தீபம் நா. பார்த்தசாரதியின்

மணிபல்லவம் (சரித்திர நாவல்)

பாகம் 5 (நிறை வாழ்வு)
 

உள்ளடக்கம்:

நிறை வாழ்வு

              

1. கருணைமறமும் கழிவிரக்கமும்       

2. குலபதியின் விருந்து     

3. ஓவிய மாடம்        

4. அகக்கண் திறந்தது       

5. விசாகையின் தத்துவம்             

6. பிறந்த கதை        

7. வெறுப்பு வளர்ந்தது       

8. கருத்தில் மூண்ட கனல்

9. நியாயத்தின் குரல்

10. கருணை வெள்ளம்

11. பரிவு பெருகியது

12. காவிய நாயகன்

13. முடியாத கோலம்

14. வழிகள் பிரிகின்றன

15. ஆறாத நெருப்பு

பிரியாவிடை - முடிவுரை

--------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

நிறை வாழ்வு

 

திரு என்ற சொல்லுக்குக்கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்ற பொருள் விரிவு கூறியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள். தத்துவ ஞானிகளோ இன்னும் ஒரு படி மேலே போய், பொருள் உடைமையும் பொருள் சேர்த்து நுகர்வதுவும் திரு அல்ல, அழகு கருணை முதலிய உயர் குணங்கள் இடையறாமல் எண்ணங்களில் நிறைந்திருக்கும் மன நிகழ்ச்சி தான் திரு என்று பொன்னும் பொருளும் சேர்வதைத் திருவாகக் கருதாமல், நிறைந்த மனத்தையே திருவாகக் கூறினார்கள். பெரியவர்களும் அரியவர்களும் கண்ட இந்த நிறை வாழ்வைத் தான் இளங்குமரன் இறுதியாக அடைகிறான். மங்கலமான நற்குணங்களையே நிதியாகக் கொண்டு நிற்கும் போது வாழ்வில் தனக்கு வரும் சோதனைகளை வெல்ல வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்படுகிறது. கொலை என்பது பிறருடைய உயிரையோ, உடல் உறுப்புக்களையோ கொல்வது மட்டுமல்ல, பிறர் அறிவையும் புகழ் முதலாயினவற்றையும் கொன்றுரைப்பது கூடக் கொலை தான் என்றெண்ணிச் சொல்லிலும், நினைப்பிலும் செயலிலும் சான்றாண்மை காத்து வந்த இளங்குமரன் அவற்றைக் கைவிட வேண்டிய சோதனைகளை யெல்லாம் சந்திக்க நேரிடுகிறது. செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்று எண்ணி எண்ணி அந்த எண்ணமே செல்வமாகி நிற்கத் தொடங்கி விட்ட அவன் மனத்திலும் உலகியல் வாழ்வின் சலனங்கள் குறுக்கிடுகின்றன. அறிவின் வலிமையாலும் சேர்த்து வைத்துக் கொண்ட தத்துவ குணங்களின் நிதியாலும் அந்தச் சலனங்களையும் வென்று நிற்கிறான் அவன்.

தன்னுடைய காலடியில் வந்து ஒதுங்கிய சங்குகளையும் பூங்கொத்துக்களையும் குறிப்பிட்டு வளநாடுடையாரும், ஓவியன் மணிமார்பனும், விசாகையும், மணிநாகபுரத்து மண்ணின் பெருமையைச் சொல்லி மங்கல வாழ்த்துக் கூறிய போதும் அவனுடைய உணர்வுகள் தன் வாழ்வில் ஏதோ சில புதிய அநுபவங்களை எதிர் பார்த்தனவேயன்றி எந்த விதமான செருக்கும் அடையவில்லை. பிறருடைய வாழ்த்தும், புகழ் வார்த்தைகளும் தன் மனத்தைக் கிளர்ச்சி கொள்ளச் செய்ய முடிந்த அளவு தனது எண்ணங்களையோ, நம்பிக்கைகளையோ மலிவாக வைத்துக் கொண்டிருக்கும் பலவீனமான வேளைகள் தன் வாழ்வில் வரலாகாது என்று அவன் உறுதியாயிருந்தான். உலகத்தில் தூய்மையான புகழ் என அவன் நம்பியது, ‘நான் பழி வருவன எவற்றையும் எண்ணுவதில்லை; செய்வதில்லை; பேசுவதில்லை என்று ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே சத்யத்தில் மனப்பூர்வமாக நம்பிக்கை வைத்துத் தன்னைச் சோதித்துக் கொள்கிறானே அதுதான்! மெய்யான புகழ் ஒரு மனிதனுடைய ஏதாவதொரு திறமையை மட்டும் சார்ந்து நிற்பதில்லை. அந்தத் திறமையை ஆள்கின்றவன் தன் வாழ்வில் எவ்வளவுக்கு நியாயமான குணங்களைச் சார்ந்து நிற்கிறான் என்பதையும் பொறுத்துத் தான் இருக்கிறது. ‘பழிக்கு அஞ்சுவது தான் பெரும் புகழ். புகழுக்கு ஆசைப் பட்டுத் தவிப்பதுதான் பெரும்பழி என்று தொல்காப்பியருடைய மெய்ப்பாட்டியலில் புகழ் என்னும் பெரு மிதத்தைப் பற்றி இளங்குமரனுக்குக் கற்பிக்கும்போது திருநாங்கூரடிகள் கூறியிருந்தார். அறிவினால் வலிமையடைந்து மனம் வளர்த்த பின் நிறைவு குறைவுகளைப் பற்றிய இந்தப் புதிய தத்துவத்தை உணர்ந்திருந்தான் அவன்.

ஆசைகள் குறைவதே பெரிய நிறைவு. ஆசைகள் குறைந்தால் அவற்றைச் சூழ்ந்திருக்கும் பல துன்பங்களும் குறைந்து விடுகின்றன. மலைமேல் ஏறுகிறவன் கனமான பொருள்களைத் தலைச் சுமையாகச் சுமந்து கொண்டு மேலே போக முடியாதது போல் மனத்தில் ஆசைகளைச் சுமந்துகொண்டு எண்ணங்களால் உயரத்துக்குப் போக முடிவதில்லை. ஆசைகளுக்கு நடுவிலும் ஆசைகளால் குறைந்து நிற்கும் வாழ்வே பண்புகளால் நிறைந்து நிற்கிறது. குறைவில்லாத வாழ்வு எதுவோ அதுவே நிறை வாழ்வு. அந்த வாழ்வுக்கு திரு நிறைந்த மனம் வேண்டும். அது இளங்குமரனுக்கு வாய்த்திருந்தது. குறைகளை முடிக்கத் தவித்துத் தவித்து அதற்காக மனத்தில் எழும் முனைப்பே ஆசை, பற்று, விருப்பம் எல்லாம். ஆசைகள் தேவையில் தொடங்கிக் குறைகளாலே வளர்ந்து துன்பங்களோடு முடிகின்றன. நெடுநாட்களாய் மண்ணில் கிடக்கிற கல்லைப் புரட்டினால் அதன் மறுபுறம் தேளும், பாம்பும், பூரானும் போன்ற நச்சுப் பிராணிகள் இருப்பதை ஒப்ப ஆசைகள் மறுபுறத்தைப் புரட்டிப் பார்த்தால் அந்த மறுபுறத்தில் எத்தனையோ துன்பங்கள் தெரிகின்றன. எனவே ஆசைகள் நிறைந்த வாழ்வை நிறைவாழ்வு என்று இளங்குமரன் நம்பவில்லை.

எல்லையற்ற திரு நிறைந்த மனம், திரு நிறைந்த எண்ணங்கள், ‘உலகமே அன்பு மயமானது - அந்த அன்பே இன்பமயமானது என்ற பாவனையுடன் வாழ்தல், இவையே நிறை வாழ்வு என்று நம்பினான் அவன். தன் வாழ்க்கையின் நம்பிக்கைகள் நிறைந்த வேளையில் மங்கலமான சுப சகுனங்களோடு மணிநாகபுரத்து மண்ணில் இறங்கி நின்ற இளங்குமரன்நிறைக! நிறைக!’ என்று விசாகை தன்னை வாழ்த்திய வாழ்த்துக்களை இப்படிப் பட்ட நிறைவாகவே பாவித்துக் கொண்டான். ஆசைகளால் குறைந்து குணங்களால் நிறைந்த வாழ்வுக்கு அவன் ஆசைப்பட்டான்.

அந்த விநாடியில் அவன் மனம் இடைவிடாமல்என் எண்ணங்களில் திரு நிறைய வேண்டும் என்று உருவேற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை ஆசைப்படும் போதும் மனம் ஒருவிதத்தில் எதற்காகவோ எரிந்து அழிந்து போகிறது. ஆசை என்பது என்றும் நிறைவில்லாத இயல்பையுடையது. நிறைந்த வாழ்வு வேண்டுமானால் நிறைவில்லாத இயல்புகளை நீக்கி விட வேண்டும். மனம் எதற்காகவும் அழியாமல் நிறைந்தே நிற்க வேண்டும் என்ற உறுதியுடனும் அப்படியே அழிந்தாலும் அந்த அழிவானது தங்கம் நெருப்பில் அழிவதைப் போல முன்னிலும் நிறைந்து ஒளிரும் அழிவாக வளர வேண்டும் என்ற எண்ணத்துடனும், உடன் வந்தவர்களோடு மணிநாகபுரத்து மண்ணில் நடந்து சென்றான் இளங்குமரன். புண்ணியப் பேராற்றல் நிறைந்த நாகநாட்டு மண்ணில் இறங்கியபோது அவனுடைய வாழ்வில் ஐந்தாவது பருவம் பிறந்தது. ‘கவலைப்படாதே தம்பீ! உன்னுடைய வாழ்வில் இனிமேல் தான் எல்லாம் இருக்கிறது என்று வளநாடுடையார் கூறிய சொற்களில் ஏதோ பெரிய விளைவுக்கான அர்த்தம் இருக்க வேண்டுமென்று தோன்றினாலும் அது என்ன என்று அவரிடமே கேட்கும் துடிப்பு அப்போது அவனுக்கு ஏற்படவில்லை. ஏதோ வரவிருக்கிறதென்று அவன் மனத்திலேயே ஒருவாறு புரிந்தது. தன்னுடைய வாழ்வில் இப்போது வரவிருக்கும் அனுபவங்கள் எவையோ அவை தன்னை முழுமையாகக் கனிவிக்கப் பயன்படப் போவ தாக உணர்ந்து தன்னுடைய உள்ளத்தையும் உணர்வுகளையும் அவற்றுக்குப் பக்குவமான பாத்திரமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

என்னுடைய எண்ணங்களில் இதற்கு முன்பும் இனியும் நீ ஒரு காவிய நாயகனாக உருவாகிக் கொண்டிருப்பவன் என்று திருநாங்கூர் அடிகள் என்றோ அவனை வாழ்த்திய வாழ்த்துக்கு விளக்கமாய் நிறைகிற வாழ்வு இந்தக் கதையின் ஐந்தாம் பருவத்தில் இளங்குமரனுக்கு எய்துகிறது.

தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளிபெறுதல் தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பில் தூயதாக்குதல் ஆகிய பொற்குணங்கள் இந்தப் பருவத்தில் இளங்குமரனின் வாழ்வில் நிறைந்து விளக்கமாகத் தோன்றுகின்றன. எல்லையற்ற நிதானத்தில் போய் நின்று கொண்டு இந்த உலகத்தைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்ற அவனது எண்ணமும் இந்தப் பருவத்தில் முழுமையாக நிறைகிறது.

----------- 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.1. கருணை மறமும் கழிவிரக்கமும்

 

மறுநாள் பொழுது விடிந்தால் புத்த பூர்ணிமையாதலால் அன்று மணிநாகபுரத்துத் தெருக்கள் நன்றாக அலங்கரிக்கப் பெற்றிருந்தன. கரையோரங்களில் முத்துக் குளித்தெடுக்கும் முத்துச் சலாபங்களும், உள்நிலப் பகுதிகளில் நாகரத்தினங்களும், வேறு பல்வகை மணிகளும் வளமாக நிறைந்துள்ள அந்தத் தீவின் தலைமையான நகரமாயிருந்ததனால் மணிநாகபுரம், நோக்கிய திசையெல்லாம் செல்வச் செழிப்புக் கொண்டு விளங்கியது. அந்த நகரத்து வீதிகளில் புலிநகக் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்கின. அல்லியும் குவளையும் அலர்ந்த அழகுப் பொய்கைகள் அங்கங்கே தோன்றின. தரையை ஒட்டித் தாழ்ந்து வளர்ந்த புன்னை மரங்களும், மடல் விரித்து மணம் கமழும் தாழை மரங்களும் கடற் காற்றில் ஒரே சீராக ஒலித்துக் கொண்டிருந்தன. வெள்ளியைப் பொடி செய்து குவித்தாற் போல வெள்ளை வெளேரென்று மின்னும் மணற்பரப்பும், சிற்சில இடங்களில் கருமை நிறம் மின்னும் மணற்பரப்புமாக வாழ்க்கைக் கடலின் அலைகளில் சுகமும் துக்கமும் மாறி மாறி ஒதுக்கப்பட்டுக் குவிவதைப் போல வெண்மையும் கருப்புமாகக் குவிந்திருந்தன. மிக அருகில் தென்படும் அலைவளமும் தீவுக்குள்ளே தொலைவில் உள்ளடங்கித் தென்படும் மலைவளமுமாக இயற்கையின் ஆழத்தையும், உயர்த்தையும் அழகுற விளக்குவதுபோல் தென்பட்ட அந்த நாட்டின் காட்சியில் இளங்குமரனின் மனம் ஈடுபட்டது. மணிமார்பனோ ஓவிய ஆர்வத்தோடு இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

தழைத்து நீண்டு வளர்ந்து கருமை நிறத்தில் சிற்றலையோடிச் சரிந்து மின்னுகிற கூந்தலை மூன்று நாகப் படங்கள் போலவும், ஐந்து நாகப்படங்கள் போலவும், ஏழு நாகப்படங்கள் போலவும், பகுத்து அலங்காரமாகப் பின்னிக் கொண்டிருந்த நாக நங்கையர்கள் சிலர் கூட்டமாக எதிர்ப்பக்கத்து வீதியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். இருந்தாற் போலிருந்து வீதியில் எல்லா விதமான இனிய இசைக் கருவிகளும் மிக நளினமாக ஒன்று சேர்ந்து கொண்டு இங்கிதமான குரலில் ஒலிப்பது போல அந்த நாக நங்கையர்களின் காலணிகளும், வளை களும் ஒலித்தன. அந்தக் கூட்டத்திலேயே அழகு மிக்கவளும், ஏழு பிரிவாகத் தன் கூந்தலை வகிர்ந்து சடைவில்லை போல நாகணி அணிந்து அலங்கரித்துக் கொண்டிருந்த வளுமாகிய ஒருத்தியை ஏறிட்டு நோக்கிய மணிமார்பன் கண்களை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

என்ன? இந்த ஏழாற்றுப் பிரிவில் உங்கள் கப்பல் கவிழ்ந்து விடும் போல் இருக்கிறதே! நான் ஒருத்தி உங்கள் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருப்பதை மறந்துவிட வேண்டாம் என்று கணவனின் தோளைத் தொட்டுத் திருப்பினாள் பதுமை. மணிமார்பன் தன் மனைவியின் பக்கமாகத் திரும்பிப் பார்த்து நாணத்தோடு நகைத்தான்.

இல்லை பதுமை! அவள் தன் கூந்தலை ஏழு பகுப்பாகப் பிரித்துப் புனைந்து கோலம் செய்திருக்கிற அழகைச் சித்திரத்தில் அப்படியே தீட்ட முடியுமா என்று தான் கூர்ந்து நோக்கினேன்!”

அதுதான் முன்பே சொல்லியிருக்கிறேன், அன்பரே! ஏழாற்றுப் பிரிவில் கப்பல் கவிழ்ந்து விட்டால் மீள்வது அருமை...” என்று பதுமை மறுமொழி கூறியபோது தன் மனைவியின் சொற்களில் சிலேடையாக வந்தஏழாற்றுப் பிரிவு என்ற இரு பொருள் அழகை உணர்ந்து புரிந்து கொண்டு பெருமைப்பட்டான் மணிமார்பன். அவளை மேலும் வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. “நீ கூடச் சில சமயங்களில் அழகான வாக்கியங்களைப் பேசிவிடுகிறாய், பதுமை! பார்வையிலும் தோற்றத்திலும் பிறக்கும் போதே பிறந்த அலங்காரங்களாலும், பிறந்து வளர்ந்த பின் பிறப்பிக்கப்பட்ட அலங்காரங்களாலும் பெண்களுக்கு வாய்த்திருக்கிற அழகு போதாதென்று பேச்சிலும் அழகு வந்துவிட்டால் இந்த உலகம் அதைத் தாங்காது பெண்ணே!”

உலகம் தாங்காவிட்டால் போகிறது! நீங்கள் இப்படிப் பேசி என்னை ஏமாற்றி ஏழாற்றுப் பிரிவில் கவிழ வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அவனுடைய விலாப்புறத்தில் வந்து நின்று அவன் பார்வை பதிந்திருந்த திசையை மறைத்தாள் பதுமை. மணிமார்பன் கண்களின் பார்வையை முழுமையாகத் தன் மனைவியின் மேல் திருப்பிக் கொண்டு அவளைக் கேட்டான்:

சித்திரக்காரனுக்கு இப்படிப்பட்ட மனைவி வாய்த்து விட்டால் தொழில் பெருகினாற் போலத்தான்.”

மனத்தில் பெருகட்டும்! இப்படி வீதியில் பெருக வேண்டாம் என்று விட்டுக் கொடுக்காமல் குறும்புச் சிரிப்போடு மறுமொழி கூறினாள் பதுமை. மணிமார்பனும் அவன் மனைவியும் மற்றவர்களை முன்போக விட்டு விட்டுப் பின்னால் மெல்ல மெல்லத் தயங்கி நடந்து சென்று கொண்டிருந்ததனால் தங்களுக்குள் கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டு செல்வதற்கு வசதியாக இருந்தது. இந்திர விகாரத்துத் துறவிகளும் பிறரும் உடன் வந்திருந்ததனால் விசாகை மணிநாகபுரத்துப் பெளத்த விகாரத்துக்கு விடை பெற்றுக் கொண்டு போயிருந்தாள். மறுநாள் காலை மீண்டும் மணிபல்லவத்தில் சந்திப்பதாக விடைபெற்றுப் போகும் போது அவள் இளங்குமரனிடம் கூறியிருந்தாள்.

வீரசோழிய வளநாடுடையாரும் இளங்குமரனும் வீதியில் முன் பகுதியில் நாகதெய்வக் கோட்டத்தை நோக்கி விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள். மணிநாகபுரத்துக் கரையில் இறங்கி நிற்பதற்கு முன்னும், இறங்கி நின்ற பின்னும், தான் இளங்குமரனிடம் கூறியிருந்த செய்திகள் எந்த விதமான பரபரப்பையும், ஆவலையும் அவனிடம் உண்டாக்காமற் போகவே வளநாடுடையாருக்கு வியப்பாயிருந்தது.

இந்தப் பிறவியைப் பற்றிய ஞானமே உனக்கு இந்தத் தீவிலிருந்துதான் கிடைக்கப் போகிறது என்று தன்னால் சற்றுமுன் இளங்குமரனிடம் கூறப்பட்ட வார்த்தைகளிலிருந்து அவன் எதையுமே எதிர்பார்த்துப் புரிந்து கொண்டு வியப்படையாமல் அமைதியாக நடந்து வருவதைக் கண்டு வளநாடுடையார் திகைத்தார். எல்லாப் பரபரப்பும் எல்லா ஆவலும் அவருக்குத் தான் ஏற்பட்டனவே தவிர அவன் உணர்ச்சிகளைக் கடந்த அமைதியோடும் நிதானத்தோடும் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனுடைய நிதானத் திலும் அமைதியிலும் சிறிது கழிவிரக்கமும் கலந்திருந்ததைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தைத் தான் உண்டாக்கிப் பேசிய தாலேயே அவனுக்கு அந்தத் துயரம் தோன்றியிருக்க வேண்டும் என்று வளநாடுடையார் புரிந்து கொண்டார். படிப்படியாக முயன்று தன்னுடைய உட்கருத்தை அவன் விளங்கிக் கொள்வதற்கேற்ற மன நிலையை அவனிடம் தோற்றுவிக்கும் நோக்கத்தோடு மீண்டும் பேச்சுக் கொடுத்தார் அவர்:

தம்பி! இழந்த பொருள்களையும், இழந்த நல்லுணர்வுகளையும் திரும்பவும் அடைகிறவனுடைய பெருமையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

முன்பின் தொடர்பில்லாமல் கோடை மழையைப் போல் அமைதியை கலைத்துக் கொண்டு திடீரென்று இப்படிப் பேச்சைத் தொடங்கிய அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பின்பு மெல்லப் பதில் கூறினான் இளங்குமரன்.

பொருள்களை இழப்பதற்காகத் துயரப்படுவதும், அடைவதற்காக மகிழ்வு கொள்ளுவதும் சிறிய காரியங்கள். நம்மோடு பற்றும் பாசமும் வைத்து நீண்ட உறவாகப் பழகி விட்ட ஒருவரது உயிர் நம் கண் காண அழிந்தால் அதற்காக நாம் குமுறித் துக்கப்படுவதை மட்டும் தான் கைவிட முடிவதில்லை. அப்படி உயிர்த் தொடர்புடையதாக வரும் பற்றுப் பாசங்களைக் கூட வென்று நிற்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். சில சமயங்களில் ஞானத்தின் பலமிருந்தும் அத்தகைய துக்கங்களை வெல்ல முடியாமல் நாமே இருண்டு போய்க் கண் கலங்கி மலைத்து மேலே நடக்க முடியாமல் நின்று விடுகிறோம்.

இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது இளங்குமரனும் தான் நடப்பதை நிறுத்திக் கொண்டு கண் கலங்கிப் போய் இருந்தான். அவனுடைய சொற்கள் நலிந்து உணர்ச்சி வசப்பட்டிருந்தன. அவன் மேல் நிறைந்த அநுதாபத்தோடு அருகில் சென்று தழுவிக் கொண்டார் வளநாடுடையார்.

எவ்வளவு பெரிய ஞானியாயிருந்தாலும் நெகிழ்ந்த உணர்ச்சிகளை எதிரெதிரே சந்திப்பது இயலாத காரியம் தம்பி. மனைவி தூங்கும்போது எழுந்து வெளியேறி உலகத்திற்குத் துக்க நிவாரணம் காண வந்த புத்தனும், காதற் கிழத்தி காட்டில் உறங்கும் போது எழுந்திருந்து ஓடிப்போன நளனும் உணர்ச்சிகளை எதிரே சந்திப்பதற்குப் பயந்து கொண்டுதானே அப்படிப் புறப்பட்டிருக்க வேண்டும்?” என்று அவர் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அருட்செல்வ முனிவருடைய ஞாபகமே அவனைக் கண்கலங்கச் செய்திருக்கிறது என்று தெரிந்தது. அந்தக் கலக்கத்தையே வாயிலாகப் பயன்படுத்திக் கொண்டு தன் மனத்தில் இருப்பதை அவனுக்குச் சொல்லிவிட எண்ணினார் வளநாடுடையார்.

இழந்த பொருள்களைத் திரும்பப் பெறுவதே இன்பமானால் இழந்த உயிரையே திரும்பப் பெறுவது இணை கூற முடியாத பேரின்பமாக அல்லவா இருக்கும்?” என்று கூறிவிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினார் அவர். அதில் தவிப்பும் ஏக்கமும், தெரிவதற்குப் பயந்து கொண்டே தெரிவதுபோல, மெல்லத் தெரிந்தன.

ஐயா! அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தை இன்று நீங்கள் என்னிடம் உண்டாக்கியிருக்க வேண்டாம். எந்தவிதமான உணர்ச்சிகளை எதிரே சந்திப்பது தாங்க முடியாததென்று கருதுகிறீர்களோ அதே விதமான உணர்ச்சிகளை நான் இன்று சந்திக்கும்படி செய்து விட்டீர்கள். அருட்செல்வ முனிவருடைய நினைவு வரும் போது அதைத் தொடர்ந்து வேறு பல நினைவுகளும் என்னைச் சூழ்கின்றன. முள்ளில் வீழ்ந்த ஆடையை மேலே எடுக்க இயலாதது போல் இப்போது என்னைச் சூழ்ந்திருக்கும் பழம் பாசங்களிலிருந்து மனத்தை மேலே கொண்டு போக முடியாமல் தவிக்கிறேன் நான். இப்படி ஒரு நிலையை இவ்வளவு தொலைவு அழைத்துக் கொண்டு வந்து நீங்கள் எனக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.” அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு என்ன மறுமொழி கூறுவதென்று சில கணங்கள் வளநாடுடையார் தயங்கினார்.

பாசங்கள் உன்னை நெருங்குவதாய் நீயாக எண்ணிக் கலங்காதே, இளங்குமரா! உன்னுடைய பாசமும் இரக்கமும் எவை காரணமின்றித் தோன்றி உன்னை வருத்து கின்றனவோ, அவற்றையே மீண்டும் நீ காணப் போகிற வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எவற்றுக்காக இத்தனை ஆண்டுகளாய் மனத்திற்குள்ளேயே துக்கம் கொண்டாடினாயோ அவற்றை மீண்டும் மறுபிறவியாகக் காண்பது போல் எதிரே கண்டு இழந்த நம்பிக்கைகளை யெல்லாம் அடையப் போகிறாய்! நாளைக்குப் புத்த ஞாயிற்றின் ஒளி மட்டுமின்றி உன் வாழ்விலும் நம்பிக்கைகளின் ஒளி பரவப்போகிறது என்று அவர் இளங் குமரனிடம் கூறிக் கொண்டிருந்தபோது அந்த வீதியின் மேற்புறத்து மாளிகையிலிருந்து காற்றில் நழுவினாற் போல ஒளிமிக்க முத்துமாலை ஒன்று அவன் தோளில் நழுவி வந்து விழுந்தது. அவனும், வளநாடுடையாரும் மேலே நிமிர்ந்து பார்த்தார்கள்.

அப்படிப் பார்த்தபோது நாகதெய்வக் கோட்டத்தின் அருகேயிருந்து மிகப்பெரிய மாளிகை ஒன்றின் மாடத்திலிருந்து ஓர் இளைஞன் கீழே குனிந்து அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றான். அவனுடைய வலது கையில் சரம்சரமாக இன்னும் பல முத்து மாலைகள் இருந்தன. அவன் அந்த மாளிகையின் மதலை மாடமாகிய கொடுங் கையின் முன்புறம் விழா நாளுக்காகச் செய்யும் அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தான் போலிருக்கிறது. மாடத்தின் முன்புறம் நல்ல நாட்களில் மங்கள அடை யாளமாகக் கட்டப்படும் நாட்கொடிகளும் முத்துத் தாமங்களும் தொங்கின. அந்த மாடத்தையும் அதைப் போலவே அலங்கரிக்கப்பட்ட வேறு பல மாடங்கள் அடங்கிய அதன் முழுத் தோற்றத்தையும் பார்த்தால் அது ஏதோ பெரிய இரத்தின வணிகருடைய இல்லம் போல விளங்கியது. முத்துமாலை கை நழுவி வீதியில் சென்று கொண்டிருந்த அவர்கள் தோளில் விழுந்து விட்டதற்காக அந்த இளைஞனும் தன்னைத்தானே கடிந்து கொள்கிறவனைப் போல முகத்தில் நாணம் தெரிய நின்றான். பின்பு விரைவாகக் கீழே இறங்கி வந்தான். நாகநாட்டு இளைஞர்களுக்கே உரிய ஒளிமிக்க தோற்ற முடையவனாயிருந்தான் அவன். யாரோ புத்த பூர்ணிமை நாளுக்காகத் தனது மாளிகை மாடங்களை முத்துத் தோரணங்களால் அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது கையிலிருந்த முத்துத் தாமங்களில் ஒன்றைக் கீழே நழுவ விட்டு விட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணி அந்த முத்துச்சரத்தை அதற்குரியவனிடம் சேர்ப்பதற்காகத் தயங்கி நின்றான் இளங்குமரன். ஆனால் இப்போது அவன் நினையாத வேறொரு காரியத்தைச் செய்தார் வளநாடுடையார். மேலே மதலை மாடத்திலிருந்து முத்துமாலையை வாங்கிக் கொண்டு போவதற்காகக் கீழிறங்கி வந்த இளைஞன் அருகில் வந்ததும், “குலபதி, நாங்கள் உள்ளே வரலாம் அல்லவா?” என்று சுபாவமாக அவனிடம் வினவினார் வளநாடுடையார்.

குலபதி என்று அழைக்கப்பட்ட அந்த அழகிய நாக இளைஞனுடைய முகத்தில் வளநாடுடையாரின் கேள்வியைச் செவியுற்ற பின் புன்முறுவல் மலர்ந்தது. அந்தப் புன்முறுவல் இன்னும் நன்றாக மலர்ந்து பெருமுறுவலாகிய முகபாவத்துடன் இளங்குமரனையும் அவரையும் நோக்கிக் கைகூப்பினான் அவன்.

நன்றாக வரலாம் ஐயா! ஒவ்வொரு கணமும் உங்களுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம் என்று மறுமொழி கூறினான் குலபதி என்று கூப்பிடப்பட்ட அழகன்.

இதோ உங்களுடைய முத்துமாலை என்று இளங்குமரன் அவனிடம் தன் மேல் நழுவி விழுந்த முத்து மாலையைத் திருப்பிக் கொடுக்க முற்பட்டதும், “அந்த மாலை இனிமேல் உங்களுடையதுதான். எப்போது உங்கள் தோளில் விழுந்துவிட்டதோ அப்புறம் உங்களுக்குரியது தானே?” என்று சிரித்தபடி மறுத்து விட்டுக் குலபதி அவர்களை அந்த மாளிகைக்குள்ளே அழைத்துக் கொண்டு போனான்.

-------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.2. குலபதியின் விருந்து

 

தானும் இளங்குமரனும் குலபதியின் மாளிகைக்குள் அவனோடு செல்வதற்கு முன்னால் முன்னேற்பாடாக வளநாடு டையார் வேறொரு காரியம் செய்தார். பின்புறம் வீதியில் தங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஓவியன் மணிமார்பனையும் அவன் மனைவி பதுமையையும் தங்களிடமிருந்து பிரித்துத் தனியே அனுப்பிவிட்டார்.

மணிமார்பா! நீயும் உன் மனைவியும் உங்கள் மனம் விரும்பியபடி இன்று மாலைப் போது வரை இந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்து விட்டுக் கப்பலுக்கு நேரே திரும்பிப் போய்விடலாம். இந்த இரத்தின வணிகருடைய மாளிகையில் எங்களுக்குச் சில அவசரமான காரியங்கள் இருக்கின்றன. எங்களோடு வந்தால் நீயும் உன் மனைவியும் இந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்க முடியாமலே போய்விடலாம். மேலும் இந்த மாளிகையில் நாங்கள் கவனிக்க வேண்டிய காரியங்களுக்கு எவ்வளவு போதாகும் என்று உறுதியும் சொல்ல முடியாது. கப்பல் தலைவன் இன்று மாலையே பக்கத்திலிருக்கும் மணிபல்லவத் தீவுக்குப் புறப்பட்டுவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறான். நாங்கள் இருவரும் குலபதியின் இந்த மாளிகையிலிருந்து புறப்படுவதற்கு இரவு நடுயாமத்துக்கு மேலும் ஆனாலும் ஆகிவிடலாம். ஒருவேளை புத்த பூர்ணிமைக்காக மணிபல்லவத்துக்கே நாளைக்குக் காலையில் நாங்கள் புறப்பட்டு வந்து சேரும்படி ஆகலாம். நீயும் எங்களோடு காத்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, நாங்கள் வருவதற்குத் தாமதமானாலும் நீ முன்னால் புறப்பட்டுப் போய்விடுவது நல்லது,” என்று தன்னிடம் வளநாடுடையார் சொல்லி வேண்டிக் கொண்டபோது ஓவியன் மணிமார்பனுக்கும் தான் அவ்வாறு செய்வதே நல்லதென்று தோன்றியது. மணிநாகபுரத்தின் அழகிய வீதிகளையும், காட்சிகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு அவனும் விடைபெற்றுக் கொண்டு தன் மனைவியோடு சென்றான்.

முதலில் மாளிகை மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்த குலபதியோடும் இளங்குமரனோடும் உள்ளே போகத் தொடங்கியிருந்த வளநாடுடையார் பின்னால் ஓவியனும் அவன் மனைவியும் வந்து கொண்டிருப்பதை நினைவு கூர்ந்தவராகத் தான் மட்டும் மறுபடி வீதிக்குத் திரும்பிச் சென்று இவ்வாறு அவர்களைத் தங்கள் குழுவிலிருந்து பிரித்து அனுப்பி விட்டார். அவரது அந்தச் செய்கைக்காக இளங்குமரன் தனக்குள் வருந்தினான். எனினும், தனக்குப் புதியவனான குலபதி என்னும் இளைஞனை அருகில் வைத்துக் கொண்டு வளநாடுடையாரைக் கடிந்து பேசுவது நாகரிகமாயிராது என்று கருதி இளங்குமரன் தன் வருத்தத்தை மனத்துள்ளேயே புதைத்துக் கொண்டு விட்டான். மனிதர்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் சமமாகப் பாவித்து மதிக்கத் தெரியாதவர்கள் உலகப் படைப்பையும் படைத்தவனையுமே அவமானப் படுத்துவதாக எண்ணி வேதனைப்படுவது அவன் வழக்கம். பழைய நாட்களில் தனக்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் சிறு குழந்தையின் துன்பத்தைப் போல் சொல்லிலும் உணர்வுகளிலும் வெளிப்படுத்திக் குமுறி யிருப்பான். மனம் முதிர்ந்து பக்குவப்பட்டு விட்டது என்பதற்கு ஒரே பயன் கணந்தோறும் கண்களுக்கு முன் தென்படுகிற உலகத்துத் துன்பங்களுக்காக இதயத்திலேயே அழுது புலம்புவதுதான். எப்போதும் விடலைப் பருவத்துப் பிள்ளையைப் போல் மனத்தினால் குமுறிக் கண்களால் எதிர்க்க முடிவதில்லை. ஆனால் கண்களால் அழுகிறவர்களைத்தான் உலகம் துக்கம் உடையவர்களாகப் புரிந்து கொள்கிறது. மனத்தினால் அழுது கொண்டிருப்பவர்களைப் புரிந்துகொள்ள உலகத்திற்கு நீண்ட காலமாகிறது. இப்படி ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் இடத்திலும் கண்முன் தெரியும் உலகத்துத் துன்பங்களுக்காக மனத்தினால் அழுது தனக்கே அந்தத் துன்பம் வந்தாற்போல் முடிவு தேடித் தவிக்கும் பரந்த சோக அநுபவத்தை இளங்குமரன் பலமுறைகள் அடைந்திருக்கிறான்.

நாளங்காடிப் பூத சதுக்கத்தில் முதல் முதலாக இதே ஏழை ஓவியனைச் சந்தித்தபோது இவனுக்கு இரங்க வேண்டும் என்று தன் மனம் நெகிழ்ந்ததை இந்தக் கணத்தில் நினைக்கத் தோன்றியது இளங்குமரனுக்கு. இலஞ்சி மன்றத்துப் பொய்கைக் கரையிலும், உலக அறவியின் நிழலிலும் நிறைந்து கிடந்து உழலும் ஏழை களையும் நோயாளிகளையும் பார்க்க நேரிடும் போதும் நினைக்க நேரும் போதும் மனத்தினால் அழுது வருந்தியிருக்கிறான் அவன். இந்திர விழா நிறைவு நாளில் கழார்ப் பெருந்துறை நீராடலின் போது சுரமஞ்சரியைக் காப்பாற்றிக் கப்பல் கரப்புத் தீவில் அவளிடம் கருணை கொண்ட போதும், திருநாங்கூரில் குருகுலவாசம் செய்து கொண் டிருந்த போது தன்னுடைய பிறந்தநாள் மங்கலத்துக்காக அழைத்துச் செல்வதற்கு வந்திருந்த முல்லையிடம் மனம் நெகிழ்ந்து பேச முடியாமற் போனபோதும், ‘உங்களுடைய ஞானத்தையும், சான்றாண்மையையும் பார்த்துப் பெருமைப்பட உங்களைப் பெற்றவள் இப்போது அருகில் இருக்க வேண்டும் என்று விசாகை பூம்பொழிலில் ஒருநாள் தன்னிடம் கூறியபோதும், இளங்குமரன் மனம் நிறையக் கண்களாய் மாறிக் கலங்கி அழுதிருக்கிறான். அறிவு முதிர்ந்த வழியில் நடந்து போகிறவனின் ஞான யாத்திரையில் கடைசியாகக் கால்கள் நிற்குமிடம் மனத்தின் அழுகையாகிய இந்தக் கருணைதான். எல்லார் மேலும் பரிவும் பாசமும் கொண்டு எல்லாருடைய துக்கத்திற்காகவும் மனத்தால் அழுது தவிக்கும் இந்தப் பரந்த தாய்த் தன்மையே மனிதனுக்கும் அவன் வணங்கும் பரம்பொருளுக்கும் நடுவிலிருப்பதாகச் சொல்லப்படும் தொலைவைக் குறைத்து இருவரையும் அருகருகே நெருங்கச் செய்கிறது. தன்னுடைய மனத்தின் எல்லை யெல்லாம் நிறைந்திருந்த இந்தப் பரந்த கருணையை அழ வைத்துப் புண்படுத்துவது போல் வளநாடுடையார் மணிநாகபுரத்து வீதியில் ஓவியனைத் தனியே பிரித்து அனுப்பிய போது இளங்குமரன் பெரிதும் புண்பட்டான். ஓவியனிடம் தனக்குள்ள கருணையை அப்போது வெளிப் படுத்துவதனால் குலபதியும் வளநாடுடையாரும் வருந்த நேரிடுமே என்று எண்ணி அழுது புலம்பும் மனத்தோடு சிரித்து மகிழும் முகத்தோடும் நின்றான் இளங்குமரன். அந்த நிலையில் குலபதி அவனிடம் தானே பேசலானான்.

ஐயா! இந்த முத்துமாலை மேலேயிருந்து உங்கள் தோளில் விழுந்தபோது காண்பதற்கு அந்தக் காட்சி எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா? பொன்னிற் செய்து பின்பு மெருகிட்டுப் புனைந்தாற் போன்ற உங்கள் தோள்களிலேயே மறுபடி இதைக் காண வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது எனக்கு. தயைக்கூர்ந்து இந்த மாலையை இப்படிக் கையில் வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாகக் கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும் நீங்கள்...”

அப்போது அந்த விநாடி வரை வீதியில் வளநாடுடையார் மணிமார்பனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த இளங்குமரன் குலபதியின் இந்தச் சொற்களைக் கேட்டுத் திரும்பினான். இம்முறை தான் முதன் முதலாய்க் கூர்ந்து கவனிப்பதுபோல் அந்த மணிநாகபுரத்து இளைஞனை அவன் நன்றாகப் பார்த்தான். நீண்டு வளர்ந்திருந்த குடுமியை முடிப்பாக அள்ளிச் செருகியிருந்த தோற்றம் அந்த நாகநாட்டு இளைஞனின் முகத்துக்கு மிகவும் அழகாயிருந்தது. இளமை அரும்பும் பருவத்து முக அழகு தவிர நீண்டு வடிந்த அளவான செவிகளில் நாகரத்தினங்கள் பதித்த காதணிகளையும் அழகுற அணிந்திருந்தான் அவன். ஆண் மகனாக இருந்தாலும் அவன் சிரிக்கும்போது முத்துதிர்வது போல நளினமானதொரு கவர்ச்சியும் அந்த முகத்தில் வந்து பொருந்தியது. தோற்றத்தில் அதிக உயரம் இல்லா விட்டாலும் அவனுக்கு அமைந்த உயரமே அவனை அழகனாகத் தான் காண்பித்தது. சில நிழல் மரங்களைப் பார்த்தால் உடன் அங்கே உட்கார வேண்டும் என்று ஆசை வருவதைப் போல் குலபதியின் முகத்தை ஒருமுறை பார்க்கிறவர்களுக்குச் சிறிது நேரம் வேறு காரியங்களை மறந்து அந்த முகத்தை மட்டும் பார்க்கலாம் என்று தோன்ற முடியும் எனப் புரிந்துகொண்டான் இளங்குமரன். தன் முகத்தை இளங்குமரன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் குலபதி சுறுசுறுப்பாக வேறு ஒரு காரியம் செய்தான். இளங்குமரனுடைய கையிலிருந்த முத்து மாலையை அவனது விரல்களின் பிடியிலிருந்து சிரித்துக் கொண்டே மெல்ல விடுவித்துத் தன் கைகளாலேயே அவனுடைய கழுத்தில் அணிவித்தான். இளங்குமரனால் அந்தப் பிள்ளையின் செயலை மறுக்க முடியவில்லை.

வாருங்கள்! இனி. நாம் உள்ளே போகலாம் என்று சொல்லிக் கொண்டே அப்போது வளநாடுடையாரும் வீதியிலிருந்து திரும்பி வந்தார். மீண்டும் மூன்று பேருமாக அந்த மாளிகைக்குள் துழையும் போது வளநாடுடையார் கூறினார்:

இளங்குமரா! இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நீ திருநாங்கூரில் இருந்த காலத்தில் நான் வந்து உன்னை மணிபல்லவத்துக்கு அழைத்த போதே, நீ இங்கு வந்திருந்தால் நம்முடைய குலபதிக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். அப்போது நீ வராததனால் நான் மட்டும் தனியாக இந்தத் தீவுக்கு வந்திருந்தேன். குலபதியையும் அவனுக்கு மிகவும் வேண்டியவராகிய மற்றொருவரையும் இங்கே சந்தித்தேன். அப்படிச் சந்தித்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொற்களில் அடக்க முடியாது. அதே மகிழ்ச்சியை இன்னும் சிறிது நேரத்தில் நீயும் அடையப் போகிறாய்.”

இப்படிப் பேசிக்கொண்டே அவர்கள் மாளிகையின் நடுக்கூடத்தை அடைந்திருந்தார்கள். தளத்தில் எங்கு நோக்கினும் முத்தும், மணியும், பவழமுமாகப் பதித்திருந்ததனால் அந்த மாளிகையின் ஒவ்வொரு அணுவிலும் அது ஓர் இரத்தின வணிகருடையது என்பதை நினைவூட்டும் அழகு அமைந்திருந்தது. இரத்தின வாணிகன் குலபதியைப் பற்றியும், மணிநாகபுரத்தில் அவனுக்குள்ள பெருமைகளைப் பற்றியுமே, வளநாடுடையார் விவரித்துச் சொல்லிக் கொண்டு வந்தாரே ஒழிய இன்ன வகையில் அவனுக்கும் தனக்கும் நட்பு ஏற்பட்டது என்றோ, அவன் இன்னான் என்றோ விவரமாகக் கூறவில்லை. குலபதியின் அந்த மாளிகையைச் சுற்றிப் பார்த்தபோது தன்னோடு மணிமார்பனும் அங்கு வந்திருக்க வேண்டும் என்று அதன் அழகுகளை நோக்கிக்கொண்டே எண்ணினான் இளங்குமரன். ஓர் ஓவியன் தன்னுடைய கண்கள் நிறையக் கண்டு மகிழ வேண்டிய பேரெழில் மாளிகையாயிருந்தது அது. மணிமார்பன் தன் உடனில்லையே என்பதை ஒவ்வொரு கணமும் இளங்குமரன் அங்கு உணர முடிந்தது.

 

அந்த மாளிகையின் முற்றத்தில் உள்ள பூங்காவிலிருந்தே நாகதெய்வக் கோட்டத்துக்குள் போவதற்கான வழி ஒன்றும் அமைந்திருந்தது. இளங்குமரனும், வளநாடு டையாரும் நீராடித் தூய்மை பெற்ற பின் அவர்களை நாகதெய்வ வழிபாட்டுக்கு அழைத்துக் கொண்டு போனான் குலபதி, அந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு மாளிகைக்குத் திரும்பியதும் குலபதி இளங்குமரனுக்கும் வளநாடுடையாருக்கும் அறுசுவை விருந்து படைத்தான். பொன்னும், மணியும், முத்துக்களும், இரத்தினமுமாகப் பார்க்கும் இடமெல்லாம் ஒளி நிறைந்து தோன்றினாலும் அந்த மாளிகையில் ஏதோ ஒரு குறை இருப்பதாய்ப் புறத் தோற்றத்தில் தெரிந்தும், தெரியாததான ஒரு நிலையை இளங்குமரன் உணர்ந்தான். அந்தக் குறையைப் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில்இளங்குமரா! இந்த உணவு விருந்தைக் காட்டிலும் பெரிய விருந்து ஒன்றை இன்னும் சிறிது நாழிகையில் குலபதி உனக்கு அளிக்கப் போகிறான். பலநாள் பசியைத் தீர்க்கப் போகிற உணவு அது!” என்று பேச்சைத் திருப்பிப் புதிய கவனத்திற்கு மாற்றினார் வளநாடுடையார். அதுவரை மெளனமாய் அமர்ந்து பசியாறிக் கொண்டிருந்த இளங்குமரன், “அது என்ன அப்படிப் புதுமையான உணவு?” என்று அவரைக் கேட்டான். அவனுடைய கேள்விக்கு வளநாடுடையார் மறுமொழி கூறவில்லை. அதற்குள் குலபதியே முந்திக்கொண்டு கூறினான்.

விருந்து என்றாலே புதுமையானதென்று தான் பொருள். உண்ணும் பொருளும் பசியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள பழைய பழக்கம் தான். அதுவே பழகிய பழக்கமும் ஆகிறது. ஆனால் உண்கிற இடமும் உபசாரம் செய்கிற மனிதர்களும் புதுமையாக இருந்தால் அதை விருந்து என்கிறோம். நானோ இன்று புதுமையான பொருள்களையே உங்களுக்குக் காட்டப் போகிறேன். அந்தப் புதிய பொருள்கள் உங்களுடைய பழைய விருப்பங்களைத் தீர்க்கிறவையாகவும் அமையலாம். இந்தப் பழம் பெரும் மாளிகையில் ஓவிய மாடம் என்று ஒரு பகுதியிருக்கிறது. அதில் இந்த மாளிகைக்குள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக வாழ்ந்து முடிந்தவர்களின் ஓவியங்களும் வாழ்க்கை நிகழ்ச்சிகளும், வாழும்போது புனைந்து கொண்ட பொருள்களும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாளிகையின் ஓவிய மாடத்தில் ஓவியங்களாக இருப்பவர்களில் ஒருவர் கூட இந்தத் தீவின் எல்லையில் இறந்ததில்லை. துயரம் நிறைந்த வாழ்க்கையின் பழைய தலைமுறை நினைவுகளையும், பழையவர்கள் சேர்த்து வைத்த செல்வத்தையும் நுகர்ந்து கொண்டு இந்தக் குடிசையின் கடைசித் தளிராக நான் மட்டும்தான் மீதமிருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகள் அந்த ஓவிய மாடத்தைப் பார்ப்பதானால் எனக்கு ஏதேனும் புதிய நற்பயன் நேரலாமோ என்னவோ?” என்று குலபதி கூறும்போது அவனுடைய இனிமையான குரல் நலிந்திருந்தது. சொற்கள் துயரந் தோய்ந்து பிறந்தன.

ஐயா! நீங்கள் உங்களை அறியாமலே மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்களே! சற்று முன்பு எங்களைப் பின் பற்றித் தன் மனைவியோடு இந்த வீதியில் வந்தாரே; அவர் பாண்டிய நாட்டின் சிறந்த ஓவியர். உங்கள் ஓவிய மாடத்தை அவர் பார்ப்பதானால் எவ்வளவோ நன்மைகள் ஏற்படும். அவரை ஊர் சுற்றிப் பார்க்க அனுப்புமுன் இங்கே அழைத்து வந்து உங்கள் ஓவிய மாடத்தைக் காண்பித்திருந்தால் நான் மகிழ்ச்சி கொண்டிருப்பேன். இந்தக் கலை விருந்தை உண்பதற்கு ஏற்றவன் நான் இல்லை. அந்த ஓவியர் தான்! அவரை வீதியிலிருந்தே, இந்த மாளிகைக்குள் அழைக்காமல் அனுப்பிவிட்டு இப்போது என்னை மட்டும் உங்கள் ஓவிய மாடத்துக்கு அழைக் கிறீர்களே?" என்று கேட்டான் இளங்குமரன்.

அவனுடைய இந்தக் கேள்வியைச் சிரித்தவாறே ஏற்றுக் கொண்ட குலபதி, “விருந்தை உண்பதற்கு ஏற்றவர் யார் எனத் தீர்மானம் செய்ய வேண்டிய பொறுப்பு விருந்திடுகிறவனுக்கு உண்டாயின், நான் உங்களை மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கிறேன் என்று மறுமொழி பகர்ந்தான். குலபதியின் இந்த மறுமொழியே ஒரு விதத்தில் புரிந்தும் பலவிதத்தில் புரியாமலும், ஏதோ ஒரு புதிர் போலிருந்தது இளங்குமரனுக்கு.

நம்முடைய குலபதி உன் கழுத்தில் முத்துமாலையை அணிந்த போதே உன்னைத் தன்னுடைய நெருக்கமான உறவினனாகவும் தேர்ந்தெடுத்து வரித்துக் கொண்டாயிற்றே, தம்பி!” என்று சொல்லி அதையே இன்னும் பெரிய புதிராக்கினார் வளநாடுடையார்.

கையிலேயே வைத்துக் கொண்டிருந்த அரும்பொருள் எங்காவது தானாக நழுவி விழுகிறாற்போல் நான் மாடத்தில் நின்றபோது என் கையிலிருந்த முத்துமாலையோடு எனது மனமும் உங்களிடம் நழுவி விட்டது ஐயா!” என்று மேலும் உயர்வாகச் சொல்லி அந்த விருந்தைச் தன் சொற்களின் மதிப்பினாலும் சுவையுடையதாக்கிச் சிறப்பித்தான் குலபதி.

அந்த அன்பையும் ஆவலையும் மறுக்க முடியாமல் உண்ணும் விருந்து முடிந்ததும், காணும் விருந்தாகிய ஓவிய மாடத்தைக் காண்பதற்காக அவர்களோடு சென்றான் இளங்குமரன். என்ன காரணத்தாலோ அந்த மாளிகையின் ஓவியமாடத்தை அவன் கண்டிப்பாய்க் காண வேண்டுமென்பதில் வளநாடுடையாரும் குலபதியும் பிடிவாதமாக இருந்தார்கள் என்பது மட்டும் அவனுக்கே புரிந்தது.

------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.3. ஓவிய மாடம்

 

மணிநாகபுரத்து இரத்தின வாணிகனாகிய குலபதியின் ஓவிய மாடத்துக்குள் நுழைந்த பின்புதான் அதன் பெருமை இளங்குமரனுக்குப் புரிந்தது. அந்த ஓவிய மாடமே ஒரு தனி உலகமாயிருந்தது. அதில் ஒரு பெரிய காலமே சித்திரங்களாக முடங்கிக் கிடந்தது.

வழிவழியாக இரத்தின வாணிகம் புரிந்து வரும் எங்கள் குடும்பத்தின் துன்பமயமானதொரு வாழ்க்கைத் தலைமுறையை நீங்கள் இங்கே ஓவியங்களில் காண்கிறீர்கள் ஐயா! இந்தக் குடும்பத்தின் புகழை உலகத்துக்குச் சொல்ல வேண்டிய சக்தி ஒன்று இதிலிருந்து தவறி எப்படியோ எங்கோ வெளியேறிப் போய்விட்டது. மறுபடி அதைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே சேர்க்கிற வரை எனக்கு இவ்வளவு செல்வமிருந்தும் நான் மனத்தினால் ஏழைதான்!” என்றான் குலபதி.

பழியில்லாமல் வாழ்வதே புகழ்தான்! புகழுக்கென்று தனியாக வேறு ஆசைப்படாதீர்கள். அந்த ஆசையாலேயே பழி வந்தாலும் வரலாம்...” என்று குலபதிக்குப் பதில் கூறியபடி அந்த மாடத்தில் வரிசையாகத் தீட்டப் பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தான் இளங்குமரன்.

சில ஓவியங்களுக்கருகே கீழே பலவிதமான அணிகலன்களும், அந்த ஓவியத்தில் இருந்தவர்கள் வாழ்ந்த காலங்களில் பயன்படுத்திய பொருள்களும் குவிக்கப்பட்டிருந்தன. இன்னும் சில ஓவியங்களுக்குக் கீழே உள்ள மாடப்பிறையில் ஏடுகள் மட்டுமே இருந்தன. அந்த ஏடுகளில் நாள்தோறும் இட்டப் பூக்களும் சிதறி வாடி யிருந்தன.

