதைக் கேட்டபின் விசாகையையும் அவளோடு காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கும் இந்திர விகாரத்து துறவிகளையும் மணிநாகபுரத்தில் தான் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை இளங்குமரனுக்கு ஏற்பட்டது.

கப்பல் தலைவனுடைய எச்சரிக்கையின் காரணமாக ஏழாற்றுப் பிரிவைக் கடக்கும்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து நடுத்தளத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த மணிமார்பனும் பதுமையும் மணிநாகபுரத்தின் அழகுகளைப் பற்றிக் கப்பல் தலைவன் கூறியவற்றைக் கேட்டபின் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டனர். பதுமை தன் கணவன் காதருகில் வந்து குறும்புத்தனமான பேச்சு ஒன்றைத் தொடங்கினாள்: “அன்பரே! இந்த மணிநாகபுரத்தில் பெண்கள் எல்லோரும் பேரழகிகளாக இருப்பார்களாம். மகாபாரதத்தில் அருச்சுனன் இந்தத் தீவுக்கு வந்தபோது சித்தித்ராங்கதை என்ற நாகநாட்டுப் பேரழகியின் எழிலில் மயங்கி அவளை மணந்து கொண்டு விட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் நான். இங்கே இரத்தினங்களுக்கு அடுத்தபடி மதிப்புள்ளவர்கள் அழகிய பெண்கள்தானாம். எனக்கு உங்கள்மேல் கோபம் வராமலிருக்க வேண்டுமானால் தயைகூர்ந்து இந்த மணிநாக்புரத்தில் இறங்கிச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கரை ஏறுகிறவரை நீங்கள் உங்களுடைய ஓவியக் கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும். இல்லா விட்டால் நீங்களும்கூட அருச்சுனனாகி விடுவீர்கள்...”

கவலைப்படாதே பதுமை! உன்னைவிடப் பேரழகி இந்த உலகத்திலேயே கிடையாது என்று நான் என் மனத்தில் முடிபோட்டுக் கொண்டாகிவிட்டது. அப்படி எல்லாம் ஒன்றும் இனிமேல் நேர்ந்துவிடாது. ஆனால் நான் ஓர் ஓவியன் என்ற முறையில் உலகத்து அழகுகளைப் பார்க்கும் உரிமையை நீ என்னிடமிருந்து பறிக்கலாகாது என்று சிரித்துக்கொண்டே சொன்னான் மணிமார்பன்.

பார்த்தாலே மனம் பறிகொடுக்காமல் இருக்க முடியாதாம். நாக நங்கையர்கள் அப்படிப்பட்ட அழகுடையவர்களாம்.”

பூம்புகாரின் அரச மரபினர். பலமுறை இந்தத் தீவுக்கு வந்து திரும்பும் போதெல்லாம் நீ கூறுகிற நிலைக்கு ஆளாகி மனம் பறிக்கொடுத்திருப்பதாகக் கதை கதையாகச் சொல்லுவார்கள் பதுமை! ஆனால் நான் வெறும் ஓவியன்தான். எந்த அரச மரபையும் சேர்ந்தவன் இல்லை...”

இருப்பினும் ஆசைகள் எல்லோருக்கும் உண்டே ஐயா?”

இதோ இவரைத் தவிர என்று சொல்லியபடியே மணிமார்பன் யாரும் பார்த்துவிடாமல் தன் மனைவிக்கு இளங்குமரனைச் சுட்டிக் காட்டினான். பதுமை சிரித்துக் கொண்டே மேலும் கூறினாள்:

மணிநாகபுரத்திலிருந்து வெளியேறுகிறவரை இந்த ஏழாற்றுப் பிரிவில் கப்பல் பயந்து கொண்டே போவதைப் போல் உங்கள் மனத்தையும் கண்களையும் நீங்கள் இங்கே கவிழ்ந்து விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.”

என் மனமாகிய கப்பலைச் செலுத்தும் தலைவியாக நீதான் இருக்கிறாயே?” என்று சொல்லிச் சிரித்தான் ஓவியன்.

-------------

 

மணிபல்லவம் -நான்காம் பாகம்

25. மணிநாகபுரத்து மண்

 

பயப்பட்டதற்கு ஏற்ப எந்தத் தீய விளைவும் இல்லாமலே மெல்ல மெல்ல ஏழாற்றுப் பிரிவின் ஆரவாரம் மிக்க கடற்பகுதியைக் கடந்து முன்னேறியிருந்தார்கள் அவர்கள். தூரத்தில் நேர் எதிரே மரகதப் பசுமை மின்னிடத் தெரிந்த தீவை எல்லாருக்கும் சுட்டிக் காண்பித்தான் கப்பல் தலைவன்.

அதோ பாருங்கள்! எவ்வளவு ஆனந்தமான காட்சி! சங்குவேலித் துறையும் அப்பால் மணிநாகபுரமும் தெரிகின்றன! துறையை நோக்கிச் சாரி சாரியாகக் கப்பல்களும் படகுகளும் நெருங்கும் காட்சி கடற்பரப்பில் வியூகம் வகுத்தாற் போலத் தோன்றுகிறதே!” என்று வியந்து கூறியபடியே அவன் காண்பித்த காட்சியை எல்லாரும் கண்டார்கள். அந்தக் காட்சியைக் கண்டபின் இளங்குமரன் கண்களை மூடிக்கொண்டு சிந்தனையை உள்முகமாகத் திருப்பித் தியானத்தில் மூழ்கினான்.

இவ்வளவு அழகான கடலும் அதனிடையே இத்துணை வனப்பு வாய்ந்த தீவும் தோன்றக் காரணமா யிருந்த முழுமுதற் பேரழகு எதுவோ அதை என் நெஞ்சும் உணர்வுகளும் இந்தக் கணமே வணங்கு கின்றன என்று தூய்மையான அழகுணர்ச்சியில் தோய்ந்து நின்றான் அவன். தொடுவானமாகத் தொலைவில் தெரிந்த கடலும் தீயும் ஆகாயமும் சந்திக்கிற கோட்டில் மயில் கழுத்து நிறம்போலத் தெரிந்த எழுதாத வண்ணத்தை மூடிய கண்களுடனேயே தன் நினைவுக்குக் கொணர்ந்து தந்து கொண்டு எண்ணத்தில் ஆழ்ந்தான் அவன்.

அவனிடம் சற்று முன் பேச்சில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக விலகியிருந்த வளநாடுடையார் இப்போது மீண்டும் அவன் அருகே வந்தார். அவனோடு ஏதோ பேசுவதற்கு நிற்கிறவர் போல் தயங்கிக் காத்து நின்றார். இளங்குமரன் கண்கள் திறந்து பார்த்ததும் அவர் அங்கு வந்து நிற்பதையும் நிற்கும் நோக்கத்தையும் புரிந்து கொண்டான்.

தம்பீ! இப்போதாவது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் நான் சொல்வதைக் கவனமாகக் கேள். வீரம் என்பது உடம்பின் வலிமையாகிய ஆற்றலா, மனத்தின் வலிமையாகிய கருணையா என்பதைப் பற்றி இப்போது நான் உன்னிடம் வாதிட வரவில்லை. அதைப்பற்றி நாம் இதுவரை பேசியவற்றைக் கூட நீ இந்தக் கணத்திலேயே மறந்துவிடலாம். இப்போது நான் சொல்லப் போவது இங்கே பயணம் செய்து வந்ததன் அவசியத்தைப் பற்றியே ஆகும். பூம்புகார்த் துறையிலிருந்து நாம் புறப்படுவதற்கு முன் நீலநாக மறவர் உன்னிடம் கூறியவற்றை இப்போது மீண்டும் நினைவூட்டிக் கொள்.