அப்படி ஏடுகள் மட்டுமே இருந்தவற்றைச் சுட்டிக் காட்டிக் கூறும்போது, “இந்த ஓவியங்களில் இருப்பவர்கள் எல்லாம் கடல் வாணிகத்தின் போதும், யாத்திரையின் போதும், புறப்பட்டுப்போன இடங்களிலும் இறந்தவர்கள். இவர்களைப் பற்றிய நினைவை இப்போது எங்களுக்குத் தருகிறவை இந்த ஏடுகள் மட்டும்தான் என்றான் குலபதி.

அவனே மீண்டும் அந்த மாடத்திலே அணிகலன்கள் குவிந்து கிடந்த இடத்தில் இருந்த சில பொன் அணிகளை எடுத்துக்காட்டிஇந்தக் குடும்பத்துக்குச் சொந்தமான எல்லா அணிகலன்களிலும் அடையாளமாக இப்படி மூன்று தலை நாகப்படம் செதுக்கியிருக்கும் என்றான். அவற்றைப் பார்த்துக்கொண்டே வந்த இளங்குமரன் அங்கு மிக அற்புதமாக வரையப்பட்டிருந்த ஓர் ஓவியத்தருகே நெருங்கியதும் கண்களை அதன் மேலிருந்து மீட்கத் தோன்றாமல் அப்படியே நின்றுவிட்டான். உத்தமமான கவிகள் வருணிக்கும் அழகுகள் எல்லாம் பொருந்திய இளநங்கை ஒருத்தி நாணத்தோடு கால் விரலால் தரையைக் கீறிக்கொண்டு நிற்பதாகவும் அவள் எதிரே வீரலட்சணங்கள் யாவும் அமைந்த வீரன் ஒருவன் தோன்றி அவளைக் காண்பதற்காகவும் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.

அங்கிருந்த மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனியாகப் பிரிந்து அந்த ஒற்றை ஓவியத்தில் மட்டுமே தன் கவனம் செல்லும்படி அதில் என்னதான் இருந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அதில் ஏதோ இருந்தது. மண்ணுக்குள் முறிந்து போய்க் கிடந்த கோரைக் கிழங்கு சரத் காலத்து மழை ஈரத்தின் மென்மையில் நனைந்து நனைந்து மெல்ல மண்ணுக்கு வெளியே தன் பசுந் தலையை நீட்டி இந்த உலகத்தைப் பார்த்துக் குருத்து விடும் முதல் பச்சையைப் போல் அவன் மனத்தில் முறிந்து நின்ற ஆர்வமொன்று அந்த ஓவியத்தைக் கண்டதும் பெருகிற்று. ஆனால் அந்த ஆர்வத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை போலவும் பிரமிப்பாக இருந்தது. அவதி ஞானம் என்று அவன் கேள்விப்பட்டு உணர்ந்திருந்த உணர்வின் வரையறையில்லாத தொடர்பாய் இப்போதும் இதில் ஏதோ ஒன்று புரிந்தது. புரியாமலும் மயங்கிற்று. இப்படி நெடுநேரம் தன் பார்வையை மீட்க முடியாமல் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்த இளங்குமரன் இறுதியாகப் பார்வை மீண்டும் அது இருந்த இடத்தின் கீழே பார்த்தபோது அங்கே அணிகலன்களோ வேறு வகைப் புனைபொருள்களோ சிறிதும் காணப்பட வில்லை. அதனருகேயிருந்த மாடப் பிறையில் இரண்டு மூன்று ஏட்டுச் சுவடிகள் மட்டும் முடிந்து வைக்கப்பட்டிருந்தன. இளங்குமரன் அந்த ஏட்டு முடிப்பை எடுத்து அவிழ்த்து ஏதோ ஓர் ஆவல் தூண்ட நடுவாக அப்போது தன் பார்வைக்கு தெரிந்த இடத்திலிருந்து அதை படிக்கலானான்.

நவரசங்கள் உன்னுடைய கண்களிலிருந்து தான் பிறந்தன. உன் கண்கள் என் பார்வையிலிருந்து மறைந்த பின் என்னுடைய நினைவிலிருந்து நவரசங்களும் மறைந்து விட்டன. அலங்காரங்கள் எல்லாம் உன்னுடைய பேச்சிலிருந்துதான் பிறந்தன. உன் பேச்சைக் கேட்க முடியாத தொலைவுக்கு நான் வந்துவிட்ட பின் அலங்காரங்களை மறந்து போய்விட்டேன். தாளங்களுக்கும் அவற்றையுடைய வாத்தியங்களுக்கும் உன்னுடைய நடையிலிருந்துதான் இனிமைகள் பிறந்தன. உன் கால்களில் ஐம்பொன் மெட்டி ஒலிக்கும்போது என் நாவிலே கவிதையும் பிறந்து ஒலித்தது. உன்னுடைய நடையைக் காணமுடியாத தொலைவுக்கு நான் வந்து விட்ட பின் அவையும் எனக்கு நினைவில்லை. உன்னை மீண்டும் எப்போது சந்திக்கப் போகிறோம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகருவது போல மந்தமாகி ஏதோ நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

இந்த வாக்கியங்களைப் படித்ததும் இளங்குமரனுக்குக் காரணம் புரியாத வேதனை ஒன்று பிறந்தது. இந்த வாக்கியங்கள் தோன்றக் காரணமாயிருந்த காதலர்களாக அந்த ஓவியத்தில் இருப்பவர்களை நினைத்துப் பார்த்தான் அவன். அந்தக் காதலர்களை அப்படியே அப்போதே உமையாகவும், சிவனாகவும் பக்தி பாவித்துக் கொண்டு வணங்க வேண்டும் போலப் புனிதமான உணர்ச்சியடைந்தான் அவன். ஏடுகளை முடிந்து வைத்துவிட்டுக் கடைசியாக மறுபடியும் அந்த ஓவியத்தைப் பார்த்தபோது அதில் தலை குனிந்து நாணி நின்ற நங்கையின் கண்களிலிருந்து நவரசங்களுக்குப் பதில் கருணை ஒன்றே தன்னை நோக்கிப் பெருகி வருவதுபோல் அவனுக்குத் தெரிந்தது. இளங்குமரனுக்கு அருகில் வளநாடுடையாரும் நின்று அந்த ஓவியத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

 

அவ்வளவில், “ஐயா! இந்தக் குடும்பத்தின் புகழ் பெற்ற பல தலைமுறைகளுக்குப் பின்பு துன்ப மயமானதொரு தலைமுறை இந்தப் பெண்ணின் காதலிலிருந்து தொடங்குகிறது. இவளுடைய அழகு இந்தக் குடும்பத்தின் பெரிய இரத்தினமாக இருந்து சுடர் பரப்பியதென்று என் தந்தை எனக்கு அடிக்கடி கூறியிருக்கிறார். இந்த ஓவியத்திலிருக்கிற பெண் என் தந்தைக்கு உடன் பிறந்தவளாக வேண்டும். எனக்கும் அத்தை முறை என்று குலபதி நாத் தழுதழுக்கச் சொன்னான். அவன் கண்களில் அப்போது நீர் பணித்திருந்தது. இளங்குமரனும் கண்கலங்கினான்.

இந்த ஓவியத்தினால் உன் மனம் கலங்குகிறாற்போல் தோன்றுகிறதோ?” என இளங்குமரனைக் கேட்டார் வளநாடுடையார்.

கலங்குகிறது. ஆனால் ஏன் கலங்குகிறதென்று தான் எனக்கே தெரியவில்லை என்று சொல்லிவிட்டு மேலே நடந்தான் இளங்குமரன். இதன்பின் அந்த ஓவிய மாடத்தில் எஞ்சியிருந்த எல்லாப் பகுதிகளையும் பார்த்துவிட்டு வளநாடுடையாரை நோக்கி, “இன்று மாலையிலேயே மணிபல்லவத்திற்குக் கப்பல் புறப்பட்டுவிடும் என்று நாம் இறங்கி வந்தபோது கப்பல் தலைவன் கூறியிருந்தானே? இன்னும் சிறிது நேரத்தில் நாம் திரும்பிவிட வேண்டும் அல்லவா?” என்று கேட்டான் இளங்குமரன்.

போகலாம் இளங்குமரா! போவதற்குமுன் குலபதியின் மாளிகையில் இன்னும் நாம் பார்க்க வேண்டிய இடம் ஒன்று எஞ்சியிருக்கிறது! இதுவரை ஓவியங்களில் வாழ்கின்ற இந்தக் குடும்பத்தின் பழம் தலைமுறையினரை யெல்லாம் பார்த்தாய்! இனிமேல் நீ பார்க்க வேண்டியவர் இந்தக் குடும்பத்தின் கண்கண்ட தெய்வத்தைப் போன்றவர். இந்தக் குடும்பத்தின் இரண்டு தலைமுறை மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டியவர்கள். அவரைப் பார்த்து விட்டுப் பின்பு நாம் புறப்படலாம் என்றார் வளநாடுடையார்.

அவர் எங்கிருக்கிறார்?” என்று குலபதியை நோக்கிக் கேட்டான் இளங்குமரன். உடனே, “இதோ அவர் இங்கேயேதான் இருக்கிறார் என்று குலபதி அந்த மாடத்தின் ஒரு பகுதியில் போய்த் திறந்த கதவுக்கு அப்பால் மான்தோல் விரிப்பில் அமைதியாக வீற்றிருந்தவரைப் பார்த்தபோது இளங்குமரனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. திடீரென்று உலகமே விந்தை மயமாக மாறி மிக வேகமாகச் சுழல்வது போலிருந்தது அவனுக்கு.

நான் இப்போது என் கண்களுக்கு முன்னால் யாரைக் காண்கிறேன் வளநாடுடையாரே?” என்று அவன் மருண்டுபோய் வினவினான். இந்தக் கேள்விக்கு வளநாடுடையார் மறுமொழி ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தார்.

ஆனால் இவ்வளவு வியப்புக்கும் காரணமாக உள்ளே அமர்ந்திருந்தவரே இதற்கு மறுமொழியும் கூறிவிட்டார்:

 

இனிமேல் என்றுமே யாரைச் சந்திக்க முடியாதென்று சென்ற விநாடி வரை நினைத்து நம்பிக்கை இழந்து விட்டாயோ அவரைத்தான் நீ இப்போது சந்திக்கிறாய் குழந்தாய்!” என்று அருட்செல்வ முனிவரின் குரல் எதிரேயிருந்து ஒலித்தபோது, தாய்ப்பசுவின் குரலைக் கேட்டுப் பாயும் இளங்கன்று போல் அந்த அறைக்குள் தாவிப் பாய்ந்தான் இளங்குமரன். அந்த ஒரே கணத்தில் அவன் சிறு குழந்தையாகி விட்டான். “கவலைப்படாதே! இதுவரை நான் காரியத்திற்காக மட்டும்தான் செத்துப் போயிருந்தேன். உண்மையில் நான் செத்ததாக நீ கேட்டு நம்பிய பொய் நானே படைத்துப் பரப்பியதாகும்..” என்று சொல்லி அருள்நகை பூத்த வண்ணம் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த அவனை எதிர்கொண்டு மார்புறத் தழுவிக் கொண்டார் அருட்செல்வ முனிவர்.

இது என்னுடைய வாழ்க்கையில் மிக மிகப் பெரிய பாக்கியம் நிறைந்த நாள். மீண்டும் தங்களை இப்படி இந்தத் தோற்றத்தோடு இதே பிறவியில் சந்திக்கும் நாள் ஒன்று என் வாழ்வில் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நல்ல நாளுக்கு நான் நிறைந்த நன்றி செலுத்த வேண்டும்...” என்று கூறிவிட்டு மேலே பேசுவதற்குச் சொற்கள் பிறவாத பரவசத்தோடு அருட் செல்வ முனிவரை நோக்கிப் பயபக்தியால் நெகிழ்ந்து நின்றான் இளங்குமரன். அவருடைய கண்களிலிருந்து அவன் கண்கள் எதையோ தேடின.

குழந்தாய்! வீரனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளுக்கு அப்பால் கூட முழுமையான பரவசம் வருவதில்லை. ஏனென்றால் இந்த உலகத்தில் அவன் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி விநாடி வரை சாதிக்க வேண்டிய காரியங்கள் மீதமிருக்கின்றன. தன்னுடைய வழியிலும் தன்னைச் சூழ்ந்துள்ள பிறருடைய வழிகளிலும் எதிர்த்துக் கிடக்கிற தடைகளைக் களைந்தெரிந்து நிமிர்கிற வரையில் க்ஷத்திரியனுடைய கைகள் ஓய்ந்திருக்கக் கூடாது. துன்பச் சுமைகளை எல்லாம் மெய்யாகவே களைந்து தீர்க்கிறவரை க்ஷத்திரியனுக்குச் சுயமான பெருமிதம் இல்லை. கற்பிக்கப்பட்ட ஒருமை நெறியிலிருந்து குறையாமல் நிறைந்த எல்லையில் நிற்பது பெண்ணுக்குக் கற்பாவது போல பெருமையையே தன் ஒழுக்கமாகக் கொண்டு நிற்பவன்தான் வீரன். குன்றவிடாத நிறைந்த பெருமைதான் வீரனுக்குக் கற்பு. ஒவ்வொரு மனிதனுடைய வழியிலும் உறவினர்களையும் நண்பர்களையும், வேண்டிய வர்களையும் கூடத் துணிந்து எதிர்க்க வேண்டிய குருக்ஷேத்திரப் போர் ஒன்று எப்போதாவது குறுக்கிடுகிறது. அப்போது சிறிய உறவுகளினால் தயங்கவோ, மயங்கவோ கூடாது!

சில ஆண்டுகளுக்கு முன் பூம்புகாரின் சக்கரவாளத்துக் காட்டில் என்னுடைய தவச் சாலைக்குத் தீ வைக்கப்பட்டபோது அதில் நான் எரியுண்டு மாண்டு போகாமல் உயிரோடு தப்பி வந்துவிட்டேன் என்பது வீர சோழிய வளநாடுடையாருக்கு மட்டும்தான் தெரியும். அப்படித் தெரிந்திருந்தும் நான் இறந்து போய் விட்டதாகப் பொய் கூறி உன்னை அவர் ஏன் ஏமாற்றினார் என்று நீ இன்று மனம் கலங்கக் கூடாது. காலம் வருகிறவரை இந்த உண்மையைப் பரம இரகசியமாகக் காப்பாற்ற வேண்டும் என்று நான் இவரிடம் வாக்குப் பெற்றுக் கொண்டிருந்தேன். எனக்குக் கொடுத்த வாக்கை இவர் இறுதி வரை காப்பாற்றி விட்டார். ஆனால் நானும் இவரும் காரியத்திற்காகத் தீர்மானம் செய்து வைத்திருந்த காலத்தில் இது நடைபெறாமல் தவறிவிட்டது. நான் இங்கே புறப்பட்டு வந்து தங்கிய மறு ஆண்டில் வைகாசி விசாகத்தின் போதே உன்னை அழைத்துக் கொண்டு வீரசோழிய வளநாடுடையார் இங்கே வருவார் என்று எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை. இவர் வந்து திருநாங்கூரில் உன்னை அழைத்தபோது நீயே வர மறுத்து விட்டாயாம். திருநாங்கூரடிகளும் உன்னை அனுப்புவதற்கு விரும்பவில்லையாம். சென்றமுறை இங்கு இவர் தனியே வந்தபோது திருநாங்கூர் அடிகளின் மேல் மிகவும் கோபத்தோடு வந்தார். நான்தான் இவரைச் சமாதானப் படுத்தினேன்.

குழந்தாய்! எவ்வளவுதான் வளர்ந்து பெரியவனாகி விட்டாலும் இன்னும் நீ எனக்குக் குழந்தைதான்! நாளங்காடியில் மாபெரும் ஞான வீரர்களையெல்லாம் வென்று நீநாவலோ நாவல்என வெற்றி முழக்க மிட்ட புகழ்ச் செய்திகள் யாவற்றையும் வீரசோழிய வளநாடுடையார் அவ்வப்போது தக்கவர்கள் மூலமாக எனக்குச் சொல்லியனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றை யெல்லாம் கேள்வியுற்றபோது நாம் வளர்த்த பிள்ளை இப்படிப் புகழ் வளர்க்கும் பிள்ளையாகத்தானே வளர்ந்திருக்கிறதென்று எண்ணி எண்ணிப் பூரித்தேன் நான். ஆனால் நீ அடைய வேண்டிய மிகப் பெரிய வெற்றி இனிமேல்தான் இருக்கிறது. புகழுக்காக அடைகிற வெற்றிகள் என்றும் உனக்கு உரியவை. குடிப்பெருமையை நினை வூட்டுவதற்காக அடைகிற வெற்றிகளும் சில உண்டு என்று அருட்செல்வர் சொல்லிக்கொண்டே வந்த போது, சொற்களிலும் கண்களிலும், அழுகை பொங்க உணர்வு நெகிழும் குரலில் இளங்குமரன் அவரை ஒரு கேள்வி கேட்டான்:

எப்போது எந்தக் குடியில் பிறந்தோம் என்றே தெரியாமல் வாழ்கிறவனுடைய வாழ்க்கைக்கு நீங்கள் கூறுகிற வகையைச் சேர்ந்த வெற்றிகள் அவசியம் தானா?”

இன்று நீ என் முன்னால் இப்படி அழக்கூடாது இளங்குமரா! உன் வாழ்க்கையில் இது சிறந்த நாள். இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். கடைசியாக நீயும் நானும் ஒருவரையொருவர் வளநாடுடையார் இல்லத்தில் சந்தித்துக் கொண்ட பழைய இந்திரவிழா நாளில் இரவை நீ மறந்திருக்க மாட்டாய் என்றெண்ணுகிறேன். அன்று நீ என்னிடம் தாங்க முடியாத தவிப்போடு எந்தக் கேள்வியைக் கேட்டாயோ அதே கேள்வியைத்தான் இப்போது வேறு சொற்களில் வேறு விதமாக அடக்க முடியாத அழுகையோடு கேட்கிறாய்! அறிவும், தத்துவ ஞானங்களுங் கூட மனிதனுடைய மனத்தில் ஆணி வேர் விட்டுப் பதிந்துவிட்ட பழைய துக்கத்தைப் போக்க முடியுமா என்ற சந்தேகம் உன் நிலையைப் பார்த்ததும் எனக்கு உண்டாகிறது!”

அப்படியில்லை ஐயா! துக்கங்களுக்காக வாய்விட்டுக் குமுறாமல் மனத்திலேயே அழுது விடுவது என் வழக்கம். ஆனால் இறந்து போனதாக நம்பிவிட்ட உங்களை மீண்டும் உயிரோடு பார்த்தபோது நான் குழந்தையாகி விட்டேன். உங்கள் பாவனையில் நான் என்றும் குழந்தையாக இருப்பதாகத்தானே நீங்களும் சற்று முன் கூறினர்கள்? உயிரோடு உங்களைக் கண்டதும் எனக்கு அழுகை வருகிறது. எல்லையற்ற ஆனந்தத்தின் விளைவு அழுகை என்றுதானே ஞானிகள் சொல்கிறார்கள்?”

ஞானிகள் அப்படிச் சொல்லியிருக்கலாம்! ஆனால் இனிமேல் உன்னுடைய வாழ்க்கையில் அழுகைக்கு இட மில்லை குழந்தாய்! இந்தக் கணம் முதல் உன்னுடைய மனமாகிய தேர்த் தட்டில் நான் ஏறி நின்றுகொண்டு உன்னைச் செலுத்தி வழி நடத்திக் கொண்டு போக வேண்டிய காலம் வந்துவிட்டது. நீ மறுபடியும் கோபமும் குமுறலும், மானமும், கொதிப்பும் நிறைந்தவனாக மாறிக் கையில் வில்லை நாணேற்றிக் கொண்டு க்ஷத்திரியனாக நின்று என் வழியில் நடக்க வேண்டும்.”

இப்படி ஒரு வேண்டுகோளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை, சுவாமி! கப்பலில் வரும்போது மறைத்து மறைத்து இதே வேண்டுகோளைத்தான் வளநாடுடையாரும் என்னிடம் கூறினார். ‘மனத்தின் வலிமை தான் மெய்யான வீரம் என்று வாதாடிவிட்டு நான் மறுத்து விட்டேன். அதே வேண்டுகோளைத்தான் நீங்களும் இப்போது என்னிடம் கூறிகிறீர்கள்.”

காரண காரியங்களோடுதான் இந்த வேண்டுகோளை விடுகிறேன் குழந்தாய்! உன் தாய், தந்தை, உற்றார், உறவினர், குடும்பம் எல்லாரும் அழிந்தொழிந்து சீர்கெட்ட கதையை உனக்கு நான் விளக்கும் காலம் வந்திருக்கிறது. அதைக் கேட்டுவிட்டு நீ என்முன் வெறும் கண்ணிர் சிந்துவதை மட்டும் நான் விரும்ப மாட்டேன். கேட்டவுடன் நீ க்ஷத்திரியனாக எழுந்து நிற்க முடியுமானால் நான் தயங்காமல் அவற்றை உனக்கு விளக்கலாம் என்று ஆவேசத்தோடு கூறினார் முனிவர்.

----------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.4. அகக்கண் திறந்தது

 

தன் தாய் தந்தை உற்றார் உறவினர் எல்லாரும் அழிந்தொழிந்து காலமாகி விட்டார்கள் என்று அருட்செல்வ முனிவர் கூறிய தாங்க முடியாத அந்தத் துக்கச் செய்திக்காகக் கதறி அழுவதா, அல்லதுநீ அழுவதை நான் விரும்பவில்லை. நீ வீரனாக எழுந்து நிற்க வேண்டும் என்று அவர் கேட்கும் வேண்டுகோளுக்கு இணங்கி நிற்பதா என்று புரியாமல் மருண்டான் இளங்குமரன். ‘நெகிழ்ந்த உணர்ச்சிகளை எதிரேதிரே சந்திப்பதற்கு ஞானிகளாலும் கூட முடியாது எனக் கப்பலிலிருந்து இறங்கி வரும்போது வளநாடுடையார் கூறியிருந்த அநுபவம் நிறைந்த சொற்களை இப்போது மீண்டும் நினைக்கத் தோன்றியது அவனுக்கு. கண்களை இமையாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அருட்செல்வ முனிவரை நோக்கிக் கூறலானான் இளங்குமரன்:

சுவாமீ! மதம் பிடித்த யானையைப் போல் என்னுடைய இந்த இரண்டு கைகளுக்கும் நான் எதிர்ப்பை தேடிக் கொண்டு திரிந்த காலத்தில் எந்தச் செய்தியை உங்களிடம் பலமுறை தூண்டித் தூண்டிக் கேட்டேனோ அதை அப்போது சொல்வதற்கு மறுத்தும் மறைத்தும் என்னை ஏமாற்றிவிட்டு, உணர்வுகளாலும், இலட்சியத் தாலும் நான் மாறிவிட்ட இந்தக் காலத்தில் இப்போது இப்படி அதைச் சொல்வதற்கு முன்வருகிறீர்களே?”

அருட்செல்வரிடம் இப்படி இந்தக் கேள்வியைக் கேட்டபோது கண்ணும் மனமும் கலங்கிய நிலையில் இளங்குமரன் வேதனைப் படுவதை அருகில் நின்ற வளநாடுடையாரும் குலபதியும் கவனித்தார்கள். இளங்குமரனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அருட்செல்வ முனிவர் தம்முடைய மறுமொழியால் போக்கினார். அந்த மறுமொழியை அவர் கூறும்போது அடக்கம் நிறைந்த அவருடைய இயல்பையும் மீறிக்கொண்டு அவர் பேசும் சொற்களில் கணத்திற்குக் கணம் ஆவேசம் வளர்வது புலப்பட்டது. தம்முடைய சொற்களின் மூலம் அவன் மனத்தில் ஏதோ ஒரு கனலைப் பற்ற வைப்பதற்கு முயன்றார் அவர்.

இளங்குமரா! நீ உணர்ச்சி வசப்பட்ட விடலைப் பிள்ளையாகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் உன்னிடம் பல செய்திகளை நான் சொல்லாமல் மூடி மறைத்துக் கொண்டிருந்ததற்குக் காரணம் உண்டு. காவிரிப்பூம் பட்டினத்திலே நான் உன்னை வளர்த்து ஆளாக்கிய போது உன்னையும், என்னையும் அழித்து விடுவதற்கு ஒவ்வொரு கணமும் சூழ்ந்து கொண்டிருந்த பகைகளைப் பற்றி நீ அறிந்திருக்க மாட்டாய். அந்தக் காலத்தில் ஒற்றர்களைப் போல் உன்னையும், என்னையும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த பயங்கரமான மனிதர்களைப் பற்றியும் அறிந்திருக்க மாட்டாய். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உன் உயிரையும் காப்பாற்றி வளர்த்துக் கொண்டு என் உயிரையும் பகைவர்கள் பறித்துக்கொண்டு விடாமல் நான் வாழ்ந்த வாழ்க்கையை இப்போது நினைத்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கிறது. கடைசி கடைசியாக நான் எதற்குப் பயந்து கொண்டிருந்தேனோ அந்த விளைவே உன்னையும் என்னையும் மிக நெருக்கமாகச் சூழ்ந்தது. அப்போதுதான் நான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். உன் எதிரிகளைப் பழி வாங்கி அவர்களிடமிருந்து நீ மீட்க வேண்டிய செல்வங்களை மீட்பதற்காக உன் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். உன்னுடைய குலப் பகைவர்கள் யார் என்பதைக் காலம் பார்த்து உனக்குச் சொல்லி உன்னைத் தூண்டுவதற்காக நானும் காப்பாற்றப்பட வேண்டும். நாம் இரண்டு பேருமே அந்த நோக்கத்திற்காக உயிரைக் காத்துக் கொண்டு வாழ்கிறோம் என்று நம்மை அழிக்க விரும்புகிறவர்களுக்குத் தெரிவதும் உடனடியாக இருவருக்கும் கெடுதலைத் தரும். இப்படித் தீர்மானமாகச் சிந்தித்த பின்புதான் நான் சிறிது காலம் இறந்து போய் விட முடிவு செய்தேன். இறப்பது என்றால்எல்லை கடந்து போவது என்றும் ஓர் அர்த்தம் உண்டு அல்லவா? அந்தப் பொய்ச் செய்தியை உலகத்திற்குப் பரப்பிவிட்டு நான் பூம்புகாரின் எல்லையைக் கடந்து இங்கே வந்த போது வளநாடுடையாரிடம் முன்பு ஒப்படைத்துவிட்டு வந்த கடமையை அவரும் இன்றைக்கு இங்கே உன்னை அழைத்து வந்ததன் மூலம் நிறைவேற்றிவிட்டார். உன்னையும் என்னையும் காப்பாற்றிக் கொண்டு நான் சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையில் வாழ்ந்தபோது வளநாடுடையாரும், ஆலமுற்றத்து நீலநாக மறவரும் பலவகையில் எனக்கு உதவியாயிருந்தார்கள். அப்படி அவர்கள் என்னிடம் அந்தரங்கமாகப் பழகியும் அவர்களிடம் கூடச் சில இரகசியங்களை நான் சொல்ல முடிந்ததில்லை. சூழ்நிலை அப்படியே என் வாயைப் பேசவிடாமல் அடக்கியிருந்தது.

குழந்தாய்! நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட காரியமானாலும் அந்தக் காரியத்தைத் தொடங்குவதற்கு முன் இருள் தீர எண்ணித் தொடங்க வேண்டும். உனக்கு ஆவல் வந்த போது இந்தக் காரியத்தைச் செய்யக் காலம் வரவில்லை. இப்போது ஏற்ற காலம் வந்திருக்கிறது. ஆனால் உன் மனத்தில் மானமும், உணர்வுகளில் கொதிப்பும் வரவில்லை. தீக்கடையும் அரணிக்கோலில் கடைகிறவரை நெருப்பு ஒளிந்திருப்பதைப் போல க்ஷத்தியரியனுடைய மனத்தில் மானம் நிறைந்திருக்க வேண்டும். உராய்ந்து பார்க்கும் போது தீக்கடைக் கோலிலிருந்து நெருப்புப் பிறப்பதைப் போலத் தான் பிறந்த குடிக்கு உற்ற துன்பங்களை உணர நேரும்போதே வீரனுடைய நினைவுகளில் சூடு பிறக்க வேண்டும். சூழ்நிலையிலும், உணர்வுகளிலும் எவ்வளவுதான் அமைதியடைந்திருந்தாலும் நீ உன்னுடைய உள்ளக் கனலை ஒருபோதும் அவிய விட்டு விடக்கூடாது. தன்னுடைய பகைக் குலத்தின் கடைசி மூச்சுத் துடித்துக் கொண்டிருக்கிறவரை வீரனின் மனத்தில் கனல் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே வந்த முனிவரின் பேச்சில் இளங்குமரன் நடுவே குறுக்கிட்டான்:

சுவாமீ! உங்களுடைய பேச்சின் ஆவேசத்தில் நான் இடையே குறுக்கிடுவதற்காகத் தாங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டும். நானோ என் எண்ணங்களில் திரு நிறைய வேண்டும் என்று இடைவிடாமல் பாவனை செய்து கொண்டு அமைதியில் மூழ்க ஆசைப்படுகிறேன். நீங்களோஉன் மனத்தில் கனல் நிறைய வேண்டும் என்கிறீர்கள். மனத்தின் எல்லையில் அருளையும், சான்றாண்மையையும் நிறைத்துக் கொண்டு நான் கருணை மறவனாக வாழ ஆசைப்படுகிறேன். நீங்களோ, கொடுமை மறவனாக என்னை, வில்லும் வாளும் எடுத்துக் கொண்டு உங்கள் வழியில் எழுந்து நிற்கச் சொல்லுகிறீர்கள்.”

அப்படி எழுந்து நிற்க நீ கடமைப் பட்டிருக்கிறாய்! அதோ அந்த ஓவிய மாடத்தைப் பார். அந்த ஓவியங்களில் உயிரற்று வாழ்கிறவர்களுக்கும், உயிரோடு வாழ்கிற உனக்கும் என்ன வேறுபாடு? உன்னுடைய உடம்பில் இரத்தம் ஒடுகிறது. அது வீரக்குடியின் புகழ்பெற்ற குருதி. இன்று உன் குடும்பத்துக்கு நீ பயன்பட வேண்டிய காலமும் வந்துவிட்டது.

 

பொருள்கருவி காலம்வினை இடனோ(டு) ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.’

 

என்று செயலுக்கு இலக்கணம் கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நம்மைச் சூழ்ந்திருந்த இருள் தீர்ந்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் இந்திர விழாவின் முதல் நாள் இரவு உன் தாயை உனக்கு காண்பிப்பதாக நான் கூறியிருந்தேனல்லவா? அதற்கு முன்பே இரண்டொரு இந்திர விழாக்களின் போது அப்படிக் கூறி உன்னை ஏமாற்றி ஏங்க வைத்தேன். அப்போதெல்லாம் நீ என்மேல் கோபப்பட்டிருப்பாய். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நீ வளர்ந்து பெரியவனாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே உன்னுடைய தந்தையும் தாயும் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார்கள். நீ பெரியவனான பின்பு உன்னிடம் சொல்வதற்காக என்னிடம் உன் தாய் கூறி விட்டுப் போன செய்தி ஒன்று உண்டு. அது வேறொன்றுமில்லை, உன் தந்தையும் தாயும் அழிந்து போகக் காரணமாயிருந்தவர்களை நீ உன் கைகளால் பழிவாங்க வேண்டு மென்ற கட்டளைதான் அது. அதை இவ்வளவு காலங்கடந்து உன்னிடம் சொல்வதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கொடுமை நிறைந்த செய்திகளைக் கேட்டு நீ ஏங்கி நலிந்து வளர்ச்சி குன்றலாகாதே என்பதற்காகச் சிறிது காலம் அவற்றை நீ அறிந்து விடாமல் மறைத்தேன். நீ வலிமையோடு உணர்ச்சி வசப்பட்டு நின்ற காலத்தில் அந்த உணர்ச்சி வேகத்தினாலேயே எல்லாத் திட்டமும் கெட்டுப் போகுமோ என்றும் சிறிது காலம் அவற்றை உன்னிடமிருந்து மறைத்தேன். அப்படி மறைத்த தெல்லாம்கூட உன்னுடைய நன்மைக்காகத்தான். கடைசியாக, உன்னைச் சம்பாபதி வனத்திற்கு வரச் சொல்லி அங்கு உன் தாயைக் காண்பிப்பதாகக் கூறியிருந்தேனே - அன்று நான் உனக்குக் காட்ட நினைத்திருந்தது உன் தாயின் அருமையான ஓவியத்தையும், அவள் இறந்து போன இடத்தையும்தான். அவற்றை நீ பார்த்துவிட்டு உண்மையைப் புரிந்துகொண்டு ஆவேசமாயிருக்கும் சமயத்தில் இன்று உன்னுடைய உள்ளத்தில் நான் மூட்டுவதற்கு முயன்று கொண்டிருக்கிற இதே கனலை அன்றே மூட்டி விட விரும்பியிருந்தேன். ஆனால் அன்றிரவில் நான் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. உன் தாயின் ஓவியம் ஒன்றும் அவள் சாவதற்கு முன்பு அணிந்திருந்த விலை வரம்பற்ற அணிகலன்கள் பலவும் நீ இன்ன குடியிலே இன்னாருக்கு மகனாகத் தோன்றியவன் என்பதை நினைவூட்டும் அடையாள மாலை ஒன்றும் பூம்புகாரில் ஓரிடத்தில் ஒரு கொடிய மனிதருடைய பாதுகாப்பில் ஒளிக்கப்பட்டுக் கிடக்கின்றன. அவை தன்னிடத்தில் ஒளிக்கப்பட்டுக் கிடப்பதை நான் ஒருவன் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறேன் என்பதும் அந்தக் கொடியவனுக்குத் தெரியும். உனக்கு நினைவு தெரிந்து நான் உன்னுடைய வளர்ப்புத் தந்தையே தவிர உன்னைப் பெற்ற தந்தையில்லை என்பதையும் நீ அறிந்துகொண்ட பின் உன் பெற்றோரைப் பற்றி என்னிடம் கேட்ட போதெல்லாம் நான் அந்தக் கொடியவனிடம் போய் இரகசியமாக அவனைச் சந்தித்து உன் தாயின் ஓவியத்தையும் பிற பொருள்களையும் என்னிடம் கொடுத்து விடுமாறு உன் சார்பாக மன்றாடிய போதெல்லாம் அவன் என் வேண்டு கோளுக்குச் சிறிதும் செவிசாய்க்கவில்லை. என்னை அலட்சியப்படுத்தினான். ஏளனம் செய்தான். பயமுறுத்தினான்.

இறுதி முறையாக நீயும் நானும் பிரிவதற்கு முந்திய இந்திர விழாவன்று முதல் நாள் காலையிலும் அந்தக் கொடியவனைச் சந்தித்து மன்றாடினேன். ‘இன்று நடு இரவுக்கு மேல் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் காத்திருந்தால் அவற்றை என் பணியாட்கள் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள் என்று உறுதி கூறி அன்று என்னைத் திரும்பி அனுப்பியிருந்தான் அந்தக் கொடியவன். அன்றிரவு அனுப்பிய பணியாட்கள் செய்ய வந்த பணி என்ன தெரியுமா? சம்பாபதி வனத்துப் புதரில் வைத்து உன்னையும் என்னையும் கொன்று விட முயன்ற பணிதான். தெய்வ சித்தத்தால் அன்று நீயும் நானும் உயிர் தப்பி விட்டோம். அதன் பின்புதான் நான் அதிகமான விழிப்பையும் கவனத்தையும் அடைந்தேன். என் மனத்தில் இடைவிடாமல் சிந்தித்து இப்படி மிகவும் தந்திரமாகத் திட்டமிட்டேன்.

வளநாடுடையாரின் இல்லத்திலிருந்து வெளியேறி நானே என்னுடைய தவச் சாலைக்குத் தீ வைத்து விட்டு நகரில் நான் இறந்து போனதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பிய பின் இந்தத் தீவுக்குப் புறப்பட்டு விடலாம் என்றும் அப்படி புறப்படு முன் நீலநாகரிடமோ வள நாடுடையாரிடமோ மட்டும் உண்மையைக் கூறிக் காலம் வருகிறவரை அந்த உண்மையை அவர்கள் வெளியிடக் கூடாதென்று வாக்கும் வாங்கிக் கொண்டு விடவேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன். இந்த எண்ணத்தோடு நான் வளநாடுடையாரின் வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இரகசியமாக வெளியேறிச் சக்கரவாளத்துக்குள் நுழைந்த போது வன்னி மன்றத்திற்குப் போகிற வழியில் ஒரு புதரருகே நமக்கு ஆகாதவர்களின் பேச்சுக் குரல் கேட்டு நின்று கவனித்தேன். முதல் நாள் இரவு சம்பாபதி வனத்து நாவல் மரத்தடியில் நம்மைக் கொன்று விட முயன்றவர்களே இந்திர விழாவின் இரண்டாம் நாளாகிய மறுநாளன்று இருள் மயங்கும் மாலையில் என் தவச்சாலைக்குத் தீ வைத்துவிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது, எதைச் செய்வதற்காக நான் போலியாய்த் திட்டமிட்டுக் கொண்டிருந்தேனோ அதை மெய்யாகவே செய்வதற்குத் திட்டமிடுகிறவர்களைப் பற்றி அறிந்தபின் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்கள் வைக்கிற நெருப்பில் சிக்கி அழிந்தது போலத் தோன்றும்படி பொய் செய்துவிட்டு நான் யாரும் அறியாமல் தப்பி வளநாடுடையாரைச் சந்தித்து அவரிடம் கூறவேண்டியதைக் கூறிய பின் இரவோடிரவாகப் புறப்பட்டு இந்தத் தீவுக்குப் பயணத்தைத் தொடங்கிவிடுவதென்று இருந்தேன். எல்லாம் அப்படியே நடந்தது. ‘இருட்டியபின் நகர் அரவம் அடங்கி ஓய்கிறவரை சுடுகாட்டுக் கோட்டத்தின் பாழடைந்த காளிகோயிலில் மறைந்திருந்து விட்டு அப்புறம் வளநாடுடையாரைச் சந்திக்கப் போகலாம் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்செயலாக வளநாடுடையார் நான் ஒளிந்திருந்த அந்த இடத்துக்கே வந்து என்னைச் சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. நானும் அவரும் பேச வேண்டியவற்றையெல்லாம் எங்களுக்குள் பேசிக் கொண்டு விட்டோம்.

 

அன்று பின்னிரவு நேரத்தில் பூம்புகார்த் துறையில் நான் இந்தத் தீவுக்குக் கப்பலேறு முன்பு வளநாடுடையாரிடம் உன்னைப்பற்றிக் கூறிய சொற்கள் எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கின்றன. ‘அந்தப் பிள்ளையின் தன்னம்பிக்கை அவனைக் காப்பாற்றும். தன்னைப் பிறர் வெற்றி கொள்ள விடாமல் தானே பிறரை வெற்றி கொள்ளும் மனம் அவனுக்கு இருக்கிறது. உலகத்தில் மிகப் பெரிய செல்வம் இப்படிப்பட்ட மனம்தான். இந்த மனம் உள்ளவர்கள் உடம்பினால் தோற்றுப் போனாலும் உள்ளத்தினால் வெற்றி பெறுவார்கள்!’ என்று உன்னைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அன்று அப்படிச் சொல்லிய நானே இன்று நீ உடம்பினாலும் தோற்றுப் போகக் கூடாதென்று கருதுகிறேன். நான் நீண்ட காலமாக உனக்குக் காண்பிப்பதாகச் சொல்லியிருந்த உன் தாயின் உருவத்தை இன்று நீயே இந்த ஓவிய மாடத்தில் பார்த்து விட்டாய். ஒருவேளை இங்கு நீ பார்த்த ஓவியங்களில் எது உன்னுடைய தாயின் ஓவியம் என்று புரியாமலே அதை உன் கண்கள் பார்த்திருக்கலாம். என்னுடன் மறுபடியும் வா! இப்போதே உனக்கு மீண்டும் அந்தப் புண்ணிய வதியைக் காண்பிக்கிறேன் என்று பூப்போல மென்மையாயிருந்த அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போய் ஓவிய மாடத்திலே ஓரிடத்தில் அவனை நிறுத்தி வைத்தார்.

இத்தனை காலமாகத் தன்னைப் பெற்றவளைக் காண வேண்டுமென்று நிலைத்த ஏக்கமாக அடிமனத்தில் அழுந்திப் போயிருந்த இணையில்லாத பேருணர்வு இன்று இந்த ஒரே ஒரு கணத்தில் விசுவரூபமாய்ப் பெருகி மனத்தின் எல்லையெல்லாம் வியாபித்து நிற்க, இந்த ஒரு கணத்துக்காகவே இத்தனை நாளும் காத்துக் கொண்டிருந்ததைப் போலப் பரிவு பெருக இளங்குமரன் கண் மலர்ந்தான். எதிரே பார்த்தான். அந்தக் கணத்தை வாழ்த்தினான். அந்தக் கணத்துக்காகவே வாழ்ந்து கொண்டி ருந்ததைப் போலவே வாழ்த்தினான். அது அவன் சற்று முன்பு பார்த்திருந்த ஓவியம்தான்.

எந்த ஓவியத்தின் கண்களிலிருந்து நவரசங்களுக்குப் பதில் கருணை ஒன்றே பெருகி அவன் உள் உணர்வுகளை அன்பு வெள்ளத்தில் நனைத்ததோ, அதே ஓவியத்தை நோக்கி இப்போது அவனுடைய கண்களிலிருந்தும் கருணை பெருகிச் சுரந்து முதலில் பெருகிய கருணையோடு கலப்பதற்கு முந்துவதுபோலத் தவித்தது. காலத்தின் இயக்கத்தையே தடுத்து நிறுத்தி ஓடாமற் செய்துவிட்டாற் போன்ற நித்தியமான விநாடிகளாயிருந்தன அவை. யார் யாரோ தன்னிடமிருந்து பெற்றுக்கொண்டு மகிழத் தவித்த அன்பையெல்லாம் அப்படித் தவித்தவர்களுக்கு அளிக்காமல் இந்த ஒற்றைக் கணத்துக்காகவே தான் சேர்த்துக் கொண்டு வந்ததுபோல் தோன்றியது அவனுக்கு. அப்போது அவனுக்கு ஏற்பட்டிருந்த பெருமிதத்திற்கு ஓர் அளவே இல்லை.

என்னுடைய தாய் தன் காலத்தில் தனது தலைமுறையிலேயே பேரழகு வாய்ந்தவளாக வாழ்ந்திருக்க வேண்டும். என்னுடைய தாயின் கண் பார்வையிலிருந்து தான் நவரசங்களுமே பிறந்ததாக யாரோ கவியுணர்வு உள்ளவர்கள் இந்த ஓவியத்தின் கீழுள்ள ஏட்டில் எழுதி யிருக்கிறார்கள். இந்த எழில் வாய்ந்த தாயின் கைகளில் நான் ஏதோ ஒரு காலத்தில் என் பிஞ்சுக் கால்களை உதைத்துக் கொண்டு மெல்லத் தவழ்ந்திருக்கிறேன். இந்த எழில் வாய்ந்த தாயின் கண்கள் பார்த்துப் பார்த்துப் பெருமைப்படும்படியாக நான் இவளுக்குக் குழந்தையா யிருந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டே கண்களில் நீர் மல்க நின்ற அவனுக்குத் தன் தாயோடு தொடர்பு டைய வேறொரு ஞாபகமும் அப்போது வந்தது.

நீங்கள் சான்றாண்மையாளராகப் புகழ் பெற்று நிற்பதை உங்கள் தாய் கண்டால் உங்களை ஈன்ற போதினும் பெருமகிழ்ச்சி அடைவாள் என்று திருநாங்கூர்ப் பூம்பொழிலில் ஏதோ ஒரு நாள் காலை விசாகை கூறிய வார்த்தைகள் இந்தக் கணத்தில் அவனுக்கு நினைவு வந்தன. அத்தகைய பெரும் பாக்கியத்தைத் தன்னுடைய தாய்க்குத் தான் அளிக்க முடியாமல் போய்விட்டதை எண்ணியபோது மனத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையை அடைந்தான் அவன்.

உன் மனத்தின் வலிமையை வளர்த்துக் கொள்வதற்கு நீ என்ன கற்றிருக்கிறாய்?’ என்று பல நாட்களுக்கு முன்பு இந்திர விகாரத்துத் துறவி தன்னைக் கேட்டபோது அவனது உள் மனத்திலிருந்து விழித்துப் பார்த்த அகக் கண் எதுவோ அந்த அகக் கண்ணிலேயே அவலம் கலங்கித் துயரம் மலிந்து கொண்டிருந்தது இப்போது.

இவர் உன் தந்தை! இவரும் இப்போது இந்த உலகத்தில் இல்லை என்று அந்த ஓவியத்தில் இருந்த வீர ஆடவரைச் சுட்டிக் காண்பித்தார் அருட்செல்வ முனிவர். அந்த ஓவியத்தைத் தன் கண்களால் பார்த்த முதல் கணத்திலேயே அதிலுள்ள காதலர்களை உமையாகவும், சிவனாகவும் பக்தி பாவித்துக் கொண்டு வணங்க வேண்டும் போலத் தனக்குத் தோன்றிய உணர்வை மீண்டும் இப்போது இளங்குமரன் எண்ணினான். இப்படி எண்ணிய போது தன்னுடைய அகக்கண் இன்னும் நன்றாக மலர்ந்து அங்கே ஆன்மாவின் உணர்ச்சிக்கு மட்டுமே புலப்படக் கூடியதொரு துக்க மயமான சுக விளைவு பெருகுவதை இளங்குமரன் அனுபவித்தான். அந்தப் பரிபூரணமான அநுபவத்தில் அவன் மெய்மறந்து நின்ற போது வளநாடுடையார் அவன் அருகில் வந்து கூறலானார்:

குலபதி உன்னுடைய தாய்மாமன் மகன் என்பதை இப்போது நீயாகவே புரிந்து கொண்டிருக்கலாம் இளங்குமரா! இந்தப் படத்திலிருக்கிற பெண் தன் தந்தையோடு உடன் பிறந்தவள் என்று சிறிது நேரத்துக்கு முன் குலபதியே உன்னிடம் கூறியிருந்ததை மறுபடியும் நீ இப்போதும் நினைத்துக்கொள். இந்தக் குடும்பத்தின் புகழை உலகத்துக்குச் சொல்ல வேண்டிய சக்தி ஒன்று இதிலிருந்து தவறி எப்படியோ எங்கோ வெளியேறிப் போய்விட்டது! அதை மறுபடியும் கண்டுபிடித்து இங்கே சேர்க்கிற வரை எனக்கு இவ்வளவு செல்வமிருந்தும் நான் மனத்தினால் ஏழைதான் என்று இந்த ஓவிய மாடத்துக்குள்ளே நீ நுழைந்த போது உன்னிடம் குலபதி வருத்தப்பட்டது யாருக்காகத் தெரியுமோ? உனக்காகத்தான்! நீதான் இந்தக் குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றப் போகிற சக்தி என்று குலபதியும் அருட்செல்வ முனிவரும், நானும் எல்லோருமே நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் சாவதற்கு முந்திய விநாடியில் உன் தாயின் மனத்திலும் தோன்றியிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நீதான் எங்களுடைய நம்பிக்கைகளைக் காப்பாற்ற வேண்டும்.”

ஐயா! இந்த உறவுகளையும் பற்றுதல்களையும் புரிந்து கொள்ளும் போதில் எனக்குப் பெருமையாக இருப்பதைப் போலவே தயக்கமாகவும் இருக்கிறது. இந்த உறவுகளை அங்கீகரித்துக் கொள்வதன் மூலமாகவே நான் வேறெந்த மனிதர்கள் மேலாவது உறவு மாறி வைரமும் பகைமையும் கொள்ள நேருமோ என்று எண்ணிக் கலங்குகிறேன்.”

இனிமேல் கலங்கிப் பயனில்லை குழந்தாய்! இதோ இந்தச் சுவடிகளைப் பார். சக்கரவாளக் கோட்டத்துத் தவச்சாலையில் வசிக்கும்போது இவற்றை என் கையில் வைத்து நான் எழுத்தாணியால் கீறிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் நீ இவற்றையும் என்னையும் சேர்த்துப் பார்த்திருக்கிறாய். ஆனால் அப்போதெல்லாம் இவற்றில் நான் எழுதிக் கொண்டிருப்பது என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் உனக்கு ஏற்பட்டதில்லை. நான் ஏதாவது பழைய நூல்களுக்கு உரையெழுதிக் கொண்டிருப்பதாக நீ நினைத்திருக்கலாம். ஆனால் இன்று இவற்றைப் படிக்கச் சொல்லி நானே உன்னைத் தூண்ட வேண்டிய நிலையில் பொறுப்புடையவனாக இருக்கிறேன். உன்னுடைய புகழ் வாய்ந்த குடிக்குத் துன்பம் நேர்ந்த சோக வரலாறு இந்தச் சுவடிகளில் அடங்கியிருக்கிறது. இதை நீ படித்து உணரும்போது உன் குடிக்குக் கேடு சூழ்ந்தவர்கள் யாரோ அவர்கள் மேல் நீ கோபமும் கொதிப்பும் அடைந்து தான் ஆகவேண்டும். நெருப்பையும் சந்தனத்தையும் ஒரே உணர்ச்சியோடு உடம்பில் தாங்கிக் கொள்கிற அளவு சாந்த குணத்தின் உயரமான எல்லையில் போய் நிற்கிறவனாகவே இருந்தாலும் இந்த ஏடுகள் கூறும் உண்மைகளைப் படிக்கும்போது உன் இரத்தம் சூடேறிக் கொதிக்கத் தான் செய்யும். அதை உன்னால் தவிர்க்க முடியாது. நீ தவிர்க்கவும் கூடாது.”

அப்படிக் கொடிய அநுபவம் எனக்கு ஏற்படத்தான் வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

உன் தாயே அப்படித்தான் நினைத்தாள்; சொன்னாள். அவள் இன்று உயிருடன் இல்லாத காரணத்தால் அவள் மனம் எந்தக் காரியத்தை நீ செய்து நிறைவேற்றுவாய் என்று நம்பிக்கொண்டே அழிந்து இறந்ததோ, அந்தக் காரியத்தை உனக்கு நினைவூட்டும் பொறுப்பை நானே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.”

உங்களை நான் மறப்பதற்கில்லை. உங்களுக்கு நான் நிறையக் கடமைப் பட்டிருக்கிறேன். அதோ அந்த மாடத்திற்கு அப்பால் பேரொளிப் பக்கமாகிய சுக்கிர பட்சத்து நிலா எழுந்துவிட்டது. இந்த ஏடுகளை நாளை இதே வேளைக்குப் படிக்கிறேன். நான் இன்று இந்த வேளைக்கும் நாளை இதே வேளைக்கும் நடுவிலுள்ள ஒரே நாளை மட்டும் என் விருப்பம் போல் செலவழிக்க எனக்குப் பிச்சை கொடுத்தருளுங்கள் என்று அருட்செல்வ முனிவருடைய கால்களில் வீழ்ந்து வணங்கியபடியே மன்றாடினான் இளங்குமரன். அவனுடைய பவித்திரமான கண்களிலிருந்து பெருகிய கருணை நீர்ப் பெருக்கில் அவருடைய தளர்ந்த பாதங்கள் நனைந்தன. அவர் அவனை நோக்கிக் கேட்டார்:

பல நாட்களாகத் தீர்க்க வேண்டிய பழி சுமந்து கிடக்கும் போது இந்த ஒரே ஒரு நாளை என்னிடமிருந்து பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”

வாழ்க்கைத் துன்பங்களுக்கு வேறு விதமான மருந்து காண வேண்டுமென்ற தாகம் ஒரு நாளில் ஏதோ ஒரு விநாடியில் தான் புத்தருக்கு உண்டாகியிருக்க வேண்டும். அந்தப் புனித ஞாயிறு பிறந்த ஒளி நாளைக்குப் பரவ இருக்கிறது. நாளைக்குக் காலையில் நான் மணிபல்லவத்துக்கு வருவதாக விசாகையிடம் சொல்லியிருக்கிறேன். நாளைக்கு ஒருநாள் மட்டுமாவது என்னைக் கோபமும் கொதிப்பும் அடையவிடாமல் என் போக்கில் வாழ அனுமதி தந்தருளுங்கள். நாளைக்கு இரவில் இதே நிலா உச்சி வானத்தை அடைவதற்குள் நான் மறுபடி இங்கே திரும்பி வந்து விடுகிறேன். அதன் பின்பு என்னை எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் நீங்கள் நடத்திக் கொண்டு போகலாம். நாளைக்கு மறுநாள் பொழுது புலர்வதற்குள் என்னுடைய குடியின் வரலாறுகளெல்லாம் அடங்கிய இந்தச் சுவடிகளை நான் படித்து முடித்து விடுவேன். என் அறிவின் வலிமையால் இந்தச் சுவடிகளை நான் படிக்கும்போது என் மனம் யார் மேல் வைரமும் பகையையும் கொள்ள முடியுமோ, அவர்களைக் கூடப் பொறுத்து நிற்க நான் முயல்வேன்.”