இந்தப் பயணத்தினால் உனக்கு நிறைய நன்மையிருக்கிறது. நீ ஆலமுற்றத்தில் உடம்பின் வலிமையைக் கற்றுத் தெரிந்து கொண்டாய். திருநாங்கூரில் அறிவின் வலிமையைக் கற்றுத் தெரிந்துகொண்டாய். இப்போது மணிபல்லவத்தில் போய் உன்னைத் தெரிந்துகொண்டு வா - என்று அவர் கூறியதை நீ என்னவென்று புரிந்து கொண்டாய்?” என்று வளநாடுடையார் தன்னைக் கேட்டபோது அவருக்கு என்ன மாற்றம் கூறுவது என்று சிந்தித்துச் சிறிது நேரம் தயங்கினான் இளங்குமரன். பின்பு அவருக்கு மறுமொழி கூறலானான்:

எல்லாரும் அந்த வார்த்தைகளிலிருந்து என்ன புரிந்துகொள்ள முடியுமோ அதைத்தான் நானும் புரிந்து கொண்டேன். பொதுவாக மணிபல்லவத்துக்குப் போகிறவர்களுக்குப் பழம் பிறவியைப் பற்றிய ஞானம் உண்டாகும் என்று பூம்புகாரில் நீண்ட காலமாக ஒரு புனித நம்பிக்கை இருந்து வருகிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டுதான் அவரும் என்னை அப்படி வாழ்த்தி வழியனுப்பியிருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். என்னுடைய வாழ்வில் இதுவரை ஏற்பட்டிருக்கிற ஒவ்வொரு பெரிய மாறுதலும் பூம்புகாரில் ஏதாவதொரு இந்திரவிழாத் தொடங்கும் போதாவது முடிந்த உடனேயாவது நேர்ந்திருக்கிறது. இந்த யாத்திரையிலும் அப்படி ஏதேனும் நேரலாமென்றுதான் புறப்பட்டபோது என் மனத்தில் அவதி ஞானமாக ஓர் உணர்வு பிறந்தது. அந்த ஒரு கணம் மட்டும்தான் அதைப்பற்றி நான் நினைத்தேன். அப்புறம் இப்போது மறந்துவிட்டேன். எது நேர்ந்தாலும் தாங்கிக் கொண்டு அந்த அநுபவத்தினாலும் வளர்ந்து நிற்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்டு விட்டேன். மணிபல்லவத்துக்குப் பயணம் புறப்பட வேண்டும் என்று நீங்கள் ஆலமுற்றத்தில் வந்து என்னை அழைத்த போதுகூட நான் அப்படி நினைத்துக் கொண்டுதான் புறப்பட்டேன்.”

இப்படி இந்த வார்த்தைகளை வெகு நிதானமாகத் தன்னிடம் பேசிவிட்டு நின்ற இளங்குமரனைப் பார்த்து அவனுக்கு அப்போது தான் சொல்லியாக வேண்டிய ஓர் உண்மையை எப்படித் தொடங்கி எந்த விதமாகச் சொல்லி முடிப்பதென்று மலைத்துத் தயங்கினார் வளநாடுடையார். அவர் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு அவருக்கே தொடங்கும் விதமும், முடிக்கும் விதமும் புலப்படவில்லை.

இளங்குமரனுக்கு முன் அவர் இவ்வாறு தயங்கி நின்றிருந்த போது கரை நெருங்கியிருந்தது. கப்பல் தலைவனும் ஊழியர்களும் மரக்கலத்தைக் கரை சேர்த்து நிறுத்தி நங்கூரம் பாய்ச்சுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். மணிமார்பனும் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருந்தான். அவன் மனைவி பதுமை கப்பல் தளத்தின் ஒரு பகுதியில் நின்று மணிநாகபுரத்தின் மாடமாளிகை களையும் அவற்றின் மேற்பகுதிகளில் தெரிந்த படநாகக் கொடிகளையும், வரிசையாய்ச் சங்கு ஒதுங்கிய கரையையும் பார்த்து வியந்து கொண்டிருந்தாள். கரையருகே ஆழம் குறைவாயிருந்ததினால் சிறிது தொலைவிலேயே கப்பலை நிறுத்த வேண்டியிருந்தது.