அப்படிப் பொறுத்து நிற்பதற்கு நீ முயலக் கூடாது குழந்தாய்! கோபத்தில் இரண்டு வகை இருக்கிறது. சீற்றம் என்பது ஒன்று. செற்றம் என்பதும் ஒன்று. சீற்றம் என்பது கோபம் விளைய வேண்டிய நிகழ்ச்சி நிகழ்ந்த உடனே தோன்றித் தீர்ந்த உடனே தீர்ந்து போகிற கோபம். செற்றம் என்பது மனத்தினுள்ளேயே நெடுங் காலமாக நிகழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற கோபம். நீ உன் எதிரிகள் மேல் அடைய வேண்டிய கோபம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அந்தக் கோபத்தை இன்னும் ஒருநாள் தாமத மாகத்தான் அடைய வேண்டும் என்று நீ விரும்பினால் அதற்கு நான் குறுக்கே நிற்கவில்லை. உன் விருப்பப்படியே வளநாடுடையாரையும் உடன் அழைத்துக் கொண்டு நீ புத்த பூர்ணிமைக்குப் போய்விட்டு வா. ஆனால் எனக்கு நீ வாக்குக் கொடுத்திருப்பதை மறந்து விடாதே. இதே இடத்தில் தீபத்தையும் சுவடிகளையும் வைத்துக் கொண்டு நாளைக்கு இரவு உனக்காக நான் காத்திருப்பேன் என்று கூறி அவன் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தார் அருட்செல்வ முனிவர்.

குலபதி அவர்களை வழியனுப்புவதற்குச் சங்கு வேலித்துறை வரை உடன் வந்திருந்தான். அவர்கள் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு வந்திருந்த பழைய கப்பல் மாலையிலேயே மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தது. மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும் மாலையில் அந்தக் கப்பலிலேயே புறப்பட்டுப் போயிருக்க வேண்டுமென்றும் தோன்றியது. சங்குவேலித் துறையிலிருந்து மணிபல்லவத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கீழை நாட்டு வாணிகக் கப்பல் ஒன்றில் இளங்குமரனும் வளநாடுடையாரும் இடம் பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

ஐயா! நாளைக்கு நிலாப் புறப்படும் நேரத்திற்கே நான் இந்தத் துறையில் வந்து உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன். உங்கள் ஓவிய நண்பரையும் திரும்பி வரும்போது இங்கே உடனழைத்து வந்து விடுங்கள் என்று விடை பெறும்போது குலபதி மனம் நெகிழ்ந்து கூறினான். அவனுடைய வார்த்தைகளில் இப்போது உறவின் நெருக்கமும், உரிமையும் கலந்து தொனித்தன.

அதைப் பற்றியெல்லாம் நீ ஒன்றும் கவலைப்படாதே குலபதி! நான் ஒருவன் துணையாகக் கூடச் செல்லும் போது இளங்குமரனைத் திரும்ப அழைத்து வருவது பற்றி உனக்குச் சந்தேகம் ஏற்படவே வழியில்லை என்று உறுதி கூறினார் வளநாடுடையார். வெள்ளி வெண்குடம் போல் நிலா மிதக்கும் வானத்தின் கீழே கடலில் பயணம் செய்யும் அந்த அழகிய வேளையில் இளங்குமரனுடைய புறக் கண்கள் தாம் கப்பலையும், கடலையும் உடன் இருந்தவர்களையும் வானத்து நிலாவையும் பார்த்துக் கொண்டிருந்தன. புறக்கண்களை விட ஆற்றல் வாய்ந்த அவனது அகக்கண்ணோ மணிநாகபுரத்தின் ஓவிய மாடத்தில் பார்த்த தன் தாயையும் தந்தையையும் மறுபடி மறுபடி தன்னுடைய மனத்திற்குள்ளேயே உயிருருவமாகக் கற்பித்துப் பார்த்து மானசீகமாக அவர்களைப் பலமுறை வணங்கிக் கொண்டிருந்தது.

------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.5. விசாகையின் தத்துவம்

 

மணிநாகபுரத்திலிருந்து புறப்பட்டிருந்த கப்பல் ஒன்றரை நாழிகைப் பயணத்தில் மணிபல்லவத் தீவை அடைந்து விட்டது. மணிநாகபுரமும், மணிபல்லவமும் வேறு வேறு இடங்கள் என்று பிரித்துச் சொல்ல முடியாதபடி மிக அருகிலேயே இருந்தன. மணிநாகபுரத்து நகர எல்லை முடிகிற கோடியில் ஒரு சிறிய நீர்ச் சந்திதான் மணிபல்லவத்தைத் தனியே பிரித்தது. நீண்ட தொலைவிலிருந்து வருகிற பிறநாட்டு மக்கள் மணிநாகபுரம் சங்குவேலி, பெருந்தீவு, மணிபல்லவம் எல்லாப் பிரிவுகளையும் நாகநாடு என்ற ஒரே தொகுதியாக எண்ணிப் புண்ணியப் பெயராகிய மணிபல்லவம் என்பதனாலேயே அதனை அழைத்து வந்தனர். கடலில் மிதக்கும் மரகதப் பசுந்தளிராக நிலாக் கதிர்களின் கீழ் அந்தத் தீவு புண்ணியப் பயன்களெல்லாம் ஒன்றுபட்டு மிதப்பது போலத் தெய்வ நகரமாய்த் தெரிந்தது. இளங்குமரனும், வளநாடுடையாரும் மணிபல்லவத் தீவின் மேற்கு கரையில் இருந்த இறங்குத் துறையில் இறங்கிப் பகல் நேரமே போலக் கலகலப்பாக இருந்த வழியே நடந்தனர். வீதி நிறையப் பெளத்த சமயத் துறவிகளும், வேறு பல சமயங்களைச் சேர்ந்த ஞானிகளும், சீவர ஆடையணிந்த பெண் துறவிகளுமாக எங்கு நோக்கினும் ஒளி நிறைந்த முகங்களாகத் தென்பட்டனர். தீவே மணப்பது போல அகிற் புகையும், கற்பூரமும், நறுமண மலர்களும் சந்தனமும் மணந்தன.

கோமுகி என்னும் தாமரைப் பொய்கைக் கரையில் பெரிய பெரிய கல் தூண்களில் அமைந்த தீப அகல்களில் பந்தம் எரிப்பது போல் நெய்யூற்றப் பெற்றுப் பெரிதாய் எரிந்து கொண்டிருந்த விளக்கு சுடர்களில் கீழே பாலி மொழியில் எழுதப் பெற்ற புனித கிரந்தங்களைத் துறவிகள் உரத்த குரலில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் பெருங்கூட்டம் நின்று கேட்டுக் கொண்டிருந்தது. மற்றொரு புறம் பெளத்த சமயக் காப்பியங்களை விளக்கும் நாடகங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். பெளத்த சமயத்து வழிபாடும் தானங்களாகிய விகாரைகளில் எல்லாம் தீபாலங்காரம் செய்திருந்தார்கள். நோக்குமிடமெல்லாம் தாமரைப் பூக்கள் அம்பாரம் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருந்தன.

நாக நாட்டின் இரத்தினத் தீவு என்று பெயர் பெற்ற அந்தப் பெரும் தீவுப் பகுதிகளின் அழகெல்லாம் இன்று இந்தப் புண்ணிய நகரத்திற்கே தனியாக வந்து பொருந்தி விட்டாற்போல் தோன்றியது. மணிபல்லவத் தீவில் கோமுகிப் பொய்கையின் கரையைச் சுற்றிக்கொண்டே, வளநாடுடையாரோடு வந்தபோது விசாகை, ஓவியன் மணிமார்பன், அவன் மனைவி பதுமை எல்லாரையும் இளங்குமரன் அங்கே சந்திக்க நேர்ந்தது. ஒரு பெரிய கூட்டத்திற்கு நடுவே அமர்ந்து போதிமாதவர் படைத்தருளிய திரிபிடக நெறியை விசாகை விவரித்துச் சொற் பொழிவு செய்து கொண்டிருந்தாள். விசாகைக்கு அருகில் அவளைச் சூழ்ந்தாற்போல ஓவியனும் அவன் மனைவியும் அமர்ந்திருந்தார்கள். தானும் வளநாடுடையாரும் அங்கு வந்திருப்பதை அவர்களில் யாரும் அப்போதே கண்டுவிட முடியாமல் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று விசாகையின் பிடக நெறி விளக்கத்தைச் செவிமடுத்தான் இளங்குமரன். அங்கே விசாகையின் எதிர்ப்புறம் தொண்டு கிழவராக வீற்றிருந்த பெளத்த சமயத்துத் துறவி யாரென்று இளங்குமரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்தான் இளமையில் விசாகைக்கு சமய ஞானத்தைக் கற்பித்த சமந்த கூடத்துப் புத்த தத்தராக இருக்கலாமோ என்று எண்ணினான் அவன். விசாகையின் பிடகநெறி விளக்கம் முற்றுப் பெற்றதும் அவனுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது. கூட்டம் கலையப் பெற்று விசாகையும் அவளோடிருந்தவர்களும் தனியான போது இளங்குமரனும், வளநாடுடையாரும் அவர்களுக்கு அருகிற் சென்று நின்றார்கள், விசாகை அவர்கள் இருவரையும் உற்சாகமாக வரவேற்றாள்.

 

வரவேண்டும்! வரவேண்டும். ஒருவேளை நீங்கள் மணிநாகபுரத்திலிருந்து நாளைக்கு வைகறையில்தான் வருவீர்கள் என்று இந்த ஓவியரும் இவருடைய மனைவியாரும் கூறினார்கள். நல்ல வேளையாக நீங்கள் இப்போதே வந்துவிட்டீர்கள் என்று கூறிவிட்டுத் தன் எதிரேயிருந்த மூத்த துறவியின் அருகே இளங்குமரனையும், வளநாடுடையாரையும் அழைத்துச் சென்று அவர்களை இன்னாரென்று சொல்லி அவருக்கு அறிமுகப்படுத்தினாள் விசாகை. அவன் நினைத்தபடியே அவர்தாம் புத்த தத்தராயிருந்தார். சமதண்டத்து ஆசீவகர்களை இளங்குமரன் வென்ற திறமை பற்றியெல்லாம் அங்கு வந்து சேர்ந்த உடனே விசாகை அவரிடம் நிறையப் பெருமையாகக் கூறியிருந்தாள் போல் இருக்கிறது. அவர் இளங்குமரனிடம் ஆர்வத்தோடும், அன்போடும் பேசினார்.

குழந்தாய்! இந்தத் தீவில் நிகழ்கிற வைசாக பூர்ணிமை விழா என்பது தனியாக எங்களுடைய சமயச் சடங்கு மட்டும் அல்ல, கீழ்த்திசை நாடுகளின் அறிவுத்துறை வன்மைகளும், பண்பாட்டுப் பெருமைகளும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொள்வதற்கு இந்த நல்ல நாளும், இந்தத் தீவும் பன்னெடுங் காலமாகப் பயன்பட்டு வருகின்றன. இந்தத் தீவின் கரைகளில் அலைகள் ஒலிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே கீழை நாடுகளில் விதம் விதமான தத்துவங்களும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கி விட்டன. நம்மைப் போன்றவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சந்தித்துக் கொள்ளவும், ஒரு பெரிய அறிவுப் பரம்பரை தொடர்ந்து சங்கமமாகிப் பெருகவும் இந்தத் தீவும் இந்த நாளும் இடமாயிருந்து வருகின்றன. விசாகை இந்த முறை புத்த பூர்ணிமைக்காக இங்கு வந்து இறங்கிய விநாடியிலிருந்து என்னிடம் உன்னைப் பற்றியே நெடு நேரமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். திருநாங்கூரடிகள் என்னுடைய நெருங்கிய நண்பர். சமயவாதத்தில் நானும் அவரும் கடுமையாக எதிர்த்து நின்றிருக்கிறோம். அவர் என்னைப் பலமுறை வென்றிருக்கிறார். அவருக்கு நான் தோற்றிருக்கிறேன். ஆனால் நட்புச் செய்வதில் இருவருமே ஒருவருக்கொருவர் சிறிதும் தோற்றதில்லை. நீ அவருக்கு மிகவும் பிரியமான மாணவன் என்று விசாகையிடம் கேட்டறிந்த போது என் மனம் பூரித்தது. உலகில் நீ வாழும் நாட்கள் நிறைந்து பெருகுமாக என்று அவனிடம் அன்பாக உரையாடி வாழ்த்தினார் அந்த முதியவர். அவன் அந்த முதுமைக்கும் ஞானத்துக்கும் தன் மனப்பூர்வமான பணிவையும் வணக்கங்களையும் செலுத்தினான்.

அன்றிரவு எல்லாரும் கோமுகிப் பொய்கைக் கரையிலிருந்த பெளத்த மடத்தில் தங்கினார்கள். களைப்பினாலும், பயணம் செய்த சோர்வினாலும் எல்லாரும் உறங்கிய பின்னும் விசாகையும் இளங்குமரனும் கோமுகிப் பொய்கைக் கரையில் போய் அமர்ந்துகொண்டு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புத்த ஞாயிறு என்பது என்னவென்பதை அழகிய முறையில் ஒரு தத்துவமாக அவனுக்கு விளக்கிச் சொன்னாள் விசாகை,

 

புத்த ஞாயிற்றின் தோற்றத்துக்குரிய சிறந்த நாளாக வைசாக பூர்ணிமையைக் கொண்டாடுவது மட்டும் எங்களுடைய சடங்கு அல்ல! ‘எல்லா உயிரும் எங்கும் எப்போதும் எல்லா விதத்திலும் நன்றாக இருக்க வேண்டும் என்ற முதிர்ந்த கருணை யார் மனத்தில் எந்த விநாடி தோன்றினாலும் அங்கே அந்த விநாடியில் புத்த ஞாயிறு பிறந்து விட்டது என்று தான் கொள்ள வேண்டும். உயிர் இரக்கம்தான் பெரிய ஞானம். அது யார் மனத்தில் இருந்தாலும் அவர்களைப் புத்தர் போற்றுகிறார். ஆசைகளால் தான் கோபமும், வெறுப்பும் உண்டாகின்றன. ஆசைகள் அழிந்தால் எதன் மேலும் கோபமில்லை. எதன் மேலும் வெறுப்பில்லை. எப்போதும் மனம் இந்த உலகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இருக்கிற உபசாந்தி நிலை சித்திக்கிறது என்று விசாகை ஆர்வம் மேலிட்டுக் கூறிக் கொண்டே வந்தபோது இளங்குமரன் நடுவில் இடையிட்டுப் பேசினான்:

இப்போது நான் கூறப் போகிற செய்தியைக் கேட்டு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் அம்மையாரே! ‘உபசாந்தி நிலையை அடைய வேண்டும். அடைய வேண்டும் என்று நான் தவித்த காலமெல்லாம் போய் என் மனம் அந்த நிலைக்குப் பக்குவமாகி நிற்கும் இந்தச் சமயத்தில் அதை நானே இழக்க வேண்டியவனாகி விட்டேன். நாளைக்கு இந்த வேளையில் இதே தீவின் வேறொரு பகுதியிலே என் மனத்தின் எல்லையெல்லாம் யார் மேலோ எதற்காகவோ கோபமும் வெறுப்பும் ஏற்படப் போகிறது. தீக்கடைகோலைப் போல என் எண்ணங்களைத் தூண்டிக் கடைந்து யாரோ யார் மேலோ என்நெஞ்சில் கனலை மூட்டப் போகிறார்கள். இந்தப் புண்ணியத் தீவுக்கு ஒரு முறை வந்து - இதன் மண்ணை மிதித்து நடந்தாலே உபசாந்தி நிலை கிடைக்கும் என்று உங்கள் சமயத்தைச் சேர்ந்த துறவிகள் சொல்கிறார்கள். எனக்கோ இங்கு வந்தபின் ஏற்கெனவே கிடைத்திருந்த மன அமைதியும் போய்விடும் போல் இருக்கிறது.”

இப்படித் தாங்க முடியாத ஏக்கத்தோடு இளங்குமரன் தன்னிடம் கூறிய சொற்களையெல்லாம் கேட்டு விசாகை சிரித்தாள்.

தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களைக் காட்டிலும் கடைப்பிடிக்கிறவர்களை சிறந்தவர்கள் என்று நீங்கள் பல முறை என்னிடம் கூறியிருப்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். போதிமாதவருக்குப் பெருமை அவர் கண்ட தத்துவமாகவே அவருடைய வாழ்க்கை அமைந்தது என்பதுதான்! அறிவினாலும், மனத்தினாலும் வாழத் தொடங்கி விட்ட நீங்கள் மறுபடி உணர்ச்சிகளால் வாழவேண்டிய அவசியம் மீண்டும் எதற்காக நேர்கிறது?”

விசாகை தொடக்கத்திலிருந்து தன் மனத்தில் பவித்திரமான நினைவுகள் பிறக்கக் காரணமாயிருந்தவள். ஆகையினால் அவளிடம் எதையும் ஒளிக்காமல் சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது இளங்குமரனுக்கு. தான் மணிநாகபுரத்தில் குலபதியின் மாளிகைக்குச் சென்றதையும் அங்கே அருட்செல்வ முனிவரைச் சந்திக்க நேர்ந்ததையும் அவருடைய வேண்டுகோளையும் விசாகையிடம் கூறினான் இளங்குமரன்.

 

அவன் கூறியவற்றைக் கேட்டபின் விசாகை எதையோ ஆழ்ந்து சிந்திக்கிறவளாய் அமைதியான முகத் தோற்றத்தோடு இருந்தாள். இளங்குமரன் அவளிடம் மேலும் கூறலானான்:

நீங்கள் உலகத்தின் கண்ணிரைத் துடைப்பதற்காக உங்கள் கண்களில் நீரைச் சுமந்துகொண்டு வாழ்கிறீர்கள். நானோ என் குடும்பத்தில் என்றோ இறந்து போனவர்களின் சினத்தைச் சுமக்க வேண்டியவனாகி இருக்கிறேன். மணிநாகபுரத்து மண்ணில் இறங்கி நின்றவுடன் உங்கள் மங்கலமான வாயைத் திறந்துநிறைக நிறைக என்று வாழ்த்தினர்களே? அப்படி வாழ்த்தியபோது எது எப்படி என்னிடம் நிறைய வேண்டும் என்று நீங்கள் வாழ்த்தினீர்களோ? என் மனம் கோபத்தினால்தான் இனிமேல் நிறைய வேண்டும் என்று அருட்செல்வ முனிவர் கூறு கிறார். நானோ என் மனத்தில் எல்லையற்ற திரு நிறைய வேண்டும் என்று விரும்பினேன்.”

நாம் ஆசைப்படுவதற்கும் அடைய வேண்டியதற்கும் நடுவில் தெய்வ சித்தம் என்று ஒன்று தனியாக இருக்கிறது. ஆசைப்பட்டவற்றையெல்லாம் அடைவது எளிதானால் இந்த உலக வாழ்க்கை இப்படியா இருக்கும்? ஆனால் இப்போதும் உங்களுக்கு நான் ஒன்று சொல்ல முடியும். உங்களுடைய வாழ்க்கையை விந்தையானது. வாழ்க்கைக் கடலின் எல்லாவிதமான அலைகளிலும் நீங்கள் ஒதுங்கிக் கரை கண்டிருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கை இந்த மணிபல்லவத் தீவைப் போலவே நான்கு பக்கத்து அலைகளையும் தாங்கிக்கொண்டு அழியாத தத்துவமாக நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தத்துவம் கடந்த பொருள் எதுவோ அதை, தத்துவங்களால் அளக்க முடியாது என்று கருதி அதற்குக் கந்தழி என்று தமிழில் பெயரிட்டிருக்கிறார்கள். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் நீங்கள் இதுவரை அனுபவங்களால் வளர்த்து அவற்றையே தத்துவங்களாகக் கொண்டு அனுபவங்களைக் கடந்து நின்றிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட வாழ்வைத்தான் காவியம் எழுதவல்ல மகா கவிகள் ஒவ்வொரு கணமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு பக்கத்திலிருந்து மோதும் கடல் அலைகளையும் தாங்கிக் கொண்டு இந்தப் புண்ணியத் தீவு நிற்பதைப் போல, நீங்களும் நான்கு பருவத்து வாழ்க்கைச் சோதனைகளும் ஒன்று சேர்ந்தாற் போல் உங்களைத் தேடி வருகிற இந்தச் சமயத்தில் இவற்றைத் தாங்கி வென்று நிற்க வேண்டும். இந்த அநுபவத்திலும் நீங்கள் வளர்ந்து நிற்க வேண்டும். தெய்வீகமான பெரிய காவியங்களில் எல்லாம் அந்தக் காவியத்திற்குத் தலைவனாக இருப்பவனுடைய உயிர்க்குணம் அது நிறைகிற முடிந்த எல்லையில்தான் பிறந்து தொடங்கி ஒளிர்கிறது. இராமாயணம் முடிந்த பின்புதான் இராமனுடைய தரும வாழ்வைப் பற்றிய சிந்தனை தொடங்குகிறது. பாரதம் முடிந்த பின்புதான் பாண்டவர்களுடைய அறப்போரினது பெருமையைப் பற்றி எண்ணங்கள் பிறக்கின்றன. தன்னுடைய கதை எல்லை முடிந்த பின்பும் தன்னிலிருந்து பிறந்த சிந்தனை எல்லைக்கு முடிவே இல்லாமல் வளர்கிற புனிதமான காவியங்களைப் போல் நீங்கள் நிறைந்து நிற்க வேண்டும். இதுதான் திருநாங்கூரடிகளின் விருப்பம். என் விருப்பமும் இதுவே...” என்று விசாகை கூறியபோது இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளங்குமரனுக்கு மெய் சிலிர்த்தது. அவன் தன் கண்களை மூடிக் குருவை நினைத்துக் கொண்டான்.

அதோ என்று கிழக்கே காண்பித்தாள் விசாகை. இளங்குமரன் பார்த்தான். கீழ்த்திசை வெளுத்துக் கொண்டி ருந்தது. இருவரும் எழுந்து நீராடப் புறப்பட்டனர். போது கழிந்ததே தெரியவில்லை.

கிழக்கே அடிவானத்தைக் கிளைத்துக் கொண்டு எழும் சிவப்புக் கோளத்தைப் பார்த்துக்கொண்டேஞாயிறு பிறந்துவிட்டது அம்மையாரே!” என்றான் இளங்குமரன்.

கீழ்த்திசையில் மட்டுந்தானா! அல்லது உங்கள் மனத்திலுமா?” என்று கேட்டாள் விசாகை.

மனத்திலும் தான். மனத்தில் சிறிது போது சூழ்ந்திருந்த இருளைப் போக்கி ஒளி கொடுத்தவர் நீங்கள். உங்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே இருள் விலகிப் பொழுது புலர்ந்துவிட்டது என்று கூறியபடியே கண்களில் பயபக்தி மலர விசாகையைப் பார்த்தான் இளங்குமரன்.

உங்கள் வாழ்க்கை காவியமாக நிறைய வேண்டும் என்று இரண்டாம் முறையாக அதே வாக்கியத்தைப் பொய்யைச் சிதைக்கும் தூய்மைப் புன்முறுவலோடு மறுபடி அவனை நோக்கிக் கூறினாள் விசாகை.

-------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.6. பிறந்த கதை

 

புத்த பீடிகை வணக்கமும், கோமுகிப் பொய்கைக் கரையில் தத்துவஞானிகளைச் சந்தித்துப் பேசுதலும், வைசாகப் பூர்ணிமையின் கோலாகலங்களில் கலந்து கொள்ளுதலுமாக அருட்செல்வ முனிவர் பிச்சை கொடுத்திருந்த அந்த ஒருநாளும் மெல்லக் கழிந்து போய்விட்டது, அன்று பகலில் மணிபல்லவத்து வீதிகளில் விசாகையும் புத்ததத்தரும் உடன்வர வளநாடுடையாரும் ஓவியனும் அவன் மனைவி பதுமையும் சூழ்ந்து துணையாகக் கொண்டு சுற்றியபோது இளங்குமரன் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த தத்துவ ஞானிகளையெல்லாம் சந்தித்தான். சிறிதும் பெரிதுமாக அலை எறியப் பெற்றும், அசையாமல் கலங்காமல் நான் நிற்பதுதான் எனக்கு நிலையான உறுதி என்று நிற்கும் இந்தத் தீவைப்போல் அறிவின் பலமே பலமாக எதையும் தாங்கி நின்று சிரிக்கும் அந்தத் தத்துவ ஞானிகளைப் பார்த்தபோது இளங்குமரனுக்குப் பெரிதும் ஆறுதலாக இருந்தது. மனிதனுடைய மனத்தில் ஏற்படும் நோய்களுக்கு மருந்து வேறெங்கோ இருப்பதாகத் தேடித் தவித்துக் கொண்டிருப்பது பேதைமை. தனக்குள்ளே ஏற்படும் திடமான சிந்தனைகளே தன் மனத்துக்குச் சுகம் என்பதைப் போலத் தங்கள் உள்ளத்தில் புதுமைகளைத் தேடி உலகத்துக்குத் தரும் அந்த ஞானிகளை எண்ணி எண்ணி வணங்கினான் இளங்குமரன். கடற்பரப்பின் மேலே தீவின் கீழ்க்கோடியில் நிலா எழுந்த போது, அந்த வேளை வருவதற்காகவே அது வரை அவனருகில் காத்துக் கொண்டிருந்தவர் போல், “மணிநாகபுரத்திற்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தம்பீ!” என்று நினைவூட்டினார் வளநாடுடையார். இளங் குமரன் புறப்படச் சம்மதம் என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான்.

இதுதான் வாழ்க்கை! நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும்போது நம்முடைய நினைவில் அந்த வினாடிவரை தோன்றாத ஏதேனும் ஒரு புதிய திசையைக் காண்பித்து அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதன் அவசியத்தை யாராவது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே வந்து சேருகிறார்கள் என்று எண்ணியபடியே விசாகையிடமும் புத்ததத்தரிடமும் விடைபெற்றுக் கொண்டான் இளங்குமரன். அவர்களும் மகிழ்ச்சியோடு அவனுக்கு விடை கொடுத்தார்கள்.

நானும் எங்கள் பெளத்த சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட விரைவில் இங்கிருந்து பூம்புகாருக்குத் திரும்பி விடுவோம், திரும்பும்போது நாங்கள் மணிநாகபுரத்தில் இறங்கமாட்டோம். ஆயினும் நான் பூம்புகாரில் உங்களைச் சந்திப்பேன் என்றாள் விசாகை.

புத்ததத்தர் இளங்குமரனை வாழ்த்தினார். ஓவியன் மணிமார்பன் அங்கிருந்தே பாண்டி நாட்டுக்குப் புறப் படுவதாகச் சொன்னான்.

ஐயா! இங்கிருந்தே பாண்டிநாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய கொற்கைக்குப் பல கப்பல்கள் புறப்படுகின்றன. மணிபல்லவத் தீவையும், வைசாக பூர்ணிமை விழாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் இந்திர விழாவுக்கு வந்திருந்த நானும் என் மனைவியும் பூம்புகாரிலிருந்து உங்களோடு இங்கே புறப்பட்டு வந்தோம். விரும்பியபடி இந்தச் சிறிய ஞானத்தீவையும் இதில் நிகழும் அறிவுத் திருவிழாவையும் கண்டுகளித்தாயிற்று. இன்றோடு நாங்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு ஏறக்குறைய இரண்டு திங்கள் காலத்துக்கு மேல் கழிந்து விட்டது. என்னுடைய வயது முதிர்ந்த பெற்றோர்கள் நானும் என் மனைவியும் வருகிற நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்தக் கொண்டிருப்பார்கள். கொற்கைத் துறைமுகப்பட்டினத்தில் இறங்கிப் போகிற போக்கில் அங்கு உள்ள சலாபத்தில் நடைபெறும் புகழ்பெற்ற முத்துக்குளிப்பு விழாவையும் பார்த்துவிட்டு நாங்கள் மதுரை திரும்பிவிடலாம் என்று எண்ணுகிறோம்...” என்றான் மணிமார்பன். அவன் குரலில் ஊர் திரும்பும் ஆவல் மிகுந்து தொனித்தது.

 

ஆனால், இளங்குமரனும் வளநாடுடையாரும் ஓவியனுக்கு விடை கொடுக்க மறுத்துவிட்டார்கள். இளங்குமரன் ஓவியனை அன்போடு தழுவிக் கொண்டு அவனிடம் கூறினான்:

நீ எங்களோடு மணிநாகபுரத்திற்கு வரவேண்டிய அவசியம் இருக்கிறது மணிமார்பா! எனக்கு மிகவும் வேண்டியவனாகிய குலபதி என்னும் மணிநாகபுரத்து இரத்தின வாணிகனுடைய மாளிகையில் அற்புதமான ஓவிய மாடம் ஒன்றிருக்கிறது. அதை நீ காண வேண்டும். வேறு பல காரணங்களாலும் நீ இன்னும் சில நாட்களுக்கு என்னோடு உடனிருக்க வேண்டும்.”

இளங்குமரனுடைய இந்த அன்பான வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் மணிமார்பனும் அவன் மனைவியும் அவர்களோடு மணிநாகபுரத்திற்குக் கப்பலேறினார்கள், அன்று மணிபல்லவத்தைச் சூழ்ந்துள்ள கடலில் நீர்ப்பரப்பே தெரிவதற்கு இடைவெளியின்றி எங்கு நோக்கினும் அலங்கரிக்கப் பெற்ற கப்பல்களும் மரக் கலங்களும் போய்க் கொண்டிருந்தன. நிலா ஒளியின் கீழ் அந்த அழகிய சூழ்நிலையில் அவர்கள் மணிநாகபுரத்திற்குப் புறப்பட்டிருந்தார்கள். பரபரப்பான சூழ்நிலையில் முதல்நாள் இரவு அருட்செல்வ முனிவரிடம் இந்த ஒரே ஒரு நாளைப் பிச்சை கேட்டுப் பெற்றுக் கொண்டு அவசரமாக இந்தத் தீவுக்குப் புறப்பட்டு வந்ததும் இந்த ஒருநாள் கழிந்துபோன வேகம் தெரியாமல் இப்படிக் கழிந்துபோனதும், இப்போது மீண்டும் மணிநாகபுரத்திற்குத் திரும்பிப் போய்க் கொண்டிருப்பதுமாக ஒவ்வொன்றாகவும் விரைவாகவும் நடக்கும் தன்னுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எண்ணியபோது இளங்குமரனுக்கு மிகவும் விந்தையாக இருந்தது.

தாயின் கருவிலிருந்து புறப்பட்டு வந்து இந்த மண்ணில் குதித்த முதல் விநாடி தொடங்கி உயிர் வாழ்க்கையே ஒரு பெரிய யாத்திரைதான் போலிருக்கிறது! எங்கும் நடக்காமல் தங்கிவிடும் போது மனத்தினாலும், எங்கும் தங்காமல் நடக்கும்போது கால்களாலும் மாறிமாறி எதை நோக்கியோ யாத்திரை செய்துகொண்டே இருக்கிறோம். கால்களால் முடியாதபோது எண்ணங்களாலும், எண்ணங்களால் முடியாதபோது கால்களாலும் எங்காவது சென்று கொண்டே இருக்கிறோம் என்று எண்ணியபடியே நிலாவையும் வானத்தையும் ஏக்கத்துடனே பார்த்தான் இளங்குமரன். அப்போது அவனைப் போலவே நிலாவையும் கப்பல்கள் செல்லும் கடலையும் தீபாலங்காரங்களோடு நாற்புறமும் மின்னும் தீவுகளையும் பார்த்துக் கொண்டே அருகில் நின்ற மணிமார்பன் அதே ஏக்கத்தோடு தன் அனுபவம் ஒன்றை இளங்குமரனிடம் கூறினான்.

இந்த உலகில் எத்தனையோ காட்சிகள் நம்முடைய பார்வைக்கும், நினைப்புக்கும், அழகாகவும் நயமாகவும் தோன்றிப் படைப்புக்கு மட்டும் உயர்ந்தவையாகவும் அரியவையாகவும் போய் மேலே நின்று கொள்கின்றன. இப்போது இந்த வானமும் கடலும், தீவுப் பகுதிகளும் ஓவியத்திற்கு உரிய அழகுக் காட்சிகளாக எனக்குத் தோன்றுகின்றன. இவற்றை நான் நினைப்பிற் கொண்டு வந்து படைக்க முயலும்போது எப்படியோ?”

 

எப்படியானாலும் அதுதான் இயற்கையின் வெற்றி மணிமார்பா! உன்னுடைய நிறங்களை நீ இயற்கை யிலிருந்து கற்றாய். உன்னுடைய நிறங்களால் நீ வரையப் போவது எதுவோ அதையும் இயற்கையிலிருந்து காண்கிறாய். எல்லாவிதத்திலும் உனக்கு ஆசிரியனாக இருக்கும் ஒரு பொருள் உன்னைவிட உயர்ந்து நிற்பது இயல்பு தானே?” என்றான் இளங்குமரன். இவ்வாறே மணிமார்பனும் இளங்குமரனும் பல செய்திகளைப் பற்றி உரையாடிக் கொண்டே சென்றார்கள். மணிமார்பனின் மனைவி தொலைவில் தெரியும் நிலாவொளி அழகோடு கூடிய தீவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் ஏதோ திட்டமிடும் ஆழ்ந்த சிந்தனைகளோடு தளத்தில் அமர்ந்திருந்தார். அன்றைய நிலா உச்சி வானத்தை அடைவதற்கு ஓரிரு நாழிகைகளுக்கு முன்பே அவர்கள் மணிநாகபுரத்தை அடைந்து விட்டார்கள். அவர்களை எதிர்கொண்டு அழைத்துப் போவதற்காகக் குலபதி சங்குவேலித் துறையில் வந்து காத்திருந்தான். துறையிலிருந்து அவர்கள் எல்லாரும் குலபதியின் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த மாளிகை ஒவ்வொரு கணமும் அவர்கள் வரவையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் பரபரப்பாயிருந்தது. மணிநாகபுரத்து மாளிகைக்குத் தன்னோடு உடன் வந்திருந்த எல்லாரையும் மாளிகையின் கீழ்ப்பகுதியில் முதற் கூடத்திலேயே தங்கியிருக்கச் செய்து விட்டு, இளங்குமரன் தான் மட்டும் ஓவிய மாடத்திற்குச் செல்லும் படிகளில் ஏறினான். எதை உணர்வதற்காகச் சென்று கொண்டிருந்தானோ, அதற்காக மனம் விரைந்தாலும், அந்தப் படிகளில் ஏறும்போது அவனுடைய கால்கள் தயங்கித் துவண்டன. கடைசிப் படியில் போய் அவன் தலை நிமிர்ந்தபோது அங்கு முன்பே வந்து நின்று கொண்டிருந்த அருட்செல்வ முனிவர் கைகளை நீட்டி அவனைத் தழுவிக்கொண்டார்.

என்னிடம் சொல்லியபடியே திரும்பி வந்து விட்டாய்! இனி நான் சொல்லியபடி நீ செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டே அவனை அந்த ஓவிய மாடத்தின் ஒரு கோடியிலிருந்த தம்முடைய அறைக்கு அழைத்துக் கொண்டு போனார் முனிவர். அந்த அறையின் நடு மேடையில் ஓர் அகல்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அருகே ஏட்டுச் சுவடியும் வைக்கப்பட்டிருந்தது. இளங்குமரனை அறைக்கு உள்ளே அழைத்துக் கொண்டு போன முனிவர் விளக்கின் அருகே மேடையில் அவனை அமரச் செய்தபின் அங்கே கிடந்த சுவடியை எடுத்து அவன் கைகளில் கொடுத்துத் தொடங்கலாம் என்றார். அவர் அளித்த அந்த ஏடுகளை கையில் வைத்துக் கொண்டே சலனம் அடைந்த மனத்தோடு எதற்காகவோ சிறிது தயங்கினான் இளங்குமரன்.

எதற்காகவும் தயங்காதே! இந்த ஏடுகளில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புக்களை இருநூறு வெண்பாக் களாகவும், உரைச் சுருக்கமாகவும் எழுதியிருக்கிறேன். அவற்றைப் படித்துப் பொருள் விளங்கிக்கொண்டு நீ தெளிவு பெறுவதற்கு நாளைக் காலை வரை ஆகலாம். அதோ நிலவும் உச்சி வானத்துக்குப் போய்விட்டது. இனியும் தாமதம் செய்யாமல் இந்த ஏடுகளைப் படிக்கத் தொடங்கிவிடு என்று கூறிவிட்டு அந்த அறைக் கதவுகளை இழுத்து அடைத்து வெளியே தாழிட்டுக் கொண்டு போய் விட்டார் அவர். மனம் வெதும்பி வாட நேர்கிற துன்ப அநுபவங்களையும் தாங்கிக் கொண்டு தான் வளர வேண்டும் என்று தன் மனத்தை மீண்டும் உறுதி செய்து கொண்டவனாக அந்தச் சுவடியில் முதல் ஏட்டிலிருந்த முதல் பாட்டைப் படிக்கலானான் இளங்குமரன். அந்த முதல் ஏடானது மிகவும் அண்மையில் எழுத்தாணியால் கீறப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

என் மனத்தில் சினம் கனல வேண்டும் என்ற உட்கருத்தோடு என்னை நோக்கிச் சொல்வது போலவே முனிவர் இந்த வெண்பாவை எழுதியிருக்கிறார் போலும் என்று எண்ணியவாறே மறுபடியும் அதைப் படித்தான் இளங்குமரன்.

 

தாயைச் சிதைத்த தனிக்கொடுமை யொன்றன்றி

நீயும் நினதரிய செல்வமுமே போயொழியத்

தீமை பலசெய்த சீரழிவை நீறாக்கத்

தீயென் றெழுக சினம்.

 

அடுத்த ஏட்டைப் புரட்டினான் இளங்குமரன். கோவை செய்யப்பட்டிருந்த பட்டுக் கயிற்றிலிருந்து ஒவ்வோர் ஏடாகக் கழன்றபோது அவன் மனத்தின் நீண்ட நாள் சந்தேகங்களும் ஒவ்வொன்றாகக் கழன்றன. கல்வியினாலும் தத்துவ ஞானத்தினாலும் அவன் தனக்குள் சேர்த்திருந்த மெல்லிய உணர்வுகள் நெருப்பு காயக் காய வற்றிக் குறையும் நீர் போலக் குன்றின. அந்த ஏட்டுச் சுவடிப் பாடல்களிலிருந்து காலவெள்ளத்தின் அடி ஆழத்தில் மூழ்கிப்போயிருந்த பல சம்பவங்கள் அவனுக்குத் தெரிந்தன. தான் பிறந்த கதையும் தன் தாய் தந்தை இருவரும் இறந்த கதையும் ஒருங்கு தெரிந்தது. தான் பூம்புகாரில் அருட்செல்வ முனிவரின் தவச் சாலையில் நினைவு தெரியாச் சிறு பருவத்தினனாக வளர்ந்து கொண்டிருந்தபோது தன்னைக் காண்பதற்காகவும் தனக்கு ஐம்படைத் தாலியும் பொன் அரைஞாணும் அணிவித்துப் பிறந்தநாள் மங்கலமும் வெள்ளணி விழாவும் கொண்டாடி மணிநாகபுரத்திற்குத் தன்னை அழைத்துப் போவதற்காகவும், நாக நாட்டிலிருந்து பூம்புகாருக்குப் புறப்பட்டு வந்த தன் அருமைத் தாய்மாமனாகிய காலாந்தக தேவரைக் கொலைகாரப் பாவிகள் ஏமாற்றி அழைத்துப் போய் வன்னி மன்றத்து இருளில் கொலை செய்ததையும் அறிந்தபோது துக்கமும் கொதிப்பும் ஒருங்கு அடைவதை இளங்குமரனால் தவிர்க்க முடியவில்லை. அந்த ஏடுகளில் அப்போது படித்து அறிந்து கொண்டவற்றிலிருந்து அவன் தெரிந்து கொண்டவற்றை ஒன்றாகக் கூட்டி வரிசையாக எண்ணியபோது அவை நிகழ்ந்த காலத்தில் எப்படி நிகழ்ந்திருக்குமோ அப்படியே அவன் கண்முன் காட்சிகளாகத் தோன்றலாயின.

--------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.7. வெறுப்பு வளர்ந்தது

 

அவனுடைய அருமைத் தாய்க்கு இளங்குமரன் மகனாகப் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி இது. அந்தக் குடும்பம் பூம்புகாரின் பெரிய வாணிகர் ஒருவரைப் பகைத்துக் கொள்ள நேர்ந்ததும் அதன் காரணமாக ஆள் வலிமையும், செல்வாக்குமுள்ள அந்த வாணிகரின் மனத்தில் வெறுப்பும் குரோதமும் வளர்ந்ததும் மறக்க முடியாதவை. தொடர்ந்து கெட்ட கனவு காண்பது போன்ற வேதனையான அநுபவங்களை அந்தக் குடும்பத்துக்கு அளித்தவை. அந்த வேதனை தொடங்கிய நாளிலிருந்து அந்தக் குடும்பத்துக்கும் அதன் வழிமுறையினருக்கும் போதாத காலம் பிறந்தது. மனிதனுடைய வெறுப்புக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதைக் காட்டும் கதை அது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வைசாக பூர்ணிமைக்கு இரண்டு நாட்களிருக்கும் போது பூம்புகாரிலிருந்து அலங்கார மயமான பெரிய மரக்கலம் ஒன்று நாகநாட்டுப் பெருந்தீவுக்குப் புறப்பட்டிருந்தது. கடலில் மிதந்து கொண்டே நகரும் மாடமணி மாளிகை போன்ற அந்த மரக்கலத்தில் மூவரும் பயணம் செய்தனர். பயணம் செய் தவர்களில் முதன்மையானவர் பட்டினப்பாக்கத்து எட்டி குமரன் பெருநிதிச் செல்வர், அவருடைய நண்பராகவும் அமைச்சராகவும் சில சமயங்களில் ஊழியராகவும் சமயத்துக்கேற்றபடி அவருக்குப் பயன்படக்கூடிய ஒற்றைக் கண் மனிதர் ஒருவரும், மூன்றாவதாக ஏழைக் கவிஞன் ஒருவனும் அந்த மரக்கலத்தில் அவரோடு பயணம் செய்தார்கள். கப்பல் பயணத்தின் போது பெருஞ்செல்வரும் திருமணமாகாத இளைஞருமாகிய அந்தப் பெருநிதிச் செல்வருக்கு உற்சாகமூட்டும் படியான கவிதைகளைப் புனைந்து பாட வேண்டும் என்பது அந்தக் கவிஞனுக்கு இடப்பட்டிருந்த பணி. அரசர்களுக்கு அவைக் கவிஞர்களைப் போலப் பூம்புகாரின் வாணிக மன்னர்களும் இப்படித் தங்கள் மாளிகைகளில் எல்லாம் சிறந்த கவிஞர்களை வைத்துப் பேணி வருவது வழக்கமாயிருந்தது. சொந்த மகிழ்ச்சிக்காகக் கிளியையும் புறாவையும் கூண்டில் அடைத்து வளர்ப்பதைப் போலக் கவிகளையும் வளர்த்தார்கள் இந்தச் செல்வர்கள்.

சோழர் கோநகரான பூம்புகாரின் மிகப் பெரிய வாணிகரும், திருமணமாகாத இளைஞருமாகிய எட்டி குமரன் பெருநிதிச் செல்வரின் மாளிகையில் அவைக் கவிஞனாக வாய்த்திருந்த இளைஞன் தான் படைக்கும் கவிதைகளைப் போலவே வனப்பு வாய்ந்த கட்டெழில் தோற்றத்தையுடையவன். அமுதசாகரன் என்று தோற்றத்திலன்றிப் பெயரிலும் இனிமையைப் பெற்றிருந்தான் அவன். கடலைப் போலப் பரந்த மனம். குழந்தையைப் போலக் கள்ளங்கபடமறியாத வெள்ளைத்தனம். உலகத்து அழகுகள் எல்லாம் தன்னுடைய கவிதைக்கு மூலதனம் என்று உரிமையுடனே எண்ணும் வசீகரமான நினைவுகள். அந்த நினைவுகளோடு பரந்த அநுபவங்களைத் தேடி உலகத்தைப் பார்க்கும் வசீகரமான கண்கள். வசீகரமான முகம். இந்த உலகத்து அழகுகளையெல்லாம் எப்போதுமே ஒன்றுவிடாமல் அங்கீகரித்துக் கொள்வது போல வசீகரமான புன்னகை.இவையெல்லாம் சேர்ந்துதான் அமுதசாகரன் என்னும் இளம் பருவத்துக் கவியாயிருந்தன.

பட்டினப்பாக்கத்து எட்டிகுமரன் பெருநிதிச் செல்வரே இந்த அழகிய கவிஞனின் தோற்றத்திலிருந்த வனப்பைத் தன்னுடைய குலப் பகைமையாக எண்ணும் படியான விளைவு அந்த முறை அவர்கள் நாகநாட்டுப் பெருந் தீவுக்குக் கடற்பயணம் சென்றபோது ஏற்பட்டது. அந்த விளைவுக்குப் பின் கவியின் போதாத காலமும் எட்டி குமரனுடைய குரோதமும் ஒன்றாகப் பிறந்து வளரத் தொடங்கிவிட்டன.

கடல் கடந்த நாகநாட்டுப் பெருந்தீவிலுள்ள இரத்தின வாணிகர் குடும்பத்துப் பெண்ணொருத்தி இணையற்ற பேரழகி என்று கேள்விப்பட்டு அவளுடைய ஒவியத்தையும் இரகசியமாக வருவித்துப் பார்த்த பின் அவளைத் தான் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு எட்டிகுமரன் பயணம் புறப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பெரு மன்னர்களும் கூட இந்த வகையில் நாகநாட்டுப் பெண்களின் அழகில் மயங்கிப் போய் இரகசியமாக நாக நங்கையர்களைக் காந்தர்வ விவாகம் செய்து கொண்டு திரும்புவது வழக்கமாயிருந்தது. அவரும் அந்த ஆவலினால் தான் புறப்பட்டிருந்தார்.

வைசாக பூர்ணிமையன்று நாகநாட்டு மணிநாகபுரத்தில் போய் இறங்கிய பின்பே கவி அமுதசாகரனுக்கு அவர்கள் பயணத்தின் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. எல்லாக் கடற் பயணத்தின் போதும் உடன் புறப்படுகிற வழக்கப்படிதான் இந்தப் பயணத்தின்போதும் அவன் புறப்பட்டிருந்தான். மணிநாகபுரத்தில் இறங்கிப் பொன்னும், மணியும், முத்துமாகப் பரிசுப் பொருள்களை ஊழியர்கள் பின்னால் சுமந்துவர, அவர்கள் மணம் பேசப் புறப்பட்ட கோலத்தை உடன் சென்று கண்டபோது தான் கவி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான். அந்த நாக நங்கையின் பெயர் மருதி என்று சொன்னார்கள். அவள் தமையனாகிய காலாந்தக தேவரை எட்டிகுமரன் முதலில் சந்தித்து மணம் பேசினார். காலாந்தக தேவரும் பெரிய இரத்தின வாணிகர் என்று அமுதசாகரன் அந்த மாளிகையைப் பார்த்ததுமே அறிந்து கொண்டான். விலை மதிப்பற்ற பரிசுப் பொருள்களை எதிரே வரிசையாகக் குவித்துக் கொண்டு எட்டிகுமரனும் அவருடைய அமைச்சராகிய நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும், மருதியின் தமையனாகிய காலாந்தகதேவரிடம் மணப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கும் போது தானும் அங்கு அவர்களோடு உடன் அமர்ந்திருக்கக் கூசிய கவிஞன் அந்த மாளிகையையும், அதன் சுற்றுப் புறத்திலுள்ள பூம்பொழில்களையும் சுற்றிப் பார்க்கலாம் என்ற ஆசையில் அவர்களை விட்டுத் தனியாய்ப் பிரிந்து புறப் பட்டான். பார்த்த இடமெல்லாம் இரத்தின மயமான அந்த மாளிகையின் காட்சிகள் அவன் மனத்தில் உல்லாச நினைவுகளை மலரச் செய்தன. அந்தக் காட்சிகளாலும் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்து காணும் புதிய நகரத்தின் தோற்றப் பொலிவுகளாலும் அவன் மனத்தில் வசீகரமான எண்ணங்கள் பொங்கி ஏதாவது கவிதை வடிவில் அந்த எண்ணங்களை வெளியிட வேண்டும் என்னும் தவிப்புப் பிறந்தது.

இப்படிப்பட்ட இங்கிதமான செளந்தரியத் தவிப்போடு அந்த மாளிகைக்கும் அதை அடுத்தாற்போல் இருந்த நாக தெய்வக் கோட்டத்துக்கும் நடுவிலே உள்ளதொரு மலர்ப்பொழிலில் அமுதசாகரன் நுழைந்தபோது அங்கே ஓர் அற்புதமான காட்சியைக் கண்டான்.

அந்தப் பொழிலில் பூத்த மலர்களுக்கு நடுவே உயிருள்ள பெண் மலராய்க் கந்தர்வ உலகத்திலிருந்து மண்ணில் இறங்கி வந்தவளைப் போன்ற தோற்றத்தை உடைய யுவதி ஒருத்தி தனக்குள் சிரித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் பந்தாடிய வண்ணம் இருந்தாள். அடர்ந்த பூங்கொடி ஒன்றின் பின் ஒதுங்கி நின்று இந்தக் காட்சியைச் சிறிது நேரம் பார்த்த அமுதசாகரன் தன்னை மறந்த நிலையில்,

 

சந்தநகை சிந்தியிதழ் கொஞ்சிவர

இந்துதுதல் நொந்துவியர் முந்திவரக்

கொந்தளக பந்திமிசை முல்லைமலர்

தந்தமண மண்டியெழ முந்திவரு

பந்துபயில் நங்கையிவள் கொண்டஎழில்

நெஞ்சிலலை பொங்கியெழ வந்த மதியோ?

 

என்று தன் மனத்தில் தோன்றியதை மெலிந்த குரலில் பாடிவிட்டு நிமிர்ந்தபோது அந்தப் பெண்ணே பந்தாடுவதை நிறுத்திவிட்டு இவன் எதிரே வந்து நின்றாள். விநாடிக்கு விநாடி பார்வைக்குப் பார்வை புதிய ஆச்சர்யங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு பார்ப்பதுபோல் அவனை நோக்கி அவள் மருண்டாள். மகிழ்ந்தாள். ஆவலடங்காத கண்களால் பார்த்துப் பார்த்து அந்தப் பார்வையில் அவன் கண்களும் தன்னோடு எதிர்கொண்டு கலந்தபோது அவள் நாணித் தலைகுனிந்தாள். தரையைப் பார்த்தாள். நிமிர்ந்தும் நிமிராமலும் நாணமும் ஆசையும் போராடக் கடைக்கண்ணால் அவனை நோக்கித் தேன் வெள்ளமாய் இனித்துப் பெருகும் குரலில் ஒரு கேள்வி கேட்டாள் அவள்:

 

யாரைப் பற்றிய பாட்டோ இது! இதில் வருகிற வருணனைக்குப் பொருளாகி அமைந்தவள் பாக்கியசாலி தான்.”

அந்தப் பாக்கியசாலி இப்போது என் எதிரே தான் நிற்கிறாள் என்றான் அமுதசாகரன்.

அவனிடமிருந்து இதைக் கேட்ட விநாடியில் தன் இரண்டு கண்களுமே சிருங்கார ரசத்தைப் பேசும் காவியங்களாக, மாறினாற்போல மலர்ந்திட அவனை நிமிர்ந்து நோக்கினாள் அந்தப் பெண். அப்படியே சில விநாடி கண்களால் பேசினாள். பின்பு நாவினாலும் பேசுவதற்குத் தொடங்கியவளாகி மாறிக் கூறினாள்.

இந்தச் சொற்களுக்காக நான் என்னை அர்ப்பணம் செய்கிறேன். இவை அழகியவை, உயர்ந்தவை. இவற்றுக்கு என்னுடைய உணர்வுகளும் நானும் ஆட்படுகிறோம்!”

மிக்க நன்றி, பெண்ணே!”

இப்போதே உங்கள் நன்றியை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை! ஏனென்றால் நீங்கள் என்னைப் பற்றி இன்னும் ஏதாவது பாட வேண்டும்.”

நான் பாட வேண்டுமானால் நீயும் மறுபடி பந்தாட வேண்டும் பெண்ணே!”

அவன் இவ்வாறு கூறிய மறுகணமே அவள் கையில் பந்து சுழன்றது. இதழ்களில் சிரிப்பும் நெஞ்சில் பரவசமும் கண்களில் அநுராகமும், கைகளில் உற்சாகமும் சுழன்றன. மானைப்போல் விழித்துத் தேனைப் போலப் பேசி இளமயிலைப் போல் ஆடும் அவள் கோலத்தைக் கண்டு அமுதசாகரன் மேலும் பாடினான்:

 

முத்துச் சிலம்பின் ஒலி தத்தித் தவழ்ந்துவரச்

சித்தத் தலத்தின்மிசை மெத்தக் குழைந்துமலர்

ஒத்துத் திகழ்ந்தவிழி கற்றுத் தெரிந்த நயம்

சற்றுக் குறித்த தொனிபெற்றுப் புரிந்துவர

மெல்லக் குழைந்தமொழி வெல்லப்பாகுசெயச்

சொல்லில் உரைத்தகுறை கண்ணில் நிறைத்துவரக்

கண்ணில் மறைத்தகுறை சிரிப்பிற் பிறந்துவரப்

பெண்ணின் குலத்திலொரு புதுமை நிறைக்கின்றாய்.”

 

அமுதசாகரன் நிறுத்தியதும் அந்தப் பெண் பந்தாடுவதை நிறுத்தவிட்டு அவனருகில் வந்து நின்றாள். வார்த்தைக்கு வார்த்தை ஆச்சரியங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு மீண்டும் அவனை நோக்கிப் பேசினாள்.

நவரசங்களில் சிருங்காரத்தை மட்டும் உங்கள் சொற்களுக்காகவே படைத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

எனக்கு அப்படித் தோன்றவில்லை பெண்ணே! நவரசங்களுமே உன் கண்களிலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது என்று அமுதசாகரன் சொல்லிக் கொண்டிருந்த போது அந்தப் பெண்ணின் தோழி ஓடிவந்து அவள் காதருகில் ஏதோ கூறி அவளை அவசரமாகக் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மாளிகைக்குள்ளே போய்விட்டாள். அவள் போன திசையைப் பார்த்துக் கொண்டே நின்ற அமுதசாகரன், ‘பாவம்! யாரோ நல்ல இரசிகையாக இருக்கிறாள் என்று எண்ணியபடியே மேலே நடந்தான். அவன் அந்தப் பூம்பொழிலைச் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் மாளிகைக்குள்ளே வந்த போது பட்டினப் பாக்கத்து எட்டிகுமரனும் மணிநாகபுரத்து இரத்தின வணிகராகிய காலாந்தக தேவரும் மணப்பேச்சில் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். மணப்பேச்சு நிகழ்ந்து கொண்டிருந்த கூடத்தின் ஒரு மூலையில் கவி அமுதசாகரனும் அடக்க ஒடுக்கமாகப் போய் நின்று கொண்டான். அங்கு நிகழ்வதைக் கவனிக்கலானான். “அன்புக்கு உரிய எட்டி குமரரே! நீங்களும் எனக்குச் சமமான ஒரு வணிகர். உங்களுக்கு மகட்கொடை நேர்வதில் எனக்கும் பெருமை உண்டு. என் தங்கையை நீங்கள் மணக்கக் கருதிப் பரிசுப் பொருள்களுடன் தேடி வந்திருக்கிறீர்கள். நாகநாட்டு வழக்கப்படி இப்போது என் தங்கை மருதியை அழைத்து உங்களுக்கு அடையாள மாலை சூட்டச் சொல்கிறேன் என்றார் காலாந்தகர்.

அமுதசாகரன் தன் தலைவராகிய பெருவணிகருக்கு வாய்க்கப் போகும் மங்கல மனையாளைக் காண்பதற்கு ஆவல் கொண்டான். கையில் மாலையேந்திக் குனிந்த தலை நிமிராமல் தோழிகளோடு அந்தக் கூடத்துக்குள் நுழைந்த பெண்ணைப் பார்த்தபோது அமுதசாகரனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘சற்று முன் பூம்பொழிலில் பந்தாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்தானா மருதி?’ என்று மாலையை ஏந்திக்கொண்டு வரும் மற்றொரு பூமாலையாக அவள் வந்து கொண்டிருக்கும் கோலத்தை நோக்கி அமுதசாகரன் வியந்தான். அவன் வியப்பை அதிர்ச்சியாகவே மாற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தாள் அந்தப் பெண்.

அருகில் வந்ததும் தைரியமாக நிமிர்ந்து எல்லாரையும் ஏறிட்டுப் பார்த்த பின்பு, அந்த ஏழைக்கவி அமுதசாகரனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டே அவன் பக்கத்தில் நின்றுவிட்டாள் மருதி. மின்னல் வெட்டும் நேரத்தில் இது நடந்தபோது அந்தக் கூடத்தில் பிரளயமே வந்ததுபோல் சீற்றம் எழுந்தது. எட்டிகுமரன் பெருநிதிச் செல்வரும் அவருடைய அமைச்சராகிய நகை வேழம்பரும் கண் பார்வையாலேயே பொசுக்கி நீறாக்கி விடுவது போலக் கவிஞனைப் பார்த்தார்கள். அவள் தமையனார் காலாந்தக தேவரும் சினம் கொண்டு கூறினார். “மருதீ! இதென்ன காரியம் செய்தாய் அம்மா! இதோ அமர்ந்திருக்கும் இந்தப் பெருஞ்செல்வர் பொன்னும் இரத்தினமுமாகப் பரிசுப் பொருள்களுடன் உன்னை மணம் பேசி இங்கே வந்திருக்கும்போது இவரோடு வந்திருக்கும் ஊழியனான கவிஞனுடைய கழுத்தில் நீ மாலை சூடிவிட்டாயே!”

நீங்கள் சொல்கிறவரிடம் இரத்தினங்கள் இருக்கலாம். ஆனால் இந்தக் கவியின் சொற்களே இவரிடமுள்ள இரத்தினங்களாக இருக்கின்றன. இவை விலைமதிப்பற்றவை. ஒவ்வொரு நாட்டுப் பெண்ணுக்கும் தனக்கு வேண்டிய நாயகனைச் சுயமாக வரித்துக் கொள்வதற்கு உரிமை உண்டு. நான் சிறிது நேரத்திற்கு முன்பு நமது பூம்பொழிலில் இவரைச் சந்தித்தபோது இவருக்கு என் மனத்தைத் தோற்கக் கொடுத்துவிட்டேன் என்று மருதி பேசிய சொற்களைக் கேட்டபோது எட்டிகுமரன் பெருநிதிச் செல்வர் இரண்டு கண்களும் நெருப்பாகச் சிவந்து சினம் பொங்க அமுதசாகரனையும் அவன் அருகில் நின்ற மருதியையும் ஒரு பார்வை பார்த்தார். அவருடைய பார்வையைத் தாங்கிக் கொள்ளவே பயந்து கூசி நின்றான் அந்தக் கவி.

அந்தக் கணமே அடிபட்ட வேங்கைபோல் அவமானம் அடைந்து தலைகுனிந்து வெளியேறிய பெருநிதிச் செல்வரும், அவருடைய அமைச்சரும் அந்த மாளிகையின் கடைசி வாயிற்படியில் இறங்கி வெளியேறுமுன் செய்து விட்டுப் போன சூளுரை மிகவும் கொடுமையாக இருந்தது. காலாந்தக தேவர் அவர்களை ஆற்றுவிக்க முயன்றதும் வீணாயிற்று. கவி அமுதசாகரன் ஓடிப்போய்த் தன் தலைவரின் கால்களைப் பற்றிக்கொண்டு, “ஐயா! நான் ஒரு பாவமும் அறியேன். என்மேல் சினம் கொள்ளாதீர்கள். இந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கும்போது இவளைப் பொழிலில் பார்த்தேன். நிர்மலமான மனத்தோடு சில கவிதைகள் பாடினேன்என்று கதறினான். இப்படி அவன் அவர் கால்களில் வீழ்ந்தபோது உடனிருந்த ஒற்றைக் கண்ணர் தன் உடைவாளை உருவிக்கொண்டு அவனைக் குத்திவிடுவது போலப் பாய்ந்தார். அப்போது இதைப் பார்த்துக்கொண்டிருந்த நாகநங்கை மருதி மிகப் பெரிய வீராங்கனையாக ஓடிவந்து அவர் கையில் இருந்த வாளைப் பறித்து எறிந்துவிட்டு, “இவர் என் அன்புக்கு உரியவர்! இவரை நான் எனக்குரியவராக வரித்துக் கொண்டேன். நீங்கள் போகலாம். இவருக்குக் கெடுதல் செய்ய முயன்றால் நீங்கள் இருவரும் இந்தத் தீவின் எல்லையிலிருந்து உயிரோடு பூம்புகாருக்குத் திரும்ப மாட்டீர்கள் என்று அறை கூவினாள்.

இதைக் கேட்டுப் பெருநிதிச்செல்வர் எரிமலையாகச் சீறினார்:

யார் உயிரோடு வாழ முடியும், யார் உயிரோடு வாழ முடியாது என்பதைக் காலம் சொல்லும், பெண்ணே! என்னுடைய சூளுரையை ஞாபகம் வைத்துக்கொள். இந்த ஏழைக் கவிஞனுடைய உயிருக்கு நீ என்னிடமே வந்து மன்றாடிப் பிச்சை கேட்கிறபடி நான் செய்வேன் என்பதை மறந்துவிடாதே என்று கூறிவிட்டு நகைவேழம்பரையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு சங்குவேலித் துறையில் வந்து பூம்புகாருக்குக் கப்பலேறி விட்டார் எட்டிக் குமரன் பெருநிதிச் செல்வர். அருமைத் தங்கையின் ஆசைக்கு மறுப்புக் கூற முடியாத நிலையில் காலாந்தகன் அந்த கவிக்கே அவளை மணம் செய்துகொடுத்துத் தன் மாளிகையோடு அவனைத் தங்கச் செய்துகொண்டான்.

அமுதசாகரன் எட்டுத் திங்கட்காலம் மணிநாகபுரத்தில் காவிய வாழ்வு வாழ்ந்தான். மருதி அவனைத் தன் அன்பு வெள்ளத்தில் மூழ்கச் செய்தாள். அவனுடைய சொற்களுக்குத் தன் அழகை மூலதனமாக்கி எண்ணற்ற கவிதைகளைப் படைத்துக் கொண்டாள். ஒன்பதாந் திங்களில் தான் பூம்புகாருக்குப் போய்த் திரும்ப வேண்டும் என்று விரும்பினான் அமுதசாகரன்.

பூம்புகாரில் யார் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்! அந்தக் கொடிய செல்வரைத் தேடிப் போய் மீண்டும் அவரைச் சந்திக்கும் கருத்து உங்களுக்கு இருக்கலாகாது என்றாள் மருதி.

எனக்கு வேண்டிய முனிவர்கள் பூம்புகாரின் சக்கரவாளத்துத் தவச்சாலையில் பலர் இருக்கிறார்கள். அருட்செல்வர் என்ற துறவியின் தவச்சாலையில் போய் நான் தங்கிக்கொள்வேன். ஒரு திங்கட்காலம் மட்டும் உன்னைப் பிரிந்து பூம்புகாருக்குப் போய் வர நீ எனக்கு விடை கொடு என்று கேட்டான் அமுதசாகரன்.

அந்தப் பேதையும் அவனுக்கு விடை கொடுத்தாள். தமையனான காலாந்தகனிடம் சொல்லி ஒரு தனிக் கப்பலில் அளவிட முடியாத செல்வங்களை நிறைத்து அமுதசாகரனைப் பூம்புகாருக்கு அனுப்பினாள் மருதி. அவனுக்கு விடை கொடுக்கும்போது மருதி கருக் கொண்டிருந்தாள். கணவன் பூம்புகாரிலிருந்து திரும்பியதும் அவனிடம் அந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கூறி அவனைக் களிப்பு வெள்ளத்தில் ஆழ்த்த வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். பேதைப் பெண்ணின் ஆசைக் கனவுகளுக்கு அளவு ஏது? பாவம்!

அமுதசாகரன் பூம்புகாரில் வந்து அருட் செல்வருடைய தவச்சாலையில் தங்கினான். மணநாகபுரத்தில் தன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்களையும் பெருநிதிச் செல் வரின் சீற்றத்தையும் அவரிடம் கூறினான். பூம்புகாரில் உள்ள வாணிகக் குடும்பத்து நங்கை ஒருத்தியையே பெருநிதிச் செல்வர் மணம் புரிந்து கொண்டுவிட்டார் என்ற செய்தியை முனிவர் அமுதசாகரனுக்குக் கூறினார். “திருமணமான பின்பு அவருடைய மனம் அமைதி யடைந்திருக்கும். நான் அவரைப் பார்த்து வரலாமல்லவா?” என்று முனிவரை வினவினான் அமுத சாகரன். அருட்செல்வர் அவன் கருத்தை அவ்வளவாக விரும்பவில்லை.

உன் விருப்பம்! ஆனால் அந்த வாணிகனும் அவனோடு திரியும் ஒற்றைக் கண்ணனும் மிகவும் கெட்டவர்கள். நீ சூதுவாதில்லாத அப்பாவியாதலால் உனக்கு அவர்களுடைய உள்வேடம் தெரியாது. அவர்களுடைய மிகப்பெரிய வாணிகம் கடல் கொள்ளையும் கொலையும்தான் என்றார் அவர்.

 

அமுதசாகரன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. முனிவருடைய அறிவுரையை மீறிக்கொண்டு பெருநிதிச் செல்வரைச் சந்திக்க புறப்பட்டான். அப்படிப் புறப்பட்டுப் போனவன் திரும்பவே இல்லை. எட்டுத் தினங்கள் வரை பொறுமையாக இருந்த அருட்செல்வர் ஒன்பதாவது நாள் காலையில் பொறுமை கலைந்து பட்டினப்பாக்கத்திற்குப் போய்ப் பெருநிதிச் செல்வரைச் சந்தித்துக் கேட்டார்:

உங்களைத் தேடிக்கொண்டு எட்டு நாட்களுக்கு முன்பு இங்கே வந்த கவி அமுதசாகரன் இன்னும் திரும்ப வில்லையே?”

திரும்பமாட்டான்! என்றும் திரும்ப முடியாத இடத்திற்கு அந்தத் துரோகியை அனுப்பியாயிற்று. நீங்களும் அந்த இடத்திற்குப் போக விரும்பினால் அங்கே உங்களையும் அனுப்பி வைக்கிறேன் என்று முனிவரை இழுத்துச் சென்று அந்த மாளிகையின் பாதாள அறையில் புலிக் கூண்டுகள் இருந்த இடத்திற்குக் கொண்டு போய்க் குரோதத்தோடு காண்பித்தார் பெருநிதிச் செல்வர். “நீ நன்றாக இருப்பாயா பாவி என்று குமுறி அலறிய அருட் செல்வரின் சாபங்களை அவன் இலட்சியம் செய்ய வில்லை. இடிஇடியென்று சிரித்தான்.

நான் நன்றாக இருக்க வேண்டும் என்று தேடி மணந்து கொள்ளச் சென்ற பெண்ணைத் தான் கவர்ந்த நன்றி கெட்டவனின் அழகிய உடம்பையும் அதில் ஓடிய பச்சைக் குருதியையும் இந்தப் புலிகளின் வயிற்றில் தேடிப் பாருங்கள் முனிவரே!” என்று கொலை வெறியோடு கூவிக் கொண்டே அருட்செல்வ முனிவரைப் பிடரியில் கை கொடுத்துத் தள்ளியபடியே அந்த மாளிகையின் வாயிலில் கொண்டுவந்து வீழ்த்தினான் அவன். அன்று தவச் சாலைக்குத் திரும்பிய அருட்செல்வர் ஓராண்டு காலம் சக்கரவாளத்திலிருந்தே வெளியேறாமல் இந்தப் பாவத்தை எண்ணி எண்ணி வேதனைப்பட்டார். மோன விரதம் இருந்தார். கடுமையான தவங்களில் ஈடுபட்டார். அவருடைய மனப்புண் எதனாலும் ஆறவில்லை.

இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தில் இந்திர விழாவின் முதல் நாள் அதிகாலையில் எழுந்து அவர் தம்முடைய தவச்சாலையின் வாயிலுக்கு வந்தபோது அங்கே வைகறைப் பெண்ணான உஷையே எதிரில் வந்து நிற்பது போல் பேரழகு வாய்ந்த இளம் பெண்ணொருத்தி கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தாள்.

நீ யார் அம்மா?”

நான் மருதி! இந்தத் தவச் சாலையில் உங்களோடு தங்கியிருக்கும் கவி அமுதசாகரனைப் பார்க்க வேண்டும்.”

அவள் யாரென்று அருட்செல்வருக்குப் புரிந்தது. கண்களில் நீர் பெருகியது, பொற்சிலை போன்ற குழந்தை யோடு செளந்தரியவதியாக வந்து நிற்கும் அந்தப் பெண்ணிடம் நிகழ்ந்த கொடுமைகளை எப்படித் தொடங்கி எப்படிச் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவருடைய நாவில் சொற்களே வரவில்லை. இருள் புலராத காலைப் போதாகையினால் தன்னுடைய கண்களில் நீர் அரும்புவதை அவள் பார்த்துவிடாமல் மேலாடையால் துடைத்துக் கொண்டு வேறு புறமாக முகத்தைத் திரும்பியபடி, “நீ இங்கே தங்கியிரு. அம்மா என்று சொல்லிவிட்டு நீராடச் சென்றார் முனிவர். அவர் நீராடிவிட்டுத் திரும்பி வந்தபோது அவளுடைய பிள்ளைக் குழந்தை அந்த ஆசிரமத்தின் முன்புறம் தளர்நடை நடந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் வேற்று முகம் நினையாமல் குறுஞ் சிரிப்போடு ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டது. தெய்வமே குழந்தையாகப் பிறந்து வந்தது போல அழகு வடிவாயிருந்த அமுதசாகரனின் பிள்ளை தன்னுடைய கால்களைக் கட்டிக் கொண்டபோது கோவென்று கதறியழ வேண்டும் போலிருந்தது அந்த முனிவருக்கு. அமுதசாகரன் தான் புறப்பட்டு வந்திருந்த கப்பல் திரும்பி மணிநாகபுரத்திற்குப் புறப்பட்டபோது அதன் தலைவனிடம் பூம்புகார் துறையில் இறங்கியவுடனே மருதிக்கு ஓர் ஓலை எழுதிக் கொடுத்திருந்ததாக அருட்செல்வரிடம் சொல்லியிருந்தான். மருதி அந்த ஒலையைத் தானாகவே அவரிடம் காண்பித்தாள்.

ஐயா! இங்கு வந்து இறங்கியதும் பூம்புகார்த் துறையிலிருந்தே அவர் எனக்குக் கொடுத்தனுப்பிய ஒலை இது.”

அவள் அளித்த அந்த ஒலையை வாங்கிப் படித்த போது முனிவருக்கு மேலும் அழுகை பொங்கியது. நவரசங்கள் உன் கண்ணிலிருந்து பிறந்தன... என்று தொடங்கி மீண்டும் அவளைச் சந்திக்கப் போகிற நாளை ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியிருப்பதாக அமுதசாகரன் பாலைத் தினைப் பொருளமைத்து மருதிக்காகப் பாடிய கவிச் சொற்கள் அந்த ஓலையில் இருந்தன.

இப்போது அவன் வாழ்வது இந்தக் கவிதைகளில் மட்டும்தான் அம்மா!” என்று அழுகை பொங்கச் சொன்னார் அவர்.

ஐயா! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் என் மனம் இங்கு வந்து இறங்கிய வேளையிலிருந்து எதற்காகவோ காரணமின்றிப் பதறுகிறது. வலக்கண் துடிக்கிறது. துறைமுகத்தில் நான் வந்து இறங்கிய போது அந்தப் பெருநிதிச் செல்வரும், அவருடைய அரைக் குருட்டு அமைச்சரும் என்னைத் தற்செயலாகச் சந்தித்து விட்டார்கள். அவர்கள் என் அருகில் வந்து இந்தக் குழந்தையையும் உற்றுப் பார்த்துவிட்டு ஏளனமாகச் சிரித்தார்கள். எனக்குப் பயமாக இருந்தது. துறைமுகத்திலிருந்து மீண்டும் அவர்கள் பார்வையிலே படாமல் தப்பி உங்களுடைய தவச்சாலைக்கு வழி கேட்டுக் கொண்டு இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். என் கணவர் மணிநாகபுரத்திலிருந்து புறப்படும்போது உங்கள் தவச் சாலையில் வந்து தங்கப் போவதாகத்தான் என்னிடம் கூறினார். உங்களையன்றி நான் வேறு யாரிடம் போய் அவரைப் பற்றிக் கேட்பேன்!”

 

யாரிடம் கேட்டும் பயனில்லை, பெண்ணே! உன் மனத்தைத் திடமாக்கிக்கொள். பின்பு சொல்வதைக் கேள். உன்னுடைய காதல் உனக்குக் கொடுத்த செளபாக்கியம் இந்தக் குழந்தையோடு முடிந்துவிட்டது. இந்த உலகத்தில் நல்லவை நீடிப்பதில்லை என்று தொடங்கிச் சொல்லி விட வேண்டும் என்று மனத்திற்குள் தவித்துக் கொண்டிருந்த உண்மையை மெல்ல மெல்ல அவளிடம் சொல்லி முடித்தார். அதைக் கேட்டபோது இடிவிழுந்த மரம் போலச் சில நாழிகை முகம் பட்டுப்போய் ஆடாமல் அசையாமல் சிலையாக வீற்றிருந்தான் மருதி. அப்போது அவள் சிறுவன் பசித்து அழுதான். எந்த நிலையிலும் கலங்காத கர்மயோகியைப் போல் குழந்தையை இடையில் எடுத்துக்கொண்டு அவள் பாலூட்டினாள். நெடுநேரம் குழந்தை அவள் இடுப்பிலேயே இருந்தது. முனிவர் எரியோம்புவதற்காக வேள்விச் சாலைக்குள்ளே சென்றிருந்தார்.

வேள்வி வழிபாடுகளை முடித்துக் கொண்டு இரண்டு நாழிகைப்போது கழித்து அவர் திரும்பிவந்து பார்த்தபோது மருதியின் குழந்தை தரையில் தூங்கிக் கொண்டிருந்தது. மருதியைக் காணவில்லை. குழந்தையின் அருகே ஓர் ஏடு கிடந்தது. பரபரப்போடு சென்று முனிவர் அதை எடுத்துப் பார்த்தார்.

நான் எந்தக் காரியத்துக்காகப் போகிறேனோ அது என்னால் நிறைவேறவில்லையானால் என் மகனை வளர்த்து ஆளாக்கி அவனால் அதை நிறைவேற்றுங்கள். உங்கள் தவச்சாலையில் வேள்விக் காரியங்களுக்காக சந்தனமும் சமித்தும் வெட்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் கோடாரியை நான் என்னோடு எடுத்துச் செல்வதற்காக என்னைப் பொறுத்தருள்க. இந்த அவசரத்தில் வேறு ஆயுதங்கள் எவையும் எனக்குக் கிடைக்கவில்லை என்று எழுதியிருந்தாள் மருதி.

ஐயோ! இந்தப் பெண்ணும் அந்தப் பாவியிடம் தேடிப் போய் அழிந்துவிடப் போகிறாளே என்று தவித்தார் முனிவர். அப்போது குழந்தை அழுதது. ஓடிப் போய் அந்தப் பெண்ணைத் திரும்பி அழைத்துவர எண்ணினார். குழந்தையை அந்தக் காட்டில் யாரிடம் விட்டுப் போவதெனத் தயங்க நேர்ந்தது. ‘தெய்வ சித்தப்படி நடக்கட்டும் என்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தவச்சாலையிலே குழந்தைக்குப் பாதுகாப்பாக அவர் இருந்துவிட்டார்.

மறுநாள் காலை சக்கரவாளத்துக் காவலர் தலைவரான வீரசோழிய வளநாடுடையார் மூலம் அந்தச் செய்தி அவருக்குத் தெரிந்தது.

யாரோ முரட்டு நாகநங்கை ஒருத்தி பட்டினப் பாக்கத்து எட்டிகுமரனைக் கோடாரியால் காலில் ஓங்கி, அடித்துவிட்டு தானும் அங்கேயே வீழ்ந்து மாண்டு போனாளாம் என்று வளநாடுடையார் வந்து தெரிவித்த போது அருட்செல்வர் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டார். அந்தப் பெண்ணின் மரணத்துக்காக அவர் மனம் மட்டுமே அழுதது. அதற்குப் பின் அந்த ஆண்டு இந்திரவிழாவின் கடைசி நாளன்று பூம்புகார்த் துறையில் பெருநிதிச் செல்வரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த வேளையில் அவர் நேரே நடக்க முடியாமல் ஒரு காலைச் சாய்த்துச் சாய்த்து நடப்பதையும் அருட்செல்வர் தாமே கவனித்தார். அப்போது அருட்செல்வரை அவரும் கவனித்துவிட்டார். மிக அருகில் நெருங்கி வந்து அருட் செல்வரின் காதருகே குனிந்து, “அமுதசாகரனின் குழந்தை உங்களிடம்தான் வளர்க்கிறான் போல் இருக்கிறது என்று குரோதம் தொனிக்கச் சொல்லிவிட்டுப் போனான் அந்தப் பாவி. அதுவே பயங்கரமான எச்சரிக்கையாகத் தோன்றியது முனிவருக்கு. மருதியின் மகன் தன்னிடம் பூம்புகாரில் வளர்வது கவலைக்குரியது என்று அஞ்சிய முனிவர் அன்றே மணிநாகபுரத்திற்குப் பயணம் புறப்பட்டிருந்த துறவி ஒருவரிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் கூறியனுப்பிக் காலாந்தகனை உடனே புறப்பட்டு வந்து தன் மருமகனும் மருதியின் குழந்தையுமாகிய உயிர்ச் செல்வத்தை மணிநாகபுரத்திற்கு அழைத்துப் போய்விடுமாறு வேண்டிக் கொண்டிருந்தார். இரண்டு திங்கள் காலத்துக்குப் பின் மனம் நிறைந்த துக்கத்துடனும் மருமகனுக்குக் காப்பணிவிப்பதற்காக நவரத்தினங்கள் பதித்துப் பொன்னில் செய்த ஐம்படைத் தாலியுடனும் காலாந்தகன் பூம்புகாருக்குப் புறப்பட்டு வந்தான். அவன் வந்த கப்பல் முன்னிரவில் பூம்புகார்த்துறையை அடைந்திருந்தது. அதே நேரத்தில் துறையில் வேறு காரியமாக வந்து நின்றிருந்த பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வரும், நகைவேழம்பரும் காலாந்தகன் அங்கு வந்திருப்பதைக் கண்டு கொண் டார்கள். காலாந்தகன், துறையில் இறங்கி சக்கரவாளக் கோட்டத்தில் அருட்செல்வ முனிவரின் தவச்சாலைக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தான். தனக்கு மிகவும் வேண்டியவளாகிய கபாலிகையான பைரவியை அனுப்பிக் காலாந்தகனுக்கு வழிகாட்டுவது போல அவனை அழைத்துச் சென்று வன்னிமன்றத்துக்குப் பின்புறம் கொண்டு போய் நிறுத்துமாறு ஏற்பாடு செய்த நகைவேழம்பர் பெருநிதிச் செல்வரோடு அங்கே பின் தொடர்ந்து போய்க் காலாந்தகனைக் கைப்பற்றினார். வஞ்சகமாகக் காலாந்தகன் அன்றிரவில் அவர்களால் கொல்லப்பட்டான். அவனிடமிருந்த செல்வங்களும், நவரத்தின ஐம்படைத் தாலியும் கொள்ளையடிக்கப்பட்டன.

நான்கு நாட்களுக்குப் பின்னர். இதை மறைந்து பார்த்துக் கொண்டிருந்த வேறொரு கபாலிகன் மூலம் இந்தப் பயங்கர இரகசியம் அருட்செல்வ முனிவருக்குத் தெரிந்தபோது, ‘இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்பும் இந்தக் குழந்தையை எப்படி வளர்த்து, ஆளாக்கப் போகிறேனோ?’ என்று அவர் பெருங்கலக்கம் கொண்டார். காலாந்தகனின் மனைவிக்கும் மகன் குலபதிக்கும் முனிவரால் அவனது சாவு தெரிவிக்கப்பட்டபின் அதே வேதனையில் நோய்ப் படுக்கையாகக் கிடந்து மாண்டாள் குலபதியின் தாய். தன்னிடம் வளர்ந்து வந்த மருதியின் பிள்ளைக்கு இளங்குமரன் என்று பெயர் சூட்டினார் முனிவர். நாளுக்கு நாள் அந்தப் பிள்ளையைப் பெருநிதிச் செல்வரும் அவருடைய துன்மந்திரியும் கழுகுகளாக வட்டமிடுவதைக் கண்டு அஞ்சிய முனிவர் வயது வந்ததும் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று கருதி நீலநாகமறவருடைய படைக்கலச் சாலையில் அந்தப் பிள்ளையைச் சேர்த்துவிட்டார். பின்பு நாளடைவில் மணிநாகபுரத்து வாணிகக் கப்பல்களை எல்லாம் பெருநிதிச்செல்வரின் ஏவலர்கள் நடுக்கடலில் கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர் துணையோடு சூறையாடுவதாகப் பலமுறை கேள்விப்பட்டார் அருட்செல்வ முனிவர். இரண்டு பெண்களுக்குத் தந்தையாகி வாழ்ந்து மூத்த பின்பும் இந்த வெறுப்பை மறக்க முடியாத மனம் எட்டிகுமரனுக்கு இருப்பதைக் கண்டு அஞ்சினார் அவர்.

மருதியின் மகனான இளங்குமரன் வளர்ந்து பெரியவனான பின் இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்கச் செய்யலாம் என்று தோன்றியது அவருக்கு. அந்தக் குடும்பத்தின் புதிய தலைமுறைக்குத் தன்னைப் பாதுகாவலராகப் பாவித்துக் கொண்டு குலபதி, இளங்குமரன் இரண்டு பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவும் இடை விடாமல் மனத்தினாலும் செயல்களாலும் தவம் செய்துகொண்டு வந்தார் அருட்செல்வர்.

அவ்வப்போது குலபதிக்குத் தக்கவர்கள் மூலம் செய்தி சொல்லியனுப்பிக் கொண்டிருந்தார் முனிவர். உதிர் சருகுகள்போல் ஆண்டுகள் பல கழிந்து கொண்டிருந்தன. அந்த முனிவர் மூத்துத் தளர்ந்தாலும் அவருடைய இலட்சியமும் உட்கருத்தும் தளரவில்லை.

படித்தவற்றிலிருந்து இவற்றை எல்லாம் உணர்ந்து கொண்டு இளங்குமரன் தலை நிமிர்ந்தபோது பொழுது புலர்ந்து மாடங்களின் வழியே ஒளிக்கதிர்கள் பாய்ந்து கொண்டிருந்தன. வெளியே தாழிட்டிருந்த கதவுகளும் அதே வேளையில் திறந்தன. திறந்த கதவுகளுக்கு அப்பால் அவன் ஒரு புதிய காட்சியைக் கண்டான்.

-------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.8. கருத்தில் மூண்ட கனல்

 

கிளர்ந்த உணர்வுகளும் விம்மிப் பூரிக்கும் தோள்களுமாக இளங்குமரன் எதிரே பார்த்தான். மணிநாகபுரத்து மாளிகையின் ஓவியமாடத்து அறையி லிருந்து நேர் கீழே தணிவாகத் தென்பட்ட முற்றத்தில் எமகிங்கரர்களைப் போன்ற தோற்றமுடைய முரட்டு நாகமல்லர்கள் ஐம்பது அறுபது பேர் - ஆயுத பாணிகளாக அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். போர்க் கோலம் புனைந்து கொண்டாற் போன்ற தோற்றத்தோடு குலபதியும் அங்கே அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு உட்பக்கம் திரும்பி ஓவிய மாடத்தை நோக்கினான். அங்கே மணிமார்பன் சில ஓவியங்களைப் பிரதி செய்து கொண்டு நிற்பது தெரிந்தது.

இந்தக் காரியங்கள் எல்லாம் இவ்வளவு விரைவாக நிகழ்வதன் நோக்கமென்ன?’ என்று இளங்குமரன் தனக்குள் சிந்திக்கத் தொடங்கியபோதில்,

 

எதிரே நிகழ்கிறவற்றையெல்லாம் பார்த்தாய் அல்லவா?” என்று கேட்டுக்கொண்டே அருட்செல்வர் வளநாடுடையாரோடு அங்கு வந்து சேர்ந்தார். அவன் இப்போது புதிதாகத் தெரிந்து கொண்டவற்றால் அந்த முனிவருக்கு அதிக நன்றிக்கடன் பட்டிருந்தான்.

எப்போதோ நிகழ்ந்து முடிந்தவற்றையெல்லாம் இந்த ஏடுகளில் பார்த்தேன். இப்போது நிகழ்கிறவற்றை என் எதிரே பார்க்கிறேன். இழந்தவற்றுக்காக வேதனைப் படுகிறேன். பெற வேண்டியவற்றுக்காகக் கிளர்ச்சி அடை கிறேன். இவ்வளவையும் தெரிந்து கொண்ட பின் உங்கள் மேல் என் நன்றி பெருகுகிறது. என்னை வளர்த்து ஆளாக்கிய காலத்தில் என்னை வளர்ப்பதைத் தவிர வேறு தவங்களைச் செய்ய மறந்திருக்கிறீர்கள் நீங்கள். இது பெரிய காரியம். இதற்குக் கைம்மாறு செய்ய எனக்குச் சக்தியில்லை என்று முனிவரை நோக்கி அவன் நாத் தழுதழுக்கக் கூறினான். முனிவர் அவன் அருகில் வந்து அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பேசலானார்:

கைம்மாறு எதிர்பார்த்துக் கொண்டு நானும் இவற்றை யெல்லாம் செய்யவில்லையப்பா! இன்று உன் மேல் நான் கொண்டிருக்கிற இதே அபிமானத்தை உன் தந்தை அமுதசாகரன் வாழ்ந்த காலத்தில் அவன் மேலும் கொண் டிருந்தேன். உன் தந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட கொடுந் துன்பங்கள் என்னை பற்றும் பாசமும் உள்ள வெறும் மனிதனாக்கிவிட்டன. அந்தக் கணத்திலிருந்து நான் உனக்காக மட்டும் தவம் செய்யத் தொடங்கி விட்டேன். அந்த தவம் இன்று நிறைவேறுகிறது. இனிமேல்தான் என்னுடைய மெய்யான தவங்களை நான் செய்யத் தொடங்க வேண்டும்.”

உங்கள் தவம் நிறைவேறுகிற விநாடிகளில் என் தவம் அழிகிறது. நான் படித்துப் படித்துச் சேர்த்திருந்த பொறுமை இப்போது எவ்வளவோ முயன்றும் என்னிடம் நிற்காமல் நழுவுகிறது.”

அப்படி நழுவ வேண்டுமென்றுதான் இவ்வளவு காலம் நானும் காத்திருந்தேன். இதோ கீழே உன்னுடைய தாய்மாமன் மகனாகிய குலபதி பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையையே இரவோடிரவாகச் சூரையாடிக் கொள்ளை யிட வேண்டுமென்று படை திரட்டிக் கொண்டு நிற்கிறான். நீ யாரைச் சந்தித்துப் பழிவாங்க வேண்டுமோ அவனிடம் காண்பிப்பதற்காக உன் நண்பனான ஓவியன் மணிமார்பனைக் கொண்டு இந்த ஓவியங்களைப் பிரதி செய்யச் சொல்லியிருக்கிறேன். நீ போகும்போது இவற்றையும் உன்னோடு கொண்டு போ. குலபதியும் அந்த நாகமல்லர்களும் உன்னோடு பூம்புகாருக்கு வருகிறார்கள். வளநாடுடையாரும் ஓவியனும் வேறு வருகிறார்கள். பூம்புகாரில் நீலநாகரும் இருக்கிறார்.”

ஏன் நீங்கள் வரவில்லையா?”

 

நான் இனிமேல் பூம்புகாருக்கு வருகிற எண்ணமில்லை. உனக்கு இவற்றையெல்லாம் உணர்த்தியபின் இன்று என் மனச்சுமை குறைந்துவிட்டது. இந்த விநாடியிலிருந்து நான் மெய்யாகவே எல்லாப் பாசங்களையும் உதறிய பூரணத் துறவியாகி விட்டேன். இங்கேயே சமந்த கூடத்துக் காட்டில் எங்காவது போய்க் கடுமையான தவ விரதங்களில் இனி ஈடுபட எண்ணியிருக்கிறேன். இன்று இப்போது நீ எனக்குச் செய்ய முடிந்த கைம்மாறு, என் வழியில் நான் போவதற்கு விடுவதுதான். மறுபடி உன்னைக் காண வேண்டுமென்று எனக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது நானே உன்னைத் தேடிக் கொண்டு வருவேன். கடமை நிறைவேறிய பின்னும் பற்றுப் பாசங்களை உதற முடியாமல் நான் இருந்து விடுவேனாயின் என்னுடைய துறவு நெறி பொய்யாகிவிடும்.”

சுவாமீ! நீங்கள் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டுப் போகிற போக்கில் நான் எதையும் உதற முடியாமல் என்னைக் கோபதாப உணர்ச்சிகளில் பிணைத்து விட்டுப் போகிறீர்களே? இது நியாயமா?”

நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டுதான் தீர வேண்டும். நீ இப்போது கட்டுப் படுவதும் அப்படித்தான். இரும்புக் கவசங்களாலும், ஆயுதங்களாலும் கட்டுண்டு உடம்போடும் விடுபட்ட மனத்தோடும் நீலநாகர் வாழவில்லையா? அப்படி நீயும் வாழ்வாய் எனக்கு விடை கொடு.”

அருட்செல்வருடைய பிரிவு வேதனையைக் கொடுத்தாலும் இளங்குமரன் அவருடைய விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க விரும்பாமல் விடை கொடுத்தான். எட்டு அங்கமும் தோய வீழ்ந்து வணங்கி அவருடைய பாதங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு அவர் சமந்த கூடத்திற்கு புறப்பட்டுப் போனார். அனலும் வெப்பமும் மிகுந்த நேரத்தில் எங்கிருந்தாவது நல்ல குளிர் காற்றுச் சில்லெனப் புறப்பட்டு வருவதுபோல் வேதனையும் துன்பமும் படுகிறவர்களின் வாழ்க்கையில் உதவி புரிவதற் கென்றே இப்படிச் சில ஞானிகள் நடுவாக வந்து பொறுப்புடனே துணை செய்துவிட்டுப் போகிறார்கள். இப்படிப் பயன் கருதாமல் உதவி செய்ய வருகிறவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாயிருக்க வேண்டும் என்று அருட் செல்வரைப் பிரிந்தபோது இளங்குமரன் எண்ணினான். எல்லாம் புரிந்துகொண்டு எவற்றை உணர வேண்டுமோ அவற்றை உணர்ந்து கிளர்ச்சியுற்ற மனத்தோடு நின்ற இளங்குமரன் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சி மாறுதல்களை ஒவ்வொன்றாக நினைத்தான். படிப்படியாக நடந்து மலையேறி வந்தவன் உயரத்தில் போய் நின்று கொண்டு இனிமேல் போவதற்கு இதைவிட உயரமானது எதுவு மில்லையே என்று மலைப்போடு நடந்து வந்து வழியைத் திரும்பிப் பார்ப்பது போலிருந்தது அந்த நிலை.

முதன் முதலாகப் பட்டினப்பாக்கத்துப் பெரு மாளிகைத் தோட்டத்தில் அந்த பெருநிதிச் செல்வர் தன்னைச் சந்தித்ததையும் தன் கழுத்தின் வலதுபக்கத்துச் சரிவில் கருநாவற்பழம் போலிருந்த கருப்பு மச்சத்தை உற்றுப் பார்த்தபின், “அருட்செல்வ முனிவர் நலமா யிருக்கிறாரா?” என்று குறும்புத்தனமாகத் தன்னை நோக்கிக் கேட்டதையும், தான் அன்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறியபோது ஒற்றைக் கண்ணன் தன்னை இரகசியமாகப் பின் தொடர்ந்ததையும் இப்போது வரிசையாக நினைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டான் இளங்குமரன். இந்த எண்ணங்களையும் தன் குடியின் ஒரு தலைமுறை உயிர்களும் செல்வங்களும் அந்தப் பெருநிதிச் செல்வனால் அழிக்கப்பட்டிருப்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பார்த்தபோது அவனுடைய கருத்தில் கனல் மூண்டது. அந்த விநாடியில் அத்தகைய புதிய உணர்வுகளைத் தாங்கிக் கொண்டிருக்கும்போது தன் முகம் எப்படியிருக்கிறதென்று ஓவிய மாடத்தில் பதித்திருந்ததொரு கண்ணாடியில் பார்த்தான் இளங்குமரன். உணர்ச்சிகளின் சிறுமை எதுவும் படியாமல் பளிங்குபோல் இருந்த அவன் முகம் சற்றே கறுத்திருந்தது. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததனால் ஏற்பட்ட உணர்ச்சிகள் ஒருபுறமும், இவை தெரிந்ததனால் இழந்த உணர்ச்சிகளை எண்ணி வருந்தும் வருத்தம் ஒருபுறமுமாக இளங்குமரன் சிறிது போது மலைப்படைந்து நின்றான். தன் தாயும் தந்தையும் சந்திப்பதாக வரையப்பட்டிருந்த ஓவியத்தின் அருகே சென்று சில விநாடிகள் கண்ணிமையாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் கீழேயிருந்த ஏடுகளை எடுத்துப் பார்த்துத் தன் தந்தையின் சுவை நிறைந்த கவிதைகளைச் சிறிது நாழிகை உணர்ந்து மகிழ்ந்தான். கீழே போய்க் குலபதியை அழைத்துக் கொண்டு வந்து நின்றார் வளநாடுடையார்.

தம்பீ! குலபதியின் இரகசியப் படையிலிருக்கும் மல்லர்கள் ஒவ்வொருவரும் பத்து எதிரிகளை அடித்துக் கொல்லுகிற ஆற்றலுடையவர்கள். இவர்களோடு நாம் எல்லோரும் இன்று மாலையே பூம்புகாருக்கு கப்பலேற வேண்டும் என்று வளநாடுடையார் கூறியபோது சில கணங்கள் இளங்குமரன் மெளனமாயிருந்தான். பின்பு ஒவ்வொரு சொல்லாகச் சிந்தித்துப் பேசுகிறவனைப் போலப் பேசினான்:

ஐயா! யாருடைய வெறுப்பினால் என்னுடைய குடி இப்படிச் சீரழிந்ததோ அவருடைய செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு அவற்றை நமது கப்பல் நிறைய நிரப்பியபின் பூம்புகாரிலிருந்து இரவோடிரவாகத் திரும்பிவிட வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் போலிருக்கிறது. என் விருப்பம் அது அன்று. இவ்வளவு கெடுதலும் செய்வதற்குக் காரணமாக அந்த மனத்தில் இருந்த தீய எண்ணங்களை ஒவ்வொன்தாக வெளியேற்றிப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். பெண் சம்பந்தமாக ஏமாறியவர்களும், பொன் சம்பந்தமாக ஏமாறியவர்களும் அந்த ஏமாற்றத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் எவ்வளவு குரோதமுற முடியும் என்பதற்கு இந்த மனிதர் உதாரணமாயிருக்கிறார். என் தந்தையையும் தாயையும் இவர் அழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்பது தான் பேதைமை. உலகத்தில் பாடும் குலத்தின் கடைசிக் கவியின் கடைசிக் குரல் ஒலிக்கிற வரை அதில் என் தந்தையின் கருத்தும் தொனித்துக் கொண்டிருக்கும். உலகத்துப் பெண் குலத்தின் ஒவ்வொரு தலைமுறைப் பேரழகிலும் என் தாயின் அழகும் எங்கோ ஓரிடத்தில் எழில் பரப்பிக் கொண்டிருக்கும். படைப்பின் செல்வங்களிலிருந்து எதையும், எந்த மனிதர்களும் திருடி ஒளித்துவிடவோ, அழித்து நிர்மூலம் செய்துவிடவோ முடியாது. என் தாய்மாமன் காலாந்தக தேவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டதாகத் திருப்திப்படலாம். இதோ அவரைப் போலவே அரும்பு மீசையும் அழகிய தோற்றமுமாக விளங்கும் குலபதியின் முகத்தில் தெரிகிற கவர்ச்சி அவரைத்தானே நினைவூட்டுகிறது, என் தாய் மாமனுடைய ஓவியத்தை இந்த மாடத்தில் பார்த்தபோது ஒரு தொடர்பும் தெரியாமலே குலபதியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன் நான். மனிதன் பிறரையும் பிறருடைய எண்ணங்களையும் கொல்ல முடியும். அந்த எண்ணங்களும் அதே எண்ணங்களைக் கொண்ட புதிய பரம்பரையும் தோன்றுவதைத் தடுக்க முடியாது. இவற்றையெல்லாம் அறியத் தவித்துத் தவித்து அந்த அறியும் ஆசையே என்னுடைய கருத்தில் கனன்று கொண்டிருந்த காலத்தில் இவை எனக்குத் தெரியவில்லை. குருகுல வாசம் செய்து ஞானப்பசி தீர்ந்து, கல்வியினாலும் தத்துவ மயமான எண்ணங்களாலும் அந்தக் கனல் அவிழ்ந்து போய் மனத்தில் அது இருந்த இடம் குளிர்ந்திருக்கும் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இத்தனை காலமான பின்பும் அது அழியாமல் நீறுபூத்த நெருப்பாக அடிமனத்தில் என்னுள் எங்கோ எரிந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு காலம் எப்படி எவருக்குக் கடமைப் பட்டிருந்தாலும் தாம் ஒரு துறவி என்ற நினைப்பை இழந்துவிடாமல் ஒரே ஒரு கணத்தில் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டு அருட் செல்வர் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார் பார்த்தீர்களா? அப்படி என்னால் போக முடியவில்லை என்பதை உணரும் போதே நான் ஏதோ ஒருவிதத்தில் பக்குவப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பக்குவத்தை அடைவதற்கு இந்தச் சோதனையை நான் ஏற்றுக்கொள்வது அவசியம்தான். ஆனால், இந்தச் சோதனையில் நான் தனியாகப் புகுந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறேனே ஒழியப் பிறருடைய துணைகளை விரும்பவில்லை. குலபதியின் இரகசியப் படையிலிருக்கிற மல்லர்களும், குலபதியும் நம்மோடு, பூம்புகாருக்கு வரவே கூடாது.

நான் ஒரு கவியின் மகன். கவிகள் வார்த்தைகளாலேயே பிறருடைய உணர்ச்சிகளையும் மனத்தையும் வென்றுவிடும் சத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய சொற்களே அவர்களுக்குப் பெரிய ஆயுதங்கள். நான் என்னுடைய குலப்பகைவனைத் தனியே நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன். அப்படிச் சந்திக்கப் புறப்படுவதற்காக இன்று மாலை வரை தாமதம் செய்ய வேண்டியதுகூட அநாவசியம். நான் இந்த விநாடியே புறப்படுகிறேன் என்று கூறிக்கொண்டே தன் தாயின் ஓவியத்தருகே இருந்த ஏடுகளையும், தான் முதல் நாளிரவு படித்திருந்த ஏடுகளையும் எடுத்துக்கொண்டு சில சித்திரங்களைப் பிரதி செய்துகொண்டிருந்த மணிமார்பன் அருகே சென்றான் இளங்குமரன். அவன் அதுவரை கூறியவற்றைக் கேட்டு மனக்குழப்பம் அடைந்திருந்த குலபதி, “ஐயா! இதென்ன என்னுடைய அத்தையின் அருமைப் புதல்வர் திடீரென்று இப்படி எல்லாத் திட்டங்களையும் மாற்றுகிறாரே! என்னையும் நான் இத்தனை காலமாக இந்தக் காரியத்திற்காகவே சோறிட்டு வளர்த்த இந்த மல்லர்களையும் பூம்புகாருக்கு வரக் கூடாதென்கிறாரே இவர்? என் அத்தையும் அவள் நாயகரான கவிஞர் அமுதசாகரும் என் தந்தையாரும் அந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைச் செல்வரிடம் போய்த் தனிமையில் உயிரைப் பறிகொடுத்த வேதனைகள் போதாதென்று இவரும் போய் அப்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்று கலக்கத்தோடு வளநாடுடையாரிடம் கூறினான்.

அப்படியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது குலபதி! இளங்குமரனுக்குச் சிறுவயதிலிருந்தே இப்படிப் பிடிவாத குணம் உண்டு. நடுவில் ஒடுங்கியிருந்த அந்தக் குணம் இப்போது மறுபடி மெல்லத் தோன்றுகிறதோ என்னவோ? எப்படி இருந்தாலும் நீ இப்போது அவன் சொற்படியே நடந்துகொள்வதுதான் நல்லது. நானும் மணிமார்பனும் எப்படியும் அவனோடு பூம்புகாருக்குச் செல்வோம். அங்கே நீலநாகரைச் சந்தித்து அவரிடம் கலந்தாலோசித்த பின் இளங்குமரனுக்குப் பாதுகாப்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் அவனுக்கும் தெரியாமலே செய்துவிடுவோம். தவிர அறிவாளிகளின் பிடிவாதம் நல்ல முடிவைத்தான் தருமென்று என் அனுபவத்தில் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நீயும், உன்னைச் சேர்ந்த மல்லர்களும் எங்களோடு வர வேண்டாம். இளங்குமர னுடைய போக்குப்படியே போய்க் காரியத்தைச் சாதிக்கலாம் என்று குலபதிக்கு மறுமொழி கூறினார் வளநாடுடையார். குலபதியும் அரை மனத்தோடு அதற்கு இணங்கினான்.

இளங்குமரன் பயணத்திற்கு முன்பு நீராடி விட்டுத் தூய்மையாக வந்து தன் பெற்றோர்களின் ஓவியத்தை வணங்கினான். தாய் மாமனாகிய காலாந்தக தேவனுடைய ஓவியத்தையும் வணங்கினான். பின்பு மணிமார்பனை நோக்கி, “நீ பிரதி செய்த ஓவியங்களை எடுத்துக்கொண்டு புறப்படு என்றான். அப்போது குலபதி இளங்குமரன் அருகே வந்து, “ஐயா! பட்டினியாக வெறும் வயிற்றோடு போகாதீர்கள். இது உங்கள் மாளிகை. இங்கே நிரம்பிக் கிடக்கும் செல்வங்களையெல்லாம் ஆளவேண்டியவர் நீங்கள். என்னையும் இந்த மாளிகையின் செல்வங்களையும் தான் கைவிட்டு விட்டுப் போகிறீர்கள். நானும் என் வீரர்களும் உங்களோடு பூம்புகாருக்கு வரக்கூடாதென்றும் பிடிவாதமாக மறுக்கின்றீர்கள். மறுபடியும் நான் உங்களை எப்போது சந்திக்கப்போகிறேனோ? இன்று புறப்படுமுன் என்னோடு அமர்ந்து பசியாறிவிட்டுச் செல்லுங்கள் என்று நெகிழ்ந்த குரலில் வேண்டிக் கொண்டான்.

சில கணங்கள் அந்த நெகிழ்ச்சிக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் சொல்லாத் தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். அந்த வேண்டுகோளைச் சொல்லியவனுடைய முகத்தையும், அதைக் கேட்டுத் தயங்கி நிற்பவனுடைய முகத்தையும் பார்த்து அந்த விநாடியில் அங்கே சூழ்ந்து நின்ற எல்லாருடைய மனங்களும் தவித்துக் குமுறி மெளனமாகவே உள்ளுக்குள் அழுதன. தயங்கி நின்ற இளங்குமரன் மெல்ல நடந்து போய்க் கண்கலங்கி எதிரே நின்று கொண்டிருந்த குலபதியைத் தோளோடு தோள் சேரத் தழுவிக்கொண்டு அவனை நோக்கிப் புன்சிரிப்புடனே சொல்லலானான்:

குலபதி என்னுடைய பசி மிகவும் பெரியது. அது மிக நீண்ட காலத்துப் பசி. பல பிறவிகளாக நிறையாமலே வருகிற பசி. அதன் ஒரு பகுதி திருநாங்கூரில் நான் குருகுல வாசம் செய்தபோது நிறைந்தது. இன்னொரு பகுதி பூம்புகாரில் சமயவாதிகள் அணிவகுத்து நின்ற ஞான வீதியில் அவர்களை நான் சந்தித்து வென்றபோது நிறைந்தது. இன்னொரு பகுதி இந்தத் தீவுக்கு வந்து என் குடிப்பிறப்பைப் பற்றி நான் தெரிந்து கொண்ட பின்பு நிறைந்தது. இனி மீதமிருக்கிற பசியும் நான் பூம்புகாருக்குப் போனவுடன் நிறைந்துவிடும். இந்த முறை என் பிறவி முழுமையடைந்து விட வேண்டுமென்று நான் இடை விடாமல் மனத்திற்குள்ளேயே விடுபட்டுப் பறப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடம்பில் அதிகமான சக்தியும் இரக்கமும் ஓடி நான் யாரைச் சந்தித்து நியாயம் கேட்க வேண்டுமோ அவரிடம் என் அந்தரங்கத்துக்கு மாறாக நடந்து கொண்டு விட நேருமோ என்ற பயத்தினால் அந்தச் சோதனை முடிகிறவரை விரதமிருக்க எண்ணு கிறேன். ஆகவே என்னை உண்பதற்கு அழைக்காதே. எனக்கு விடை கொடு.”