இந்த நிலையில் வளநாடுடையாருக்கும் இளங்குமரனுக்கும் கப்பல் தளத்தில் போதுமான தனிமை வாய்த்திருந்தது. நாகநாட்டுப் பெருந்தீவில் இறங்கிக் கரை சேருவதற்கு முன்பே தனது நினைவிலிருப்பதை அந்தப் பிள்ளையாண்டானிடம் சொல்லத் தொடங்கிவிட் வேண்டுமென்று தவித்தார் அவர். அவருடைய மனமோ நினைவில் மூடுண்டு கிடக்கும் அந்த இரகசியத்தை உடனே அவனிடம் சொல்லிவிடப் பறந்தது. அப்படி உடனே சொல்லிவிடுவதும் பொருத்தமானதாக அமையாதென்று மெதுவாக அந்த விநாடியில் எப்படித் தொடங்க வேண்டுமென்று தோன்றியதோ அப்படியே தொடங்கிச் சொல்லலானார் அவர்:

தம்பீ! நீ பூம்புகாரிலிருந்து திருநாங்கூருக்குப் புறப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பழைய இந்திர விழாவை உனக்கு நினைவிருக்கிறதல்லவா? அந்த இந்திர விழாவிற்கு முதல் நாள் பின்னிரவில்தான் சம்பாபதி வனத்தில் அடிபட்டுக் கிடந்த அருட்செல்வ முனிவரை நீ எங்கள் வீட்டுக்குத் தூக்கிவந்து தங்கச் செய்து காப்பாற்றினாய். அன்றைக்கு ஒருநாள் காலையில் உன்னை என் மகள் முல்லையோடு பூத சதுக்கத்துக்குத் துணையாக அனுப்பிய பின்பு புறவீதியில் என் இல்லத்தில் நானும் உன்னை வளர்த்து ஆளாக்கிய அருட்செல்வ முனிவரும் தனியாக இருந்தோம். அப்படி தனியாயிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அன்று நான் அவரிடம் அந்தரங்கமாக ஒரு கேள்வி கேட்டேன். அது வேறு எந்தக் கேள்வியுமில்லை. உன்னைப் பற்றிய கேள்விதான்.

துறவிகளுக்கு ஒளிவு மறைவு கூடாதென்பார்கள். நீங்களோ மிகமிகப் பெரிய செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்துக் காப்பாற்றி வருகிறீர்கள், இன்று வரை நீங்கள் வளர்த்து ஆளாக்கிய இந்தப் பிள்ளை இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப்பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்களே?’ - என்று கேட்டேன். ‘என் இதயத்துக்குள்ளேயே நான் இப்போது இரண்டாவது முறையாக எண்ணிப் பார்ப்பதற்குக்கூட பயப்படுகிற செய்திகளை உங்களிடம் எப்படிச் சொல்ல முடியும் என்று அருட்செல்வ முனிவர் அன்று எனக்கு மறுமொழி கூறினார். நான் மேலும் தூண்டிக் கேட்டபோது அந்த உண்மைகளையெல்லாம் இப்போது வெளியிடுவதனால் இளங்குமரனுக்குப் பகைவர்களை அதிகமாக உண்டாக்க நேரிடும் என்று மறுத்துவிட்டார்.”

வளநாடுடையார் இவ்வளவில் பேச்சை நிறுத்தி விட்டு இளங்குமரனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தினால் அவன் கலங்கித் தலைசாய்த்து நின்று கொண்டிருந்தான். நாத் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் குனிந்து தலை நிமிராமலே அவன் வளநாடுடையாரிடம் சொன்னான்.