இந்த மாளிகையும் இதன் செல்வங்களையும் ஆள வேண்டியவன் நான் என்று நீ கூறுகிறாய். என்னுடைய சிறு பருவத்திலிருந்தே இந்த வகையான செல்வங்கள் மதிப்புள்ளவையாக எனக்குத் தோன்றவில்லை. நான் தவச்சாலையில் ஒரு முனிவருடைய வளர்ப்புப் பிள்ளை யாக வளர்ந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்தத் தவச்சாலையும் பூம்புகாரின் மயானத்தருகே அமைந் திருந்தது. மனிதனுடைய ஆசைகளும், நினைவுகளும், கனவுகளும் நம்பிக்கைகளும் அழிந்து மண்ணோடு கலந்து விடுகிற பூமியில் நடந்து நடந்து அந்த மண்ணின் குணமே எனக்குப் படிந்து விட்டதோ என்னவோ? எனக்காகப் பிறரை அநுதாபப்பட விடுவது கூட என் தன்மானத்துக்கு இழுக்கு என்று கருதி மானமே உருவாக நான் நிமிர்ந்து நின்ற நாட்களும் என் வாழ்வில் உண்டு. எல்லோருக்காகவும் எல்லா வேளைகளிலும் அநுதாபப்படும் மனம் தான் ஞானபூமி என்று நானே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தனது எண்ணத்தில் தவம்செய்த நாட்களும் என் வாழ்வில் உண்டு. என்னுடைய வாழ்க்கையே ஒவ்வொரு பருவத்திலும் எனக்குப் பாடமாக வாய்த்திருக்கிறது. ஆனால் எல்லாப் பருவத்திலும் சேர்ந்து நான் மொத்தமாக அலட்சியம் செய்த ஒரு பொருள் செல்வமும் சுகபோகங்களும் தான். துக்கமயமான அநுபவங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி எந்த வேளையிலும் நெருப்பில் இளகும் பொன்னாக ஒளிர வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தன் மனத்தைத் திறந்து பேசினான் இளங்குமரன். மேலே ஒன்றும் கேட்கத் தோன்றாமல் குலபதியின் நாக்கு அடங்கிவிட்டது. வளநாடுடையாரும், மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் உடன்வர இளங்குமரன் அன்று நண்பகலில் பூம்புகாருக்குக் கப்பலேறினான். சங்குவேலித் துறைக்கு வழியனுப்ப வந்திருந்த குலபதி இளங்குமரனுக்கு விடைகொடுக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டான்.

 

ஐயா! என் அத்தையின் புதல்வராகிய நீங்கள் உங்கள் வாழ்வின் ஒரு பருவத்தில் முரட்டு வீரராக வாழ்ந்திருக்கிறீர்கள்! மற்றொரு பருவத்தில் கல்விக் கடலாகப் பெருகியிருக்கிறீர்கள். பின்பு ஞானியாக நிறைந்திருக்கிறீர்கள்! இறுதியில் நெருப்பிலே இளகும் பொன்போலச் சான்றாண்மை வீரராக உயர்ந்திருக்கிறீர்கள். இவற்றை யெல்லாம் என் குடும்பப் பெருமையாக நான் எண்ணிப் பூரிக்கிறேன். ஆனால் மறுபடி எப்போது உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்து சேரப் போகிறீர்கள்? வேற்று மனிதர் வந்து தங்குவது போல இரண்டு நாள் வந்து இருந்துவிட்டுப் பிரிவையும் ஆற்றாமையையும் எனக்கு அளித்துவிட்டுப் போகிறீர்களே? இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?” என்று குலபதி குமுறியபோது, “விரைவில் வருகிறேன் கவலைப்படாதே!” என்று கூறி அருள்நகை பூத்தான் இளங்குமரன்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்துப் பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய போதுதான் இளங்குமரன் குலபதியின் வேண்டுகோளையும் சொற்களையும் இரண்டாம் முறையாக நினைவு கூர்ந்தான்.

--------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.9. நியாயத்தின் குரல்

 

பூம்புகார்த் துறையில் இளங்குமரன் முதலியவர்கள் வந்து இறங்கியபோது இருள் பிரியாத வைகறை நேரமாயிருந்தது. துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் எதிரே பரந்து கிடந்த வெள்ளிடை மன்றம் என்னும் நிலப் பரப்பையும் மெல்லிருள் கவிந்து போர்த்தியிருந்தது. அலைகளின் ஓசையும் துறையை அடுத்த கரை நிலப் பரப்பில் குவிந்திருந்த பல்வேறு பண்டங்களைக் காவல் செய்வோர் இடையிட்டு இடையிட்டுக் கூவும் எச்சரிக்கைக் குரல்களுமாகத் துறைமுகம் வேறு ஒலியற்றிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னைச் சிறு குழந்தையாகக் கைகளில் ஏந்திக்கொண்டு தன் தாய் ஆதரவும் துணையுமில்லாத பேதைப் பெண்ணாய் இதே துறைமுகத்தில் வந்து நின்ற போதாத வேளையை இப்போது கற்பனை செய்து பார்க்க முயன்றது இளங்குமரனின் மனம். கரையிலிருந்த பார்வை மாடத்தில் ஏறி விடிகாலையின் அமைதியில், மெல்ல மெல்ல உறங்கிச் சோர்ந்தபோன மணப் பெண்ணைப் போலத் தெரியும் நகரத்தைச் சிறிது நாழிகை பார்த்துக் கொண்டு நின்றான் இளங்குமரன். கப்பல் கரப்புத் தீவிலிருந்து சுரமஞ்சரியோடு திரும்பிய காலை வேளை ஒன்றில் நீண்ட நாட்களுக்கு முன்பு இன்று போல இதே பார்வை மாடத்தில் ஏறி நின்று நகரத்தைப் பார்த்த நிகழ்ச்சி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அன்று பார்த்த நகரத்திற்கும் இன்று பார்ப்பதற்கும்தான் எவ்வளவு வேறுபாடு?

பார்வை மாடத்திலிருந்து கீழே இறங்கி உடனிருந்த மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு நீலநாகருடைய ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குச் சென்றான் இளங்குமரன். போகும்போது வளநாடுடையார் அவனிடம் கூறலானார்:

தம்பீ! நீ பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குச் சென்று அங்கே உன்னுடைய குலப் பகைவரைச் சந்திக்கும் போது அந்த ஓவியனையும் உன்னோடு அழைத்துப் போவது அவசியம். இந்த ஓவியன் அந்த மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்த காரணத்தால் அதன் ஒவ்வொரு பகுதிகளைப் பற்றியும் இவனுக்கு ஓரளவு தெரியும்.”

இதைக் கேட்டு இளங்குமரன் பதில் சொல்லாமல் சிரித்தான். பின்பு மெளனமாக மேலே நடந்தான். அவர்கள் எல்லாரும் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையை அடைந்தபோது நீலநாகர் நீராடி முடித்துத் திருநீரு துலங்கும் நெற்றியோடு கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த அருங்காலை நேரத்தில் அவர்கள் எல்லாரும் வரக்கண்டு நீலநாகர் பெருமகிழ்ச்சி கொண்டார்.

இளங்குமரா! இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இந்த முறை உன் பிரிவு என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது. ஒவ்வொரு நாளும் நீ எப்போது திரும்பி வரப்போகிறாய் என்று நினைத்து நினைத்துத் தவித்துப் போய்விட்டேன் நான். நல்லவேளையாக நான் எதிர் பார்த்த காலத்துக்கு முன்பே நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்டாய் என்று கூறி இளங்குமரனை அன்போடு வரவேற்றார். அவர். இளங்குமரன் அவரை வணங்கிவிட்டுச் சிறிது நேரம் வாயிலில் நின்றபடியே அவரிடம் பேசிக்கொண்டிருந்த பின்பு உள்ளே சென்றான். அவனைப் பின் தொடர்ந்தாற் போல் ஓவியனும் அவன் மனைவியும் கூட உள்ளே சென்றுவிட்டார்கள். வளநாடுடையார் மட்டும் நீலநாக மறவரிடம் ஏதோ தனியாகப் பேச விரும்புகிறவர் போல் நின்றார். அவர் நிற்கும் குறிப்பு நீலநாகருக்குப் புரிந்துவிட்டது. உடனேஎன்ன வளநாடுடையாரே! இந்தப் பிள்ளை ஏன் இப்படிக் கலங்கிக் கறுத்துப் போயிருக்கிறான்?” என்று நீலநாகர் இளங்குமரனைப் பற்றி அவரைக் கேட்டார்.

நாமிருவரும் பேசிக்கொண்டே போகலாம். நீங்கள் கோவிலுக்குப் புறப்படுமுன் ஆலமுற்றத்து மரத்தடியில் உங்களோடு சிறிது நேரம் நான் தனியாகப் பேச வேண்டும் என்றார் வளநாடுடையார். நீலநாகரும் அதற்கு இணங்கிய பின் இருவரும் நடந்தனர்.

கடலருகேயுள்ள ஆலமுற்றத்துக் கரையில் மரகதத் தகடு வேய்ந்து பசும் பந்தலிட்டது போலப் பரந்திருந்த ஆலமரத்தின் கீழே மணற்பரப்பில் வளநாடுடையார் நீலநாகரோடு அமர்ந்துகொண்டார்.

 

நீலநாகரே! இதுவரை உங்களிடம் மாற்றிச் சொல்லியிருந்த பொய் ஒன்றை இப்போது உண்மையாகவே வெளியிட நேருகிறது. அதறக்காக முதலில் நீங்கள் என்னைப் பொருத்தருள வேண்டும். அருட்செல்வ முனிவர் இறந்து போய்விட்டதாக நான் நீண்ட நாட்களுக்கு முன்பு உங்களிடம் வந்து கூறியது பொய். அவர் மணிபல்லவத் தீவில் உயிரோடு வாழ்ந்து வருகிறார். இளங்குமரன் இந்தப் பயணத்தின்போது அவரைச் சந்தித்தான். தன் பிறப்பைப் பற்றிய பல உண்மைகளை அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். முனிவர் எனக்கும் அவற்றைக் கூறினார்...” என்று தொடங்கிச் சொல்லிக் கொண்டே வந்தார். தாம் சொல்லியவற்றால் நீலநாகருடைய முகத்தில் என்ன மாறுதல் விளைந்திருக்கிறதென்று அறிய விரும்பி யவராகப் பேச்சை நிறுத்திக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். நீலநாகர் சிரித்துக்கொண்டே அவருக்கு மறுமொழி கூறினார்:

உடையாரே! இந்தச் செய்தியை நீங்கள் என்னிடம் மறைத்ததனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. அருட் செல்வருடைய தவச்சாலை தீப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால் அவரே என்னைச் சந்தித்துச் சில பொறுப்புக்களையும் இளங்குமரனைக் கவனித்துக் கொள்ளும் கடமையையும் என்னிடம் ஒப்படைத்தார். அன்று அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களிலிருந்தே இவர் எங்கோ நீண்ட தொலைவு விலகிச் செல்ல விரும்புகிறார் என்று நான் அவரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். ஆனால் சில நாட்கள் கழித்துத் தவச்சாலையில் பற்றிய நெருப்பிலே அவரும் மாண்டு போனார் என்று நீங்கள் வந்து கூறியபோது அந்தச் செய்தி எனக்குப் பேரிடியாக இருந்தது. அதை நம்பவும் முடியவில்லை, நம்பியும் ஆக வேண்டியிருந்தது. அதனால் என்ன? நாம் உயிரோடு இருப்பதாக நினைத்து நம்பிக் கொண்டிருந்த ஒருவர் இறந்து போய் விட்டால் தான் நமக்கு ஏமாற்றம், துக்கம் எல்லாம் உண்டாகின்றன. நாம் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரோடிருக்கிறார் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?”

இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது நீலநாகரே! இன்னாரென்றும் எதற்காகவென்றும் தெரியாமல் இந்தப் பூம்புகாரில் இளங்குமரனுக்குக் கேடு சூழ்ந்ததற்கு மூலகாரணமானவர் யாரென்று தெரிந்துவிட்டது. நீங்கள் அந்தக் கபாலிகை யிடம் போய் விசாரித்துத் தெரிந்துகொள்ள முயன்றீர்கள். அதைவிடத் தெளிவாக இப்போது அருட்செல்வர் எல்லா வற்றையும் கூறிவிட்டார்...” என்று தொடங்கி எல்லாச் செய்திகளையும் நீலநாகருக்குச் சொல்லி முடித்தார் வளநாடுடையார்.

எல்லாவற்றையும் கேட்ட நீலநாகர் கொதிப்படைந்தார். இவ்வளவையும் தெரிந்துகொண்ட பின்னுமா இந்தப் பிள்ளை இளங்குமரன் இப்படி அமைதியாயிருக்கிறான்? பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய மறுகணமே அந்தப் பெருமாளிகைக்குப் போய்ச் சூறையாடியிருக்க வேண்டாமோ?”

 

நீங்களாகவோ நானாகவோ இருந்தால் அப்படிச் சூறையாடியிருப்போம் நீலநாகரே! இளங்குமரனை என்னால் புரிந்து கொள்ளவே முடியவிலலை. எந்த நோக்கத்துடனோ அவன் பெரிதும் அமைதியாயிருக்கிறான். ‘உன் கடமைகளை உனக்கு நினைவுபடுத்தியாயிற்று. இனி நான் என் வழியில் போக வேண்டும். சமந்த கூடத்துக் காட்டில் போய்த் தவத்தில் மூழ்கப் போகிறேன். எனக்கு விடை கொடு என்று அருட்செல்வ முனிவரும் மணிநாகபுரத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். இந்தப் பிள்ளையின் தாய்மாமன் மகன் குலபதி பட்டினபாக்கத்துப் பெருநிதிச் செல்வனைப் பழிவாங்குவதற்காக ஒரு படையே திரட்டி வைத்திருந்தான். அவனையும் அவன் படைகளையும்கூடத் தன்னோடு வரக் கூடாதென இவன் மறுத்து விட்டான். மணிநாகபுரத்திலிருந்து கப்பலில் திரும்பி வரும்போதுமேலே செய்ய வேண்டி யவைகளைப் பற்றி இனி என்ன திட்டம் என்று கேட்டுப் பலமுறை நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். இவன் அப்போதெல்லாம் நன்றாக முகம் கொடுத்துப் பேச வில்லை. ‘பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குப் போவதாயிருந்தால் தனியாகப் போகாதே, உன்னோடு ஓவியனையும் துணையாய் அழைத்துக்கொண்டு போ என்று இங்கு வந்து கரை சேர்ந்ததும் கூறினேன். அதற்கும் மறுமொழி கூறாமல் மெளனமாயிருந்து விட்டான். கருணை, பரிவு, சாந்தம் என்றெல்லாம் இந்தப் பிள்ளை வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்குத் தயக்கமாயிருக்கிறது. கொலை பாதகங்களுக்கும் அஞ்சாத எதிரியிடம் இவன் வெறுங்கையோடு போய் நிற்கப் போகிறானே என்று எண்ணினால்தான் எனக்குப் பயமாயிருக்கிறது. இதைத்தான் உங்களிடம் தனிமையில் சொல்ல விரும்பினேன். இன்று பகலிலோ, மாலையிலோ, இளங்குமரன் பட்டினப்பாக்கத்திற்குப் புறப்பட்டால் அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்படியாவது நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பாகப் பின்தொடர வேண்டும். இந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுத்து விட்டேன். இனி நான் நிம்மதியாகப் புறவீதியில் என்னுடைய இல்லத்திற்குச் சென்று என் மகளைப் பார்த்து இளங்குமரன் திரும்பி வந்திருக்கிற செய்தியை அவளுக்குச் சொல்லலாம். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிற செய்தியாயிருக்கும் இது என்று சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வளநாடுடையார்.

உங்களுக்கு இதைப்பற்றிய பயமே வேண்டாம், வளநாடுடையாரே! எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று கூறி வளநாடுடையாருக்கு விடை கொடுத்து அனுப்பினார் நீலநாகர்.

பின்பு கோவிலுக்குப் போய் வழிபாட்டை முடித்துக் கொண்டு படைக்கலச் சாலைக்குத் திரும்பினார். ஓவியன் மணிமார்பனை மட்டும் தனியே அழைத்து, “நான் படைக்கலச் சாலையின் உட்புறம் இளைஞர்களுக்கு வாட்போர் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பேன் தம்பீ! உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும். நீ இளங்குமரனை அருகிலிருந்து கவனித்துக் கொண்டேயிரு. அவன் எங்காவது வெளியேறிச் சென்றால் உடனே அதை நீ என்னிடம் வந்து சொல்ல வேண்டும் என்று கூறி அவனிடம் வேண்டிக் கொண்டு படைக்கலச் சாலையின் உள்ளேயிருந்த தோட்டத்துப் பக்கமாகச் சென்றார் நீலநாக மறவர். படைக்கலச் சாலையில் அதன் பின்பு அன்று மாலைப் போது அமைதியாகக் கழிந்தது.

மணிமார்பன் இளங்குமரனுக்கு அருகிலேயே இருந்தான். இளங்குமரன் அன்று உணவு உண்ணவில்லை. ஏழெட்டு முறை திரும்பத் திரும்ப குளிர்ந்த தண்ணிரில் மூழ்கி நீராடிவிட்டு வந்தான். மெளனமாக உட்கார்ந்து தியானம் செய்தான். சிறிதுபோது ஏதோ உள்முகமான ஆனந்தத்தில் ஈடுபட்டதுபோல் அவன், இதழ்கள் சிரித்தன. இன்னும் சிறிதுபோது தாங்க முடியாத தவிப்பினால் உள்ளே குமுறுவதுபோல் அவனுடைய கண்கள் கலங்கி நீர் மல்கின. அருகில் இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இளங்குமரனைக் கவனித்து வந்த மணிமார்பனுக்கு அந்த நிலையில் அவனிடம் பேசவே பயமாயிருந்தது. அன்று அவனுடைய முகத்தில் காண்பதற்கரிய தெய்வீகமான அமைதியைக் கண்டான் மணிமார்பன்.

ஐயா! மணிநாகபுரத்தில் புறப்பட்ட நாளிலிருந்து இப்படிக் கொலைப் பட்டினி கிடக்கிறீர்களே? இது எதற்காக? உடம்பில் வெம்மையை அழிக்க விரும்பும் கடுந் துறவியைப் போல் கணத்துக்கு கணம் குளிர்ந்த நீரில் மூழ்கிவிட்டு வருகிறீர்களே? இதெல்லாம் என்ன கொடுமைகள்?” என்று பொறுக்க முடியாத தவிப்போடு இளங்குமரனைக் கேட்டான் ஓவியன். இளங்குமரன் இதழ்கள் பிரியாமல் மோன நகை புரிந்தான். பின்பு மணிமார்பனை நோக்கிச் சொன்னான்:

நண்பனே! மணிநாகபுரத்திலிருந்து புறப்பட்ட வேளையிலிருந்து என் மனத்திலும் உடம்பிலும் நெருப்புப் போல் ஏதோ ஓருணர்வு விடாமல் கனன்று கொண்டேயிருக்கிறது. உண்ணா நோன்பிலும், நீராடலிலும், தியானத்திலுமாக இந்தக் கனலை அவித்துவிட்டு என் மனத்தில் கனிந்த அருள் போய்விடாமல் நான் காத்துக் கொள்ள முயல்கிறேன். எந்த எந்த நிலைகளில் எந்த எந்தக் காரணங்களால் குரோதமும் கோபமும் கொண்டு கொதிக்க முடியுமோ அப்போதும் மனத்தைக் கவிழவிடாமல் சம நிலையில் வைத்துக்கொள்ள முயல்வதுதான் மெய்யான சான்றாண்மை. இரசங்களுக்கெல்லாம் மேலானதும் முதிர்ந்தும் முடிந்த முடிபாக நிற்பதுமாகிய நிறைகுணம் இந்தச் சாந்தரசம்தான். நம்முடைய கோபம் தன் முழு உருவமும் கிளர எழவேண்டிய இடம் எதுவோ அங்கேயும் கூட அதை அடக்கி நின்று சிரிப்பதுதான் உயர்ந்த அடக்கம். என்னால் அப்படி அடங்கி நிற்க முடியுமா என்று முயன்று பார்க்கிறேன் நான். முடியும் என்று தோன்றும்போது என் இதழ்களில் சிரிப்பு மலர்கிறது. முடியாதோ என்று சந்தேகம் வரும்போது என் கண்கள் கலங்குகின்றன.”

உங்கள் கோபம் நியாயமாயிருக்கும்போது நீங்கள் ஏன் அதை அடக்க வேண்டும்? எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அந்தப் பெருநிதிச் செல்வரின் முயற்சிகளில் உங்களைக் கொன்று அழிப்பதும் ஒன்றாயிருக்கிறது. உங்கள் கழுத்தின் வலது பக்கத்திலுள்ள மச்சத்தைக்கூட அடையாளத்திற்காக அந்த ஒவியத்தில் வரையவேண்டுமென்று என்னிடம் பிடிவாதம் பிடித்தார்களே அந்தக் கொடி யவர்கள்! நல்ல வேளையாக அந்த ஓவியம் இங்கே படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்துவிட்டது. இல்லா விட்டால் அதை அடையாளமாகக் கொலையாளிகள் கையில் கொடுத்து அனுப்பி உங்களைத் தேடித் தீர்த்து விடுவது அவர்கள் நோக்கமாக இருந்தது.”

இதைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான்.

நான் எந்தக் கோபத்தை அழிக்க விரும்புகிறேனோ அதே கோபத்தை வளர்க்க நீ உன் சொற்களால் முயல் கிறாய் மணிமார்பா!” என்று கூறியபடியே எழுந்து போய் விட்டான் இளங்குமரன். மறுபடி அவன் திரும்பி வந்த போது நீராடிய ஈரம் புலராத கோலத்தில் அவனைப் பார்த்தான் மணிமார்பன்.

அப்போது படைக்கலச் சாலையில் மரங்களிடையே மாலைவெயில் சரிந்திருந்தது. சிறிது நேரத்தில் மணி மார்பனிடமிருந்து ஓவிய மாடத்தில் பிரதி செய்து கொண்டு வந்த ஓவியங்களைக் கேட்டு வாங்கிக் கொண்டு மாலை வெயிலினிடையே நெருப்புப் பிழம்பு நடந்து போவது போல் நடந்து போய்ப் படைக்கலச் சாலையின் வாயிலைக் கடந்து வெளியேறினான் இளங்குமரன். பின்னாலேயே சிறிது தொலைவு அவனைத் தொடர்ந்து சென்ற மணிமார்பன், “பசியோடும் தளர்ச்சியோடும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் இப்போது?” ' என்று கேட்டான். இந்தக் கேள்விக்கும் இளங்குமரன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே விரைந்து போய் விட்டான். ஆனாலும் மணிமார்பனுக்கு அப்போது இளங்குமரன் போகுமிடம் புரிந்துவிட்டது. உடனே நீலநாக மறவரிடம் போய்ச் சொல்வதற்காகப் படைக்கலச் சாலையின் உட்பக்கம் விரைந்தான் அவன். படைக்கலச் சாலையின் முன்முற்றத்தில் இருந்த பவழ மல்லிகை மரத்தடியில் தற்செயலாக வந்து நின்று கொண்டிருந்த பதுமை, “அவர் எங்கே இவ்வளவு அவசரமாகப் போகிறார்?” என்று பின்தொடர்ந்து போய்விட்டுத் திரும்பி உள்ளே வந்து கொண்டிருந்த தன் கணவரிடம் கேட்டாள். அந்தக் கேள்வி தன் காதில் விழுந்தும் அப்போதிருந்த பரபரப்பான மனநிலையில் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு நிற்கத் தோன்றாமல் நீலநாகரைத் தேடிக் கொண்டு அவன் ஓட வேண்டியிருந்தது.

இளங்குமரன் பட்டினப்பாக்கத்தை அடையும்போது இருட்டிவிட்டது. அவனுடைய உடல் தளர்ந்திருந்தாலும் மனம் துய்மையான உணர்வுகளால் உறுதிப்பட்டிருந்தது. இதே பட்டினப்பாக்கத்து வீதிகளில் தான் நடக்கும் போதே தரையதிர முன்பு நடந்த காலத்தை நினைத்துச் சிரித்துக்கொண்டே சென்றான் இளங்குமரன். பசிச் சோர்வினால் அவன் கால்கள் மெல்ல மெல்ல நடந்தன.

என்னுடைய வாழ்க்கையே முடிவில்லாததொரு பெரிய வீதிதான். அதன் கடைக்கோடியில் அது நிறைகிற எல்லையை நோக்கி இப்போது நான் நடந்து கொண்டிருக்கிறேன். இந்த முடிவில்லாத பெரிய வீதியில் திருநாங்கூரில் ஒதுங்கியபோதும், விசாகை என்னும் புனிதவதியரிடம் பழகியபோதும் நான் கற்று நிறைந்த குணச் செல்வங்களை இதன் எல்லைக்குப் போவதற்குள் என்னிடமிருந்து யாரும் கொள்ளையடித்து விடக் கூடாது. எந்தக் கீழான உணர்ச்சித் துடிப்பினாலும் நான் என்னுடைய உயர்ந்த பாவனைகளை இழந்துவிடக் கூடாது. நான் நிறைய வேண்டும். நிறைவுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கும் நடுவில் எந்த விதத்திலும் நான் குறைபட்டுப் போய்விடக்கூடாது.’

இப்படி எண்ணிக்கொண்டே தன்னுடைய குலப் பகைமை குடியிருக்கும் ஏழடுக்கு மாளிகைக்கு முன்னால் போய் நின்றான் இளங்குமரன். சில கணங்கள் அவனுடைய கால்கள் உள்ளே நுழைவதற்குத் தயங்கின. மனத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி மலையாக வந்து வீழ்ந்து கனத்தது. ‘இந்த மாளிகையின் எல்லையில்தான் என் தந்தையும் தாயும் அல்பாயுளாக இறந்து போனார்கள் என்ற வேதனை நினைவு வந்து உடம்பைச் சிலிர்க்க வைத்தது. நெஞ்சு கனன்றுவிட முயன்றது. கைகள் துடிக்கத் தவித்தன. நடுநிலையிலிருந்து பிறழ்ந்து சரிந்துவிட முயன்ற தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவன் அந்த மாளிகைக்குள் நுழைந்தான். வாயில் நின்று காத்துக் கொண்டிருந்த காவலர்கள் ஓடிவந்து அவனைத் தடுத்தனர்.

யார் நீங்கள்? எதற்காக உள்ளே போக வேண்டும் என்று சொல்லுங்கள்?”

நான் இப்போது என்னை யாரென்று சொல்வதென எனக்கே புரியவில்லை. யாரோ ஓர் இளந்துறவி உங்களைக் காண வந்திருக்கிறான் என்று உள்ளே போய் இந்த மாளிகைக்கு உரியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்.”

இந்த மாளிகைக்கு உரியவர் நோயுற்றுப் படுத்த படுக்கையாயிருக்கிறார். இந்தத் தளர்ந்த நிலையில் அவர் யாரையும் சந்திக்க மாட்டார்.”

என்னைச் சந்திப்பார். என்னை அவரும், அவரை நானும் சந்தித்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. நீ போய்ச் சொல்.”

காவலர்களில் ஒருவன் உள்ளே போனான். காவலன் உள்ளே போனபின் தற்செயலாக அந்த மாளிகையின் மேற்புரம் சென்ற இளங்குமரனின் பார்வை அங்கே ஒரு மாடத்தின் நுனியில் சித்திரம்போல் அசையாமல் நின்று கீழ்நோக்கி இமையாத கண்களால் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுரமஞ்சரியைச் சந்தித்தது. இந்தப் பார்வைக்காக, இந்தச் சந்திப்புக்காக இவற்றுக்கென வாய்க்கும் விநாடிகளுக்காகவே யுக யுகாந்தரமாகக் காத்துக் கொண்டிருந்தது போன்ற ஆசையும் காதலும் அவள் கண்களில் தெரிந்தன. ‘என்னுடைய தவிப்பு - என்னுடைய வேட்கை எல்லாம் உங்களுடைய அழகிலிருந்து பிறந்தவை. உங்களுடைய கண்களையும் தோள்களையும் நான் சந்திக்க நேர்ந்த கணங்களிலிருந்து நான் உங்களுக்காகவே நெகிழ்ந்து போய்த் தவிக்கிறேன் என்று அந்தக் கண்கள் அவனிடம் பேசின. முகத்தையே ஆர்வம் மணக்கும் பூவாக மலர்த்திக் கொண்டு காலில் விழுந்து அர்ப்பணமாகிவிடத் தவித்துக் கொண்டு நிற்பது போல நிற்கும் அவள் கண்களைத் தொடர்ந்து சந்திக்கப் பயந்து தலை குனிந்து கீழே பார்க்கத் தொடங்கினான் இளங்குமரன்.

 

உள்ளே போயிருந்த காவலன் திரும்பி வந்து தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு இளங்குமரனை அழைத்தான். அவனைப் பின்தொடர்ந்து உள்ளே போவதற்கு முன் கடைசியாக இளங்குமரன் மேலே நிமிர்ந்து பார்த்தபோது சுரமஞ்சரியின் கவர்ச்சி நிறைந்த கண்களில் ஈரம் பளபளத்து மின்னியது. அவளுடைய மயக்கும் கண்கள் இப்போது மழைக் கண்களாயிருந்தன. இதயத்தில் ஏதோ ஒரு மென்மையான பகுதிவரை ஊடுருவித்தாக்கும் அந்தப் பார்வையிலிருந்து தன்னைத் தானாகவே விடுவித்துக் கொண்டு உள்ளே புகுந்தான் இளங்குமரன்.

அந்தக் காவலன் அவனைப் பெருநிதிச் செல்வர் நோய்ப் படுக்கையில் இருந்த கூடத்திற்குள் அழைத்துக் கொண்டு போய்விட்டான். அந்த கூடத்திற்குள் முதல் அடி பெயர்த்து வைத்தபோது அவன் கால்கள் நடுங்கின. அவன் எந்தப் பக்கமாக அந்தக் கூடத்திற்குள் நுழைந்தானோ அந்தப் பக்கம் தலைவைத்துத் தான் கட்டிலில் அவரும் படுத்திருந்தார். தலையைத் திருப்பாமலே உள்ளே யாரோ அடிபெயர்த்து வைத்து வரும் ஓசையைக் கேட்டு உணர்ந்தே அவர் படுக்கையிலிருந்தபடி வினவினார்.

யார் நீங்கள்?”

நான் ஒரு கவியின் மகன்!”

கவியின் மகனுக்கு இங்கென்ன வேலை? கவிகள் இந்த மாளிகையின் வாயிற்படியில் துணிவாக ஏறிவந்து நிற்க முடியாதே? அப்படி யாராவது கவிகள் என்று சொல்லிக்கொண்டு இந்த மாளிகையின் படிகளில் ஏறினால் கடைசி படிகளில் ஏறுவதற்குள் அவர்கள் காலை முறித்துவிடச் சொல்லிக் காவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேனே? பல ஆண்டுகளாக இந்த மாளிகையின் வழக்கமாயிற்றே இது?”

கவிகளின் பரம்பரைமேல் உங்களுக்கு ஏன் இத்தனை குரோதம்?” என்று இளங்குமரன் சிரித்துக்கொண்டே கேட்டான். அவனுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்று, “இது எங்கோ கேட்ட குரல்போல் இருக்கிறதே? நீ யார் அப்பா? இப்படி என் முகத்துக்கு முன்னால் வந்து நின்று பேசு. யாரோ சந்நியாசி என்னைத் தேடி வந்திருப்பதாக அல்லவா காவலன் கூறினான்?” என்றார் பெருநிதிச் செல்வர். சிறிது நேரம் பேசியதிலேயே அவர் குரல் கரகரத்துத் தளர்ந்திருந்தது. இளங்குமரன் தான் நின்ற இடத்திலிருந்தே அவருக்கு மறுமொழி கூறலானான்.

நீங்கள் எங்கோ கேட்ட குரல்தான் இது! நியாயத்தின் குரல். எந்தப் பிறவியிலாவது உங்கள் செவிகளில் விழுந்திருக்கும். இப்போது மறுபடி அதைக் கேட்கிறீர்கள். இப்போது, உங்களிடம் பேசுவது என் குரல் அல்ல. இது நியாயத்தின் குரல். கவி அமுதசாகரருக்கும் அவருடைய காதலி மருதிக்கும், காலாந்தகருக்கும் நீங்கள் புரிந்த அநியாயங்கள் எல்லாம் பார்த்த காலத்தில் கூடப் பொறுமையாயிருந்து விட்ட நியாய தேவதை இன்று உங்களைத் தேடிவந்து இப்போது என் குரலில் பேசுகிறது என்று அவன் கூறியபோது படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து திரும்பினார் அவர். அவருடைய கண்கள் பின்புறம் வேகமாகத் திரும்பிப் பார்த்தன.

--------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.10. கருணை வெள்ளம்

 

பசித்துக் கிடந்த புலி இரை கண்டு பாய்வது போல் பாய்ந்து திரும்பிய பெருநிதிச் செல்வரின் கண்களில் முதல் காட்சியாகத் தென்படும்படி தன் தாயின் ஓவியத்தைக் காட்டினான் இளங்குமரன். படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் ஒற்றைக் காலின் பலத்தினாலும் ஊன்றுகோலின் பலத்தினாலும் தளர்ந்தும் தயங்கியும் நின்ற அவர் வியப்பும் அச்சமும் மாறி மாறித் தெரியும் கண்களால் அந்த ஓவியத்தைப் பார்த்தார். எந்தப் பெண்ணுடைய கண்களின் அழகைத் தான் அடைய முடியாமல் பல ஆண்டுகளுக்கு முன் அமுதசாகரன் என்ற கவி தன்னை ஏமாற்றினானோ அந்தக் கண்களை இப்போது மீண்டும் இந்த ஓவியம் தனக்குக் காட்டுவதை உணர்ந்தார் அவர். ‘இந்த மயக்கும் விழிகளில் என்னை நோக்கி மலர்ந்திருக்க வேண்டிய கனவு அப்படி மலராமற் போனதால் தான் அன்று என் மனத்தில் குரோதம் பிறந்தது. அந்தக் குரோதம் ஏற்கெனவே பலவகையில் கொடியவனாயிருந்த என்னை இன்னும் கொடிய அரக்கனாக மாற்றியது. உள் நெருப்பாக வீழ்ந்து விட்ட தீய உணர்ச்சிகள் இன்னும் என்னுள் எங்கோ கனன்று கொண்டிருக்கின்றன. இல்லா விட்டால் இந்தப் பிள்ளையை இப்போது எதிரே காண்கிற நிலையிலும் என் நினைவுகள் இப்படிக் கொதிப்பதற்குக் காரணமில்லையே?’ என்று தனக்குள் விரைந்து எழும் எண்ணங்களோடும், அந்த எண்ணங்களின் மாறுபட்ட சாயல்கள் சிறிதும் தெரியாத முகத்தோடும் நின்றார் பெருநிதிச் செல்வர். அப்படி நின்றபோது அவருடைய செவிகளில் மறுபடியும் நியாயத்தின் குரலாய் இளங்குமரனுடைய பேச்சு எதிரேயிருந்து ஒலிக்கத் தொடங்கியது

இதோ இந்த ஒவியங்களையும் பாருங்கள். இவர்களை யெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். நினைவில்லாவிட்டால் நினைவு படுத்துவதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியபடியே தன் தந்தை அமுதசாகரருடைய ஓவியத்தையும், தாய்மாமனான காலாந்தக தேவருடைய ஓவியத்தையும் அவர் முன்பு காட்டினான் இளங்குமரன். அந்த விநாடி வரை அவன் முகத்தில் சிரிப்புக் குன்றவில்லை. ஆனால் எதிரே நின்றுகொண்டு அவற்றை யெல்லாம் பார்க்கும்போது அவருக்கோ பதில் பேச நா எழாமல் உள்ளேயே கட்டுண்டு அடங்கிப் போய்விட்டாற் போலிருந்தது. நகைவேழம்பருடைய சாவுக்குப் பின்பு அருவாள மறவனும், அவனுடைய தோழனும் தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதிலிருந்து உலகமே தனக்கு முன் இருண்டு போய் அவநம்பிக்கைகள் சூழ்வதுபோல் பிரமை கொண்டு தளர்ந்து படுத்த படுக்கையாகியிருந்தார் அவர். இவ்வளவு காலம் கொடுமைகளும், சூழ்ச்சியும் செய்வதற்குக் காரணமாகத் தன் மனத்தில் இறுகிப் போயிருந்த உணர்வுகள் இப்போது எதற்கோ உடைந்து தளர்ந்து விட்டாற் போல அவருக்கே அச்சமாக இருந்தது. ஏதோ ஒரு வழியில் ஏதோ ஒரு காரணத்துடன் மூச்சு இரைக்கும்படி ஓடத்தொடங்கிய கால்கள் அந்த முடிவு தெரியாத வழியின் மேல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றவுடன் நெஞ்சுத் துடிப்பின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தளர்ச்சியாலோ, இனிமேலும் ஒரு முடிவும் தெரியாத இந்த வழியில் தொடர்ந்து எதற்காகப் போவது என்று மலைப்பதனாலோ அப்படியே சோர்ந்து நின்றுவிடுவதைப் போன்று தமது பயங்கரமான வாழ்க்கையில் மேலே என்ன செய்வதெனத் தோன்ற முடியாத மலைப்போடு வழி தெரியாமல் இன்று மயங்கி நின்றார் பெருநிதிச் செல்வர்.

இன்று இந்த முன்னிரவுப் போதில் இளங்குமரன் எனக்கு முன்பு இப்படிச் சிரித்துக் கொண்டே வந்து நிற்பதற்குப் பதில் ஆறாத சினத்துடன் உருவிய வாளும் கையுமாக என் எதிரியாக வந்திருந்தால்கூட நான் பயமின்றி நிமிர்ந்து நின்றிருப்பேன். இப்படிச் சிரித்துச் சிரித்து இந்தப் பொறுமையையும் நிதானத்தையுமே ஆயுதங்களாகக் கொண்டு என்னைக் கொல்கிறானே இந்தப் பிள்ளை?’ என்று எண்ணி, அந்தப் பொறுமையாலும், நிதானத்தாலும் கூடத் தாக்கப்பட்டவராய்த் தளர்ந்து போய் நின்றார் அவர்.

தனக்கு முன்னால் அவருடைய தொடர்ந்த மெளனத்தையும் திகைப்பையும் கண்டு உணர்ந்த இளங்குமரன் தன் வசமிருந்த ஓவியங்களையும் சுவடிகளையும் ஒரு புறமாக வைத்துவிட்டு இன்னும் அருகில் நெருங்கிச் சென்று அவரோடு பேசினான்:

ஐயா! நீங்கள் ஏன் இப்படி வாய்திறந்து மறுமொழி கூறாமல் எனக்கு முன் திகைத்து நிற்கிறீர்கள்? நான் ஏழை. என் கைகளில் இப்போது ஆயுதங்கள் இல்லை. மனத்தில் கோபமும் இல்லை. என் குடும்பத்தின் இணையற்றதொரு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களின் உயிர்களையும், செல்வங்களையும், நம்பிக்கைகளையும், நீங்கள் அழித்து நிர்மூலமாக்கியிருக்கிறீர்கள். அப்படியிருந்தும் உங்களை மலர்ந்த முகத்தோடும், சிரித்த வாயோடும் சந்திக்க வேண்டுமென்றுதான் ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்த மாளிகைக்குள்ளே இன்று நான் நுழையும்போது உங்கள் காவலாளிகள் நீங்கள் நோயுற்றுப் படுத்த படுக்கையா யிருப்பதாகக் கூறினார்கள். உங்களுக்கு வந்திருக்கும் நோய் எதுவோ அதற்காகவும் நான் அநுதாபப்படுகிறேன்.”

உன்னுடைய அதுதாபத்திற்காக நான் ஏங்கித் தவித்துக் கொண்டு கிடக்கவில்லை. நீ இங்கிருந்து உடனே வெளியேறிப் போய்விடு. நீ இங்கே தாமதித்து நின்றால் உன் உயிரே என் நோய்க்கு மருந்தாக வேண்டுமென்று கூட நான் ஆசைப்பட நேரலாம். இப்படிச் சிரித்துக் கொண்டு என் கண்களுக்கு முன் நிற்காதே. இந்தச் சிரிப்பு என்னை என்னவோ செய்கிறது. நான் கொலைக்கு அஞ்சாதவன், சில நாட்களாக என் மனமும் ஒரு நிலையில் இல்லை. நான் எந்தக் கணத்தில் எப்படி மாறுவேன் என்று சொல் வதற்கும் முடியாது. மறுபடியும் நான் கொலைகாரனாவதற்கு வாய்ப்பளிக்காதே. வந்த வழியே திரும்பிப் போய் விடு.”

அவருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு இளங்குமரன் முன்னிலும் நிறைவாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே முகத்துக்கு முகம் சந்திக்க முடிந்த அண்மையில் இன்னும் அவரை நெருங்கி நின்று கொண்டு மறுமொழி கூறினான்:

ஐயா! இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. உங்களுக்கு வந்திருக்கும் நோய் என்னவென்று நான் விளங்கிக் கொண்டேன். செய்த தீவினைகள் பழுத்து அவற்றின் விளைவை அநுபவிக்கும் காலம் வரும்போது மனிதர்களுக்கு இந்தத் தவிப்பு ஏற்படத்தான் செய்யும். சில நாட்களாக உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் மனம் ஒருநிலைப்படாத தன்மை இப்போது சில நாட்களாக மட்டும் உங்களைப் பற்றியிருப்பதாய் நீங்கள் நினைப்பது தான் தவறு. தொடக்கத்திலிருந்தே உங்கள் மனத்திற்கு அந்த நிலையில்லாத் தன்மை உண்டு என்று தான் நான் நினைக்க முடிகிறது. ஒருநிலைப்பட்ட மனம் உங்களுக்கு இருந்திருந்தால் தொடக்க நாளிலிருந்தே நீங்கள் வேறு விதமாக வாழ்ந்திருக்க முடியும். தான் மட்டும் வாழ ஆசைப்படுகிற மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் வாழ ஆசைப்படுகிற சான்றோர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். பிறரை அழித்துக் கொண்டே தான் மட்டும் வாழ ஆசைப்படும் விலங்குக் குணம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்றாவது வகை மனிதர்களுக்கு இக்குணமே நாளுக்கு நாள் வெளிப்படாத நோயாய்ப் பெருகி உள்ளுக்குள்ளேயே வளர்கிறது. இந்த நோய் முற்றி இதை வளர்த்துக் கொண்டவன் தன்னுடைய தீயசக்திகள் எல்லாம் தனக்குப் பயன்படாமல் ஒவ்வொன்றாய்த் தன்னைக் கைவிடுகின்றன என்பதை உணரும்போது தன் முன் தனக்கு எதிரே அதுவரை தெரிந்து கொண்டிருந்த உலகமே இருண்டுபோய் விடுகிறதாக எண்ணி மலைக்கிறான். இந்த இருளில் சிக்கிக் கொண்டவர் யாராயிருந்தாலும் பரிதாபத்துக்குரியவர். உங்களைச் சுற்றி இப்போது சூழும் இருள் அத்தகையது. இப்போது இந்த இருளில் நீங்கள் தவிப்பதைப் பார்த்து நீங்கள் பகைக்குலத்தின் கடைசிக் கொழுந்தாகிய நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து கொண்டிருக்கிறேனோ என்று நீங்கள் என்மேல் சந்தேகப்படலாம். அப்படிச் சந்தேகப்படுவதும் மனித இயற்கைதான். ஆனால் என் மேல் அந்தச் சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். உங்கள் மேல்கூட நான் கருணை காண்பிக்க முடியும். உங்களைப் பகைமையின் எல்லையாகக் குறி வைத்துக்கொண்டு குமுறுவதற்குப் பதில் என்னால் எவ்வளவு அதுதாபப்பட முடியுமோ, அவ்வளவு அநுதாபத்திற்கும் உங்களையே எல்லையாக்கிக் கொண்டு நான் கருணை வெள்ளமாய்ப் பெருகி, அதில் நீங்களும் மூழ்கி எழுதுவதற்கு இடமளிக்க முடியும். நீங்கள் என் தந்தையை இந்த மாளிகையின் நிலவறையில் துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கிறீர்கள். என் தாயின் இனிய நினைவுகளும் மங்கல நம்பிக்கைகளும் அழிவதற்கும் அவள் இறப்பதற்கும் காரணமாயிருந்தீர்கள். என்னுடைய தாய் மாமன் காலாந்தக தேவரை ஏமாற்றி அழைத்துப் போய்க் கொலை செய்துவிட்டு அவர் எனக்கு அணிவிக்கக் கொண்டு வந்திருந்த நவரத்தின ஐம்படைத் தாலியையும் பிறவற்றையும் கொள்ளையடித்தீர்கள். என்னையும் எனக்குப் பாதுகாப்பாயிருந்து வளர்த்த அருட்செல்வ முனிவரையும் பலமுறை கொன்றுவிட முயன்றீர்கள். இப்போது இன்று இந்த நிலையிலும் என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்துகிறீர்கள். என் குலத்து முன்னோர்களைக் கொன்றாற் போலவே என்னையும்கூட உங்களால் கொன்றுவிட முடியும். ஆனால்நாம் இன்னாரைக் கொன்றோம் என்று ஒவ்வொரு நாளும் உங்கள் மனச்சாட்சியின் ஞாபகக் குரல் இடை விடாமல் உங்களுக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருக்குமே, அந்த ஒலியை உங்களால் ஒருபோதும் கொல்ல முடியாதே?...”

இவற்றைக் கேட்டுப் பெருநிதிச் செல்வரின் உடல் நடுங்கியது. உடம்பு முழுவதும் பாதாதி கேசபரியந்தம் தீப்பற்றி எரிவதுபோல் வெம்மைப்பட்டு வேர்த்தது. எதிரே வந்து நின்றுகொண்டு நியாயத்தைப் பேசுகிறவனுடைய சொற்களே ஒவ்வொன்றாகப் புறப்பட்டுப் பாய்ந்து துளைக்கும் அம்புகளாக வந்து தாக்கித் தன்னை வீழ்த்தி விட்டாற் போல ஒரு கையால் நெஞ்சை அழுத்திக் கொண்டு தளர்ந்து போய்ப் பின்னால் சிறிது சிறிதாக நகர்ந்து கட்டிலில் அமர்ந்தார் அவர். அமர்ந்தபடியே மற்றொரு கையிலிருந்த ஊன்றுகோலை நெஞ்சருகே கொண்டுபோய் இரண்டு கைகளும் நடுங்கிடப் பிடியைத் திருகி அந்த ஐம்படைத் தாலியை எடுத்து இளங்குமரனுக்கு முன்னால் வீசி எறிந்தார்.

தரையில் மின்னல் விழுந்து நெளிவதைப் போலத் தனக்கு முன் வீழ்ந்து கிடந்த அந்தப் பொருளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவன் நின்றபோது அதை அவனுக்கு முன் வீசி எறிந்ததைவிட வேகமாகத் தன்னுடைய சொற்களை வீசி எறிவதுபோல் குமுறிக் குமுறிப் பேசலானார் அவர்:

உன்னுடைய தாய்மாமனிடமிருந்து நான் கொள்ளை யடித்து விட்டதாக நீ சொல்லிக் குறைபட்டுக் கொள்கிற பொருளை இதோ உன் காலடியில் தூக்கி எறிந்து விட்டேன். இதை எடுத்துக் கொண்டு போய்விடு. என்னுடைய கோபத்தை வளர்க்காதே. நான் மிகவும் பலவீனமான நிலையிலிருக்கிறேன். இந்நிலையில் எப்படி நடந்து கொள்வேனென்று எனக்கே தெரியாது! சந்தர்ப்பம் மறுபடி என்னைக் கொலைகாரனாக்கி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

உங்களுடைய கோபத்தைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் இந்த விதமான கோபம் கோழைகளுக்குத்தான் சொந்தமானது. யாரிடம் தவிர்க்க முடியாத காரணத்திற்காகக் கோபப்பட வேண்டுமோ அங்கே கூட அந்தக் கோபத்தை இழந்து விட்டு நிற்கவும், சிரிக்கவும் பக்குவமான வீரனால் முடியும். எல்லாவற்றுக்கும் பிடிவாதமாக முயல்வதைப் போலவே எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு முன்னால் வந்து நிற்பது என்னுடைய செல்வங்களை உங்களிடம் இருந்து மீட்டுக்கொண்டு போவதற்காக அன்று. எப்படி வாழக்கூடாதோ அப்படி நீங்கள் இதுவரை வாழ்ந்துவிட்டீர்கள். இதற்காக உங்களைப் பாராட்ட முடியாது. ஆனால் மன்னிக்கலாம். மன்னிக்க முடியும். அளவுக்கு மீறிய வறுமையைப் போலவே நீங்கள் கொடுமையும் துரோகமும், சூழ்ச்சியும் புரிந்து சேர்த்திருக்கும் அளவுக்கு மீறின செல்வமும் உங்களைச் சார்ந்துள்ள நோய்தான். நோயாளிகள், துன்பப்படுகிறவர்கள், ஏழைகள் ஆகியோர் மேல் எல்லாம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே எனக்கு நிறைய அநுதாபம் உண்டு. இலஞ்சி மன்றத்திலும், உலக அறவியலிலுமுள்ள நோயாளிகளுக்காக நான் என் மனத்தின் உள்ளேயே அநுதாபப்பட்டு அழுவதுண்டு. அப்படி உங்களுக்காகவும் நான் அநுதாபப்பட்டு அழ முடியும். இதோ ஒருகணம் இப்படி என் பக்கமாகத் திரும்பித் தலை நிமிர்ந்து பாருங்கள். என்னுடைய உறவுகளையும், செல்வங்களையும், உங்களுடைய குரோதத் திற்கும் கொடுமைக்கும் சிறிது சிறிதாக இழந்து பறி கொடுத்துவிட்ட நான் அப்படி இழந்துவிட்ட உண்மையைத் தெரிந்துகொண்ட பின்னும் உங்களுக்கு முன்னால் உங்களைவிட நிம்மதியோடும், நிதானத்தோடும் சிரித்துக் கொண்டு நிற்க முடிகிறது. நீங்களோ இவ்வளவு பெரிய மாளிகையில் எவ்வளவு என்று கணித்துச் சொல்ல முடியாத அவ்வளவு செல்வத்தைச் சேர்த்து ஆண்டு கொண்டிருந்தும், இப்போது எனக்கு முன்னால் நிம்மதியும் நிதானமும் இழந்து தோன்றுகிறீர்கள். உங்களைப் பார்த்து நான் கோபப்பட ஒன்றுமில்லை. ஆனால் இரக்கப்படுவதற்கும் கருணை கொள்வதற்கும் உங்களிடம் நிறையப் பலவீனங்கள் இருக்கின்றன...” என்று சொல்லிக்கொண்டே வந்த இளங்குமரனை மேலே பேச விடாமல் செய்யும் ஆத்திரத்தோடு துள்ளி எழுந்து பின்னால் பிடித்துத் தள்ளிவிட முயன்றார் பெருநிதிச் செல்வர். அவருடைய கைகள் அவனை நோக்கி மேலெழுந்து ஓங்கின.

ஆனால் அவர் அப்படிச் செய்வதற்கு ஆத்திரத்தோடு கைகளை ஓங்கிக் கொண்டு நின்றபோது அந்தக் கைகள் இரண்டும் அதே நிலையில் மரத்துப் போனாற் போல் தயங்கிவிட, அவர் செயலிழக்கும்படிச் செய்யவல்ல கம்பீர ஆகிருதி ஒன்று அந்தக் கூடத்துக்குள் புயல் புகுந்தது போலப் பிரவேசித்தது.

நிறுத்து! இளங்குமரனுக்கு இந்த மாளிகையில் ஏதாவது நேர்ந்தால் உன்னுடை குலத்தையே பூண்டோடு அழித்து விடுவேன். இந்தப் பெரிய நகரத்தையே என் கைகளால் ஆட்டிப் படைக்கிற வலிமை இருந்தும், நான் இவ்வளவு காலமாக எதற்கும் வைரம் கொண்டு குமுறியதில்லை. என்னைப் போன்றவர்களின் கோபத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்று நானே நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் வந்து விட்டது போலிருக்கிறது என்று எரிமலையாகக் கொதித்து பேசும் சொற்களோடு நீலநாக மறவர் மணிமார்பன் பின் தொடர அங்கு வந்து நின்றார்.

சோழநாட்டிலேயே பெரிய வீரராகிய நீலநாகர் அங்கு வந்து நின்றதைக் கண்டபோது பெருநிதிச் செல்வரின் உணர்வுகள் ஒடுங்கின. கண்களுக்கு முன்னால் உலகம் இன்னும் அதிகமாக இருண்டு போவதுபோல் தோன்றியது. அந்தத் தோற்றத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசிக் கொண்டு கீழே குனிந்து தரையைப் பார்த்தார் அவர்.

 

தம்பீ! இந்த மனிதனிடம் வாயினால் பேசி நியாயம் கேட்டுப் பயனில்லை. கைகளால் பேச வேண்டும். எவ்வளவு பாவங்களைச் செய்யக் கூடாதோ அவ்வளவு பாவங்களையும் செய்துவிட்டு மேலும் செய்வதற்குப் பாவங்களைப் தேடிக் கொண்டிருக்கிறவன் இவன் என்று சொல்லிக் கொண்டே தனக்கு அருகில் வந்த நீலநாகரை இளங்குமரன் அவ்வளவாக மகிழ்ச்சியோடு வரவேற்கவில்லை. உள்ளடங்கிய மெளனத்தோடு சில விநாடிகள் அசையாது நின்றபின், ஒரு காலத்தில் தனக்கு வீரத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்த அந்தப் பெருவீரரை நோக்கி இளங்குமரன் இப்போது ஒரு கேள்வி கேட்டான்.

ஐயா! யாருடைய துணையுமில்லாமல் நம்முடைய பகையை நாமே தனியாக எதிர்கொள்ளலாம் என்று திடமான எண்ணத்தோடு புறப்பட்டு வந்திருக்கிற வீரனுடைய பெருமிதம் உயர்ந்ததா, இல்லையா?”

உயர்ந்தது மட்டுமில்லை, இணையில்லாமல் உயர்ந்தது! அப்படிப்பட்ட வீரமுள்ளவர்கள் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதோடு தங்களைச் சார்ந்துள்ள வீரம் என்னும் குணத்தையே பெருமைப் படுத்துகிறார்கள், இளங்குமரா!”

மிகவும் நல்லது ஐயா! அத்தகைய தன்னம்பிக்கை வாய்ந்த வீரன் தன் எதிரியைத் தான் மட்டும் சந்திக்க வேண்டிய களத்தில் தனக்குத் துணையாக எவரேனும் பின்தொடர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியுமோ?”

நீலநாகர் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறமுடியாமல் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டார். மேல் நோக்கி ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய பார்வை கூசித் தாழ்ந்தது. இளங்குமரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. இதனால் சுட்டிக் காட்டப்படுகிற குற்றம் தன்னுடையது என்பதை உணர்ந்தபோது அவருக்கு மிகவும் நாணமாயிருந்தது. அப்போது இளங்குமரனுக்கு அவர் கூறிய மறுமொழிச் சொற்கள் ஒலி குன்றித் தன் தவற்றைத் தானே அங்கீகரித்துக் கொண்டது போன்ற தொனியோடு வெளிப்பட்டன.

தம்பீ! என்னைப் பொறுத்துக்கொள். நான் உனக்குத் துணையாயிருக்க வேண்டுமென்ற ஆவலோடு இங்கு வந்ததை நீ இப்படி உன் பெருமைக்குக் குறைவாக நினைப்பதாயிருந்தால் என்னைப் பொறுத்துக்கொள். பிறர் மேல் நமக்குள்ள மிகுதியான வெறுப்பினால் சில வேளைகளில் தாம் தவறு செய்து விடுவதைப் போலவே, பிறர் மேல் நமக்குள்ள அதிகமான அன்பினால் சில தவறுகளைச் செய்து விடுகிறோம். உன் மேலுள்ள அன்பின் மிகுதியால் உனக்கு இங்கே என்னென்ன கெடுதல் நேருமோ என்று எண்ணிக் கொண்டு நான் பின் தொடர்ந்தேன். மேலும் எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் பசித்துத் தளர்ந்த உடம்பும் உணர்வுகள் நெகிழ்ந்த மனமுமாக நீ இங்கே புறப்பட்டதாக மணிமார்பன் என்னிடம் வந்து கூறினான். அவன் என்னிடம் வந்து கூறிய சூழ்நிலையும் என்னை ஆத்திரமடையச் செய்து விட்டது.”

உங்களுடைய அன்புக்கும் பாசத்திற்கும் நான் நிறைந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பெருமாளிகைச் செல்வரை வெற்றி கொள்வதற்கு நான் ஆயுதங்களோடு வரவில்லையே என்று நீங்கள் கவலைப் பட்டு எனக்குத் துணையாக என்னைப் பின் தொடர்ந்திருக்க வேண்டியதில்லை. எனக்கு நான் இவரிடம் பேச முடிந்த சொற்களை விடப் பெரிய ஆயுதங்கள் வேறு எவையும் இருக்க முடியாது. என்னை எதிர்ப்பதற்கு என் சொற்களை விடப் பெரிய வேறு ஆயுதங்கள் எவையும் இவரிடம் இருக்க முடியாது.”

உயிரை அழிப்பதில் சொற்களைக் காட்டிலும் விரைந்து முயலும் இயல்பு ஆயுதங்களுக்கு இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம் தம்பீ

ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என் நாவிலிருந்து பிறக்கும் நியாயமான சொற்களுக்கு மறுமொழி சொல்ல முடியாதவரை இவர் எனக்குத் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். இவர் வேண்டுமானால் என் உடம்பை அழிக்கலாம். ஆனால் அப்படி அழித்தோம் என்ற நினைவைத் தன் மனத்திலிருந்து என்றுமே இவரால் அழிக்க முடியாது. இந்த நிலையில் நீங்கள் எனக்குச் செய்யும் பெரிய துணை என்னை இவரோடு தனியே விடுவதுதான். இவரை என்னுடைய எதிரி என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையிலேயே நான் இதுவரை அநுதாபம் கொள்ள நேர்ந்தவர்களை யெல்லாம் விட அதிகமாக அநுதாபம் கொள்ளுவதற்கு உரியவர் இவர் என்று தான் எண்ணுகிறேன். என்னுடைய இந்தப் பரந்த அதுதாபத்தைச் சான்றாண்மை எனக்குத் தந்திருக்கிறது. இதை இவர் மேல் நான் செலுத்த முடிவதற்குத் தடையாக உங்கள் வரவு எனக்குத் தோன்றுகிறது.”

என்னை மன்னித்துவிடு. நான் இங்கே உனக்கு அத்தகைய தடையாக நிற்க விரும்பவில்லை என்று கூறி விட்டு மறுபடியும் இளங்குமரனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்குக் கூசியவராக மணிமார்பனையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு நீலநாகர் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். எவ்வளவு ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் அவர் அந்த மாளிகைக்குள் நுழைந்தாரோ அவ்வளவிற்குத் தளர்ந்து துவண்டு குனிந்த தலையோடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியால் தன் தந்தைக்குச் சமமான அந்தப் பெருவீரரின் மனம் புண் பட்டிருக்குமோ என்று உள்ளூர வருந்தினாலும் அப்பொழுது தான் நிற்கும் சூழ்நிலையில் இதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று மனத்தைத் தேற்றிக் கொண்டவனாகத் தான் எதிர்க்க விரும்பாத தன் எதிரியின் பக்கம் பார்த்தான் இளங்குமரன். முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டு நின்றிருந்தார் பெருநிதிச்செல்வர். இளங்குமரன் சிரித்துக் கொண்டே நிதானம் மாறாத குரலில் அவரைக் கேட்டான்:

 

இப்போது இங்கிருந்து வெளியேறிச் செல்கிறாரே, இந்த ஆலமுற்றத்துப் பெரியவர் குறிக்கிட்டிராவிட்டால் நீங்கள் என்னைக் கீழே பிடித்துத் தள்ளியிருப்பீர்கள். அப்படித் தள்ளி விட்ட பின்பு இன்னும் கொடுமையாக ஏதேனும் செய்து என்னை அழிக்கவும் முயன்றிருப்பீர்கள் அல்லவா? இப்போதும் உங்கள் முயற்சிக்குப் பழுதில்லை. நான் தனியாகத்தான் உங்கள் முன் நிற்கிறேன். எந்த விதமான கோபதாபங்களும் இல்லாமல், நீங்கள் அதிக பட்சமாக எனக்குச் செய்ய முடிந்த பெருங்கொடுமை எதுவாயிருந்தாலும் அதற்கு என்னை இலக்காக்கிக் கொள்ளத் துணிந்து தான் நிற்கிறேன். உங்களுக்குத் தோன்றுவதைச் செய்யலாம்.”

இளங்குமரனின் இந்தச் சொற்களைக் கேட்டு அவர் அவன் பக்கமாகத் திரும்பினார். அவ்வாறு திரும்பிய போது அவர் முகம் வெளிறினாற் போலப் பயந்து தோன்றியது. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. முகத்திலும் கழுத்திலும் வேர்த்துப் பெருகியிருந்தது. பிச்சை கேட்டது போல் ஒடுங்கி நலிந்த குரலில் அவனருகே வந்து மன்றாடினார் அவர்.

தயைகூர்ந்து நீ என் எதிரே நிற்காமல் போய்விடு! உன்னைப் பார்ப்பதற்குப் பயமாயிருக்கிறது. உன் கண்களின் பார்வை கணத்துக்குக் கணம் நெருப்பாகி என்னைச் சுடுகிறது. உன்னுடைய சொற்கள் என்னைக் கொல்வதற்கு முன் உன் பார்வையே கொன்றுவிடும்போல் இருக்கிறது. நான் என் வாழ்வில் இப்படிப்பட்ட எதிரியை இதுவரை சந்தித்ததில்லை. என் மனம் உன் முன்னால் பதறி நடுங்குகிறது. எனக்குள்ளேயே ஏதோ நெருப்பு மூண்டது போல் பற்றி எரிகிறது. நீ சொல்லியது உண்மை தான். எப்படி வாழக்கூடாதோ அப்படி நான் வாழ்ந்து விட்டேன். இப்படி வாழ்ந்து விட்டதைப் பாராட்ட முடியா விட்டாலும் மன்னிக்க முடியும் என்று நீ சொல்கிறாய். ஆனால் உன்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ள எனக்குத் துணியவில்லை. நான் மன்னிப்பதற்குக் கூடத் தகுதியற்றவன். நீ என்மேல் அநுதாபம் செலுத்துவது உண்மையானால் எனக்கு ஒர் உதவி செய். இந்த உதவியைத் தவிர வேறு எதையும் இனிமேல் நீ எனக்குச் செய்ய முடியாது.”

சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?”

பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். என்னுடைய செல்வமும், பீடும் போய்விட்டால் இந்தப் பெரிய நகரத்தில் அரசனிலிருந்து ஆண்டி வரை என்னை யாரும் மதிக்கமாட்டார்கள். ஏனென்றால் செல்வம் ஒன்றைத் தவிர என்னை மதிப்பதற்குரிய வேறு நிலையான காரணங்களை நான் பெறவில்லை. இந்தச் செல்வங்கள் என்னை விட்டுப் போகும்போது நானும் உலகத்தை விட்டுப் போய்விட வேண்டும். இனிமேல் நான் வாழக்கூடாது. நல்ல நண்பர்களும், நல்ல குணங்களும் இருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் கெட்டுப் போயிருக்க மாட்டேன். இவ்வளவு பாவங்களுக்கு அதிபதியாகவும் ஆகியிருக்க மாட்டேன். பூர்வ புண்ணியம் உள்ளவர்களுக்குத் தான் நல்ல குணங்களும் நல்ல நண்பர்களும் வாய்ப்பார்கள் போல் இருக்கிறது. எனக்கு அவையெல்லாம் கொடுத்து வைக்கவில்லை. நான் பிறவியிலேயே கெட்டவன். உன் தாயின் அழகை அடைய முடியாமல் ஏமாற்றம் அடைந்த போது அந்தச் சிறிய ஏமாற்றத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள இயலாமல் மேலும் கெட்டவனாக மாறினேன். சுற்றியிருந்தவர்கள் என்னைக் கொடிய வழியிலேயே தூண்டி விட்டு விட்டார்கள். இனி நான் மாற முடியாது. ஆனால் சாக முடியும்.

என்னைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழிவாங்க வேண்டிய நீயோ என் முன்னால் வந்து சிரித்துக் கொண்டு நிற்கிறாய். என் மேல் கூட அநுதாபப்படுவதாகச் சொல்கிறாய். என்னுடைய இந்தச் செல்வங்கள் உனக்குப் பெரியவையாகத் தோன்றவில்லை. நீ உன் மனத்தையே செல்வமாக வளர்த்துக் கொண்டிருக்கிறாய். இருப்பினும் நீ ஒன்று செய்ய வேண்டும். என்னைக் கொன்றுவிட்டு இந்தச் செல்வங்களையெல்லாம், உனக்குரியவையாக்கிக் கொண்டு நீ வாழவேண்டும். நானே என்னைக் கொன்று கொள்ள முடியும். ஆனால் அதற்கும் எனக்கு உறுதியான மனம் வாய்க்கவில்லை. உன்னுடைய பரிசுத்தமான கண்பார்வை, சத்தியமான சொற்கள், எதிரியையும் வசப்படுத்திவிடும் புன்னகை இவற்றாலேயே நீ என்னை முக்கால் பகுதி கொன்று விட்டாய். மீதமிருக்கும் கால் பகுதியையும் உன் கைகளாலேயே நீ அழித்துவிடு! கடைசி வேளையில் நான் மனம் மாறி உனக்குத் தோற்றுப் போக ஆசைப்படுகிறேன். உன்னைப் போன்று தூய்மையான மனம் உள்ளவன் என்னை வெற்றி கொள்ள அநுமதித்து நான் தோற்பதனால், வருகிற பிறவியிலாவது எனக்குப் புண்ணியம் வாய்க்கும். இதோ நீ என்னைக் கொன்று கொள். என்னை வென்றுகொள் என்று கதறிக் கொண்டே பொறியற்ற பாவைபோல் தளர்ந்து அவனுக்கு முன் முழந்தாள்களை மண்டியிட்டுக் கொண்டு அமர்ந்தார் அவர்.

அவருடைய சொற்களைக் கேட்டு இளங்குமரன் கைகட்டி நின்று கொண்டு நகைத்தான். அவர் நிலையைக் கண்டு பரிதாபமாயிருந்தது அவனுக்கு. இந்த மாறுதலை வியந்து கொண்டே அவருக்கு மறுமொழி கூறினான் அவன்.

ஐயா! பிறரை வென்றுவிட வேண்டும் என்ற ஆசை கூடத் துறவிக்கு இருக்கக்கூடாது. வெற்றிக்கும் ஆசைப் படாத மனம்தான் துறவியின் செல்வம். அந்தச் செல்வம் தோல்வியினாலும் குறையாது. உங்கள் மனத்தில் இவ்வளவு காலமாக இப்படிக் கொடுமை செய்து வாழக் காரணமாக நின்ற பலம் எது என்று பரிசோதனை செய்து பார்க்க மட்டும் தான் நான் விரும்பினேன். உங்களை வெல்லவும், கொல்லவும் நான் விரும்பவில்லை. வெற்றியைக்கூட என்னால் விட்டுக் கொடுக்க முடியும். அப்படிப் பலமுறை என் வாழ்வில் நேர்ந்திருக்கிறது.

முகுந்தபட்டர் என்ற ஞானி எனக்கு அறிவில் தோற்றுப் போக ஆசைப்பட்டார். உங்கள் மகள் சுரமஞ்சரியும், வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லையும் எனக்குக் காதலில் தோற்றுப்போக ஆசைப்பட்டார்கள். இன்று நீங்கள் எனது சொற்களுக்குத் தோற்றுப் போய்விட்டதாகச் சொல்கிறீர்கள். இப்படித் தற்செயலாக நேரும் தோல்வி களை அங்கீகரித்துக் கொள்வதே வெற்றியாகி விடுமோ என்று வெற்றி அகங்காரத்திற்குப் பயந்து கொண்டிருக்கிறேன் நான். எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு வேண்டுமல்லவா? யாரை அதிகமாக வெறுக்க வேண்டுமோ அவர்கள் மேல் கூட அன்பு செய்யத் துணிந்து விட வேண்டும். அந்த நிலைதான் கருணையின் இறுதி எல்லை. உங்கள் பாவங்களை நீங்களே உணர்கிறீர்கள். அந்த உணர்ச்சி மாறுதலை வாழ்த்துகிறேன். அவ்வளவு போதும் எனக்கு. நான் வருகிறேன் என்று அவரை வாழ்த்திவிட்டு மாபெரும் தியாகியாய் அவன் அங்கிருந்து வெளியேற முற்பட்டான். ஆனால் அவன் அந்தக் கூடத்திலிருந்து வெளியேறி மாளிகையின் பிரதான வாயிலைக் கடப்பதற்குள் கண்ணிரும் கம்பலையுமாய்ச் சுரமஞ்சரி ஓடிவந்து அவனுடைய வழியை மறித்துக் கொண்டுவிட்டாள்.

-------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.11. பரிவு பெருகியது

 

கார்காலத்து மலைச் சிகரத்தின் இரு புறமும் மேகங்கள் படிந்தாற் போல் சுரமஞ்சரியின் நெற்றியின் மேல் இரு புறமும் சுருண்டு குழன்று சரிந்திருந்த கருங்கூந்தல் கவர்ச்சி மிகுந்த அவள் முகத்துக்குச் சோகமயமானதோர் அழகைத் தந்து கொண்டிருந்தது. ஊற்றுக் கண்களைப் போல் அவளுடைய விழிகளில் நீர் பெருகிற்று. பட்டின் மென்மையும் பவழத்தின் செம்மையும் பொருந்திய அவள் இதழ்கள் அப்போது அவனிடம் பேசுவதற்குச் சொற்களைத் தேடித் துடிப்பது போல் துடித்துக் கொண்டிருந்தன. நிலாவிலிருந்து தளிர்த்த தளிர்கள் போல் மென்மையாகவும் பொன்னிற் கொழுந்து முளைத்தாற் போல் கவரும் நிறமுடையனவாகவும் இருந்த அவள் கைவிரல்கள் வணங்குகிற பாவனையில் அவனை நோக்கிக் குவிந்தன. அந்த ஆற்றாமையை, அந்தத் தவிப்பைக் கண்டும் காணாதது போல எப்படிக் கடந்து மேலே தன் வழியில் போவதென்று புரியாமல் இளங்குமரன் தயங்கி நின்றான். உலகத்திலுள்ள பரிசுத்தமான பூக்கள் எல்லாம் எதிரே வந்து நிற்கும் அவளுடைய உடம்பிலிருந்து மணப்பது போல் ஒரு நறுமணம் சூழ்ந்து கொண்டு கிளர்வதை இளங்குமரன் உணர்ந்தான். அந்தப் பரிமள நறுமணம் வலையைப் போல் தன்னைப் பிணித்து விட முயன்ற வேளைகளை ஒவ்வொன்றாய் நினைத்துக் கொண்டு நன்றாகத் தலை நிமிர்ந்து நிர்ப்பயமாக அவள் கண்களைச் சந்தித்தான். பின்பு வேண்டினான்.

என்னுடைய வழியை எனக்கு விடு.”

விட்டுவிடுகிறேன். ஆனால் அப்படி விடுவதற்குமுன் எனக்கு உங்களிடமிருந்து ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வழியில் நானும் உங்களோடு சேர்ந்து நடந்து வர அனுமதி அளியுங்கள். அதற்கு மனம் இல்லா விட்டால் இதே வழியில் விழுந்து சாவதற்காவது ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி இந்த வழியில் விழுந்து இறந்து போனால் அடுத்த பிறவியிலாவது நீங்கள் நடந்து போகிற பாதையில் புல்லாக முளைத்து உங்கள் பாதங்களில் மிதிபடுவேன். இல்லை இல்லை. புல்லாக முளைத்தாலும் யாராவது வேரோடு பறித்து எறிந்து விடுவார்கள். கல்லாகவே கிடந்து உங்கள் கால்களில் மிதிபட வேண்டும் நான். உங்கள் கால்கள் என்மீது மிதிபடுகிற ஒவ்வொரு முறையும் அகலிகை மேல் இராமன் திருவடி பட்டதும் நிகழ்ந்தது போல் எனக்கு உயிர் வரவேண்டும். உங்கள் பாதங்கள் என்மேல் படாத நேரங்களில் மறுபடி நான் உயிரற்ற கல்லாகிவிட வேண்டும்.”

உன் ஆசை விநோதமானதாயிருக்கிறது. சாவதைவிட உயர்ந்த இலட்சியம் ஏதாவது உன் வாழ்க்கையில் உனக்கு இருக்க வேண்டும்.”

அப்படி ஓர் இலட்சியம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அந்த இலட்சியத்திற்குப் பொருளானவருக்கு என்னைக் காண்பதற்கே அலட்சியமாயிருக்கும் போது நான் வாழ்ந்துதான் என் பயன்? உலகத்திற்கெல்லாம் அநுதாப மழை பொழிகிற அந்தக் கருணை முகில் என்னுடைய விருப்பத்திற்கு மட்டும் வறண்டு போகக் காரணமென்னவென்று புரியாமல் தவிக்கிறேன் நான்.”

உனக்குப் புரியாமல் நீ தவிப்பதற்கெல்லாம் நான் எப்படி மறுமொழி கூற முடியும்?”

இந்தத் தவிப்பு உங்களிடமிருந்து பிறந்தது. உங்களோடு இணைந்து நிறைந்து விடக் காத்திருப்பது. உங்களுடைய புறக்கணிப்புக்கு அப்பால் சாவைத் தவிர இந்தத் தவிப்புக்கு வேறு மருந்தில்லை.”

நான் யாரையும் புறக்கணிக்கவில்லை! என் வழியில் தடையாக நிற்க வேண்டாமென்று மட்டும் சொல்கிறேன்.”

அவனோடு மேலே பேசுவதற்குச் சொற்கள் கிடைக்காமல் கண்ணிர் பெருகும் விழிகளோடும் வணங்குவதற்காகக் கூப்பிய கைகளோடும் நின்றாள் சுரமஞ்சரி. எதிரே போவதற்கு முந்திக்கொண்டு நிற்கிற அவனுடைய கண்களையும் தோள்களையும் பார்த்து இத்தனை கால மாக அவற்றை எண்ணி அவற்றுக்காகவே தவம் செய்து வந்த தன் மனத்தின் நம்பிக்கைகள் தளரப் பெரு மூச்செறிந்தாள். கப்பல் கரப்புத் தீவில் இருண்ட மழை நாள் ஒன்றில் இந்தக் காவிய நாயகனின் பொன்நிறத் தோள்கள் மீது தலைசாய்த்து உறங்க முயன்ற வேளை நினைவு வந்தது அவளுக்கு. அந்த விநாடியை வாழ்த்திக் கொண்டுதான் இத்தனை காலமாக அவள் வாழ்ந்திருக்கிறாள்.

ஒவ்வொன்றாய்த் தளர்ந்து கொண்டிருந்த தன் நம்பிக்கைகளை விட்டு விடாமல் இளங்குமரனுடைய பாதங்களுக்கு முன் பூமாலை சரிவதுபோல் முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு அவள் பேசலானாள்:

இப்போது இந்த உணர்ச்சிமயமான வேளையில் உங்கள் பாதங்களில் இடுவதற்கு வேறு பூக்கள் என்னிடம் இல்லை. என் உயிரையே பூவாகக் கருதிக் கொண்டு உங்கள் பாதங்களில் அர்ப்பணம் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்களோடு இணைந்துவிடும் ஒரே இலட்சியத்திறக்காகத்தான் இந்த உயிரும் இதன் நினைவுகளும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. உங்களோடு இணைவதற்கு முடியாத உயிர் வாழ்க்கை எனக்கு இனி வேண்டியதில்லை. என்னுடைய இந்த உயிரைப் போக்கிக் கொள்ளுமுன் மனத்தில் இந்தக் கணத்தில் தவிக்கிற தவிப்பு ஒன்றை உங்களிடம் வெளிப் படையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டும்.”

அவளுடைய தவிப்பு, கண்ணிர், வேதனை எல்லாவற்றையும் கண்டு தயங்கி நின்றான் இளங்குமரன். முதல் முதலாக இந்தப் பெண்ணிடமிருந்து ஓவியன் மணி மார்பன் மடல் கொண்டு வந்தபோதும், கப்பல் கரப்புத் தீவில் நெகிழ்ந்த உணர்ச்சிகளோடு இவள் நெருங்கி நின்ற போதும் தன் மனத்தில் தாழம்பூ மணம் பரப்பிய வேளைகளை நினைத்துக் கொண்டான். தன்னையே அந்தப் பெண்ணுக்கு ஆளக் கொடுப்பதைத் தவிர வேறு எந்த மருந்தினாலும் தணிக்க முடியாத அவள் வேதனையைக் கண்டு அவன் மனமும் அனுதாபப்பட்டது. ஆனால் இத்தனை காலம் வளர்த்த மனத்தை ஒரு பெண்ணின் அழகுக்கு விட்டுக் கொடுப்பதா என்று ஒர் எண்ணம் தயங்கியது. தடுத்தது. அவனுள்ளே இப்படி இந்த மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அவள் அவனைக் கேட்டாள்:

உங்களைச் சந்தித்த நாளிலிருந்து, நான் உங்களுக்காகச் சிறிது சிறிதாகத் தோற்றுப்போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?”

இருக்கலாம். ஆனால் உன்னை வெற்றிகொள்ள முயன்றதாகவோ வென்றதாகவோ எனக்கு நினைவில்லையே!”

இது ஒரு விசித்திரமான தோல்வி! இந்தத் தோல்வியை எப்படி நிரூபிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. நான் பெண், பேதைத் தன்மை நீங்காதவள். அநுதாபத் திற்குரியவள். பிறர்மேல் அநுதாபப்படும் மனம்தான் பெரிய செல்வம் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நாளங்காடிக் கூட்டத்தில் அந்தத் தொழுநோய் முதிய வளைக் காப்பாற்றும் போது நீங்களே கூறினர்களே, அந்த விதமான அநுதாபத்திற்கு நான் மட்டும் பாத்திரமாக முடியாதவளா? நானும் ஒரு நோயாளிதான். எனக்கு வந்திருக்கிற நோய்க்குப் பெயர் ஆசை, வேட்கை, காதல் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நோய்க்கு மருந்தாவதற்குக் கூசிக்கொண்டு நீங்கள் மேலே நடந்து போகத்தான் விரும்புகிறீர் களானால், உங்களைத் தடுக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் இந்தக் கடைசி விநாடியிலும் நான் துணிவாக இன்னொரு காரியம் செய்ய முடியும். வேறொரு விதத்தில் முயன்று உங்கள் அநுதாபத்திற்கு நானும் பாத்திரம்தான் என்பதை நிரூபிக்க முடியும்!”

அது எப்படியோ?”

சொல்கிறேன், உலகத்தில் மிகவும் துன்பமான முயற்சி நம்மிடம் அன்பு செலுத்தாதவர் மேல் நாம் உயிரையே வைத்து அன்பு செய்து தவிப்பதுதான். நீங்கள் அந்தக் கூடத்தில் என் தந்தையோடு பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் கதவோரமாக ஒதுங்கி நின்று நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். இறுதியாக நீங்கள் அவரிடம் சொல்லிய வார்த்தைகளை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள் மேல்கூட அன்பு செய்யத் துணிய வேண்டும். அதுதான் கருணையின் இறுதி எல்லை என்று கூறினர்களா, இல்லையா?”

கூறினேன். ஆனால் உன்னை நான் வெறுக்கவும் இல்லை; விரும்பவும் இல்லை. உன்னைப் போல் பேரழகு வாய்ந்த பெண்கள் இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள். இந்த அழகிலும் நான் உன் பெருமையைக் காணவில்லை. உன்னைப் படைத்த கடவுளின் பெருந்தன்மையைத் தான் காண்கிறேன். ஒரே உடம்பில் இவ்வளவு அழகையும் நிறைத்து அனுப்பியவனுடைய பெருந்தன்மை சிறந்தது தான். இந்த அழகை உன் செல்வமாகக் கருதி இதற்காக நான் என்னை இழந்துவிட வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது பேராசையல்லவா?”

பேராசையாகவே இருக்கட்டும்! நான்தான் பேதைப் பெண். கல்வியின் பலமோ, தத்துவங்களால் தெளிந்த மனமோ, வைராக்கியங்களோ இல்லாதவள். நீங்கள் ஞான வீரர். வெற்றிக்குக் கூட ஆசைப்படாதவர். வெற்றியைக் கூட விட்டுக் கொடுக்கவும், தோல்வியைச் சிரித்த முகத்தோடு அங்கீகரித்துக் கொள்ளவும் முடியுமென்று பெருமைப் படுகிறவர். அப்படி இருந்தும் எனக்காக விட்டுக் கொடுப்பதற்கு மட்டும் உங்கள் மனம் துணியத் தயங்குகிறது. இந்த உலகத்தில் சுரமஞ்சிரயைத் தவிர எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்த உங்களால் முடியும். அப்படித் தானே? உங்களைப் போல் அன்பு செலுத்துவதில் கூட பட்சதாபம் வைத்துக் கொண்டிருக்கிறவரை நான் எப்படித் துறவியாக ஏற்றுக் கொள்ள முடியும்?”

இதைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான்.

நீ என் வழியை விடமாட்டாய் போலிருக்கிறது. உன் பேச்சு முடிவில்லாத வாதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதழ்கள் துடிக்க, கண்கள் கலங்கிப் பெருக நீ வந்து நிற்கிற கோலத்தைப் பார்த்தாலும் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. உன் வழியும் உனக்குக் கிடைக்காமல், என் வழியும் எனக்குக் கிடைக்காமல், இரண்டு பேரும் இப்படி ஒருவருடைய வழியை மற்றொருவர் மறித்துக்கொண்டு எவ்வளவு நேரம் தவிக்க முடியும்? இந்தத் தவிப்புக்கு முடிவு இருவருக்குமே தெரிய வேண்டும். அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது பெண்ணே! நீ எதைக் கேட்க வந்தாயோ. அதையே பொருளாகக் கொண்டு என்னிடம் வாதத்தைத் தொடங்கு. பல்லூழி காலத்துக்கு முன்பு ஆயிரம் பிரம்ம ஞானிகள் கூடியிருந்த பெருஞ்சபையில் ஞானமலையாகிய யாக்ஞவல்கியரைத் தன்னோடு பிரம்ம வாதம் புரிய முன்வருமாறு கார்க்கி என்ற பெண்மணி தனியாய் நின்று அழைத்திருக்கிறாள். அப்படி நீயும் என்னை அழைக்க முடியும்.”

 

ஐயா! நீங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்கள் போலும். வெறுங்கையோடு வந்திருக்கிற எதிரியை வாட் போருக்கு வா என்றழைப்பது போலிருக்கிறது உங்கள் செயல். மைத்திரேயி, கார்க்கி போன்ற வேத காலத்துப் பெண்கள் எங்கே? பேதைத் தன்மையைத் தவிர வேறொன்றும் தெரியாத நான் எங்கே? எனக்கு அவ்வளவு அறிவு வலிமை இருந்தால் உங்கள் மேல் வைத்த மனத்தை மீட்டுக் கொண்டு நான் துறவியாகப் போய்விட முடியும். ஆனால் இப்போதுள்ள நிலையில் நான் பெரும் பேதை. உங்களை அடைய முடியாவிட்டால் சாவதைத் தவிர வேறெதுவும் நோக்கமில்லாதவள்.”

பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதிமட்டும் நல்லதாக இருக்க வேண்டும்.”

எதை வெற்றி பெற முடியுமென்கிறீர்கள்.”

எதை விரும்புகிறார்களோ அதைத்தான். விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி ஏதும் பேதைகளுக்கு இருக்க முடியாது.”

அப்படியானால் உங்கள் மேல் ஆசைப்படுவதைத் தவிர வேறெதையும் கற்காத பேதையான என்னோடு வாதிடவும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?”

மறுக்கவில்லை.”

ஒருவரிடம் கைகூப்பி ஒரு பொருளை ஈயென இரத்தல் இழிந்தது தானே?”

ஆமாம்! இழிந்ததுதான்.”

இரப்பவருக்கு ஈயமாட்டேனென்று மறுப்பது?”

அதைவிட இழிந்தது.”

இழிந்த செயலைச் செய்ய விரும்புவது உயர்ந்த மனிதர்களுக்குத் தகுமா?”

தகாது! தகாது!”

அப்படியானால் நான் கேட்கும் ஒன்றை நீங்கள் எனக்கு ஈந்தருள வேண்டும்.”

நான் துறவி. என்னிடம் ஈவதற்கு ஒன்றுமில்லை. நானே கொடுப்பவர்களைத் தேடிக் கொண்டிருப்பவன்.”

பொய்! இது பெரிய பொய்! முதன் முதலாக உங்களை மற்போரில் வென்ற வீரராகப் பூம்புகார் கடற்கரையில் சந்தித்தபோது நான் கொடுக்கிறவளாக இருந்தேன். நீங்கள் நான் கொடுத்ததை வாங்கிக் கொள்ள மறுக்கும் அளவு மானத்தின் எல்லையில் போய் நின்று கொண்டு என் பரிசைப் புறக்கணித்தீர்கள். இப்போது நான் உங்களிடமிருந்து பிச்சை கேட்கிறவளாக இருக்கிறேன். கேட்கிற பிச்சையும் அன்புப் பிச்சை. கொடுக்க முடிந்த பிச்சையைத் தான் மண்டியிட்டுப் பணிந்து கேட்கிறேன். இந்தப் பிச்சையையும் கொடுக்க முடியாதென நீங்கள் மறுக்கிறீர்கள். நான் கொடுக்க முடிந்தவளாக இருந்த காலத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள மறுத்தீர்கள். நான் கையேந்திப் பிச்சை கேட்டுக் கொண்டு நிற்கிற காலத்தில் நீங்கள் கொடுக்க மறுக்கிறீர்கள். நிறைந்த மனமுடையவர்களுக்குக் கொடுக்க மறுப்பதும் இழிவு அல்லவா!”

ஒன்றுமே இல்லாதவன் எதைக் கொடுக்க முடியும் பெண்ணே?”

பொய் சொல்லாதீர்கள். நீங்கள் கொடுக்க முடிந்தவர். கொடுப்பதற்கு உங்களிடம் வள்ளன்மை இருக்கிறது.”

இருந்தால் கேள். அப்படி இருப்பது எதுவானாலும் தருகிறேன் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போதே தான் மெல்ல மெல்ல அவளுக்குத் தோற்றுக் கொண்டிருப்பது போன்ற தளர்ச்சியை இளங்குமரன் அடைந்து விட்டான். அந்தப் பெண்ணின் தந்திரமான கேள்விக்கு முன்னால் தான் பேதையாகிவிட்டாற் போலவும், அவள் தன்னை வீழ்த்தும் புத்திக் கூர்மையைப் படிப்படியாகப் பெற்று விட்டாற் போலவும் உணர்ந்து சோர்ந்தான் அவன்.

அதுவரை அழுது கொண்டிருந்த சுரமஞ்சரி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள். அவள் கண்களில் நளினமான உணர்வுகள் பிறந்தன. அவனுடைய மனத்தின் தளர்ச்சி அவளுக்குப் புரிந்தது.

-----------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.12. காவிய நாயகன்

 

அந்த நேரம் தன் வாழ்க்கையில் தனக்கு நல்வினைப் பயன் விளைய வேண்டிய மங்கல வேளையாக இருந்ததனாலோ பூர்வ புண்ணிய வசத்தினாலோ சுரமஞ்சரியின் நாவில் புத்தியும் யுக்தியும் கலந்து திறமை வாய்ந்த சொற்களாகவும், கேள்விகளாகவும் இளங்குமரனை நோக்கிப் பிறந்தன. தன் காதலை இன்னும் அதிக உரிமையோடு நிலைநாட்ட வேண்டும் என்ற துணிவு அவனுடைய சோர்விலிருந்து அவளுக்குக் கிடைத்தது. ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும் - என்று சற்று முன் அவனே தன்னிடம் கூறிய சொற்களை நினைத்துக் கொண்டாள் அவள். அந்தச் சொற்களை நினைவு கூர்வதன் மூலம் அவனைத் தானும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்குக் கிடைத்தது. தன்னுடைய விதி நன்றாகத்தான் இருக்கிறது என்றாற் போல் அப்போது அவள் மனத்தில் ஒரு துணிவும் தோன்றியது. அந்தத் துணிவோடு அவள் அவனை நோக்கிப் பேசினாள்.

 

நான் கேட்பது எதுவாயிருந்தாலும் அது உங்களிடம் உள்ளதானால் தருவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்!”

ஆம்! தருவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன். கேட்டுப் பெற்றுக்கொள்.”

உங்களையே எனக்குத் தந்துவிடுங்கள்! இந்த அழகிய உடம்பை நான் ஆள்வதற்கு அளியுங்கள். கண்டு நிறைவடைய முடியாத நயங்கள் பிறக்கும் இந்தக் கண்கள், மெளனமாய் எந்நேரமும் முறுவல் பூத்துக்கொண்டே யிருக்கும் இந்த இதழ்கள், அழகு செழித்து நிமிர்ந்த பரந்த இந்தச் சுந்தரமணித் தோள்கள்- இவையெல்லாம் எனக்கு உரிமையாக வேண்டும். கொடுப்பதற்கு அவசியம் நேரும்போது உயிர் உடம்பு மனம் முதலிவற்றையும் கூடக் கொடுத்து விடுவது தான் கொடையின் உயர்ந்த இலட்சணம் என்பார்கள். கொடுக்க முடிந்தவராக இருந்து கொண்டே கொடைக்கு மறுப்பது உங்களைப் போன்றவருக்கே அழகில்லை என்று கூறியவாறே தாமரை மலர்களை இடுவதுபோல் தன் கைகளை அவனுடைய பாதங்களில் இட்டு மேலே நடந்து போவதற்கிருந்த அந்தத் தங்க நிறத் தாள்களைத் தடுத்து நிறுத்தும் தடையானாள் சுரமஞ்சரி. சில்லென்று பூவிழுந்தாற்போல, தன் பாதங்களைப் பற்றிக் குளிர்ந்த உணர்வைப் பாய்ச்சும் அந்தக் கைகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தோன்றாமல் திகைத்து நின்றான் இளங்குமரன்.

மிகுந்த பசியினாலும் மனத்தின் பரிபூரணமான பாவனைகளாலும் நடந்து போவதே காற்றில் மிதப்பது போல் கனமற்றிருந்த அந்த வேளையில் சுரமஞ்சரியின் வேண்டுகோளைத் தடுக்கவும் முடியாமல், அங்கீகரித்துக் கொள்ளவும் முடியாமல் தயங்கி நின்றான் அவன். எப்படியெப்படி எல்லாமோ வளர்த்த மனத்தையும், பிடிவாதங்களையும் இப்படி இந்தப் பெண்ணின் தந்திரமான வாதத்தில் தோற்று விட்டதை நினைத்த போது அவனுள் அழுகை பொங்கியது. இவ்வளவு காலம் தன் வைராக்கியத்துக்குத் துணை நின்ற விதி இன்று தன்னைக் கைவிடப் போவதை எண்ணி வேதனை கொண்டான் அவன். எந்தவிதத்தினாலும் தன்னை வெற்றி கொள்ளத் தகுதியில்லாத ஓர் எதிரிக்குத் தான் தோற்றுப் போய்விட்டதாக அவன் மனம் தவித்தது. தனக்குத்தானே நினைப்பும் துணையுமின்றித் தனியாய் அமைந்தது.

எல்லாப் பற்றுக்களையும் களைந்துவிட்டுத் தன் வழியில் விரைந்து நடக்கும்போது இன்று இந்த வேளை யில் தன்னுடைய பாதங்களைச் சுற்றி வளைக்கும் பூங்கரங்களின் பற்றில் இருந்து மீள முடியாத விதத்தில் தான் சிறைப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான் அவன். தோல்வியின் தளர்ச்சியால் கலங்கும் மனத்தோடு மேலே இளங்குமரன் நிமிர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்தான். ‘நான் முற்றிலும் இருண்டு விடவில்லை என்பது போல நட்சத்திரங்கள் அங்குமிங்குமாக மின்னிக் கொண்டிருந்தன. அந்த வானத்தில் தோன்றும் மேகங்கள் மறுபயன் கருதாமல் உலகத்துக்கு மழையைக் கொடுத்துக் கொண்டிருப்பது அவனுக்கு நினைவு வந்தது. அதே வானில் பயன் கருதாமல் சூரிய சந்திரர்கள் மாறி மாறி ஒளியைப் கொடுப்பதும், வேற்றுமை ஏற்றத் தாழ்வுகளை பாராமல் காற்று வீசுவதும் ஆகிய உலகின் நிரந்தரமான தியாகங்களை நினைவு கூர்ந்தான் இளங்குமரன். ‘இவளுக்கு என் மன்த்தையும் உடலையும் நான் தோற்பதா?’ என்று உள்ளே கலங்கும் கருத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவளுக்குத் தோற்றுப் போகவும் துணிந்தான் அவன். உயர்ந்த கொடையாளியின் பரந்த மனப்பக்குவத்தோடு அவள் கேட்டதற்கு மறுப்பின்றித் தன்னைக் கொடுத்து விடவும் குழைந்தது அவன் கருத்து. தன் உடம்பையும், மனத்தையும் கூடக் கேட்கிறவளுக்கு மறுக்காமல் தியாகம் செய்துவிடத் துணிந்தான் அவன். ‘உடம்பும் மனமும் தூய்மையாய் நிறைந்த செல்வங்கள், அவற்றை யாருக்காகவும் இழக்கக் கூடாது என்று தன் வாழ்வில் கடைசியாகத் தான் சேர்க்க ஆசைப்பட்ட செல்வங்களையும்கூட அவளிடம் அவன் தோற்றுப் போய்க் கொடுத்துவிட இசைந்து விட்டான். இந்த முடிவுக்கு வந்த பின் நிர்மலமான உள்ளத்தோடும் எதை இழக்கிறானோ அதை இழக்கிற துன்பமும்கூடத் தெரியாத சிரித்த முகத்தோடும் கீழே குனிந்து சுரமஞ்சரியைப் பார்த்தான் இளங்குமரன். அவள் அவன் காலடியில் பூவாக விழுந்து கிடந்தாள். பூமாலையை எடுப்பது போல் முதன் முதலாக அவளைத் தன் கைகளால் தொட்டுத் தூக்கி நிறுத்தினான். அப்படி அவனுடைய கைகள் தன்னைத் தீண்டியபோது சுரமஞ்சரி இந்த உலகத்தில் தன்னைப் போல் பாக்கியசாலி வேறு யாருமே இல்லை என்று எண்ணிப் பெரு மிதப்பட்டாள். மேலேயிருந்து யாரோ பணிபுலராத பூக்களை மலை மலையாக அள்ளித் தன்மேல் சொரிவது போல் அவள் உடல் சிலிர்த்தது. அந்த விநாடிகள் முடிவு பெறாமல் நித்தியமாகி அப்படியே பல யுகங்களாகத் தொடர்ந்து வளரலாகாதா என்ற தாபத்தோடு, கண்களில் மகிழ்ச்சி மலர அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் அவளிடம் பேசினான்.

உன்னுடைய வார்த்தைகளுக்கு நான் தோற்றுப் போய்விட்டேன். என்னுடைய தோல்வியை நானே ஒப்புக் கொள்கிறேன்.”

இல்லை! இல்லை! அப்படிச் சொல்லாதீர்கள், நான்தான் தொடக்கத்திலிருந்து உங்களுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருகிறேன். என்னுடைய தோல்வி நேற்று வரை அங்கீகரிக்கப் படவில்லை. அது யாரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அவரால் இன்று அங்கீகரிக்கப்பட்டு விட்டது அவ்வளவுதான். இதை என் வெற்றி யாகக் கூறினீர்களானால்பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும் என்று நீங்களே சிறிது நேரத்துக்கு முன் சொன்னாற் போல என் விதி நன்றாக இருந்தது என்பதற்கு மேல் நான் பெருமைப்பட இதில் எனது முயற்சி வேறு ஒன்றுமில்லை.”

உன் விதி உனக்கு நன்றாயிருந்த வேளையில் என் விதி என்னைக் கைவிட்டு விட்டது. சுரமஞ்சரி! நீ இந்த வெற்றியை நன்றாகத் கொண்டாடலாம். ஏனென்றால் இந்த நகரத்தில் நாளங்காடி ஞான வீதியில் கூடிய பல நூறு தத்துவ ஞானிகளுக்கும், சமயவாதிகளுக்கும் கூட அவர்களுடைய அறிவின் பலத்தால் அடைய முடியாமற் போன வெற்றி இது. நீ உன்னுடைய உணர்ச்சிகளின் பலத்தாலேயே இந்த வெற்றியை என்னிடம் அடைந்து விட்டாய். ஆனால் இப்படி இப்போது உன்னுடைய வார்த்தைகளுக்குத் தோற்றவனின் மனத்தில் பெருகும் பரிதாபத்தை மட்டும் அளக்கவே முடியாது...”

இன்று எந்த வார்த்தைகளால் உங்களை நான் வென்றதாகச் சொல்கிறீர்களோ அவை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த வார்த்தைகள்தாமே ? நம்முடைய முதல் சந்திப்பின்போது கடற்கரையில் நான் உங்களுக்கு மணி மாலை பரிசளிக்க முன்வந்த சமயத்தில், கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது. கொள்ளமாட்டேன் என மறுப்பது அதைவிட உயர்ந்தது என்று அன்றைக்கு நீங்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளைத் தான் இன்றைக்கு நான் உங்களிடம் பேசினேன். அன்று நீங்கள் என்னை வென்று விடக் காரணமாயிருந்த அதே வார்த்தைகள் இன்று நான் உங்களை வெற்றி கொள்ளக் காரணமாயிருந்தனவோ என்னவோ? எப்படியிருந்தாலும் வெற்றி உங்களுடைய வார்த்தைகளுக்குத்தானே?”

வார்த்தைகள் பூக்களைப் போன்றவை. யார் நன்றாகத் தொடுத்தாலும் அவை அழகாயிருக்கும். வென்றவர்கள் பெருமைப்படவும் தோற்றவர்கள் துயரப் படவும் ஒரே விதமான வார்த்தைகளே காரணமாயிருக்குமானால் என்ன செய்யலாம்?”

வென்றவர் தோற்றவர் என்ற பிரிவே நமக்குள் இங்கு இல்லை அன்பரே! இந்தத் தோல்வியிலும் நீங்கள் தான் என்னை வென்றிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்வில் கடைசி விநாடி வரை உங்களுக்குத் தோற்றுக் கொண்டிருப்பதைவிட வேறெந்தப் பெருமையும் எனக்கு வேண்டாம். தலைமுறை தலைமுறையாகப் பெண்கள் அன்பினால் பிறருக்குத் தோற்றுப் போவதைத்தான் பாக்கியமாகக் கருதி வந்திருக்கிறார்கள். ஆண்களின் வாழ்வில் வேண்டுமானால் வெற்றியடையவதனால் பெருமை இருக்கலாம். பெண்ணின் வாழ்க்கையில் அன்புக்காகத் தோற்றுக் கொண்டேயிருப்பதை விடப் பெரிய நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை. வாழ்க்கை முழுவதும் துணையாக்கிக் கொண்டு நடப்பதற்காக வளைகள் குலுங்கும் கையால் நாங்கள் எந்த ஆண்மகனின் கையைப் பற்றுகிறோமோ அந்த விநாடியிலிருந்து எங்கள் மனம் அவனுக்கு மட்டும் தோற்றுப் போவதில் சுகம் காணத் தொடங்கி விடுகிறது. மலையிலிருந்து கீழே இறங்கும் அருவி அப்படித் தாழ்ந்து கீழே வீழ்வதனாலேதான் உல்லாசமடைகிறது. செடிகளில் அழகும் மணமும் நிறைந்த பூக்கள் சூடிக் கொள்வோர் காலடியில் உதிர்வதற்காகவே பூக்கின்றன. உதிர்ந்த பூ திரும்பவும் கிளைக்குப் போக ஆசைப்பட முடியுமோ? வீழ்ந்த அருவி மறுபடி தான் பிறந்து வந்த இடமான நீல மலைச் சிகரத்துக்கு ஏறிப் போக ஆசைப்பட முடியுமோ? பெண் தன்னை இழந்து விடுவதில்தான் சுகம் பெறுகிறாள் என்று கூறியவாறே தன் வளைக் கரத்தால் அவன் கரத்தைப் பற்றினாள் சுரமஞ்சரி. அவன் அவள் கையைத் தடுக்கவில்லை.

நீ பெற வேண்டிய சுகங்களுக்காக உன் தெய்வத்தை மனமார வணங்கி வேண்டிக்கொள் சுரமஞ்சரி!”

 

நேற்று வரை பல வேறு தெய்வங்களை நான் வணங்கியிருக்கிறேன். இன்று நான் வணங்குவதற்கு வேறு தெய்வங்கள் இல்லை. நீங்கள் ஒருவரே என் தெய்வமாகி விட்டீர்கள்.”

உன்னுடைய தெய்வத்தை நீ எந்த வழியில் நடத்திக் கொண்டு போக வேண்டுமோ அந்த வழியில் நடத்திக் கொண்டு போ!”

கட்டளையே தவறானதாயிருக்கிறதே? தெய்வ மல்லவா தன்னைச் சேர்ந்தவர்களை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்? இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு நினைவு வருகிறது. ஓவியர் மணிமார்பனோடு நீங்கள் இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாள்பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும் என்று தணியாத தன்மான உணர்ச்சியுடனே என்னிடம் பேசினர்கள். அதே மனிதர்தானா இன்று இப்படி என் முன்எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் என்னை நடத்திக் கொண்டு போ என்று கூறுகிறீர்கள். இந்த மாறுதலை என்னால் நம்பவே முடியவில்லையே?”

ஓர் எல்லையின் கடைசிப் புள்ளியில் போய் நிற்பவர்கள் அங்கிருந்து திரும்பி நடந்தால் அதற்கு நேரேயுள்ள எதிர் எல்லைக்குத்தான் நடக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடைசியாக ஏறிப்போய் நிற்கிற எல்லை எதுவோ அதற்கு அப்பால் போவதற்கும் நோக்கமாகக் கூறிக்கொள்வதற்கும் ஒன்றுமே இருப்பதில்லை. என்னுடைய எல்லையிலிருந்து நான் திரும்பி நடக்க வேண்டுமென்று தானே நீ இந்தக் கையால் என்னைப் பற்றி இழுக்கிறாய்?”

அவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சுர மஞ்சரி கண் கலங்கினாள். சில விநாடிகள் ஏதோ வேதனைக்குரிய சிந்தனைகளினால் மனம் வருந்துகிற சாயல் அவள் முகத்தில் தெரிந்தது. பின்பு தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக அவன் கையைப் பற்றியிருந்த தன் வளைக்கரத்தை மெல்ல விடுவித்துக் கொண்டுஇப்படி உள்ளர்த்தம் நிறைந்த வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். உங்கள் வழியில் நீங்கள் விரும்புகிறார் போல என்னை அழைத்துச் செல்லுங்கள். தோற்றவர் களை அழைத்துச் செல்லும் முறையை வென்றவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும் என்றாள்.

அப்படியானால் என்னோடு என் வழியில் புறப்படு.”

இதோ புறப்படுகிறேன் என்று சொல்லியபடியே பெருமாளிகையின் வாயிற்படியருகே போய்த் தன் உடலின் பல பகுதிகளைப் பிணைத்துக் கொண்டிருந்த பொன் சுமைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அந்தப் படியில் குவித்தாள் சுரமஞ்சரி. இறுதியாகக் கால்களின் மாணிக்கச் சிலம்புகளையும் கழற்றி வைத்துவிட்டு அவற்றைப் பற்றிய மனத்தின் ஆசைகளும் அறவே கழன்று போய் அவள் எழுந்து புறப்படுவதற்காக நிமிர்ந்தபோது அவளுடைய முன் நெற்றியில் மேலேயிருந்த கண்ணிர் வெதுவெதுப்பாகச் சிந்திச் சிதறியது.