ஐயா! அந்த முனிவர் என்னுடைய தெய்வம். என்னை வளர்த்து ஆளாக்கியதற்காக நான் அவருக்கு எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருடைய முதுமையில் அவருக்கு நிறையப் பணிவிடைகள் புரிந்து அந்த நன்றிக் கடனையெல்லாம் தீர்த்துக் கொள்ள எண்ணியிருந்தேன். ஆனால் எப்படியோ முடிந்துவிட்டது அவர் வாழ்க்கை. உங்களிடம் அந்தப் பழைய இந்திரவிழாவின் இரண்டாம் நாள் பகலில் என்ன மறுமொழி சொல்லியிருந்தாரோ அதையேதான் அதற்கு முந்திய நாள் இரவு அவர் எனக்கும் சொல்லியிருந்தார். என் தாயைப் பற்றி நான் அவரிடம் கேட்ட போதெல்லாம் அவர் எனக்குப் புதிராகவே இருந்தார். இறுதியாக அந்த ஆண்டு இந்திரவிழா இரவின்போது நான் அறிய விரும்பியதை எனக்குக் கூறுவதற்காக நள்ளிரவில் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடிக்கு என்னை வரச் சொல்லியிருந்தார். அங்கே போய்ச் சேர்ந்தபோதுதான் அன்று எனக்கும் அவருக்கும் அப்படி பயங்கர அநுபவங்கள் ஏற்பட்டன. அப்புறம் அவரும் தம் தவச்சாலை தீப்பட்டதனால் மாண்டு போய்விட்டார். கடைசி கடைசியாக நானும் இந்தப் பூமியையே என் தாயாகவும், வானத்தையே தந்தையாகவும் நினைத்துக்கொண்டு மன அமைதி அடைந்துவிட்டேன் என்று இளங்குமரன் கூறினான். இதற்குள் கப்பலை நங்கூரம் பாய்ச்சியிருந்தார்கள். படகுகளில் இறங்கிக் கரையை அடைய வேண்டு மென்றான் தலைவன். மற்றவர்களையெல்லாம் வேறு படகுகளில் அனுப்பிவிட்டு இளங்குமரனை மட்டும் தனியாக ஒரு படகில் அமரச் செய்து கரைக்கு அழைத்துக் கொண்டு போனார் வளநாடுடையார். படகில் போகும்போது இளங்குமரன் ஆவலோடு எதிர்பார்த்த வேறு ஒரு சந்திப்பும் அவனுக்குக் கரையிலிருந்து கிடைத்துவிட்டது. கரையில் வரைவரையாய்க் குவிந்திருந்த சங்குக் குவியல்களுக்கு அப்பால் விசாகையும் கூட்டத்தினிடையே நின்றிருப்பதை அவன் பார்த்து விட்டான்.

நாக நாட்டுப் பெருந்தீவுக்கு முதல் முனையாகிய மணிநாகபுரத்துத் துறையில் இளங்குமரன் இறங்கி நின்றபோது சிறிது தொலைவில் நின்ற விசாகை அவனருகே வந்து நலம் விசாரித்தாள். அவன் மணிநாகபுரத்து மண்ணில் நின்ற வேளை அவனுடைய வாழ்வில் மிக நல்ல வேளை என்று அவனிடம் அந்தக் கடலே குறிப்பாய் சொல்வதுபோல் புரண்டு வந்த அலையொன்று நாலைந்து பொன்னிறச் சங்குகளை அவன் பாதங்களில் கொணர்ந்து இடுவதென ஒதுக்கியது.

தம்பீ! இந்த மண்ணில் இறங்கியபின் இழந்துவிட்ட நம்பிக்கைகளையெல்லாம் நீ அடையப் போகிறாய். மணி பீடகமும், புத்த பீடிகையும், பழம் பிறவி ஞானத்தைத் தரும் என்கிறார்கள். உனக்கோ இந்தப் பிறவியைப் பற்றிய ஞானமே இந்தத் தீவிலிருந்துதான் கிடைக்கப் போகிறது என்று வளநாடுடையார் அவன் காதருகே வந்து ஆவலோடு கூறினார்.

கடற்கரையில் நிற்கிறபோது காலடியில் தானாகவே சங்கு வந்து ஒதுங்குவது மிகப் பெரிய நற்சகுனம் எனச் சொல்வார்கள் என்றான் ஓவியன் மணிமார்பன். இளங்குமரனுடைய மனம் அந்த மண்ணில் நின்றபோது எதற்காகவோ ஏங்கியது. எதற்காகவோ நெகிழ்ந்தது. எந்த நிறைவையோ எதிர்பார்த்துக் குறைபட்டு நின்றது. அவன் தன் கண்களை மலர விழித்து நிமிர்ந்து பார்த்தான். மறுபடியும் ஒரு பெரிய அலை கடற்கரையோரத்துச் செடியிலிருந்தோ மரத்திலிருந்தோ உதிர்ந்த செந்நிறப் பூங்கொத்து ஒன்றையும் நாலைந்து முத்துச் சிப்பிகளையும் அவன் பாதங்களில் கொணர்ந்து குவித்தது. ‘நிறைக நிறைகஎன்று விசாகை அப்போது அவனை மனம் நிறைய வாழ்த்தினாள்.

------------

நான்காம் பாகம் முற்றும்

 

 

மணிபல்லவம் - மூன்றாம் பாகம் மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)