 

திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி. அவள் அந்த அணிகலன்களையெல்லாம் கழற்றி வைத்த படிக்கு ஒருபடி மேலே அவளுடைய தந்தை கண்கலங்கி நீர் பெருக வந்து நின்றுகொண்டிருந்தார்.

இப்படித் தோற்றுப் போகத் துணிகிற மனம் உன் தந்தைக்கு இல்லையே, சுரமஞ்சரி! உன் தந்தைக்கு இந்தக் குணம் இருந்திருந்தால் தன் வாழ்வில் அவர் தொடக் கத்திலிருந்தே செம்மையாக வாழ்ந்திருக்கலாம் அம்மா...” என்று நாத் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் அவர் அவளை நோக்கிக் கூறியபோது, அவருக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு. தான் அப்போது நின்று கொண்டிருந்த படிக்கு அடுத்த மேற் படியில் ஏறித் தன் தந்தைக்கு ஏதாவது ஆறுதலாய்ச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் என்ன சொல்வதென்று புலப்படவில்லை. அந்தப் பாசத்தையும் மனத்திலிருந்து கழற்றினாள் அவள்.

இன்று அமைதியான இந்த இரவு வேளையில் என் தாயும், சகோதரி வானவல்லியும், தோழி வசந்தமாலையும் நன்றாக உறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது! ‘சுரமஞ்சரி எந்த வழியில் யாருடன் நடந்து போவதற்காக இத்தனை காலம் தவம் செய்து கொண்டிருந்தாளோ அந்த வழியில் அந்தத் துணையோடு இந்த இருளில் புறப்பட்டுப் போய் விட்டாள் என்று எல்லாரிடமும் நாளைக்கு விடிந்ததும் சொல்லி விடுங்கள் அப்பா. மனம் இருந்தால் இப்போது எங்களுக்கு ஆசியும் கூறி அனுப்புங்கள் என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கித் திரும்பிச் சென்று தன்னை வென்றவனுக்கு அருகில் நின்றபடி தன் தந்தையை நோக்கி வணங்கினாள் சுரமஞ்சரி.

ஆசி கூற மனம் இருக்கிறதம்மா! ஆனால் தகுதி இல்லையே?” என்று இளங்குமரனின் பக்கமாகத் திரும்பிக் கைகளைக் கூப்பினார் அவர். அந்த நிலையில் அவரைக் கண்டு இளங்குமரனுக்கும் அநுதாபம் பெருகியது.

பெருமாளிகைத் தோட்டத்திலிருந்து முன் இரவிலேயே மலர்ந்து விட்ட பூக்களின் மணம் பரவத் தொடங்கியிருந்தது. சுரமஞ்சரியைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு அங்கி ருந்து வெளியேறுவதற்காக மெல்ல நடந்தான் இளங்குமரன். இருவரும் மாளிகையின் கடைசி வாயிலையும் கடந்து இருள் உறங்கும் பட்டினப்பாக்கத்துத் தெருவில் இறங்கிச் சென்றபோது, “சுரமஞ்சரி! இன்று மாலை இந்த மாளிகைக்குள் நுழையும்போது நான் துறவியாக நுழைந்தேன். இப்போது ஒரு பெண்ணின் கையையும் நினைவையும் சுமந்து கொண்டு மிகப் பெரிய வாழ்க்கைச் சுமையோடு திரும்புகிறேன் என்று அவளுடைய காதருகே சிரித்துக் கொண்டே சொன்னான் இளங்குமரன். அவன் அந்த வார்த்தைகளைச் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தாலும், அவளுக்கு அவற்றைக் கேட்டு வேதனையாகத்தான் இருந்தது. அவன் தன்னுடைய தோல்வியையே திரும்பத் திரும்ப எண்ணி உருகுவது அவளுக்குப் புரிந்தது.

 

தோற்றுப் போனதற்காக வருந்திக்கொண்டே பேசுவது போல் அடிக்கடி பேசுகிறீர்கள் நீங்கள். இந்த விதமான பேச்சு என்னைப் புண்படுத்துகிறது என்று தன் மனக் குறையைச் சொன்னாள் அவள்.

அந்தச் சொற்கள் இனியும் அப்படிப் பேசவிடாமல் அவன் நாவைக் கட்டுப்படுத்தி அடக்கி விட்டன, மெளன மாக மேலே நடந்தான் அவன். விடுபட்ட பறவைகள் போல அமைதியான அந்த இரவு நேரத்தில் பூம்புகாரின் வீதிகளில் சுற்றினார்கள் அவர்கள்.

நீண்ட நேரத்துக்குப் பின் நடந்து நடந்து களைத்த நிலையில் பெளத்த மடத்துக்கு முன்னாலிருந்த ஒரு மகிழ மரத்தடியில் சுரமஞ்சரியோடு அமர்ந்தான் இளங்குமரன். அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுரமஞ்சரி அங்கே பசிக் களைப்பைக் கண்டாள்.

உங்களுடைய முகத்தில் பசிச் சோர்வு தெரிகிறது! நீங்கள் பல வேளைகளாக உண்ணவில்லை போலிருக்கிறது?”

பல வேளைகளாக அல்ல; பல நாட்களாகவே உண்ணவில்லை. இப்போது தான் என் பசி எனக்குத் தெரிகிறது. நீயும் என்னைப்போலவே பசிச் சோர்வோடு தான் தெரிகிறாய்!”

நம்முடைய இல்லறம் இருவர் வயிற்றிலும் இப்படிப் பசியோடு தொடங்குகிறது. ஆனால் என்னை விட அதிகம் பசித்துப் போயிருக்கிறீர்கள். நீங்கள் என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. அடுத்த கணம் அவளுடைய சிரிப்பை அவன் சொற்கள் அடக்கின. அவளை அந்தச் சொற்களால் பரிசோதனை செய்தான் அவன்.

எந்தவிதமான செல்வங்களும் இல்லாத ஓர் ஏழையைக் காதலிப்பதால் எவ்வளவு வேதனைகள் பார்த்தாயா? என் பசிக்கும் சோறில்லை. உன் பசிக்கும் சோறில்லை. இருவர் பசிக்கும் இருவர் துயரத்துக்கும் இந்த மரத்தடி மண்தான் புகலிடம் போலிருக்கிறது!”

ஏன் இல்லை? கணவனுடைய வயிறு நிரம்புவதை விடப் பெரிய திருப்தி மனைவிக்குக் கிடையாது. இன்று நீங்கள் எனக்குக் கிடைத்த புண்ணிய தினம். இதை நான் கொண்டாட வேண்டும். உங்களுக்கு என் கையால் நான் சோறு படைக்க வேண்டும்! பிச்சை எடுத்து வந்தாவது அதைச் செய்வேன் என்று கூறிக்கொண்டே அவள் ஆவேசத்தோடு அங்கிருந்து எழுந்து சென்றாள்.

சுரமஞ்சரி பெளத்த மடத்துக்கு அருகே யாத்திரிகர்களுக்குச் சோறிடுவதற்காக இருந்த அறக்கோட்டம் ஒன்றில் போய் ஒரு பெரிய வாழை இலை நிறையச் சோறு வாங்கி வந்து இளங்குமரனுக்கு முன்னால் வைத்தாள். தன் கையால் ஒவ்வொரு பிடியாக எடுத்து அந்தச் சோற்றை அவன் கையில் இட்டபோது அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இலையிலிருந்த மீதத்தைத் திரட்டிக் கடைசிப் பிடியை அவள் அவன் கையில் வைத்தபோது அந்தச் சோற்றை அப்படியே கைமறித்து அவள் வாய்க்கு இடுவதற்குக் கொண்டு போனான் இளங்குமரன், சுரமஞ்சரி அவன் கையால் அதை உண்பதற்கு நாணித் தலையைக் குனிந்து கொண்டாள். தன்னிடம் அன்பு செய்வதை விடப் பெருமைப்படத் தக்க செல்வங்கள், உறவுகள், பாசங்கள், வேறெவையுமே இல்லை என்பதை நிரூபித்து விட்ட அந்தப் பேரழகுப் பேதையை மலர்ந்த விழிகளால் நோக்கி அவளை ஏற்றுக் கொண்ட நாயகன் என்ற உரிமையோடு இளங்குமரன் முதல் முறையாகப் பார்த்தான். அந்தப் பார்வையே அப்போது அவளை மணப்பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.

சுரமஞ்சரி! என்னுடைய சோதனைகளில் எல்லாம் நீ வெற்றி பெற்றுவிட்டாய். எல்லாப் பற்றுக்களையும் இழந்துவிட்டு ஏதாவது ஒரு பற்றில் மட்டும் இலயிப்பவனைத் துறவி என்கிறார்கள். நீயும் அப்படி உன் செல்வங்களையும் உறவுகளையும் இழந்து விட்டு என்னில் கலந்து என்னோடு மட்டும் இலயித்து விட்டாய். உன்னுடைய இந்தத் தவத்தை நான் ஏற்றுக்கொண்டு அருள் செய்துதான் ஆக வேண்டும் என்று இந்த வார்த்தைகளைச் சொல்லியபோது அவனுடைய மனம் நிறையப் பரிவு பெருகியிருந்தது. அந்தப் பரிவைச் சுரமஞ்சரிக்கும் அளிக்க அவன் மனம் இணங்கிற்று. அந்த எல்லையற்ற பரிவு வெள்ளத்தில் அவள் மூழ்கவும் இடம் கொடுத்தான் அவன். இரண்டாம் முறையாக அவன் கையிலிருந்த சோற்றை அவள் உண்ணும்போது சிறு குழந்தைபோல் அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.

இந்த ஒருகை சோற்றில் என்னுடைய நெடுங் காலத்துப் பசி தணிந்துவிட்டது அன்பரே! என்னிடமிருந்து என் கையால் எதையுமே ஏற்றுக் கொள்ள மறுத்த நீங்கள் இன்று ஏற்றுக் கொண்டீர்கள். கொடுக்க வேண்டும் என்ற மெய்யான பரிவோடு எனக்கும் உங்கள் கையால் உண்ணக் கொடுத்தீர்கள். இந்த விநாடியோடு செத்துப் போய்விட்டாலும் இனி எனக்குக் கவலையில்லை. இந்த ஒரே ஒரு விநாடியில் ஆயிரம் ஊழிகள் உங்களோடு வாழ்ந்து அநுபவங்களைப் பெற்றுவிட்டாற் போன்ற திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி மிகுதியினால் சுரமஞ்சரியின் சொற்கள் முற்றாத மழலைச் சொற்களாய்க் குழைந்து ஒலித்தன.

பேதைப் பெண்ணே! இப்போதுதான் நீ வாழத் தொடங்கியிருக்கிறாய். அதற்குள் ஏன் சாவதற்கு ஆசைப் படுகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே இளங்குமரன் தன்மேல் சாய்ந்திருந்த அவளுடைய குழற் கற்றையைப் பரிவோடு கோதினான். மேலே மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று கூவியது. காற்றில் ஆடியசைந்த மகிழ மரத்தின் கிளைகள் அவர்கள் மேல் பூக்களைச் சிந்தின.

இந்தக் குயில் ஏன் இப்படிக் கூவுகிறது சுரமஞ்சரி?”

விடிவதற்காக...”

யாருக்கு விடிவதற்காக?”

 

ஒரு பேதைப் பெண்ணுடைய வாழ்க்கையில் விடிந்து ஒளி கிடைப்பதற்காகத்தான்!”

இந்தக் குறும்பு நிறைந்த பதில் வார்த்தைகளைக் கூறிவிட்டுத் தன் சிரிப்பைத் தானே அடக்கிக்கொள்ள முடியாமல் சுரமஞ்சரி சிரித்தபோது அவனுடைய சிரிப்பும் பிறந்து அதில் கலந்து எதிரொலித்து இணைந்தது.

-----------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.13. முடியாத கோலம்

 

விடிகின்ற நேரத்துக்கே உரிய சில்லென்ற குளிர் காற்று உடம்பில் பட்டு இளங்குமரன் கண்விழித்தான். மரத்தடியில் பொற்காசுகள் சிதறினாற் போல் மகிழம் பூக்கள் உதிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன. விடியப் போகிறது, விடியப் போகிறது என்று! இந்த உலகத்துக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி மங்கல வாழ்த்தெடுப்பது போலப் பறவைகள் காலைக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. கதிரவனின் முதற்கதிர்கள் மண்ணில் படுவதற்குள்ளேயே நீராடித் தவ ஒழுக்கங்களை முடித்து விடும் ஆவலோடு காவிரிக்குச் செல்லத் தொடங்கியிருந்த அந்த நகரத்து மறையவர்களின் மந்திர ஒலிகளும், பெளத்தர்களின் அற முழக்கமும் அங்கங்கே பூம்புகாரின் வீதிகளிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருந்தன. இன்னும் இருள் புலரவில்லை. அறிந்தும் அறிய முடியாதபடி தெரிந்தும் தெரிய முடியாதபடி பேதை இருட்டு என்பார்களே அப்படி எங்கும் ஓர் இருட்டு சூழ்ந்திருந்தது. வழக்கம்போல் இந்த வேளையில் இளங்குமரனுக்குக் கண்கள் விழித்துக் கொண்டன. எழுந்திருந்து நீராடப் போவதற்கு ஆசையா யிருந்தது. ஆனால் எழுந்திருப்பதற்கும் முடியவில்லை.

தாயோடு ஒன்றிக் கொண்டு உறங்கும் சிறு குழந்தை போல் சுரமஞ்சரி அவனுடைய வலது தோளைத் தன் தலைக்கு அணையாகக் கொண்டு குளிருக்கு ஒடுங்கினாற் போல் ஆழ்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்தாள். ஏழு உலகங்களையும் வென்று ஆளும் இணையற்ற வெற்றி போல் கவலையில்லாமல் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்தபோது அவளுடைய உறக்கத்தைக் கலைக்கும் துணிவை இழந்து அப்படியே அசையாமல் இருந்தான் இளங்குமரன். அவளுடைய எழில் நிறைந்த உடல் அவன் தோளில் சரிந்த மல்லிகை மாலையாய் மணந்து கொண்டிருந்தது. சந்திர பிம்பமாய்த் தெரிந்த அவள் முகம் அந்த உறக்கத்திலும் ஏதோ நல்ல கனவு காண்பது போலச் சிரிப்பைக் காண்பித்துக் கொண்டிருந்தது. மனத்திலும், கண்களிலும் அவளுக்காகவே நிறைந்த பரிவோடு தனக்காக எல்லாச் சுகங்களையும் இழந்துவிட்டு எல்லாச் செல்வங்களையும் தோற்றுவிட்டு இப்படி இந்த மரத்தடியில் வந்து வெறுந்தரையில் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்துக் கொண்டே வியந்தான் இளங்குமரன். அந்தப் பொன்னுடலில் வைகறைக் குளிர் படாமல் தன்னுடைய மேலாடையை எடுத்து மெல்லப் போர்த்தினான். ‘விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி எதுவும் பேதையர்களுடைய வாழ்வில் இருக்க முடியாது என்று முதல் நாள் அவளைக் கடுமையாக வெறுத்துப் புறக்கணிப்போடு கூறியிருந்த தானே இப்போது இப்படி அவளைக் குழந்தை போல் பேணிப் போற்றி உறங்கச் செய்வதையும், அவளுடைய உறக்கம் கலையலாகாதே என்று கவலைப்படுவதையும் எண்ணியபோது அவன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். அந்தத் தோல்வியை உணர்ந்த போது அவனுக்கு வெட்கமாக இருந்தது. அதே சமயத்தில் சுகமாகவும் இருந்தது. பொழுது புலர்ந்தும் புலராமலும் இருந்த அந்த நேரத்தைப் போலவே அவன் மனமும் குளிர்ந்து மணந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு காலைப்போது அவன் வாழ்க்கையில் இதுவரை விடிந்ததில்லை.

என்னை அடைவதற்காக இவள் செய்த தவம் பெரியது! என்னைப் பெறுவதற்காக இவள் இழந்த சுகங் களும் செய்த தியாகமும் இணையற்றவை என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டவனாகச் செந்தாமரைப் பூவைப்போல் தன் மார்பின்மேல் படர்ந்து பற்றிக் கொண் டிருந்த அவள் கையை மெல்ல எடுத்து இளங்குமரன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். அந்தக் கையின் மென்மையும், தண்மையும், நளினமுமான நீண்ட விரல்களும், பவழமல்லிகை மணப்பது போன்ற மயக்கமும் ஒருகணம் அவனுடைய நினைவிலிருந்து விலகின. அவனுள் ஓடும். இரத்தம் தன் குலப் பகைவரையும் அவர் கொடுமைகளையும் நினைவூட்டிற்று. உயர்ந்த பாவனைகளால் அந்தத் தீய நினைவை அடக்கிக் கொண்டு பரிவுடனே மறுபடி அவளது கையை எடுத்து அவன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டபோது அவளே விழித்துக் கொண்டுவிட்டாள். அவனுக்கு வெட்கமாகி விட்டது. வெட்கத்தோடு அவள் கையை மெல்ல விடுவித்தான் அவன். அவளோ அவன் விடுவித்த கையை அவனிடமிருந்து மீட்டுக் கொள்ளவே முயலாதவளாய் அந்த நிலையில் தான் விழிப்பதைவிட உறங்குவதே நல்லதென்று திருட்டுத் தீர்மானமும் செய்து கொண்டவளாகப் பொய் உறக்கம் உறங்கினாள். அதைப் புரிந்துகொண்டு அவன் புன்னகை பூத்தான்.

அவளுக்கு அந்த விளையாட்டைத் தொடரும் ஆசையிருந்தும் தொடர முடியாத சூழ்நிலையில் அடக்க முடியாத சிரிப்போடு எழுந்து உட்கார்ந்தாள். “இந்தக் கை எந்தப் பிறவியிலோ சக்தி வாய்ந்த தேவதைகளின் கோவில்களுக்குப் பூச்சுமந்து பூச்சுமந்து புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும். அதன் பயன் சற்றுமுன் இதற்குக் கிடைத்துவிட்டது. இது பாக்கியம் செய்த கை என்று சிவப்பு நிறம் படரும் கிழக்கு வானத்தைப் பார்த்துக் கொண்டே அவனுக்குச் சொன்னாள் சுரமஞ்சரி. அவன் தொட்டு ஆண்ட நினைவின் சுகம் அவளுடைய கையிலும் மனத்திலும் நிறைந்திருப்பதை அவளுடைய வார்த்தைகள் பரிபூரணமாய்த் தொனித்துக் கொண்டு பேசின. முறுவல் கிளரும் முகத்தினனாய்த் தன் கைகள் நிறையக் கீழே உதிர்ந்திருந்த மகிழம் பூக்களை அள்ளிக் கொண்டு அவள் பக்கம் திரும்பிப் பாக்கியம் செய்த அந்தக் கையை மலர்த்தி அதில் நிறைத்தான் இளங்குமரன்.

இப்போதும் அவனுடைய கண்களின் பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரித்தது.

புறப்படு! நீராடப் போகலாம். பொழுது நன்றாக விடிவதற்கு முன்பு காவிரியில் போய் நீராடிவிட்டு வர வேண்டும் என்று எழுந்து நடந்தான் அவன். அவள் மெளனமாய் அவனைப் பின்தொடர்ந்தாள். எல்லாரும் எழுவதற்கு முன்பு நகரமே அந்தரங்கமாக எழுந்து நீராடி விட்டு இன்னும் ஈரம் புலராமல் இருப்பது போல் வீதிகளில் எங்கும் மென்குளிர் பரவியிருந்த அந்த வேளையில் நடந்து போவதே சுகமாக இருந்தது.

புறவீதிக்கு அருகே இலவந்திகைச் சோலையின் மதிலை ஒட்டியிருக்கும் காவிரிப் படித்துறையில் போய் நீராடலாம் என்ற கருத்துடன் சுரமஞ்சரியை அழைத்துச் சென்றான் இளங்குமரன். புறவீதியில் நுழைந்ததும் பக்கத்திலிருந்த மலர் வனங்களின் மணமும் சேர்ந்து அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த வழி நடைக்கு இங்கிதமான சூழலைப் படைத்தது.

இப்படி ஒரு காலைப் போது என் வாழ்வில் இதுவரை விடிந்ததில்லை என்று அவன் கண் விழித்ததும் தானாகவே எதை நினைத்தானோ அதை அந்த வீதியில் புகுந்தபோது சுரமஞ்சரியும் அவனிடம் கூறினாள். இதே போலப் பணி புலராத காலை வேளை ஒன்றில் இந்தக் காவிய நாயகனை அடைவதற்காகத் தான் விரத மிருந்து இருகாமத்திணையேரியில் நீராடிக் காமன் கோட்டத்தை வலம் வந்த நிகழ்ச்சியை இன்று நினைவு கூர்ந்தாள் அவள். அந்த நினைவு இன்று தன் வாழ்வில் கைகூடிவிட்டதை உணர்ந்த பெருமையோடு புதிய கிளர்ச்சி பெற்றவளாகப் புறவீதியில் புகுந்தபோது அவள் அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு அவன் அருகில் இன்னும் நெருக்கமாக நடக்கலானாள். அவளுடைய கையை அவனும் அப்போது விலக்கிவிட்டுத் தனியே நடக்க முடியவில்லை.

மறக்குடி மக்கள் மிகுந்து வசிக்கும் புறவீதியில் அந்த வைகறை வேளையில் மனைப் பெண்கள் வாயில்கள் தோறும் தண்ணிர் தெளித்துக் கோலமிடும் காட்சிகள் விதியில் இருசிறகிலும் நிறைந்து தோன்றின.

காவிரியில் நீராடுவதற்காகச் சுரமஞ்சரியோடு கை கோத்து நடந்து சென்று கொண்டிருந்த இளங்குமரன் அந்த வீதியின் நடுப்பகுதியில் ஏதோ ஒரு வீட்டருகே வந்ததும் மேலே நடக்கத் தோன்றாமல் சோர்ந்தாற் போலக் கால்கள் தயங்கிட நடுவழியில் நின்றான்.

ஏன் நின்றுவிட்டீர்கள்? நடக்கத் தளர்ச்சியாக இருக்கிறதா?” என்று சுரமஞ்சரி கனிந்த குரலில் அவனைக் கேட்டாள்.

 

தளர்ச்சிதான்! இந்த இடத்தில் தளர்ந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தோன்றவில்லை என்று அவனிடமிருந்து அவளுக்குப் பதில் வந்தது.

இவர்களுடைய அந்த உரையாடலில் கவரப்பட்டவளாக வீதியில் அந்த வீட்டு வாயிலில் உற்சாகமாகப் பாடியபடி கோலமிட்டுக் கொண்டிருந்த பெண் ஒருத்தி நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் அப்படியே திகைத்து நின்றாள். அவளுடைய தனிமையின் உல்லாச வெளியீடாகிய பாட்டு இதழ்களில் அப்படியே அடங்கிப் போய் நின்றது.

முல்லை! நீ நலமாயிருக்கிறாயா?” என்று அன்புடனே அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன். கோலமிட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் யார் என்று இப்போது சுரமஞ்சரிக்கும் புரிந்தது. தான் இட்டுக் கொண்டிருந்த கோலத்தை அரைகுரையாக நிறுத்திவிட்டு ஆவலோடு இளங்குமரனுக்கு அருகே வந்த அந்தப் பெண் அவன் தன்னை நலம் விசாரித்ததற்கு மறுமொழி கூறாமல், அதிக அக்கறையோடு அவனை வேறொரு கேள்வி கேட்டாள்:

உங்கள் பக்கத்தில் நிற்பது யார்?”

என்னுடைய வாழ்க்கைத் துணைவி சுரமஞ்சரி.”

இளங்குமரனுடைய நாவிலிருந்து மிகத் தெளிவாக ஒலித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு முல்லையின் கையில் இருந்த கோலப் பேழை கீழே நழுவி விழுந்து உடைந்தது. இளங்குமரன் இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்தான்.

இதென்ன காரியம் செய்தாய் முல்லை? கோலப் பேழையைக் கீழே போட்டு உடைத்துவிட்டாயே?”

ஆம், உடைத்துத்தான் விட்டேன்.”

அரைகுறையாக நிறுத்தியிருக்கிற இந்தக் கோலத்தை இனி எப்படி முடிப்பாய்...”

...”

உனக்கு எப்போதுமே இந்தப் பரபரப்பும் பதற்றமும் கூடாது முல்லை.”

...”

பதில் பேசாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்ற முல்லையின் கண்களில் நீர் பெருகி வருவதை இளங்குமரன் கண்டான். இப்படி நடக்கும் என்றுதான் அவன் எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்த்த படியே நடந்தது. ஏதோ கோபம் நிறைந்த பேச்சைப் பேசுவதற்குத் துடிப்பது போல் முல்லையின் செவ்விதழ்கள் துடித்தன. எதிரே நிற்கிற அவளுடைய முகம் உணர்ச்சிகளின் மயானமாகி அங்கே எந்த ஆசைகளோ எரிந்து அழிவதையும் அவன் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கணம் பின்னால் திரும்பிப் பக்கத்தில் நின்ற சுரமஞ்சரியின் மேல் அவன் தன் பார்வையைப் படரவிட்டான். அவள் பயந்தாற்போல் அவன் முதுகுக்குப்பின் ஒண்டி நின்று கொள்ள முயன்று கொண்டிருந்தாள். மறுபடி அவன் முன் பக்கமாக முல்லையைத் திரும்பிப் பார்த்தபோது,

ஒரு விநாடி நில்லுங்கள். இதோ வருகிறேன் என்று அவனிடம் சொல்லிவிட்டு நடைப்பிணம் போலத் தளர்ந்து வீட்டின் உள்ளே சென்றாள் முல்லை. அவள் வீட்டுக்குள்ளே சென்றிருந்த நேரத்தில் சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவன் காதருகே ஒரு கேள்வி கேட்டாள்:

இது என்ன வேதனை? இந்தப் பெண் ஏன் இப்படிக் கண் கலங்குகிறாள்?”

இதன் காரணம் உனக்குத் தெரியத்தான் வேண்டுமோ?”

அப்படி ஒன்றுமில்லை. கேட்கத் தோன்றியது கேட்டேன்.”

நீ எதைப் பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிறாயோ அதைப் பெற முடியாமல் அழுகிறாள் அவள்.”

அவன் சுரமஞ்சரிக்கு இப்படிப் பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே முல்லை உள்ளிருந்து திரும்பி வந்துவிட்டாள். ஒன்றும் பேசாமல் புயல் புறப்பட்டு வருவது போல் நடந்து வந்து, தனக்கு முன்னால் அவள் கைநீட்டித் தன்னிடம் அளித்த பொருள்களை வாங்கிக் கொண்டு அவைகளை என்னவென்று பார்த்தான் இளங்குமரன்.

திருநாங்கூரில் குருகுலவாசம் செய்த காலத்தில் அவளுடைய பிறந்த நாள் மங்கலத்துக்குப் பரிசாக அவன் அளித்த பாடல் உள்ள ஏட்டையும் அப்போது அவன் கொடுத்திருந்த நாகலிங்கப் பூவையும் இப்போது அவனிடமே திருப்பி அளித்திருந்தாள் அவள். அந்தப் பூவின் இதழ்கள் வாடிச் சருகாகியிருந்தன.

முல்லை! நீ என்னுடைய நன்றிக்கு உரியவள். சிறு வயதிலிருந்தே உன் கைகளால் நான் பல நாள் உணவு பெற்றிருக்கிறேன். என்னுடைய உடம்பில் நான் புண்பட்டு வந்த போதெல்லாம் நீ என் காயங்களை மருந்திட்டு ஆற்றி யிருக்கிறாய். அப்படியெல்லாம் நன்றிக் கடன் பட்டிருந்தும் என்னுடைய இந்த உடம்பை நான் உனக்குக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. என் உடம்பையும் மனத்தையும் நான் இந்தப் பெண் சுரமஞ்சரிக்குத் தோற்றுப் போய் இவளுக்காகத் தியாகம் செய்துவிட்டேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள் மேலும் கூட அன்பு செலுத்தத் துணிந்துவிட வேண்டுமென்றுதான் இந்தப் புதிய வாழ்க்கைக்கு நான் என்னைத் தியாகம் செய்தேன். அதே போல நீயும் இப்போது ஒரு தியாகம் செய்ய வேண்டும். நான் என்னால் அதிகமாக வெறுக்கப் பெற்ற இவளுக்கே என்னை விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்தது போல நீ உன்னால் அதிகமாக விரும்பப்பட்ட என்னை உன் விருப்பங்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும், கனவுகளிலிருந்தும் விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்து விட வேண்டும். இது உன்னால் முடியும். என்னுடைய நன்றியின் நினைவாக இந்தப் பாடலும், இந்தப் பழம் பூவும் உன்னிடம் இருப்பதைக்கூட நீ விரும்பவில்லையா?”

நன்றி என்ற வார்த்தைக்கு இனிமேல் அர்த்தமில்லை. என்னை ஏமாற்றிவிட்டு என்னுடைய அழகைப் புகழ்கிற நன்றி எனக்கு வேண்டாம். இந்த ஏட்டிலிருக்கும் பாடலில் அப்படிப்பட்ட நன்றிதான் இருக்கிறது. நன்றியை எதிர் பார்க்கிற இடத்திலிருந்தும் கூட ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கிற உலகம் இது. மெய்யான நன்றி இந்த உலகத்திலேயே இல்லை. ஏட்டிலும் எழுத்திலும் புகழ்கிற இந்தப் போலி நன்றிக்காகவா இத்தனை காலம் நான் ஏங்கிக் கிடந்தேன்? எதை எதையெல்லாம் ஆசைப்பட்டுத் தவித் தேனோ அதையெல்லாம் கூடத் தியாகம் செய்யச் சொல்லுகிறீர்களே? இந்த நன்றியைத் தியாகம் செய்வதுதானா எனக்குப் பெரிய காரியம்?”

உன்னைப் போன்றவர்களின் தியாகம்தான் இந்த உலகத்துக்கு அழகிய சரித்திரங்களைக் கொடுக்கிறது முல்லை! கணவன் மனைவி என்ற உறவுகளை அடைவதும் இழப்பதும் நம்முடைய உடம்பின் வாழ்க்கைக்கு அப்பால் பொய்யாய் மறைந்து போகிற சாதாரண அநுபவங்கள். குணங்கள் தான் என்றும் நிலைத்து வாழப் போகின்றவை. குணங்களால் வரும் புகழ்தான். காவியங்களில் வாழும். காலமெல்லாம் வாழும். அந்த நிறை வாழ்வுக்குத்தான் நான் ஆசைப்படுகிறேன்.”

என்னைப் போன்ற பேதைப் பெண்ணுக்கு என்றும் எதனாலும் தணியாத குறைவாழ்வை அளித்துவிட்டு நீங்கள் மட்டும் நிறைவாழ்வு வாழ ஆசைப்படுகிறீர்களே?” என்று அவனை நோக்கிக் கூறிக் கொண்டே வந்தபோது முல்லையின் குரலில் அழுகை ஊடுருவிப் பேச்சைத் தடைப்படுத்திற்று. கண்களில் இடையறாத நீர்ப்பெருக்கு உடைந்து பெருக, அவள் தனக்குமுன் தவித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து இளங்குமரன் திகைத்தான்.

அழுகையால் உடைந்து தளரும் குரலில் அவளே மேலும் அவனை நோக்கிக் கூறினாள்:

நீங்கள் என்னுடைய வாழ்வில் இறுதிவரை எனக்குத் துணையாக வர முடியாமல் இந்தப் பெரு மாளிகைப் பெண் உங்களை நடுவழியிலேயே என்னிடமிருந்து பிரித்துக் கொள்வாள் என்பது அன்றே எனக்குத் தெரியும். முதன் முதலாக இந்திர விழாவின் போது பூத சதுக்கத்தில் படையலிடுவதற்காக என்னுடன் எனக்குத் துணையாக வந்து முழு வழிக்கு துணை வராமல் பாதி வழியிலேயே என்னை மறந்துவிட்டு இவளோடு இவள் பல்லக்கில் ஏறிப் போனவர்தானே நீங்கள்?”

உன்னுடைய துக்கத்தில் சிறு குழந்தைபோல் நீ எதை எதையோ இணைத்துப் பேசி என்மேல் குற்றம் சுமத்துகிறாய். உன் வேதனைகளை நான் உணர்கிறேன். ஆனால் உன்னை எப்படி ஆறுதல் கொள்ளச் செய்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை.”

 

எனக்கு யாருடைய ஆறுதலும் வேண்டாம். நான் அழுது அழுது சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று கூறிவிட்டுக் கிளர்ச்சியற்ற தளர் நடையாய் நடந்து அவள் தன் வீட்டுக்குள் போவதற்குத் திரும்பியபோது,

இந்தக் கோலத்தை முடிக்காமல் இப்படி அரை குறையாக விட்டுப் போகிறாயே முல்லை?” என்று இளங்குமரன் அவளைக் கேட்டான்.

இந்தக் கோலத்துக்குத் தொடக்கம்தான் உண்டு. இறுதி தெரியவில்லை. முடிவும் இல்லை. நான் இதை முடிக்கப் போவதுமில்லை என்று போகிற போக்கில் அழுகைக்கிடையே அவள் கூறிவிட்டுப் போன மறுமொழி அவனுடைய நெஞ்சின் ஆழத்தில் போய்த் தைத்துப் புண்படுத்தியது.

அவளுடைய அந்த மறுமொழியில் அவனுடைய வாய்ச் சொற்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இருந்தது. மனம் கேட்ட கேள்விக்கும் பதில் இருந்தது. அந்தச் சொற்களின் பொருள் எல்லை எவ்வளவுக்கு நீள்கிறது என்று புரியாமல் தவித்து நின்றான் அவன். சுரமஞ்சரியும் அவனுக்குப் பின்னால் மருண்டு போய் நின்றாள்.

-------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.14. வழிகள் பிரிகின்றன

 

தான் இட்ட கோலத்தைத் தானே மிதித்துக் கொண்டு வீட்டுக்குள்ளே திரும்பிப் போய்விட்டாள் முல்லை. அவளுடைய சொல்லம்புகளால் தாக்கப் பெற்றுத் தலை தாழ்ந்து போய்த் தன்மனமும் உணர்வுகளும் அவளுக்குப் பட்ட நன்றிக் கடனைத் தீர்க்க வழியின்றி முடிவு தெரியாமல் மனத்தின் உள்ளேயே அழுது புலம்பிடத் தயங்கி நின்றான் இளங்குமரன். அவனுடைய கைகளில் அவள் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போயிருந்த அந்தப் பழைய ஏடும் காய்ந்த பூவும் மலையத்தனை சுமையாய் மாறிக் கொண்டு கனத்தன.

நன்றிச்சுமை இவ்வளவு கனமானதா?’ என்று எண்ணியபடியே கையிலிருந்த பொருள்களையும் தரையிலிருந்த முடிவடையாத கோலத்தையும் பார்த்துக் கொண்டே நின்றான் அவன். தனக்குள்ளே மட்டும் கேட்கிற குரலில் அவன் மனம் பெரிதாய் ஓலமிட்டு அழுதது.

தாழ்ந்துபோன தலை நிமிராமல் முடிவற்ற பல கணங்களாக அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கோலத்தை மிதித்துக்கொண்டு இன்னும் நான்கு கால்கள் உள்ளேயிருந்து முன்னால் நடந்து வந்தன. வருகிறவர்கள் யார் என்று அறிவதற்காக அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உள்ளேயிருந்து வளநாடுடையாரும், அவர் மகன் கதக்கண்ணனும் வந்து நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தக் கிழவருடைய கண்கள் அவனை நோக்கி நெருப்புக் கோளங்களாகக் கனன்றன. மீசை துடிதுடித்தது. இந்த முதுமையில் இவ்வளவு கோபத்தையும் கொதிப்பையும் தாங்கிக்கொள்ள எனக்கு ஆற்றலில்லை என்பது போல அவருடைய உடல் நடுங்கியது. இந்த நிலையில் அந்தக் கிழட்டுச் சிங்கத்தைப் பார்ப்பதற்கே அவனுக்குப் பயமாயிருந்தது. தன் நாவிலிருந்த தைரியத்தையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு பேசுவது போல அவருடைய கண்களை நேருக்கு நேர் பாராமல் மூன்றே மூன்று வார்த்தைகளை ஒவ்வொன்றாக எண்ணி அவரிடம் பேசினான் இளங்குமரன்:

நீங்கள் என்னை மன்னித்துவிட வேண்டும்.”

உன்னை நான் ஒருக்காலும் மன்னிக்க முடியாது. நீ பெரிய ஞானியாயிருக்கலாம். திருநாங்கூரில் பல ஆண்டுகள் புற உலக நினைவே இன்றிக் கல்வி கற்றிருக்கலாம். ஆனால் உனக்கு எல்லாவற்றையும் கற்பித்த உன்னுடைய குருவினிடம் நீ ஒன்றுமட்டும் கற்க மறந்து விட்டாய். அதற்குப் பெயர் நன்றி.”

அதைக் கற்க இன்னொரு பிறவி எடுக்கிறேன் ஐயா! இந்தப் பிறவியில் அது முடியாமல்தான் போய்விட்டது. நினைத்துப் பார்த்தால் நான் உங்கள் குடும்பத்துக்கும் உங்களுக்கும் நிறைய நன்றிக் கடன் பட்டிருப்பது எனக்கே தெரிகிறது. ஆனால் அந்தக் கடனை எந்த விதத்தில் நான் தீர்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே விதத்தில் தீர்ப்பதற்கு இந்தப் பிறவியில் நான் இயலாதவனாகி விட்டேன். இந்தப் பிறவியில் என்னுடைய அனுபவங்கள் எல்லாம் சத்திய சோதனைகளாகி விட்டன. சத்திய சோதனைகளில் இறங்குகிறவர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூட ஏமாறச் செய்து விடும் படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியாமல் அடைந்துதான் ஆக வேண்டியிருக்கிறது. என்னுடைய குலப்பகைவரான எதிரியை நான் பழி வாங்கும் நோக்குடன் படைதிரட்டிப் புறப்பட மறுத்தபோது என் மாமன் மகனான குலபதிக்கு அது பெரிய ஏமாற்றமா இருந்தது. என் எதிரியை நான் சந்தித்து நியாயம் கேட்கிற முறையில் கொடுமையும் வன்மையும் வேண்டும் என்று எனக்குத் துணையாய்ப் பின் தொடர்ந்த நீலநாகரை நான் மறுத்துத் திருப்பி அனுப்பிய போது அவருக்கு ஏமாற்றமா இருந்தது, உங்கள் மகள் முல்லையை நான் மணம் புரிந்து கொள்ளாமற் போனது உங்களுக்கு ஏமாற்றமாயிருக்கிறது. சத்தியத்தை ஏமாற்றக் கூடாதென்று நாம் ஏதோ செய்தால் அதன் மறுபுறம் அந்தச் செய்கையால் ஏமாறிய மனிதர்கள் வந்து நிற்பதைக் காண்கிறோம். மனிதர்களுக்கு மட்டும் திருப்தியாக நடந்து கொண்டால் சத்தியத்தை ஏமாற்றியதாக முடிகிறது. சத்தியத்துக்குத் திருப்தியாக நடந்து கொண்டுவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் அந்தச் சமயத்தில் அதே காரணத்தால் தாங்கள் ஏமாறியதாகச் சொல்லிக் கொண்டு மனிதர்கள் வந்து கண்கலங்கி நிற்கிறார்கள்.”

உபதேசம் போதும்! இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளுவதற்கு நாங்கள் கற்றுத் துறை போகவில்லை. பொது மனிதர்களையும் பொதுவான மனித உறவுகளையும் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களுடைய வாழ்க்கையிலே இரண்டே இரண்டு எல்லைகள்தான் உண்டு. ஒன்று வீரம், மற்றொன்று அன்பு. இந்தக் குடும்பத்தில் எவரும் இந்த விநாடி வரை வீரத்தில் ஏமாறியதில்லை. ஆனால் இன்று இந்தக் குடும்பத்துப் பெண்ணொருத்தி அன்பில் ஏமாறிவிட்டாள். வெற்றியைத் தவிர வேறு வளர்ச்சிகளைக் கண்டறியாத இந்த வீரக் குடியின் வாழ்க்கையில் இன்று என் மகள் காதலிலே தோற்றுப் போய் வீழ்ந்து விட்டாள். இன்று காலையில் உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்தது. என் மகளுக்கு மட்டும் இருண்டு போய்விட்டது. உன்னுடைய இதயத்துக்கு உணரும் சக்தி இருந்தால் அறுபட்டு வீழ்ந்த பூங்கொடிபோல உள்ளே அவள் குமுறிக் குமுறி அழுது கொண்டிருப்பதை நீயும் உணர முடியும். ஆனால் நீ கல்நெஞ்சன். பகைவர்களுக்கு நல்லவனாகி உறவினர்களை ஏமாற்றும் வஞ்சகன்.

நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்ட செய்தியை நான் இங்கு வந்து கூறியவுடனே என் மகள் இன்று காலை இந்த வீட்டின் படிகளில் நீ ஏறி வருவாய் என்று ஆவலோடு எதிர்பார்த்து நேற்றிரவிலிருந்தே எப்போது விடியும் எப்போதும் விடியும் என்று விடிவதற்காகவே இரவெல்லாம் கண் விழித்துக் காத்திருந்து விடிந்ததும் வாயிலில் தண்ணிர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கோலம் இதோ இப்படி முடியாமல் முடிந்துவிட்டது.”

...”

சிறிது நேரம் மேலே ஒன்றும் பேச வராத மெளனத் தவிப்புக்குப் பின் வளநாடுடையார் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெறுத்தாற் போல் உள்ளே போய்விட்டார். மீண்டும் அவன் முகத்தைப் பார்த்து அவனோடு பேசும் விருப்பமே இல்லாதவராகத் திரும்பிப் போவது போலிருந்தது அவர் நடை. அப்படிப் போவதற்கு முன் இளங்குமரன் தன் வாழ்க்கைத் துணைவியோடு அவரை வணங்க முற்பட்டதும் வீணாயிற்று. அந்த வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமலே அவர் விரைந்து உள்ளே போய்விட்டார்.

கதக்கண்ணன் மட்டும் தன்னுடைய அகன்ற பெரிய விழிகளிலே கோபம் கனல இளங்குமரனையே இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான். அவனுடைய அந்தப் பார்வை இளங்குமரனைச் சுட்டெரித்தது. அவன் கூசி நின்றான். சிறிது நேரத்தில் தந்தையைப் போலவே, கதக்கண்ணனும் வெறுப்போடு உள்ளே திரும்பியபோது பின்புறமிருந்து பழைய நண்பனாகிய இளங்குமரனின் நெகிழ்ந்த குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது:

 

கதக்கண்ணா! உன் தந்தையைப் போலவே நீயும் என்னை மன்னிக்க விரும்பவில்லையென்று தெரிகிறது. உன்னாலும் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. நீலநாகருடைய படைக் கோட்டத்தில் நீயும் நானும் ஒருசாலை மாணவர் களாக இருந்து பயின்ற நாட்களும், அப்போது தொடங்கிப் பழகிய நட்பும், உறவுகளும் மறந்து இப்போது இந்த ஒரே ஒரு கணத்தில் என்னை வெறுத்துப் பிரிகிற துணிவை உன்னால் எவ்வாறு அடைய முடிந்ததோ? இதைக் கண்டு நான் வியப்படைகிறேன். குடி வழி வந்த பரம்பரை வீரம் இப்படிக் கடுமையான துணிவையும் உனக்குத் தந்திருக்கிறதோ என்னவோ? உன்னுடைய இந்த வெறுப்புக்காகவும் நான் வருத்தப்படவில்லை. நீங்கள் வெறும் மனித உறவுகளுக்காக மட்டுமே நட்புச் செய்யத் தெரிந்தவர்கள். அந்த உறவுகள் உடையும்போது உங்கள் மனங்களும் மாறி விடுகின்றன. உங்களுடைய வாழ்வில் வீரமும் அன்புமே உங்களுக்கு எல்லைகள். அதில் ஓர் எல்லையை அழிப்பதற்கு என்னையறியாமலே நான் காரணமாயிருந்திருக்கிறேன். எனக்குப் புரிகிறது. அதற்காக என் மனமும் நோகிறது. மறுபடியும் பிறந்து இந்தப் பழங் கடனைத் தீர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவிர இப்போது நான் வேறொன்றும் முடியாதவனாக இருக்கிறேன். இந்த நிலையில் என்னுடைய வறுமை எனக்கே தெரிகிறது.

முடிந்தால் உன் தங்கை முல்லையிடம் சொல்! நான் என்னுடைய தோள்களிலும் மார்பிலும் பட்டுக்கொண்டு வந்த புண்களை எல்லாம் முன்பு, ஒரு காலத்தில் அவள் தன் கைகளால் மருந்திட்டு ஆற்றியிருக்கிறாள். ஆனால் இன்று இந்தக் காலை வேளையில் அவளே என் மனத்தில் உண்டாக்கியிருக்கிற புண்ணை எங்கே எப்படி எந்தப் பிறவியில் ஆற்றிக் கொள்வது என்ற வேதனையோடு தான் நான் போகிறேன் என்று சொல். இதைத் தவிர இப்போது அவளுக்குச் சொல்ல என்னிடம் வேறு ஒன்றுமில்லை.”

இவ்வாறு கூறிவிட்டுச் சுரமஞ்சரியோடு தன் வழியில் விலகி நடந்தான் இளங்குமரன். வீதியில் சிறிது தொலைவு சென்றபின் அவன் மறுபடி திரும்பிப் பார்த்தபோது வரிசையாய் எல்லா வீடுகளின் முன்பும் முழுமையாயிருந்த கோலத்துக்கு நடுவே அந்த ஒரே ஒரு கோலம் மட்டும் அரைகுறையாயிருந்து தனியாய்த் தெரிந்தது. ஆம்! அந்தக் கோலம் முடியவில்லை. அதைத் தொடங்கியவளுக்கே எப்படி முடிப்பதென்று தெரியவில்லை.

அந்த வீதியின் கோடியில் திரும்பியபோது அதுவரை அடங்கிக் கொண்டிருந்த துயரம் கட்டுடைந்து வெடித்தாற் போல் அழுகை பொங்கும் குரலில் சுரமஞ்சரி அவனிடம் கூறினாள்:

நான் ஒருத்தி உங்கள் வாழ்வில் குறுக்கிட்டு உங்களை அடைந்ததால் உங்களுக்கு எவ்வளவோ துன்பங்களை யெல்லாம் உண்டாக்கிவிட்டேன்.”

இதைக் கேட்டு அவன் சிரித்தான்.

 

நானே விரும்பி ஏற்றுக் கொண்ட துன்பம் தானே இது? என்னைத் தோற்கக் கொடுத்து எனக்கு இன்பமாக நானே அங்கீகரித்துக் கொண்ட துன்பம் நீ! இப்போது மட்டும் திடீரென்று உன் மனத்தில் ஏன் இந்தக் கலக்கம் ஏற் படுகிறது? உனக்குக் கிடைத்த வெற்றிக்காக நீயே பயப்படுகிறாயா? என்னோடு வாதிட்டு முறையாக நீ என்னை வென்றதாக நினைத்துப் பெருமை கொள்வதை விட்டு விட்டுப் பேதை போல் நீ ஏன் வருந்துகிறாய்? உன் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை. உனக்குத் தோற்ற இடமே என்னுடைய வாழ்வில் சத்திய சோதனையின் நிறைவான இடமாகவும் இருக்கலாம். அந்த விநாடியில் நான் என்னுடைய சத்தியத்துக்கு மிகவும் அருகே நின்றிருக்கிறேன். என்னுடைய குணங்கள் தோல்வியிலும் நான் வெற்றியே பெற எனக்கு உதவியிருக்கின்றன. ஆற்றோடு மிதந்து வந்த பூமாலை நீராடிக் கெண்டிருந்தவன் மூழ்கியெழுந்தபோது அவனுக்கு நோக்கமும் எண்ணமும் இல்லாதபடியே அவன் கழுத்தில் நேர்ந்தது போலத்தான் எனக்கு நீயும் கிடைத்திருக்கிறாய்.”

அப்படி உங்களை அடைந்தது என் பாக்கியம்தான்.”

பேசிக்கொண்டே நடந்து நடந்து அவர்கள் காவிரிக் கரையை அடைந்திருந்தார்கள். பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டது. காவிரிக்கரை மரக் கூட்டங்களில் இளம் கதிரொளி பொன்வெயில் தூவிக் கொண்டிருந்தது.

இப்படித் தனியாக ஓர் ஆண்பிள்ளையோடு கால்கள் நோவ நடந்து துணை செய்வோரும், தோழிமாரும் இன்றி வந்து காவிரியில் நீராடும் சந்தர்ப்பம் இதற்கு முன் உன் வாழ்வில் என்றுமே நேர்ந்திருக்காது சுரமஞ்சரி.”

இன்று இவ்வளவு பெரிய துணையோடு நேரவேண்டு மென்பதற்காகவே இதுவரை இப்படி நேரமால் இருந்தது போலும்.”

தெரிந்துகொள்! இப்படி எதிர்பாராதது நேர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கை வீதியில் நம்மோடு நெருங்கிய துணையாக வரத் தவிப்பவர்கள்கூட ஏதேதோ கோபதாபங்களால் பாதி வழி யிலேயே நின்று போகிறார்கள். துணையாய் எப்போது எதற்காக வந்தார்கள் என்று தெரியாமல் நாமே சிலரை மறந்து விடுகிறோம். கடைசிவரை உடன் வருவதற்கு எவரேனும் சிலரால்தான் முடிகிறது. இந்த யாத்திரையில் நாமே சிலரை நடுவழியில் தவிக்கத் தவிக்க விட்டுவிட்டு மேலே நடந்து வந்துவிடுகிறோம். அதற்காகக் கலங்கி அந்த இடத்திலேயே நின்று அழிந்துகொண்டிருக்கவும் முடிவ தில்லை. கலங்காமல் மேலே நடந்து விடவும் தயக்கமாயிருக்கிறது. அந்தத் தயக்கம் நாம் இன்னும் மனிதர்கள் தான் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது. நம்முடைய கல்வி, மனப்பக்குவம், பயிற்சியடைந்த உணர்வுகள் எல்லாம் அந்த விநாடிகளில் நம்மைக் கைவிட்டு விடுகின்றன. நாம் முயன்று சேர்த்துக் கொண்ட ஞானங்கள் எல்லாம் நம்மிடமிருந்து பிரிந்து நின்று கொண்டு அதோ அதுதான் உன் பிறப்பிலேயே நீ கொணர்ந்த சொந்த ஞானம் என்று நம்மிடம் மீதமிருக்கும் புத்தியைச் சுட்டிக் காட்டிச் சிரிக்கின்றன. ஈரேழு பதினான்கு புவனங்களையும் ஆட்டிப் படைக்கிற தவவலிமை பெற்ற பெரு முனிவர்களும் இந்த விதமான தளர்ச்சியைத் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்கள்.”

நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. ஆனால் நிறைகுடமாகிய உங்கள் மனமும் இப்போது எதற்காகவோ கலங்கித் தவிக்கிறதென்று மட்டும் புரிகிறது.”

உனக்கு அவ்வளவு புரிந்தால் போதும் சுரமஞ்சரி!” என்று கூறிவிட்டுக் காவிரி நீரில் குளிப்பதற்கு இறங்கினான் இளங்குமரன். அவளும் இறங்கினாள்.

இருவரும் நீராடி கரையேறிய வேளையில்இப்போது என் கண்கள் எதிரே காண்பது கனவில்லையே?” என்று பழகிய குரல் ஒன்று மிக அருகிலிருந்து அவர்களைக் கேட்டது. இளங்குமரன், சுரமஞ்சரி இருவருமே அந்தக் குரலைப் புரிந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.

மேலேயிருந்து ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் காவிரியில் நீராடுவதற்காகப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் ஓவியன் மணிமார்பனைச் சந்தித்த சுரமஞ்சரிக்கு அவனிடம் பேசவும் நலம் தெரிந்து கொள்ளவும் ஆவல் எழுந்தது. அந்த ஆவலும் நாணமும் போராடக் கணவ னோடு ஒன்றினாற்போல நின்றாள் அவள். நினைத்த சொற்களைப் பேச வரவில்லை. அதற்குள் ஓவியனே அவர்களை நோக்கிப் பேசினான்:

ஐயா! நீங்கள் இருவரும் இப்படியே சிறிது நேரம் நில்லுங்கள். இந்தக் காட்சி என் கண்களில் நிறையட்டும். உமையொரு பாகனாகச் சிவபெருமான் நிற்பதுபோல் இந்தக் காலை வேளையில் எங்களுக்குக் காட்சியளிக்கிறீர்கள். இந்தப் புனிதமான வைகறை வேளையில் இதைக் கண்ட கண்கள் வாழ்க. ஓவியத்தில் பல முறை இப்படி உங்களை ஒன்று சேர்த்து எழுதி மகிழ்ந்திருக்கிறேன் நான். எனக்குத் திருமணமாகிய சில தினங்களில் நானும் என் மனைவியும் இயற்கை வளம் காண்பதற்காக பொதிகை மலைக்கு மகிழ்ச்சி உலாப் புறப்பட்டுப் போயிருந்தோம். அன்று என் மனைவி பதுமை என் மனத்துக்குப் பெரிதும் விருப்பமான ஓவியம் எதையாவது நான் அந்த மலைச் சூழலில் வைத்து வரைய வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டாள். என் மனத்தில் முதல் முறையாக நான் பூம்புகாருக்கு வந்து திரும்பிய காலத்திலிருந்து நாளும் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருக்கிற ஓவியம் எதுவோ அதையே அன்று பொதிகை மலையில் அவளுக்கும் வரைந்து காண்பித்தேன். அந்த ஓவியத்தில் காதலர் இருவர் கற்பனையாய் ஒன்று சேர்ந்திருந்தனர். அவர்கள் மெய்யாகவே ஒன்று சேர்ந்திருப்பதை இன்று நானும் என் மனைவியும் இப்போது எங்கள் கண் எதிரே காண்கிறோம். நீங்கள் இருவரும் வாழ்க்கைப் படகில் இன்று ஒன்றாகவே பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள். காதற் படகில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்வதாக நான் என் மனைவியிடம் முன்பே வரைந்து காட்டி மகிழ்ந்த ஓவியங்கள் கணக்கற்றவை.”

மணிமார்பா! நீ பரிசுத்தமான கலைஞன். அதனால் தான் உன்னுடைய பழைய கற்பனைகள் எல்லாம் இன்று உன் கண்களே காணும்படி மெய்யாக மலர்கின்றன. இதோ என் பக்கத்தில் நாணி நிற்கிற பெருமாளிகைப் பெண் இப்படி என்னை அடைந்ததற்காக நன்றி செலுத்த வேண்டியவர்கள் யாராவது இருப்பார்களானால் அது நீ மட்டும்தான். நீண்ட காலத்துக்கு முன்பு அன்று இந்திர விழாக் கூட்டத்தில் நீ என்னைச் சந்தித்தபோது என் உருவத்தை ஒரே ஒருமுறை வரைந்து கொள்வதற்கு மட்டும் உன்னிடம் நான் இணங்கினேன். ஒன்றும் தெரியாத அப்பாவிக் கலைஞனைப் போலிருந்து கொண்டே என் வாழ்க்கையை இப்படி வேறு விதமாக மாற்றி வரைந்து முடித்திருக்கிறாய் நீ! யாரை அதிகமாக வெறுத்தேனோ அவளுக்குப் பக்கத்திலேயே இன்று இப்படி நெருங்கி நின்று விடும்படியான சந்திப்புக்கள் தொடக்கத்தில் அன்று உன் காரணமாகவே நேர்ந்தன.

இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு எண்ணிப் பார்க்கும்போது நான் உனக்கும் சிறிது தோற்றுப் போயிருப்பதை உணர்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சுரமஞ்சரி எணாக்கு எழுதிய மடலை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, ‘இப்படிப் பெண்களின் அன்பினால் உலகத்தில் மகாகாவியங்கள். பிறந்திருக்கின்றன ஐயா!’ என்று நீ என்னிடம் கூறியபோதுஅப்படி மகா காவியங்களைப் படைக்கின்ற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையி லிருந்து எதிர்பார்க்க முடியாதுஎன மறுமொழி கூறி உன்னை மறுத்தேன் நான். ‘அன்பின் சக்தி அளப்பரியது. அதற்குமுன் சாதாரண உணர்வுகள் தோற்று விடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு - நீங்கள் தோற்றுப்போனால்கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று அன்றைக்கு என்னிடம் அறைகூவி விட்டு அதன் விளைவாக நான் உணர்ச்சி வசப்பட்டு உனக்குச் செய்த துன்பத்தையும் நீ ஏற்றுக் கொண்டு போயிருந்தாய். சொன்னபடியே இன்று எங்களை இந்தக் கோலத்தில் சேர்த்துப் பார்த்த பின்பும் நீ ஆச்சரியப்படாமல்தான் நிற்கிறாய். நேற்றிரவு நீலநாகரை அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கத்து மாளிகைக்கு வந்தபோதும் நீ என் நிலைகளைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. இன்று இந்த மாறுதலைக் கண்டும் சிரித்துக் கொண்டுதான் நிற்கிறாய்!”

அப்படி எல்லாம் என் வார்த்தைகளுக்குப் பெரிய பெரிய அர்த்தங்களைக் கற்பிக்காதீர்கள். ஏரல் எழுத்துப் போல் நான் நினையாததெல்லாம், நினைத்துத் திட்டமிட்டதை ஒப்பத் தற்செயலாக நடந்திருக்கின்றன. அந்தப் பெருமாளிகைச் செல்வருக்கும் உங்களுக்கும் உள்ள பகைமைகள் உங்களுக்கே நன்றாகத் தெரிந்த பின்பும் நீங்கள் இப்படி விட்டுக் கொடுத்துக் கருணை மறவராக நிற்பதுதான் இந்த வாழ்வுக்குக் காவியப் பெருமையைத் தருகிறது. ஆனால் நீலநாகரைப் போன்றவர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.”

 

அவர் இதை ஒப்புக் கொள்ளாததற்கும் அவருக்கு என் மேலுள்ள அன்புதான் காரணம் மணிமார்பா! அவர் ஒரு பெரிய மலைச்சிகரம். அதே உயரத்துக்கு நீ வேறு சிகரங்களைத் தேடக் கூடாது. எல்லா மனிதர்களுடைய மனத்தையும் அந்தச் சிகரத்தின் உயரத்தினால் அளக்கவும் முயலக்கூடாது. கருங்கல்லாய் இறுகிப் போயிருக்கும் அந்தச் சிகரத்தின் உச்சியிலிருந்து கூடப் பாசமும், அன்பும் ஊறிப் பெருகுவதுண்டு.”

உண்மைதான் ஐயா! வயிற்றுப் பசியும் கவலைகளும் இல்லாத உலகம் ஒன்று ஏற்பட்டால் அங்கே அன்புதான் விலை மதிப்பற்ற செல்வமாக இருக்கும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்பிழந்து போகும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்போடு இருக்கிற காரணத்தால்தான் சில சமயங்களில் பசி, கவலை, குரோதங்களினால் அன்பைப் பற்றி மறந்து போகிறோம். இந்தப் பெரு மாளிகைச் சகோதரியாருடைய தந்தையும் அவரைச் சேர்ந்தவர்களும் இத்தனை காலம் குரோதத்தினால் தான் அன்பை மறந்து போயிருந்தார்கள் போல் இருக்கிறது. ஆனால் இப்போது உங்களருகே நாணி நிற்கும் இந்தச் சகோதரியார் தன் குடும்பத்தின் வரலாற்றையே மாற்றி விட்டுப் புது வழியில் உங்களோடு இறங்கி வந்துவிட்டார் என்று கூறிக்கொண்டே நீராடுவதற்காக கீழே படிகளில் இறங்கினான் மணிமார்பன்.

அவனும் பதுமையும் நீராடிவிட்டு வருகிறவரை இளங்குமரனும் சுரமஞ்சரியும் கரையில் காத்திருந்தார்கள்.

தன்னருகே நீராடிய ஈரம் புலராமல் மேகக் காடாய்ச் சரிந்த சுரமஞ்சரியின் கூந்தலிலிருந்து கிளரும் நறுமணங்களை உணர்ந்து இளங்குமரன் தன் கண்களால் அவளை நன்றாகப் பார்க்கத் தொடங்கியபோது, எல்லா அணி கலன்களையும் இழந்த பின்பும் பிறந்த போதே உடன் பிறந்து, வளர்ந்த போதே உடன் வளர்ந்து நிறைந்த இயற்கை வனப்புகளையே போதுமானவைகளாகக் கொண்டு பேரழகியாய் மணந்து கொண்டிருந்தாள் அவள். ‘இவற்றில் தெரியும் அழகு மிகுதியா? நாணம் மிகுதியா?’ என்று பிரித்துக் காண முடியாத கவர்ச்சி நிறைந்த கண்கள், ‘நான் கனிந்திருக்கிறேன்! நான் கனிந்திருக்கிறேன் என்பதைச் சொல்ல மொழியின்றித் துடிப்பதுபோல மெல்ல அசையும் செல்லச் செவ்விதழ்களின் நகைக் கனிவு வார்த்தைகளால் பேச முடியாததைப் பேசும் நளினமான சிரிப்பு, இவ்வளவும் நிறைந்து தோன்றினாள் சுரமஞ்சரி. காலைக் கதிரொளியில் அவள் முகமும் கைகளும் பாதங்களும் மெருகிட்ட செம்பொன்னாகி மின்னின.

எத்தனை அழகுகள்! எத்தனை அழகுகள்! அத்தனை அழகுகளையும் புதிதாய் இன்றுதான் புரிந்துகொள்வது போல் அவளைப் பார்த்தான் இளங்குமரன்.

இப்போது மூன்றாவது முறையாகவும் அவனுடைய பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.

சுரமஞ்சரி ! உன்னுடைய நாணமே உனக்குப் பெரிய அணிகலன்.”

 

அது உங்களுடைய பார்வையிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. உங்கள் கண்களின் பார்வையாலேயே நான் அலங்கரிக்கப்படுகின்றேன்.”

அப்படியானால் வேறுவிதமான அலங்காரங்களுக்கு நீ ஆசைப்படவில்லை போலும்.’

இந்தச் சொற்களைக் கேட்டு அவளுடைய இதழ்களில் அதுவரை சுரந்திருந்த நகை சற்றே மலர்ந்து புன்னகையாய்ப் பிறந்தது. பின்பு பெருநகையாகவும் வளர்ந்தது. மெல்ல நெகிழ்ந்த பவழச் செவ்வாயில் பற்கள் முத்துக்களாய் ஒளி வீசின. விடிகாலையில் ஒவ்வோர் இதழாய் மலரும் பூவைப்போல் அவள் முகத்தில் உணர்ச்சிகள் மலர்ந்து கொண்டும் மணந்து கொண்டும் நின்றன. கன்னங்களில் குங்குமச் சிவப்பு பரவியது. கால் விரல் தரையைக் கிளைக்கலாயிற்று.

இன்று இந்த வேளையில் தன் முன் இப்படி நாணிக் குலைந்து நிற்கிற இதே பெண்தானா நேற்று அப்படி யெல்லாம் ஆற்றல் வாய்ந்த சொற்களைத் தேடித் தனக்கு முன் வாதிட்டாள்?’ என்று எண்ணி வியந்தான் இளங்குமரன். அவள் அழகுகள் ஒவ்வொன்றும் இப்போதுதான் புரிந்த புதுமைகளாய் அவன் மனத்தில் நிறைந்தன.

மணிமார்பனும் அவன் மனைவியும் நீராடிவிட்டுக் கரைக்கு வந்தபின்பு எல்லாருமாக அங்கிருந்து ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். எல்லாரும் படைகலச் சாலைக்குள் நுழைகிறபோது சுரமஞ்சரி மட்டும் வாயிலிலேயே தயங்கி நின்றாள்.

முன்பு ஒருநாள் பின்னிரவு வேளையில் நகரமே உறங்கிக் கிடந்த பேரமைதியினிடையே வசந்தமாலையும் தானுமாகத் தேர் ஏறி வந்து இதே படைகலச் சாலையில் இளங்குமரனைத் தேடியபோது, வாயிற்கதவருகே நின்று தன்னைத் தடுத்த அந்த இரும்பு மனிதரை நினைத்துக் கொண்டு பயந்தாள் அவள்.

சுரமஞ்சரி மருண்டு போய்த் தயங்கி நிற்பதன் காரணம் இளங்குமரனுக்குப் புரிந்தது.

பயப்படாமல் என்னோடு உள்ளே வா. உலகத்தில் எல்லாரும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் தாம். நீலநாகரும் அகற்கு விதிவிலக்கில்லை. நீ இப்போது இங்கே என் வாழ்க்கைத் துணையாகி என்னுடனே வருகிறாய்...” என்று இளங்குமரன் அவளைக் கைப்பற்றி உள்ளே அழைத்துக்கொண்டு போனான்.

அவனையும் சுரமஞ்சரியையும் சேர்த்துப் பார்த்ததும் நீலநாகர் வெறுப்போடு அலட்சியமாகத் தலையைக் குனிந்து கொண்டார். பின்பு இளங்குமரனிடம் நேருக்கு நேர் பேச விரும்பாதவர் போல மணிமார்பனை விளித்துப் பேசினார்:

 

மணிமார்பா! உன்னுடைய நண்பன் இப்போது இங்கே எதற்காக வந்திருக்கிறான்? தன்னுடைய தோல்வியைக் கொண்டாடுவதற்காக இப்படி இங்கே திரும்பி வந்திருக்கிறானா என்று அவனைக் கேள்!”

எந்தத் தோல்வியைச் சொல்கிறீர்கள்?” என்று இளங்குமரனே சிரித்தபடி அவரை எதிர்க்கேள்வி கேட்டான். எனினும் அவர் அவன் பக்கம் திரும்பாமலே பேசினார். முதலில் இருந்த கடுமை மட்டும் சற்றே குறைந்து விட்டாற் போல அவருடைய பேச்சு அவனை நோக்கியே பிறந்தது.

இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் கற்றுப் பயின்று உரமேறிய இணையற்ற வீரமும், திருநாங்கூர் அடிகளிடம் குருகுலவாசம் செய்து பெற்ற வரம்பிலா ஞானமும் இப்படி இந்தப் பகைவன் மகளின் வளை சுமக்கும் கைகளுக்காகத் தோற்றுப்போய் விட்டாற் போலிருக்கிறது. இந்தத் தோல்விக் கோலத்தை நானும் காண வேண்டும் என்று என் முன்னாலே வந்து இப்படி நிற்க வெட்கமாக இல்லையா உனக்கு?”

வெட்கமாக இல்லை. பெருமையாகத்தான் இருக்கிறது. என் பெருமைக்குக் குறைவின்றி நானே விரும்பித் தோற்ற தோல்விதான் இது. இந்தத் தோல்வியில் எந்த விதமான தாழ்வையும் நான் உணரவில்லை. பெருமைப் படத்தக்க தோல்வி இது. எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் துணிவைப் போல எல்லாவற்றையும் விட்டு விடுகிற துணிவும் வீரனுக்கு இருக்க வேண்டும் என்று நீங்களே என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறீர்கள். யாரை மிக எளிதாக நம்மாலே வென்றுவிட முடியும் என்று நாம் உணர்கிறோமோ அவர்களுக்கே தோற்றுப்போய், விட்டுக் கொடுத்து விடுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. பரிபூரணமான தெய்வீக இன்பம் அது. இந்த விதமான தோல்விக்குக் காரணமாக இருப்பது நமது கருணைதானே ஒழியப் பலவீனமன்று. தங்களால் வெல்ல முடிந்தவர்கள் மேலும் கருணை கொண்டு அவர்கள் தங்களுக்கு ஒப்பான நிலையில் தங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாததை எண்ணி இரங்கி அவர்களுக்கும் வெற்றி மகிழ்ச்சியை அளித்துப் பார்க்கலாமே என்ற பெருந்தன்மையோடு தோற்கிற தோல்வியைச் சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தத் தோல்வி சான்றாண்மையின் இலக்கணம். இதில் வெற்றியைவிட அதிகமான சுகம் உண்டு. அந்தச் சுகத்தை இப்போது நான் அடைந்து விட்டேன்.

 

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.’

 

என்று சால்பின் பண்பு சொல்லப்பட்டிருக்கிறது. பெரிய காரியங்களைச் சாதிப்பதற்காகவே மனத்தை ஆள வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். பிறருக்காக விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்கிற இந்தத் தோல்வி பெரிய காரியமில்லை என்று நீங்கள் எப்படிக் கூற முடியும்? அன்பையும் வீரத்தையும் தவிர, எங்கள் வாழ்வுக்கு வேறு எல்லைகள் இல்லை என்கிறார் வளநாடுடையார்! நீங்களோ நெகிழ்ச்சியில்லாத முரட்டு வீரம் ஒன்றைத் தவிர உங்கள் வாழ்வுக்கு வேறு எல்லையே இல்லை என்கிறீர்கள். தியாகப் பண்பு என்ற ஒன்று எனது வாழ்க்கையின் இணையற்றதொரு பேரெல்லையாக இருப்பதை நீங்களெல்லாம் மறந்துபோய் விட்டீர்களோ, என்னவோ? நெகிழ்ச்சியே சிறிதும் இல்லாத கொடுமை மறவராக நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பழக்கிக் கொண்டுவிட்டீர்கள்.”

என்னை நான் அப்படிப் பழக்கி வைத்துக் கொண்டிருந்தது உண்மைதான்! ஆனால் உன்மேல் பாசமும் அன்பும் கொள்ளத் தொடங்கிய நாளிலிருந்து அந்த இறுகிய குணத்தினின்றும் நான் என்னைத் தளர்த்திக் கொள்ளும்படி ஆகிவிட்டது. அப்படித் தளர்த்திக் கொள்ள நேராமல் நான் என் போக்கிலேயே இருந்திருந்தால் எவ்வளவோ விதங்களில் எனக்கு நன்றாயிருக்கும். உன் மேல் அன்பு கொண்ட காரணத்தால் எனக்கு உண்டாகிய கவலைகள் ஏற்பட்டிருக்காது. நான் என்னுடைய கடமைகளைத் தவிர வேறு எந்தவிதமான உலக பந்தங்களிலும் சிக்கியிருக்க மாட்டேன். உன்னைப் போல் அழகும் வீரமும் ஞானமும் நிறைந்த இளைஞன் ஒருவனை என் மாணவனாக இந்த வாழ்க்கை வழியில் சந்தித்திருக்கா விட்டால் நான் எந்த மனிதன் மேலும் அன்பு, நெகிழ்ச்சி, பாசம், நமக்கு வேண்டியவனுக்கு இன்ன இடத்திலே இன்னது நேரிட்டு விடுமோ என்ற கவலை இவற்றை யெல்லாம் உலகத்தில் நான் உணர்வதற்குக் காரணமாக இருந்த முதல் மனிதன் நீ; கடைசி மனிதனும் நீதான்.

மறுபடியும் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீ மீண்டும் என் வாழ்க்கையில் குறக்கிடாதே. அன்பையும் பாசங்களையும் என்னை உணரச் செய்யாதே. கடுமையான வீரத் துறவியாகவே என்னை வாழவிடு. உன்னைச் சந்திப்பதற்கு முன்பு எப்படியிருந்தேனோ அப்படிக் கர்ம வீரனாக வாழவிடு. நீ இங்கிருந்தால் எனக்கு உன்மேல் ஏற்பட்டுவிட்ட பாசங்களாலேயே நான் என் வழியில் கடுமையான இறுக்கத்தோடு வாழ முடியாமல் போய்விடலாம். உன்னுடைய வாழ்வு எப்படி யிருந்தாலும் நீ மலர்ந்த மனத்தைப் பெற்றவன். கட்டுகளுக்கு நடுவேயும் விடுபட்டு வாழ முடிந்தவன். நான் இப்போது எதை உன்னுடைய தோல்வியாக நினைத்து ஏளனம் செய்கிறேனோ அதையே நீ உன்னுடைய வெற்றியாக என்னிடம் நிரூபிக்கிறாய். அப்படி நிரூபிப்பதற்கு நீ கற்றிருக்கிற கல்வியும், தத்துவங்களும் உனக்குத் துணை செய்கின்றன. நீ நிரூபிப்பதை மறுப்பதற்கு என்னிடம் சொற்கள் இல்லை.”

எப்படியோ கோபத்தோடு பேச்சைத் தொடங்கிக் கொதித்தவர் இறுதியில் இப்படித் தன்னை நோக்கிக் கண் கலங்கி நின்றபோது, இளங்குமரனுக்கு அவருடைய உண்மை நிலை புரிந்தது. அந்தப் பெரு வீரருடைய கண்களையும் கலங்கச் செய்துவிட்ட பாவத்துக்கு வருத்தியவனாகிய அவன் தயங்கி நின்றான். முல்லையைப் போலவே இவரும் வேறு ஒருவிதமான அன்புப் பிடிவாதத்தினால் தான் தன்னிடம் இந்தச் சினமும் இந்தக் கலக்கமும் அடைந்து நிற்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. தன்மேல் அவர் வைத்துவிட்ட அன்பே அவரை இந்த இரண்டுங் கெட்ட நிலைக்கு ஆளாக்கி வேதனைப் படுத்துகிறது என்பதை அவன் விளங்கிக்கொண்டான்.

அந்த நிலை விளங்கியவுடனே தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவனால் தெளிவாக உணர முடிந்தது. அப்படி உணர்ந்த உடனே சுரமஞ்சரியோடு அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் அவன். பின்பு நிதானமாக எழுந்து நின்றுகொண்டு, “எங்களுக்கு விடை தந்தருளுங்கள் ஐயா! உங்களுடைய கடுமையான வீர வாழ்க்கைக் கடமை மறுபடி உங்களுடைய கிடைக்கட்டும். கடுமையான வாழ்க்கையினால் இந்தச் சோழநாட்டுக்கு அந்த ஆயிரமாயிரம் புதிய வீரர்கள் தோன்ற வேண்டும். அதற்கு நான் ஒருவன் தடையாக இருக்க விரும்பவில்லை. என்மேல் அன்பு கொள்வதன் காரணமாக வீரர்களைத் தோற்றுவிக்கிற பெருவீரரின் மனம் அப்படிச் சலனமடைய நேர வேண்டாம் என்று நெகிழ்ந்த மனத்தோடு அவரை வேண்டிக்கொண்டு தன் மனைவியுடனே புறப்பட முற்பட்டான் இளங்குமரன்.

நீலநாகர் இளங்குமரனுக்காக மட்டும் இதுவரை சற்றே நெகிழ்ந்து திறந்திருந்த தம் மனத்தின் உணர்ச்சிக் கதவுகளை இப்போது நன்றாக இறுக்கி அடைத்துக் கொண்டு மறுபடியும் கர்ம வீரராக மாறி அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தார். அப்படி விடை கொடுத்த போது அவர் கண்களில் நீர் கலங்கவில்லை. மனத்தில் எந்தப் பாசமும் இல்லை. சலனங்களே இல்லாமல் மனம் தெளிந்திருந்தது. இளங்குமரனும் சுரமஞ்சரியும் படைக் கலச் சாலையிலிருந்து வெளியேறிய போது மணிமார்பனும் அவன் மனைவியும் கூட அவர்களோடு சேர்ந்தே புறப்பட்டுவிட்டார்கள்.

அன்று மாலை பூம்புகார் நகரம் நான்கு பேர்களுக்குத் தன் எல்லையிலிருந்து மானசீகமான விடைகொடுத்தது. இந்த நால்வரும் தன் மண்ணின் மேல் நின்றும் நடந்தும் ஆடியும் ஓடியும் பழகிய நாட்களை அந்தப் பழம் பெரும் நகரம் என்றுமே மறக்க முடியாதுதான். இவர்கள் அங்கு வாழ்ந்த நாட்களில் இவர்களுக்கு ஏற்பட்ட சுகதுக்கங்களும் வெற்றி தோல்விகளும் அந்த நகரத்துக்கு நன்றாக நினைவிலிருக்கும். அதன் மண்ணிலும் காற்றிலும் அந்த நிகழ்ச்சிகள் சுவடுகளாய் அழியாமல் மணந்துகொண்டே யிருக்கும்.

ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும், பாண்டிய நாட்டுக்குப் புறப்பட்டார்கள். “நண்பனே! மறுபடியும் வாழ்க்கை வீதியில் எங்காவது என்றாவது சந்திப்போம் என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத் தான் இளங்குமரன். சுரமஞ்சரி நன்றி நிறைந்த கண்களால் ஓவியனை நோக்கிக் கைகூப்பினாள். அவர்கள் செல்ல வேண்டிய வழிகள் பிரிந்தன. வீதியில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் தான். நெருங்கிப் பழகிய பல பேர்களுடைய வழிகளிலிருந்து இவர்களும் இவர்களுடைய வழிகளிலிருந்து அந்தப் பல பேரும் இன்று இந்த மாலை வேளையில் இப்படிப் பிரிந்து விலகிப் போய்விட்டார்கள். மறுபடி சந்திக்க நேர்கிற வரை இவையெல்லாமே பிரிவு தான். மறுபடி சந்தித்தாலும் அதன் பின்னும் மறுபடி பிரிவு இருக்கும். இப்படிச் சந்திப்பும் பிரிவும்தான் வாழ்க்கை. சந்தித்தால் பிரிவதையும், பிரிந்தால் சந்திப்பதையும் தவிர்க்க முடியாது.

விரைவில் வருகிறேன், கவலைப்படாதே என்று மணிநாகபுரத்திலிருந்து தான் புறப்பட்டு வரும்போது தன் தாய் மாமன் மகனான குலபதியிடம் கூறிவிட்டு வந்திருந்த சொற்களை நினைவு கூர்ந்தவனாகத் தன் துணைவி சுரமஞ்சரியோடு மணிபல்லவத் தீவுக்குப் புறப்பட்டான் இளங்குமரன்.

அன்று மாலை இளங்குமரன் சுரமஞ்சரியோடு கப்பல் ஏறுவதற்காகப் பூம்புகார்த் துறையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் அப்போதுதான் மணிபல்லவத்திலிருந்து வந்து கரை சேர்ந்த கப்பல் ஒன்றிலிருந்து விசாகை எதிரே இறங்கி வந்துகொண்டிருந்தாள். இந்தச் சந்திப்பு வியக்கத் தக்கவாறு அங்கே நேர்ந்தது. இளங்குமரன் சுரமஞ்சரியை விசாகைக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டுத் தன் வாழ்வில் நிகழ்ந்த புது மாறுதல்களை எல்லாம் அவளிடம் சொன்னான்.

அவையெல்லாவற்றையும் கேட்டுவிட்டு விசாகை புன்முறுவல் பூத்தாள். பின்பு அவனை நோக்கிச் சொல்லலானாள்:

இப்போது நாம் இங்கே எதிரெதிர்த் திசைகளில் எதிரெதிர் வழிகளில் பிரிவதற்காக இந்த மாலை வேளையில் விடை பெறுகிறோம். நெடுங்காலத்துக்கு முன் இப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும் என்றுதான் என் தந்தை என்னைச் சுயம்வர மண்டபத்துக்குள் அழைத்துப் போய் நிறுத்தினார். அன்று நான் இந்த வாழ்வின் வாயிற்படிக்கருகே போய் விட்டுத் திரும்பி வேறு வழியில் வந்தேன். நீங்களோ இதற்கு எதிர் வழியிலிருந்து நடந்து வந்து இந்த வழிமேல் நின்று கொண்டீர்கள். உங்களை வாழ்த்துகிறேன். உங்களுடைய இந்தத் தோல்விக்கும் எல்லையற்ற கருணைதான் காரணமாக இருக்கிறது. இதே வாழ்க்கையோடு இந்த உலகத்தில் நான் தனியாக என்னால் முடிந்த அறங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். இந்த உடம்பில் உயிரும், கைகளில் பிச்சைப்பாத்திரமும் இருக்கிற வரை விசாகையின் தருமம் குறைவில்லாமல் நடைபெறும். நீங்களும் இல்லற வாழ்வில் உங்களால் முடிந்த தருமங் களைச் செய்யுங்கள். என் துறவு நெறி நான் மட்டும் தனியாகச் செய்கிற அறம். உங்கள் மனைவாழ்வோ நீங்கள் இரண்டுபேரும் சேர்ந்து செய்கிற அறம். ஆகவே நீங்கள் தான் என்னைக் காட்டிலும் அதிகமான அறங்களை இனிமேல் உலகத்துக்குச் செய்ய வேண்டும்.

நான் புத்த பூர்ணிமைக்காக யாத்திரை புறப்பட்டு வருகிறபோதெல்லாம் மணிநாகபுரத்துக்கும் வந்து உங்களைக் காண்பேன். நான் கூறியபடியே அலைகளைக் கடந்து அலைகளின் நடுவே போய் நீங்கள் வாழப் போகிறீர்கள். நீங்கள் பிறந்த தீவைப் போலவே உங்கள் வாழ்வும் தத்துவமாக நிலைத்து நிற்கட்டும். ஞானிகள் மணிபல்லவத் தீவைச் சக்தி பீடமாகக் கூறுகிறார்கள். முறையாகச் சுற்றி நிலை திரும்புகிற தேர்போல உங்கள் வாழ்வு அங்கே போய் நிறைகிறது என்று கூறி விசாகை அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தாள்.

அப்போது, விசாகை தன்னைப் பிரிந்து செல்வதற்கு இருந்த அந்தக் கடைசி விநாடியில் இளங்குமரன் அவளிடம் ஓர் உதவி கோரினான்.

அம்மையாரே! பாத்திரத்திலிருந்து இட முடியாத பிச்சை ஒன்று இந்தக் கடைசி விநாடியில் உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்.”

என்ன பிச்சை அது?”

பசிக்கிற வயிறுகளுக்கும், தவிக்கிற மனங்களுக்கும் ஆறுதல் அடையத்தக்க நிறைவு உங்களிடமிருந்தே கிடைக்க வேண்டும். இந்தப் பூம்புகாரின் புறவீதியில் உங்களுடைய ஆறுதலுக்காக ஒரு பேதைப் பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். முதலில் நீங்கள் அவளுடைய துக்கத்தைப் போக்க வேண்டும். அதன்பின் அவளை வேறு விதமான வாழ்க்கைக்குத் துணியும்படி பயிற்ற வேண்டும்?”

யார் அந்தப் பேதைப் பெண்?”

வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லை. அவளைச் சந்தித்து அவளுடைய துன்பங்களுக்கு நீங்கள் அடிக்கடி ஆறுதல் கூற வேண்டும்.”

அவளுக்கு என்ன துன்பம்?”

உங்களைப் போன்ற புனிதவதிகளுக்குப் பெரிதாகப்படாத துன்பம் அது! அந்தத் துன்பத்தை என் சொற்களால் நான் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. அப்படிச் சொல்வதற்கு நானும் என் மனமும் கூசி நிற்பதற்குரிய செய்தி அது. அந்தப் பெண்ணின் துன்பங் களுக்கு இனிமேல் உங்கள் வார்த்தைகள் தான் மருந்தாக வேண்டும். ஆனால் இந்த வேண்டுகோளை நான் உங்களிடம் வேண்டியதாக அவளுக்குத் தெரியலாகாது.”

புரிகிறது! துக்கமும் வேதனையும் நிறைந்து கிடக்கும் இந்த உலகத்தின் பொது வழிகளிலிருந்து பிரித்து என்னுடைய வழியில் நான் அழைத்துக் கொண்டு போவதற்கு ஒரு பெண்ணை நீங்கள் எனக்குச் சுட்டிக் காட்டுகிறீர்கள். அவளை அந்த வழியில் அழைத்துச் செல்ல எனக்கு ஒரு மறுப்பும் இல்லை. இந்த உதவியை அவசியம் உங்களுக்கு நான் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டாள் விசாகை, தன் கண்களின் பார்வையாலேயே புண்ணியத்தைப் பரப்பவல்ல அந்தத் தெய்வீகப் பெண்ணுக்கு இப்போது மீண்டும் வணக்கம் செலுத்தி விடை கொடுத்தான் இளங்குமரன். சுரமஞ்சரியும் பயபக்தியோடு விசாகையை வணங்கினாள். “நீ கொடுத்து வைத்தவள் பெண்ணே! எவராலும் வெல்ல முடியாத மனத்தை உன் அறிவினால் வென்றிருக்கிறாய் என்று தன்னை வணங்கிய சுர மஞ்சரியை வாழ்த்திவிட்டுச் சென்றாள் விசாகை.

 

இளங்குமரன் சுரமஞ்சரியோடு அந்தக் கப்பலில் ஏறிய போது பூம்புகார் நகரின் மேல் அந்திமாலை சூழ்ந்து கவிந்து கொண்டிருந்தது. நகர வீதிகளின் மாடங்களில் எல்லாம் அந்தி விளக்குகள் மின்னத் தொடங்கியிருந்தன.

இந்த நகரத்தையும் இதன் உறவுகளையும் விட்டுப் பிரிவதனால் உன் மனம் எந்த விதத்திலும் கலங்க வில்லையா, சுரமஞ்சரி?”

நான் அடைந்திருப்பது பெரிதாக இருக்கும்போது இழந்ததை எண்ணி வருந்த முடியாது.”

இழந்ததை எண்ணி வருந்தத்தான் வேறு ஒருத்தி இருக்கிறாளே என்று கூறியபடி இளங்குமரன் சுரமஞ்சரியைச் சோதனை செய்யும் குறிப்போடு அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். அவளுடைய கண்களில் கலக்கம் தெரிந்தது. அதே கலக்கத்தை அப்போது தன் கண்களுக்கு முன் அங்கே இல்லாத இன்னொரு முகத்திலும் கற்பனை செய்து பார்த்தான் அவன். அந்தக் கற்பனையே வேதனை அளிப்பதாயிருந்தது.

கப்பல் நகர்ந்தது. கரை மெல்ல மெல்ல விலகியது. விசாகையின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டான் அவன். எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள் அவை!

முறையாகச் சுற்றி நிலைதிரும்புகிற தேர்போல் உங்கள் வாழ்க்கை அங்கே போய் நிறைகிறது.’

அப்போது சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவனைக் கேட்டாள்:

நம்முடைய பயணம் எப்போது முடியும்? என்றைக்கு நாம் கரை சேருவோம்?”

எந்தப் பயணத்தைப் பற்றிக் கேட்கிறாய் சுரமஞ்சரி? நம்முடைய இந்தப் பயணம் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதற்கு அப்புறம்தான் நம்முடைய சொந்தப் பயணம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திலிருந்து நாம் கரை சேர எவ்வளவு காலமாகுமோ? விசாகையைப் போல் நான் தனியாகவே நடத்த முடியாமல் போய்விட்ட பயணம் அது. இனிமேல் அதற்காகக் கவலைப்பட்டும் பயனில்லை. நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டு தான் தீரவேண்டுமென்று அருட்செல்வ முனிவர் அன்றொரு நாள் சிரித்தபடியே என்னிடம் கூறிவிட்டுப் போனார். அந்த சில வார்த்தைகளுக்குள் இவ்வளவு பெரிய விளைவுகள் அடங்கியிருக்கு மென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உன்னை ஏற்றுக் கொண்டதோடு என் பாசங்கள் முடிந்து விடவில்லை. இனிமேல்தான் ஒவ்வொரு பாசமாகத் தொடரப் போகிறது, என் தாய்மாமன் மகனான குலபதி மணிநாகபுரத்தில் எனக்காகவே என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டி ருப்பான். நாமும் அங்கே போய்த்தான் இனிமேல் வாழப் போகிறோம். நம்முடைய வாழ்க்கையைப் பார்த்தே இனி அவன் தன்னுடைய பழைய துக்கங்களை எல்லாம் மறந்து விடுவான்...” என்று கூறி நெட்டுயிர்த்தான் இளங்குமரன்.

கடலில் அலைகள் சரிந்து சரிந்து மீண்டு கொண்டிருந்தன. பூம்புகார் தொலைவில் மங்கியது. அதன் சதுக்க நினைவுகள் அவர்கள் மனங்களில் தங்கின. தன்னருகே கரையைப் பார்த்தபடி கண் கலங்கி நின்று கொண்டிருந்த சுரமஞ்சரியை நோக்கிச் சிரித்தான் இளங்குமரன்.

அவனுடைய அந்தப் பார்வை அவளை மணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது. அதற்கு நாணி நிமிர்ந்தும் நிமிராமலும் நளினமாகத் தலையைச் சாய்த்து கடைக்கண்களால் அவனைக் காண முயன்றாள் அவள்.

அவள் அப்படிப் பார்க்க முயன்ற முகம் எதுவோ அதிலிருந்து அவளுடைய வாழ்க்கை பிறந்தது. அவ னுடைய கண்பார்வையினால் அவள் மலர்ந்து நின்றாள். பின்பு அந்த மலர்ச்சி வாடவே இல்லை. அப்படியே நெடுங்காலத்துக்கு வாழ்கின்ற நித்தியமான மலர்ச்சியாய் அது வளர்ந்தது.

-----------------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

5.15. ஆறாத நெருப்பு

 

காவிரியின் நீர்ப்பெருக்கைப் போல வற்றாமல் ஓடிக் கொண்டிருந்த கால வெள்ளத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு அப்பால் மறுபடியும் ஒரு நிகழ்ச்சி.

நாற்பது ஆடிப் பெருக்குகளும், நாற்பது இந்திர விழாக்களும் கனவுகளாய் விரைந்து ஓடி மறைந்த பின் நாற்பத் தொன்றாவது ஆண்டின் சித்திரை மாதமும் பிறந்துவிட்டது!

அதோ! அந்த வள்ளுவ முதுமகன் வச்சிரக்கோட்டத்து முரசை யானை மேலேற்றி முரசறைந்து கொண்டேபசியும் பிணியும் நீங்கி வளம் சுரக்க வேண்டும் என்ற மங்கல வாக்கியத்துடன் தொடங்கி இந்த ஆண்டிலும் இந்திர விழா வரப்போவதை நகரத்துக்கு அறிவிக்கிறான்; தேச தேசாந்திரங்களில் இருந்தெல்லாம் இந்திர விழாவுக்காக மக்கள் வந்து பூம்புகாரில் கூடுகிறார்கள். நகரம் திருவிழாக் கோலம் கொண்டு பொலிகிறது. அந்த ஆண்டு இந்திர விழாவின் கோலாகலத்தில் சமயவாதிகளின் பங்கு வழக்கம்போல் நிறைந்திருந்தது.

அந்தத் திருவிழாவின் இடையே ஒருநாள் சமயவாதிகள் மிகுந்து கூடியிருக்கும் நாளங்காடி வானவீதியில் இப்படி ஒரு விநோதமான சம்பவம் நடைபெறுகிறது.

அன்று காலையில் போது விடிந்ததிலிருந்து அந்த ஞான வீதியில் கூடியிருந்த சமயவாதிகள் யாவரும் ஒரு பெண்ணின் வாதத்துக்கு எதிர் நிற்க முடியாமல் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணைக் கண்டு அதிசயப்படாதவர் இல்லை. வரிசையாய்ப் பல பேர்களுடைய நாவற்கிளைகளை வீழ்த்திவிட்டு வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அவள் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவள் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூறிக் கொண்டனர்.

அந்தப் பெண்ணைப் பற்றியச் செய்திகள் நகர் முழுவதுமே பரபரப்பாகப் பரவியிருந்தன. அவள் சமயவாதிகளை வென்று வெற்றி மேல் வெற்றி பெறும் இந்த அதிசயத்தைக் காண நாளங்காடியில் இடம் போதாமல் பெருங் கூட்டம் கூடிவிட்டது. அந்த அதிசயப் பெண்மணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் கடல் கடந்த நாடுகளிலிருந்து இந்திர விழா பார்க்க வந்தவர்கள் எல்லாம் கூட நகரின் வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதை மறந்து விட்டு நாளங்காடியில் வந்து கூடியிருந்தனர். அவ்வளவு சிறப்பாக இந்திர விழாவுக்குப் பெருமையூட்டிக் கொண்டிருந்தது அவளுடைய அறிவுப்போர். காலையிலிருந்து பொழுது சாய்கிற நேரம் நெருங்குகிற வரை அவளை எதிர்த்து வெல்வதற்கு யாரும் இல்லை. எதிர்த்து வந்து கொடியை ஊன்றியவர்கள் எல்லாம் அவளுக்குத் தோற்றுக் கொண்டேயிருந்தார்கள்.

சாயங்கால வேளை, தோற்றவர்கள் கைகளிலிருந்து வரிசையாய்ச் சரிந்து வீழ்ந்து கிடந்த நாவற் கிளைகளுக்கு நடுவே மதம் பிடித்த பெண் யானை போன்ற அறிவுச் செருக்குடனும்என்னை எதிர்த்து வந்து வாதிடுவதற்கு இன்னும் யாரேனும் உண்டோ?” என்ற வினாவுடனும் நிமிர்ந்து நிற்கிறாள் அந்தப் பெண். அவளுடைய வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி துறவு ஒழுக்கங் களாலும் புலனடக்கத்தாலும் பொலிவு பெற்ற முகத் தோற்றம் அவளுக்கு வாய்த்திருக்கிறது. அவளுடைய தழல் நிற மேனியைத் துறவு நெறிக்குறிய சீவர ஆடை அணி செய்து கொண்டிருக்கிறது.

கையில் கொடியேந்தி நின்று கொண்டு மலர்ந்த முகமும் தூய சிரிப்புமாக வாதுக்கு வருகிறவர்களை எதிர்பார்க்கிறாள் அவள். அவளுக்கு எதிரியே கிடைக்கவில்லை. அந்த ஞான வீதியில் அவளே தன்னிகரற்று நின்று கொண்டிருக்கிறாள்.

மனைவியோடும் குழந்தை குட்டிகளோடும் இந்திர விழா பார்க்கக் கடல் கடந்து வந்திருந்த நாகநாட்டு முதியவர் ஒருவர் அவளை நோக்கி குனிந்து தலை நிமிராமல் கூட்டத்தின் ஒரு கோடியிலிருந்து விரைந்து நடந்து வருகிறார்.

அருகே வந்து அவள் முகத்தை ஏறிட்டு நிமிர்ந்து பாராமலே, “நான் உன்னோடு வாதிட வந்திருக்கிறேன் என்றார் அவர்.

இதைக் கேட்டு அவள் அலட்சியமாகச் சிரிக்கிறாள்.

முதியவரே! இந்த வயதில் மனைவி மக்களோடு இந்திர விழாப் பார்க்க வந்த இடத்தில் இங்கே என்னைப் போல ஒரு பெண்ணுக்குத் தோற்க ஆசையாக இருக்கிறதா உமக்கு!”

நீ என்னை வென்று பின்னர் பேச வேண்டிய வார்த்தைகள் இவை!”

இத்தனை பேர்களை வென்ற எனக்கு உங்களை வெல்வது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.”

முடிந்தால் வென்றுகொள். ஒரு காலத்தில் உன்னைப் போல் நானும் இந்த வீதியில் வெற்றி நடை நடந்திருக் கிறேன்.”

இன்று தளர்நடை நடக்கிறீர்கள்.”

இந்த வார்த்தைகளால் தாக்கப்பட்டுக் கோபத்தோடு அவளருகில் நெருங்கி வந்து நன்றாக அவளை நிமிர்ந்து பார்த்தார் அவர்.

அவள் அந்த மனிதரின் முகத்தைப் பார்த்துவிட்டு அப்படியே அயர்ந்து போய் நின்றாள். அவளுடைய கையிலிருந்த கொடி நழுவியது. மனத்திலிருந்து பகைமை நழுவியது, மனமும் உடம்பும் புல்லரித்து நடுங்கின.

முல்லை! நீயா?” என்று அந்த மனிதர் தாங்கொணாத வியப்போடு தன்னை நோக்கிக் கேட்ட கேள்விக்கு அவள் மறுமொழி கூறவில்லை. விழிகளில் கண்ணிர் பெருக நின்றாள். எந்த மனிதரை எண்ணி எண்ணிப் பல ஆண்டுகளுக்கு முன்பே அவள் தன்னைத் தோற்றுப் போயிருந்தாளோ அந்த மனிதரே இப்போது இப்படி முதியவராய் வந்து எதிரே நிற்கிறார். அந்த மனிதரின் அருகே நின்ற மக்களையும் சிறுவர் சிறுமிகளையும் அவர்களின் தாயையும் ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள் முல்லை.

ஐயா! உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு முறை எதற்கோ தோற்றுப் போயிருக்கிறேன் நான். மீண்டும் என்னைப் புண்படுத்தாமல் இங்கிருந்து போய் விடுங்கள் என்று வாதத்தைத் தொடங்காமலே தான் அவனிடம் தோல்வியடைந்து விட்டதாகச் சொன்னாள் அவள். சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்துக்கு இது வியப்பாக இருந்தது. பெரிய பெரிய ஞான வீரர்களின் கொடிகளை யெல்லாம் துணிந்து வாதிட்டுச் சாய்த்த வீராங்கனை இன்று இந்தத் தளர்ந்த மனிதருக்கு முன் ஏன் இப்படித் தன் கொடியைத் தானே சாய்த்துக் கொண்டு தோற்றுப் போய் நின்றாள் என்று கூட்டத்தில் கூடியிருந்தோர் புரியாமல் மருண்டனர்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்னும் ஒருமுறை என்னை அறிவில் தோல்வியடையச் செய்து பார்க்க உங்களுக்கு ஆசையாயிருக்கிறதா? உங்களிடம் முன்பு நான் அன்பில் தோற்றதை மறக்கவே எனக்கு இத்தனை ஆண்டுகள் போதவில்லை. நான் படித்த நூல்களும் என்னுடைய துறவும், விசாகை எனக்குச் சொல்லிப் பயிற்றிய தத்துங்களும் கூட இன்னும் என் உள்ளத்தின் பழைய நெருப்பை அவிக்க முடியவில்லை. அதே நெருப்பை இன்று நீங்கள் மேலும் வளர்க்க விரும்புகிறீர்களா?” என்று அவள் தன்னை நோக்கிக் கேட்ட கேள்விக்கு மறுமொழியின்றித் தலையைக் குனிந்து கொண்டு வந்தது போலவே திரும்பினான் இளங்குமரன்.

தன் மனைவி மக்களை உடனழைத்துக் கொண்டு அவன் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறியபோது, “சுரமஞ்சரி நாம் திரும்பவும் இன்றே மணிநாகபுரத்துக்குக் கப்பலேறி விடுவோம். இவ்வளவு காலத்துக்குப் பின்பு இந்த நகரத்துக்கு நாம் புறப்பட்டு வந்த வேளை நல்ல வேளையில்லை போலிருக்கிறது என்று மனைவியிடம் கூறினான்.

ஏன்?” என்று அவன் மனைவி சுரமஞ்சரி திகைத்துப் போய் அவனைக் கேட்டாள்.

உனக்கு இவளைத் தெரிகிறதா சுரமஞ்சரி?” என்று பதிலுக்குத் தன் மனைவியைக் கேட்டான் அவன்.

அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நகரின் புறவீதியில் ஒரு காலை வேளையில் நீயும் நானும் காவிரிக்கு நீராடப் போய்க் கொண்டிருந்தபோது தன்னுடைய கோலத்தை முடிக்கத் தெரியவில்லை என்று அழுது கொண்டு ஓடினாளே; அவளுடைய புதுக்கோலம் இது.”

பாவம்! இத்தனை காலத்துக்குப் பின்னும் அவளுடைய மன நெருப்பு ஆறவில்லை போலிருக்கிறது என்ற சுரமஞ்சரியும் அவனோடு சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணுக்காக அநுதாபப்பட்டாள்.

ஆனால் மற்றொரு புறம் அவனுக்கு முன் தன் நாவற் கிளையைத் தானே சாய்த்த அந்தப் பேதைப் பெண்ணோ நாளங்காடியின் ஒரு மூலையில் யாருமில்லாததொரு மரத்தடியில் போய் கண்ணிர் பெருக வீற்றிருந்தாள்.

அவளுடைய துயரத்துக்கு முடிவு ஏது! பாவம்! காலம் அதை ஆறச் செய்யட்டும்!

-----------

 

மணிபல்லவம் - ஐந்தாம் பாகம்

பிரியாவிடை (முடிவுரை)

 

சோழ நாட்டு நகரங்களில் எல்லாம் பெருநகரமான பூம்புகாரின் செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ இந்திர விழாக்களை அறிவித்து வள்ளுவ முதுமகன் நகருக்கு முரசறைவான்! இன்னும் எத்தனையோ ஆடிப்பெருக்குகளுக்குக் காவிரியில் வெள்ளம் வரும்; தணியும். மழை பெய்யும். வெயில் காயும். பருவ காலங்களால் விளையும் புதுப்புது மாறுதல்கள் காவிரிக்கரை வாழ்க்கையில் எத்துணை எத்துணையோ நிகழ்ச்சிகளைப் படைக்கும். சமயவாதிகளும் ஞானிகளும் சந்திப்பார்கள், அளவளாவுவார்கள், பிரிவார்கள். அறிவும் செல்வமும் ஓங்கி வளரும். அந்தக் கோநகரத்துக் கவிகளின் நாவில் புதுப்புதுக் கவிதைகள் பிறக்கும். இளம் பிள்ளைகள் பலர் தோன்று வார்கள். மூத்துத் தளர்ந்தவர்கள். பலர் இறப்பார்கள். அரசர்கள் மாறுவார்கள். அரசாட்சி மாறும், ஏறும், தாழும். வாணிகருடைய வாழ்க்கை வளரும், தளரும், மாபெரும் துறைமுகத்தில் கப்பல்கள் வரும், போகும், நிற்கும், மிதக்கும்.

ஆனால்...?

என்ன சொல்வது? அதை எப்படிச் சொல்வது? அதோ! நாளங்காடியில் ஒரு கோடியில் அந்த மரத்தின் கீழ் வாடியிருந்து கண்ணிர் சிந்துகிறாளே முல்லை, அவளுடைய நெஞ்சின் கனம் எப்போது தணியும்? அவளுடைய தாகம் எந்தப் பிறவியில் தீரும்? நூறு நூறு சமய ஞானிகளை வென்று பெற்ற வெற்றிப் பெருமிதத்தினாலும் அவள் மனம் நிறையவில்லை. யாரோ ஒருவனுக்கு என்றோ ஒருநாள் தோற்றதையே அவள் இன்னும் எண்ணி வருந்துகிறாள். எந்தக் கோலத்தையோ அரை குறையாக நிறுத்திவிட்டு இந்தத் தவக்கோலத்தை மேற்கொண்டாள் அவள். இந்தக் கோலமும் நிறையாதபடி இப்போது மனம் தவிக்கிறது. தனக்கு உள்ளேயே அடங்காமல் உள் நெருப்பாய்க் கொதிக்கிறது.

மறுபடியும் அவள் இளங்குமரனைச் சந்திக்க விரும்புகிறாள். ஆனால் இந்தப் பிறவியில் இன்று நாளங்காடியில் சந்தித்தது போல இதே ஏமாற்றங்களோடு அல்ல. தன்னுடைய நிறைவடையாத நினைவுகளை நிறைவு செய்துகொள்வதற்காக அவள் இன்னொரு பிறவி எடுக்க ஆசைப்படுகிறாள். அப்போது இதே பூம்புகாரின் புற வீதியில் ஏதாவதொரு வீரக் குடும்பத்தில் இளங்குமரனும் கட்டழகனாகப் பிறந்திருப்பான். அவனை அவள் அடைவதற்கு எந்தப் பகைமையும் இருக்காது. எந்தப் போட்டியும் இருக்காது.

அந்தப் பிறவி வாய்க்கிறவரை அவள் இந்த உலகத்துச் சுகங்களுக்கெல்லாம் தன்னிடமிருந்து நிரந்தரமாக விடை கொடுக்கிறாள்.

வாழ்வதற்கென்று வாய்க்கும் சுகங்களே! உங்களுக்குப் பிரியா விடை கொடுக்கிறேன். மீண்டும் அடுத்த பிறவியில் என்னை வந்து சந்தியுங்கள். அப்போது நானும் அவரும் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம் என்று கற்றும் கற்காத பேதையாய்த் தனக்குத்தானே கூறிக்கொண்டு அந்த மரத்தடியிலிருந்து எழுந்து நடக்கிறாள் அவள். சில கணங்களில் அவள் தோற்றமும் பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது. இந்திர விழாவின் பெருங்கூட்டத்தில் யாரோ ஒருத்தியாக அவளும் கலந்துவிடுகிறாள். தனியாய்த் தெரியாமல் பலரிடையே ஒருத்தியாய் மறைந்து போய்விடுகிறாள். பன்மையில் கலந்த பின்பு ஒருமையும் தனித்தன்மையும் ஏது?

அவ்வளவு பெரிய கூட்டத்தில் அவளைப் போலவே வாழ்வில் விரும்பியது கைகூடாமல் துக்கப்படுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனாலும் அவளுடைய துக்கம் பெரியது. அதற்கு இணையாக வேறு ஒன்றும் இருக்க முடியாது.

அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளால் சொல்ல முடியாத அந்தத் துக்கத்துக்கு விடிவு பிறக்கட்டும் என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டு முல்லைக்கு இப்போது இந்தப் பிறவியில் விடை கொடுக்கலாம்.

--------

 

(நிறைந்தது)

 

 

மணிபல்லவம் - நான்காம் பாகம் நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள் சிலவற்றைப் பார்க்க

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)